குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு

4
(1)

தன் அறையிலிருந்து வெளியில் வந்து நின்றார் ஸ்டேஷன் மாஸ்டர் நாராயணன். எதிரே இருண்டகாடு, காட்டிலிருந்து கிளம்பிவந்த குளிர்ந்த காற்று நரைத்த அவரது தலைமுடியில் பரவியது. அந்தக் காற்றின் சில்லிப்பை அவர் அனுபவித்தார். நிமிர்ந்து மூச்சை நன்றாக இழுத்துவிட்டார். ஸ்டேஷன் வெளிச்சம் தவிர வேறெங்கும் வெளிச்சத்தைப் பார்க்க முடியவில்லை. இருள் பூசிய வெளி. யாருடைய இசைக் குறிப்புகளுக்கோ ஏற்றமாதிரி பூச்சிகளின் ரீங்காரம் ஒரு சேர்ந்திசையின் சுரம் போல விட்டுவிட்டு ஒலித்துக் கொண்டிருந்தது.

கருங்கும்மென்றிருந்த வானத்தில் நட்சத்திரங்கள் பளிச்சென்று ஜொலித்துக் கொண்டிருந்தன. நாராயணன் நெட்டிமுறித்தார். திடீரென்று மின்சாரம் போய்விட்டது. அடிக்கடி இப்படி நடப்பதுதான். அப்போது வெளியிலுள்ள இருள் இன்னும் பயங்கர அழகுடன் அதிர்ந்து கொண்டேயிருக்கும். சற்று நேரத்திலேயே இருள் தன் குறைவான வெளிச்சத்தைக் கண்களுக்கு வழங்கிவிடும். நாராயணன் திரும்பிப் பார்த்தார். பாயிண்ட்ஸ்மேன் நடராஜன் பெஞ்சில் முடங்கியிருந்தார். பகலைவிட இரவு மட்டும் ஏன் இத்தனை கற்பனைகளையும், பயங்கரங்களையும் கொண்டுவருகிறது? இரவின் பின்னணியில்தானே பல புனைவுகளும் உயிர்களின் ஓய்வும் உறக்கமும் உற்பத்தியின் மூலங்களும் உருவாகின்றன. அதே இரவில் இங்கே குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் வளைந்து நெளிந்து கிடப்பதெல்லாம் பாம்புகளாகத் தெரியும். பல சமயங்களில் பாம்புகளை அடித்திருக்கிறார்கள். சேடான்களை தேள்களையும், நட்டுவாக்காலிகளையும் அன்றாடம் அடிப்பார்கள். ஒரு தடவை ஸ்டேஷன் அறையில் நட்டநடுவில் ஒரு பாம்பு வந்து படுத்துக் கொண்டது. காட்டின் நடுவில் ஒளி வெள்ளமாகத் தெரிகிற ஸ்டேஷன் அனைத்துப் பூச்சிகளையும், பூச்சிகளைத் தின்பதற்காகப் பாம்புகளையும், பூரான்களையும், தேள்களையும் கண்சிமிட்டி அழைக்கிறது. நரிகளின் ஊளைச்சத்தம் விட்டு விட்டு ஒரு கணத்தில் மிக அருகிலும், மறுகணத்தில் மிகத் தொலைவிலும் கேட்கும். மற்றபடி வேறு எந்தத் தொந்தரவும் கிடையாது. எந்த வண்டியும் நின்று செல்வதற்கான திட்டம் இல்லாததால் பயணிகள் யாரும் வருவதும் கிடையாது. மிக அருகிலுள்ள கிராமமே சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில்தான்.

ஏகாந்தம். ஏகாந்தத்தின் சுருதி கூடி ஒரு நரம்பிசையின் லயத்தைப்போல மெல்லிய அதிர்வு அந்தச் சூழலில் இருக்கும். அங்கே பேசப்படும் வார்த்தைகள் மிகக் குறைவு. அந்தக் குறைவான வார்த்தைகள் கூட அந்த லயத்தைப் போல இசைவுடன் வெளிவரும். கிழக்கிலிருந்து பரிசுத்தமான குருமலைக் காற்று. கணவாய் வழியாக வரும்போது சற்று வேகமாகவும், குளிர்ந்தும் வீசும். எல்லோரும் இந்த ஸ்டேஷனை தண்டனைக்குரிய ஸ்டேஷனாக நினைத்து பயந்தபோது இந்த ஏகாந்தத்துக்காகவே விரும்பிக் கேட்டு மாறுதல் வாங்கிக்கொண்டு வந்தவர் நாராயணன்.

நாராயணன் இருளின் சாம்பல் நிற வெளியை உற்றுப் பார்த்தார். திரும்பி ஸ்டேஷன் கட்டடத்தைப் பார்த்தார். பெரிய வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை. அந்தக் காட்டிலிருந்த எத்தனையோ புதர்க்காடுகளில் இந்த ஸ்டேஷனும் ஒன்று. காட்டின் புதர்களில் வந்து அமர்ந்து செல்லும் எத்தனையோ தவிட்டுக் குருவிகளைப்போல அவரும் இந்தப் புதரில் அமர்ந்துகொண்டு காட்டைப் பார்க்கிறார். அவ்வளவுதான்.

