கெட்டுப்போனவள்?

3.9
(34)

கண்களில் அரும்பும் நீரை ஆட்காட்டி விரலால் வழித்துச் சுண்டி எறிந்தாள் ஷீலா. பொதுவாகவே அழும் கண்களை நான் நேராகப் பார்ப்பதில்லை. அவை ரொம்ப நாட்களுக்கு கண்களில் நின்று துன்பம் தரும் என்பதால் தொலைக்காட்சி நாடகங்களே பார்ப்பதில்லை. அதிலும் என் தோழி அழுதாள் என்றால் எப்படி அவளைப் பார்ப்பது? எனக்குச் சக்தியில்லை. கனத்த பெருமூச்சும் மௌனமும் எங்களைச் சூழ்ந்திருந்தது. மருத்துவமனையில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. இது மருத்துவர்களின் உணவு நேரம், அல்லது ஓய்வு நேரம். மருத்துவமனைச் செவிலிகளும் ஓய்வறைக்குச் சென்றுவிட, காத்திருப்போர் இடத்தில் நானும் ஷீலாவும் மட்டுமே எஞ்சியிருந்தோம். வெளியில் நின்ற காவலர் உட்கார்ந்தபடி உறங்கியும் உறங்காததுமான தோரணையில் அமர்ந்திருந்தார்.

இப்படித் தனியே பேசவேண்டும் என்றுதான், இவள் இந்த நேரத்தைத் தேர்வு செய்து வந்திருக்கிறாள் என்பது புரிந்தது. நகரத்தின் நடுவே பேருந்து நிலையத்தின் பின்புறம் அமைந்திருந்தும், நகரத்தின் சலனம் எதுவும் உள்ளே வராதபடிக்கு அமைதியாக இருந்தது மருத்துவமனை. கண்ணாடிக் கதவின் வழியாக வாகனங்கள் செல்வதைப் பார்ப்பது ஊமைப்படம் பார்ப்பதுபோல் வித்தியாசமாக இருந்தது. ஒரு வாரத்திற்கு இந்த உலகத்தின் வாகனங்களை, சைக்கிள் உட்பட எங்கேனும் வேற்று கிரகத்தில் ஒளித்துவைத்துவிட்டால் எப்படியிருக்கும்?

“குளிச்சு நாற்பது நாளாச்சும்மா. யூரின்ல செக் பண்ணேன்.  கருவாயிருச்சு. என்ன செய்றதுன்னு புரியலம்மா” தயங்கித் தயங்கி, தலையைக் கவிழ்ந்துகொண்டு மிகவும் கூச்சத்துடன் சொன்னாள்.  அவள் இன்னும் கொஞ்ச நேரத்திற்கு என்னை நேரே பார்க்க மாட்டாள் என்று தோன்றியது. ஷீலாவும் நானும் ஆறுவயது முதல் பழகி வரும் தோழிகள். புராணங்கள் எப்படி சீதைதான் உலகின் உத்தம உதாரண மனுசி என்கிறதோ, அதுபோல எனக்கு இந்த உலகத்திலேயே ஷீலா. சிறந்த நேர்மையான, வலிமையான, அதனாலேயே இயல்பான அழகும், பின்னே ஒளிவட்டம் இருப்பதுபோல பலருக்கும், குறிப்பாக எனக்குக்  காட்சிதரும் பேரழகி இவள்.  அப்படி இப்படி என அழகிற்கெனச் சொல்லப்பட்ட சட்டம் எதுவும் பொருந்தாதபோதும் நான் இன்றுவரை அவளைப் பேரழகியாகவே உணர்கிறேன்.

இதுவரை இவள் கலங்கி நான் பார்த்தது ஒரு முறைதான். எட்டாம் வகுப்பு படிக்கும்போது தம்பிக்கு நடந்த விபத்துப்பற்றி விவரிக்கும் போது இப்படித்தான், கட்டும் கண்ணீரைச் சுண்டியெறிந்தாள். அதுவே இன்னும் என் கண்களில் இருந்து நீங்காத காட்சியாக இருக்கிறது. மற்றபடி ஆயிரம் துயரமான நேரங்களில் அவளை நான் சந்தித்தபோது, கண்கள் துயரைச் சுமந்தபோதும், புன்னகையுடன்தான் பேசிக்கொண்டிருப்பாள். இன்று இவள் அரசு ஊழியை, நான் குடும்பத் தலைவி.

அருகருகான ஊர்களில் வாழ்க்கைப்பட்டபோதும், பள்ளிப்பருவ நட்பை அதுபோலவே தொடர இயலாத, வாழ்க்கைச் சூழல் இருவருக்கும். திருமணத்திற்குப் பின்பு, மாமனார், மாமியார், கணவன், பிறகு பிள்ளைகள் என நமக்கான வட்டத்தில், ஒரு இருபது வருடப் பழைய வாழ்வைப்பற்றிய,  நினைவைக்கூட வெட்டியெறிந்துவிடச் சொல்லும் புதிய உறவுகளின் முன்பு, எங்கேனும் பார்த்துக்கொண்டாலும், எல்லா விஷயங்களையும் பகிர்ந்துகொள்ள முடிவதில்லை.

