கூர்மம் மோதும் யோகம்

0
(0)

குமார் அலுவலகம் புறப்பட்டான். நாட்காட்டியில் தேதி பிப்ரவரி 15 கிழிக்கப்படாமல் இருந்தது. தேதியைக் கிழித்தான். ‘ஆஹா இன்று முதன் முதலா புது பைக் வாங்கின நாள்’ தேதித்தாள் கை நழுவிப் பறந்தது. அவனும் காலத்தின் பின்னால் ஓடினான். மகள் பிரியா வாசலில் புத்தகங்களோடு காத்திருந்தாள்.

புது பைக் அரக்கு நிறம். அராபிய செவலைக் குதிரையில் ஏறி திக் விஜயம் செய்யும் இராஜகுமாரன் தோரணை. குமார் வண்டியின் வேகத்தைக் கூட்டினான். உள்செருகிய கட்டைக்குள் காற்று நுழைந்து புடைத்து விலாவில் இறக்கைகள் முளைத்தது போல் படபடத்தது. அண்டவெளியில் பறப்பது போல் மிதப்பு.

வண்டி ஒரு சைக்கிள்காரரைக் கடந்தபோது குமாருக்கு மனசு சுருக்கென்றது. பள்ளிப்பருவத்தில் ஒரு சைக்கிள் வாங்க வக்கில்லாமல் தினம் காலை, மாலை ஐந்து மைல் நடந்து பள்ளிக்குப் போய் வந்தான். சற்று வேகமாய் ஓட்டும்போது பைக்கில் போவது போல் கற்பனை செய்து கொள்வான். இப்போதும் வேலையில் சேர்ந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் நிறைவேறாத ஆசையை வங்கிக் கடன் நிறைவேற்றித் தந்தது.

புது பைக் வாங்கும் முன் செலவுத்திட்டம் போட்டான். வீட்டு வாடகை, குடும்பச் செலவு, உபரி, வண்டித் தவணை, பெட்ரோல் செலவு, எந்தெந்த சமயங்களில் மட்டும் வண்டியை பயன்படுத்தவது எத்தனை கி.மீ வேகத்தில் போனால் பெட்ரோல் செலவு குறைவாக இருக்கும், என்ஜின் பராமரிப்புச் செலவினை எப்படி மிச்சம் பிடிப்பது என்ற கணக்குகள் பார்த்துதான் கடன் விண்ணப்பத்தையே வாங்கினான். அந்த சைக்கிள்காரரை கடந்ததும் 40 கி.மீ வேகத்திற்கு மேல் போகக்கூடாது என்ற சபதத்தை நினைத்துக்கொண்டவன், வேகத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

நம்ம நாட்டு ரோட்டில நாற்பது கி.மீ வேகத்துக்கு மேல போனால் நமக்கும் ஆபத்து, வண்டிக்கும் ஆபத்து விளம்பரத்தில் சொல்வது எல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது’ மனம் கட்டுப்படுத் தினாலும் சட்டைக்குள் நுழைந்து இறக்கை முளைத்த காற்று ஆசையைக் கிளர்த்திக் கொண்டிருந்தது. வேகத்தை 20க்கு குறைத்து ரோட்டின் முனை திரும்பி நாற்பதிற்கு வந்தான். எதிர்பாராத விதமாக பன்றி ஒன்று குறக்கே ஓடியது. பிரேக் பிடித்துப் பார்த்தான். வண்டி பன்றியின்மேல் மோத, வண்டி நிலை தடுமாற. காலூன்றினான். குறைந்த வேகத்தில் வண்டியின் எடையை சமப்படுத்திப் பழக்க மில்லாமல் கீழே விழுந்தான்.

பக்கத்திலிருந்த டீக்கடைக்காரர் ஓடி வந்து வண்டியைத் தூக்கி இடது ஓரமாக நிறுத்தினார். குமாருக்கு வலது கணுக்காலில் ‘சைலன்சர்’ சுட்டுவிட்டதில் காந்தல் தாங்க இயலவில்லை. நொண்டி னான். டீக்கடைக்காரர் பெஞ்சில் உட்கார வைத்து ஆசுவாசப் படுத்தி, சூடாக டீ கொடுத்தார். சற்று இதமாக இருந்தது.

“அடடே, என்ன சார் வண்டிக்கு இன்னும் நம்பரே வாங்கலை, அதுக்குள்ளார பன்னிமேல மோதிட்டீங்களே! அதிர்ஷ்டம் இல்லாதவர் சார் நீங்க.”

குழப்பத்தோடு குமார் நிமிர்ந்து பார்த்தாள். “ஆமா சார், பன்னிமேல மோதின வண்டியை வச்சுக்கக்கூடாது சார்! அது வண்டிக்கும் நல்லதில்லை! உங்களுக்கும் நல்லதில்லை.”

“என்னங்க சொல்றீங்க”

“சார், உண்மையைத்தான் சொல்றேன். வண்டியை மாற்றப் பாருங்க! அப்பத்தான் விடிவு” டீக்கடையில் இருந்தவர்களும் சோகரசத்தோடு பின்பாட்டுப் பாடினார்கள்.

அவனுக்கு வயிறு கலக்கியது. உடம்பு வேர்த்து விறுவிறுத்துப் போனது! மெல்ல தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வண்டியை உதைத்துக் கிளப்பினான். ஒரு நூறடி தூரம் போயிருப்பான். மனசு குறுகுறுத்தது. ஏதோ செய்யக்கூடாத, பயங்கரத் தவறு செய்தது போல நெஞ்சு படபடத்தது இன்னொரு டீக்கடை முன் போய் நின்று இன்னொரு டீ குடித்தான்.

“பன்றி இவ்வளவு மோசமான மிருகமா? அப்புறம் ஏன் வளர்க்கிறார்கள், கருமத்தைச் சாப்பிடுகிறார்கள்? ஆமாம் ஒரு யோசனை! நேற்றுத்தானே வாங்கினோம். டீலர் கிட்டேயே கொடுத்து வேற புதிய வண்டி மாற்றினால் என்ன?”

உற்சாகமாக வண்டியை கிளப்பினான். நேரே டீலரிடம் சென்றான். பன்றி மேலே மோதியதைச் சொல்லாமல் “இந்த மாடல் எனக்குப் பிடிக்கலை! அந்த புதுமாடல் வண்டி மாற்றிக் கொடுங்களேன்” என்று விளம்பரப்படத்தைக் காட்டிக் கேட்டான்.

“அந்த மாடல் புக் பண்ணியிருக்கோம் வர இன்னும் இருபத்தைந்து நாளாகும். நீங்க வண்டி எடுத்த, சேஸ் நம்பர் எல்லாம் நோட் பண்ணி டாக்குமெண்டெல்லாம் பேங்குக்குப் போயிடுச்சு இனிமே மாற்ற முடியாது. வேணும்னா எக்ஸ்ட்ரா பிட்டிங் எல்லாம் போட்டு இந்த வண்டியை இன்னும் மாடர்னா மாற்றித் தர்றோம் அதுக்குள்ள பணத்தை கொடுத்திடுங்க.

அப்படியும் மாற்றணும்னா, பேங்க் டாக்குமெண்டெல்லாம் மாற்றி, வண்டி ரேட்ல பத்து பர்செண்ட் தள்ளிக்கொடுங்க வேற மாடலை மாத்திக்கலாம். நீங்க வண்டியை எடுத்ததுக்குப் பின்னால, ஓட்டினாலும் ஓட்டாட்டாலும் இதுதான் நடைமுறை! இப்போ வேணும்னா வண்டியை விட்டுட்டுப் போங்க, இருபத்தைந்து நாள் கழிச்சு வாங்க”

குமார்           முகம் கறுத்து திரும்பினான். ஒரு பழைய வண்டித் ஏஜெண்டிடம் போனான். அவருக்கு வண்டியைப் பார்த்ததும் முகம் பளிச்சென்றது. அதை வெளிக்காட்டாமல் மூக்கை விடைத்து வண்டியைச் சுற்றி நோட்டம் விட்டபடி வந்து, முன் சக்கரம் அருகே நின்றார். மூக்கு மூணு அங்குலம் முன்னும் பின்னும் போய் வந்தது. மலத்தை நுகர்ந்தது போல் முகத்தைச் சுளித்துக் கொண்டார்.

