கூத்தியார் கம்மா

5
(1)

இப்படியொரு வெக்கையை இந்த ஊர் இதுவரை கண்டதில்லை.

பல வருசகாலமாக சரிவர மழை மாரி இல்லை. அதிலும் ஊர் கம்மா நெறஞ்சு மாமங்கம் இருக்கும். பாளம் பாளமாய் வெடித்துக் கிடந்தது  கம்மா. கரு வேல மரங்கள் அடர்ந்து படர்ந்து கிடந்தன நடுவில்.

கரையில் நிற்கிற ஆலமரமும் அதை அடுத்து கீழே நிற்கிற புங்கையும் மட்டும் ஆடு, மாடு, மனுச மக்க, காக்கா, குருவி சீவாத்திகளுக்கு நிழல் குடைகளாய் நின்று கொண்டிருந்தன.

ஆலமரத்தடியில் பீடம் சிதிலமடைந்து கிடந்தது. தீபமேற்றுகிற சிறிய கல்தீபத்துடன் எண்ணெய் பிசுக்கோடு திரியேதுமின்றி தாலியில்லா அமங்கலியாய் நின்றது. என்றோ சூட்டிய ரோசாமலை சருகாய் கருகியிருந்தது.

ஆட்டுப்புழுக்கைகளும், சருகுகளுமாய் சீந்துவாரற்று கிடந்தது பீடம். மூக்கு சிதைந்து கண்கள் மூடி தன் கழுத்துக்கு நேராய் குறுவாளை நிறுத்தி நின்று கொண்டிருக்கிற பெண் சிலை மாத்திரம் ஒத்தையாய் நின்றுகொண்டிருந்தது.

கால்களில் சலங்கை, கழுத்துக்கு நேராய் தன்னைத்தானே பலியிட வாகாய் கையில் குறுவாள். சிற்றிடை தனங்களின் நடுவே முத்துமாலை. இடையின் கிழே தொடைவரையில் ஆடை. பாதங்களில் சதங்கை. கற்சிலைதான். ஆனாலும் அத்துணை தத்ரூபம்.

விழுதுகளிறங்கி நிற்கிற ஆலமர நிழலில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி வந்த ஒச்சு வெடித்த கண்மாயையே வெறித்து உள்ளங்கையில் கஞ்சாவை கசக்கிக் கொண்டிருந்தான்.

தூரத்தில் யாரோ காவித்துண்டை தலையில் போட்டுக்கொண்டு வருவதைப் பார்த்தவன் அவசர அவசரமாய் சிகரெட்டில் தூளேற்றினான். கோடாங்கி மாதிரி… கோடாங்கியே தான். ஆலமரத்தை நெருங்குகிற போதே செருப்பைக் கழற்றி கையிலெடுத்துக் கொண்டார்.

என்னா கோடாங்கி

இந்த நேரத்துல இங்கிட்டு..?

அட ஏம்ப்பா ஓச்சு…

வீட்டுல இருக்க முடியல

வெந்து அவியுது…

ஒரு எலை கூட அசையமாட்டேங்குது!

இப்புடி வெயிலடிச்சா என்னண்டுதான் இருக்கிறது?

மழை தண்ணியுமில்லே…

அந்தாரு…ஒரு ஆடு தன்னால மயங்குது.

ஒரு ஆடு பச்சையத்தேடி அலையிது.

இந்தக் கம்மா நெறஞ்சு மறுகால் பாய்ஞ்ச காலமெல்லாம் மலையேறிப் போச்சு! அந்தா அங்கன தான் பானைப்பறி போட்டு மீன் அள்ளுவாக! நாங்கள்லாம் அங்கனயே கெடையாக் கெடப்போம்!

காவித்துண்டில உருமா கட்டினார்.

இருபுறமும் செதுக்கிய வெளுத்த மீசையும் காதுகளில் தொங்குகிற வாலைக் கடுக்கன்களும் அவரைப் போலவே தங்களுக்குள் பலப்பல கதைகளை பதுக்கி வைத்திருந்தன.

அண்ணாத்து வானத்தைப் பார்த்தார்.