இரண்டு நிமிடம் கிடைத்தாலும் போதும். ஒருவரை ஒருவர் பார்த்தோம் என்ற நிம்மதியை யாராலும் எதுவும் செய்ய முடியாது. எங்கள் நட்பின் அன்பும், நேர்மையும், ஒருவர் வாழ்வின் மீது ஒருவர்க்கு இருந்த அக்கரையும், அந்த அக்கரை காரணமாகவே சற்று, விலகி இருக்கும் பெருந்தன்மையும் எங்களை எல்லோரிலிருந்தும் வேறுபடுத்துகிறது. கருவானதிற்காக சந்தோஷப்படும் வயது கடந்துவிட்டது என்பது அவள் துயரத்திற்குக் காரணம். மூத்த பெண் பத்தாம் வகுப்பும், இளையவன் எட்டாம் வகுப்பும் படிக்கிறார்கள்.

“சரி மாத்திப்போடாமலா இருந்த? நீ எல்லாரையும் போல ஆபரேஷன் செஞ்சிருப்பன்னுல்ல நினைச்சேன்? ஏம்மா பண்ணல? இப்ப இந்த அவதியெல்லாம் நமக்கு இருக்காதில்ல”.

“தம்பி பொறக்கும்போது ரொம்ப சிக்கலாயிருச்சுமா, ஆபரேஷன் கொஞ்ச நாள்கழிச்சு பண்ணிக்கலாம்ன்னு விட்டேன். பிறகு, அப்படியே நாள் போயிருச்சு. நாம நெனச்சத நெனைக்கிற நேரத்துல  எங்கமா செய்ய முடியுது?” முகத்தை ஏறிட்டுப்பார்த்துப் புன்னகைத்தாள். எனக்கும் சிரிக்கத்தான் முடிந்தது அந்தக் கேள்விக்கு.

“வம்புக்கு வாழ்க்கைப்பட்டு வன்முறைக்குப் பிள்ளைபெற்று, பிள்ளைகளைக் காப்பாத்தவாவது உசிர் வாழ்ந்தாப் போதும்ன்னு, கட்டினவனுக்குப் பயந்து, வாழ்க்கையில் நமக்குன்னு ஒரு விநாடி நேரம்கூட இல்லாமப் போச்சே” மறுபடியும் கண்ணீரைச் சுண்டியெறிந்தாள். அது தெறிக்கும் அழகைப் பார்த்தபடி சற்று மௌனமாக இருந்தாள். இந்தச் சுண்டுதல், அவள் மீதான எனது ஈர்ப்பிற்குத் தீனி போட்ட ஒரு விஷயம். “என் துயரத்திற்குக் காரணமான உன்னை, என்னைத் துயர்ப்படுத்தும் ஒன்றை இந்தக் கண்ணீர்த்துளியைப் போலச் சுண்டியெறிவேன் பார்“ என்ற அந்தத் திமிர் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

“சரி, நானும் ரெண்டு பிள்ளைகளப் பெத்தவன்னாலும், இதுமாதிரி விஷயங்கள் எனக்கு எதுவும் தெரியாதுப்பா, நீ தனியா ஏன் வந்தே? ஏதாவது பிரச்சினைன்னா என்ன செய்றது?” நான்.

“டாக்டரப் பார்ப்போம், மாத்திரை தந்தா நல்லது. ஒரு வேளை இங்க தங்கச் சொன்னா என்ன செய்றதுன்னுதான் புரியல. என்ன ஆனாலும் சரி.  இதக் கலைச்சாத்தான் எனக்கு நிம்மதி”. மருத்துவமனை கடிகாரத்தைப் பார்த்து ஒரு முறை தனது கைக்கடிகாரத்தையும் பார்த்துக்கொண்டாள். எனக்கு உள்ளுக்குள் ஒரு படபடப்புத் துவங்கியது.

“அண்ணனக் கூப்பிட்டு வந்திருக்கலாம்ல்ல. ஒரு வேள டாக்டர் கேட்டா என்ன பதில் சொல்றது?. அவரில்லாம வந்தா வித்தியாசமா பாக்க மாட்டாங்களா?” இது மாதிரியான விசயங்களுக்கு வருகிற பெண்களைத் தவறாகவே நினைப்பதையும் பேசுவதையும், நான் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைகளில்  பார்த்தும் கேட்டும் இருந்ததால் பதற்றமாக இருந்தது எனக்கு.