“ஏன் சார் பன்னி மேல மோதீட்டீங்களா?” திடுக்கென்று சட்டையைப் பிடித்துச் சுண்டி இழுத்தது போல் இருந்தது குமாருக்கு, சமாளித்து, “அப்படியெல்லாம் இல்ல! ஏதோ ஒரு சிந்தனையில் இந்த மாடலை வாங்கிட்டேன்.வேற கம்பெனி, வேற மாடல் வாங்கலாம்னு தோனுச்சு அதுதான் உங்க கிட்டே வந்தேன். என்ன விலை போகும்.

“வண்டி புதுசு. இன்னும் நம்பர் வாங்கல நூறு கிலோமீட்டர் கூட ஓடலை! ஆனா பன்னிமேல மோதிட்டீங்களே..! இதுக்கு ஒரு பதினைஞ்சு பதினாறு கொடுக்கலாம்.”

குமாருக்கு இதயத்தையே பிடுங்கியது போலத் தூக்கிவாரிப் போட்டது. ‘என்னடா வண்டியோர கிரையத்தில மூணுல ஒரு பங்கு விலைக்கு கேட்கிறான்,’ என்று முணங்கியவன், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு “என்ன சார், விளையாடுறீங்களா? சுளையா ரூபா 46,000/- கொடுத்து வாங்கின பைக். இன்னும் நூறு கிலோ மீட்டர் கூட ஓடலை! மனசாட்சி இல்லாம பழைய இரும்பு விலைக்கு கேட்கிறீங்களே?”

“சார் கோவிச்சுகாதீங்க! உங்களுக்கு உலக விபரம் தெரியலை” புதுசா சேஸ் நம்பர் இறக்கி பாடி கட்டி வந்த ஏர்பஸ் பன்னி மேல ஏத்தினாலும் அது ஈனக் கிரயத்துக்குத் தான் போகும் நீங்க பன்னியை ஏற்றலைன்னு சொன்னாலும் டயர் வாடை காட்டிக் குடுத்துருது சார்”

குமாருக்கு கோபம் கொப்பளித்தது அடக்கிக் கொண்டு வண்டியை உதைத்து கிளப்பினான். ஏஜெண்ட் ஏமாற்றத்தோடு பார்த்தார்.

குமாருக்கு பயமும் பச்சாதாபமும் கவ்வியது. ஆத்திரமும் அழுகையும் பொங்கியது. புதுவண்டியை வாங்கி அழகு மனைவியை அருகில் வைத்து ஒருமுறைகூட ஓட்டிச் செல்லவில்லை! அட, அருமை மகளை முன்னே இருத்தி முகம் மலர ஊர்சுற்றி வரலை! யாரை எப்போது பழித்தேன், கேலி செய்தேன்? ஏன் எனக்கு இந்த அவலம்?’ வண்டியை இருபது கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் ஓட்ட முடியவில்லை! கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. போவோர் வருவோர் எல்லாம் ஒருமாதிரியாகப் பார்த்து நகைப்பது போல் ஒரு உணர்வு.

‘வங்கி அனுமதி இல்லாமல் வண்டியை எப்படி விற்கமுடியும்? புது நம்பர் இன்னும் வாங்கலை நாளைக்கே புது நம்பரும் ஆர்.சி. புத்தகமும் வங்கிக்கு ஒப்படைக்கணும்னு நிபந்தனை வேற..-? என்ன செய்ய, எப்படி சமாளிக்க?…’

‘இந்த வண்டியை வைத்திருந்தால் ஆளுக்கே ஆபத்தாம்? என்ன கொடுமை? என்ன பாவம் செய்தேன்….’

எப்படியோ வீடு வந்து சேர்ந்து விட்டான்! வண்டியை வெளி யிலேயே வைத்து அனிச்சையாய் பூட்டி விட்டு படுக்கையில் போய் விழுந்தான். முகம் கருத்து இருண்டு போயிருந்தது. மனைவி கேட்டாள். அவன் பதில் பேசவில்லை. அருகில் வந்து நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள். முகம் சில்லிட்டுப் போயிருந்தது.

“என்னங்க, என்ன செய்யிது? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?”

அவன் பேசாமல் கண்ணை இறுக்கி மூடிக் கிடந்தான்.

“என்னங்க செய்யிது? வாங்க டாக்டர் கிட்ட போகலாம்”

“அட, கொஞ்ச நேரம் சும்மா இரேன் தலை வலிக்குது, கொஞ்ச நேரம் தூங்கினா சரியாப் போகும்.”

“தைலம் தேய்த்து விடட்டுமா?” என்றாள்.

அவன் சிவந்த கண்ணோடு முறைத்தான். அவள் தைலத்தை வைத்து விட்டு வெளியே பார்த்தாள்.

சிறுமி பிரியா பைக்கில் ஏறி அமர்ந்து ஓட்டுவது போல் பாவனை செய்து “ச்சீ… ச்கீ.. புடு புடு புடு” என்று சத்தம் கொடுத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

“யேய், பிரியா இறங்குடி வண்டி விழுந்துடப் போகுது” அம்மா கத்தினாள்.

குமார் தீக்கங்கு பட்டது போல துள்ளி எழுந்தான்.

“யேய், தூக்கு, தூக்கு குழந்தையைத் தூக்கு! குழந்தைக்கு ஏதாவது ஆயிடப் போகுது”

கண்களை மூடியபடியே புலம்பினான். அவள் ஓடிப்போய் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்தாள். அவன் அப்படியே படுக்கையில் படுத்துவிட்டான். சிறுமி டி.வியைப் போட்டாள். மனைவின் கவனம் டி.வியில் அமிழ்ந்தது.

இரவு பத்து மணியிருக்கும், கணவனை சாப்பிட எழுப்பினாள். “வேண்டாம் பசிக்கலை கொஞ்சம் நிம்மதியாய் தூங்கவிடு! என்றபடி கண்ணை மூடியபடி புரண்டான். அவன் தூங்கினது மாதிரியும் இல்லை , விழித்தது மாதிரியும் இல்லை . நரகப் புரளல். மணி பதினொன்றிருக்கும் அவள் எழுப்பினாள். “ஏங்க புது பைக் வெளியவே இருக்கு! யாரும் ஓட்டிட்டு போயிட்டா….?

“அடச் சனியன் போனா போகட்டும்! என்னை நிம்மதியா தூங்கவிடு! கண்ணை விழிக்காமலேயே கத்தினான்.

புருஷனின் வழக்கத்திற்கு மாறான நடத்தை அவளுக்கு பயத்தை உண்டாக்கியது. பக்கத்தில் ஆறுமுகம் அண்ணனிடம் சொன்னால் ஏதாவது ஆறுதலாய்ச் சொல்லுவார். என்றால் மணி பதினொன்றைக் கடந்தபின் போய்த் தொல்லை கொடுப்பது சரியில்லை.”

அவளும் நிம்மதியில்லாமல் புரண்டாள். கவலை மறக்க டிவி பார்க்கலாம் என்றால் புருஷன் நிலை இப்படி இருக்க இந்நேரம் டிவி பார்த்துக்கிட்டு இருப்பது சரியில்லை என்ற எண்ணம். மனக் கண்முன் வந்த சாமிகளை எல்லாம் கும்பிட்டுக் கொண்டாள். புதுபைக் வந்ததும் கோவில், கடை என்று உலா வரும் எண்ணம் ஈடேறவில்லை. இருட்டின் திரையில் இருவரும் தனித்தனியே உருண்டு கொண்டிருந்தனர். பூஜை அறையில் சிறு விடிவிளக்கு மஞ்சள் பூத்த ஒளிப் பற்களால் மினுக் மினுக் கென்று சிரித்துக் கொண்டிருந்தது.

