கெடாவெட்டு

5
(1)

அங்கம்மாளுக்கு இந்தப் பாதையில் போய் வருவதென்றால் மிகவும் சலித்துக் கொள்வாள். ஆனாலும் இந்தப் பாதையை விட்டால் ரெண்டு மைல் தூரம் சுத்திக்கொண்டு அந்தப் பாதையில் போகவேண்டும். இந்தப் பாதைக்கு அந்தப் பாதையும் சளைத்தல்ல.., என்ன இந்தப் பாதையில் காட்டுப்பத்தி கொஞ்சம் அதிகம். டாஸ்மாக் கடைவேறு. எந்தநேரத்திலும் ஆண்கள் கூட்டமாக அங்கங்கே உட்கார்ந்து தண்ணியடித்துக் கொண்டிருப்பார்கள். அந்தப் பாதையிலும் அப்படித்தான். பெண்கள் வேலைக்குப் போய்வருகிறார்கள் என்கிற நெனப்பெல்லாம் அவர்களுக்கு இருக்காது கண்ட இடத்தில் ஜிப்பைத் திறந்தும் வேட்டியைத் தூக்கியும் மோண்டும் பேண்டும் கொண்டு இருப்பார்கள். அதோடு ஆங்காங்கே அவர்கள் எடுத்த வாந்தியும் ஒமட்டிக்கொண்டு வரும். ஆனால் குடிக்கும் அவர்களுக்கு அது ஒரு பொருட்டே அல்ல.

“யேண்டி சுமதி யிவெய்ங்களுக்கு வேற பொழப்பே கெடையாதா.. யெப்பப்பாத்தாலும் யிங்கயே கெடையா கெடக்காய்ங்களே..” அங்கம்மாள் நடந்து கொண்டே கேட்டாள். காட்டுவேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

“யென்னாடி பேச்சக் காணாம்..” சுமதி எதுவும் பதில் சொல்லவில்லை அமைதியாக அங்கமாளுக்கு முன்னாடி நடந்து கொண்டிருந்தாள். சுமதிக்கு பேச வேண்டும் போலிருந்தாலும் பேசுவதற்கு எரிச்சலாய் இருந்தது. கெடந்து செய்த வேலைகளால் அவள் சோர்ந்து போயிருந்தாள். இனி வீட்டுக்குப் போனதும் செய்ய வேண்டிய வேலைகளின் நினைப்பே அவளுக்கு மலையாய் இருந்தது.

“அங்கமாக்கா., யிங்க கெடக்குறவய்ங்களப் பத்தியே பேசுறேயே., யிவய்ங்க கூட்டத்துக்குள்ள மாமா யேதும் இருக்கப் போகுது..” ராசாத்தி அங்கம்மாளை நோண்டினாள். ராசாத்தியின் மூக்கில் இடது பக்கம் குத்தப்பட்டிருந்த ஒற்றைக்கல் மூக்குத்தி மேற்குச் சூரியனின் ஒளிபட்டு எதிரொளி அங்கம்மாளின் கண்களைக் கூசச் செய்தது.

”ப்போடி யிவளே., கொவட்டுல குத்துனேனா., யெம்புருசன யிழுக்காட்டி ஒனக்குத் தூக்கம் வராதே., யெம்புருசெந் தங்கம்டி.” அங்கம்மாள் தன் கண்களைச் சுருக்கிக் கொண்டு விட்டுக் கொடுக்காமல் பேசினாள்.

“அப்ப ஒம்மடியிலேயே முடிஞ்சு வச்சுக்க.,” கெழுக்கென்று சிரித்தாள் ராசாத்தி.

“ஒம்புருசெங்கணக்காவா., மிதிமிதின்னுல்ல குடிச்சுட்டு வந்து ஒன்னய மிதிக்கிறாய்ன்., எம்புருசென்.., சாயங்காலம் வீட்டுக்கு வந்தாரா.., வாங்கிட்டு வந்த குவாட்டர ஒடச்சுக் குடிச்சாரான்னு அப்படியே யாருக்கும் யெந்தத் தொந்தரவுமில்லாம படுத்துருவாப்ள., ஆனா ஒம்புருசென்.. ஒனக்கு வாய் வேற பொத்திக்கிட்டு வாடி..”

“பெறகெப்படிக்கா மூனு புள்ளையப் பெத்துப் போட்ட..” ராசாத்தியும் விடாமல் பேசினாள். ம் என்று திரும்பி பொய்க் கோபம் கோவித்தாள் அங்கம்மாள். இப்போ வந்த சிரிப்பை அடக்கிக் கொண்ட ராசாத்தி..