“கூப்பிட்டேம்மா. வரமாட்டேன்னுட்டார். இப்ப என்ன பெத்துக்கங்கிறார். நம்ம அவமானம் அவர்க்கு எங்கே புரியுது?” அவள் சொன்னவிசயங்களில் எனக்கு திருப்தியில்லை. ஒரு வேளை இருவருக்குள் ஏதும் சண்டையாயிருக்குமோ? என் சந்தேகத்தை என் மௌனத்திலேயே உணர்ந்துகொண்டாள்.

“எங்களுக்குள்ள வேற பிரச்சினை ஏதும் இல்லம்மா. ஆனா அவர்கிட்ட அந்த அனுசரணையில்லை. எனக்குன்னாலும் சரி, பிள்ளைகளுக்குன்னாலும் சரி. ஆஸ்பிடலுக்கு, ஸ்கூலுக்கு அவர் வர்றதே இல்லை. எல்லாம் நாமதான் செய்யனும்.  அதுக்கு மேல வற்புறுத்துனா,  ‘இப்ப என்னவாம்? போய்ப் பாரு நானா வேணாம்ன்னேன்னு’விட்டேத்தியாப் பேசும்போது சண்டைதான் வரும். எல்லாமே அவருக்கு ரொம்ப சின்ன விஷயம். அய்யோ பாவம், நம்ம மனைவி, நம்ம பிள்ளைங்கன்ற மாதிரியான அக்கறைய அவர்கிட்ட பார்த்ததில்லை.  அதுதான் அவர் நேச்சர்ன்னும்போது,  பேசி என்ன செய்ய?.  பதினெட்டு வயதில் திருமணம், இருபது வயதில் இரண்டு பிள்ளைகள், வாழ்க்கை வெறும் இரண்டு வருடத்தில் முற்றுமுழுதாக நம்மைச் சுருக்கிவிடுதில்லமா? அதுல நம்ம விருப்பத்தைக் கேட்கவோ மதிக்கவோ எந்த உறவும் இல்லன்னும்போது  சமயங்கள்ல ரொம்ப அலுப்புத் தட்டுது”, என்ன சொல்ல வருகிறாள் புரியவில்லை.

“மருத்துவர் ஏதும் கேட்டா கௌரவக் கொறைச்சலயிருமாம். நாலு நாளாக் கூப்பிட்டும் வரமாட்டேன்னு அவ்வளவு சண்டை. அம்மாவக் கூப்பிடலாம்னா அதுக்கும் வயசாகிப்போச்சு,  ஒரு வேள ஆஸ்பிடல்லத் தங்கச் சொன்னா பாத்துக்கலாம்னு வந்துட்டேன். எனக்கு வேற வழி தெரியலம்மா”. வாட்ச்மேன் எங்களைக் கடந்து போனார். உள்ளே இருக்கும் செவிலிகளிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.

“உடல் வலிமையை நமக்கு குறைவாக வைத்த கடவுளைத்தாம்மா மொதல்ல தூக்குல போடனும். வலுவிருந்தா சட்டையைப் பிடித்து உருளும் பெட்டியை இழுத்துவருவது மாதிரி இழுத்துட்டு வந்திடலாம்ல்ல” எங்கள் மீது இரக்கப்பட்டோ, அல்லது அவருக்கு போரடித்ததோ என்னவோ வாட்ச்மேன் வரவேற்பறைத் தொலைக்காட்சியை இயக்கினார். வழக்கமான வன்முறைக்குப் பலியான இன்னொரு பெண்பற்றிய செய்தி புதியதாய் ஒன்று ஓடியது.

“உண்டாகவே விடாம நாலு எத்து எத்திரலாம்ல்ல. இதோ இந்த மாதிரி வன்முறைக்கு எந்தப் பெண்ணும் பலியாக மாட்டாள். முறைதவறிப் பெண்ணை வம்பிழுத்த நான்கு இளைஞர்கள் அந்தப் பெண்ணால் தாக்கப்பட்டுப் பலியானார்கள்” ன்னுல்ல தினமும் செய்தி வரும். கேட்கவே நல்லாயிருக்கும் இல்லையா?“. வேறு பழைய படத்தைப்போட்டுவிட்டு வாட்ச்மேன் அவரது சீட்டில் சாய்ந்துகொண்டார்.

“குடிச்சிட்டுக் கூத்தாடாம, வேற பழக்கம் வச்சுக்கிடாம, குடும்பத்துல பிரச்சினை இல்லாம இருந்தாப் போதும்ன்னுதான  தேத்திக்கிட்டுப் போறாப்ல இருக்கு,  நம்மள்லயும் சீரழிஞ்சு கிடக்கிற குடும்பங்களப் பார்த்து, எனக்கு இந்தப் பிழைப்புப் போதும்ன்னு நிம்மதியாத்தேன் இருக்கேன்”. ஏறிட்டுப் பார்த்துச் சிரித்துக்கொண்டாள்.

“சரி! இப்பக் கூப்பிடு. நானும் பேசறேன். அண்ணன் வந்திட்டா கொஞ்சம் நல்லாயிருக்கும்”. எனக்கு என் கவலை. எப்படியேனும் இவளின் வீட்டுக்காரர் வந்தால் போதும். நாமும் வீட்டிற்குச் சென்று பிள்ளைகளைப் பள்ளியிலிருந்து கூப்பிட்டுக்கொள்ளலாம். வீட்டில் தேவையில்லாத கேள்வியையும் தவிர்க்கலாம் என மனசு அல்லாடியது.

அதற்கும் மேல், உண்டான கருவை அழிப்பதை கொலையென்று நினைத்து, மனசு சஞ்சலப்பட்டுக்கிடந்தது. ஏதோ தவறு செய்வதுபோலத் தவித்தது. இந்த முடிவை நானும், இவளும் மட்டும் எடுத்ததாய் இருக்கக்கூடாது. நாளை ஏதேனும் பிரச்சினை என்றால்,  சீலாவின் கணவரே என்னைக் கைகாட்டுவதற்கும், பேசுவதற்கும் கூட வாய்ப்பிருக்கிறது. அய்யோ என்னென்னெவோ கற்பனையில், பயத்தில் நிலைகொள்ளவில்லை. தலைக்குள் ஒரு மெல்லிய வலி, மனதிலும், அடிவயிற்றிலும் ஏதோ ஒரு பிசைவு.

கைப்பையைத் துளாவி அவளின் அலைபேசியை எடுத்து அழுத்தினாள். முழுதாக  அழைப்பு மணி ஒலித்தும் எதிர் முனையில் ஆளில்லை. என்னைப் பார்த்தபடி மறுபடி மறுபடி அழுத்தினாள். ஒரு பயனும் இல்லை.

தொலைக்காட்சியில் ஏதோ எண்பதுகளின் படம் ஒன்று ஓடத் துவங்கியது. இதுவும் நல்லதற்குத்தான். நாம் பேசுவதை யாரும் கவனிக்கவில்லை என்ற நிம்மதிக்கு இந்த டிவியின் சத்தம் உதவியதாகப் பட்டது.

சற்று நேரம் தாமதித்து எனது அலை பேசியிலிருந்து அவரின் எண்ணிற்கு அழைத்தேன். இரண்டாவது சத்தத்திலேயே குரல் கேட்டது. “அண்ணே! நான் கவிதா பேசறேன். நல்லாயிருக்கீங்களா?”

“சொல்லுப்பா! நீ நல்லாயிருக்கியா? பிள்ளைக நல்லாயிருக்காங்களா?. ஷீலா உன்னப் பார்க்க  வந்துச்சு. என்னப்பா செய்யுது?” ஏதும் தெரியாததுபோல், தெரிந்தும் நல்ல பிள்ளை போல எப்படிப் பேசுவது?

“நல்லாயிருக்கோம். நானும் அவளும்தான் மருத்துவமனைக்கு வந்திருக்கோம். நீங்க வரணும்ன்னு நர்ஸ் சொல்றாங்கண்ணே! ஒரு வேளை தாமதமாச்சுன்னா, என் பிள்ளைக வீட்டுக்கு வெளியிலயே நிப்பாங்க. நீங்க வர்ரதுதான்னே எல்லாத்துக்கும் நல்லது”. என்ன செய்வது எப்படிப் பேசினால் அவரை இங்கே வரவைப்பது என்றே புத்தி ஓடியது.

“நான் திண்டுக்கல்லில் ஒரு கல்யாணத்திற்கு வந்திருக்கேம்பா.   அவளத் தனியாப் போன்னுதாப்பா சொன்னேன். சரி. வந்தது வந்திட்ட. நீ இருந்து பார்த்து அனுப்புப்பா. என்ன சொல்லப்போறாங்க. மாத்திரை தருவாங்க. அவ்வளவுதானப்பா.”

“அண்ணே! இங்க வித்தியாசமா பாப்பாங்கண்ணே, எனக்காகவாச்சும் கொஞ்சம் சீக்கிரம் வாங்கண்ணே?”

“நீயும் ஷீலாவும் மாதிரி, இவன் எனக்குப்பா. வரலன்னா சங்கடப்படுவான்ல்ல, ஒண்ணும் பிரச்சினையில்லைப்பா. நீ பார்த்து அனுப்பிவை. பிரண்டா இருந்து இதக்கூடச் செய்யக்கூடாதா தங்கச்சி.  ரெண்டாவது பொம்பளைங்க சமாச்சாரத்துல நா வந்து என்ன செய்யப்போறேன்?  பக்கத்தில் இருந்தாகூட உனக்காக வந்திருவண்டா. இனி இங்கிருந்து எப்படி வரமுடியும்?” நான் ஒன்றும் சொல்லாமல் போனை அணைத்துவிட்டேன்.

எங்கள் நட்பைக்கொண்டே என் வாயை அடைக்க முயல்வதில் இருந்தே, அவர் முடிவில் அவர் தெளிவாக இருப்பது புரிந்தது. யார் கண்டது?. இந்தப் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டுகூட திண்டுக்கல்லில் இருக்கிறேன் எனச் சொன்னால், நாம் என்ன செய்யப்போகிறோம். செவிலிகள் நடையும், முன்தயாரிப்பும், மருத்துவர் நெருங்கிவந்துவிட்டார் என்பதை உணர்த்தின. வரவேற்பறைப் பெண் அருகில் வந்து பெயர் கேட்டுக் குறித்துக்கொண்டாள்.

“என்ன விஷயம் என்றாள்” எனக்குத் திக்கென்றது. இதை எப்படிச் சொல்வது. இவள் எப்படி எடுத்துக்கொள்வாள்?  “டாக்டர் வந்துருவாங்களா” என்றேன் நான் எச்சிலை விழுங்கியபடி. வந்திருவாங்க கடைமைக்கெனச் சொன்னவாறு அவள் நகர்ந்தாள்.

மருத்துவரம்மா மடங்காத காட்டன் புடவையில் அலுங்காமல் நடந்துவந்தார். செவிலிகளை, எங்களை தலையை அசைக்காமலே ஒரு முறை பார்த்துக்கொண்டார். எங்களைத்தவிர இன்னும் இரண்டு மூன்று பேர் இருந்தனர். நோயாளிகள், ஒவ்வொருவராக வந்துகொண்டிருந்தனர்.

ஷீலாவின் கைபேசி ஒலித்தது. “ம். சொல்லுங்க. ஏன்? சரி” என்று என்னைப்பார்த்துப் புன்னகைத்தபடி பேசி அணைத்தபோது, கையில் எழுதுபலகையை ஏந்தியபடி நர்ஸ் எங்கள் அருகில் வந்தாள். “உங்கள் பெயர்? யாருக்குப் பார்க்கணும்?” நர்ஸ்.

“எனக்குத்தான்“ என்றாள் ஷீலா. “ம்.பேர் சொல்லுங்க!

“கவிதா“ என்றபடி எனது முகவரியைச் சொல்லிக்கொண்டிருந்தாள் என் தோழி ஷீலா. எனக்குத் தூக்கிவாரி எறிந்ததுபோல் சற்று நேரம் மூச்சு நின்றது.

“அபார்ஷன்“ என்றதும் நர்ஸ் ஒரு முறை ஏறிட்டுப் பார்த்துக்கொண்டாள். எனக்கு இருந்த இடத்தில் இருந்து நழுவி விழுவது போலிருந்தது. இதயத்துடிப்பு பல மடங்காகி தலை வலித்தது. உடன் வந்தவர் என, எனது முகவரியையும் கையெழுத்தையும் அந்தப் பெண் என்னிடம் கேட்டாள். எனக்கு நாக்கு உலர்ந்துபோனது. இவ்வளவு வருசமாக இருந்த  என் பெயரை மாற்றி,  எந்தப் பெயரை எப்படிச் சொல்வது? புதிய முகவரிக்கு என்ன சொல்வது? கண்ணைக்கட்டியது.

எனக்குப் பதிலாக அவள் சொன்னாள். “ஷீலா“ என்று ஏதோ ஒரு முகவரியைச் சொன்னாள் ஷீலா.

கைநடுங்க திக்கித்திணறி அந்தப் பெயரை என் பெயராகக் கையெழுத்திட்டேன். படபடப்புக் கூடிக்கொண்டிருந்தது. எப்பொழுது இந்த மருத்துவமனையைவிட்டு வெளியேறுவோம்  கடவுளே!. யாரேனும் தெரிந்தவர்கள் வந்துவிட்டால் என்ன செய்வது? நாமே நமது பெயரை சொல்லி அழைத்து மாட்டிக்கொள்வோமோ? உடைக்குள் உடல் வெடவெடத்தது. வியர்வைப் பெருகி உள்ளாடைகள் நனையத்துவங்கின.

எதையும் பேசவோ? கேட்கவோ நேரம் இன்றி, மருத்துவர் அறைக்குள் நுழைந்தோம். என்னுணர்ச்சி இன்றி நான் அநிச்சையாக இயங்கினேன். மருத்துவர் ஏதும் கேட்டுவிட்டால் என்ன சொல்வது? ஏதேனும் உளறிவிடுவோமோ? குறிப்பு நோட்டைக் கவனித்தபடி மருத்துவர் “கவிதா“ என்ற கேள்விக்குறியோடு உட்காரச்சொன்னார். ஷீலா அமர்ந்ததும் வழக்கமான செக்கப்புடன் மாத்திரைகளை எழுதத் துவங்கினார்.

“நீங்க” என்ன உறவு என்ற மருத்துவரின் கேள்விக்கு “நாத்தனார்“ என்றாள் ஷீலா. அவள் எல்லாவற்றிற்கும் முன்பே யோசித்துத் தயார் செய்துவந்திருக்கிறாள் எனப்புரியும்போது, என்னை மீறிய ஒரு கசப்பு முதன் முதலாக எனக்குள் ஊறியது.

“வீட்டுக்காரர் எங்க” தலையைக் குனிந்து எழுதியபடியே, என்னையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தபடி மருத்துவர் கேட்ட தொனியே திட்டுவது போலப் பட்டது.

“திண்டுக்கல்லில் தனியார் மில்லில் வேலை. லீவு தரமாட்டேங்குறாங்க. மாசம் ஒரு தடவதான் வருவாரு, லேட்டாகக்கூடாதுன்றதால வந்துட்டோம்” ஷீலா.

மருத்துவர் அதை நம்பியதுபோலவோ, அல்லது நம்பாததுபோலவோ படவில்லை. “எவன்கிட்டயாவது போகவேண்டியது. பிறகு இங்க வந்து ஆயிரம் கதை சொல்ல வேண்டியது“ என்ற தோரணையில்  எழுதிய சீட்டைக் கிழித்துக் கையில் தந்தார்.

மருத்துவர் முகமோ, மருத்துவர் அறையோ, அவர் என்ன செக்கப் செய்தார் என்றோ உணர முடியாத அந்தரத்தில் என் புத்தி தத்தளித்தது. விட்டால் போதும் என்ற வேகத்தில் மருத்துவமனை மருந்தகத்தில் மாத்திரைகளை வாங்கிக்கொண்டு வெளியேறினோம். எனக்கு அவளைப் பார்க்கவோ, ஏதும் பேசவோ, ஏண்டி இப்படி என் பெயரைச் சொன்ன? என்று கேட்பதோ கூட, அவளுக்கு நான் மதிப்பளித்தமாதிரி ஆகும் எனத்தோன்றியது.

எனக்குள் பரவிய கசப்பை விழுங்க இயலாமல் வீடு வந்து சேர்ந்தேன். பொழுதுக்கும்,  அவள் என் பெயரைச் சொல்லியது ஞாபகம் வந்து, என் கோபத்திற்கு நெய்வார்த்தது. தனக்கான அவமானத்தை என் மீது திணிப்பது என்ன நட்பு? பொய்சொல்ல இந்த உலகில் பெயர்களா இல்லை. யாரேனும் அந்த ஏட்டைப் பார்த்தால், என்னை மட்டும் தவறாக நினைக்க மாட்டார்களா? மனசு பொருமி, பொருமிப் புலம்பியபடியிருந்தது. இரவு வேலைகளை முடித்துப் படுத்தும் உறங்கமுடியவில்லை. இப்படி ஒருத்தியையா நான் இவ்வளவு நாட்களாக, என்னினும் மேலான என் தோழி என்று கொண்டாடினேன். இவள் இப்படிப்பட்டவளாய் இதற்கு முன்பு நான் உணர்ந்ததே இல்லையே.

அவள் கெட்டுத்தான் போனாள். அவள் என்  தோழியாய், எனக்காகத் துடிப்பவளாய், என் நலனில் அக்கறையுள்ளவளாய் இல்லை. அவள் மாறிப்போனாள். எல்லாவற்றிற்கும் மேல் என்னிடம் இவ்வளவு அப்பட்டமாகத் தனது சுயநலத்தைக் காட்டக்கூடியவளாக இருப்பாள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லையே.

விடிந்ததும் முதலில்  “யாரைக்கேட்டு நீ என் பெயரைச் சொன்னாய்” என்று நாக்கைப் பிடுங்கினாற்போல நாலு கேள்வி கேட்டால்தான் எனக்கு நிம்மதி கொள்ளும். சண்டையிட்டு இந்த நட்பை இழந்தால் நல்லதுதான்.

உருண்டு புறண்டும் உறக்கம் தட்டவேயில்லை. “ஒரு பெயரை மாற்றிச்சொல்லி இவ்வளவு வருடம் காத்துவந்த ஒரு புனித நட்பை அவளே உடைத்துவிட்டாளே ” மனசு கூச்சலிட்டது. விடிந்தது. வழக்கமான வேலைகளை முடித்துவிட்டு, வீட்டில் தனிமை கிடைத்ததும் முதலில் அலைபேசியை எடுத்து அழுத்தினேன்.

“என்ன கவிதா? பத்திரமா வீட்டுக்குப்போயிட்டியா? காலையிலேயே குளிச்சிட்டேம்மா. ரொம்பக் கஷ்டமா இருக்கு.  அன்பு மட்டும்தான் மனித வாழ்வின் அர்த்தம். மனிதர் கையில் மிச்சம் இருக்கும் தீராத ஒரே சொத்துன்னு  நெனைக்கிறதுதானம்மா நமது இயல்பு. இப்ப  என் வயிற்றில் உண்டான என் குழந்தையை அழிக்குமளவுக்கு, நான் மட்டும் கெட்டுப்போயிட்டனா?”

எனக்கு சற்று நேரம் பேச வரவில்லை. எதிர் முனையில் லேசான அமைதியும் விசும்பலும் கேட்டது. மனசு கணம் கூடிக்கொண்டிருந்தது. “என் வீட்டுச் சனிதாம்மா, வேற பேர் சொல்லு. கவர்மெண்ட்டுல வேல பார்க்கிற, ஏதாச்சும் பிரச்சினை வந்தாலும் வரும்னார். எனக்கு அந்த நேரம் வேற யோசிக்க முடியல. எனக்கு ஒரு பிரச்சனை வரும்ன்னு உன்பேரைச் சொன்னது, எவ்வளவு பெரிய துரோகம். எனக்கு அவமானம் தரும் ஒன்றை, உன் பேரில் வைப்பது என்ன மனுசத்தனம்?” சொல்லிவிட்டு நிறுத்தினாள்.

“ இப்படி நான் மாறிப்போகும் முன்பு, செத்துப்போறதுக்கு நீ மாத்திரை வாங்கித் தந்திருக்கலாம்மா”, மறுபடியும் மௌனமாகிவிட்டாள். பேச முடியாத அளவிற்கு அவள் இருப்பதைப் புரிந்தபிறகு என்ன பேசுவது அவளிடம்?

மூக்கை உறிஞ்சிக்கொண்டாள். அலைபேசி காதைச் சூடாக்கியது. “கவிதா, என்ன மன்னிச்சிரு. இந்தப் புதருக்கு வெளியில இருக்கிற மொத்த உலகத்தோட பிம்பமா எனக்கிருக்கவ நீ. அதான்  பேருன்னதும் எனக்கு உன் பேரைத் தவிர வேற சொல்லத் தெரியல. ஞாபகத்துக்கு வரல. சாரிடா, ஏம் பேசாமலே இருக்கே, கோபமா?.

ஏதாவது பேசேன், நாயே பேயேன்னுகூடத் திட்டேன் எனக்கு நிம்மதியாய் இருக்கும்” மறுபடியும் உடைந்துவிடுவாள் போலிருந்தது. அவள் சுண்டியெறியும் அந்தக் கண்ணீரில்,  அவளது அந்தத் தவறைச் சுண்டியெறிவது போல எனக்குக் கண்ணில் காட்சி தோன்றியது.

ரொம்பத் தயங்கித் தயங்கி, யோசித்து யோசித்து வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்து அவள் பேசிய விதத்திலேயே, இந்தத் தவறுக்காக, என் ஷீலாவும் என்னைப் போலவே,  முழுவதும் வருந்தியிருப்பாள் என்று தோன்றியது.

“ஏய் லூசு! பேர்ல என்ன இருக்கு?  உடம்பப் பார்த்துக்க. இதெல்லாம் பிரச்சினையாக்கி மனசக் குழப்பிக்காத. நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடு. இன்னும் ரெண்டு நாள் லீவு போட்டு உடம்பு சரியானதும் பிறகு வேலைக்குப்போ. என்ன சொல்றது புரியுதா?  பிள்ளை பத்தியெல்லாம் ஏதாச்சும் கற்பனை பண்ணி, பெரிய பாவம் பண்ணிட்டதா நினைக்காத. அப்படி வேணும்னா, இப்ப என்ன கெட்டுப்போச்சு. இன்னொன்னு பெத்துக்கயேன்” என்றபடி  அலைபேசியைத் துண்டித்தேன். “சீய். உருப்படாத கழுதை. அசிங்கமாப் பேசாத” என்ற சிரிப்புக்குரல் கேட்டது என் ஷீலாவிடம் இருந்து.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 3.9 / 5. Vote count: 34

No votes so far! Be the first to rate this post.

248 thoughts on “கெட்டுப்போனவள்?”

