குடிமக்கள் . . . குடிவாழ்வு , , , குடிஅரசு . . . குடி . . .

5
(1)

”டைம் என்னா..ண்ணே…?”  தூக்கம் அகலாத விழிகளும் சரிவர வாரப்படாத தலையுமாய் பாத்திரக் கடைக்கு வந்தான் செல்வம்.

 

காலண்டரில் தேதியைக் கிழித்துக்கொண்டிருந்த கடைக்காரர் மணிக்கட்டை ஒருகணம் திருப்பிப் பர்த்தார்.” இன்னம் அரமணி நேரம் இருக்கு செல்வம்  : என்றார்.

 

“ஒம்பதரதே ஆகுதா..?” என சொல்லிக்கொண்ட செலவம், சேப்பிலிருந்து ஒருபீடியை எடுத்து சாவதானமாகப் பற்ற வைத்து கடைவாசலில் உட்கார்ந்து கொண்டான்.

 

“புது வாச்சு ஒண்ணு வச்சிருந்த  .?” என்ற கடைக்காரர். “கைல கட்டீருக்கியா.” என உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எட்டிப்பர்ர்த்து செல்வத்தின் கையில் கடிகாரம் இருப்பதை உறுதிசெய்து கொண்டார்.

 

“ண்ணே ரெம்ப அசிங்கப்படுத்தாதேங்…ண்ணே த்ங்கச்சி மகனுக்கு நாளைக்கி காலேஜிக்கிப் போறானாம் மாமெங்காறெ ஒண்ணூ வாங்கிக் குடுன்னு தங்கச்சி கேட்டுச்சு நேத்துப்போயி எடுத்தாந்தே . ரெண்டு நாளைக்கிக் நாமளும் கட்டீருப்பமே என்னா ..ண்ணே.” கடிகாரம் கட்டியிருக்கும் மணிக்கட்டை உயர்த்திக் காண்பித்தான்.

 

“அப்பறமெதுக்கு என்னிட்ட டைம் கேட்ட..? லக்கல் தான..!

 

“ ஒம்பது மணிக்குமேல நேரம் கடக்குன்னு ஓடமாட்டேங்குது..” என்றபடி மீண்டும் தன் கையிலிருந்த கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டான்.

 

’’நேரம் ஓடலேன்னா சடக்குன்னு டயத்த திருப்பி வச்சுக்க..! ”

 

“போங்கண்ணே காலேல.. “ என வெட்கப்பட்டான். தொடர்ந்து “டீ சாப்பிடுறீகளா…?”  என்று முகத்தை உயர்த்திக் கேட்டான்.

 

“எப்பிடியோ அரமணி நேரம் பாசாகணுமாக்கும்..?”

 

“ராத்திரி மிக்ஸிங் சரியில்லாமப் போச்சுண்ணே. மொதல்ல பிராந்திய எறக்கிட்டெ., பெறகு ஒருத்தே வந்து ரம்மக் குடுத்துட்டான் அது கழுத சரியா செட்டாகல ஆளக் கவுத்தீருச்சு. இன்னமுஞ் சொக்கு மாற மாட்டேங்குது. அதேன் ஒரு டீயப் போட்டம்னா..” என்றபடி எழுந்தான்.

 

“ டீயக் குடிச்சாச்சின்னா ‘கடைக்கு’ப் போக முடியாதில்ல..?”

 

“அதேன் அரமணி நேரம் இருக்குதில்ல.. பாத்துக்கலாம்..”

 

“நீ போய்க் குடிச்சிட்டுவா செல்வம்.. இப்பத்தே வீட்ல காப்பி சாப்பிட்டு வந்தேன்.. பாவம் ஓங்கிட்டப் போயீ..” என தவிர்த்தார். காப்பி வாங்கிக் கொடுத்துவிட்டு கடைக்குப் போக காசு போதவில்லை என்றால் ’’‘பத்துரூவா குடுங்ணே வேல்க்கிப்போய்ட்டு வந்ததும் பத்துக்கு இருபது வாங்கிக்கங்க..” என அடம்பிடித்துக் காலைச் சுற்றுவான்..

