கொள்ளை

0
(0)

இரண்டு நாளாக ஆளரவம் இல்லாதிருந்த அடுத்த வீட்டில் கதறல் சத்தம். நானும் இரண்டு நாள் ஊரில் இல்லை . அரைமணிக்கு முன்புதான் வந்து குளித்துக் கொண்டிருந்த போது சத்தம் கேட்டது. அவசர அவசரமாய் உடுத்திக் கொண்டு ஓடினேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விட்டுவிட்டு அக்கம் பக்கத்தினர் கூடிவிட்டனர். மோவாயில் கை வைத்தபடி இரக்கம் குரலில் தொனிக்க கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர். சுப்பிரமணியன் தலைமையாசிரியராகப் பணியாற்றி கடந்த மே மாதம் தான் ஓய்வு பெற்றிருந்தார். காவல்துறையினர் வந்திருந்தனர்.

சுப்பிரமணியன் உடைந்த குரலில் காவல்துறையினரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ஆசிரியர் பயிற்சி பெற்ற தனது மகளுக்கும் ஒரு வங்கியில் இளநிலை அலுவலராகப் பணியாற்றிவருபவருக்கும் கல்யாணம் செய்வதற்காக அழைப்பிதழ் அடிப்பது குறித்து பேச, சம்பந்தி ஊருக்கு கணவனும் மனைவியும் வீட்டை பூட்டி விட்டுச் சென்றுள்ளனர். வீட்டில் பீரோவின் மறைவு அறையில் 35 பவுன் தங்க நகைகளும் 2 கிலோ வெள்ளிப் பொருள்களும் பத்து லட்சம் ரூபாய் பணத்தையும் வைத்து விட்டுச் சென்றுள்ளனர். வீடு பூட்டியபடி உள்ளது. பின் பக்கமாக நுழைந்து பீரோவை உடைத்து தங்கநகைகள், வெள்ளிபாத்திரங்கள், மடிகணினி ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளனர். மனைவி மகள் மடியில் மயங்கிக் கிடந்தார். மகள் முகமெல்லாம் கண்ணீர்த் தாரைகள் தேம்பியபடி, பக்கத்தில் இருந்த சுவற்றில் சாய்ந்து இருந்தாள்.

காவல்துறையினரோடு வந்த தடயவியல் நிபுணர் பீரோவில் பதிந்திருந்த கைரேகைகளை படி எடுத்துக் கொண்டிருந்தார். காவல் ஆய்வாளர் பின்பக்கக் கதவுகள் கொல்லைப்புறச் சுவர் என சந்தேகப்படும் இடமெல்லாம் கைவிளக்கு ஒளிப் பாய்ச்சி ஆய்வு செய்து கொண்டிருந்தார். காவலர் தனது குறிப்பேட்டில் களவுபோன பொருள்கள், பணம், களவு நிகழ்ந்த சூழல் முதலியவற்றை குறிப்பெழுதிக் கொண்டிருந்தார்.

“அய்யா எப்படியாவது கண்டுபிடித்துக் குடுத்திடுங்க அய்யா, 35 வருஷம் உழைச்ச உழைப்பில், பென்சன்ல வாங்கின பொருள்கள் அய்யா, என்மகளை கரைசேர்க்க வச்சிருந்த பொருளெல்லாம் போச்சய்யா, போச்சுஞ்” என்ற தலையிலடித்துக் கொண்டு அழுதார். அவரது அழுகையைத் தாங்க முடியவில்லை. போலீஸ்காரர்கள் இறுகிய முகத்தோடு தாம் பார்ப்பதை எல்லாம் சந்தேகத்தோடு பார்த்தனர். நான் போய் சுப்பிரமணியன் சார்தோளை மெல்ல தொட்டு ஆறுதல் படுத்தினேன். என்னைப் பார்த்ததும் மீண்டும் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார். ஆய்வாளர் என்னை உற்றுப்பார்த்து யார், என்ன வேலை செய்கிறீர்கள். கடந்த ரெண்டுநாளாக எங்கே போயிருந்தீர்கள் என்று விசாரிக்க ஆரம்பித்தார். அழுகைச் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தார் மெல்ல மெல்ல நழுவினர். ஆய்வாளர் என்னிடம் விசாரித்து முடிக்கும் போது அந்தத் தெருவைச் சேர்ந்த ஈ கொசு கூட அங்கு இல்லை .

“சுப்பிரமணியன் சார், தடயங்களை எல்லாம் சேகரிச்சுட்டோம். ஸ்டேசனுக்கு வந்து ஒரு புகார் எழுதிக் கொடுத்திருங்க நடந்ததை எல்லாம் பார்த்தால் யாரோ திட்டமிட்டு கவனிச்சு கிட்டே இருந்து தான் செஞ்சிருக்காங்க. ரேகைகள் பதிவு செய்திருக்கிறோம். அந்த ரூம்லையும், பின் வாசல் கதவு பக்கமும் நாளைக்கு வரை யாரும் புழங்காதீங்க. மோப்ப நாயை நாளைக்கு வரவழைச்சு துப்புத்தேடுவோம்”.

“பின்னால பாத்ரூம்லாம் இருக்கு. அம்மாவும் அப்பாவும் வயசானவங்க. சர்க்கரைவியாதிக்காரங்க. அடிக்கடி பாத்ரூம் போவாங்கஞ்” என்று மகள் சொன்னாள். “ஒரு ராத்திரி தானே எப்படியாவது சமாளிங்க” என்றார் ஆய்வாளர்.

“சரி, வீட்டை பூட்டிட்டு இன்னிக்கு ராத்திரி நம்ம வீட்ல தங்கிக்கிங்க. நம்ம ஒருத்தருக்கொருத்தர் சமாளிச்சுக்குவோம்” என்றேன். அந்தக் குடும்பத்தார் நன்றியோடு என்னைப் பார்த்தனர். “அப்புறம் என்ன! சார்வீட்ல இன்னிக்கு ஒரு ராத்திரிதானே சமாளிச்சுங்க! சரி நாங்க கிளம்பறோம். ஸ்டேஷனுக்கு வந்து, கையோடு புகார் எழுதிக் கொடுத்திருங்க. அப்பத்தான் நாங்க மோப்பநாய்க்கு ஏற்பாடு பண்ண முடியும்”.

ஆய்வாளர் பேச்சில் நம்பிக்கை தென்படத்தான் செய்தது. அவர்கள் புறப்பட்டார்கள். என் மனைவியிடம் சொல்லி துயரத்தால் துவண்டு போனவர்களுக்கு டீ கொடுக்கச் செய்தேன். நானும் ஒரு முடக்கு டீயை விழுங்கி விட்டு எனது மொபட்டில் சுப்பிரமணியன் சாரை உட்கார வைத்து காவல்நிலையத்துக்கு அழைத்துப் போனேன். நாங்கள் போய் சேர்ந்த அரைமணி கழித்துதான் ஆய்வாளர் வந்தார். எழுத்தரிடம் புகார் மனு எழுதிக் கொடுத்தோம். காவல்நிலையம் முன் ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் பத்துபேர் வந்துவிட்டனர் “என்ன சுப்பிரமணியம் சார்பெருங்கூட்டத்தையே கூட்டிவிட்டீங்க. காலையில் வந்து முதல் தகவலறிக்கை வாங்கிக் கொள்ளுங்கள். நாங்கள் நடவடிக்கை எடுக்கத் தொடங்கி விட்டோம். இரண்டொருநாளில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம். திருடு நேற்று நடந்ததா, இன்று அதிகாலையில் நடந்ததா என்றே தெரியவில்லை. அக்கம் பக்கத்தார் எந்த அறிகுறியையும் சொல்லவில்லை. இருந்தாலும் எங்களிடமுள்ள தகவல்கள் மூலம் கூடிய சீக்கிரம் பிடித்து விடுவோம் கவலைப்படாதீங்கஇ நீங்க போயிட்டு வாங்க தேவையில்லாமல் கூட்டம் சேர்க்காதிங்க” என்றார் ஆய்வாளர்.

சுப்பிரமணியன் கண்ணீர் பொங்க விம்மலோடு கும்பிட்டார். வாசல் படி தாண்டியிருப்போம். ஒரு காவலர் வேகமாக வந்தார். “சார் ஒரு நிமிஷம்” இருவரும் திரும்பிப் பார்த்தோம். காவலர் என்னைத் தனியாக ஒரு ஓரமாக அழைத்துச் சென்றார். எனக்கு திக்கென்றது. ஈரக்குலை உதறியது. படபடப்பை மறைத்துக் கொண்டேன்.

“சாரி. வேறொன்றுமில்லை. தடவியல் நிபுணர் மோப்பநாய் ஏற்பாடு இதுக்கெல்லாம் கொஞ்சம் செலவு ஆகும். எங்க டிபார்ட்மெண்ட்ல நிதி ஒதுக்கீடு ஸ்பெஷலா ஏற்பாடு பண்ண தாமதமாகும். வர்றவங்களுக்கு பயணப்படிக்காவது ஒரு ரெண்டாயிரம் ரூபாய் வேணும் சார். இல்லாட்டி துப்பு கண்டுபிடிக்க தாமதமாகும்”. நான், சுப்பிரமணியன் சாரிடம் மெல்லச் சொன்னேன். அவர் சட்டை, பேண்ட் பாக்கட்டுகளை துளாவினார். ரெண்டு மூன்று முறை தேடினார். மனசு வலித்தது. நல்ல வேளை என் பாக்கெட்டில் ஏடிஎம் கார்டு இருந்தது. ஏடிஎம் நோக்கி விரைந்தேன். ரெண்டாயிரம் ரூபாய் எடுத்து வந்தேன். அந்தக் காவலர் வேப்பமரத்தின் கீழ் இருட்டில் நின்றார். சட்டென்று பணத்தை வாங்கிக் கொண்டார். “சரி சார், நாங்க எங்க வேலைகளை வேகப்படுத்தறோம்” என்று காவல்நிலையத்துக்குள் மறைந்தார். ஓய்வூதிய சங்கத்தார் சுப்பிரமணியத்திற்கு எல்லாவகை உதவிகளைச் செய்வோம் என்று ஆறுதல் கூறினர். நாங்கள் வீடு திரும்பினோம்.

அந்த இரவு எங்களுக்கும் தூக்கமில்லை. அவர்களை ஆறுதல் படுத்துவதும், தூங்கியாக வேண்டிய நிர்பந்தத்தில் படுக்கையில் புரள்வதும், சிறு அசைவும், பெருமூச்சும் கனத்த சத்தமாய் ஒலிக்க திடுக்கிட்டு எழுதுவதுமாய் இரவு நகர்ந்தது.

விடிந்ததும் அவர்களும் எங்கள் வீட்டு ஆள்களைப் போலவே குளித்து, உண்டு, தங்கி இருக்கச் சொல்லி எங்கள் வீட்டுச் சாவியைக் கொடுத்து விட்டு என் மனைவியும் நானும் அவரவர் அலுவலகத்திற்குச் சென்றோம். மாலையில் வீடு திரும்பினபோது சுப்பிரமணியம் சாரிடம் கேட்டேன். காலையில் 11 மணிவாக்கில் ஒரு பத்துபேர் கொண்ட போலீஸ் குழுவினருடன் துப்புநாய் வந்ததாம். உள்வீட்டில் பீரோவை நுகர்ந்து பார்த்து பின் வாசல் வழியே தெருமுனை வரை ஓடியதாம். பின் தெருமுனை திரும்பும் இடத்தில் நுகர்ந்து பார்த்தபடி நின்றதாம். அங்கு கொஞ்சம் பெட்ரோல் ஒழுகிய தடயம் இருந்த இடத்தில் நின்று நுகர்ந்து பார்த்து விட்டு சாலைவழியே கொஞ்சம் தூரம் ஓடி நின்றதாம். வீட்டில் நகைகளைக் கொள்ளையடித்து காரில் ஏறிச் சென்றுள்ளனர். இக்கொள்ளையில் இரண்டுக்கு மேற்பட்டவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறனர். கைரேகை தடயங்களைக் கொண்டும் குற்றப் பின்னணியைக் கண்டு பிடித்துவிடலாம் என்று சொல்லிச் சென்றனராம்.

சுப்பிரமணியம் சார்வீட்டார், அவர்கள் வீட்டிலேயே தங்கத் தொடங்கி விட்டனர். முகத்தில் உயிர்க்களையே இல்லை. சரியான ஆகாரமும் இல்லை. போய் ஆறுதல் சொன்னோம். “இழந்ததை கண்டுபிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையே நினைத்துக் கொண்டு இராமல் அடுத்தடுத்து ஆக வேண்டியதைப் பாருங்கள்’ என்றோம். செயலற்றப் போய் முகத்தைப் பார்த்தனர். அவரின் அனுமதி கேட்டு சம்பந்தகாரார் தொலைப்பேசி எண்ணை வாங்கி, இதமாய்ப் பேசி நடந்ததைச் சொன்னேன். அவர்கள் மறுநாள் அங்கே வருவதாகச் சென்னார்கள். நகைகள், பணம் பறிபோன சூழலில் இந்தக் கல்யாணம் நடக்க சம்பந்தி வீட்டார் ஒத்துக் கொள்வார்களா, மாட்டார்களா என்று கேள்வியே இவர்கள் மூவரின் இதயத்துடிப்பாகவும் சுவாசமாகவும் இருந்தது.

மறுநாள் சம்பந்தகாரர்கணவன் மனைவியுமாய் வந்தார்களாம். அவர்களைப் பார்த்ததும் இவர்கள் மூவரும் கதறி இருக்கிறார்கள். “நகை, பணம் கிடைக்கும் போது கிடைக்கட்டும். மகள் மனதைத் தேற்றிக் கொண்டு ஆசிரியர் பணிக்குச் செல்லட்டும். ஆறுதலாக இருக்கும். கல்யாணம் பற்றி பின்னால் பேசிக்கலாம்” என்று சொன்னார்களாம். மாலை டிபன்கூட சாப்பிடாமல் அவர்கள் புறப்பட்டார்களாம். சுப்பிரமணியன் சார்புலம்பினார். அங்கிட்டுமில்லாமல் இங்கிட்டுமில்லாமல் ஈரெட்டாய் சொல்லி இருக்கிறார்கள். நகை, பணம் கிடைத்தால் உடனே கல்யாணம் பற்றி பேசலாம் என்று பெருமூச்சு விட்டார். அவர்கள் வறண்ட கன்னத்தில் ஒரு சொட்டு கண்ணீர் உருண்டு விழுந்தது. நல்லதே நடக்கும் என்று நம்புவோம் என்று ஆறுதல் சொன்னோம்.

சனிக்கிழமை மாலை 3 மணி அளவில் வீட்டுக்கு வந்தார் சுப்பிரமணியம். “வாங்க ஸ்டேஷன் போய் விசாரிச்சுட்டு வருவோம். தயவு செய்து தொந்தரவு செய்வதாக நினைச்சுக்காதீங்க. நீங்க இல்லைன்னா அன்றைக்கே நாங்க செத்திருப்போம்” என்று கும்பிட்டு கண்ணீர் விட்டார். அவரது மனைவி விம்மினார். அவர்களது மகளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. “சரி போவோம்” என்றேன்.

போலீஸ் ஸ்டேஷன போவதற்கே எரிச்சலாகத்தான் இருந்தது. போனால் பார்ப்பவரை எல்லாம் கும்பிடனும். என்ன ஏதுன்னு கண்டு கொள்ளாமல் விரைப்பாக அவரவர் வேலையில் மூழ்கியிருப்பதாகக் காட்டிக்கொள்வார்கள். இன்றோடு பத்தாவது முறை வந்திருக்கிறோம். சுப்பிரமணியன்சார்குடும்பநிலை கருதி வரவேண்டி இருக்கிறது. எழுத்தர் மேஜை அருகே போனோம். இன்று புதிதாக ஒரு பெண் காவலர் எழுத்தராக இருந்தார். வணங்கினோம். கீழே கோப்புகளை புரட்டியபடியும் வயர்லஸ்ஸிலே கேட்டபடியும் உட்காரச் சொல்லி சைகை செய்தார். வயர்லஸ்ஸிலிருந்து காவல்துறை செய்திகள் வந்தபடி இருந்தன. அதன் ஒலியைக் குறைத்துவிட்டு என்ன என்று கேட்டார். சுப்பிரமணியமும் நானும் நடந்ததை எல்லாம் சொன்னோம். அவர் எனது முகத்தை ஊடுருவிப் பார்த்தபடி கேட்டுக்கொண்டிருந்தார். எனக்கு உறுத்தலாக இருந்தது. அவரை எங்கோ எப்போதோ பார்த்த முகமாக இருந்தது. டீக்கடை பையன் உள்ளே வந்தான். எங்களுக்கும் டீ கொண்டு வரச் சொன்னார். நாங்கள் மறுத்தோம். டீ வந்தது குடிக்கச் சொன்னார். அவர்தயவும் வேண்டும். இந்த உபசரிப்பின் அர்த்தம் என்ன என்று அஞ்சியபடி குடித்தோம்.

பக்கத்தில் நின்றிருந்த காவலரை வயர்லெஸ் செய்திகளைக் கவனிக்கச் சொல்லிவிட்டு எழுந்தார். என்னை அழைத்தபடி முன் நடந்தார். எங்களிருவருக்கும் திக்கென்றது. எவ்வளவு தொகை பிடுங்குவதற்கான அழைப்பு என்று சுப்பிரமணியமும் நானும் அச்சத்தை பார்வையில் பரிமரிக்கொண்டோம். ‘நீங்க மட்டும் வாங்க சார்” என்று என்னை அழைத்தார். நான் தயங்கியபடியே சுப்பிரமணியன்சாரை பார்த்துவிட்டு பின் தொடர்ந்தேன். காவல்நிலைய சுற்றுச்சுவர் அருகே வேப்பமரத்தடியில் நின்றார். நானும் போனேன். மனதில் ஆயிரம் கேள்விகளுடன்.

“ஏய், நீ ரவி தானே, தேசிங்கு அண்ணன் தானே? என் பெயரையும் சிறுவயதில் இறந்து போன என் தம்பியின் பெயரையும் சொல்லவும் அதிர்ச்சியும், ஆச்சரியமாகவும் இருந்தது. விழித்தேன். அவர்முகத்தை உற்றுப் பார்த்தேன். நினைவுச்சரடு பிடிபடவில்லை . “ஹேய், நான் கஸ்தூரி அக்காடா! சாரி, நான் கஸ்தூரி. அரிசிக்காரத்தெருவில் உங்க பக்கத்து வீட்டு அக்கா!” பால்யத்தின் நினைவு அடுக்கு திறந்தது.

****

ஆமாம், கஸ்தூரி அக்கா. பக்கத்து வீட்டு ரத்தினம் தங்கம்மா மகள், தேவராஜ் அண்ணனின் தங்கச்சி. நான் நாலாம் வகுப்பு படிக்கும் போது கஸ்தூரி அக்கா ஏழாவது படித்த ஞாபகம். கறுப்பான களையான துறுதுறுன்னு கண் இருக்கும். ரெட்டை ஜடை போட்டிருக்கும். அடிக்கடி கத்தரிப்பூ நிறத்தில் தாவணிகட்டி இருக்கும். செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் துணைக்கு வாடா ரவி, கோவிலுக்குப் போவோம் என்று மாரியம்மன் கோவிலுக்கு அழைத்துச் செல்லும். பஜார் வழியே தான் அழைத்துச் செல்லும். போகிற வழியில் பெண்கள் வியாபாரம் செய்யும் புகையிலைக் கடை, பொரிக்கடை பெட்டிக்கடை என்று அழைத்தும் போகும். அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்கும் கடைக்காரப்பெண் அங்கும் இங்கும் நகர்ந்தவேளை, காக்கா நிழலாடியது போல் கஸ்தூரி அக்காவின் கை கடைக்குள்ளே போய்வரும். கடைக்காரப் பெண் அருகில் வந்ததும் அக்கா, அதை முன்னாலயே வைச்சிருங்க மாரியம்மன் கோயிலுக்குப் போய்ட்டு வந்து காசு குடுத்திட்டு வாங்கிக்கிறேன். கோவிலுக்குள்ளெ கொண்டு போனா ஈரம் பட்டுடும்” என்று சொல்லும். கோயிலுக்குப் போய் திரும்பி வரும் போது பலகாரக்கடையில் ஒருநாள், லட்டு வாங்கும். இன்னொருநாள் காசு குறைவாய் இருக்குன்னு கடலை மிட்டாய் வாங்கும். எனக்கு பாதி பாதி தின்னக் கொடுக்கும் “தின்னுகிட்டே நட்” என்கும். திரும்பப் போகும் போது பஜார்வழி போகாமல் சந்து வழியில் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் அக்கா அந்தக் கடையில் எடுத்து வைக்கச் சொன்னியே அதை வாங்க வேணாமா?” என்று கேட்பேன். “போடா முட்டாள்!” என்று கண்சிமிட்டி சிரித்தபடியே ஒரு ஜடையை முன்னால் இழுத்துப் போட்டுக் கொள்ளும்.

“என்னக்கா”, என்றால் “வாடா நேரமாகுது எங்கம்மா திட்டும், உங்கம்மாவும் உன்னைத் தேடும்” என்று வாயை அடைத்து விடும்.

ஒரு நாள் பக்கத்து வீட்டில் கஸ்தூரி அக்கா அழும் சத்தம் கேட்டது. தங்கம்மா பெரியம்மா, “இந்தக் கைதானே காசை எடுத்தது, கொண்டா சூடு வைக்கிறேன்” என்று அதட்டியபடி உலைக்குறடை காய வைத்து மிரட்டிக் கொண்டிருந்தது. நான் எட்டி பார்க்கவும், தங்கம்மா பெரியம்மா கதவைச் சாத்திக் கொண்டது. மறுநாள் பள்ளிக்கூடம் விட்டு வரும்போது பம்பரம் விளையாடிக் கொண்டிருந்த என்னை, கஸ்தூரி அக்கா அழைத்தது, “டேய் ரவி, அமாவாசையில் பிறந்த திருடின்னு எங்கம்மாவும் அண்ணனும் அடிக்கடி கேலி பண்ணுவாங்க நான் திருடறதை யாரும் கண்டு பிடிக்க முடியாதுங்கிறது நிஜமான்னு தெரிஞ்சுக்கத்தான் அன்றைக்கு பொரிக்கடையிலயும், புகையிலைக் கடையிலயும் காசு எடுத்தேன். அதுலதான் லட்டும், கடலை மிட்டாயும் வாங்கிச் சாப்பிட்டோம். எங்கம்மாட்ட சொல்ல மாட்டேன்னு சத்தியம் பண்ணுடா” எனது கையை பிடித்து கெஞ்சியது. கஸ்தூரி அக்காவின் கரும்பளிங்குக் கண்ணில் நீர்திரண்டது. பாவமாக இருந்தது. சத்தியம் பண்ணினேன்.

***

அந்தக் கஸ்தூரி அக்காவா” என்றேன். எல்லா விவரமும் இந்த ஒரு வார்த்தையிலேயெ பரிமரிக் கொண்டது போல கஸ்தூரி அக்கா எனது கையை பற்றியது. எனக்கு கூச்சமாக இருந்தது. நம்மலை “டேய் என்று கூப்பிட ஒரு பால்ய சிநேகம் இருக்கே என்று என் மனசும் உடம்பெல்லாம் புதுப்பிறவி எடுத்தது போலிருந்தது.

“டேய், சாரி ரவி, அமாவாசையில் பிறந்தவ களவாடமாட்டா, களவாணியை பிடிப்பாள்னு இந்த வேலைக்கு வந்தேன். ஆனாஞ்.” கொஞ்சம் நிறுத்திய கஸ்தூரி பெருமூச்சுவிட்டு “சரி, ரவி இந்தக் கேஸை நான் பாஃலோ பண்ணிக்கிறேன். இனி நான் தான் இங்கே இருப்பேன். இன்ஸ்பெக்டர் வந்ததும் சொல்லி விரைவு படுத்தறேன்” என்றபடி பெருமிதமாய் நடந்து தனது நாற்காலியில் அமர்ந்தார் கஸ்தூரி.

அந்த சமயம் ஒரு பெண் சினந்த முகத்தோடு வந்து நின்றார். காது கழுத்து நிறைய கவரிங் நகைகள். இருகைகளில் கவரிங் வளையல்கள். பின்னிய நீண்ட ஜடையில் ஜடைவில்லைகள் ஜொலித்தன. நாடகக் கொட்டகையிலிருந்து வந்து விட்டாரோஞ் எண்ணத் தோன்றியது. கபடமில்லாத ஆனால் சோகம் அப்பிய முகம். வந்து நின்ற கணத்தில் நாங்கள் இருப்பது குறித்தெல்லாம் கருதாமல் “மேடம், என் ஐம்பது பவுன் நகைகளை எப்போ தரப்பேரிங்க.. வரும் போதெல்லாம் திருடனைத் தேடிக்கிட்டே இருக்கோம் தேடிக்கிட்டே இருக்கோம்னு சொல்றீங்க. அஞ்சு வருஷமாவா தேடுறீங்க” என்று பொரிந்தார். கஸ்தூரி அக்கா அந்தப் பெண்ணை பார்த்ததும் தெளிந்தவராய் வாங்க உட்காருங்க. நான் இந்த சீட்டுக்குப் புதுசு. உங்க பேரு என்ன. கேஸ் விவரம் சொன்னா நான் ஃபைல் பார்த்து விவரம் சொல்ல உதவியாக இருக்கும்! “ஆமா, மாசம் ஒருத்தரு மரிக்கிட்டே இருப்பீங்க மாசம் தவறாம வந்து சொல்லிக்கிட்டே இருக்கேன். இந்த சுவத்துக்கு காது இருந்தா இந்நேரம் ஓடிப்போய்த் திருடனை தேடி பிடிச்சு நகையைத் தந்திருக்கும்” என்று சொன்னவரின் கண்ணில் நீர் பொங்க ஆரம்பித்தது. கஸ்தூரி அக்கா சட்டென்று எழுந்து அவளது தோளைத் தொட்டு சாந்தப் படுத்தினார். விம்மல் பெருமூச்சாய் வெளியேறியது.

“என் பெயர் ரம்யா. பொதுப்பணித்துயிறையில் உதவியாளராக இருக்கேன். ஐந்து வருஷத்திற்கு முன் ஏப்ரல் 2ம் தேதி எனக்கு கல்யாணம் நடந்தது. ஒரு வாரத்தில் எங்கள் வீட்டில் திருடர்கள் நுழைந்து எங்கப்பா அம்மா எனக்கு ஆசையாய் போட்ட ஐம்பது பவுன் நகைகளையும் கொள்ளையடிச்சிட்டுப் போயிட்டான்க. எனக்கு ஒரு மாதிரி மனசு பாதிச்சிருச்சுன்னு என்னுடைய வீட்டுக்காரர் என்னை விட்டுட்டுப் போயிட்டார். அம்மா அப்பா கொண்டு போய்விட்டனர். என்னை பைத்தியம்னு சொல்லி விரட்டிட்டார். மேடம் சொல்லுங்க நான் பைத்தியமாவா இருக்கேன்? சொல்லுங்க மேடம்” கஸ்தூரி அக்கா தலையசைத்து மறுத்து அவளது தோளைத் தொட்டார். “உங்களுக்கு தெரிஞ்சது கூட பெத்த தாய் தகப்பனுக்கும், கட்டின புருஷனுக்கும் தெரியலை. அப்புறம். நகை திருடு போனது குறித்து இந்த ஸ்டேஷன்ல கேஸ் கொடுத்தேன். ஆள் மரிக்கிட்டிருக்கு. நாள் மரிக்கிட்டே இருக்கு நகையை மீட்கலை என் பிரச்சினைத் தீரலை” என்ற விம்மினாள் ரம்யா.

“சரிம்மா, இனிமே நான் தான் இருப்பேன். டிஎஸ்பி அய்யாகிட்ட சொல்லி சீக்கிரம் நகை கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்.”

கஸ்தூரி அக்கா சொன்னதும், நகைகள் கிடைத்து போல துள்ளி குதித்து ரம்யா எழுந்து “தேங்க்ஸ் மேடம் இ சீக்கிரம் நகைகளை வீட்டுக்கு கொண்டு வாங்க. நகைகளை போட்டுக்கிட்டு என் ஹஸ்பென்டை பார்க்கப் போகனும்” என்று சொன்னபடி வெளியேறினாள்.

இவ்வளவு நேரம் சுப்பிரமணியம் சாரும் நானும் உறைந்து போய் இருந்தோம். ஸ்டேஷனில் இருந்த பிற காவல்துறையினர் எதோ நாடகம் பார்ப்பது போல் பார்த்து சிரித்தனர். எங்களுக்குள் சொல்லத் தெரியாத ஒரு மாதிரியான இறுக்கம் மனதை பிசைந்தது.

இவ்வளவு நேரம் தலையை குனிந்து உட்கார்ந்திருந்த சுப்பிரமணியம் நிமிர்ந்தார். “மேடம் வர்றோம். விரைவு படுத்துங்கள் மேடம்” என்று சொல்லி வெளியே வந்தோம். சுப்பிரமணியம் சாரிடம் எழுத்தர் கஸ்தூரி எனக்கு சின்ன வயதில் தெரிந்தவக. பக்கத்து வீட்டு அக்கா. சீக்கிரம் நகை பணத்தை மீட்க ஏற்பாடு பண்றதாகச் சொல்லி இருக்கிறார் என்றேன்.

அப்பாடா இந்த ஸ்டேஷன்ல புகார் கொடுக்க வந்திருக்கவங்கள குற்றவாளி மாதிரி அலட்சியமாக பார்க்காமா, ஆறுதலாப் பேச ஒரு ஆள் கிடைச்சிருச்சு” என்று பெருமூச்சு விட்டார்.

நான்கு நாள் கழித்து காவல்நிலையதிலிருந்து ஒரு காவலர் வீட்டுக்கு வந்தார். சுப்பிரமணியம் சார்கூப்பிட்டனுப்பினார், போனேன். திருடர்பற்றி துப்பு கிடைத்து விட்டது. ஜார்கண்ட் மாநிலத்துக்குக் காரர்களாம், ஒரு தனிப்படையாக நாலுபேர் சென்று அவர்களைப் பிடித்து வரவேண்டுமாம். போக வர ரயில் கட்டணத்திற்கு வாரண்ட் பில் பண்ணிக்குவோம், சாப்பிட, தங்க செலவாகும். ஒரு ஐந்தாயிரம் ரூபாய் வேண்டும். இன்று இரவே கிளம்பப் போகிறோம். அய்யா வாங்கிட்டு வரச் சொன்னார் என்றார் காவலர். முதலில் ஒளிர்ந்த சுப்பிரமணியத்தின் முகம் கருத்து சுருங்கியது, வாய் துடித்தது. “பதறாதீர்” என்றேன். முனங்கியபடியே வீட்டிற்குள் போனார். மகளிடம் பேசினார். மகள் ஆடையை மாற்றிக் கொண்டு யுவுஆக்குப் போய் வந்தார். அதுவரை காவலர் எழுந்து வீட்டின் பின்புறம் போய் பழைய தடயங்களை பார்த்துக் கொண்டிருந்தார். அம்மா டீ போட்டுக் கொண்டு எல்லாருக்கும் கொடுத்தார். முகத்தில் களையில்லை “இன்னும் என்ன என்னவோ” என்ற சிந்தனை. “குற்றவாளியை பிடிச்சிட்டு வந்து நகைகளை கைப்பற்றிய உடனே உங்களுக்கு தகவல் சொல்றோம்” என்றபடி பணத்தை வாங்கியதும் பறந்தார்.

இரண்டு நாளில் தொலைக்காட்சியில் செய்தி வாசகங்கள். “வடமாநிலத்தைச் சேர்ந்த கொள்ளைக் கூட்டம் பிடிபட்டது. நகைகள், பணம் மீட்பு” என்று நகர்ந்தன. சுப்பிரமணியம் கூப்பிட்டார். விவரம் சொன்னார். “நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை. ரெண்டு நாள்ல ஜார்க்கண்ட் போய் நம்மாளுக கொள்ளைக்காரனைப் பிடிச்சிட்டாங்களா!” “எப்படியோ நமக்கு 35 பவுன் நகையும் பத்து லட்சம் பணமும் கிடைச்சா சரி. ஏன் அதை இதை பேசுறிங்க!” என்று அம்மா சொன்னார். மகள் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது.

மறுநாள் காலை செய்தித்தாளில் அரைபக்கத்திற்கு படத்தோடு செய்தி வந்திருந்தது. மாவட்டக் கண்காணிப்பாளர், துணைக் கண்காணிப்பாளர், காவலர் இரண்டு வடமாநில மனிதர்களோடு ஆய்வாளர் கம்பீரமாக நின்றார்.

ஒரு மாதகாலமாகக் கண்டும் காணாமல் நழுவிய அத்தெருவாசிகள் வலிய வந்து மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். அந்தத் தெருமுனையில் உள்ள பிள்ளையாருக்கும், மாரியம்மனுக்கும் பொங்கல் வையுங்க போன உயிரு திரும்பி வந்திருச்சு. கைவிட்டுப் போன செல்வம் கைக்கு வந்திருச்சு என்றெல்லாம் பேசினாங்க. சுப்பிரமணியம் அவர்களை வெற்றுப் பார்வையால் பார்த்தார். வறட்டுச் சிரிப்பு ஒன்றை உதிர்த்தார். ஓய்வூதிய சங்கத்திலிருந்தும் வந்து வாழ்த்தினார். அவர்களைப் பார்த்ததும் நெகிழ்வாய்க் குலுங்கினார். பகல் மணி மூன்று இருக்கும். காவல்துறை ஜீப் ஒன்று வேகமாய் தெருவுக்குள் புழுதியைக் கிளப்பிக் கொண்டு வந்தது. வீட்டின் முன் நின்றது. அக்கம் பக்கத்தார் வாசலில் நின்றபடியும் ஜன்னல் பின்னாலிருந்தும் பார்த்தனர். ஆய்வாளர் துள்ளிக் குதித்து இறங்கினார். சுப்பிரமணியமும், மனைவியும் பதறி வாசலுக்கு வந்தனர். வாயில் வார்த்தைகள் வரவில்லை கும்பிட்டபடி வாங்க என்றவாறு தலையசைத்தனர். ஆய்வாளர் பின் இருகாவலர்கள் வந்தனர். அய்வாளர் ஒரு இருக்கையில் அமர்ந்தார். சுப்பிரமணியம் பவ்வியமாக கைகள் நடுங்க அருகில் போய் நின்றார்.

“சுப்பிரமணியம் சார்”கல்பிரிட்களை தேடி பதுங்கி இருந்த இடத்திலேயே போய் வலைச்சு பிடிச்சிட்டு வந்துட்டோம். பத்திரிகையில், டீவியில பார்த்திருப்பீங்க! ஏழு மணிக்கு டிஎஸ்பி ஆபிஸ்க்கு வாங்க. வந்து அய்யாவைப் பாருங்க உங்கள் நகைகள் ஒப்படைக்கிற நடைமுறைகளைச் சொல்லுவாரு” என்றபடி மிடுக்காக எழுந்தார். அம்மா, “சார்டீ போட்டிருக்கேன், சாப்பிட்டுட்டு போங்க! “சாரிம்மா, நாங்க இப்படி எல்லாம் சாப்பிடக்கூடாது! சார் நீங்க, எப்ஐஆர் காபியில் சொன்ன நகைப்பட்டியலோட வந்திருங்க” என்றபடி நடந்தார். காவலர்கள் வெற்றிப் புன்னகையை படரவிட்டபடி பின்தொடர்ந்தனர்.

சுப்பிரமணியம் முகத்தில் சிரிப்பைக் காணோம்! பலத்த யோசனை முடிச்சுகள், முகமெங்கும் இறுகி இருந்தன!

மாலை ஏழு மணிவாக்கில் துணைக்கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் போனோம். “அய்யா வெளியில் போயிருக்கார் வந்திருவாரு உட்காருங்க” என்றனர். அலுவலகத்திற்குள் எட்டிப் பார்த்தேன். கஸ்தூரி அக்கா சீருடையில் ஏதோ எழுதியபடி இருந்தார். ஆள் நிழலாடலை உணர்ந்து பார்வையை உயர்த்தினார். எல்லோரும் பார்க்கவும் எழுந்து வந்தார். களைத்த முகத்தில் பூசிய சிரிப்போடு பேசினார். ஒரு வகையாக ரிக்கவரி ஆயிருச்சு. நாளைக்கு காலை 10 மணிக்கு கோர்ட்டுக்கு வரச் சொல்லுவாங்க உங்களை அழைத்து நகை விவரங்களை கேட்டு அவை உங்களதுதானா என உறுதிப்படுத்திவிட்டு, உங்களுக்கு கொடுக்க நீதிபதி உத்தரவு பிறப்பிப்பார். மாலை 3 மணி வாக்கில் வந்து உங்கள் நகைகளையும், பணத்தையும் வாங்கிக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே பக்கத்தில் யாரோ வந்து நின்றார்கள். திரும்பி பார்த்தால் ரம்யா. அந்த இருள் படர்ந்த முன்னிரவிலும் கழுத்து நிறைய கவரிங் நகைகளும் கைகளில் கவரிங் வளையல்களும் ஜொலிக்க நின்றார்.

“ரைட்டர் மேடம், என் நகைகளை எப்போ வந்து வாங்கிக்கலாம்” என்றார்.

கஸ்தூரி திடுக்கிட்டபடி, “உங்க நகைஞ் ரெக்கவரி ஆனதாகத் தகவல் இல்லையேஞ் எதுக்கும் இன்ஸ்பெக்டர் ஐயாவை பாருங்க. அவர்தான் உங்க கேஸை டீல் பன்றார்.”

ரம்யா முகம் சிவந்து ஆவேசமாக வாயைத் திறக்கும் முன் கஸ்தூரி ரம்யாவின் கைகளை பற்றி ஆறுதலாக சுவரோரமாக அழைத்துச் சென்று, இருக்கையில் அமர வைத்தார். ‘மேடம், கிடைக்க கிடைக்க கொடுத்துகிட்டே இருக்கோம். உங்கள் நகைகளும் சீக்கிரம் கிடைச்சிடும்”

“எத்தனை வருஷமாச் சொல்லுவீங்க இதை” கஸ்தூரி ரம்யாவை ஆறுதல்படுத்த முயன்றார்.

சுப்பிரமணியம் முகத்தில் பலவகையான சிந்தனை ஓட்டங்கள் தென்பட்டன. பல்லைக் கடித்து உதடுகளை இறுக்கமாக முடியபடி உட்கார்ந்திருந்தார்.

ஸ்டேஷனுக்குள் இருந்த லாக்கப்பில் இருவருக்கு அடிவிழும் சத்தமும், அலறலும் கேட்டது. கஸ்தூரி அக்காவைப் பார்த்தேன். “சும்மா, பெட்டி கேஸ் விசாரிக்கிறாங்க” என்று உலர்ந்த குரலில் சொன்னார்.

இரவு ஒன்பது மணி வரை ஆய்வாளரோ, துணைக்கண்காணிப்பாளரோ வரவில்லை. கஸ்தூரி அக்கா ஆய்வாளரை மீண்டும் தொடர்பு கொண்டார். “நாளைக்கு காலை 10 மணிக்கு எப்ஐஆர் காபியோடு மாஜிஸ்ரேட் கோர்ட்டுக்கு வரச்சொல்லுங்க” ன்னு பதில் வந்தது. காத்திருப்பின் எரிச்சலை உதறி எழுந்தோம். ரம்யா எங்களைப் பார்த்தார். அவரை பார்க்க எனக்கு மனத்துணிவு இல்லை. கஸ்தூரி அக்காவும் பணி முடிந்து வீட்டுக்கு புறப்படப் போவதாகச் சொன்னார்.

காலை 10 மணிக்கு நீதிமன்றத்தில் இருந்தோம். ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், இரண்டு காவலர்கள் வந்திருந்தனர். மாஜிஸ்ட்ரேட் ஐயா, நகைப்பட்டியலைப் படித்துக் காண்பித்து இவை உங்களுடையதா என்பார். ஆமாங்க ஐயா என்று சொல்லியிருங்க அவங்க உத்தரவு நகல் கிடைச்சதும் நீங்க சாயங்காலம் 3 மணி வாக்கில் ஸ்ழிடஷனுக்கு வந்து வாங்கிட்டுப் போங்க!” என்ற பரிவும் மிடுக்கும் கலந்த குரலில் ஆய்வாளர் சொன்னார்.

நீதிமன்றம் தனி உலகமாக இருந்தது. அதிகார மிடுக்கும், எதையும் சாதிக்கலாம் என்ற சாதூர்யமும், அவலமும், துயரும் அப்பியதும் என பல முகங்கள் தெரிந்தன. கட்டுப்படுத்தப்பட்ட அமைதியும் மனப் புழுக்கமும் இங்கிருந்து எப்போது வெளியேறுவோம் என்ற தவிப்பில் இருந்த சுப்பிரமணியத்தை பனிரெண்டரை மணிக்கு அழைத்தார்கள். நீதிபதி அறைக்குள் அழைக்கப்பட்டார். நீதிமன்ற சம்பிரதாயங்கள் முடிந்து வியர்க்க விறுவிறுக்க வெளியே வந்தார். அவரைப் பார்த்தேன். “தங்க நகைகள் கைப்பற்றி விட்டனர். வெள்ளிப் பாத்திரங்கள், மடிக்கணினி கிடைக்கவில்லை. ரூபாய் பத்து இலட்சத்தில் இரண்டு லட்சம் தான் கைப்பற்றப்பட்டதாம்” என்று சுரத்தில்லாமல் முனங்கினார். பின்னால் ஆய்வாளர் வருவது உணர்ந்து பேச்சை நிறுத்திக் கொண்டார். காவல் துறையினருக்கு சடங்காக வணக்கம் சொல்லிக் கிளம்பினோம்.

நாலு மணிக்கு காவல்நிலையத்துக்குப் போனோம். கஸ்தூரி அக்கா உட்காரச் சொன்னார். வழக்கம் போல் அங்கிருந்த தகவல் பலகைகளில் இருந்த குற்றபுள்ளிவிவரங்கள், அதிகாரிகள் பட்டியல்கள், வருவோர் போவோர் முகங்கள் என வெற்றுப் பார்வையால் பார்த்தபடி இருந்தோம். 5 மணிவாக்கில் ஆய்வாளர் வந்தார். எழுந்து வணங்கினோம். கம்பீரமாய் ஒரு புன்னகையை தவழவிட்டபடி அவர் பின்னால் வரச் சொன்னார். இரண்டே நாளில் ஜார்கண்ட மாநிலம் போய்த் திருடர்களைப் பிடித்த சாகசங்களைச் சொன்னார். இதை மூன்றாவது முறையாக முகத்தில் போலிபரவசத்தைக் கொணர்ந்துக் கேட்டுக் கொண்டோம். டீ சாப்பிட்டதும், இரு காவலர்கள் ஒரு சிறிய இரும்புப் பெட்டியைக் கொண்டு வந்தார்கள். பெட்டியைத் திறந்ததும் பணக்கட்டுகளைக் கொடுத்து எண்ணச்சொன்னார். பணத்தை எண்ணிக்கொண்டிருந்த எங்கள் முகங்களை ஆய்வாளர் ஊடுருவி பார்த்தார். “பத்து லட்சத்தில் எட்டு லட்சத்தை படுபாவிகள் செலவழிச்சிட்டானுக ரெண்டு லட்சம் தான் கைப்பற்ற முடிந்தது. வெள்ளி நகைகள் விவரங்கள் தெரியவில்லை என்று எங்கள் முகத்தை வாசித்துக் கொண்டே பெட்டிக்குள் கைவிட்டபடியே 35 பவுனுக்கு 280 கிராம் ஆகும். இந்தாங்க இதில் 300 கிராம் தங்கம் இருக்கு. அந்த ராஸ்கல்கள் தங்கத்தை உருக்கி விற்கிற சமயத்தில் தான் பிடித்து விட்டோம். ஒரு அரைமணிநேரம் தாமதமாய் போய் இருந்தாலும் இதுவும் கிடைச்சிருக்காது” என்றபடி சந்தன உருண்டையைப் போல இருந்த உலோக உருண்டையைக் கொடுத்தார்.

சுப்பிரமணியத்துக்கு கை நடுங்கியது. முகம் சிவந்தது. உதடு துடித்தது. நான் அவரது கைகளைப் பற்றினேன். எனது கைகளை உதறி ஆய்வாளரைப் பார்த்தார். அந்தப் பார்வையில் தொனித்த கலவையான கேள்விகளை என்னால் முழுதும் புரிந்து கொள்ள முடியிவல்லை !

“என்ன மிஸ்டர் சுப்ரமணியம் அப்படி பார்க்கிறீங்க” என்று குரலை சகஜப்படுத்தி கொண்டு பேசமுயன்றார்.

சுப்ரமணியம் பேசவில்லை ஒரு நிமிடம் அசாதாரண அமைதி. அதன் அழுத்தத்தை தாங்க முடியவில்லை. நெளிந்தனர்.

சுப்பிரமணியன் தொண்டையை சரிபடுத்திக் கொண்டே கேட்டார் “இது தங்கம் தானா?”

“மிஸ்டர் சுப்ரமணியம் என்ன இப்படி கேக்கிறீங்க. குற்றவாளிகள் கையிலிருந்து மீட்டு வந்திருக்கோம். இது எவ்வளவு எடை என்றுதான் சொல்ல முடியும். எத்தனை கேரட்னு சொல்றது காவல்துறையின் வேலை இல்லை!”

“சரி இருக்கட்டும்” என்றபடி விருட்டென்று எழுந்து வேகமாய் நடக்க ஆரம்பித்தார். நான் அவர்பின்னால் ஓடினேன். ஆய்வாளர் என்னை அழைத்து சுப்பிரமணியத்தை சமாதானப்படுத்தச் சொன்னார். காதில் விழாதவாறு சுப்பிரமணியத்தின் பின் தொடர்ந்தேன்.

‘மாஜிஸ்ட்ரேட் முன்னால் உங்க பொருள்னு ஒத்துகிட்டு, வாங்காமப் போனால் நீதிமன்ற அவமதிப்பு” என்றார் ஆய்வாளர்.

“நீதிபதியிடம், நான் இந்த உருண்டையை ஒத்துக்கலை” என்றபடி சுப்பிரமணியம் சொல்லித் திரும்பிப் பார்க்காமல் நிமிர்ந்து நடந்தார். ஆய்வாளர் தலை எல்லாம் வியர்த்தது. தொப்பியை எடுத்து வியர்வையைத் துடைக்க முயன்றார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top