 1. C.p.Mallikapadmini

  இரு தோழிகளின் உண்மையான நட்பிலிருந்து துவங்குகிறது கதை. மிகவும் இக்கட்டான நேரத்தில் கடமை தவறிய கணவன் ஒருபக்கம், அதே இக்கட்டான நேரத்திற்கு கை கொடுக்க வந்த உயிர்த்தோழி மறுபக்கம்.
  காலம் கடந்து உருவான கருவை கலைப்பது என்ற முடிவில் ஏற்பட்ட மனப்போராட்டத்தை ஷீலா பாத்திரத்தின் மூலம் அருமையாக சித்தரித்துள்ளார் கதாசிரியர். ஷீலாவின் தோழி கவிதாவின் மனப்போராட்டம் மேலும் அதிகம். கவிதாவின் பால் அதிக இரக்கத்தை நமக்கு ஏற்படும் வகையில் இருக்கிறது.
  கவிதா அந்த இக்கட்டான நேரத்தில் தன் கடமையை உணர்ந்து உயிர்த்தோழி ஷீலாவுக்கு உதவ எடுக்கும் முயற்சி மிக அற்புதம். ஷீலாவின் கணவருடன் தொடர்பு கொண்டு அவர் இந்த இக்கட்டான நேரத்தில் இங்கு இருக்கவேண்டிய கடமையை சுட்டிக்காட்டுகிற விதமும், அதனை அவர் தட்டிக் கழிக்கும் பொழுது கவிதாவிற்கு ஏற்பட்ட மனக்கசப்பும் அருமை. தங்கள் கடமையில் இருந்து தவறும் ஆண்களின் பொறுப்பற்ற தன்மையை தோலுரித்துக் காட்டியுள்ளார். எந்த குற்ற உணர்வும் இல்லாமல் ஷீலாவின் கணவர் தங்கள் நட்பை சுட்டிக்காட்டி அதேபோல் என் நண்பனின் திருமண வைபவத்தில் நான் இருக்கிறேன் என்னால் வர இயலாது என்று கூறிய விதம் கவிதாவிற்கு மட்டுமல்ல வாசகர்களாகிய நமக்கும் ஒரு கசப்பு ஒரு அசூயை ஏற்பட்டது.. மனசு வலித்தது என்று கூறாமல் இருக்க முடியாது. கவிதா பாத்திரத்தின் மூலம் அந்த கசப்பை மிக அழகாக விவரித்திருப்பார். தாங்கள் இருக்கும் மருத்துவமனை அருகில் இருந்துகொண்டே ஏதோ ஒரு காரணத்தை கூறினாலும் நம்மால் என்ன செய்ய முடியும் என்று மனதில் நினைத்துக் கொள்வது.
  இந்தக் கதையில் கதாசிரியர் இரு தோழிகளின் மேன்மையான நட்பின்ஊடே… ஷீலாவின் நட்பில் ஒரு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.
  பொறுப்பற்ற கணவன் வழிகாட்டுதலின்படி தனக்கு இக்கட்டான நேரத்தில் உதவ வந்த உயிர் தோழியைதோழியை கலந்தாலோசிக்காமல் அவளின் பெயரையும் முகவரியையும் மருத்துவமனை பதிவேட்டில் கருக்கலைப்புகாக பதிவிட்டது என்பது அப்பட்டமான துரோகம். இக்கதை முடிவில் கணவன் செய்த துரோகத்தை விட உண்மையான நட்புக்கு செய்த துரோகமே அதிகமாக நம்முள் மேலோங்கியுள்ளது என்பது இக்கதையின் துரதிர்ஷ்டம்.

 2. Priyadharshini P

  கெட்டுப் போனவள் என்று கதையின் தலைப்பை பார்த்தவுடன் இது திருமணமாகாத பெண்ணின் கதையாக இருக்கும் என்று யூகித்தேன் .ஆனால் அதற்கு முற்றும் மாறாக திருமணமான ஒரு பெண்ணின் கதையாக அமைந்துள்ளது.
  நடைமுறை வாழ்க்கையில் கணவன் எவ்வாறு குடும்ப விஷயங்களில் அக்கறை அற்றவர்களாக உள்ளனர் என்பதை மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார் எழுத்தாளர்..

 3. கோ.சந்தியா மணிகண்டன்

  கோ.சந்தியா மணிகண்டன்
  புதுசேரி
  கைபேசி எண்:7708273010

  பெண்கள் எவ்வளவு பெரிய வேலைக்கு போனாளும்.அவள் கணவன் பொறுப்பற்றவனாக இருக்கும் போதுஅவர்கள் சிறிய வட்டத்துக்குள் வந்துவிடுகிறார்கள்.தன் தோழியின் நட்பு மட்டுமே அவளுக்கு உலகமாக இருந்நது.அவளுக்கு துன்பம் வரும்போது யாரும் இல்லை என்றாலும் தன் தோழிஇருக்காள் என்ற எண்ணம் அவள் பெயரை தவிர வேருயாரும் நினைவில்லை.இந்த தருனத்தில் எதிர்புரம் உள்ள தோழியின் குடும்பம் சுற்று சூழல் எல்லாம் அவளை வாட்டியது .அதில் அழகாக ஷூலா குற்றவுணர் உடன் தன்நிலைமையை சென்னதும்.தான் நட்பயே முறித்து விடலாம் என்று வந்தவள் தாய்யாக வாய் அடைத்து நின்று விட்டால் அருமை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: