கூ இஸ் தே ப்ளாக்‌ஷிப்

5
(1)

வனாவதொருத்தன் இந்த மாதிரி சோவுக்கு சோ வந்து மல்லையக் கூட்டிறாங்கே.. இன்னக்கி பொழப்பு நடந்த மாதிரிதேன்.. நைட் சோன்னாலே ஒரே ராவடியாத்தேன் இருக்கு. நானும் முப்பது வருசமாப் பாக்குறேன் இதென்னடாப் புதுப் பிரச்சனையா இருக்கு., எம்ஜியார் சிவாஜி ரஜினி கமல் விஜய் அஜித்ன்னு யேன் இப்ப வந்த பயலுக சிம்பு தனுசு வரையப் பாத்திட்டேன்., இவனுக சைசா இருக்கானுகளே..” செந்தில் கேண்டின் வியாபாரத்தை வேலை பார்க்கும் பையனிடம் விட்டுவிட்டு மேனேஜர் அறைக்கு ஓடினார்.

அந்தத் தியேட்டர் அந்த ஊரில் நாற்பது வருடங்களாக இருந்து வருகிறது. பலவிதமான சம்பவங்களை சந்தித்த வரலாறு அதற்கு இருக்கிறது. அங்கே வேலை பார்ப்பவர்களும் பார்த்தவர்களும் படம் பார்த்தவர்களும் சொல்கிற கதைகள் ஏராளம். கால மாற்றத்திலும் வியாபார மாற்றத்தினாலும் பல தியேட்டர்கள் மூடப்பட்டும் சாப்பிங் மால்கள் திருமண மண்டபங்களாக மாறிய பின்பு இந்தத் தியேட்டர் மட்டும் தன்னை நவீனப் படுத்திக்கொண்டு மக்களின் பேராதரவோடு உயர்ந்து நிற்கிறது. அதற்கு காரணம், எந்தத் தொழிலாக இருந்தாலும் அதை நேசிச்சு நேர்மையாச் செஞ்சா அது நம்மள கைவிடாதுப்பா.. என்ற கொள்கையுடைய அதன் முதலாளி கருப்பசாமி தான். அவர் இப்பொழுதில்லை. ஆனால் அவரது இரண்டாவது பையன் முருகன் அப்பாவின் வழியில் பக்குவமாகப் பார்த்துக் கொள்கிறான் தியேட்டரை. உள்ளூரிலிருந்து சினிமாப் பார்க்க வருகிற அத்தனை பேருடைய குடும்பமும் பெயரும் பெரும்பாலும் அவனுக்கு அத்துப்படி. குலம் கோத்திரம் பார்க்காமல் உறவு கொண்டாடுவான் முருகன். அவனது மேனேஜர் அழகரும் அப்படித்தான். இருவரும் வகுப்புத் தோழர்கள். இப்பொழுது ஒடிக்கொண்டிருக்கிறாரே செந்தில் அவரும் இவர்களைப் போலத்தான். இருவரும் மாமா என்றுதான் அவரை அழைப்பார்கள்.

இடைவேளை முடிந்து தியேட்டர் மணி அடிக்க திரையில் ஆளும்கட்சி விளம்பரமும் பல நடிகர்கள் பரிந்துரைக்கும் யோகா விளம்பரமும் ஓடிக்கொண்டிருந்தது. கேண்டினில் கூடியிருந்த பார்வையாளர்கள் கோன் ஐஸையும் பாப்கார்னையும் கோலாவையும் அவரவர் கையில் பிடித்துக் கொண்டு நின்ற இடத்தில் நின்று கொண்டு அசையாமல் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த அந்த நால்வரையும் பார்த்துக் கொண்டே அரங்கத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தனர்.

“அழகரு வாப்பா.. யாருன்னு தெரில்ல நாலுபேரு பெரிய ரவுசு பண்றாங்கப்பா.. அதுல ஒருத்தன் தனியா இருக்கான்.. மிச்ச மூனு பேரு அவன மெரட்டுறாங்கப்பா..” என்றார் பதட்டமாக செந்தில். இரவு நேர சிலுசிலுக் காற்றிலும் முகத்தில் வடிந்த வியர்வையை வேட்டிமுனையால் துடைத்துக் கொண்டார்.

“ பதறாதீங்க மாமா.. நீங்க பாக்காத பிரச்சனையா., ஏதும் அடிச்சுக்கிட்டாங்ளா..” என்ற அழகர் அவரையும் அழைத்துக் கொண்டு அவர்கள் நால்வரும் இருக்கிற பகுதிக்கு வந்தான். அந்த மூவரும் அந்த தனிநபரை மிரட்டிக் கொண்டிருக்க அவர் பொறுங்க மேனேஜர் வரட்டும் பேசிக்கிரலாம் எனச் சொல்லிக் கொண்டிருந்தார் பதட்டமடையாமல் பதட்டத்தை மறைத்துக் கொண்டு.

“என்ன இங்க பிரச்சன., பெல்லடிச்சப் பெறகு படம் பாக்காம யேன் நீங்க வெளில நிக்கிறீங்க..” என்றான் அதட்டலாக அழகர்.

“வாங்க சார்., என்னோட பேரு ஆனந்த்., நீங்க..” என்றார் அந்த தனிநபர் அழகரிடம். ஆனந்த் நாற்பது வயது மதிக்கத்தக்க ஆள். மாநிறம் கொஞ்சம் உப்பிய வயிறும் உயரமும்

ஆனந்தை மிடுக்காகக் காட்டியது. முகத்தில் ஒருவித அமைதியும் பார்வையில் தீர்க்கமும் இருந்தது.

“எம் பேரு அழகர்., இந்த தியேட்டரோட மேனேஜர்., என்ன சார் பிரச்சன..”

“அத நாங்க சொல்றோம்..” என்று அந்த மூவரில் ஒருவன் முந்தினான்.

”சரி மொத நீங்க யாருன்னு சொல்லுங்க..” அழகர் அழுத்தமாகக் கேட்க

”அதிருக்கட்டுமுங்க நாங்க உள்ளூர்தேன்., அவன் என்ன செஞ்சான்னு உங்களுக்குத் தெரியுமா..” என்றான் அந்த மூவரில் இன்னொருவன். ஏற்கனவே ஆகாதவொரு வேலைக் கடுப்பில் இருந்த அழகருக்கு அவர்களின் பேச்சு எரிச்சலூட்டியது.

“நீங்க யாருன்னு மொதச் சொல்லுங்க., அவரு செஞ்சத ரெண்டாவது பாப்போம்..” அழகர் மீண்டும் அழுத்திக் கேட்டான்.

“அதேன் உள்ளூர்தானன்னு சொல்றோம்ல்ல.. மொத பிரச்சனயப் பாருங்க..” என்றான் மூவரில் முதலில் பேசியவன். இரண்டாவது பேசியவன் அதற்கு ஆமா போட்டான். மூன்றாவது ஆள் அமைதியாக இருந்தான். அவனது கண்களில் ஒருவித கலவரமும் பயமும் இருந்தது.

“சார் எங்க போயிடப் போறாங்க தியேட்டர் கேமரா முன்னாடிதேன் எல்லாருமே நிக்கிறோம்., பிரச்சனயக் கேளுங்கன்னு சொல்றங்கல்ல., அத மொதல்ல அவங்க சொல்லட்டும் பெறகு பாப்போம்..” என்ற ஆனந்த் தியேட்டர் பால்கனியிலிருந்து முன்வளாகம் முதல் சாலை வரை படம்பிடிக்கிற அந்தக் கேமாரவைக் காட்ட மூவரும் எச்சில் விழுங்கினர்.

“சரி நீங்களே சொல்லுங்க என்ன பிரச்சன..” என்றான் அழகர் அந்த மூவரிடமும். இதற்கிடையில் கேண்டின் வியாபாரக் கணக்குப் பார்க்க வேலைக்காரப் பையன் கூப்பிட செந்திலை அனுப்பிவைத்தான்.

“தேட்டர்ல தேசியகீதம் பாடுறப்போ இந்தாளு எந்திரிச்சு நிக்காம நாட்ட அசிங்கப் படுத்திட்டாய்ங்க.. அதேங் கேட்டோம்., கேட்டா சட்டம் பேசுறான். இவந் துலுக்கனாத்தேன் இருக்கணும்., இல்லைன்னா இப்படி பண்ணுவானா.. ஆனந்துன்னு பொய் சொல்றான்., நாங்க இவன மன்னிப்புக் கேட்காம விடமாட்டோம்..” என்றான் கோபமாக மூவரில் முதலில் பேசியவன். இரண்டாவது பேசியவன் இதற்கும் ஆமா போட்டான். கடுப்பான அழகர் தலையில் அடித்துக் கொண்டான்.

“எங்க இருந்து வர்றீங்க நீங்கெல்லாம்., இதுவரைய இந்த மாதிரிப் பிரச்சனய பாத்ததே இல்ல., இப்ப புதுசா இது வேறயா.,” மனசுக்குள் வெதும்பிய அழகர் ஆனந்திடம்..

“ஏன் சார் ஒரு எட்டு நீங்க எந்திருச்சிருக்கலாம்ல..” என்றான் பரிதாபமாய்.

“படம் போடுறதுக்கு முன்னாடி போன்ல ஒரு மேஸேஜ் வந்துச்சு அந்த நெனப்புல இருந்துட்டேன். அது குத்தமா., என்னயக் கூப்பிட்டு மெரட்டுனதுமில்லாம என்னயத் துலுக்கன்னு வேற சொல்றாங்க., எனக்கும் ராவுத்தமார்ல நண்பர்கள் இருக்காங்க தேசியகீதத்துக்குஞ் சரி நாட்டுக்குஞ் சரி அவங்க மரியாத கொடுக்காம எல்லாம் இல்ல., இவங்க வேற மாதிரி பேசுறாங்க.. துலுக்கன்ல மட்டுந்தேன் கெட்டவனுக இருக்காங்களா..” அமைதியாய் ஆனந்த் பேச., இவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த செந்தில், பிரச்சனை வேறுபக்கமாய் திசை திரும்பி ஏதாவது நடந்துவிடப் போகிறது என்கிற பயத்தில் வேகமாய் வந்தார். வந்த வேகத்தில்..

”நல்லாருக்குப்பா ஒங்க பேச்சு., தேட்டர்ல ஜனகனமன கட்டாயம் போடணும்ன்னு அவசியமில்லன்னு கோர்ட்டே சொல்லிருச்சு., ஆனா லோக்கல இருக்கிற ஆளுங்கட்சியோட பேச்சுக்காக போடுறோம்., சரி நான் தெரியாமத்தேன் கேக்குறேன் ஜனகனமன பாடுறப்போ பல பேருக்கு போன் வருது அட்டன் பண்ணாமல இருக்காங்க., இன்னும் பல பேரு நின்னுக்குட்டே சும்மாவாவது செல்ல நோண்டுறான்., ச்சரி கக்கூஸ்ல பேண்டுக்கிட்டிருக்குறவேன் பாதில எந்திருச்சு நிக்க முடியுமா..” என சிலிர்த்தார்.

“ யோவ் நாங்க என்ன கேக்குறோம் நீயென்ன பேசுற.. ங்..ம்மாள” என மூவரில் முதலாமவன் கொதித்தான். இரண்டாவது பேசியவன் இப்பொழுதும் ஆமா போட்டு நாக்கைத் துருத்தி கைமுட்டியை மடக்கினான். உள்ளே ஓடிக்கொண்டிருந்த படத்தில் காலா ரஜினி நானாபட்டேகரிடம் பலமாய் வசனம் பேசிக் கொண்டிருந்தார்.

செந்தில் என்னடா பேசுறீங்க என தன் அரைக்கைச் சட்டையின் கைமடிப்பை மடித்துக்கொண்டே அந்த மூவரையும் எச்சரித்தார். அவர் கையை மடித்தபொழுது  முஷ்டியில் பச்சை குத்தப்பட்ட எம்ஜிஆர் சிரித்துக் கொண்டிருந்தார். முதலாமவனின் அந்த ங்..ம்மாள என்கிற வார்த்தை ஆனந்த்தைப் பற்ற வைத்தது.

“ மரியாதையாப் பேசணும்., தேசியகீதம்ன்னா என்னான்னு எங்களுக்குந் தெரியும்ப்பா.. எப்படி மரியாத கொடுக்குறதுன்னுந் தெரியும்., தேசப்பற்றப் பத்தி நீ யொன்னும் எனக்கு கிளாஸ் எடுக்க வேண்டியதில்ல.. சரி தேசியகீதத்த எழுதுனது யாருன்னு தெரியுமா உங்களுக்கு..?” ஆனந்த் கொதிக்க.,

“ நாங்க யாருன்னு தெரியாமப் பேசுற., மத்தியில ஆளுறதே நாங்கதேன்., இங்கேயும் நாங்க வச்சதேன் சட்டம்., மரியாதையா மன்னிப்புக் கேட்டுரு..” மிரட்டினான் மூவரில் முதலாமவன்.

“ ஆமா மன்னிப்புக் கேட்டு பொழச்சுப் போ., அண்ணே இந்த ஏரியாவோட செயலாளர்., காவித்துண்டப் பாத்திலே., பயம் வேணா..” இரண்டாமவன் துள்ளினான்.

“ கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல துப்பில்ல., நீங்கெல்லாம் தேசியகீதம் பத்தி பேச வந்துட்டீங்க., காவி ட்ரெஸ்ங்கிறது பல நாளா சோறு தண்ணி இல்லாம வெரதமிருந்து நல்லது நடக்காதான்னு கோயிலுக்குப் போற சாதரண மனுசனோட நம்பிக்கை.,  அதக் கெடுக்குறதுக்குனே அந்தக் கலரப் போட்டுக்கிட்டு அலையுவீங்களா., காவி ட்ரெஸ் போட்டவனையும் தொப்பி வச்சிருக்குறவனையும் பாத்தாலே கலவரக்காரனாக்கிட்டீங்களேடா., நீங்கெல்லாம் தேசப்பற்றப் பத்திப் பேசுறீங்க., அது கெடக்கட்டும் தேசியக்கீதத்த எழுதுன்னது யாருன்னு மொதச் சொல்லுங்க அப்புறம் மத்ததப் பாக்கலாம்..” சொல்லிக் கொண்டே ஆனந்த் ஓரடி முன்னால் வைக்க..

மூவரும் ஒரெட்டு பின்னால் போனார்கள். முதலாமவன்..

“ஏண்டா தேசிய கீதம் எழுதுனது யாரு..” மற்ற இருவரிடத்தில் கேட்டான்.

“சேக்கிழார்ண்ணே..” என்றான் இரண்டாமவன்.

“ ஏய் அவரு எழுதுனது திருக்குறள்யா.. இது கம்பருன்னு நெனைக்கிறேன்..” என்றான் மூன்றாமவன். முதலாமவனுக்குத் திக்குத் திக்கு என்றது.

“ டேய் கரெக்ட்டாச் சொல்லுங்கடா..” என்றான்.

“ அண்ணே பாரதியாருன்னு நெனைக்கிறேன்..”

“ என்னது பாதிரியாரா.. கரெக்ட்டாடா..” என்றான் முதலாமவன் இரண்டாமவனின் பதிலுக்கு.

“ அண்ணே அதெல்லாம் நமக்குத் தேவையா.. அவனுங் கேக்குறான்னு நீயும் பதிலத் தேடிக்கிட்டு இருக்க.. ஓங்கி ஒரு மெரட்டு மெரட்டுண்ணே.. நெஞ்சுல ஓட்ட விழுறமாரி..” என்ற மூன்றமவனின் தூண்டலுக்கு..

“ இங்க பாரு தேசியகீதத்த யாரு எழுதுனதுங்கிறது இப்ப பிரச்சனயில்ல., நீ ஏன் எந்திருச்சு நிக்கல அதேம் பிரச்சன., மரியாதையா மன்னிப்புக் கேளு., இல்லன்னு வச்சுக்க  ஜெய்ஸ்ரீராம் சொல்லச் சொல்லி கட்டி வச்சு  ஒன்னைய அடிப்போம் பாத்துக்க..” என்ற முதலாமவனின் கண்களில் வெறி ஏறியிருந்தது. ஆனந்த் மிக இயல்பாக..

“ சரி ராமயணத்த எழுதுனது யாருன்னு சொல்லுங்க..” எனக் கேட்க..

“ என்னடா நாங்களும் பாத்துக்கிட்டே இருக்கோம் கேள்வி மேல கேள்வியாக் கேக்குற.. அடிச்சுப் பல்லக் கழட்டிடுவோம்., நீ இன்னா கம்யூனிஸ்ட்டா இல்லத் தீக்காக்காரனா..” கோபம் தெரித்தது முதலாமவனுக்கு..

“ என்னங்கப்பா கூத்தா இருக்கு., மொத துலுக்கன்னு சொன்ன., இப்ப கம்யூனிஸ்ட்டா தீக்காவான்னு கேக்குற., ஏன் சாதாரண மனுசங் கேள்வி கேக்கக்கூடாதா., பதில் சொல்ல துப்புல்ல., வரலாறு தெரியாது., எங்க இருந்துடா வர்றீங்க., ஒங்களுக்கு இப்ப என்னதேம் பிரச்சன.,” ஆனந்த்தின் வார்த்தைகள் வெடித்து விழுந்தன. செந்திலும் அழகரும் செய்வதறியாமல் திகைத்தனர்.

“அண்ணே இவன்   ஆன்டிஇந்தியன்ணே..” என்றான் இரண்டாமவன்.

“யாரப் பாத்து ஆண்டி இந்தியன்ங்கிற.., மொதல்ல இந்தியான்னா என்னான்னு தெரியுமா உங்களுக்கு., இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்லுதுன்னு தெரியுமா ?  உங்க கட்சியும் நீங்களுந்தாண்டா.. ஆன்டி இந்தியனுக..” நெருப்பாய் வந்தன ஆனந்திடமிருந்து வார்த்தைகள். அவர்கள் மூவரும் அதற்கெல்லாம் கவலைப்பட்டது போல் தெரியவில்லை. ஆனந்த்தை மன்னிப்புக் கேட்க வைப்பதிலேயே முனைப்பாக இருந்தார்கள்.

“ இங்கபாரு கேள்வி மேல கேள்வி கேட்டா நாங்க பயந்துருவோம்மா..   மரியாதையா மன்னிப்புக் கேட்டுரு..” என்றான் முதலாமவன்.

முதலாமவன் ஆனந்த்தை முறைத்துக் கொண்டே சட்டைக் கையை ஏற்றினான். ஆனந்த்..

“அடிங்கடா பாப்போம்..” எனத் திமிற., அழகரும் செந்திலும் சமாதனப்படுத்த முயன்றனர். ஆனால் அந்த மூவரும் ஆனந்தை சூழ்ந்தனர். நிலைமை விபரீபமாவதை உணர்ந்த அழகர் செந்திலிடம் போலிசைக் கூப்பிடச் சொன்னான்.

“சார் நான் அப்பவே நூறுக்குப் போனடிச்சுட்டேன்., இப்ப வந்திருவாங்க..” என்ற ஆனந்த்தின் சொல்லுக்கு மூவரும்..

“போலிசுன்னா பயந்துருவோம்மா.. இங்க இருக்குற கேமராவுக்கேப் பயப்படல., போலிசே எங்காளுக தான்டா.,” என்று ஆனந்தின் சட்டையைப் பிடித்தார்கள். செந்திலுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அதற்குள் தியேட்டரின் மூடியிருந்த கேட்டுக்கு வெளியே ஹாரன் சத்தம் கேட்க அழகர் யாரென்று பார்க்கச் சொல்லி செந்திலை அனுப்பினான். கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு போன செந்தில் கேட்டைத் திறக்க போலிஸ் ஜீப் உள்ளே நுழைந்து பிரச்சனை நடந்துகொண்டிருந்த இடம் நோக்கிவந்து நின்றது. ஜீப்பிலிருந்து சீருடையில் மூவரும் சீருடையில்லாமல் ஒருவருமென இறங்கிய பிறகு தியேட்டரின் ஒரு மூலையில் ஜீப்பை நிறுத்திவிட்டு டிரைவரும் இவர்கள் இருக்குமிடத்திற்கு வந்து சேர்ந்தார்.

போலிஸ் வந்ததும் ஆனந்திற்குள் இருந்த பதட்டம் கொஞ்சம் குறைந்தது. ஆனந்த்தை விட்டு மூவரும் ஏதும் நடக்காதது போல விலகி நின்றார்கள்.

” சார் நான் தான் உங்களுக்கு போன் பண்ணேன்..” ஆனந்த் சொல்ல அந்த மூவருக்குள்ளும் கொஞ்சம் நடுக்கம் தொற்றிக்கொண்டதை அவர்கள் வெளிக்காட்டவில்லை. அழகர் இன்ஸ்பெக்டருக்கு வணக்கம் வைத்தான். பதிலுக்கு வணக்கம் சொன்ன இன்ஸ்பெக்டர்..

”என்ன அழகர் சார் இவரு கூப்பிட்டதும் உங்களுக்கு போனடிச்சேன்.. ரீச் ஆகல அதேன் நேரா வந்துட்டேன்..” கேட்க..

“இன்னொரு நம்பர்ல பேசிக்கிட்டிருந்தேன் சார்.. அதுக்குள்ள பிரச்சனன்னு மாமா கூப்பிட்டாரு இங்க வந்து என்ன ஏதுன்னு கேட்குறதுக்குள்ள நீங்க வந்திட்டீங்க..” என்ற அழகரின் மனதில் போலிசார் வந்தது கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. இருந்தாலும் தியேட்டருக்குள் போலிசாரின் வருகை அவனுக்குப் பிடிக்கவில்லை. அதை வெளிக்காட்டவும் முடியாது. இந்த மாதிரி ஒரு முறை அவர்கள் வந்துவிட்டால் அடுத்த ஒருவருசத்துக்கு சினிமாவுக்கு வருகிற எந்தப் போலிஸ் குடும்பமும் எத்தனை பேரோடு வந்தாலும் டிக்கெட் எடுக்கமாட்டார்கள். ஏற்கனவே சினிமாத் தொழில் இருக்கிற லட்சனத்தில் இதையும் கட்டி அழ வேண்டும்., அந்த வருத்தம் தான் அழகருக்கு.

“இவரு நூறுக்கு காலடிச்சிருக்கார்.. நானும் நைட் ரவுண்ட்ல இங்க பக்கத்தில இருந்ததால உடனே வந்திட்டேன்..” என்ற இன்ஸ்பெக்டர் வாக்கி டாக்கியில் தான் சம்பத்தப்பட்ட இடத்தில் ஆஜராகிவிட்டதைக் கண்ட்ரோல் ரூமூக்குத் தெரிவித்தார். ஆனந்திடம் சொல்லுங்க என்பதுபோல் தலையசத்தார்.

“சார் நானு வெளியூர்., பிஸ்னெஸ் விசயமா இங்க வந்தேன்., நான் பாக்க வேண்டியவர் நாளைக்குக் காலைல வர்றேன்னு சொல்லிட்டாரு., அப்படியே இங்க ரூம் எடுத்துத் தங்கிட்டேன். படம் நல்ல படம்ன்னு சொன்னாங்க., வந்தேன்., இண்டர்வெல் விட்டதும் கேண்டினுக்குப் போன என்னைய இவங்க மூனு பேரும் கூப்பிட்டாங்க., என்னன்னு கேக்கலாம்ன்னு வந்தா எங்கிட்ட பிரச்சன பண்ணிட்டாங்க சார்.” ஆனந்த் சொல்ல..

“சார் நாங்க பிரச்சன ஏதும் பண்ணல.. சும்மா கூப்பிட்டு பேசினோம்., அதப் பிரச்சன்னு சொல்றாரு சார்..” என்றான் முதலாமவன். அந்த இரண்டாமவன் வழக்கம்போல் ஆமா போட்டான். சீருடையில் இருந்த இரண்டு போலிசாரும் இவர்கள் நால்வரையும் மாறி மாறி உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தனர். அந்த மூன்றாமவனுக்கு அவர்கள் பார்வை பயத்தைக் கிளறியது. மப்டியில் வந்தவர் அந்தப்பக்கமாக செல்போனில் பேசிக் கொண்டும் போனிலிருந்து எதையோ அனுப்பிக் கொண்டும் இருந்தார்.

“ அவர ஏற்கனவே உனக்குத் தெரியுமா..” என்றார் முதலாமவனிடம் இன்ஸ்பெக்டர்.

“தெரியாது சார்..”

”பெறகேன் அவரக் கூப்பிட்ட..”

“இல்ல சார் படம் போடுறதுக்கு முன்னாடி தேசியகீதம் போட்டப்ப அவரு எந்திருச்சு நிக்கல்ல அதேன் ஏன்னு கேட்டோம்..”

“அவரு நிக்கிறது நிக்காமப் போறதும் அவரு சவுரியம்.. அதுக்கு கூப்பிட்டு என்னான்னு கேப்பியா.. அப்படிக் கேட்க உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு”

“என்ன சார் இப்படிக் கேட்டுட்டீங்க நாட்டுக்கு மரியாத தரணுமில்ல சார்.. அதேன்.., அதுவுமில்லாம நான் மத்திய ஆளுங்கட்சியோட இந்த ஏரியா செயலாளர்., இதக் கூடக் கேக்கலன்னா பதவிக்கு என்ன சார் மரியாதை இருக்கு ” என்று சொல்லிக் கொண்டே தனது மோவாயைத் தடவினான் முதலாமவன். அவனது மணிக்கட்டில் கட்டப்பட்டிருந்த தங்க வண்ணத்திலான ஜரிகை சுற்றிய காவிக் கயிறு மின்னியது.

“அது மட்டுமில்ல சார் நாங்க பேரக் கேட்டோம்., ஆனந்த்துன்னு பொய் சொல்றாப்ல சார்., அனேகமா துலுக்க வீட்டாளாத்தேன் சார் இருக்கும்., நல்லா விசாரிங்க..” என்றான் இரண்டாமவன்.

இவர்கள் தான் நாட்டைக் காக்க வந்த மகாத்மா மாதிரி பேசுறாங்களே அவரையே சுட்டுக் கொன்னுட்டாங்க என செந்தில் மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.

இன்ஸ்பெக்டருக்கு சுர்ரென்று இருந்தது. அவர்களை மேலேயும் கீழேயுமாக இருமுறை ஏற இறங்கப் பார்த்தவர் சுந்தரிடம்..

“அழகர் அவரு வெளியூர்ன்னு சொல்றாரு., இவங்க மூனு பேரையும் இதுக்கு முன்னாடி பாத்திருக்கீங்களா..” என்ற இன்ஸ்பெக்டரின் கேள்விக்கு இல்லை என்றான். செந்திலும் பார்த்ததில்லை என்றார்.

“நீங்க எங்கயிருந்து வர்றீங்க..” என்றார் அந்த மூவரிடமும்.

“உள்ளூர்தேன் சார்..” என்றான் முதலாமவன்

“உள்ளூர்ன்னா.. எங்க.? ஐடி கார்டு ஏதாவதிருந்தா காட்டுங்க..” மூவரும் திணறினார்கள். இன்ஸ்பெக்டர் கண்ணைக் காட்ட கான்ஸ்டபிளில் ஒருவர்..

“என்ன ஏதும் இல்லியா., உள்ளூர்ல தெரிஞ்ச ஆள் யாராவது சொல்லுங்க..” என்றார்.

“என்ன சார் எங்களையே விசாரிக்கிறீங்க., அந்தாள ஏதும் கேட்க மாட்டீங்களா.. நான் இப்பத்தான் செயலாளர் ஆகியிருக்கேன். நான் பக்கத்து ஊரு” எனப் பேச்சை திசை திருப்பினான் முதலாமவன்.

”தம்பி இன்ஸ்பெக்டர் ஒங்ககிட்டப் பேசுறப்பவே நாங்க அவரோட ஐடி எல்லாம் செக் பண்ணிட்டோம்., மொதல்ல அய்யா கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க., எங்களுக்கு வேல சொல்லாதீங்க., கையில கயிறு கட்டிருக்கோம்னு ஆடாம பதிலச் சொல்ற வழியப் பாருங்க..” என்றார் இன்னொரு கான்ஸ்டபிள் முதலாமவனிடம்.

“சார் நாங்க யாருன்னு தெரியாமப் பேசுறீங்க.. தெரிஞ்சா எங்களுக்கு டீ வாங்கிக் கொடுத்து அனுப்பி வப்பீங்க ஆமா..” என்றான் இரண்டாமவன். செந்தில் அவரையறியாமல் சிரித்துவிட்டு டக்கென்று அமைதியானார்.

“ தெரிஞ்சுக்கிறத்தானப்பா கேக்குறோம்., யாருன்னு சொல்லுங்க..” என்றார் அவர்களது பேச்சில் கடுப்பான இன்ஸ்பெக்டர் நக்கலாக. அப்படியே மூன்றாமவனைப் பார்த்தார் அவனுக்குள் நடுக்கம் தெரிந்தது.

“சார் பக்கத்தூரு இன்ஸ்பெக்டர்கிட்ட கேட்டுப் பாருங்க., எங்களப் பத்திச் சொல்லுவாரு., நீங்க என்னடான்னா..” என்று திமிராய் இழுத்துப் பேசினான் முதலாமவன்.

“பக்கத்தூரா.. ஏண்டா மொதயிருந்து ஊரையும் பேரையும் சொல்லாம.. என்னடா நெனச்சுக்கிட்டிருக்கிங்க..” கையை ஓங்கிய இன்ஸ்பெக்டரை வேண்டாம் என்பதைப் போல் முறைத்தான். அதற்குள் பக்கத்தில் செல்போன் பேசிக் கொண்டிருந்த மப்டியிலிருந்த போலிஸ்க்காரர் வேகமாய் வந்து இரண்டாமவனின் கழுத்துக்குப் பின்னால் இருந்த அவனது சட்டைக் காலரைத்தூக்கி அவனது பிடறிக்குக் கீழ் முதுகைப் பார்த்தார். பார்த்ததும் சப் என்று ஒரு அறை விட்டார் அவனது கன்னத்தில். தடுமாறிப் போனான். ஆனந்திற்கு பகீரென்று இருந்தது. அழகருக்கும் செந்திலுக்கும் கைகால்கள் வியர்த்தன. அவன் பெரிய சிக்கலான ஆள் என்பதை மட்டும் அவர்களது கண்கள் மூளைக்குச் சொல்லியது. ஓடப் பார்த்த முதலாமவனை கான்ஸ்டபிள்கள் இருவரும் மடக்கிப் பிடித்தனர். மூன்றாமவன் அப்படியே உறைந்து போய் நின்றான்.

“ஏண்டா., ஒன்னைய மூனு மாசமாத் தேடிக்கிட்டு இருக்கோம்., நீ இங்க சுத்திக்கிட்டு இருக்க..” இரண்டாமவனை திரும்ப அறைந்தார் மப்டி போலிஸ்.

“என்ன சார் என்ன ஆச்சு..” என்றார் இன்ஸ்பெக்டர்.

“இவங்க நாலு பேரையும் செல்லுல போட்டோ எடுத்து ஐடி ரிப்போர்ட் கேட்டிருந்தேன்., இவனுக மூனு பேர்ல இவன் அக்யூஸ்ட் சார் ஜாமின்ல வந்தவன்., இவன் ஏரியா லோக்கல் போலிஸ் சப்போர்ட்ல வெளில சுத்திக்கிட்டு இருக்கான்..” என்றவர் முதலாமவனைப் பார்த்து..

“இவனும் பக்கத்தூர்தேன். அந்த ஊர் நார்த் ஸ்டேசன்ல ஒரு வருசத்துக்கு முன்னாடி ரெண்டு பெட்டிக் கேஸ் வாங்கியிருக்கான். கிரிமினல் கேஸாக வேண்டியது லோக்கல் பொலிட்டிக்கல் சப்போர்ட்ல பெட்டிக் கேஸாயிருக்கு., அப்படியே கட்சில செயலாளர் பதவி வேற.,” சொன்னவர்

“இவன் நம்ம லிஸ்ட்ல இல்ல., விசாரிக்கணும் சார்..” என்றார் அந்த மூன்றாமவனைப் பார்த்து.

“இவங்க நாலு பேரையும் ஜீப்புல ஏத்துங்க.. ஸ்டேசனுக்குப் போயி பேசிக்கலாம்..” என்ற இன்ஸ்பெக்டரிடம் ஆனந்த்..

”சார் நான் கார்ல வந்திருக்கேன்..” எனச் சொல்ல

“சரி நீங்க கார எடுத்துட்டுப் பின்னாடியே வாங்க.. கான்ஸ்டபிள் ஒருத்தர உங்க வண்டியில ஏத்திக்கங்க..” என்றவர் சுந்தரிடம்.,

“ நீங்க உங்க வேலையப் பாருங்க அழகர்., காலைல நானே உங்களக் கூப்பிடுறேன்” என்று சொல்லிவிட்டு ஜிப்பில் ஏறினார்.

ஆனந்த் தனது காரை எடுத்துக் கொண்டு வந்ததும் கான்ஸ்டபிள் ஒருவர் ஆனந்தின் காரில் ஏறிக்கொண்டார்.

போலிஸ் ஸ்டேசனின் ஒரு அறையில் மூன்று மணி நேரமாக காத்துக் கொண்டிருந்த ஆனந்திற்கு எதுவும் புரியவில்லை. கண்ணைச் சொக்கிக் கொண்டு வந்தது. கான்ஸ்டபிள் ஒருவர் வந்து ஆனந்தை இன்ஸ்பெக்டர் அறைக்கு அழைத்துப் போனார்.

“வாங்க சார் உட்காருங்க..” என்றார் இன்ஸ்பெக்டர்.

“கம்ப்ளைண்ட் ஏதும் எழுதிக் கொடுக்கவா சார்..” ஆனந்த் கேட்க.,

“அதெல்லாம் ஒன்னும் வேணாம் சார்., அவன் ஏற்கனவே தேடப்படுற குற்றவாளிதேன். நீங்க நூறுக்குப் போன் போட்டது நல்லதாப் போச்சு., லோக்கல் ஸ்டேசனுக்கு போட்டிருந்தாக் கூட நாங்க நேரா வர்றதுக்கு லேட்டாயிருக்கும் அந்த நாயப் பிடிச்சிருக்க முடியாது.,”

“என்ன சார் சொல்றீங்க..”

“ஆமாங்க   இவன் லோக்கல்ல ஆளுங்கட்சிக்கு புதுசா வர்ற இளைஞர்களுக்கு வகுப்பெடுக்குறவன். அதுக்கு முன்னாடியே  இவன் மேல ரெண்டு சந்தேகக் கேசு இருக்கு. குளத்துகர கேசுலதேன் மாட்டிக்கிட்டான். பொலிட்டிக்கல் சப்போர்ட்ல ஜாமின்ல வந்தவன்., இந்தப்பக்கம் வந்து வேலையக் காட்டிட்டான்.” இரண்டாமவனைப் பற்றி இன்ஸ்பெக்டர் சொல்லச் சொல்ல ஆனந்த்துக்கு தூக்கிவாரிப் போட்டது. பதட்டமாகி.,

“என்ன சார் சொல்றீங்க..” என்ற ஆனந்திற்கு உடம்பெல்லாம் ஒரு நிமிடம் ரத்தம் நின்று ஓடியது.

“அந்தச் செயலாளரா இருக்கான்ல அவனுக்கு இந்த மாதிரி ஆளுங்க கூடதேன் பழக்க வழக்கமே.. மூனாவதா ஒருத்தேன் அமைதியா இருக்குறாப்ல இருந்தான்ல அவன் ஸ்கூல் வாத்தியார்., சஸ்பெண்ட்ல இருக்கான்..” பெருமூச்சு விட்டார் இன்ஸ்பெக்டர்.

“இவங்கள மாதிரி ஆளுகளெல்லாம் எப்படி சார் அந்தக் கட்சியில வச்சிருக்காங்க.. சப்போர்ட்டும் பண்றாங்க..” பாவமாய் வந்து விழுந்த ஆனந்தின் வார்த்தைகளில் கோபமும் இருந்தது.

“சார் இப்பத்தேன்  இவிங்க இந்த மாதிரி ஆளுகள வச்சுத்தான் கட்சி ஓட்டிக்கிட்டு இருக்காங்க., இதே மாதிரி நைட் சோ சினிமாவுக்குப் போக வேண்டியது., உங்கள மாதிரி கழுத்துல செயின், கையில ப்ரேஸ்லெட், காஸ்ட்லியான போன் வச்சுருக்கிற ஆளுகளாப் பாத்து தேசிய கீதத்துக்கு நிக்கலன்னு பயமுறுத்தி வீம்பிழுக்கிறது. படியலன்னா அவங்ககிட்ட இருக்கிறதப் புடுங்கிட்டு அனுப்புறது., அதுல ’தேசியக் கீதத்திற்காகக் குரல் கொடுத்தபோது’ன்னு பேஸ்புக்குல வேற போட்டுக்கிற வேண்டியது ” இன்ஸ்பெக்டர் சொல்லச் சொல்ல ஆனந்திற்கு என்னவோ போலிருந்தது.

” இந்த மாதிரி கட்சிகளோட ஆளுக மேல அதிகமா இந்த மாதிரி கேசுதேன் இருக்கு., நாளைக்குக் காலைல கூட இவனுக வெளில போயிடலாம்., ஏன்னா கோர்ட், போலிஸ் சப்போர்ட்டும் இவங்களுக்கு இருக்கு., அதனால தான் உங்ககிட்ட கம்ப்ளைண்ட் வாங்கல., அதனால உங்களுக்கு ஏதும் பிரச்சன வந்திரக் கூடாதுல்ல., இவங்க ஆளுக எல்லா ஊர்லயும் இருக்காங்க..” என்ற இன்ஸ்பெக்டரின் பேச்சில் ஆனந்திற்கு தொண்டை வரண்டு போனது.

“சார் குடிக்கத் தண்ணி கிடைக்குமா..” ஆனந்த் கேட்க, இன்ஸ்பெக்டர் தனது தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தார். மிடறு மிடறாக தண்ணீரைக் குடித்த ஆனந்திற்கு கொஞ்சம் ஆசுவசமாய் இருந்தது.

“நீங்க கவலைப் படாதீங்க., கெளம்பலாம்., மத்தத நாங்க பாத்துக்கிறோம்.” ஆனந்த் திருப்பிக் கொடுத்தத் தண்ணீர் பாட்டிலை மூடிக்கொண்டே சொன்னார் இன்ஸ்பெக்டர்.

இன்ஸ்பெக்டரிடம் கைகுலுக்கிவிட்டு வெளியில் வந்த ஆனந்த் மீது காலைக் காற்று பரவியது., அவனுக்குக் கொஞ்சம் சுகமாய் இருந்தது.

சார் இன்னக்கி நைட் முழுக்க உங்களோடவே போயிருச்சு என்ற கான்ஸ்டபிளுக்கு ஒரு சிரிப்பை பதிலாய் உதிர்த்தான். ஆனந்தின் புன்னகைக்கு அவரது யூனிபார்ம் சட்டைப் பாக்கெட் உம்மென்று வாயை மூடிக் கொண்டது.

இரண்டு மூன்று முறை மூச்சை இழுத்து வாங்கி விட்ட ஆனந்திற்குள் அந்தக் காட்சி திரும்ப ஓடியது.

தியேட்டரில் இவர்கள் நால்வரும் நின்று கொண்டிருக்கிறார்கள்., அந்த மூவர் ஆனந்த்தை மிரட்டுகிறார்கள்., கோன் ஐஸையும் பாப்கார்னையும் கோலாவையும் அவரவர் கையில் பிடித்துக் கொண்டு சென்றவர்களில் பலர்..

“தேசியகீதத்துக்கே எந்திருச்சு நிக்கலன்னா.. இந்த மாதிரி ஆளுகள ஏன்னு கேட்கிறதுக்கு ஆளா இல்லாம போச்சு.. அவங்கள மாதிரி மூனு நாலு பேரு கேட்டாதேன்., தேசியகீதத்துக்கு மரியாத கொடுக்கணும்ற புத்தி வரும்..” கோன் ஐஸை நக்கிக் கொண்டும், பாப்கார்னை மென்று கொண்டும், கோலாவைக் குடித்துக் கொண்டும், இதையும் பேசிக் கொண்டும் அரங்கத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள்.

கண்களை மூடி பெருமூச்சொன்றை விட்டு ஸ்டேசன் படிகளிலிருந்து கீழிறங்கி வினாக்குறியைக் கவிழ்த்துப் போட்டது போல் நின்றிருக்கும் தனது காரை நோக்கி  நடக்கத் தொடங்கிய ஆனந்தின் மீது பரவிய அந்தக் காலைக் காற்று இப்பொழுது வெப்பமாய் இருந்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top