சகிப்பு

0
(0)

காலைச் செய்தியைக் கேட்பதற்காக ரேடியோவை மெல்லியதாக ஒலிக்க, இயக்கி விட்டு, முகச்சவரம் செய்ய உட்கார்ந்தான். முகத்தில் சோப்பு நுரைகளை நிறைத்துக் கொண்டு இருந்தபோது, சின்ன மகன் மெல்லக் கொஞ்சுதலாய்க் கெஞ்சினான்.

“அப்பா, நாளைக்கு எங்க ஸ்கூல்ல ‘கல்ச்சுரல் பங்ஷன்’ அதைக் கேபிள் டிவியில எல்லாம் போடுவாங்களாம்! நான் பேச்சுப் போட்டியில் கலந்துருக்கேன். ஒரு அஞ்சு நிமிஷம் பேசுறமாதிரி எழுதித் தாங்கப்பா! ப்ளீஸ்ப்பா …!”

“நாளைக்கு பேசறதுக்கு இன்னிக்கு சொன்னா எப்படி…”

“ப்ளீஸ்ப்பா நேற்றுத்தாம்ப்பா எனக்கே மிஸ் சொன்னாங்கப்பா….” என்று மழலை மாறாத பதினோரு வயசுக் குரலை மீற முடியவில்லை.

“சரி, போய்ப்படி! எழுதித் தர்றேன்!”

சிறுவன் துள்ளிக் குதித்து புத்தக மூட்டையைப் புரட்டி இழுத்தான்.

அப்பாவின் கவனமெல்லாம் எதைப் பற்றி எழுதலாம் என்று உத்தரத்துக் காற்றாடியாய் சுழன்று கொண்டிருந்தது.

“வர்த்தக மையத் தாக்குதலைத் தொடர்ந்து ஆப்கன் மீது அமெரிக்கா வான் வெளி தாக்குதல்நடத்துகிறது. காபூல் நகரம் கரும் புகையில் கருகுகிறது. தீவிரவாதிகள் காஷ்மீர் சட்டசபை மீது குண்டு வீசித் தாக்குதல்…” இப்படியான செய்திகளை வானொலி வரிசையாய் சொல்லிக் கொண்டிருந்தது.

“…ஆமாம், தீவிரவாதம் பற்றி எழுதலாம். ஆனால் தீவிரவாதத் திற்கு பல காரணங்கள் – பல தீர்வுகள்.. எதை, எப்படி? எளிமையாய் சிறுவன் மனப்பாடம் பண்ணி பேசும் மொழியில்.. சிக்கல் இல்லாமல் எழுதித் தரணும்….”

முகத்தில் உறைந்த சோப்பு நுரை உலர்ந்து கொண்டிருந்தது.

“ஏங்க எத்தனை தடவை கத்தறேன்.. காதில் கேட்கலையா.. அப்படி என்ன யோசனை” கீழே மோட்டார் ஓடும்போதே இரண்டு குடம் தண்ணீர் எடுத்து வந்து ஃபில்டரில் ஊற்றி வையுங்க! அப்பத்தான் ஆபிஸ் கொண்டுப் போகத் தோதாக இருக்கும்…!”

அடுப்படி வெப்பத்தை அவளது குரல் இடப்பெயர்வு செய்தது.

“அட, முன்னமே சொல்லியிருக்கக் கூடாதா? இந்த பாரு மூஞ்சியில சோப்புப் போட்டுட்டேன்….”

“ஆமாம். நித்தம்தான் ஷேவ் பண்றீங்க முகத்தில் என்னதான் அப்படி இருக்கோ…? போய் சீக்கிரம் தண்ணீ எடுத்துட்டு வாங்க. கரண்டு கிரண்டு போயிருச்சுன்னா.. நீங்கதான் இறைக்கணும்!”

அவன் அவசர அவசரமாய் முகச்சோப்பை மழித்தான். அடுப்படியில் – அவள் பேசுவதை நிறுத்தி விட்டாள்; பாத்திரங்கள் பேச ஆரம்பித்துவிட்டன! அவன் அரைகுறையாய் முகம் கழுவி குடத்தை எடுத்துக் கொண்டு கீழே ஓடினான்.

எண்ணமெல்லாம் பேச்சுப் போட்டிக்கான உரை தயாரிப்பதில்.. எளிமையான கருத்தாக சிறு சிறு வார்த்தைகளைத் தேடிக் கோர்ப்பதில் இருந்தது.

அனிச்சையாய் கிணற்று மோட்டார் குழாயில் தண்ணீர் பிடித்து வந்து ஃபில்டரில் ஊற்றி விட்டு, இன்னொரு குடம் எடுத்து வரப்போனான்.

அன்றைய பாட அட்டவணையைப் பார்த்து நோட்டுப் புத்தகங் களை எடுத்துக் கொண்டிருந்த சிறுவன், நோட்டுகளை ஒன்றன் அருகில் ஒன்றாகச் சுவரெழுப்பி நிறுத்தி அவற்றின் மேல் நோட்டுக்களை வைத்து மாடிகட்டினான். காகிதத்தில் செய்யப்பட்ட விமானத்தை ‘சொய்ய…ங்…ங்…ன்னு’ ஒலி எழுப்ப மோத விட்டான். நோட்டுக் கட்டடங்கள் சரிந்தன. பென்சில், பேனா மனிதர்கள் வீழ்ந்தனர். மீண்டும் நோட்டுக் கட்டடம் கட்டி மறுபடியும் தாக்குதல் விளையாட்டு!