எந்நேரம் தூங்கினார்கள் என்று தெரியவில்லை. பால்காரன் மணிச் சத்தம் கேட்டு மனைவி பதறி எழுந்தாள். பைக் நினைவு வந்தது. பால்பாத்திரம் எடுக்கும் முன் கதவைத் திறந்து பைக்கை பார்த்ததும்தான் மூச்சு விட்டாள்.

டீ போட்டு கணவனை எழுப்பினாள். அழுது வடிந்த கண், வெள்ளம் வடிந்த ‘மணல் பகுதி’ போல் உப்பி பொது பொதுப்பேறியிருந்தது.

என்னவென்று அவளால் கேட்க முடியவில்லை.. கேட்காம லிருக்கவும் முடியவில்லை… ஒரு வகையாய் “இப்போ தலைவலி எப்படி இருக்குங்க?” என்றாள்.

“ச்ச்” என்று கழிவிரக்கத்தோடு தலையாட்டினான்.

குமார் வேண்டா விருப்பாய் டீயை விழுங்கிக் கொண்டிருந்தான் அவள் மெல்லப் போய் பக்கத்து வீட்டு ஆறுமுகத்தை அழைத்து வந்தாள்.

ஆறுமுகம் ஒரு மில்லில் வேலை பார்க்கிறார். நல்ல ஓங்கு தாங்கான உடல்வாகு. சங்கவாதி. எந்த விஷயத்திலும் தெளிவாக இருக்க விரும்புவார். பிறருக்கு உதவி செய்யும் குணம் கொண்டவர். எதையும் பளிச்சென்று ஒளிவு மறைவு இல்லாமல் பேசக் கூடியவர்.

ஆறுமுகம் வீட்டிற்குள் நுழைந்தார்.” என்ன குமார்? என்ன உடம்புக்கு செய்யுது? புதுவண்டியை வாசல்லையே நிறுத்திட்டியே…? மறதி வர்ற அளவுக்கு மனசில எதுவும் பிரச்சினையா….?”

குமார் ஒன்றுமில்லை என்பது போல் தலையாட்டி, குனிந்து கொண்டான். ஆறுமுகம் கணித்து விட்டார்.” ஏதோ பிரச்சினை இருக்கு! மெல்லக் கனிவாகப் பேசி ஆறுதலாகத் தோளில் கைபோட்டு வெளியே அழைத்து வந்தார்.

தெருமுனை வரை இருவரும் பேசாமல் நடந்தனர். ஆறுமுகத்தின் ஆறுதலான தொடுவுணர்ச்சி அவனது இறுக்கத்தை தளர்த்தியது.

தெருமுனை டீக்கடையில் ஆளுக்கொரு டீ சாப்பிட்டார்கள் காலை செய்தித்தாளைப் புரட்டினார்கள். குமார் எழுத்தில் கண்பதியாது தாள்களைப் புரட்டினான். ஆறுமுகம் அவனது முகத்தை வாசித்தார். டீக்கு காசு கொடுத்து விட்டு எழுந்து மெல்ல நடக்க தொடங்கினர். ஆறுமுகம் நயமாய் பேச ஆரம்பித்தார். கொப்புளம் பழுத்து உடைபட்டதுபோல மனசின் ரணமெல்லாம் கொட்டினான்.

நடந்ததைக் கேட்டதும் தண்ணீர்க் குழாய் உடைபட்டது போல ஆறுமுகத்துக்கு சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வந்தது, கட்டுப்படுத்த முடியாமல்! குமாரின் முகம் போற போக்கைப் பார்த்து சிரமப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டார். பேசாமல் அவனது கையைப் பற்றி அவரது வீட்டிற்குள் அழைத்துப் போனார். நாற்காலியில் உட்கார வைத்து பீரோவைத் திறந்தார். தனது பழைய வண்டியின் ஆர்.சி புத்தகத்தை எடுத்தார். அந்தப் புத்தகத்தில் 15 வருஷத்திற்கு முன் வண்டி வாங்கின தேதியும் அவரது போட்டோவும் பழுப்படைந்து பழமையைக் காட்டிச் சிரித்தது.

குமார் ஒன்றும் விளங்காமல் அவரைப் பார்த்தான்.

“குமாரு, இந்த வண்டியை வாங்கி 15 வருஷ காலத்தில், நான் நைட் டூட்டிக்குப் போகும் போதும், வரும்போதும் சரி, ஒரு நாலஞ்சு தடவையாவது பன்னியை அடிச்சிருப்பேன். வேணும்னு மோதின தில்லை. நான் பாட்டுக்கு போய்கிட்டே இருப்பேன். அது வந்து மோதுற மாதிரி விரட்டி விடுவார்கள்.

அந்தக் காலத்து ராஜாக்கள் தம் வலிமையை, பிரதாபத்தை நிலை நாட்ட, பட்டத்து குதிரையை அடுத்த நாட்டு எல்லைப் பக்கங்களில் மேயவிட்டு வம்பிழுப்பார்கள். அசுவ மேதயாகம்னு செய்து தனது வலிமையை தெரிவிச்சு சக்கரவர்த்தின்னு பட்டம் சூட்டி பக்கத்து நாடுகளை வளைச்சுப் போட்டுக்குவாங்களாம்! இப்போ தாதாக்கள் ரோட்டில பன்னிகளை பற்றி விட்டு அப்பாவி சப்பாவி வண்டிகள் மீது மோதவிட்டு, அடி மாட்டு விலைக்கு அதை வாங்க ஏற்பாடு செய்கிறார்கள். இது அவங்களுக்கு “கூர்மம் மோதும் யோகம்.” மூட நம்பிக்கையில் தொழில் பண்றானுங்க. இந்த மூட நம்பிக்கையை நாம கண்டுக்கிட்டாத்தான் இழப்பு.”

குமார் நம்பாமல் பார்த்தான்.

“என்ன குமார் நான் சொல்றதில்லை நம்பிக்கை இல்லையா? நான் சொல்றது எல்லாம் நிஜம்.”

“இப்படித்தான் இந்தவண்டி வாங்கின ஆறுமாசத்தில்.. அதே இடம்தான் அந்த ரோட்டு வளைவில் ஒரு பன்னி வந்து குறுக்கே மோதி விழுந்தது. ஒரு உயிரை இப்படி அடிச்சிட்டோமேன்னு ஈரக்குலை பதறுச்சு.. கிட்டே போய்ப் பார்த்தேன், பன்னி ஒடிஞ்ச காலை ரத்தம் சொட்ட சொட்ட இழுத்துக்கிட்டு எதிர்ப்பக்கம் புதருக்குள்ளே ஓடியிருச்சு.. நான் திகைச்சு போய் நின்னுகிட் டிருந்தேன். பக்கத்தில இருந்த டீக்கடைக்காரர் சொன்னார். பன்னி மோதின வண்டியை வச்சிருந்தா உயிருக்கு ஆபத்துன்னார். எனக்கு திக்குன்னு தூக்கி வாரிப் போட்டது.

சைக்கிள் மிதிக்க முடியாம, கடன்பட்டு வண்டி வாங்கினா. இதுக்கும் ஆபத்தான்னு திகைச்சுப் போனேன். அப்புறம் ஒரு மாதிரி சமாளிச்சு வீட்டுக்கு வந்துட்டேன்.

மறுநாள் பழைய வண்டி வாங்கி விற்கிறவர்கிட்டே போனேன். அவர் இரும்பு விலையைவிடக் குறைவாகக் கேட்டார். ஏன்னு கேட்டதுக்கு, “பன்னி அடிச்ச வண்டி விளங்காது”ன்னார்.

ஏய்யா மனுசன் உயிரை துடிக்க துடிக்க ஏத்திக் கொன்னுட்டு ராஜா மாதிரி ஓட்டித் திரியறானுங்க, ஒன்னுக்குப் பத்து வண்டி களாக பெருக்கிக்கிட்டு இருக்காங்க! பன்னி அடிச்சதுக்கு இம்புட்டு காயம் காட்டுறீங்க? என்றேன்.

“மனுச உயிரை விட பன்னி உயிரு கொடுமையானது. அது மனுசன் வாழ்க்கையைப் பாதிக்கும். நான் நடப்பை சொல்றேன். நீ நம்பாட்டா உன் வண்டிக்கும் உனக்குத்தான் ஆபத்து! உங்களமாதிரி ஆளுகளுக் கெல்லாம் பட்டாத்தான் தெரியும், சொன்னா புரியாது”

“சரி இந்த வண்டியை வாங்கி நீங்க என்ன செய்வீங்க?” சாமான்களை கழற்றி மாற்றி விற்போம்”

“அப்போ பன்னித்தோசம் ஒண்ணும் செய்யாதா?”ன்னு கேட்டேன்.

“அட ஏய்யா, சாமானும் மாறியிருது, ஓட்ற ஆளும் மாறியிருது, அதனால தோஷமும் மாறியிரும்னார்.”

எனக்கு சிரிப்பும் வந்தது. ஆத்திரமும் வந்தது. அடக்கிட்டு வந்துட்டேன். அந்தக் கடையில வேற மாவட்ட நம்பர் வண்டிகள் நாலஞ்சு நின்றன.

மெல்ல நம்ம சங்க சினேகிதக்காரங்க மூலமா அந்த ஆளு பின்னணி பற்றி விசாரிச்சேன். அந்த ஆளு இப்படிப் பன்னிகளை வச்சுத் தொழில் பன்றாரு, அவருக்கு மூணு மகனுங்க…! மூணு அரசியல் கட்சியில முக்கியப் பிரமுகர்களா இருக்காங்க! மூணு ஊர்ல தனித்தனியா இந்த மாதிரி பன்னிகளை மோதவிட்டு வண்டிகளை உருட்டி மிரட்டி வாங்கி விற்கிறது தான் தொழிலு! அரசியல் கட்சி முக்கியப் பிரமுகர்களோட இவங்க இருக்கிறதுனால இவங்களை ஒண்ணும் செய்ய முடியலைன்னு தெரியவந்தது.

அப்புறம் தான் ஒரு முடிவுக்கு வந்தேன். பேசாம வண்டியை ஓவராயில் (சர்வீஸ்) பண்ணினேன். கவனமா ஓட்டிக்கிட்டிருக்கேன். இதுவரை எந்தப்பிரச்சினையும் இல்லை. பன்னி தோசம் கிட்டே வரலை! எங்கூட வேலை பார்க்கிறவங்க ரெண்டு பேருக்கு இந்த மாதிரி பிரச்சனை வந்தபோது, என்னனுபவத்தைச் சொன்னேன். அவர்களும் வண்டியைக் கழுவி மன ஆறுதலுக்காக அவங்கவங்க சாமியை கும்பிட்டுட்டு ஓடினாங்க. ஒண்ணும் நடக்கலை.

ஆனா ஒரு வருத்தம்! “இந்தப் பன்னித் தொழில ஒழிக்க முடியலையேன்னு….! ஒரே ஆறுதல் இதுக்கு எதிரா மெல்ல மெல்ல ஆளுகளைத் திரட்டிட்டு வர்றேன்ங்கிறதுதான்”

ஆறுமுகம் கையை உதறிச் சிரித்தார். குமாருக்கும் சிரிப்பு தொற்றிக் கொண்டது.

“ஏப்பா பிராக்டிக்கல் எக்ஸாமுக்கு நேரமாச்சு, இந்த வண்டியில டொர்டொர்னு போய் சேர்றதுக்குள்ள பெல் அடிச்சிரும்.”

மகள் குரல் கேட்டு நினைவிலிருந்து நிகழ்காலத்துக்கு வந்த குமார் காலண்டர்தாளை சுருட்டி ஒரு சுண்டு சுண்டினான். வண்டியை உற்சாகமாக உதைக்க அது உறுமிக் கொண்டு ஓடியது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top