சகமனிதன்

0
(0)

மணி ஒன்பதுக்கு மேல் இருக்கும்… கடைகள் ஒவ்வொன்றாய் அடைபடத் துவங்கியிருந்தன. பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தான் விவேகானந்தன். ரொம்ப நேரமாகிவிட்டது. இனிமேல் டவுன்பஸ் அவன் தங்கியிருக்கும் இடத்திற்கு அடிக்கடி கிடையாது. இன்றைக்கு நேரமானதற்குக் காரணம் சுந்தர் தான். அவனுடன் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டான். இன்னும் பகலின் கசகசப்பு அடங்கித் தீரவில்லை. கழுத்தைச் சுற்றிலும் வியர்த்து ஒட்டியது. கர்ச்சீப்புக்காக பேண்டின் இடது பைக்குள் கையை விட்டவனுக்கு சுரீரென்று ஞாபகம் வந்தது. ஊருக்குப் பணம் அனுப்பவில்லை. அனுப்ப வேண்டுமென்று எடுத்து வைத்த பணம் உள்ளே அப்படியே மடிந்துகிடந்தது. முந்தா நாள் சம்பளம் வாங்கிய உடனேயே அனுப்பியிருக்க வேண்டியது எப்படியோ தட்டிப் போய்விட்டது. எப்படி இப்படி அநியாயமாய் மறந்துபோனது! நேற்று ஆபீஸில் ஏதோ சச்சரவு காலையிலிருந்து ஒரே வாக்குவாதம். சாயந்திரம் அறைக்கு வரும் வரை அதைச் சுற்றியே யோசனைகள்.

பணத்தை எதிர்பார்த்து அப்பா போஸ்ட்மேனிடம் ரெண்டு நாளாய் விசாரித்திருப்பார். அப்பா சுபாவி. அவர் எதிர்பார்க்கிறபடி மற்றவர்கள் அவர் சொல்லாமலேயே நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர். அப்படி நடக்காவிட்டால் வெளியே எதையும் காட்டிக் கொள்ளமாட்டார். உள்ளுக்குள்ளேயே நொந்து கொண்டிருப்பார். நாளைக்கு எப்படியும் அனுப்பி விடவேண்டும். இப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போதே இவனுடைய அதிர்ஷ்டம்  29-டியே வந்து கொண்டிருந்தது. கூட்டம் சுமாராக இருந்தது.

டிக்கெட்டையும் சில்லறையையும் சட்டைப்பையில் திணித்துவிட்டு கொஞ்சம் சிலாத்தியாய் நிற்கலாம் என்று கால்கள் அகட்டி நின்றான். காற்று சுகமாக வந்தது. ரெண்டு மூன்று ஸ்டாப்பிங் கடந்திருக்கும். விவேகானந்தன் நின்று கொண்டிருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் இருந்த சீட்டில் இருந்த ஒருவர் அடுத்த ஸ்டாப்பில் இறங்க இருந்தார். டவுன் பஸ் மனித வாழ்க்கையின் வழக்கமான மனோ சாஸ்திரப்படி இவனும் அவசர அவசரமாய் சீட்டில் உட்கார்ந்து கொண்டு பின்னர் பஸ் முழுவதையும் வெற்றிக் களிப்புடன் ஒரு தடவை நோட்டமிட்டான். அப்போது திடீரென அவனுடைய இடது தொடையில் பைக்குப் பக்கத்தில் கை உரசின மாதிரி தெரிந்தது. குபீரென்றது.

சடாரென்று திரும்பி பக்கத்திலிருந்தவரைப் பார்த்தான். அவர் சாதாரணமாய் அவருடைய தொடை மேல் கையை வைத்துக்கொண்டு பஸ்ஸுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தார். இவன் உறுத்துப்பார்த்தான். பெரிய தொங்கு மீசை மேலே கொஞ்சமாய் முன் வழுக்கை. அவ்வளவு வயசிருக்காது. ஆனால், வலது கண் பட்டைக்கு மேலே இருந்த வெட்டுக் காயத்தழும்பு தான் அவ்வளவு நல்ல பார்வையைக் கொடுக்கவில்லை.

விவேகானந்தனுக்கு பயம் சுருண்டு எழுந்தது. உள்ளுக்குள் எச்சரிக்கை. கவனமாய் இருக்க வேண்டும். ஆள் பார்வைக்குச் சரியில்லை. பையிலிருக்கும் பணம் போய்விட்டால்… அவ்வளவு தான். இதை யோசிக்கும் போதே மூளை கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டது. படாரென்று கையை பேண்ட் பாக்கெட்டின் மேல் வைத்து தடவிப்பார்த்துக் கொண்டான். உடனே அவனுடைய மடத்தனத்தை நினைத்து நொந்து கொண்டான். அவசரமாய் தடவிப்பார்த்ததை அவர் கவனித்திருந்தால் அவருக்கு உறுதியாகிவிடும். பயல்கிட்டே தேட்டை இருக்கு! இனிமேல் கவனமாய் இருக்க வேண்டும். இவனும் கையை இவனுடைய இடது தொடை மேல் பணம் விரல்களின் ஸ்பரிசத்தில் இருக்கிற மாதிரி அதே நேரத்தில் சாதாரணமாய் சந்தேகப்படும்படியாக இல்லாமல் வைத்துக் கொண்டான்.

தொங்கு மீசைக்காரர் வெளியே பார்த்துக் கொண்டிருப்பது போல் பாவனையில் இருந்தார். அவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார். வந்து உட்கார்ந்ததிலிருந்து ஒரு இடத்தில் அசையாமல் இருக்க மாட்டேனென்கிறான். அங்கிட்டும் இங்கிட்டும் உழத்திக் கொண்டேயிருக்கிறான். பேண்ட் பாக்கெட்டில் ஐநூறு ரூபாய் பணம் இருக்கிறது. இன்றைக்கு மளிகைக்கடைக்காரன் இப்படி திடீரென்று கடையை அடைத்து விட்டுப் போவானென்றா நினைத்தார். சாயந்திரம் டவுனுக்குப் போகும் போதே கொடுத்திருக்கலாம். அவர் பஸ்ஸை விட்டு இறங்கின இடத்திலிருந்து ஒரு பர்லாங் நடக்கணுமே என்று சோம்பேறித்தனப்பட்டு, அப்படியே சினிமா பார்த்துவிட்டு வரும் போது கொடுக்கலாம் என்று நினைத்துப் போய்விட்டார். சினிமாவிடும் போது அப்படி ஒன்றும் நேரமாகிவிடவில்லை. மணி எட்டரைதான் ஆகியிருந்தது. வழக்கமாய் கடை பதினொரு மணிவரைக்கும் திறந்திருக்கும். இன்றைக்கு எட்டு மணிக்கே பூட்டிவிட்டுப் போய்விட்டான். பக்கத்தில் விசாரித்ததில் அந்த ரோட்டில் ஏழு மணிக்கு ஏதோ தகராறாம். அதனால் எல்லோரும் பூட்டிவிட்டுப் போய்விட்டார்கள் என்று சொன்னார்கள்.

பக்கத்திலிருக்கிறவன் வேறு அடிக்கடி பையை உரசுகிறான். பெரிய கில்லாடிதான். அவன் கால் மேல் கையை வைத்திருப்பதைப் போல பாசாங்கு செய்கிறான். மற்றவர்களுக்கு சந்தேகம் வராதாம். அவர் டவுன் பஸ்களில் பாக்கெட் அடிப்பதைப்பற்றி எவ்வளவு கேள்விப்பட்டிருக்கிறார் மெல்ல பஸ்ஸுக்குள் திரும்பிப் பார்ப்பதைப் போல அவனைப் பார்த்தார். ஆள் நல்ல கறுப்பு. முகத்தில் எண்ணெய் வழிந்து தலை முடி கலைந்து கிடந்தது. முகத்தைப் பார்த்தால் சுபாவமாய் தான் இருந்தது. இந்தக்காலத்தில் இப்படிக் கொஞ்சம் டீசண்டாகவும், பார்க்க அப்பாவியுமாகத்தான் திருடர்கள் இருக்கிறார்கள் என்று ஏதோ ஒரு பத்திரிகையில் படித்த ஞாபகம் வேறு இப்போது வந்தது. கவனமாய் இருக்க வேண்டும். அவர் மறுபடியும் வெளியே அப்படியே பார்க்கிற மாதிரி திரும்பிக் கொண்டு அதே நேரம் கையைத் தொடை மேல் வைத்துக் கொண்டார். இப்போது அவர் கை அவன் கையை உரசிக் கொண்டிருந்தது.

பஸ் ஏதோ ஒரு ஸ்டாப்பிங்கில் நின்றது. மொலேரென்று கூட்டம் ஏறிக்குவிந்தது. கண்டக்டருக்கு உற்சாகம்.

“ஏறிவாங்க… உள்ளே வாங்க… சார் உங்களத்தான… உள்ளே வாங்க… இல்ல வழியவிடுங்க… நடுவுல நிறய்ய இடமிருக்கு… உள்ளே வாங்கய்யா… பெரியவரே என்ன நகரமாட்டீரா… உள்ளே வாயான்னா…” கூட்டம் நெருக்கி நின்றது. சரியாக விவேகானந்தன் மீதே ஒரு ஆள் சாய்ந்து கொண்டு நின்றார். இவன் கொஞ்சம் அசைந்து பார்த்தான். அவர் மேலும் சாய்ந்து கொண்டே வந்தார். இதுதான் சங்கடம் ஓரத்தில் உட்கார்ந்தாலே அச்சலாத்திதான். இவன் அசைந்ததில் இவனுடைய தொடையும் பக்கத்திலிருந்த தொங்கு மீசைக்காரரின் தொடையும் ஒட்டியது. அவர் கை விரல்கள் இவன் பாக்கெட் பக்கத்தில் அகஸ்மாத்தாய் உரசியது.

அவன் உஷாரானான். இப்படி கூட்ட நேரம் ரொம்ப வசதி. கவனம் பூராவும் கூட்ட நெரிசலிலும் ஏறி இறங்குகிற முகங்களிலும் இருக்கும் போது ரொம்ப சவுகரியம். ரொம்ப சுவாதீனமாய் காரியத்தை முடித்துக்கொண்டு படாரென்று அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்கி விடுவார்கள். அயோக்கிய ராஸ்கல்கள். மனசுக்குள் வைதுகொண்டே பாக்கெட்டை அழுத்திப் பிடித்துக் கொண்டான்.

தொங்கு மீசைக்காரர் திடீரென்று நெருக்கம் அதிகமானதை உணர்ந்ததும் திரும்பிப்பார்த்தார். கூட்டம் ஏறியிருந்ததென்னவோ உண்மை தான். ஆனால், இதுதான் சாக்கென்று பயல் ஒரேயடியாய் மேலேயே சாய்கிறான். அவர் திரும்பி அவனைப் பார்த்து கொஞ்சம் முறைப்பாகவே,

“சார்… கொஞ்சம் தள்ளியிருக்கீகளா… கசகசன்னு இருக்கு…” அவன் எதிர்த் திசையில் கொஞ்சம் நகர முயற்சித்துக் கொண்டே,

“நிக்கிறவங்க… மேலேயே சாய்றாங்க…” என்று கடுப்புடன் சொன்னான். அப்புறம் அவர் அந்தப் பக்கமாய் திரும்பிக்கொண்டார். இவனும் இந்தப் பக்கமாய் திரும்பிக் கொண்டான். விவேகானந்தனுக்குத் தூக்கம் வந்தது. ஆபீஸ் விட்டதிலிருந்து நல்ல அலைச்சல். அப்படி கண்கள் இறுகக்கட்டிக் கொண்டு வந்தது. தூங்கக்கூடாது.  தூங்கினால் அவ்வளவுதான். பணம் இல்லையென்று நினைத்துக் கொள்ள வேண்டியது தான். கண்களைக் கசக்கிக் கொண்டான். எதையாவது யோசிக்கலாமென்று முயற்சி செய்தான். ம்ஹும். மற்ற நேரமெல்லாம் கண்டதும் யோசனைக்கு வரும். சப்புசவறு எல்லாம் மூளையைக் குடையும். இப்போது மூளை வெறுமனே ஆஃப் பண்ணின மிஷின் மாதிரி அமைதியாய் இருந்தது. சிரமப்பட்டு கண்களை மூடி மூடித் திறந்தான்.

திடீரென டிரைவர் எதிரே விலகாமல் வந்த சைக்கிள்காரனுக்காக சடன் பிரேக்போட்டு நாலைந்து கெட்ட வார்த்தைகளால் வைதார். பிரேக் போட்டதில் எல்லோரும் முன்னே சாய்ந்தார்கள். விவேகானந்தன் எந்தப் பிடிமானமுமில்லாமல் இருந்ததால் சடாரென கையை அகப்பட்ட இடத்தில் வைத்துப் பற்றினான். தொங்கு மீசைக்காரர் முட்டியில்தான் ஒரு கையை வைத்தான். உடனே கையை எடுத்து விட்டான். வாய்க்குள் ‘சாரி’என்று முணு முணுத்தான்.

அவர் மறுபடியும் திரும்பிக் கொண்டார். ஒவ்வொரு வழியாக முயற்சி செய்து பார்க்கிறான் பயல், சும்மா மேலே சாய்கிறான். தொடையில் கை வைத்துப் பார்க்கிறான். பாக்கெட் அடிக்கிறவன் தொட்டுப் பார்த்தாலே தேறும் தேறாது என்று கண்டுபிடித்துவிடுவானாம். அது தான் தடவிப்பார்க்கிறான் போல. இனி ஒரு தடவை கையை வைத்தால் கண்டிப்பாக கையைப்பிடித்து நாலு மாத்துமாத்திர வேண்டியதுதான்.

பஸ் நின்று ஆட்களை இறக்கிவிட்டது. இன்னும் ரெண்டே ஸ்டாப்பிங்தான். அப்புறம் பிரச்சினையில்லை.

அவர் முறைத்ததைக் கண்டதும் அவன் பயந்துவிட்டான். அவர் பார்த்த போது கண்பட்டைக்கு மேலே இருந்த தழும்பு இன்னும் கோணலாகி முகத்தை இன்னும் விகாரமாய்க் காண்பித்தது. ஒருவேளை அந்த ஆளுக்கு இதுவரையில் சந்தர்ப்பம் கொடுக்காமல் வருவதற்காக முறைக்கிறானோ. இனிமேல் ஏதாவது செய்தானானால் அப்படியே மூஞ்சியோட சேர்த்து அறைஞ்சிர வேண்டியதுதான்.

அடுத்த ஸ்டாப்பிங்கில் நின்று பஸ் கிளம்பியதும் தொங்கு மீசைக்காரர் எழுந்து கொண்டார். கொஞ்ச தூரம் தான் நிற்கலாம். எதற்கு உட்கார்ந்து கொண்டு அவஸ்தை. எழுந்து வாசலுக்கருகில் வந்து நின்று பையைத் தடவிப்பார்த்துக் கொண்டார். நீண்ட பெரு மூச்சு வந்தது. நாளைக்கு முதல் வேலையாக பணத்தைக் கொண்டு போய் மளிகைக் கடைக்காரனிடம் கொடுத்து விடவேண்டும். அவனிடம் வேடிக்கையாக, “உம்ம பணம் பறிபோகப் பார்த்ததய்யா நேத்திக்கு…” என்று சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

அவன் அவர் எழுந்ததும் முதலில் பைக்குள் கையை விட்டு விரல்களால் மடிந்து கிடந்த நோட்டுகளை நீவி விட்டான். நிம்மதி, ஜன்னல் பக்கத்தில் நகர்ந்தான். காற்று வேகமாய் அடித்தது. கண்டக்டர் விசில்அடித்தார். பஸ் வேகம் குறைந்து நின்றது.

தொங்கு மீசைக்காரர் இறங்கினார். பஸ் போவதற்காக நின்றார். அவனும் வேகமாய் இறங்கி, ஒரு விநாடி நின்று அவரைப் பார்த்தான். பின் நடக்கத் தொடங்கினான். பயங்கர அசதி, போய் விழுந்தால் சவமாய் தூக்கம் வரும். பஸ் கிளம்பிப்போகும் சத்தம் கேட்டது. பின்னால் திரும்பி பஸ் போவதைப் பார்த்தவன் கண்ணில் நல்ல வெளிச்சத்தின் கீழே நின்று அந்தத் தொங்கு மீசைக்காரர் அவனையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. ஒரு கணம் உற்றுப் பார்க்கையில் அவர் சிநேகிதமாய் சிரித்த மாதிரி கூட இருந்தது. அவனும் உதடுகள் நெளிய “வீணாப் பயந்துட்டோம்”என்று வாய் விட்டு முணு முணுத்துக்கொண்டே அறையை நோக்கி நடந்தான்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top