“கோவிக்காதக்கா., யேக்கா மில்லுக்கு வேலைக்குப் போறாளே ரேவதி அவளும் யிதத்தாக்கா சொல்றா., வண்டில வர்ற வழில பாப்பாளாம்.., சின்னச் சின்ன நண்டு சுண்டெல்லாம் பைக்கப் போட்டுக்கிட்டு குடிச்சுட்டு கத்திக்கிட்டுக் கெடப்பாய்ங்களாம்., யென்னமோக்கா..” பகல் வெயிலில் வாடி நிற்கிற செடிகளைப் போல் அவளது கண்கள் தாழ., கேள்வியும் வியப்புமாய் பேசினாள் அங்கம்மாள்.

“யிங்க மட்டுமில்லடி நாடு பூரா அப்படித்தேங் கெடக்காய்ங்க., அவெய்ன் அவெய்ன் தோதுக்கு கும்மாளம் போடுறாய்ங்கே., யின்னைக்கெல்லாம் குடிக்காத ஆம்பளையப் பாக்குறது லேசு இல்லடி” தரைக்கும் காலுக்கும் இடைவெளியில்லாமல் அவள் அணிந்திருந்த செருப்பு உருவிக்கொண்டே வர கால் விரல்களால் அழுத்திக் கொண்டே நடப்பது இவர்களது பேச்சோடு பேச்சாய் அனிச்சையாய் மாறியிருந்தது.

“ஆமாக்க உம்மதேன்..” சலிப்பானாள் ராசாத்தி. அவளது கணவன் பாட்டிலோடு அவளது கண் முன் வந்து போனான். கல்யாணத்துக்கு முன்னாடி அவனை யோக்கியன்னு எல்லோரும் சொன்னார்கள். கல்யாணத்திற்குப் பிறகு ஆம்பளன்னா அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும் நீதாம்மா பொறுத்துப் போகணும் என்றார்கள். அந்த என்றார்களும் ராசாத்தியின் கண்ணுக்குள் பாட்டிலோடு வந்து போனார்கள். உடனே கண்களை இறுக்கமாக மூடித் திறந்து உடல் புல்லரிக்க அவர்களை மறைந்து போகச் செய்தாள். அப்படிச் செய்யும்பொழுது அவளிடமிருந்த வெளியேறிய வெப்ப மூச்சோடு மூச்சாய்க் கேட்டாள்.

“யேக்கா பொம்பளைக ஏன் குடிக்க மாட்டேங்குறாங்க..”

“குடும்பங் கெட்டுப் போகும்ன்னுதேன்..” சிடுசிடுத்தாள் சுமதி.

”அதெல்லாம் இல்லடி பொம்பளைகளும் குடிக்கிறாளுக., தரகெங் கணேசணும் அவெம் பொண்டாட்டியும் நாயத்துக் கெழமன்னா போதும் பகல்லேயே சேந்து குடிச்சுட்டு கதவடச்சுக்கிட்டு விடிஞ்சப் பெறகுதேன் தெறப்பாய்ங்கே..” என்ற அங்கம்மாளின் சாப்பாடுப் பை நடையின் போக்கில் ஆடுவதைவிட கூடுதலாய் ஆடியது.

“யேக்கா கதவடச்சுக்கிறாய்ங்கே..” ராசாத்தி விடுவதாய் இல்லை.

” ய்யேம் மானம் போயிடும்ன்னுதேன்..” சுமதி சுரீரென்றாள்.

“யிவெ யென்னாடி கேட்ட கேள்விக்கு உம்முன்னு வந்தவ., நாம பேசுறப்ப சுருக்கு சுருக்குன்னு குறுக்க வர்றா..” அங்கம்மாள் கோபமானாள்.

“விடுக்கா யின்னும் ரெண்டு மூனு நாளைக்கு அவ அப்படித்தேன் இருப்பா..” அங்கம்மாளை சமாதானப்படுத்தினாள் ராசாத்தி.

“ஆமாடி சுமதி யின்னுந் தீட்டுக் கழியாம வேலைய்க்கு வர்றவ்வெ.., ஒடம்பு என்னத்துக்காகும்.., நாளஞ்சுன்னாச் செண்டு வரவேண்டிதானா.., கொள்ளையா போச்சு ஒனக்கு..” அங்கமாளின் அந்த அன்பில் கோபம் தெறித்தது.

“கொஞ்சம் சும்மா வர்றீங்களா., சலசலன்னுட்டு..” என்றாள் சுமதி.

“யே..ண்டி சுமதி” பாவமாய்க் கேட்டாள் அங்கம்மாள். சுமதி பதிலேதும் பேசவில்லை அமைதியாக நடந்தாள்.

“யேக்கா.., யிவெய்ங்கே யிப்படியே குடிச்சுட்டுத் திரிஞ்சா.. யிவய்ங்கே குடும்பத்த யாருக்கா பாக்குறது..” கவலையாய் கேட்டாள் ராசாத்தி.

“யிவவொருத்தி.., யிங்க மட்டும் யென்ன வாழுதாம்.., நம்ம குடும்பத்த யாரு யிப்ப பாக்குறா.., நாமதான., அப்படித்தாண்டி யெல்லா வீட்டுலேயும்., யெல்லாம் பொம்பள தலைல விழுந்ததேய்ன்., பொம்பள சுழுவா யிருந்தா அந்த குடும்பம் பொழச்சுச்சு யில்ல அம்புட்டுத்தேன்..” அங்கம்மாள் பேசிவிட்டு கன்னத்தில் கைவைத்துக் கொண்டே நடந்தாள். ராசாத்தி விடவில்லை.

“ஆமக்கா வீட்டு ஆம்பள ஒழுங்காயிருந்தா நமக்கெதுக்கு யிந்தப்பாடு.., வேலைய்க்கு போற யெடத்துல யெல்லாம் கண்ட நாயில்லாம் பல்லிளிக்கிறாய்ன்., யெம்புட்டச் சமாளிக்கிறதுக்கா., யிதுல கொஞ்சம் தாமசமா வீட்டுக்குப் பொயிட்டா  கட்டுனவெம் பட்ற சந்தேகமும் கேக்ற கேள்வியும் யிருக்கே.., அப்படியே கொழவிக்கல்லத் தூக்கி மண்டைய்ல போடணும் போல யிருக்குக்கா..” கடுகடுத்தாள். பாதையை அடைத்துக் கொண்டிருந்த அந்தச் சப்பாத்திக் கள்ளிகளில் மஞ்சளாய் பூத்திருந்த பூக்களும் அவள் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டது போல தலை சாய்த்திருந்தன.

“அதாண்டி வக்கண பேசாம நாலெட்டு வேமா வச்சு நடக்குணுங்குறது..” என்றாள் அங்கம்மாள்.

“யெதுக்கு கொழவிக்கல்ல மண்டையில போடவா..” என்றாள் சுமதி.

“நானும் பாக்குறேய்ன் யென்னாடி யெடக்கு மடக்காவே பேசிட்டு வாரவ..” அங்கங்கமாளின் பேச்சுக்கு காதுகொடுக்காமல் நடந்தாள் சுமதி.

“யக்கா செத்த பொறேன்.. நாலு நாயுருவி யெல பறிச்சுக்கிறேய்ன்.., மூலத்துக்கு நல்லதுக்கா., அந்தாளு குடிச்சு குடிச்சு கண்டதத் தின்னு தெனமும் காலைய்ல ரத்தமாப் போறாப்ல..” என்ற ராசாத்தியிடம் அங்கம்மாள்..

“அந்தப் புருசனுக்கே யிந்தப் பக்குவெங் காட்டுறேயே.., ஒனக்கு நல்ல புருசேல்லாம் வாச்சிருந்தான்னா புடிக்க முடியாதுடி ஒன்னைய.. வேமாப் புடுங்கிட்டு வா., அப்படி நெழல்ல நிக்கிறோம்..” என்றாள்.

ஓரமாயிய்ருந்த புளிய மர நிழலில் ஒதுங்கினார்கள் அங்கமாளும் சுமதியும். பூத்திருந்த புளியம்பூக்களைப் பறித்து வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்தாள் சுமதி. புளிப்பும் உவர்ப்பும் அவளது கண்களை மூடி நாக்கை வெளியே தள்ளி திரும்ப உள்ளிழுத்து உதட்டைச் சப்புக் கொட்ட வைத்தது. அதைப் பார்த்த அங்கம்மாளும் கொஞ்சம் புளியம் பூக்களைப் பறித்து மெல்ல ஆரம்பித்தவள்..

“யேண்டி யெதுமே சரியாப் பேச மாட்டிங்கிற., காலைல அம்புட்டு வேலைய யிழுத்துப் போட்டுப் பாத்தவ ஒரு வாக் கஞ்சியும் சரியாக் குடிக்கல..” பாசமாய்க் கேட்டாள்.

“வேலைய தாமசப்படுத்துனா., புள்ளிக்காரேன் சம்பளம் கொடுக்குறப்ப கையப் புடிக்கிறான்க்கா., ஓரமா ஒதுங்குனா கூப்டது கணக்கா பின்னாடி வந்திர்றாய்ங்கே..” சுமதியின் பேச்சில் மனதின் வலி ஒலித்தது.

“அந்த நாய்க அப்படித்தாண்டி., மொனச்சம்ன்னா.., வேற பக்கம் வேலைய்க்குப் போகணும் அங்க ரெண்டு நாய்க யிருக்கத்தேஞ் செய்யும்., அதுக்காக கஞ்சி குடிய்க்காமக் கூடவா வேல பாப்ப..” இடுப்பு முந்தானையை சரி செய்து கொண்டே கேட்டாள் அங்கம்மாள்.

”குழுவுக்கு யேதும் பணங் கட்டணுமா..,பத்தாக்கொறையா யிருக்கா..”  தாழ்ந்திருந்த சுமதியின் நாடியைத் தூக்கி கண்ணுக்குக் கண் பார்த்துக் கேட்டாள். அங்கமாளுக்குத் தெரியும் ஒருத்தரிடம் கடனுக்குப் பணம் கேட்பதற்குள் மனசு என்ன பாடுபடுமென்று. அவளுக்கு அந்த அனுபவம் நிறையவே இருக்கிறது.

“ச்சும்மா சொல்லு சுமதி.., ந்நாங் கூடத் தர்றேன்..”

“அது இல்லக்கா.., யிப்பெல்லாம் மகளிர் குழுவுல கடென் வாங்குறதில்ல.., வாங்கிட்டு வாரா வாரங் கட்ட முடியலென்னா படுற அசிங்கமிருக்கே., நெனச்சாலே அப்பிடி வருதுக்கா.., சோலராசு பொண்டாட்டிய அந்தக் குழுகாரரெய்ங் பேசுன பேச்சு அம்புட்டு பேச்சுல்ல., அன்னைக்கே அந்த ரோசங்கெட்ட பொழப்பு வேணாம்ன்னு வாங்குறதில்லக்கா..”

“ஒன்னு ரெண்டு குழுவுல வாங்கணும்டி.., யெல்லத்துலேயும் வாங்குணா யெப்படி.., கட்ட வேணாம்.., பெறகு கொடுத்தவேய்ம் வேடிக்க பாப்பான்னா..”

“யேக்கா வெலவாசி ஏறிப் போச்சு., மாசத்துக்கு ரெண்டு செய்ம்மொற வந்துருது., வீட்டாம்பள வேலைக்கிப் போறதில்ல., போனாலுங் குடிச்சுட்டு வந்துறது.., போதாக் கொறைக்கு யிருக்குறதையும் புடிங்கிட்டு போயிறது.. பொம்பள பெறகு யென்னதாஞ் செய்வாளாம்.,” கடுகடுத்தாள் சுமதி.

பறித்த நாயுருவியை மடியில் கட்டிக் கொண்டே வந்த ராசாத்தி அங்கம்மாளிடம்.,

“போவெம்க்கா.., ஆமா ரெண்டு பேரு அப்படி யென்ன பேசுனீக.., சவுண்டெல்லாம் பலமா யிருந்துச்சு..” என்றாள் மடியை முடிந்து கொண்டபடி.

“மொதலமைச்சரு நாக்காலில யாரு ஒக்கார்றதுன்னு பேசிக்கிட்டோம்., வாடி யிவளே நேரமாச்சு., நாளக்கி நாலாவது நாயத்துக்கெழம நெனப்பு யிருக்குள்ள., நாளைக்கி நீ மொதத் தடவயா வர்றவ்வ அடக்கி வாசிக்கணும்” என்ற அங்கம்மாளின் வார்த்தைக்கு ராசாத்தி குசியானாள்.

“யெல்லாம் ரெடியாக்கா..”

“அதில்லாமைய்யா., முனியம்மாளுக்குச் சொல்லியாச்சு கெடாயப் புடிச்சுட்டு வந்துருவ்வா., செல்வி பண்ட பாத்திரமெல்லாம் கொண்டு வந்துருவ்வா., பிராந்திப் பாட்டிலுக்குஞ் சொல்லியாச்சு.. வீரு மலரு மாலதி கவிதா ஒங்கண்ணே பொண்டாட்டின்னு யெல்லாருக்குஞ் சொல்லியாச்சுடி பெறகென்ன..” கண்ணடித்தாள் அங்கம்மாள்.

“கோயிலுக்குப் போறோம்ன்னு வெள்ளனெவேக் கெளம்பிற வேண்டியதுதேன்.. அப்படித்தானக்கா ” என்ற ராசாத்தி…

“யேண்டி சுமதி நீயும் வந்தாத்தேன் என்னவாம்..” என்றாள்.

“மாசத்துக்கு ஒருதடவ நீங்களும் குடிச்சுட்டு யிப்படி கும்மாளமடிக்கிறீங்களே.., பெறகு அவெய்ங்களுக்கும் ஒங்களுக்கும் யென்னா வித்யாசம்.. க்கூம்..” சுமதி சிடுசிடுத்துக்கொண்டே மீதியிருந்த புளியம்பூக்களை ராசாத்தியின் கைகளில் திணித்தாள்.

“யெல்லாம் அவெய்ங்கே பண்ற கடுப்புதாண்டி..” என்ற அங்கமாளிடம்

“அப்பச் சரிக்குச் சரி குடிச்சா யெல்லாம் திருந்திரும்மா..” திரும்ப சிடுசிடுத்தாள் சுமதி.

“அதில்லடி சொல்லியும் பாத்தாச்சு., அடிச்சும் பாத்தாச்சு., ஆத்தா வீட்டுக்கு ஓடியும் பாத்தாச்சு., திருந்தின பாடில்ல., யென்ன செய்யச் சொல்லுற., அப்படி யென்னதேன் அந்தப் பிராந்தில யிருக்குன்னு பாத்துரலாம்ன்னுதேன்..”  அங்கமாளுக்கு ஏத்துக்கிட்டு வந்தாள் ராசாத்தி.

“அதுக்கு..” என்றாள் சுமதி.

“அடியே அந்த ஆட்டுக் கெடாய வெட்டுறப்ப அவெய்ங்கள வெட்டுற நெனப்பு தாண்டி..” அங்கம்மாள் சொல்லும் போதே அவளது கண்கள் தானக உருண்டன.

“அது சரி பெறகெதுக்கு குடிக்கிறீங்க.. ஒங்க வீட்டுக்காரெய்ங்களுக்குத் தெரிஞ்சா ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிடாது..” சுமதியின் கேள்விக்கு ராசாத்தி ஆரம்பித்தாள்.

“தெரியட்டுமே.., யின்னக்கி யில்லாடி யென்னைக்கினாலும் தெரியத் தான போகுது., தெரியுற அன்னக்கி ரோசப்பட்டு அவெய்ங்க குடிய விடணும்., யில்ல யேன்னு கேட்கணும்., அப்படி கேக்கும் போது யிருக்கு மாப்ளைகளுக்கு..”

மீண்டும் சுமதி அமைதியாக நடக்க ஆரம்பித்தாள். ராசாத்தியின் வார்த்தைகள் சரியானவை தானா., அவர்கள் செய்வதும் சரிதானா என்ற நினைப்பு அவளுக்குள் ஒருவித கிறுகிறுப்பை ஏற்படுத்தியது. கொண்டு வந்திருந்த பாட்டிலில் மிச்சமிருந்த தண்ணீரை மடக் மடக்கென்று குடித்து முடித்தாள்.

“யேண்டி யின்னக்கிச் சாயுற சூரியன் நாளைக்கி உதிச்சுதான ஆகணும்..” என்ற அங்கம்மாள் வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “கெடாவெட்டு”

 1. Sakthi Bahadur

  குடிகார கணவர்களிடம் சிக்கிக்கொண்டு…. சிக்கிக்கொண்டு தினமும் வேலைக்கு போய் குடும்பம் நடத்தும் பெண்கள் அவர்களின் மன ஓட்டத்தை மிக அழுத்தமாக பதிந்திருக்கிறார் தோழர் அய்.தமிழ்மணி.

  குடும்பத்தை பற்றி கவலைப்படாமல் குடிக்கும ஆண்களுக்கு பதிலடியாக ஒவ்வொரு மாதம் நான்காம் சனிக்கிழமையும் பெண்கள் கூட்டாக கெடா வெட்டி மது அருந்தும் மறுமலர்ச்சி….

  அவர்களின் மன அழுத்தத்தையும் மன ஓட்டத்தையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். அப்பவாவது ரோசம் அந்த திருந்தட்டுமே…. என்ற ஒற்றை வரியில் அவர்களின் மொத்த வலியையும் உணர்த்திய விதம் அருமை…
  வாழ்த்துக்கள் தோழர்.

 2. எஸ்.மைக்கேல் ஜீவநேசன்

  கதை அருமை பெண்கள் குடித்தால் வீட்டுக்குள் சனியன் புகுந்துவிடும்.நன்றி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: