குடை

0
(0)

‘கட்டக் …கடக்…கட்டக்…கடக்…’

கலவை மெஷின் சீராக ஒடிக்கொண்டிருந்தது. குடம் கவிழ்ந்து கலவை பொலபொலவென்று தரையில் கொட்டியது.

“முனுசாமி, ஜல்தியா அள்ளிவிடுப்பா. வானம் மூடுது. மழை வந்தாலும் வரும். “பொன்னுசாமி மேஸ்திரி குரல் பின்னால் கேட்டது.

முனுசாமி குனிந்து கலவையை அள்ளி காத்திருந்த சட்டிகளில் கொட்டினான். கொட்டிய கலவை அத்தனையையும் அள்ளி விட்டுவிட்டு நிமிர்ந்து வானம் பார்த்தான்.

மழைக்கான அடையாளங்கள் நிறைய இருந்தன. அடுக்கி வைத்திருந்த மூட்டைகளைப் பார்த்தான். ஆறு மூட்டைகள்தான் இருந்தன. அரை மணி நேரத்தில் முடிந்து விடும். அதற்குள் மழை வராது.

கோவிந்தன் அடுத்த லோடைக் கவிழ்த்தான். மேஸ்திரி சாரத்தில் நின்று கொண்டிருந்தவர்களை விரட்டினான். புகையிலை போட சட்டியை நிறுத்திய அம்ஸாவைத் திட்டினான். அம்ஸா உதட்டைச் சுழித்து தோள்களைக் குலுக்கினாள். மேஸ்திரியின் சப்தம் வேகத்தைக் கூட்டியது.

அரை மணி நேரத்தில் கடைசி லோடு கவிழ்க்கப் பட்டது. சிதறிக் கிடந்த கலவையை வழித்து வாரி விட்டான் முனுசாமி. கடைசி சட்டி நகர்ந்ததும், மெஷினில் சாய்ந்து பீடி பற்ற வைத்துக் கொண்டான்.

“சட்டியைக் கழுவி வச்சிட்டு வரிசைக்கு வாங்க. சுருக்கா கூலியை வாங்கிட்டு மழைக்கு முன்னாடி போயிடலாம். “பொன்னுசாமி தாவித் தாவி சாரத்தில் ஏறி மேலே போனான்.

சனிக்கிழமை. கூலிநாள். முனுசாமி பீடியை எறிந்து விட்டு கைகால் கழுவும் போது முதுகில் முதல் தூறல் விழுந்தது .ஒன்றிரண்டாக விழத் தொடங்கிய தூறல் சிறிது நேரத்தில் பலமாகி விட்டது. கூலி வாங்க நின்ற கூட்டம் கலைந்து போன வாரம் கூரை போட்டிருந்த அடுத்த கட்டிடத்திற்குள் நுழைந்தது.

முனுசாமியும் உள்ளே போனான். பிரிக்கப்படாத முட்டுகளுக்கு நடுவே நுழைந்து தோதான இடம் பார்த்து நின்றான். வெளியே தூறல் பலமாக விழுந்தது. அம்ஸாவும் கிட்டப்பாவும் உரக்கச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். கோவிந்தன் மழையில் நனைந்தவாறே மெஷினை தார்பாய் போட்டு மூடிக் கொண்டிருந்தான்.

மேஸ்திரி முனுசாமிக்கு எதிரில் வந்து நின்றார். நோட்டைப் பார்த்து பணத்தை எண்ணிக் கொடுத்தார். இருநூற்று எண்பது.

வெளியே தூறல் நின்று போயிருந்தது. கூட்டம் வெளியேறி வானம் பார்த்தது. மீண்டும் மழை வருவதற்கான அறிகுறிகள் கண்டு வேகமாகக் கலைந்தது.

முனுசாமியும் வெளியே வந்தான். டவுன் பஸ் எட்டு மணிக்குத்தான். கால்மணி நேர நடை தூரத்தில் பஸ் நிலையம். போய் விட்டால் இடம் பிடித்து உட்காரலாம். நடையை வேகமாக்கினான்.

கடைவீதியில் நுழைந்து காந்தி சிலை அருகில் வரும் போது சடசடவென்று மழைத்தூறல் விழுந்தது. மறு விநாடியே பெரும் மழை பிடித்துக் கொண்டது. பக்கத்தில் இருந்த கடையின் தட்டியடியில் ஒதுங்கி நிற்பதற்குள் இலேசாக நனைந்துவிட்டான்.

கடைவீதியில் பஸ் நிற்குமிடம் நூறடி தூரத்தில் இருந்தது. தட்டியடியிலேயே நடந்து நனையாமல் போய் விடலாம். கூட்டம் பிதுங்கி வழியத்தான் செய்யும். நின்று கொண்டுதான் போக வேண்டும். வேறு வழியில்லை.

மழை சடசடவென்று கொட்டியது. கடை வீதி காலியாய்ப் போய் அத்தனைக் கூட்டமும் கடை வாசல்களில் ஒதுங்கியது.

“மழ வரும்னு நெனைச்சேன். ஆனா இப்படிப் பேய் மழையா வரும்னு நெனைக்கலை“ பக்கத்தில் யாரோ பேசினார்கள்.

மழையினால் சீக்கிரமாகவே இருள் பரவியது. கடை வீதியின் அத்தனை விளக்குகளும் சிறிய இடைவெளிகளில் ஒளிர ஆரம்பித்தன.

நின்ற இடத்தில் நின்றவாறே மழையையும், மனிதர்களையும் வேடிக்கை பார்க்கத் தொடங்கினான் முனுசாமி. அவ்வளவு கூட்டத்திற்கு இடையில், நனையாமல் பஸ் நிற்குமிடத்திற்குப் போக முடியாது.

கடைவீதியில் ஓடிய மழை நீரை இரு பக்கமும் இறைத்தவாறு அவ்வப்போது விரையும் கார்களைத் தவிர வீதியில் வேறு நடமாட்டம் இல்லை.

முனுசாமி கடைகள் பக்கம் பார்வையை ஓடவிட்டான். ஒதுங்கி நின்றவர்களில் சிலர் கடைகளுக்குள் புகுந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் உண்மை நோக்கம் மழையில் இருந்து தப்புவதுதான் என்றாலும், கண்ணில் படும் பொருட்கள் அவர்களிடம் வாங்கும் ஆவலைத் தூண்டினாலும் தூண்டும் என்ற எதிர்பார்ப்பில் கடைக்காரர்களும் அவர்களைத் தடுக்கவில்லை.

முனுசாமி நின்று கொண்டிருந்த கடை பெரியதாகவே இருந்தது. பளபளவென்ற அடுக்குகளில் டப்பாக்கள், பாட்டில்கள், பொம்மைகள்… தொங்கும் வாளிகள், கூடைகள், பைகள், பந்துகள் … தினசரி அந்த வழியாகவே போய்வந்தும் கூட அவன் உள்ளே நுழைந்தது கிடையாது. சும்மா உள்ளே போய் பார்க்கலாமா என்று தோன்றியது. ஏற்கனவே உள்ளே நுழைந்தவர்கள் அணிந்திருக்கும் பொய்ப் பார்வை தனக்குச் சாத்தியமாகாது என்று தோன்றியது.

‘கிர்ர்ச் …‘

திடீரென்று போடப்பட்ட காரின் பிரேக் சப்தம் அவனைத் திரும்ப வைத்தது. நடமாட்டமே இல்லாமல் இருந்த வீதி பரபரப்பாக மாறிப் போயிருந்தது. மழை குறையாது என்பது தெரிந்து விரித்த குடையுடன் நடமாட்டம் ஆர்ம்பமாகியிருந்தது.

அப்படி விரித்த குடையுடன் சாலையைக் கடந்த ஒருவன் மீது மோதலைத் தவிர்க்கவே அந்தக் கார் அவ்வளவு வேகமாக நிறுத்தப் பட்டிருந்தது. காரின் மூடிய கண்ணாடிக்குள் காரை ஓட்டியவர் கையை ஆட்டி ஏதோ திட்ட அடிபட இருந்தவனும் பதிலுக்குக் கையை ஆட்டித் திட்டினான். கார் கிளம்பிவிட்டது.

முனுசாமி சாலையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். விரித்த குடையுடன் மழையை வென்றுவிட்ட கூட்டம். இத்தனை பேருக்கும் மழை வரும் என்று எப்படி தெரியும்? குடை மழைக்கு மட்டுமில்லை வெயிலுக்கும்தான் என்பது புரிபட சந்தேகம் அகன்றது.

கீழே விழும் மழைத் துளிகளைத் தன்மீது தாங்கி அவற்றின் திசையைத் திருப்பி, தன் கீழுள்ளவர்களைக் காப்பாற்றும் குடைகளை வேடிக்கை பார்த்தான். ஒரு குடை போல இன்னொரு குடை இல்லாத விபரம் கவனித்தான்.

எத்தனை வகைக் குடைகள்! கறுத்த பூதம் தலை விரித்தாடுவது போன்ற தாத்தாக் குடைகள்தான் நிறைய. சில புதிது. சில பழசிலும் பழசு. அங்கங்கே ஓட்டைகள். ஒட்டல்கள். சிறிய குடைகள். பெரிய குடைகள். நடுத்தரம் .முரட்டுத்துணி . பளபளவென்ற மென்மைத் துணி.

கறுப்பர்களுக்கு நடுவே வெள்ளையர்களாக வித வித வர்ணங்களில், விதவித மாதிரிகளில் புதுவகைக் குடைகள். சிறிதென்றாலும் அழகாக இருந்தன. மழைத் துளிகள் கூட அவற்றின் மீது விழும் போது, அவற்றின் மென்மை கண்டு உக்கிரம் குறைந்து விடுவதாகத் தோன்றியது. சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள், வட்டங்கள், பூக்கள், பட்டைக் கோடுகள், மெல்லிய கோடுகள், எத்தனை விதக் குடைகள்!

குடைகளின் அழகில் லயிதிருந்தபோதுதான் தோன்றியது. ஒரு குடை வாங்கினால் என்ன?

குடை வாங்கிவிட்டால் நனையாமல் பஸ் நிற்கும் இடம் வரை, ஏன் பஸ் நிலையத்திற்கே போய்விடலாம். மழை நேரத்தில் கடைக்குப் போய்வரலாம். அவனைவிட மல்லிகாவுக்கு குடை அதிகம் பயன்படும். மழை இல்லாத நேரங்களில் கூட மத்தியான வெயிலில் காயாமல் இருக்கலாம். வெயிலோ, மழையோ கவலைப்படாமல் அவசர வேலைகளுக்கு வெளியே போய் வரலாம்.

மனம் அடுக்கடுக்காய் காரணங்களை உருவாக்கியது. ஒரு முடிவுக்கு வந்தவனாக கடைக்குள் பார்த்தான். விதவிதமான குடைகள் தொங்கிக் கொண்டிருந்தன. விலை பற்றிய பயம் சட்டென வந்தது .நூறு ரூபாய்க்குள் இருந்தால் வாங்கி விடுவது என்று உள்ளே நுழைந்தான்.

”வாங்க … என்ன வேணும்? “கல்லாவில் இருந்தவர் குரல் மிகவும் அந்நியோன்யமாக வெளிவந்தது.

“குடை வேணும் பாய்.“

“பாருங்க நெறைய இருக்கு … ஸெய்யது! சாருக்கு குடை காட்டு.”

பையன் விதவிதமான குடைகளைக் காட்டினான். விலை சொன்னான். முனுசாமி எதை வாங்குவது என்று குழ்ம்பினான்.

“இதா இத வாங்கிக்குங்க. நாலு பேரு தாராளமாப் போகலாம். ஃபஸ்ட் கிளாஸ் துணி. கம்பி ஜாயிண்டெல்லாம் ஸ்ட்ராங்கா இருக்கும். கம்பெனி அந்த மாதிரி. இதே கம்பெனி குடை ஒண்ணு நம்ம வீட்ல பதினஞ்சு வருஷமா இருக்கு. “அவன் குழப்பத்தை உணர்ந்த கடைக்காரர் கையில் விரித்த குடையுடன் சொன்னார். முனுசாமியின் பார்வை மீண்டும் மேலே தொங்கிய வர்ணக் குடைகளிடம் சென்றது.

“அதெல்லாம் பார்க்க நல்லா இருக்கும். ஒரு ஆள்தான் போகலாம். கொஞ்சம் காத்து பலமா வீசினா வானம் பார்க்க மடங்கிக்கும். இதய வாங்கிக்க. தொன்னூறு விலை. எண்பத்தஞ்சு கொடு.“

முனுசாமி குடையை வாங்கிக் கொண்டான். பணம் கொடுத்துவிட்டு வெளியே வந்தான். மழையின் தீவிரம் குறையவில்லை.

குடையை விரித்தான். கடைவீதியில் இறங்கி நடந்தான். தலைக்கு மேல் மழை குடையில் விழுந்து தடதடத்தது. மழையை வென்றுவிட்ட பெருமிதத்தில் நடை வேகமாக விழுந்தது.

பஸ் நிலையத்தில் புறப்பட தயாராக, எல்லா ஜன்னல்களும் மூடப்பட்ட பஸ் நின்று கொண்டிருந்தது. ஏறினான். காலியாக இருந்த இடத்தில் உட்கார்ந்து மடக்கிய குடையை கால்களுக்கு இடையே வைத்துக் கொண்டான்.

ஐந்து நிமிடத்தில் பஸ் நிரம்பிவிட்டது. பஸ் முழுவதும் சொதசொதவென்று ஈரம். அநேகமாக பாதி பேர் முழுக்க நனைந்திருந்தார்கள். குடை இல்லாதவர்கள்.

நடத்துனர் விசிலடிக்க பஸ் புறப்பட்டது. ஓடும் பஸ்ஸின் மேலும், பக்கவாட்டிலும் மழையின் தடதட ஓசை. ஓட்டுநர் பஸ்ஸை மெதுவாகத்தான் ஓட்டினார். முன் கண்ணாடியில் அடர்த்தியான மழைத் தாரை. போகப் போகக் கூட்டம் அதிகமானது.

ஆற்றுப்பாலம் தாண்டி மூலக்கடையில் பஸ் நின்றதும், முனுசாமி கூட்டத்தில் நுழைந்து வெளியேறி இறங்கினான். மழை பலமாகப் பெய்து கொண்டிருந்தது. குடையை விரித்துப் பிடித்தான். பிரிவு பாதையில் நடந்தான். ஒரு மைல் போக வேண்டும். வழியில் வேறு யாருமில்லை. நல்ல இருட்டு. மழையின் தடதடப்பும், மழை நீர் ஓடும் சலசலப்பும், தவளைகளின் கொணகொணப்பும் காதை அடைத்தது.

குடையின் உதவியால் முழங்காலுக்கு மேல் நனையவில்லை. குடை இல்லாமல் இருந்தால் சுத்தமாக நனைந்திருப்போம் என்று நினைத்துக்கொண்டான். சட்டைப் பையில் இருந்து பீடியை எடுத்து, நின்று பற்ற வைத்துக்கொண்டு மீண்டும் நடந்தான்.

வெகு தூரத்தில் இருந்தே முனியப்பன் கோவிலருகே காணப்பட்ட பரபரப்பு தெரிந்தது. அந்த நேரத்தில் கோவிலில் ஏன் அவ்வளவு கூட்டம். பண்டிகை தினம் இல்லை. பாதி வழியில் மழையில் சிக்கிக் கொண்டவர்களா? சிம்னி விளக்குகளின் ‘முணுக் முணுக்‘ மழைக்குள்ளாகத் தெரிந்தது. பீடியைத் தூர எறிந்து விட்டு நடையைத் துரிதப்படுத்தினான்.

முனியப்பன் கோவிலின் கூரை வேய்ந்த பகுதியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. முனியப்பன் முன்னால் தொங்கிய பெட்ரோமாக்ஸ் விளக்கின் வெளிச்சம் ‘பளீர்‘ என்று மிதந்து கொண்டிருந்தது .

அத்தனையும் அவன் ஊர் ஆட்கள்தான். ஏன் இங்கே நிற்கிறார்கள்?

“முனுசாமியா? “ஊர்ப் பெரியவர் வேலுச்சாமி கண்களை, கைகளால் இடுக்கிப் பார்த்தார்.

“ஆமாண்ணே! … ஏன் எல்லோரும் இங்கே நிக்கீங்க?“

“அத ஏன் கேட்கறே. தெக்க மலையில காலையில இருந்தே பேய் மழை. திடீர்னு காட்டாறு ரொம்பி கரையெல்லாம் ஓடுது. நம்ம இடத்தில எல்லாம் ஓராளு உயரத்துக்கு தண்ணி. இந்நேரம் அதையும் தாண்டியிருக்கும். நல்லவேளை முதல்லய கையில கெடச்சதை எடுத்துக்கிட்டு ஓடியாந்துட்டோம்.“

”ஆளுங்க யாருக்கும் …“ முனுசாமி பதறினான்.

“நல்லவேளையா முனியப்பன் புண்ணியத்தில எல்லாரும் தப்பிச்சாச்சு. ஆடு, கோழிங்களைக்கூட ஓட்டியாந்துட்டோம். குடிசைங்களும், விட்டுவிட்டு வந்த சாமான்களும்தான் போச்சு. சரி சரி முதல்ல போய் உம் பொஞ்சாதியப் பாரு. அந்தா அந்தக் கொட்டகையில பொம்பளைக எல்லாம் ஒதுங்கியிருக்காளுக. உன்னைக் காணமேன்னு விசனத்தோட இருக்கு. அட்டே!… குடை வாங்கினியா? … அதான் நனையாம வந்திருக்கே.“

முனுசாமி பதில் கூறாமல் குடையை மடக்கினான். வேலுச்சாமி அருகில் அதைச் சாய்த்து வைத்துவிட்டு வெளியே வந்து நனைந்தவாறே பக்கத்து கொட்டகை நோக்கி நடந்தான்.

“குடையை வச்சுட்டு நனைஞ்சுக்கிட்டு போறியே!“

நிரந்தரக் கூரையை இழந்துவிட்ட சோகத்திலும், மீண்டும் அதை உருவாக்க, பட வேண்டிய கஷ்டத்தைப் பற்றிய சிந்தனையிலும், முனுசாமி தற்காலிகமாக மழையில் நனைவதைப் பொருட்படுத்தாமல் நடந்து கொண்டிருந்தான்.

“பைத்தியக்காரனா இருக்கானே! புதுக் குடையை வச்சுகிட்டு இப்படி நனையறானே. “வேலுச்சாமி குடையை விரித்துப் பிடித்தவாறே வெளியே வந்து நின்று மழையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top