 

அதைப் புரிந்துகொண்டவன்போல சட்டைப்பையிலிருந்து பணத்தை எடுத்துக் காண்பித்தான். “தைரியமா வாங்க…ணே இன்னிக்கி ஒங்க் கிட்டல்லாங் கேக்கமாட்டே இருந்தா வெள்ளக்காரெ… இல்லாட்டி பிச்சக்காரெ..ண்ணெ…” சொல்லிக்கொண்டே முன்னால் நடந்தான்.

 

பக்கத்துக் கடைக்காரரிடம் கடையைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார். எதற்கும் இருக்கட்டுமென கல்லாவிலிருந்து பணத்தை எடுத்து உள்ச்சேப்பில் வைத்துக்கொண்டு செல்வத்தைப் பின்தொடர்ந்தார். குடிமக்களை முழுசுமாக நம்பிவிடக்கூடாது தனது பில்லுக்காவது பைசா வைத்துக்கொள்வது அவசியம்.

 

டீக்கடையிலும் செல்வத்தை ஆச்சர்யமாகப் பார்த்தனர். “மணி பத்தாகப் போகுது டீ சாப்பிட வந்திருக்க.. ? கவர்மெண்டுக்கு கையெழுத்துப் போடப் போகலியா.?”

 

“ஸ்…” என அலுத்துக்கொண்டான். “இப்பிடிச் சொல்லிச் சொல்லியே என்னிய நீங்களே அனுப்பிச்சு விட்ருவீக ..”

 

செல்வம் ஒருசமையல்தொழிலாளி எதைஎதையோ தொழிலாய்ச் செய்து சமீபகாலமக இதைத்தவிர வேறெதுவும் தெரியவேண்டிய அவ்சியம் இல்லை என்கிற அளவுக்கு சமையல் வேலையில் காதலாகிப்போனான்..சைவம் அசைவம் என எதையும் பிரித்துப் பாராமல் எதைச்செய்தாலும் அதில் ஒரு ஈடுபாட்டோடு செய்வான். உப்புப்பார்க்க என்று ஒரு நபரை தனியக வைத்துக் கொள்வான். காரம் புளிப்பு அத்தனையும் அந்தாளிடம் ஒப்படைத்து விடுவான். பெரும்பாலும் அவன் தயாரிப்பில் அதுபோதவில்லை இது கூடுதல் என யாரும் சொன்னதில்லை. அதற்காகவே திருப்பித் திருப்பிக் கேட்பான். ’எப்பிடி இருக்கு இதெப்பிடி’ அதில் கர்வமும் பெருமையும் கல்ந்திருக்கும்.

சம்பளம் பேசுகிறபோதும் கறாராகப் பேசுவதையும் தவிர்ப்பான். “என்னா கறாலு.. என்னாத்த கைமொதல் போட்டு வேலயப்பாக்கறோம். ரோட்டக் கடந்து போகறதே நிச்சயமில்லாத பொழப்பு மனுசப்பய பொழப்பு..   கூலில கூடுத்ல் குறச்சல் பாக்கலாமா வேலைய முடிச்ச பெறகு சாப்பிட்டுப் பாத்துட்டு சம்பளத்தக் குடுங்க ”என்று ஆரம்பிப்பான்.

 