தண்ணீர் குடம் கொண்டு வந்தபடி கவனித்த அப்பவுக்கு அதிர்ச்சி! திடுக்கிட்டான். தொலைக்காட்சியில் பார்த்த பதிவு! சிறுவர்களை எப்படி எல்லாம் பாதித்திருக்கிறது…. தீவிரவாதத்தின் மீது வெறுப்பு வருவதற்கு பதிலாக வீரதீர சாகசமாக பதியும்படியாகி விட்டதே.. செய்தி ஊடகங்களிடையே போட்டி போட்டுக் கொண்டு விதவித மான கோணங்களில் ஒளிபரப்பியதாலா..? திரண்ட கோபா வேசத்தை உதறிச் சிந்தனையை ஒழுங்குபடுத்தி மனிதற்குள் உரையை வடிவமைத்து விறுவிறுவென்று சிறு சிறு ஆங்கிலச் சொற்களில் எழுதினான். ஒவ்வொரு சொல்லாய் பிரித்து அர்த்த பாவங்களோடு மகனிடம் வாசித்து காட்டினான்.

பயங்கரவாதப் பிரச்சனைகளை சமூக இயல் ரீதியாகத் தீர்க்க அனைவருக்கும் கல்வியும் வேலை வாய்ப்பும் வழங்கப்படுதல் வேண்டும். அறிவியல் வழியில் தீர்க்க அனைவரிடத்தும் அன்பும் சகிப்புத் தன்மையும் பேணல் வேண்டும்’ என்ற ரீதியில் ஆங்கிலச் சொற்களில் எழுதியிருந்தான். உலகத்தில் யாருக்கும் தோன்றாத யோசனைகள் தனது மகன் தூண்டுதலால் தனக்குத் தோன்றி உள்ளதாகவும், இந்த உரையினை பிரசுரிக்கவோ, ஒலி, ஒளி பரப்பவோ செய்தால் தன்னைப் பற்றி இந்த உலகிற்குத் தெரியவரும் என்று பெருமிதப்பட்டுக் கொண்டான்.

“ஏங்க ஆபீசுக்கு நேரமாகலையா. சின்னவனைக் குளிக்க வச்சிட்டு சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க! எனக்கு நேரமாச்சு!”

காலமறிந்த கூவல்! திடுக்கிட்டு முகம் தடவினான். முகவாயில், தாடையின் அடியில் மயிர் அரும்புகள் குத்தின! மீண்டும் அவதியவதியாய் சோப்பு போட்டு மழிக்கத் தொடங்கினான்.

மகன் ஒவ்வொரு வாக்கியமாய் மனப்பாடம் செய்து சொல்லிப் பார்த்து அடுத்தடுத்த வாக்கியங்களுக்கு முன்னேறிக் கொண்டிருந்தான்.

அடுக்களையில் டிபன் பாக்ஸ்களை எடுத்து வைத்து அவற்றில் மதிய உணவு வைக்கப்படும் ஒலி கேட்டுக் கொண்டிருந்தது.

அவன் தொண்டையை ஒட்டிய தாடையைத் தடவிப் பார்த்தான். முளைவிட்ட முடிகள் மழித்தலுக்கு மசியாமல் மறியல் செய்தன. பிளேடை அலசிவிட்டு பக்கத்தை மாற்றிப் போட்டு மழிக்கத் தொடங்கினான்.

“அறவழியில் தீவிரவாதத்தை ஒழிக்க அன்பும் சகிப்புத் தன்மையும் தேவை! நாம் எல்லோரும் சக உயிர்களிடம் அன்பையும் சகிப்புத் தன்மையும் பேண வேண்டும்” என்ற ஆங்கில வாக்கியங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான் சிறுவன்.

திடீரென அவன் சொல்லும் வேகம் குறைந்து குரலில் தடுமாற்றம் ஏற்படுவது கேட்டு அப்பா திரும்பினார். மகன் ஒப்பித்துக் கொண்டே நோட்டால் கட்டிடம் கட்டி காகித விமானத்தை மோதத் தயார் செய்து கொண்டு இருந்ததால் வாக்கியச் சிதரலில் தடுமாறிக் கொண்டிருந்தான்.

“அன்பும் சகிப்புத் தன்மையும்… ம்…. ம்ம்.. அன்.. பும்.. சகிப்பு.. த்தன்மையும் சகிப்பு.. சகிப்புத்… தன்மையும்….”

அப்பாவிற்கு சுள்ளென்று ஏறிய கோபம் ஏவுகணையாய் சிறுவன் தொடையில் சுரீரென்று இறங்கியது. அறையின் வேகம் இளஞ்சிவப்பாய் விரல்தடங்கள்.

தொடையில் தீப்பிடித்தவன் போல் “அய்யோ … அம்மா … அன்பும்…. சகிப்புத்தன்மையும்…. அன்பும்…” தேம்பி தேம்பிச் சொன்னான்.

அம்மா பதறி ஓடி வந்தாள்.

‘இது மோசமான விளையாட்டு. இப்படி கற்பனையாகக் கூட விளையாடக்கூடாது தம்பி’ என்று அன்பாய் சொல்லியிருக்கலாமே இப்படி கண நேரத்தில் மிருகமாகிவிட்டோமே’ நெருங்கினான். மகன் அம்மாவின் மடியில். இப்படியா மனுஷத்தனமில்லாமல் அடிப்பது” என்ற கேள்வி அவள் பார்வையில் தகித்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top