கமர்ரதைப்பார்த்தா இன்னிக்கி  மழை வரும்ண்டு நெனைக்கிறேன்!Ó

ஒச்சு சிகரெட்டைப் பற்ற வைத்திருந்தான்.

மழை பேஞ்சி கம்மா நெறஞ்சி காடுகரையெல்லாம் வௌஞ்சாக்கா இந்தா நிக்கிறா பாரு இந்த அம்மா இவளுக்கு மனசு குளுந்து போகும். நெல்லு வௌஞ்சுதுன்னா மொத மரக்கா அவளுக்குப் படையல்.

வாழை தழச்சிதுன்னா மொத தாரு இவளுக்கு காணிக்கை.

இவ இல்லைன்னா இந்தக் கம்மா இல்ல!

இந்த ஊரு இல்ல!

என்னாக் கோடாங்கி பெரிய கதையே இருக்கும் போல..?

இம்புட்டு வர்ணிக்கிறியே?

அவன் சிவந்த கண்களில் ஆவல் மிகுந்தது.

கஞ்சா தலைக்கேறி இறங்கடிக்க கதை கேட்க தயாரானான் ஒச்சு.

சொல்றேன் கேளு.

கோடாங்கி பீடத்தை நோக்கி சிலையை உற்றுப்பார்த்தார்.

அது ஒரு பொற்காலம்!

திருமலை நாயக்கரு மதுரைய ஆண்டுக்கிட்டிருந்த காலம்!

கோடாங்கியின் கண்கள் ஒச்சு இழுத்த கஞ்சா சிகரெட் கங்கில் நிலைகுத்தின. சிகரெட்டின் தீப்பொறிகள் தீப்பந்தங்களாயின.

ராசபாளையத்துப் போன ராசா அப்படியே ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் நாச்சியாரை சேவித்துவிட்டு மதுரை திரும்பி கொண்டிருந்தார் திருமங்கலத்தைத் தாண்டுகிறபோது தாசி ராஜத்தின் நினைவு வந்தது.

தீப்பந்தங்கள் ஒளிர்ந்து கொண்டிருந்த தாசிமார் தெருவின் மூன்றாவது வீட்டின் முன்பு மன்னரின் ரதம் நின்றது.

ராசா வந்துருக்கார்…

ராசா வந்துருக்கார்…

ராஜத்தைத் தனியே விட்டு தோழிகள் ஆளுக்கொருப்பக்கம் மாயமாயினர்.

ராஜம் சூடியிருந்த மல்லிகைச் சரம் அந்த அறையையே தேவலோகமாக்கியிருந்தது.

வாங்க.. வாங்க…

வெள்ளிப்பூண் போட்ட சாய்வு நாற்காலியில் அமர்ந்து ராஜத்தை கண்களால் அழைத்தார் மன்னர்.

களைப்பா இருக்கீங்களே… சாப்ட்டீங்களா?

பனங்கற்கண்டுப்பால் கொண்டு வரட்டுமா? சிறுமலை வாழை..?

எனக்கு வேறொண்ணும் வேண்டாம்… உன்னைத்தவிர..!”

மன்னரின் கரங்களுக்குள் சிறைப்பட்ட ராஜத்தின் மஞ்சள் முகம் தாமரை நிறத்துக்குத் தாவிற்று.

அள்ளி அணைத்து இலவம் பஞ்சு மெத்தையில் கிடத்தி ராஜமெனும், பெண் வீணையில் மோக ராகம் இசைத்தார் மன்னர்.

மழையில் குளித்த மரங்களைப் போல இருவர் தேகத்திலும் வியர்வை கொட்டியது.

ஆசுவாசம் கொண்ட மன்னர்

ராஜத்தின் கண்களில் தேங்கிநின்ற நீர் பார்த்து பதறினார்.

என்ன ராஜம்

ஏன் கண்களில் கண்ணீர்?

ஒன்றுமில்லை!

மறைக்காத! உனக்கென்ன குறை?

சொல்… ராஜம்..!

எனக்கெந்த குறையும் இல்லை

மன்னர் திருமலை மவராசன் புண்ணியத்தில்..!

பிறகு…

இந்த ஊருக்குத்தான் குறை!

என்ன ஊருக்குக் குறையா?

ஆமாம்! இந்த ஊர் கனங்கள் நிலங்களிருந்தும் நீரில்லாமல் வாடுகிறார்கள். அடிமைகளைப் போல திருப்பரங்குன்றத்து நிலங்களில் உழைக்கிறார்கள்.

நீர் வளமிருந்தால் பொட்டல் காட்டில் பூ மலரும்.

மன்னர் தான் மனம் வைக்க வேண்டும்!

சரி.. சரி… கலங்காதே!

வைகைநீரை வரவழைக்கிறேன் இந்த ஊருக்கு..!

நாளைக்கே ராயசத்திடம் சொல்லி வாய்க்கால் வெட்டும் பணியைத் துவக்கச் சொல்கிறேன்!

கொண்டையை அள்ளி முடித்தார் மன்னர்.

அதிகாலையிலேயே என்னை எழுப்பிவிடு!

அழகர் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

மண்டபம் நிர்மாணிக்கிற பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

பார்வையிட வேண்டும்.

போய்ட்டு… குருவாரம் வர்றேன்!

வலதுகையை தலைக்கு வைத்து தொந்தி சரிய இடப்பக்கம் திரும்பினார் மன்னர்.

ராஜம் உறங்கவே இல்லை.

வழித்துக் கொண்டே கனவு கண்டாள்.

இந்த ஊர் நீரால் வளமடைந்து நிலம் செழித்து கனங்கள் முகங்களில் புன்னகை தவழ அந்த அன்னை மீனாட்சிதான் அருள்புரிய வேண்டும். மனத்திற்குள்ளே பிரார்த்துக் கொண்டாள்.

தாசி குலத்தில் பிறந்தாலும் உயரியஎண்ணங்கள் கொண்டவள் ராஜம்.

வேலி நிலமும், வீடும் அரசர் கொடுத்திருக்கிறார்.

ராக்கொடி, முத்துமாலை, சதங்கை என உச்சி முதல் பாதம் வரை ஆபரணங்களுக்கோ, பட்டாடைகளுக்கோ ஒரு குறைச்சலும் இல்லை.

உண்ண உணவும், உடுக்க உடையும் எடுபிடிக்கு ஆட்களும் பஞ்சமில்லை.

சித்திரைத்திருவிழா நேரத்தில் மீனாட்சி சொக்கனுக்காக சாந்தி கூத்தாடுவாள்.

மற்றபடி மன்னருக்காக மட்டுமே அவள் சலங்கைகள் ஒலிக்கும்.

கண்டும் காணாமல் ஊரில் சில பேர் வாய்க்கு வந்தபடி ராசாவோட சடத்தியா என்று ஏசினாலும் செவிசாய்க்க மாட்டாள்.

பெரும்பாலும் அவளை கனங்கள் ராஜம் தாசி தங்கமானவள் என்றே சொல்லுவார்கள்.

அவள் நடந்து கொள்கிற விதம் அப்படி.

வைகையின் தென்கரையிலிருந்து கால்வாய் வெட்டுகிற பணி துவங்கியிருந்தது.

கால்வாயினின்று நீர் ஊருக்கு வருவதற்கான ராஜ பாதையை உடல் வருத்தி வியர்வை சிந்தி அரண்மனையின் ஆணைக்குக் கட்டுப்பட்ட உழைக்கும் வர்க்கம் சமைத்துக் கொண்டிருந்தது.

குருவாரம் வருவதாய்ச் சொல்லிவிட்டுப் போன மன்னர் பின்னர் ஒரு வாரமும் வரவே இல்லை.

அவருக்கு ஜோலி அப்படி.

கோயில்களை நிர்மாணிப்பது, மண்டபம் எழுப்புவது, குளங்கள் வெட்டுவது ஒன்றா? இரண்டா? பணிகள்

அவர் மனைவிகளைப் போலவே அவரது திருப்பணிகளும் கணக்கிலடங்காதவை.

ஆனால், கொடுத்த வாக்கை நிறைவேற்றிவிட்டார்.

வைகையின் நீர் ராஜம் வாழுகிற பதிக்கு கொண்டு வருகிற பணியை துரிதப்படுத்தியிருந்தார். என்றாலும் ஊர்ப்பக்கம் வரவே இல்லை.

ராயசமும் பிரதானியும் தான் வந்து போனார்கள்.

ஊருக்கு கிழக்கே வைகையின் நீர் பெருகி நிற்கும்படியாக கண்மாய் சமைத்தாகிவிட்டது.

இனி வைகையின் நீர் திறந்துவிடப்பட வேண்டும் அது மட்டும் பாக்கி.

அதற்குள் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாய் கண்மாய் வெட்ட கிளம்பியது ஒரு பிரச்சனை.

குடியானவர்கள் ஊரில் கண்மாய் வெட்டியதை அதிலும் தங்கள் குளத்தை விடப் பெரியதாய் வெட்டியதில் குன்றத்துப் பார்ப்பனர்களின் கும்பி எரிந்தது.

கூத்தியாள் பேச்சுக்கு இத்தனை மரியாதையா?

தங்கள் நிலங்களில் பாடுபடுகிற கனங்கள் இனி அவர்கள் ஊரில், அவரவர் நிலங்களில் பாடுபடுவார்கள்!

யாருக்கு நட்டம்!

பருப்பும் நெய்யும் உண்டு கொழுத்த உடம்பு வளைந்து வேலை செய்யுமா? விதைப்புக்கும் அறுப்புக்கும் ஆள் வேண்டாமா?

போர்க்கொடி தூக்கினார்கள்.

வைகையின் நீர் குடியானவர்களின் ஊருக்குள் நுழைந்து விடாதபடி குள்ளநரி வேலை பார்த்தார்கள். தங்கள் சுயநலத்தின் மீது ஆகமத்தை அலங்கரித்து பகவான் கைங்கர்யத்துக்கு பங்கம் வந்துவிடுமென்று கடவுளைக் காரணம் காட்டினார்கள்!

சாமி வரம் கொடுத்தும் பூசாரி வழி மறிச்சது மாதிரி கண்மாய் வந்தும் நீர் வரவில்லையே?

ராஜம் தணல் வீழ் மெழுகானாள்.

மன்னருக்கு ஆள் அனுப்பினாள்.

மன்னர் திருமலை ராஜாங்கப் பணிகளுக்காக திண்டுக்கல்லில் முகாமிட்டிருந்தார்.

ராஜம் அனுப்பிய ஆள் மதுரையின் திரண்ட அரண்மனைத் தூண்களை மாத்திரமே பார்த்துவர முடிந்தது.

ராயசத்திடம் முறையிட்டாள்.

பிரதானியிடம் மன்றாடினாள். பலனில்லை.

பார்ப்பனர்களைப் பகைத்துக் கொண்டு பரிபாலனம் செய்ய முடியாது.

புதிதாய் உருவான கண்மாய் உயிர்ப்பலி கேட்பதாக புரளி கிளப்பினார்கள்.

நாட்கள் நகர்ந்தது.

ராஜன் வருவான் என்று காத்துக்கிடந்த ராஜத்தின் விழிகள் சிவந்து நீரற்றுக் கண்மாயைப் போலவே இருந்தன.

மன்னருக்காகக் காத்திருப்பதில் இனி பலனில்லை.

ஊரடங்கிய ஒரு பவுர்ணமி இரவில் கண்மாய்க் கரைக்கு வந்தாள். நிலவின் ஒளி கண்மாய் முழுமையும் நிரம்பி நிற்பதைப் பார்த்து ஆனந்தித்தாள். சலங்கை இல்லாமலேயே நர்த்தனம் புரிந்தாள். நிலவின் மிடறள்ளி தாகம் தீரப் பருகினாள்.

இடுப்பில் இருந்த சூரியை வலக்கையில் எடுத்தாள்.

ஒரு கணம் தான். இடக்கை அறியுமுன்னே, எல்லாம் முடிந்து விட்டது.

சங்கை அறுத்துக் கொண்டாள் ராஜம். வைகையின் வெந்நீருக்கு முன்னால் பாவையின் செந்நீர் கண்டது கண்மாய்.