’’என்னிக்கி வேல.. தேதியச் சொல்லுங்க.. அட்வாண்ஸ் நூத்தியொன்னு போதும்.. கூட மூணுபேர் இருக்கம் அதனால ஐநூத்தி ஒன்னாக்குடுத்துருங்க நீங்களும் வர்ரதானா வாங்க ஆளுக்கொஞ்சம் தொண்டைய நனச்சுக்குவம்..” என்று அட்வான்ஸ் தருகிறபோதே வீட்டுக்காரரையும்  இழுத்துக்கொண்டு செலவழிக்கிற பெரும்போக்கு அவனுக்குண்டு. இதன்காரணமாகவே செல்வம் வேலைபேசப் போகிறானென்றால் அவனுக்குப் பின்னால் தொடுப்பு ஆள் படைதிரளும். பேசிய்வேலைக்கு காய்கறி சிட்டை தருவதற்கு சென்றாலும் ரெண்டுபேர் உடன் நிற்பார்கள். “வெறுங்கையில சிட்டயத் தரக்கூடாதுங்க..” என தனக்கென ஒரு சாஸ்திரத்தையும் உருவாக்கிக்கொள்வான். “தள்ளிவிடுங்க தள்ளிவிடுங்க எப்பிடிக் குடுத்தாலும் உங்களுக்குத்தான் செம கொறையும்..’’ தயங்கக்கூடிய பார்ட்டிகளை தாஜா செய்து வாங்கிவிடுவான்.

 

“வேலைக்கி மின்னாடியே காசப்பூராம் வாங்கிட்டு கடசீல கம்பி நீட்டிட்டீன்னா.. ” ஒருசில சந்தேகப் பேர்வழிகள் கிடுக்கிப்பிடி போடுவதுண்டு.

 

அந்தமாதிரி சமயத்தில் செல்வத்தின் குரலில் இயல்பு கெட்டுவிடும் கண்கள் சிவந்து முகம் ஊதிப்போய் நீரில் ஊறிய பிணமாய் நிற்கும். நாக்கை பயங்கரமாக வெளியில் நீட்டி அதைக்கையால் பிடித்து இழுப்பான் ‘’இந்த நாக்குதான கேட்டுச்சு “ வலதுகையை தரையில் ஓங்கிஅறைவான். “இந்தக் கைதான காசு வாங்குச்சு ஒங்க வேல நடக்கலேன்னா நாக்கப் புடுச்சு சரக்குன்னு இழுத்து அறுத்துப்புட்டு நாண்டுக்குவே மனுசனுக்கு பேச்சு முக்கியம் ’’.

 

எத்தனை போதையிலிருந்தாலும் நினைவு தப்பமாட்டான். உடல் தள்ளாடிய போதும் புத்தியை சரியாகவே வைத்துக்கொள்வான். அதனால் பேசிய வேலைக்கு நேரத்திற்குச் சென்று நின்றுவிடுவான். ஒருவேளை போதை மிகுந்திருப்பின் உப்புக்கரைசலில் வாய் கொப்பளித்து வாந்தி வரவழைத்தோ கலரோ பாண்டாவோ குடித்து தன்னை நிலைப்படுத்திக் கொள்வான். வேலை நேரத்தில் குடிக்கமாட்டான் எனச் சொல்ல முடியாது. அவுன்ஸ் கணக்கில் தான் இறக்கிக்கொள்வான். வேலை முடிய ராஜபோகம்தான்.

 

டீ யைக் குடித்து முடித்த கடைக்காரர், “காஸ் குடுத்திடுரியா..செல்வம்” எனக் கேட்டார். “இவெ ஒராள்னு நம்பி வந்திருக்கீங்களே “ என சமயத்தில்  அசிங்கப்பட நேர்வதுண்டு.  .

 

“நீங்க கெளம்புங்கண்ணே நாம் பாத்துக்கறேன்.. ஆளில்லாத கடையில. எவனாச்சும் பொருள எடுத்துட்டு கம்பி நீட்டிரப் போறான்..” அக்கறையாய் வழியனுப்பினான். உடனே டீக்  கடையிலிருந்து குரல் எழும்பியது.” யே செல்வம்..  காசு இன்னம் வரல..? “

 

“குடுப்பம்ல.. கடைல தான நிக்கிறம்.. ஓடியா போய்ட்டம். ஒரு ஓனரப் போயி நிறுத்தறீக.. நீங்க போங்கண்ணே..”

 

“இதுக்குத்தே டோக்கன் போடணுங்கறது..”  பட்டறையில் நின்றுகொண்டிருந்த மாஸ்டர் தனது முதலாளிக்காகப் பேசினார்.

 

“நீ டோக்கனப் போட்டா என்னா, கடைல குண்டப் போட்டா எனக்கென்னா ஒங்க கட ஒங்க ஏவாரம்.. நாங்க எப்பவும் டீயக் குடிச்சப்பறம் தான் காஸ்குடுப்பம். “ நிதானமாகவும் தெளிவாகவும் பேசினான்.

 

மறுபடி கடைக்கு வந்தபோது. கடைக்காரர் பேப்பர் படித்துக்கொண்டிருநதார் காலைவெய்யில் கடைவாசலைத்தாண்டி உள்ளும் நீண்டிருந்தது. வாடகைப் பாத்திரங்கள் ஒன்றன்மேல் ஒன்றாய் அடுக்கப்பட்டு கரிய சுவரைப்போல உயர்ந்து நின்றன. சேர்களும் இன்னபிற சாமான்களும்  ஒன்றினுள் ஒன்றாய் சொருகப்பட்டு கடையே இறுக்கமாய்க் கிடந்தது.

 

“பீடி பத்த வ்க்கெலமா..ண்ணே …!”  பவ்யமாய்க் கேட்டான்.

 

“வேணாம் னாப்ல பீடிய ஒடிச்சுப் போட்றப் போறியா..? “

 

“பீடி வாட சேராதும்பீக..”

 

“தெரியுதுல்ல்.. தூரமா நின்னு பிடி.”

 

பதில் பேசாமல் கடைக்கு வெளியில் வந்து பற்றவைத்தான்.

 

“செல்வம்.. எங்கிட்ட முப்பது இருக்கு ஷேர் போட்டுக்கலாமா..” வீதியில் நடந்து கொண்டிருந்த ஒருஆள், செல்வத்திடம் வந்து பேசினான்.

 

“முப்பத வச்சி நாக்கு வழிக்கவா..? கட்டிங்கு முப்பத்தஞ்சு ரூவா.. கெளாசு, தண்ணி பாக்கெட்டுக்கு ஙொய்யாவா கட வச்சிருக்காரு.”

 

அடுத்தொரு ஐந்து ரூபாயை எடுத்துக் கொடுத்தான். “ இன்னம் ரெண்டு ரூவாதே சேப்ப்ல இருக்கு பீடிவாங்கணும்..அச்சிஸ் பண்ணு” அதையும் எடுத்துக் காண்பித்தான்.

 

“அய்யா சாமி வேற ஆளப் பாரு. நமக்கு காலம்பற கோட்ற எறக்குனாத்தே அடங்கும்.. க்ட்டிங்கெல்லா காணாது..”

 

“சரி ஒரு அஞ்சு ரூவா கடெங் குடு..” அவன் நகரவில்லை.

 

‘’காலைலேவா அதும் எங்கிட்டேவா “ என முறைத்த செல்வம், ”போயிற்ரா..” என்றான். திரும்பவும் கடைக்காரரிடம், ”மணி ஆயிருச்சா ண்ணே” கேட்டுவிட்டு தனது கடிகாரத்தையும் பார்த்துக்கொண்டான்.

 

“கையிலதே கட்டீருக்கீல்லப்பா..”

 

“ணே.. வாச்சு நின்டு நின்டு ஓடுதுண்ணே.. பேட்ரி தீந்து போயிருச்சோ என்னமோ..” கையை உதறிக்கொண்டான்.

 

“புது வாச்சு சொன்ன.” என்றவர், ” கெளம்பு.. நடந்து போக கட தெறந்துருவாக’’’ என்றார்.

 

பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்த செல்வம், நகராமல் நின்றிருந்தவனிடம் நீட்டினான். ” அண்ணனுக்கு ஒரு கோட்ரு வாங்கிக்க.. நீ அஞ்சுரூவா எடுத்துக்க..டக்குன்னு வா..”

 

”தண்ணி.. கெளாசு..? “

 

“எல்லாந்தான்டா.. கெளாசு வாங்காம உள்ளங் கையில யா ஊத்திக்குடிப்பாக.. அப்பிடியே அண்ணனுக்கு ரெண்டு சிச்ர்பில்ட்டர்  சேத்து வாங்க்கிக்க..”

 

சொல்லிமுடிக்குமுன் அவன் நடக்கலானான். அதற்கப்புறம் செல்வம் கடைக்கு வெளியில் வந்து பந்தல்காலைப் பிடித்தபடி நின்று கொண்டே இருந்தான்.

 

கடைக்காரரும் அவனை உட்காரச்சொல்லவில்லை. சொன்னாலும் உட்கார மாட்டான். சரக்குவந்ததும் தூரமாய்ப் போய் பெட்டிக்கடையிலோ அல்லது எடுப்புக்க்டை டேபிளிலோ உட்கார்ந்து ஒரு ஆம்லட்டோ ஆப்பாயிலோ வாங்கிக்கொண்டு ஒதுங்கி விடுவான். சாப்பிட்டுவிட்டு வருபவனை கடையில் உட்காரச் சொல்ல மாட்டார். உட்கார்ந்து விட்டாலோ யாரையும் பேசவிடமாட்டான். அதனால் சரக்கடித்துவிட்டு வருகிற யாரையும் உட்காரவிடுவதில்லை உட்காருகிறவர்களையும் பேச அனுமதிப்பதில்லை “ வீட்டுக்குக் கெளம்பு…” என அமைதியான முறையிலேயே வார்த்தையைப் பிரயோகிப்பார். எதிராளியின் அடுத்த கட்ட நடவடிக்கையைப் பொறுத்து கடைக்காரரும் தனது அஸ்திரத்தை வீசுவார், அது மெல்லிசானதா த்டிம்னா என்பது அவ்ருக்கே தெரியாது,

 

செல்வத்திடம் ஒரு கணக்கு இருக்கும். அடிக்கடி எச்சில் விழுங்குவதையும், பேச்சின் இடையில் விக்கல் குறுக்கிடுவதையும் அனுமானித்து கண்களை மூடிதிறந்து கொள்வான். குறிப்பிட்ட சமிக்ஞையில் அவனுக்கு வீட்டு நினைப்பு வரும். யார் தடுத்தாலும் அதற்குமேல் ஒருகணம்கூட நிற்க மாட்டான். ஒரே தம்மில் வீடுதான். தள்ளாடி, வளைந்து நெளிந்து கவிழ்ந்து எந்த வகையிலோ வீடடைந்துவிடும் சூட்சுமம் அவனுக்கிருந்தது.

 

வீடு என சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. அதேசமயம் இல்லை என ஒரேயடியாய் மறுத்திடவும் முடியாத ஒருவிதமான அமைப்பில் அது இருந்தது. நாற்பது வயதுக்குமேல் கடந்தும் திருமண பிராப்தம் இல்லாதவன். அதுபற்றி அவனோ அவன் குடும்பத்தாரோ இப்போது கவலைப்பட்டதாக தெரியவில்லை. ”ஊர்ல எம்மே பிஎ படிச்சவனுக்கே பொண்ணு கெடைக்கல.. இப்பிடி ரவ்வும் பகலும் குடிச்சிட்டு திரிறவனுக்கு பொண்ணு கேட்டா நம்மள சிரிச்சிட மாட்டாகளா.”

 

“சொல்லித்திருத்தலாம்ல..”

 

இனி முடியாதுண்ணே.. “ செல்வமே தன்னைப்பற்றி மதிப்பீடு செய்து கொள்வான். “அவ்வளவுதான்ணே காலம் தப்பீருச்சு. ஆசைக்கு குடிச்சது இப்ப ஆள்க் குடிக்கிது. குடிச்சாத்தே  அலைய முடியும்ங்கறாப்ல ஆயிருச்சு..”

 

அவன் சொல்கிறபோது பரிதாபமாகத்தன் இருக்கும். “என்னா செய்ய தொழில் அப்பிடி சேர்க்க அந்தமாதிரி. அட்வான்ஸ் வாங்குனதும் நேர கடைக்குத்தான் இழுப்பாய்ங்க அதேமாதிரி வேல செஞ்சுகிட்டிருக்கும்போது வீட்டுக்காரவுகளே வேல நல்ல நடக்கணும்ன கணிப்புல வாங்கி ஊத்திவிடுவாங்க இப்பிடி ஓசில ஆரம்பிச்சு கடைசீல ஒருநேரம் குடிக்காட்டி கைகால் ஒழப்புலாட்டம் ஆயிடுமோன்ன பயம் வந்து சேந்துருது. வழி இல்லாம எல்லாம் அடச்சுப் போயிருச்சு.. விடுண்ணே..எத்தன் பேரு அனாதயா பொறந்து சாகுறாங்க அந்தளவுள பரவாயில்லீல்ல நமக்கு கலியாணந்தான முடியல “ என்பான்.

 

அதனால் அவன் குடித்துவிட்டு வரும் நேரம் அல்லது வேலை இல்லாது வெட்டியாய் அலைகிற நேரம் மல்லாக்கப் படுத்து எழ, ஒரு தடுப்பு… அது அந்தவீட்டில் அவனுக்கு ஒரு அறையாகவே அமைத்துத் தந்திருந்தார்கள், யாரும் அவனுக்கு தொந்தரவு தராத வண்ணமும், யாரையும் அவன் தொந்தரவு செய்யாதபடிக்கும் அந்த அறைக்கு புறவாசல் ஒன்றும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்கள் தவிர, முழுவீட்டில் அவனுக்கு எந்த உரிமையும் பெரிய அளவில் கிடையாது. சாப்படு வேணுமென்றால் சம்பளம் தரவேண்டும். சாப்பாடு அவனுக்கான தட்டில் போட்டு வைக்கப்பட்டிருக்கும் அதையும் செல்வம் பெரியவீட்டில் வைத்துச் சாப்பிடமாட்டான். ஒன்று தன் அறைக்கு எடுத்துவந்து சாப்பிடுவான்.அப்படி இல்லாவிட்டால் வீதியில் வைத்து நிலாச்சோறோ வெய்யில்ச் சோறோ உண்ணுவான். அந்த நேரம் செலவத்தின் போதை நிலை பரவசம்  தெருவாசிகளுக்கு இலவச தெருநாடகம் பார்த்த உணர்வை ஏற்படுத்திவிடும்.

.

பணத்தை வாங்கிக்கொண்டு போனவன் வேகமாய் வந்தான். அவனைக் கண்டதும் கடைக்காரரிடம் விடைபெறும் முகமாக. ’’இன்னொரு டீ சாப்பிடுறீகளா…? “ எனக்கேட்டான் செல்வம். கடைக்காரர் தேவையில்லை என தலையசைப்பின் வழியே தெரியப்படுத்தினார்.

 

”சரி, ந்தா வந்திர்ரண்ணே..” என்றவனின் செய்கையில் அவசரம் இருந்தது. “ அங்க பெட்டிக்கடைக்கிப் போவம் வா..”  வந்தவனின் தோளில் கைபோட்டு இழுத்தான்.

 

தோளிலிருந்த கையை விலக்கிய அவன். ’’கட தொறக்கல செல்வம்” என்றான்.

 

செல்வம் கடையின் பந்தல் காலோடு நின்று கொண்டான். அவனது முகத்தில் கேள்விக்குறி ஏறிநின்றது.

 

’கட தொறக்கலியா.. எது..? பிராந்திக்கடயா.. ? தெறக்கலியா..? யேன்.?”

 

” எதோ லீவாம்..”

 

”லீ..வா ? எதுக்கு..? “

 

”பக்கத்தூர்ல எதோ ஜாதிப் பிரச்சனையாம் போலீஸ் நெறையா போய்க்கிட்டிருக்குல.. அதால ஏரியா கடைகள அடைக்கச் சொல்லிட்டாக.. ளாம்..”

 

”சரிடா.. அந்தஊர்ல பெரச்சனைன்னா இங்க என்னாத்துக்கு அடைக்கி றா… ங்கெ..”

 

” என்னையக் கேட்டா..? “ தலையைக் குனிந்து கொண்டு பதில் சொன்னவன், சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்தான்.

 

”என்னா. .ண்ணே இது..” கேட்டபடி கடைக்காரரிடம் திரும்பினான் செல்வம். “இப்பிடி அவிங்க பாட்டுக்கு இஷ்டத்துக்கு புளுக்கு புளுக்குன்னு கடைய அடைக்கிறாங்க..?”

 

”ஒங்களுக்கு காசு மிச்சந்தானப்பா..~! “ கடைக்காரர் படித்து முடித்த பேப்பரை ஓரமாய் மடித்து வைத்தார்.

 

”காசு மிச்சமா..?  கடைய அடச்சதால எழுவது ரூவா கோட்டரு நூத்தி இருவதா ஆயிப்போச்சு…ண்ணே.. சாயங்காலமாச்சுன்னா  நூத்தி அம்பதாக்கீருவாங்கெ..அதுதெரிமா ” உடனிருந்தவன் ஒப்பாரி வைக்கும் தொனியில் பதில் சொன்னான்.

 

”அதுங்குள்ள பிளாக்குல வந்திருச்சா..?”

 

”நைட்டே லீவுன்ன தாக்கல் வந்திருச்சாம்ணே.. அவெஅவெ வீட்ல ஸ்டாக் வாங்கி வச்சுகிட்டாங்க”

 

”நேத்து கடை அடைக்கும்போது நான் இருந்தேனடா.. நமக்கு ஒண்ணுந் தெரியலியே.“ என்ற செல்வம், “இது என்னா..ண்ணே நாயம்..? ஒரு வரமொற வேணாமா..? காந்தி பொறந்த நாளு, காமராசர் பொறந்தநாளுன்னு அடச்சிர்றீக.. கடவுளுக்கு பூசைன்னு வந்தாலும் மூடிப்புடுறீக.. “

 

”அப்பக்கூட முன்னக்கூட்டியே சொல்லிர்ராகள்ல.. நாமளும் சுதாரிச்சுக்கர்ரம்.. ஆனா இப்பிடி சொல்லாமக் கொள்ளாம அடச்சா எங்கள் மாதரி ஆளுக்கெல்லா என்னா பதிலு..? “

 

”குடிக்காட்டி செத்துருவம்..ணே”

 

செல்வத்தின் பேச்சில் பரபரப்பும் கைகளில் நடுக்கமும் தலைகாட்டியது.

 

”ஒருநாளைக்கி கல்லீரலுக்கு ரெஸ்ட்டு விடுங்கப்பா..”

 

”முடியாது..ண்ணே குடிக்கவச்சுப் பழக்கிட்டீங்க.. அன்னந்தண்ணி இல்லாமகூட இருந்திர முடியும். ஒரு ரெண்டு அவுன்ஸ்சாச்சும் உள்ள எறக்காட்டி கிறுக்குப் பிடிச்சிறும்…ணேய்…!”

 

பரபரப்பான காலை நேரமும் பஸ்,கார் முதலான வாகன மற்றும் மனிதர்களின் இயல்பான இயக்கம், வெய்யில், பனி போன்ற இயற்கையின் செயல்பாடு எதுவுமே அவர்களுக்குள் பதிவாகவில்லை. கடைக்காரருக்கும் எப்படி அவர்களை எதிர்கொள்வது எனவும் விளங்கவில்லை.

 

”கடைல ஒரே கூட்டமா இருக்கு. கட சூப்ரவைசரு சாயங்காலமா வாங்கனு கைய விரிச்சிட்டாரு..” மேலுமதிகமான விபரங்களை அவன் செல்வத்திடம் தெரிவித்துக் கொண்டிருந்தான்.

 

”கடயத் தொறந்து முன்னாடி வந்து நிக்கிறவகளுக்காச்சும் குடுத்துட்டு மூடுயான்னு கேகக்லாம்ல..”

 

”அதையும் கேட்டாச்சு.. வதுலே சொல்லாம ஓடியே போய்ட்டாரு.. போலீஸ் வேற வந்திருச்சு..”

 

’ஆமா.. சங்கிலிய அத்துட்டுப் போன்வெ.. சட்டரத்தொறந்து கொள்ளயடிச்ச வனப் பிடிக்கவெல்ல வேகமா வரமாட்டாங்க இங்க மட்டும் பொறுப்பா வந்துருவாங்க.” என புலம்பிய செல்வம்,” சரி வெளிய எவெ விக்கிறான்.. எம்புட்டு ரேட்டு ..?”  கசப்பாய்க்கேட்டன் .

 

”போலீஸ் வந்திருக்கதால  எவனும் வச்சிருந்தாலும் இப்ப வெளியேத்த மாட்டான் ” என்றவன், ” எப்ப்டியும் நூத்தி இருவதுக்கு கொறையாது.” என்றான்..

 

பிரசவ வார்டில் அலைமோதும் கணவர்களைப் போல இருவரது செய்கையிலும் பதட்டம் மிகுந்திருந்தது. கையிலிருந்த பணத்தை வாங்கி எண்ணிப் பார்த்தான்.

 

“கரட்டுல வச்சிருப்பான்ல..”

 

“ஆரு புளுவன் வீட்லயா..? ”

 

“ம் “

 

“இந்நேரம் அவெ வீட்ல எம்பிட்டு கூட்டமோ.. ? ரேட்ட டபுளாக்கி இருப்பானே…! “

மறுபடி பணத்தை வாங்கி எண்ணினார்கள். “ஒங்கிட்ட வேற காசு இல்லியா..” செல்வம் பணிவாய்க் கேட்டான்.

 

‘எங்காத்தா சத்தியமா இல்லண்ணே.. ஒன்னியக் காட்டியும் காசா பெரிசு..”

நேராக கடைக்காரரிடம் வந்தான்.”பாருங்..ணே எங்க விதிய.. லீவு விடுற் நாய்க.. எங்கள்மாதிரி ஆள்களுக்கு சொல்லீட்டு விடணும்..ணே  இல்லாட்டி எதாச்சும் ஏற்பாடு செஞ்சிட்டு கடய மூடணும்..சொல்லுங்ணே”

 

“பிளாக்கில விக்கிறமாதிரிகூட ஒரு பத்தோ இருவதோ சேத்துக் குடுத்தாலும் கெடைக்கிற மாதிரி அரசாங்கமே செய்யலாம்” உடனிருந்தவனும் ஒரு உபரி கோரிக்கை வைத்தான். “ அதுல எவனோ ஒருத்தெ திங்கிற லாவம் சர்க்காருக்காச்சும்  சேரும்.”

 

கடைக்காரர் அதற்குமேல் பேச விழையவில்லை எந்தக்கருத்து சொன்னாலும் அவர்களது துடிதுடிப்பு அடங்கப்போவதில்லை என்பது துலாம்பரமாகத் தெரிந்தது. அதனால் தலையை ஆட்டுவதை மட்டும் முக்கிய கடமையாகக் கொண்டார்.

 

அங்குமிங்குமாய் அலைபாய்ந்து கொண்டிருந்த செலவம் ஒருகணம் நின்று முடிவுக்கு வந்தவனாய், சடாரென கையிலிருந்த கடிகாரத்தைக் கழற்றினான். “ணே.. கோச்சுக்காம இத வச்சுக்கிட்டு ஒரு நூறு ரூவா குடுங்க..எழ்நூறு ரூவ்வாப் பொருளு நாளைக்கு அம்பது ரூவா வட்டி சேத்துக் குடுத்து வாங்கிகிறே..”  என கையேந்தி நின்றான்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top