யார் கண்டது இந்தக் காட்டில் என்னென்ன அதிசயங்களும், அற்புதங்களும், பயங்கரங்களும் இருக்கின்றனவோ. நட்சத்திரங்களின் ஒளி எந்த இடையூறுமின்றி இந்தக் காட்டின் மீது இறங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு வேளை அந்த ஒளியின் வழியாக சிறுவயதில் அவர் படித்த கதைகளில் உலவிய தேவதைகள் வந்து காட்டின் நடுவில் இறங்கியிருக்கலாம். அங்கேயுள்ள காட்டு முயல்களோடு விளையாடவும் செய்யலாம். அவர் உதடுகளில் புன்முறுவல் அரும்பியது.

மின்சாரம் உடனடியாக வருவதைப்போல தெரியவில்லை. வருவதாக இருந்தால் இதற்குள் வந்திருக்கவேண்டும். ஒரு சிகரெட் பிடிக்கலாம். அட அதற்கு முன்னால் ஒரு நல்ல தேநீர் குடித்தால் எப்படியிருக்கும். இப்படி நினைத்தவுடனேயே உற்சாகம் பிறந்தது. நடராஜனைக் கூப்பிட்டார். அவர்தூக்கக் கலக்கத்தோடே எழுந்து வந்தார்.

“ஒரு டீ போடுங்க நடராஜன்…”

“கொல்லம் பிளாக்காயிருச்சா… சார்…”

“ஆயிரும்… இன்னும் கொஞ்ச நேரத்தில் பிளாக் ஆயிரும்…”

எப்போதும் பாலும், சர்க்கரையும் தேயிலையும் ஸ்டேஷனில் ஸ்டாக் இருக்கும். எது குறைந்தாலும் டூட்டிக்கு வருகிற ஸ்டேஷன் மாஸ்டர்கள், பாயிண்ட்ஸ்மேன்கள் வாங்கிக் கொண்டுவந்துவிடுவார்கள். நடராஜன் கொட்டாவி விட்டுக்கொண்டே ஸ்டவ் பற்ற வைக்கப் போனார்.

வெளியில் கிடந்த பெஞ்சில் உட்கார்ந்தார் நாராயணன். திடீரென மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. அதுவரை இருந்த அமைதியில் புயல் வீசியதுபோல, மனசில் குழப்பம். திடீர் திடீரென இப்படி நிகழ்ந்தது. எல்லாம் நேற்றிலிருந்துதான். நண்பர் பாலுவிடமிருந்து வாங்கியிருந்த ‘நள்ளிரவில் சுதந்திரம்’ படிக்கத் தொடங்கிய பின்னர்தான். மனம் இளகி நெகிழ்ந்தது. கண்களில் அடிக்கடி கண்ணீர் ததும்பி நின்றது. அந்த நேரத்தில் யாராவது தொட்டால் கூட சரசரவென இறங்கிவிடும். அடிக்கடி, “சே… என்ன வாழ்க்கை” என்று கோபப்பட்டார். ஆத்திரப்பட்டார். வருத்தப்பட்டார். புத்தகத்தை மூடிவிட்டு அப்படியே எதிரே வெறித்தபடி உட்கார்ந்துவிடுவார். திடுமென உணர்வு வந்தது போல மீண்டும் படிக்கத் தொடங்குவார். இப்படியெல்லாம் நடக்குமா நடந்திருக்குமா என்ற சந்தேகம் தோன்றிக் கொண்டேயிருந்தது. நடந்திருக்கிறது என்ற ஆதாரபூர்வமான உண்மை பளார் பளாரென்று முகத்திலறைந்தது. இந்த இரவின் அமைதியும் குளிர்மையும்தான் அவருடைய கொந்தளிப்பை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தது. இப்போதும் கூட இருளுக்குள் கூர்ந்து பார்த்து எதற்கோ விடை தேடிக் கொண்டிருந்தார். மனித மனத்தின் மர்மங்களுக்கான திறவுகோல் இந்தக் காட்டிற்குள்ளேயே கூட இருக்கலாம். அவரை அறியாமலேயே அவர் தன் சட்டைப் பையிலிருந்த வில்ஸ் பில்டர் பாக்கெட்டிலிருந்து சிகரெட்டை எடுத்து உதடுகளில் பொருத்தியபோது,

“சார் இந்தாங்க… டீ… ரொம்பச்சூடா இருக்கு… பாத்துக் குடிங்க…” என்று சொல்லிக் கொடுத்தார் நடராஜன்.

நாராயணனுக்கு தம்ளர் சூட்டைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வாங்கி அப்படியே பெஞ்சின் மீது வைத்து விட்டு நிமிர்ந்தவருக்கு திக்கென்றது.

அவருக்கெதிரே ஒரு ஆள் நின்று கொண்டிருந்தான். இருளே உருவமாகி வந்ததைப் போல எதிரில் நின்று கையை நீட்டிக் கொண்டிருந்தான். நாராயணன் உண்மையில் பதறிப்போனார். வாய் தன்னையறியாமலே,

“நடராஜன்… நடராஜன்…”

என்று பதட்டத்துடன் அழைத்தது. டீ போட்ட பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்த நடராஜன், அவர் குரலில் இருந்த பதட்டத்தை உணர்ந்தவர்போல ஒரு கம்பை எடுத்துக்கொண்டு ஓடி வந்தார். ஒரு வேளை பாம்பைப் பார்த்திருப்பார். அதுதான் கூப்பிடுகிறார் என்று நினைத்துக் கொண்டு வந்தவருக்கு, ஸ்டேஷன்மாஸ்டர் முன்னால் ஒரு ஆள் நிற்பதைப் பார்த்தவுடன் அவரும் அதிர்ந்து போனார். கையில் கம்பு இருந்த தைரியத்தில்,

“யாருய்யா… நீ…”

என்று கத்தினார். எதிரே நின்றவன் பதில் பேசவில்லை. நீட்டிய கையையும் மடக்கவில்லை. காட்டிலிருந்து கிளம்பி வந்த சித்தர் மாதிரி தலைமுடி அடர்ந்து சடைபிடித்து, நெஞ்சு வரை வளர்ந்த தாடியும், கிழிந்த பேண்ட்டும் போட்டிருந்தான். இருளில் முகம் சரியாகத் தெரியவில்லை. ஆனால் படு கிழம். வற்றி உலர்ந்த சிவந்த திரேகம் அந்த இருளிலும் தெளிவாகத் தெரிந்தது. எண்பது எண்பத்தைந்து வயதிருக்கலாம். நிதானித்த நாராயணனும் உரத்த குரலில்,

“யாருய்யா நீ… எங்கே போகணும்…”

என்று கேட்டார். அதற்கும் அந்த ஆள் பதில் சொல்லவில்லை. எப்படி இவ்வளவு நேரம் நம் கண்களுக்குத் தட்டுப்படவில்லை. அடிக்கடி இந்த மாதிரி மனநிலை பிறழ்ந்தவர்களை ஸ்டேஷனில் பார்க்கலாம். தண்டவாளங்கள் வழியே இரவில் எந்த பயமுமில்லாமல் நடந்து போய்க் கொண்டிருப்பார்கள். நாராயணன் நடராஜனிடம் திரும்பி,

“டீ இருக்கா நடராஜன்…”

“இருக்கு சார்…”

“கொஞ்சம் கொடு இவருக்கு…”

நடராஜன் தண்டவாளங்களுக்கு அருகில் கிடந்த ஒரு பிளாஸ்டிக் டம்ளரை எடுத்து வந்து டீ ஊற்றிக் கொடுத்தார். அந்தக் கிழவர் அதை வாங்கிக்கொண்டு அருகிலிருந்த வேப்பமரத்தடியில் உட்கார்ந்தார். நாராயணன், அவரைப் பார்த்தபடியே பெஞ்சில் உட்கார்ந்து டீயைக் குடித்தார். நடராஜனும் நாராயணனுக்கு அருகில் நின்றுகொண்டு டீயை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தார்.

“இவனை விரட்டி விட்ரணுமப்பா… இவம்பாட்டுக்கு இருந்தமானிக்கி ஏதாச்சும் டிரெயினில் விழுந்தான்னா… அப்புறம் பெறக்கிப் போட்டு நாமதான் காவல் காக்கணும்…”

என்று எல்லோரும் சொல்கிற வசனத்தை நாராயணனும் சொன்னார். நடராஜன் தலையாட்டினார். சட்டென விளக்குகள் எரியவும், அதற்கெனவே காத்திருந்ததுபோல பக்கத்து ஸ்டேஷனிலிருந்து அழைப்பு வரவும் சரியாக இருந்தது. நாராயணன் உள்ளே போனார்.

கொல்லம் வண்டி வருவதற்கு அனுமதி கொடுத்துவிட்டு சிகரெட்டைப் பற்ற வைத்தார். மேஜையின் மீது ‘நள்ளிரவில் சுதந்திரம்’ விரிந்து கிடந்தது. மின் விசிறியின் காற்றுக்கும் வெளியிலிருந்து வீசும் காற்றுக்கும் பக்கங்கள் மாறி மாறி புரண்டு கொண்டேயிருந்தன.

அவர் சிகரெட்டை இழுத்து புகையை நெஞ்சு நிறைய நிறைத்து வெளியிட்டார். குடித்த டீக்கும் அந்தக் குளிருக்கும் இதமாக இருந்தது. வெளியில் வந்ததும் இயல்பாகத் திரும்பி அந்த வேப்பமரத்தைப் பார்த்தார். அங்கே அந்தக் கிழவர் இல்லை. மறுபடியும் பதட்டம் தொற்றிக்கொண்டது.

“நடராஜன், இந்த ஆளை எங்கப்பா…”

“தெரியலையே சார்…”

என்று பீடி புகைப்பதற்காக பின்பக்கம் போயிருந்த நடராஜன் சொல்லிக்கொண்டே வந்தார்.

“என்னப்பா தெரியலன்கிறே… பாரு… டார்ச் எடுத்துக்கிட்டு சுத்திகித்திப் பாரு…”

“சரி சார்…”

என்று சொல்லிய நடராஜன் டார்ச்சை எடுக்கப் போனார். நாராயணன் நடந்து சென்று தண்டவாளங்களுக்கருகில் சென்று இரண்டு பக்கங்களிலும் திரும்பித் திரும்பிப் பார்த்தார். எதுவும் தெரியவில்லை. நடராஜன் டார்ச்சை எடுத்துக்கொண்டு ஸ்டேஷனைச் சுற்றிலும் தேடினார்.

இதற்குள் கொல்லம் டிரெயின் அடுத்த ஸ்டேஷனை விட்டு தன் பிரயாணத்தைத் தொடங்கிவிட்டது. பக்கத்து ஸ்டேஷன் மாஸ்டர் கூப்பிட்டுச் சொன்னார். உடனே அந்த வண்டியை அடுத்திருந்த ஸ்டேஷனுக்கு அனுப்பத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட நாராயணன், அவற்றை முறையாக செய்து கொல்லம் வண்டியை அனுப்பிய பிறகு மீண்டும் அவர் கவனம் மாறியது. நடராஜன் எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்துவிட்டு அவனைக் காணவில்லை என்றார். மாயமாக வந்தது போலவே மறைந்துவிட்டார் போல. மேஜையிலிருந்த வரலாற்றின் பக்கங்கள் நாராயணனை அழைத்தன. அவர் மறுபடியும் விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தார்.

சற்று நேரத்திலேயே எழுத்துகள் சேர்ந்து குழம்பி ஒரு சுழலாக மாறியது. அவர் அந்தச் சுழலுக்கு வெளியில் நின்றுகொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனை பல வண்டிகள் கடந்து சென்றன. எப்போது அந்தச் சுழலில் விழுந்தார் என்று அவருக்கே தெரியவில்லை. இப்போது சுழலே மாயமாகி மறைந்து விட்டது. அந்த மறைந்த சுழலின் வெளியில் நாராயணன் நடந்து கொண்டிருந்தார். வட்டவட்ட எழுத்துகளின் சுழல் பாதை வழியே காலத்தின் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தார்.

இப்போது பரபரப்பான ஒரு ரயில்வே பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார். பிளாட்பாரம் முழுவதும் அவ்வளவு கூட்டம். அவருடைய சர்வீஸில் இத்தனை கூட்டத்தை அவர் பார்த்ததேயில்லை. அவர் சிரமப்பட்டு கூட்டத்தை விலக்கி ஸ்டேஷன் அறைக்குள் நுழைந்தார். அங்கே அவருடைய ரிலீவர் புறப்படத் தயாராக இருந்தார். அவர் அறையை ஒரு முறை சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு,

“சானி… பி… கேர்புள்… நிலைமை நேற்றிரவிலிருந்து கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது… கவனமாக இருங்கள்… எதிலும் தலையிட வேண்டாம்… ஓகே…”

என்று எச்சரித்தார். நாராயணனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஏன் என்னை சானி என்று அழைக்கிறார்? என் பெயர் நாராயணன் அல்லவா. அவருடைய யூனிபார்மிலுள்ள நேம் பேட்ஜை பார்த்தார். கே. சானிசிங் என்றிருந்தது. பதிவேடுகளிலும், அனைத்து பைல்களிலும் கே. சானிசிங் என்றே இருந்தது. அப்போது ஒருவர் ஸ்டேஷன் வாசலில் நின்றுகொண்டு,

“எக்ஸ்கியூஸ்மீ… மிஸ்டர்… சானிசிங்… வென் வில் த டிரெயின்… பிரம் லாகூர் அரைவ் கியர்?”

“சூன்… வெரி… சூன்…”

என்ற சானிசிங் திரும்பி பிளாக் இன்ஸ்ட்ருமென்டைப் பார்த்தார். லாகூரிலிருந்து வருகிற வண்டிக்கு அனுமதி ஏற்கெனவே கொடுக்கப்பட்டிருந்ததை அவருடைய ரிலீவர் சொல்லிவிட்டுப் போயிருந்தார். வண்டிக்கு முதல்மணி அடிப்பதற்காக பாயிண்ட்ஸ்மேன் அன்வர் பாட்சாவைத் தேடினார். அவனைக் காணவில்லை.

“அன்வர்… அன்வர்…”

என்று உரக்கக் கூவினார். அன்வர் ஸ்டேஷனுக்குள்ளேயேயிருந்த ஸ்டோர் ரூமிலிருந்து வெளியில் வந்தான். சானிசிங் ஆச்சரியத்துடன்,

“இங்கே என்ன பண்றே… போ… போய் வண்டிக்கு மணியடி…”

“சார்… அமர்சிங் சார்தான் இந்தக் கூட்டமெல்லாம் போகிற வரைக்கும் நீ ஸ்டோர் ரூமிலேயே இருன்னு சொன்னார்… எல்லா இடத்திலும் கலவரமா இருக்கு… அதனால பத்திரமா இருன்னு சொன்னார் சார்…”

என்று பரிதாபமாகச் சொன்னான் அன்வர். அவன் முகம் வெளுத்திருந்தது, ஆனால் சானிசிங் அதையெல்லாம் கவனிக்கவில்லை.

“யாருய்யா… மடத்தனமா பேசற… இங்க வந்து யாராச்சும் ஏதாவது செய்ய முடியுமா… அதெல்லாம் ஊருக்குள்ளே… இது கவர்ன்மெண்ட் ஆபீஸ்… இன்னும் ரயில்வேயெல்லாம் பிரிட்டிஷ் கண்ட்ரோல்லதான் இருக்கு… ஒண்ணும் பயப்படாதே… நான் இருக்கேன்ல…”

என்றார் சானிசிங். வாயினால் சொல்லிவிட்டாலும் அவருக்குள்ளும் ஒரு பதட்டம் இருக்கத்தான் செய்தது. காலையிலிருந்தே அவர் கேள்விப்படுகிற செய்திகள் எதுவுமே நல்லதாக இல்லை. அரசியலின் சூதில் மக்கள் எல்லோரும் வெட்டுப்பட்டுக் கொண்டிருந்தனர். ஒருவனுக்கோ, ஒரு கூட்டத்துக்கோ இல்லை ஒரு நாட்டிற்கே பைத்தியம் பிடித்துவிட்டால் யார்தான் என்ன செய்ய முடியும்? இதுவரை அவர் கேட்ட செய்திகள் எல்லாம் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களைப் பற்றியே இருந்தன. கூட்டம் கூட்டமாக ஆடுமாடுகளை கசாப்புக் கடைகளில் வெட்டுவதைப்போல வெறி பிடித்த கூட்டம் வெட்டி எறிந்து கொண்டிருந்தது. இதுவரையிலும் சகோதரர்களாக இருந்தவர்கள் எப்படி இப்படி குரூரமாக மாறிப்போனார்கள்? மனித மனதின் ஆழ் இருளுக்குள் இருப்பதுதான் என்ன? ஒரு வேளை அன்வர் இன்றைக்கு டூட்டிக்கு வராமல் இருந்திருக்கலாமோ… ச்சே… சே… அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. அரசு அலுவலகங்களிலோ அதிலும் குறிப்பாக எந்த ரயில்வே ஸ்டேஷன்களிலோ ஏதும் நடந்ததாக இதுவரை செய்தி இல்லையே என்று மனதைத் தேற்றிக்கொண்ட சானிசிங் அடுத்த வேலையைப் பார்க்கப் போனார்.

ஏற்கெனவே பயந்து போயிருந்த அன்வர்பாட்சா குழப்பத்துடன் போய் மணியடித்தான். மணியடித்ததுதான் தாமதம் உடனே டிரெயின் வந்து முன்னால் நிற்பதைப்போல ஒரே களேபரம்… எல்லோரும் பிளாட்பாரத்தின் ஓரத்திற்கு வந்து முட்டிக்கொண்டு நின்றனர். ஒருவரையொருவர் வைது கொண்டும் தள்ளிக் கொண்டும், நெருக்கியடித்துக் கொண்டும் நின்றனர். மூட்டை முடிச்சுகளையும் பிள்ளைகுட்டிகளையும் இழுத்துக்கொண்டு முண்டியடித்தனர்.

இன்று காலையில்தான் இந்தியா பாகிஸ்தான் எல்லைக் கோடுகள் பற்றிய அறிவிப்பு வானொலியில் வந்தது. அதற்கு முன்பே ஏராளமான வதந்திகளுக்கு கத்திகளும், வாள்களும், நாட்டுத் துப்பாக்கிகளும் முளைத்து அங்கங்கே கலவரங்கள் தொடங்கிவிட்டன. சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்காக டில்லி வந்திருந்த லட்சோபலட்ச மக்களும் கொஞ்சம் கொஞ்சமாக ஊர்திரும்பிக் கொண்டிருந்தனர். லாகூரிலிருந்து அமிர்தசரஸ் வரையுள்ள கிராமங்களிலிருந்து வந்த கூட்டமும், லாகூரையும் கராச்சியையும் பூர்விகமாகக் கொண்ட கூட்டமும் திரண்டுவிட்டது. எதிரும் புதிருமாக மக்களின் மாபெரும் குடிபெயர்வு நடந்து கொண்டிருந்தது.

ஸ்டேஷன் மாஸ்டர் சானிசிங்கின் முகத்தில் மெல்ல குழப்பம் கூடியது, லேசான கலவரமும். அவர் முகத்தைப் பார்த்ததும், அன்வர் கேட்டான்,

“என்ன சார்… என்ன?”

“இல்ல… அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ்ஸில் ஆளுக யாரும் இருக்கிற மாதிரியே தெரியலியாம்… வெறும் வண்டி வர்ற மாதிரி தெரியுதுன்னு… பக்கத்து ஸ்டேஷன்ல செல்றாங்க… அதான் ஒண்ணும் புரியல…”

அன்வர் எதுவும் பதில் பேசவில்லை. ஆனால் அவன் முகம் கறுத்துப் போனது.

சில நிமிடங்களில் டிரெயின் வருகிற சத்தம் கேட்டது. ஒரு அவலமான அலறலோடு பிளாட்பாரத்திற்குள் நுழைந்தது. வண்டி வரும்வரை முண்டியடித்துக் கொண்டிருந்த கூட்டம், வண்டி வந்ததும் ரயிலின் அருகில் கூட செல்லவில்லை. பெருங்கூப்பாடு போட்டு சிதறி ஓடியது. கூச்சல்… குழப்பம். பக்கத்து ஸ்டேஷனில் சொல்லியது சரிதான். வந்து நின்ற வண்டியிலிருந்து ஒருவர் கூட இறங்கவில்லை.

சானிசிங்கிற்கு ஆச்சரியமாக இருந்தது. ஆள் இருக்கிற அரவமே தெரியவில்லை. ஆனால் திடீரென ஏதோ ஒரு வாடை பிளாட்பாரம் முழுவதும் பரவியது. அப்போதுதான் சானிசிங் கவனித்தார். ஒவ்வொரு பெட்டியின் வாசலிலிருந்தும் ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. எதிரே இருந்த பெட்டியின் கதவைத் தள்ளித் திறந்தார். உள்ளே பிணங்கள்… பிணங்கள்… ரத்தம் ஓடைமாதிரி ஓடிக் கொண்டிருந்தது. எல்லாப் பெட்டிகளிலும் இதேதான். அந்தக் கோரக் காட்சி… அந்த வாடை… சானி சிங்கிற்கு தலை சுற்றி மயக்கம் வரும் போல இருந்தது. ஓங்கரித்துக் கொண்டு வந்தது. என்ன செய்வதென்றே ஒன்றும் புரியவில்லை.

ஆனால் சில நிமிடங்களிலேயே சுதாரித்துக் கொண்டார். சுற்றுமுற்றும் பார்த்தார். பிளாட்பாரத்தில் யாரும் இல்லை. ஒன்றிரண்டு சீக்கிய இளைஞர்கள் மட்டும் தயக்கத்துடன் தூரத்தில் நின்று கொண்டிருந்தார்கள். சானிசிங் மிகுந்த சிரமத்துடன் ஒரு பெட்டியில் ஏறினார். உள்ளே கால் வைக்கவே இடமில்லை. இறங்கி ஜன்னல் வழியாகக் கூவினார்,

“யாராவது உயிரோட இருக்கீங்களா? நீங்க பத்திரமான இடத்துக்கு வந்தாச்சு.. யாராவது உயிரோட இருக்கீங்களா?”

என்று கூப்பாடு போட்டுக்கொண்டே மேலும் கீழும் ஓடினார். அப்போது அவரைப் பார்க்க ஒரு பைத்தியக்காரனைப் போல தெரிந்தார். சற்று நேரத்தில் இலேசான முனகல்கள் சில பெட்டிகளிலிருந்து கேட்கத் தொடங்கின. அவர் தூரத்தில் தயங்கி நின்ற சீக்கிய இளைஞர்களை அழைத்து குற்றுயிராய் கிடந்தவர்களை அப்புறப்படுத்தி ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகச் சொன்னார்.

எல்லாம் முடிந்தபோது அவரே பிணத்தைப்போல வெளுத்துப் போனார். ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று அவருக்குப் புரியவில்லை. ஒரு கருத்துக்காகவா நம்பிக்கைக்காகவா இத்தனை கொலைகள்; நடைமுறையில் இல்லாத, செயல்படுத்த முடியாத கருதுகோள்களும், யூகங்களும், புனைவுகளும், கற்பனைகளும் மனிதர்களை இப்படி கொடிய காட்டுமிராண்டிகளாக்கிவிடுமா? இல்லை, மனிதர்களுக்குள் எப்போதும் ஒரு காட்டுமிராண்டி இருந்து கொண்டேயிருக்கிறானோ, சரியான சந்தர்ப்பங்கள் அமையும்போது அவன் அந்தக் கொடூரமுகத்தைக் காட்டி விடுகிறானோ, மதத்தின் பெயராலோ, அரசியலின் பெயராலோ தூண்டி விடப்படுகிற அந்த மிருகத்தை அடக்க முடியாமல் எல்லோரும் அதற்குப் பலியாகி விடுகிற கொடுமையை, என்ன சொல்ல… சானிசிங் கண்களை மூடி தலையை கைகளால் தாங்கிக்கொண்டு யோசித்துக் கொண்டிருந்தார். தலை வலித்தது.

அப்போது வெளியே தடதடவென சத்தம் கேட்டது. அவர் நிமிர்ந்து பார்த்தார். ஒரு பத்திருபது சீக்கிய இளைஞர்கள் கையில் கிர்பானுடன் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள்,

“ஸ்ரீசத் அகால்… பழிக்குப் பழி… ரத்தத்திற்கு ரத்தம்…” என்று கூவினார்கள். அவர் ஒன்றும் புரியாமல் விழித்தார்.

“கூப்பிடுங்க… அந்த தாயோளி மவனை…”

“யாரை…”

“அந்த அன்வர் தாயோளியைத்தான்…”

அப்போதுதான் அவருக்கு ஞாபகம் வந்தது. இந்தக் குழப்பத்தில் அவர் அவனை மறந்தேவிட்டார். டிரெயின் வந்ததிலிருந்தே அவர் அவனைப் பார்க்கவில்லை. எங்கேயாவது ஓடிப்போயிருப்பான் என்று நினைத்தார். அதனால் தைரியமாய்,

“அவன் இங்க இல்லை…” என்றார்.

கூட்டத்திலிருந்த ஒருவன், “இல்ல… உள்ளேதான் இருக்கான்… அவனை காப்பாத்தணும்னு நெனச்சே உன் உயிர் இருக்காது…”

“அவன் இங்க இல்ல… எங்கேயோ ஓடிப் போயிட்டான்…”

உடனே கும்பலிலிருந்து ஒரு நாலுபேர் உள்ளே நுழைந்தார்கள்.

“நாங்க பார்க்கிறோம்…”

அவர் வாயைத் திறப்பதற்குள் ஸ்டேஷனின் ஒவ்வொரு அறையாகச் சென்று தேட ஆரம்பித்தார்கள். ஸ்டோர் ரூமிலிருந்து அன்வர்பாட்சாவை தரதரவென்று இழுத்துக்கொண்டு வந்தார்கள். அவன் கதறிக்கொண்டே வந்தான்,

“அண்ணே… விட்ருங்கண்ணே… விட்ருங்க…”

அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சானிசிங் உடனே அந்தக் கும்பலில் தலைவன் மாதிரி இருந்தவனிடம்,

“அவனை விட்ருங்க… ப்ளீஸ்… அவன் சென்ட்ரல் கவர்ண்மெண்ட் எம்ப்ளாயி… ரயில்வே எம்ப்ளாயி… விட்ருங்க… ப்ளீஸ்… இல்லைன்னா… போலிஸை கூப்பிட வேண்டியிருக்கும்…”

என்று சொன்னார். அவர்கள் கொடூரமாகச் சிரித்தார்கள்.

“கவர்ண்மெண்ட்… எங்கேருக்கு கவர்ண்மெண்ட்? ரயில்ல அத்தனை பேரையும் வெட்டிக் கொன்னாங்களே… அப்ப எங்க போச்சு கவர்ண்மெண்ட்…”

என்று கத்தினான். பின்னால் இருந்தவர்களும் வெறிபிடித்தவர்களைப்போல கூச்சலிட்டார்கள். அன்வர் அப்போதே செத்தவனைப்போல ஆகிவிட்டான். சானிசிங்கை ஏறிட்டுப் பார்த்தான். அவன் பார்வையைத் தாங்க முடியவில்லை. அவர்களிடம் மறுபடியும் அவர் கெஞ்சினார். கத்தினார். கூப்பாடு போட்டார். மிரட்டிப் பார்த்தார். இழுபறியாக இருந்த நிலைமையில் கும்பலிலிருந்த ஒருவன் அவரது கழுத்தில் கிர்பானை வைத்துவிட்டான். உடனே மற்றொரு சிங் வந்து தடுத்தான். அவனை பின்னுக்கு இழுத்தான்.

அன்வரை ஸ்டேஷன் அறைக்கு வெளியே இழுத்துச் சென்றனர். மணியடிக்கிற இடத்திற்கு அருகில் அவனை மண்டியிட வைத்தனர். அவன் தலையை இங்கேயே பிளாட்பாரத்தில் தொங்கவிட வேண்டும் என்று ஒருவன் கத்தினான்.

சானிசிங் அந்தக் கும்பலிலிருந்த ஒவ்வொருவரிடமும் சென்று கெஞ்சிப்பார்த்தார். ஸ்டேஷனுக்குள் ஓடிச்சென்று பக்கத்து ஸ்டேஷனை அழைத்தார். பதிலில்லை. தொலைபேசியை எடுத்தார் எந்தச் சத்தமுமின்றி அது ஏற்கனவே இறந்து போய் விட்டிருந்தது. கடைசியில் வேகமாக வெளியே வந்தார். அந்தக் கும்பலிடம் சென்று,

“எதுவாக இருந்தாலும் இங்கே வேண்டாம்… ப்ளீஸ்…”

என்று கையெடுத்துக் கும்பிட்டார். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவர் முகத்தைப் பார்த்தவுடன் என்ன நினைத்தார்களோ அன்வரை இழுத்துக்கொண்டு ஸ்டேஷனுக்கு வெளியே போய்விட்டார்கள். சில விநாடிகளில் அன்வரின் அவலக்குரல் எழுந்து அடங்கியது. சானிசிங்கிற்குத் தலைசுற்றியது. நாற்காலியில் உட்கார்ந்தவுடன் மயங்கி விட்டார்.

மயக்கத்திலேயே என்னென்னவோ காட்சிகள் கண்முன்னே தெரிந்தன. இரண்டு துண்டுகளாய் கிடந்த குழந்தைகள், தலையில்லாத முண்டங்கள், உடலில்லாமல் தனியே கிடந்த தலைகள், துண்டுகளாய் கை கால்கள் என்று என்னவெல்லாமோ கண்முன்னே சுற்றின. அவர் ஜன்னி வந்தவர்போல பிதற்ற ஆரம்பித்தார். யாரையோ கூப்பிட நினைத்தார். அன்வரையா… அன்வர்… அன்வர்… அ… அ… ஆ… உ… வாயைத் திறக்க முடிகிறது.

ஆனால் குரல் எழவில்லை. கண்களை மிகுந்த பிரயத்தனத்துடன் திறந்தார்.

“என்ன சார்… இப்படி புலம்பறீங்க…”

என்று நடராஜன் உசுப்பிக் கொண்டிருந்தான். நாராயணன் கண் விழித்தார். தலையைத் தூக்கி மலங்க மலங்கப் பார்த்தார். எங்கேயிருக்கிறோம். சானிசிங்… எங்கே… வெளியே பொழுது விடிந்துவிட்டது. அவரையே பார்த்துக் கொண்டிருந்த நடராஜனிடம்,

“ரொம்ப புலம்பினேனா…”

என்று கேட்டார்.

“இல்ல சார்… அழுகிற மாதிரி சத்தம் கேட்டுச்சி… அதான் ஏதோ கெட்ட கனவு போலன்னு நெனச்சி எழுப்பி விட்டேன்… இந்தாங்க சார்… டீ… சூடாச் சாப்பிடுங்க…”

என்று சொல்லிக்கொண்டே டீ தம்ளரை அவரிடம் கொடுத்தான். நாராயணன் அதைக் கையில் வாங்கிக்கொண்டு எழுந்தார். மேஜையில் இன்னமும் ‘நள்ளிரவில் சுதந்திரம்’ விரிந்தபடியே கிடந்தது. அதைப் பார்த்தவுடன் உடலெங்கும் ஒரு சிலிர்ப்பு ஓடியது. வெளியே வந்தார். பறவைகளின் உற்சாகமான குரலிசை. இரவில் கருமை கொண்டிருந்த காடு இப்போது பளீரென்று பச்சைப் பசேலென்றிருந்தது. வானத்தின் நீலத்தோடு சேர்ந்து சிரித்தது. குஞ்சு மேகங்களின் மீது சூரியனின் தங்கநிற ஒளி, சட்டமிட்டு அழகுபடுத்தியது. ஒரு மிடறு குடித்துவிட்டு திரும்பினார் நாராயணன்.

தனக்கு எதிரில் அந்த ஆள் நின்று கொண்டிருந்தார். கையில் பிளாஸ்டிக் டம்ளரை நீட்டிக்கொண்டு நேற்றிரவு இருந்த பாவனையில் நின்று கொண்டிருந்தார். நரைத்த தாடியும் சடைபிடித்த தலையுடன் வெறித்த ஆனால் உறுதியான கண்களுடன் இருந்தார். இரவில் எங்கே போயிருந்தார்… இப்போது அந்தக் கிழவர் எப்படி வந்தார்? எதுவும் புரியவில்லை.

“நடராஜா உன் பிரண்டு வந்திருக்கார் பாரு… டீ… வேணுமாப்பா…”

என்று கேலியாகச் சொன்னார் நாராயணன். திரும்பி அந்தக் கிழவரைப் பார்த்து,

“உம் பேரென்ன? பேரு… பேரு…”

என்று கேட்டார். அதற்குப் பதிலில்லாமல் போகவே, இன்னொரு மடக்கு டீயை உறிஞ்சிக்கொண்டே அவருக்குத் தெரிந்த அரைகுறை இந்தியில் கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்தவர்,

“தூ.. நாம் கியாஹை?”

என்று கேட்டார். அந்தக் கிழவரின் உதடுகள் லேசாய் அசைந்தன.

“சானிசிங்… ஸ்டேஷன் மாஸ்டர்… அமிர்தசரஸ்…”

 

 

 

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top