ஒரு தாசி ஊருக்கேத் தாயானாள்.

தான் பெறாத பிள்ளைகளுக்காக தன் உயிரையே பரிசளித்தாள்.

விடியலில் விழித்த ஊர் இழவு சொல்லி அழுதது. தலையிலடித்துக் கொண்ட தலையாரி தரையில் கால் பாவாம் திண்டுக்கல்லுக்கு ஓடினான்.

இடிச்செய்தி கேட்ட மன்னர் மின்னலென இறங்கி வந்தார்.

ஊரின் முன் கலங்கிய மன்னர் ராஜத்திற்கு நேர்ந்த கதி எண்ணி மனமுடைந்தார். உடனடியாக வைகைநீர் ஊருக்குள் நுழையும்படி உத்தரவிட்டார்.

கண்மாய்க் கரையில் ராஜத்தின் நினைவாய் ஒரு நடுகல் நடவும், ராஜம் என்றென்றும் நிலைக்கும்படி சிற்பம் புடைக்கவும் உத்தரவிட்டார்.

கண்மாய் நிறைகிற நாளில் அவளுக்கு பொங்கலிடும்படியும், கண்மாயின் நீர் பாய்ந்து விளைகிற நிலங்களின்  அறுவடைநாளில் அவளுக்குப் படையலிடும்படியும் ஆணை பிறப்பித்தார்.

கண்கள் குளமாகி நிற்க கோடாங்கி கதையை நிறுத்தியபோது ஏற்றிய கஞ்சா போதையெல்லாம்  இலவம் பஞ்சாய் பறந்துவிட்டிருந்தது ஒச்சுவுக்கு.

வானம் கருக்கிட்டிருந்தது. ஆடுகளைப் பத்திக் கொண்டு ஒச்சுவும், கழற்றிய செருப்புகளை காலில் அணிந்துகொண்ட கோடாங்கியும் இருவேறு திசைகளில் நடந்தார்கள்.

திரண்ட மேகங்களைப் பார்த்து குதூகலித்து திசைகளதிர ஆல இலைகளிலெல்லாம் சிரித்துக் கொண்டிருந்தாள் ராஜம்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

1 thought on “கூத்தியார் கம்மா”

 1. எண்ணில் அடங்கா குறுந் தெய்வங்கள்…ஊருக்கு ஊர் வேறுபடும் குறுந்தெய்வ வழிபாட்டுமுறைகள்… அவற்றை பிண்ணி பிணைய பட்ட கதைகள்….
  இல்லை இல்லை ஒவ்வொரு குறுந் தெய்வமும் சக மனிதர்களுக்காக தங்களை தியாகம் செய்து கொண்ட சாதாரண எளிய பாமர மக்கள் என்பதே உண்மை.

  கடவுள் என்பவன் கண்ணுக்கெட்டா தூரத்தில் இல்லை. தன் சமுதாயத்திற்காக தன் உயிர் கொடுக்கவும் தயங்காமல் போராடுபவன் கடவுள்…. தெய்வம்.

  நம் மக்களின் வாழ்வில் கலாச்சாரத்தில் தன்னிகரற்ற சமூக பாதுகாவலர்களாய் தனித்து நின்று போராடிய தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் முறையே பழந்தமிழ் குறுந் தெய்வ வழிபாட்டு முறை.

  இவற்றையெல்லாம் விழுங்கி ஏப்பம் விட்டு ஒரே மதமாக மாற்றிய ஏகாதிபத்தியம் பார்ப்பனியம். அவற்றின் சான்றாக கிடைத்த அருமையான பதிவு கூத்தியார் கம்மா….

  அதேசமயம் ஆணாதிக்க சமுதாயம் தாசி முறையை கொண்டுவந்து பெண்ணை இழிநிலைக்கு கொண்டு சென்றாலும், அவள் தாய் தான்…. அவளின் தாய்மை குணம் மாறாது என்பதையும் அழுந்த காட்டும் அற்புதமான படைப்பு…

  தோழர் ஸ்ரீதர் பாரதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: