கௌரவர்சபை

0
(0)

சின்னதாய் யோசிக்கும்போதே காஞ்சனாவின் கோபம் இவருக்கும் தொற்றிக்கொண்டது. விநாயகத்தின்மீது அளவில்லா ஆத்திரம் பொங்கியது. :ச்சே இப்பிடி ஏமாத்திட்டாப்லயே..”

 

ஏமாற்றப்பட்டதைவிடவும் “விபரந்தெரிஞ்ச நீங்க போய் எப்படி இப்பிடி..?” என்ற மற்றவர்களின் கேள்விக்கும் கேலிக்கும் பதிலளிக்க முடியாத சங்கடம்தான் அதிகம்.

 

மூத்தபையனின் வேலைக்காக விநாயகத்திடம் கொஞ்சம் பணம் கொடுத்திருந்தார் இவர்.

 

ஆரம்பத்தில் விநாயகம் ஒருட்ராக்டர் கம்பெனியில் விற்பனைப் பிரதிநிதியாகத்தான் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். விளைநிலங்களுக்குச் சென்று விவசாயிகளோடு நின்று, அவர்களுக்கு ட்ராக்டரின் தேவையையும், அதன் மகத்துவத்தையும் அவர்களை உணரச்செய்து, கையிலிருக்கும் பணத்தை முன்பணமாக்கி அவர்களை வாகனாதிபதியாக்குகிற வல்லமை மிக்கவ்ராய் பணிசெய்து கொண்டிருந்தார்.

 

சிறுவிவசாயிகளில் துவங்கி, பெருவிவசாயி, பண்ணை என விரிந்து நாலாபக்கமும் சுற்றியலைந்ததில் அவருக்கு அதிகாரிகளும்,அரசியல்வாதிகளும் அதிகஅளவில் பழக்கமானார்கள். அவ்வளவுதான். தொழில் மாறிவிட்டது. வேலைவாங்கித்தருவது, உத்தியோக மாறுதல் என்ற சேவைத்தொழிலில் ஈடுபடலானார் அந்தநேரம் இதுபோன்ற காரியங்களை பலருக்கும் செய்து கொடுத்து அதில் பிரபலமும் ஆனார். கண்முன் கண்ட சாட்சிகள் நிறையவே இருந்தன..அதோடு இழுபறி கேசுகளும் இருந்திருக்கிறது என்பதை இப்போதுதான் அறிய நேர்ந்தது.

 

ஆனால் இவர் பையனுக்கான வேலைசம்பந்தமாக முதன்முதலில் விநாயகத்திடம் கலந்தபோது, ஒப்புக்குக்கூட வேலையிலிருக்கும் பாதகத்தைச் சொல்லவே  இல்லை. “ஒண்ணும் பெரிய விசயமில்லண்ணே..! எல்லாமே வெள்ளையப்பந்தான்”  என்றுதான் தைரியம்  சொன்னார்.

 

யார் நேரமோ வெள்ளையப்பனைக் காண்பித்தும் இவருக்கு மட்டும் காரியம் ஆகாமல் போனது  ’கருமாயப் பட்டு சம்பாதிச்ச காசு போச்சே’ என வீட்டில் புலம்பிய போது.. அரசியல் சூழல் என்றும் “பணத்துக்கு நானே பொறுப்பு” என்றும் வலியவந்து விநாயகம் ஒப்புக்கொண்டார்.

 

ஆனால் விநாயகம் உரியநேரத்தில் பணத்தை சேர்க்கவேண்டியவருக்குச் சேர்ப்பிக்காமல் தனக்கு பயன்படுத்திக் கொண்டதே வேலைதவறியதற்கு காரணம். என வெளியில்  பேசிக்கொண்டார்கள். ’பலிச்சமட்டும் தனக்கு ஒதுக்கிக்கிருவான்..’

 

மூத்தவனை வேலைக்கு அனுப்பிவிட்டால், இரண்டாவது பையனின் படிப்பிற்கு ஒத்தாசையாய் இருப்பான் என்ற தன் கனவு இப்படி நொறுங்கிப் போனதில் வருத்தம் தீராதிருந்தது இவருக்கு.

 

போய்த் தொலையிது குடுத்த பணத்தவாச்சும் வாங்கிவிடலாமென்றால் பல தவணைகள் கடத்தி விட்டார். ஒவ்வொரு தவணையும்  விநாயகம் சொன்ன வார்த்தை மாறால்  அப்படியே இவர் திருப்பிச் சொன்னதில் இவருக்கு வீட்டில் லூசுப்பட்டம் கட்டிவிட்டனர்.அப்போதும் கூட விநாயகத்தின் மேல இவருக்கு நம்பிக்கை தீரவில்லை.

 

அவரது அப்பாவும் இவரது அப்பாவும் பால்ய நண்பர்கள். அம்மாவும் அவர்கள் குடும்பத்தோடு நல்லபழக்கம் கொண்டிருந்தது. சின்னவயசிலிருந்தே ’அண்ணே அண்ணே’ என சுற்றிச்சுற்றி வருவார். அந்த உறவும் நட்பும் விநாயகத்தின் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் உண்மையின் பிரதிபலிப்பாய் இவருக்குக் காண்பித்தது.

 

ஒருசமயம் வீட்டில் உள்ளவர்களைச் சமாளிக்க முடியாமல் போக, விநாயகத்திடம் வந்து ஒப்பித்தார். “பயலுக எள ரத்தமா..! சூடா பேசுறாங்க..வினாயகம் அவங்களே நேரா உங்க வீட்டுக்கு வந்து கேக்கப் போறான்ங்..களாம்..”  என வருத்தமாய்ச் சொன்னார்.

 

“வாஸ்த்தவம் தானண்ணே.. ! வீட்ல அப்பிடித்தான இருப்பாங்க வந்தா வரட்டும்ணே..”  அவரும் ஒத்துப் பேசினார்.

 

அன்றிலிருந்து அவருக்கு போன் செய்தால் அவர், உடனடியாய் எடுப்பதில்லை. “உங்களது அழைப்பிற்கு நீங்கள் அழைக்கும் நபர் பதிலளிக்க விரும்பவில்லை”  என யாரோ ஒரு அம்மணி வருத்தப்பட்டுப் பேசுவார்.

 

“வெறும்வாயில பேசி என்னா செய்ய பணத்த வச்சுக்கிட்டு கூப்பிடலாம்ணுதே எடுக்கறதில்லணே.. வேற எதும் தப்பா எடுத்துக்காதீங்க” என்று நேருக்குப் பார்க்கிற சந்தர்ப்பங்களில் சொல்லிச் சமாளிப்பார்.

அவர் போனை எடுக்காததால் வீட்டில் எத்தனை விதமான கற்பனைகள் களேபரம் என இவர், விநாயகத்தைச் சந்திக்கும் அத்தனை சந்தர்ப்பங்களிலும் மறக்காமல் சொல்லிவிடுவார்.

 

ஒருநாள் பையனின் போனிலிருந்து கூப்பிட்டு இவரது மூத்தபையனும் மனைவியும் பேசினார்கள். உடனே அன்றுமாலை தனது இருசக்கர வாகனத் தோடு கடைக்கு வந்தார் விநாயகம். ”இந்த வண்டி சமீபத்திலதான் வங்குனது. இன்னும் நம்பர்கூட எழுதல. கொஞ்சநாளைக்கு வச்சிருங்க, பணத்தத் திருப்பிக் கொடுத்திட்டு நா இத மீட்டுக்கறேன்..அதுவரை தம்பி ஓட்டிகிட்டு இருக்கட்டும்”

 

வண்டிச்சாவியையும் ஆர்.சி புத்தகத்தையும் விநாயகம் ஒப்படைத்த போது இவருக்கு கண்களில் கண்ணீர் தளும்பிவிட்டது. “ இது நீங்க ஓட்டிக்கிட்டிருந்த வண்டிதான வினாயகம்..? “

 

“ஆமாங்..ணே.. அதனால என்ன..? பத்துநாளுல். பணம் வந்திரும் திரும்ப வந்து வாங்கிக்கறேன்..”  திடமாகச் சொன்னார்.

 

எந்த நேரமும் ஒட்டிப்பிறந்ததுபோல வண்டியோடு திரிபவர் விநாயகம். பையனின் சூடான வார்த்தையால் ரோசப்பட்டு விட்டார் என நினைக்கையில் இவருக்குக் கூசியது. இனிமேல்  நண்பர்களோடு பணப்பரிவர்த்தனை வைக்கக் கூடாது. மொத்தத்துக்கு பணத்தையே கையில் தொடக்கூடாது என்ற முடிவுக்கு வந்தார்.

 

“அவசரத்துக்கு வந்து வண்டிய எடுத்துக்கங்க வினாயகம்..”  என்றார் ஆனாலும் மனசு கேட்கவில்லை..

 

அந்த வண்டி வந்து இரண்டு மூன்று மாதங்களாகியும் விநாயகம் வரவில்லை.

 

அன்று இவரது இரண்டாவது பையனுக்கு பிறந்தநாள். அவ்னும் அவனது அம்மாவும் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்புகிறபோது யாரோ சிலர் தங்களைப் பின்தொடர்வது போல உனர்ந்து சீக்கிரமாய் வீடுவந்து சேர்ந்தார்கள் ஏற்கனவே ஊருக்குள் நிறைய சம்பவங்கல் கடத்தலும் களவுமாய் நடந்து கொண்டிருக்கின்றன. இவரது மனைவிக்கு பதட்டம் அதிகமாகி ’’அப்பாவ வீட்டுக்கு வரச்சொல்லுடா’’ என அலற இவரும் வீடு வந்தசமயம் வீட்டின் முன்னால் வேறொரு கச்சேரி நடந்து கொண்டிருந்தது. தெருசனம்முழுக்க இவரது வீட்டுவாசலில் குழுமி இருந்தனர். நாலைந்து விடலைப் பசங்களுடன் இவரது மகன்கள் இருவரும் வாக்குவாத்தத்தில்  ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அவர்களோடு பக்கத்து வீட்டுக்காரர்களும் அந்த பயல்களை சத்தம்போட்டுக்கொண்டிருந்தனர். இவ்ரதுமனைவி ஒருஓரமாய் கண்கல்ங்கிய நிலையில் நின்றுகொண்டிருந்தார்.

 

இவரைப் பார்த்ததும் பக்கத்து வீட்டுக்காரர் “ம்.. அவக அப்பாவே ந்தா வந்திட்டார்..” என கை காட்டிச் சொன்னார். கூட்டத்தின் பார்வை முழுசும் இவர்பக்கம் திரும்பியது. இவருக்கு ஏதும் விளங்கவில்லை நல்லதா கெட்டதா வில்லங்கமா விவகாரமா..?

 

”வாங்க சார்..? “ யாரென்றே அறிமுகமில்லாத வாலிபன் ஒருவன் இவரை அழைத்தான்.

 

அவன் முன்னால் போய் நின்றார். கூட்டம் அத்தனை அமைதியாய் இருந்தது.

 

“இந்தவண்டி யாருது..? “ விநாயகம் தந்திருந்த இருசக்கர வாகனத்தை அடித்துக் கேட்டான்.

 

இருபுறமும் திரும்பிப்பார்த்த் இவர் கடைசியாக மகன்களையும் பார்த்தார். இருவரும் இறுக்கமான சாயலுடன் நின்றிருந்தனர்.

 

“ஏன்.. எதுக்குக் கேக்கறீங்க..? நீங்க யாரு..?”

 

“இது அவங்க வண்டியாம்..! தூக்கீட்டுப் போக வந்திருக்காங்க”..” மூத்தவன் பதில் சொன்னான்.

 

இவருக்கு திடுக் கென்றது. பிள்ளைகள் எதும் ஏப்ரல் ஃபூல் விளையாட்டுக் காட்டுகிறார்களா.. ஆனால் கூட்டத்தின் நிலவரம் அப்படியாக இருக்குமென தோன்றவில்லை.

 

“ஒங்க பிரண்டுக்குப் போன் போடுங்கப்பா.” சின்னவன் இயல்புக்கு மாறாய் படபடத்துப் பேசினான்.

 

”பிரண்டுக்கா..? விநாயகம் சாருக்கா..?”

 

”ஆமா.. மோரு.. பெரிய் பிராடா இருப்பார் போலருக்கு. தவணைக்கி எடுத்த வண்டியாம்ல..”

 

அப்படியா..?

 

“என்னா நொப்படியா.. அஞ்சாறு மாசமா தவணை கட்டலியாம்..தூக்கீட்டுப்போக வந்திருக்காங்க..”

இவருக்கு படபடத்து வந்தது. நல்ல்வேளையாய் வியர்க்கவில்லை வியர்த்திருந்தால் ரெம்ப அசிங்கமாகியிருக்கும். உடனடியாய் விநாயகத்தை தொடர்பு கொண்டார்.

 

‘உங்களது அழைப்பு ஹோல்டிங்கில் வைக்கப்பட்டுள்ளது. “ மறுபடி அழைத்தார். “அழைப்பு நிராகரிக்கப்படுகிறது”

 

“என்னைக்கி அவரு அட்டண்ட் பண்ணாரு.. ஆகுற வேலையப் பாருங்கப்பா”

 

“தம்பீ.. வண்டி..”

 

அந்த வாலிபபயல்களிடம் தன்னிலை விளக்கமளிக்க முயன்றார்.

 

இவர் அவர்களை நெருங்குவதற்கு முன்பாகவே அவர்கள் இவரிடம் வந்தனர்.

 

“அண்ணாச்சி.. நீங்க எந்த விளக்கமும் சொல்லவேண்டாம். இது உங்க வண்டி இல்ல. அந்த ஆள் எங்கள ஏமாத்த இங்க குடுத்து வச்சிருக்கார்.”

 

“நாங்க ரூவா குடுத்து வாங்கீருக்கம்ப்பா” மூத்தவன் அடக்கமாட்டாத ஆத்திரத்தில் பேசினான்.

 

“பொழுதூக்கும் அதையே சொல்லாதீஙக எங்களுக்கு ட்யூ பேலன்ஸ் இருக்குங்கறே வேணும்னா பேலன்ஸக் கட்டுங்க நாங்க போயிற்ரம்..”

 

”பேலன்ஸ் எவ்ளோப்பா” இவர் முந்திக்கொண்டு கேட்டார். நடுவீதியில் அசிங்கப்படுவதற்கு பாக்கியைக் கட்டிவிட்டுக்கூட நிம்மதியாய் இருக்கலாம்.

 

சட்டைப்பைக்குள் கைவிட்டு ஒரு பேப்பரை எடுத்துப் பார்த்தவன் “பதினெட்டாயிரத்து….” என சொன்னபோது பேசுவதற்கு வார்த்தைகள் கிடைக்காமல் திண்டாடினார்.

 

“ஹலோ நீங்க கடன் வாங்குன உங்க பார்ட்டியப் பிடிச்சு காசக்கேளுங்க எங்களுக்கும் உங்களுக்கும் எந்தச் ச்ம்பந்தமும் இல்ல.. தேவையில்லாம இங்க வந்து கலாட்டா பண்ணாதீங்க.””

 

சின்னவன் இவரது பக்கமாய்வந்து நின்று பேசினான்.

 

“தம்பி வெவரமா பேசுறதா நெனைக்காதீங்க.. பொருளு எங்களுது. உங்களுதுன்னா புரூவிங் காமிங்க.. எழுதி வாங்கிருக்கீங்களா..?”

மகன்கள் இருவரும் இவரது முகத்தை ஏறிட்டுப்பார்த்தனர். பக்கத்துவீட்டுக்காரரும் இவரைக்கேட்டார். “எழுதிவாங்கலியா..”

 

“ரெம்பத்தெரிஞ்சவரு..” இவர் அசடு வழிந்தார்

 

“என்னாதே தெரிஞ்சவர்னாலும் எழுத்துக்கு ஈடு ஆகுமா கேக்கறாங்கள்ல. என்னசார் வெவரமானவர் நீங்க..சரி அவரு எங்க இருக்காரு போன்ல யாசும் கூப்புடுங்க வந்து பதில் சொல்லிப்போகட்டும்”

 

“எடுக்க மாட்டேங்கிறார்..”

 

”நீங்க எழுதியே வாங்கி இருந்தாலும் எங்க கடனக் காட்டாம அது செல்லாது.”

 

“ஆமா பைனான்ஸ் இருக்கப்ப அத அத்துக்குடுக்கணும்ல..”

 

“ எழுதி வாங்கீருந்தா அந்தாள்மேல நீங்க போலீஸ்ல ரிப்போர்ட் குடுக்கலாம். இப்படி பைனான்ஸ்ல இருக்க வண்டிய எனக்கு ஏமாத்தி வித்துட்டார்னு ’’

 

“சரிதம்பி ஒரு ரெண்டு நாள் டயம் குங்க  எப்பிடியாச்சும் உஙக கடன செட்டில் பண்ணச்சொல்லீர்ரே..”

 

“சாரி.. சார் அதெல்லாம் சான்ஸ் இல்ல ஏற்கனவே ரெண்டுதரம் சான்ஸ் வாங்கிட்டாரு  இந்த வண்டிய கண்டுபிடிக்கவே எங்களுக்கு நாக்கு தள்ளிப்போச்சு.. நீங்க சாவிய தரலீன்னாலும் பூட்ட உடைச்சு தூக்கிப்போக எங்களுக்கு ரைட் இருக்கு. சாவியக் குடுங்க..”

 

“வண்டிய குடுத்தா எங்களுக்கு ரூவா போயிரும்பா..”

 

“அப்ப அவரக் கூப்பிடுங்க..”

 

“லைன்ல வரமாடேங்கிறாரு..”

 

“தெரியும் சார் அவர் சிக்கமாட்டாரு. அதனாலதான் நாங்க வண்டியத் தூக்கணும்ங்கறோம்..”

 

“ஏப்பா வண்டிய கடென் வாங்குனவன்கிட்ட விட்டுப்போட்டு ஒரு அப்புறானிகிட்டவந்து தகறார் பண்ணா எப்பிடி..” அக்கம் பக்கத்துக்காரர்கள். சேர்ந்து சத்தம் போட ஆரம்பித்தார்கள்.

 

மூத்தவன் போன்போட்டு வார்டு கவுன்சிலரை அழைத்துவந்தான்.

 

ஓரமாய் நின்று கொண்டிருந்த மனைவியைப் பார்த்தார். கௌரவர் சபையில் நிற்கும் பாஞ்சாலியின் ஞாபகம் வந்த்து இவருக்கு.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top