கால்கள்

5
(3)

தைக்கு கால் இருக்கிறதா..?!

அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் வரலாறு ஆசிரியர் வழக்கம்போல் கதை சொல்லி வகுப்பைத் தொடங்கினார். சுவாரசியமாக கதை சொல்வார் என்பதால் நாங்கள் ஆவலாய் இருந்தோம்.  பிரம்பை கையில் வைத்து தட்டிக்கொண்டே சொல்ல ஆரம்பித்தார்.

”அப்போ நான் சின்னப்பையன் ஒன்னாவது படிக்கிறேன்., நம்ம ஊர் மொட்டையாண்டி கோயில்ல எனக்கு மொட்டை அடிக்கிறாங்க., அடிச்சதும் நான் அழுகுறேன். எனக்கு எங்க அம்மா சக்கரப்பொங்கல வாயில ஊட்டிவிட்டு சமாதானம் சொல்றாங்க.,” மாணவர்களாகிய நாங்கள் இப்பொழுது இருண்டு கிடக்கும் யாரும் போகப் பயப்படும் மொட்டையாண்டி கோவிலில் அன்று அவருக்கு மொட்டை எடுத்திருக்கிறார்களே என்று ஆவலோடு கேட்கிறோம்.

”எனக்கு ரெண்டு அக்கா., அன்னக்கி தண்ணி எடுக்கணும்ன்னா மொட்டையாண்டி கோவில் பக்கத்திலிருக்கிற கம்பராயப் பெருமாள் கோயில் கெணத்துலதேன் எடுக்கணும். அக்காங்க ரெண்டு பேரும் தண்ணி எடுக்க என்னையும் கூட்டுக்கிட்டுப் போறாங்க., இன்னக்கி போல அந்தக் கெணறு இல்ல., அது மொட்டக் கெணறு., பாத்தாலே பயமா இருக்கும்.,” ம்.. ம்.. என்று பூம்பூம் மாடு போல நாங்கள் தலையாட்ட அவர் கதையைத் தொடர்ந்தார்.

”நல்ல கனமான பித்தளக் கொடம்., கயத்துல கட்றோம்ன்னு சொல்லி எங்க பெரியக்கா கொடத்த கெணத்துல போட்டுருச்சு., அதுவும் தொபுக்கடின்னு விழுந்திருச்சு.,” அய்யயோ என்றவாறு கதையில் நாங்கள் கவனாமாக அவர் இன்னும் கண்கள் விரிய சொல்ல ஆரம்பித்தார்.

”அக்காவுக்கு அம்மா மேல பயம். ரெண்டக்காவுமா சேந்து என் இடுப்புல கயத்தக்கட்டி கெணத்துல எறக்குறாக., எனக்குனாலும் பயம் மொட்ட வேற எடுத்திருக்கேன். மண்டையில தேய்ச்ச சந்தனம் பயத்துல வேர்த்து தண்ணியா ஒழுகி கண்ண வேற மறைக்கிது. சமாளிச்சுக்கிட்டு கெணத்துல கெடந்த கொடத்த எடுத்துக்கிட்டு அக்கான்னேன். ரெண்டு பேரும் கைமாத்தி கைமாத்தி கயத்த இழுத்து என்ன மேல தூக்குறாக., மேல வர்றேன்., வந்துக்கிட்டே இருக்கேன்., கெணத்துப் பக்கவாட்டுச் சுவரெல்லாம் நெறைய செடி வேற. உள்ளர்ந்து பூச்சிவட்ட எட்டிப் பாத்துருமோன்னு பயம் வேற.,” வகுப்பே நிசபத்தமாக எல்லோரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம்.

”கெணத்துலேர்ந்து தரைய ஒட்டி நுனிக்கு வந்துட்டேன்., திடீருன்னு கயறு அந்துபோச்சு..”

”அய்யோ சார் நீங்க உள்ள விழுந்துட்டீங்களா..”  ஒருத்தன் கதையின் பயத்தால் கேட்க.,

”அதெப்படி.. எங்க பெரியக்கா மொட்டையாண்டி எந்தம்பியக் காப்பாத்துன்னு கண்ண மூடிக்கிட்டு எந்தலமுடியப் புடிச்சு  அச்சுவெலாக்க மேல தூக்கிட்டாங்க., இப்போ நாவொங்களுக்கு கத சொல்லிக் கிட்டிருக்கேன்.” என்றார். மாணவர்கள் அனைவருக்கும் வாத்தியார் தப்பித்துவிட்டார் என்ற நிம்மதி. கைதட்டினார்கள். அங்குமிங்கும் நடந்தவாறு கதை சொன்ன ஆசிரியர் ஆசுவாசமாகப் பெருமையோடு நாற்காலியில் உட்கார்ந்தார்.

”சார்.,” என்றேன் எழுந்து நின்று.

”சொல்லு மகனே.,” என்றார் கதை சொல்லிய பெருமிதத்தோடு.

”நீங்க மொட்டை எடுத்திருக்கீங்க., பெறகெப்படி ஒங்க முடியப் பிடிச்சு ஒங்களத் தூக்குனாங்க..” என பளிச்சென்று கேட்டுவிட்டேன். மாணவர்கள் கெழுக்கென சிரித்துவிட்டார்கள். அமைதியான ஆசிரியர் அருகில் அழைத்தார்.

”கேக்கணும் இப்படித்தேங் கேக்கணும்.,” என்றவர் அவர் கையிலிருந்த பிரம்பால் என் கையை நீட்டச் சொல்லி கதைக்கு கால் இருக்கா கதைக்கு கால் இருக்கா என அடிக்க ஆரம்பித்தார்.

ஆனால் நான் சொல்லப் போகும் இந்தக் கதைக்கு கால்கள் இருக்கிறது. இக்கதை கால்களைப் பற்றிய கதை.

இந்தக் கால்கள்., காலும் காலும் சேர்ந்தே கால்கள் என்றாகிறது. இரண்டில் ஒன்றில்லாவிட்டால் உடல் மட்டுமல்ல வாழ்க்கையே நொண்டியாகிவிடும். அப்படி காலையோ கால்களையோ இழந்துவிட்டால் அதற்கு மாற்றாக ஊன்றுகோலை பயன்படுத்த வேண்டும் அல்லது அதற்கு நிகராக செயற்கையாய் வேறொன்றை இணைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. எப்படி இருந்தாலும் இயற்கையான கால்களுக்கு நிகராக அவைகள் இருந்துவிடப் போவதில்லை. அப்பொழுதும் நொண்டி நொண்டி தான். ஆறுதல் வார்த்தைகளும் தன்னம்பிக்கை வார்த்தைகளும் அன்பும் காலிழந்தவர்களுக்கு சிலபல நேரங்களில் கால்களாகக்கூடும்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் அப்படித்தான் கால்களை இழந்தவர்கள் போல. அவர்களது சொந்த ஊரிலேயே அவர்களுக்கானவை கிடைத்திருக்க வேண்டும். அப்படி கிடைக்காததன் விளைவாக செயற்கை கால்களா ஊர்விட்டு ஊர் மாநிலம் விட்டு மாநிலம் நாடு விட்டு நாடு வாழ்க்கைக்காக இடங்களை தேடி வந்தவர்கள் ஏராளம் பேர். ஆனாலும் அவர்கள் காலிழந்த நொண்டி மனிதர்களுக்குச் சமம் தான். வந்த இடங்களில் சில நல்ல மனிதர்கள் அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் கால்களாக கிடைத்திருக்கலாம்.

இருபத்தியேழு வயதான ராம்சிங் அவனது குடும்பத்தோடு உத்திரப்பிரதேசத்தின் ஒரு குக்கிராமத்திலிருந்து இங்கே குடும்பத்தோடு வந்திருந்தான். அவனுக்கு பத்தொன்பது வயதிலேயே பதினாறு வயது ஜோதிர்மயியை திருமணம் செய்து வைத்திருந்தார்கள். அதே கையோடு அங்கிருந்து கரும்பு வெட்டும் தொழிலாளியாக இங்கு வந்தவன் தனது மூன்று குழந்தைகளையும் இங்கேயே பெற்றுக் கொண்டான். மூத்த ஆண்குழந்தைக்கு பல்ராம்சிங் என்றும், இரண்டாவ்து ஆண் குழந்தைக்கு ஜெய்ராம்சிங் என்றும் மூன்றாவது பெண்குழந்தைக்கு சீதா எனவும் பெயர் சூட்டி மகிழ்ந்தவன் இங்கே கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் தான் ஒரு இந்து என்ற பெருமையோடும் விரைவில் இந்துராஷ்டிரா அமைய வேண்டும் என்ற ஆசையோடும் கனவோடும் வாழ்ந்து வந்தான்.

தான் பிறந்த இடத்தில் கிடைக்காத சம்பளம் இங்கே கிடைப்பதற்கு காரணமே இந்துராஷ்டிரத்தை அமைக்க இருக்கும் தலைவர்களின் சாணக்கியத்தனம் என எண்ணிக் கொண்டான். அதனாலேயே இந்தி பேசக்கூடியவர்களை தென்னிந்தியா முழுக்க அவர்கள் திட்டமிட்டு வேலைக்கு அனுப்பியிருப்பதாக நினைத்தான். இவர்களை இங்கே வேலைக்கு அழைத்து வந்து அந்த கமிசன் காசில் வயிறு கொழுத்தவர்களை தூதுவர்களாய்ப் பார்த்தான்.

இந்துராஷ்டிரம் அமைந்ததும் அவனது வாழ்வில் கங்கையாறும் பலகோடிச் செலவில் தேடப்படும் சரஸ்வதியாறும் ஓடுமென்றும் அப்பொழுது அவனுக்கான வாழ்க்கை செழிக்குமென்றும் விளைந்து நிற்கிற கருபம்புகளைப் போல தன் வாழ்வு இனிக்குமென்றும் நம்பிக் கொண்டிருந்தான்.

உத்திரப்பிரதேச மாநிலத் தேர்தல் வந்த பொழுது நிறைமாத கர்ப்பிணியாய் இருந்த மனைவியை அழைத்துக் கொண்டு ஓட்டுப் போடச் சென்றான். உடன் வேலை பார்க்கும் தமிழகத் தொழிலாளிகள் சத்தம் போட்டார்கள். புள்ளத்தாச்சி புள்ளைய இங்க விட்டுட்டுப் போனா நாங்க பாத்துகிற மாட்டமா என்ன என்று. அவன் கேட்கவில்லை. ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் எனறு கங்காணியிடம் செலவுக்கு கடன் வாங்கிக் கொண்டு சென்றவன் சீதா எனகிற மூன்றாவது குழந்தையுடன் திரும்பி வந்தான்.

“ஓட்டுப் போடப் போன எடத்துல புள்ளப் பொறந்துருச்சாம். பச்ச உடம்புக்காரிய அப்படியே கூப்புட்டு வந்துட்டாண்டி., என்னா மனுசன்” என இங்குள்ள பெண்கள் வயிற்றிலடித்துக் கொண்டார்கள்.

அந்தப் பகுதியில் கரும்புவெட்டு முடிந்து செங்கல்சூளை வேலைக்கு ராம்சிங்கின் குடும்பமும் இன்னும் சில குடும்பங்களும் மாறியிருந்தார்கள்.

ராம்சிங் மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் வந்த நேரம் இவன் ஓட்டுப் போட்ட கட்சி ஆட்சியைப் பிடித்திருந்தது. சாமியார் ஒருவர் முதல்வாரானார். ராம்சிங்கிற்கோ ஏக சந்தோசம். மத்தியிலும் நம்ம ஆட்சி மாநிலத்திலும் நம்ம ஆட்சி என குதுகலமானான்.

அவனுக்குள் பனிமழை பொழிந்தது. அடிவயிறு சிலிர்த்தது. ஆனால் அவன் வாழ்க்கை செங்கல்சூளையில் வெந்து கொண்டிருந்தது.

”நம் கஷ்டமெல்லாம் தீர்ந்தது கண்ணா., நம்ம கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டது. நம் கனவு பலிக்கப் போகிறது. வா கொண்டாடுவோம்.” எனத் தன் மகன்களைத் தூக்கிக்கொண்டு ஹிந்தியில் பாடினான்.

சப்பாத்தி சுட்டுக் கொண்டிருந்த ஜோதிர்மயி.,

“உப்புக்கும் வழியில்லாமல்., துப்புக்கும் வழியில்லாமல்., சொந்தங்களை விட்டுவிட்டு சொந்த மண்ணை விட்டுவிட்டு இங்கே வந்து இருக்கிறோம். எல்லாம் இந்த வயித்துக்காக. நீ இப்படி இந்து மட்டும் தான் எனப் பேசுபவர்களை நம்பி பாடுகிறாய். ஆனால் நீ ஏமாந்து போவாய்.” என திட்டினாள் ஹிந்தியிலேயே.

”போடி., பெண் என்கிற ஈனப் பிறவியே., நீ பேசுவதற்கு அருகதையற்றவள்., உன் வேலையை மட்டும் பார். படுப்பதற்கும் வேலை செய்வதற்குமான அடிமை நீ. தீட்டானவள் பேசக் கூடாது.”  என கோபமாய் கத்தியவன் சுடுகிற சப்பாத்திக் கல்லை எடுத்து அவள் முதுகில் அடித்தான்.

”இப்படித் தான் பெண்ணை அடிப்பாயா., இதைத் தான் உன் தலைவரும் உன் கட்சியும் உனக்கு சொல்லிக் கொடுத்தார்களா., உங்களால் இந்த நாடு நாசமாகப் போகிறது.” என்று அழுது கொண்டே சிதறிய சப்பாத்திகளைப் பொறுக்கத் தொடங்கினாள் ஜோதிர்மயி.

ஒரே நாடு ஒரே நாடு என பிரதமர் அனைத்தையும் செய்து வருகிறார். பாகிஸ்தான் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிறார். ராமர் கோவிலை மீட்டெடுத்துவிட்டார்., அமெரிக்காவையும் சீனாவையும் தன் ராஜதந்திரத்தால் வளைத்து போட்டிருக்கிறார். உலக நாடுகள் முழுக்க சுற்றி அனைத்தையும் அள்ளி வருகிறார். யோஹா செய்கிறார்., மான்கீபாத்தில் எழுச்சியுரை ஆற்றுகிறார். விஞ்ஞானிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார். டீ விற்ற சாதாரண தொழிலாளி ஏழைத் தாயின் மகன் இன்று கவுரவமாக பத்து லட்ச ரூபாயில் ஆடை அணிகிறார். ஒரு லட்சம் ரூபாய் காளான் தின்கிறார். கருப்புப் பணத்தை ஒழித்தார். தீவிரவாதிகளை எதிர்த்து நாட்டுக்காக ராணுவ வீரனாய் போராடுகிறார். நாடு முன்னேற அவ்வப்பொழுது கசப்பு மருந்த்களைக் கொடுக்கிறார். அவர் சாவதற்குள்ளாக எப்படியும் பதினைந்து லட்சம் ரூபாயை குடிமக்களின் வங்கிக் கணக்கில் செலுத்திவிடுவார்.  என நம்பினான் ராம்சிங். பெற்றவர்களையும் உற்றவர்களையும் கூட அவன் அப்படி நம்பியிருக்க மாட்டான்.

பிரதமர் அப்படி வெளுத்து வாங்க., மாநில முதல்வர் சும்மா இருப்பாரா., கோமாதா பூஜை செய்கிறார், கோமியம் குடிக்கிறார்., இந்து மதத்தின் காப்பளனாக அவர் தன்னை அடையாப்படுத்திக் கொள்ள அரும்பாடுபட்டு வருகிறார். மாட்டுக்கறி தின்போர் இந்துவோ இஸ்லாமியரோ துவம்சம் செய்கிறார். மருத்துவமனையில் இறந்தவர்களை நோயாளிகளை தோளில் சுமக்க வைத்தும் தெருத்தெருவாய் நடக்க வைத்தும் அழகு பார்க்கிறார். அவர்களது கட்சிக்காரகள் காந்தியை திரும்ப சுடுகிறார்கள். தலித்துக்களை அம்மணமாக ஓடவிடுகிறார்கள். இவர் பங்கிற்கு மாநிலம் முன்னேற இவரும் கசப்பு மருந்துகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தார்.

இப்படியான செய்திகளை ராம்சிங் நாளொருவண்ணமும் பொழுதொரு வண்ணமுமாகக் கேட்டு வர., அந்தக் கசப்பு மருந்தா அல்லது விசமா என்கிற குழப்பத்திலும் கவலையிலும் வேலைகளைச் செய்து வந்தான். ஆனாலும் பிரதமரையும் முதல்வரையும் ராமனாகவும் லட்சுமணனாகவும் நம்பினான். தான் அவர்களுக்கு அனுமனாக ஜடாயுவாக இல்லாவிட்டாலும் கூட அணிலாகவாவது இருக்கவேண்டும் என எண்ணினான்.

கொரோனோ நோய்த்தொற்று என்கிற பயப்பரவல் உலகையே பயமுறுத்தும் வண்ணம் வளர்ந்து கொண்டிருக்க.. இங்கே திடீரென்று முன்னறிவிப்பு ஏதுமில்லாமல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது

பிரதமரின் கொரோனா ஊரடங்கு அறிவிப்பு அவனது கனவுகளில் மண் அள்ளிப் போட்டது. ஆனாலும் அவன் பிரதமரின் முடிவினை வரவேற்றான்.

களைக்கம்புகளாலும் கம்பிகளாலும் தகரங்களாலும் கயிறுகளாலும் வழி மறிக்கப்பட்டு தெருக்களும் சாலைகளும் முடங்கின. வீடுகளில் வேப்பங்கொழைகள் கட்டப்பட்டன. மஞ்சள் தண்ணி தெளிக்கப்பட்டது.

போட்டது போட்டபடியே  அனைவரும் வீடடங்கானார்கள். ஊடகங்கள் வினாடிக்கு வினாடி நோய்தொற்று குறித்த பயத்தை உருவேற்றிக் கொண்டிருந்தன அரசாளர்களுக்குச் சளைக்காமல்.

அன்றாடங்காய்சிகளும் தினக்கூலிக்கு வேலை பார்ப்பவர்களும் இடம் பெயர்ந்த தொழிலார்களும் வெளியூர் சென்றவர்களும் என ஆங்காங்கே எல்லோரும் அடைபட்டனர் இல்லை அடைக்கப்பட்டனர்.

உணவுக்கும் தண்ணீருக்கும் இவர்கள் படும்பாடு  ஒருபுறம் இருக்க, இயற்கை உபாதைகளைக் கழிக்க பொதுக் கழிப்பிடங்களையே பயன்படுத்திவந்தவர்களின் நிலைமை இன்னும் மோசம்.

அவர்களின் கண்ணீர் மட்டும் கதைகள் சொல்லும் காலம் போய் அவர்களின் குருதியணுக்களும் கதை சொல்லும் காரண காரியங்களை ஆட்சியாளர்கள் கட்டமைத்து விட்டிருந்தனர்.

“பார்த்தாயா இந்த முஸ்லீம்கள் தான் டெல்லியில் மாநாடு நடத்தி இந்தியா முழுக்க கொரோனா வைரஸை பரப்பியுள்ளார்கள். எங்கள் பிரதமர் மக்களைக் காப்பாற்றவே ஊரடங்கில் வைத்திருக்கிறார்., மக்களுக்கான தலைவர் அவர் மட்டும் தான்.” என்றான் மனைவியிடம் ராம்சிங்.

செங்கல்சூளையின் மூலையில் கட்டப்பட்டிருந்த தகர வீட்டு முற்றத்தில் ஜோதிர்மயி கோதுமையில் கப்பிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தாள்.

ஊடகங்கள் வாயிலாக பிரதமர் கைதட்ட அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார்.

கைதட்டல்கள் பாத்திரங்களின் உருட்டல்களாகவும் தட்டல்களாகவும் வானவேடிக்கைகளாகவும் மாறியிருந்தன. பிரதமர் ஒரு போர்வீரனைப் போல கவச உடைகள் அணிந்து கையில் கதாயுதமும் வாளும் கொண்டு கொரோனா வைரஸை தனி ஒரு ஆளாக துவம்சம் செய்து கொண்டிருப்பதாக ராம்சிங் கனவு கண்டான்.

ஜோதிர்மயி ஏற்கனவே கோதுமையிலிருந்து பிரித்துப் பத்திரப்படுத்தி வைத்திருந்த கப்பிகளை மாவாகத் திரித்துக் கொண்டிருந்தாள். குழந்தை சீதா ஜோதிர்மயியின் இடது மார்பில் சுரக்காத பாலுக்கு வீறிட்டு அழுது கொண்டிருந்தாள். ஜோதிர்மயி குழந்தையை வலது மார்புக்கு மாற்றினாள். மகன்கள் பல்ராம்சிங்கும் ஜெய்ராம்சிங்கும் கையில் கிடைத்த ஒரு சப்பாத்தி ரொட்டிக்காக அடித்துக் கொண்டிருந்தார்கள்.

“உன் பிள்ளைகளைப் பார். அவர்களை சமாதனப்படுத்த மாட்டாயா., உன் தலைவர்களைப் போல நீயும் பெற்ற மக்களை அடிக்கவிட்டு வேடிக்கை பார்க்கப் போகிறாயா.?”  என்று ராம்சிங்கைப் பார்த்துக் கத்தினாள். ராம்சிங் கோபத்தில் பிள்ளைகளை அடித்தான்.

மக்கள் அனைவரும் வீடடைக்கப்பட்டனர். கடைகள் திறக்கவில்லை, சாலைகள் அமைதியாயின, விளைந்த பயிர்கள் விலையில்லாமல் போனதால் வீதியில் கூட கொட்டமுடியவில்லை.

ஊடகங்களின் தொடர் கொரோனா அறிவிப்பும் வேலையில்லா திண்டாட்டமும் உணவுப் பற்றாக்குறையும் வாழ்வு தேடி இடம் பெயர்ந்தவர்கள் மத்தியில் உயிர் பயத்தினை ஏற்படுத்தியது. அரசின் நடவடிக்கைகள் இவர்களை அநாதையாய் இறந்துவிடுவோமோ என்ற அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.

ராம்சிங்கின் குடும்பமும் இவனோடு வந்த மற்ற சில குடும்பங்களும் கேட்பாரற்று செங்கல் சூளையிலேயே கிடந்தனர்.

முதல் ஊரடங்கில் கொஞ்சமாய் இருந்த பணமும் உணவும் தீர்ந்து போனது. இவர்களை அழைத்து வந்த ஏஜெண்டுக்குப் போன் செய்தான். அந்தத் தூதுவன் திரும்ப அழைக்கிறேன் எனச் சொல்லிவிட்டு அழைக்கவுமில்லை இவன் அழைப்புகளை எடுப்பதுமில்லை.

கரும்புத் தோட்டத்துக்கும் செங்கல் சூளைக்கும் இவனுக்கு வேலையமர்த்திக் கொடுத்த கங்காணி இவனுக்கு சொற்பமான உதவிகளைச் செய்து தேற்றின்னான். இரண்டு நாளுக்கான உணவைக் கொடுத்து இருபது நாளைக்கு ஒப்பேத்தச் சொன்னான்.

இவர்கள் சொந்த ஊர் திரும்பிவிட்டால் இங்கே வேலைக்கு ஆள் வேண்டுமே. திரும்ப கமிசன் கொடுத்து அழைக்க முடியாது. போனால் வருவார்களா எனத் தெரியாது. அதற்காகவே கங்காணியின் அந்த சொற்ப உதவி. செங்கல் சூளை முதலாளியும் சிறு உதவிகளைச் செய்தார். இடையில் பெய்த மழையில் அறுக்கப்பட்டு வேக்காடு இல்லாத பச்சை செங்கல்கள் கரைந்தன. வேகவைத்து வேலைக்குத் தயாரான செங்கல்கள் இடத்தை அடைகாத்துக் கொண்டிருந்தன.

ஊடகங்களில் சமூகச் செயற்பாட்டாளர்கள் அரசின் நடவடிக்கைகளை விம்ர்சனம் செய்தார்கள். வறுமையும் பட்டினிச் சாவும் ஏற்படும் என எச்சரித்தார்கள். ஆனால் அரசோ ஆளும் கட்சி ஆட்களோ அல்லது அவர்களுக்கு துணை செய்வோர்களோ அதையெல்லாம் பற்றி கவலை கொள்ளவில்லை. மாறாக அசட்டையாகப் பேசினார்கள்.

இப்படியே தொடங்கிய இரண்டாவது ஊரடங்கில் மக்கள் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் தங்கள் சொந்த ஊருக்கு வெளியேறத் தொடங்கினார்கள்.

இது சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த அரசுகள் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவத் தயாராக இருக்கிறோம். இங்கேயே இருங்கள் உங்களுக்கான உணவுக்கு ஏற்பாடு செய்கிறோம் என்றார்கள்.

ராம்சிங்கின் குடும்பம் உட்பட பல குடும்பங்கள் அரசு ஏற்படுத்திய முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அது செங்கல்சூளையைவிடவும் வெப்பமாய் இருந்தது.

பிரதமர் மக்களுக்கு விளக்கேற்ற அழைப்புவிடுத்தார். அந்த விளக்கொளியில் டார்ச்லைட் வெளிச்சத்தில் மெழுகுவர்த்தி உருகுதலில் கொரோனா செத்துவிடும். இதை நமது பிரதமர் வேதங்களில் தேடிப்பிடித்து அறிவித்துள்ளார். வாருங்கள் விளக்கேற்றுவோம் வாருங்கள் விளக்கேற்றுவோம் என அவரது கட்சியார்கள் விடாமல் கூவினார்கள்.

மக்களும் விளக்கேற்றினார்கள். ஊரடங்கில் அவர்களுக்கு மட்டும் எப்படி வெடிகிடைத்ததோ வானத்தை வெடிவேடிக்கைகளால் புகைகக்கி மகிழ்நதனர்.

“நீ எல்லாம் மனிதனா., மிகவும் கெஞ்சி அந்த மூன்றாவது தெருவின் ஒருவீட்டில் எண்ணெய் வாங்கி வைத்திருந்தேன். தினமும் மினுக்கு மினுக்காகாப் பத்து நாட்களாகப் பயன்படுத்திவந்தேன்  அதைப் போய் விளக்கேற்றுகிறாயா.,” கோபத்தில் கடுகடுத்தாள் ஜோதிர்மயி.

“போடி இவளே., இன்று எங்கள் கட்சி தொடங்கிய நாள். எப்படி இந்தியாவே விளக்கேற்றியது பார்த்தாயா., வானவேடிக்கைகளைப் பார்த்தாயா.? இது தான் எங்கள் தலைவர்களின் ராஜதந்திரம்.” என அசட்டையாகச் சிரித்தான் ராம்சிங்.

”நீ உருப்படவே மாட்டாய். எங்களையும் சேர்த்து நீ நடுரோட்டில்தான் நிற்க வைக்கப் போகிறாய்.” என ஜோதிர்மயி வயிற்றிலடித்துக் கொண்டு அழ குழந்தை சீதா வீறிட்டு பசியில் கத்த ஆரம்பித்து.

அரிசியும் பருப்பும் மட்டும் போதுமா., அதை உணவாக்க அடுப்பும் விறகும் எண்ணையும் வேண்டாமா.? குழந்தைகளுக்கு பால் வேண்டாமா., தூங்குவதற்கு விரித்துக் கொள்ள ஒரு பாய் அல்லது துண்டு வேண்டாமா., தொட்டில்கட்ட ஒரு துணியும் இடமும் வேண்டாமா., எத்தனை நேரம் குழந்தையை மடியிலும் தோளிலும் கிழிந்த லுங்கியை தரையில் விரித்து தூங்க வைக்க முடியும்.

இப்படி இரவும் பகலும் கணமாயும் ரணமாயும் கழிந்து கொண்டிருந்தது. கொரோனா பாதிப்பிலிருந்து தடுத்துக் கொள்ள அடிக்கடி கை கழுவ விளம்பரங்களும் அறிவுப்புக்களும் வந்த வண்ணமிருக்க கழிப்பறையே இல்லாமலும் சுத்தமான தண்ணீர் இல்லாமலும் சூரியனையும் நிலவையும் கடந்து கொண்டிருந்த நாட்களோடு இக்குடும்பங்கள் போராடிக் கொண்டிருந்தன.

ராம்சிங்கின் பெண் குழந்தை சீதாவுக்கு காய்ச்சல் கண்டது. சரியான மருத்துவ வசதி கிடைக்கவில்லை. இதற்கிடையில் நாடெங்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

பசுமையைப் பிழிந்து கருமையாய் நீண்டு கிடக்கும் தார்ச்சாலைகளெங்கும் தேசத்தின் வறுமையும் மக்களின் பயமும் சுவடுகளாய் நிரம்பிக் கொண்டிருந்தன. மரங்கள் அழித்து உருவாக்கப்பட்ட அந்த சாலைகளின் சாலைப்பிரிபான்களில் ஓங்கி வளர்ந்திருக்கும் அரளிச் செடிகளில் விசம் நிரம்பிய அரளிக்காய்கள் காய்த்து தொங்கிக் கொண்டிருந்தன.

இப்பொழுது கோயம்பேடு மார்கெட் தொழிலாளர்களால் தமிழகம் முழுவதும் வைரஸ் பரவுவதாக ஊடகங்கள் வாசித்தன.

“போக்கிடமும் இல்லாமல் வருமானமும் இல்லாமல் முகத்திற்கு முகம் பார்க்க முடியாமல் இருக்கிறோம்., அநேகமாக மூன்றாவது ஊரடங்கை அறிவிப்பார்கள் போல.” என்றார் முகாமிற்கு வந்திருந்த செங்கல்சூளை முதலாளி வாயில் இருந்த பீடியை கீழே எறிந்தவாறு.

“மூன்றவதுமா., தாங்காதுண்ணே..” என்றான் ராம்சிங்.

மூன்றாவது ஊரடங்கு தொடங்கியது.

வழக்கம்போல் பிரதமர் தன் வாயால் சுட்ட வடைகளை நாட்டு பிரஜைகளுக்கு வாரிவாரி வழங்கிக் கொண்டிருக்கிறாரென கார்டூனிஷ்டுகள் வரைந்து தள்ளினார்கள்.

அவர் பாணியிலேயே அவரது கட்சியார்களும் ஊடகங்களில் கருகக் கருக வடை சுட்டுக் கொண்டிருக்கிறார்களென எதிர்க்டசிகளும் சமூகச் செயற்பாட்டாளர்களும் வெடித்துக் கொண்டிருந்தனர்.

சரக்கு லாரிகள் மாநிலம் விட்டு மாநிலம் ஓடத் துவங்கியிருந்தன. லாரிகள் ஓடியது மக்கள் வாழ்க்கையில் ஓட்டம் இல்லை.

நடப்பவர்களில் கொஞ்சம் நஞ்சம் கையில் காசிருந்தவர்கள் லாரிகளில் பயணமானார்கள். அப்படி பயணப்பட்டவர்களை பிடித்து அரசு திரும்ப தனிமைப்படுத்தியது.

சில லாரி விபத்துக்களும் தற்கொலைகளும் ஆங்காங்கே நடக்க ஆரம்பித்தன. ரயில் தண்டவாளங்களின் வழியாக நடந்து சென்றவர்கள் தண்டாவாளத்திலேயே சரக்கு ரயில் மோதிச் செத்தார்கள்.

இச்செய்திகள் ராம்சிங்கிற்கு குழப்பத்தையும் பயத்தையும் அதிகரித்தது. இவர்களைப் போல தானும் தன் குடும்பமும் நடக்க வேண்டாம் என எண்ணினான். அரசு எப்படியாவது தங்களை தங்கள் ஊருக்கு அனுப்பி வைக்கும் என நம்பினான். ஊடகங்களில் பேசும் சமூகச் செயற்பாட்டாளர்களின் கருத்துக்களுக்கு அரசு செவிசாய்க்கும் என நம்பினான்.

நம் பிரதமர் என்ன செய்வார். கோரோனவை எதிர்த்து கடுமையாகப் போராடி போராடி அலுத்துவிட்டார். ஆனாலும் மனம் தளராமல் போராடி வருகிறார் பாவம்., என எண்ணினான் ராம்சிங்.

ஆனால் கரும்புத் தோட்டங்களிலும் செங்கல் சூளையிலும் சொந்த மண்ணிலும் ஓடியாடிய அவனது கால்கள் அவனது மூளையின் முடிவுகளை அவமதித்தது. கால்கள் அவனது மனச்சாட்சியாய் இருந்து கிளம்பிவிடத் துடித்தது.

”கவலைப்படாதே., அடுத்தவாரம் நம் ஊருக்குச் செல்ல ரயில் ஏற்பாடு செய்ய இருக்கிறார்கள். நாம் இனி இங்கே வர வேண்டாம். ஊரிலேயே எதையாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம்.” என மனைவியைத் தேற்றினான் ராம்சிங்.

முகாமில் இருந்தவர்களும் அந்த முடிவுக்கே வந்திருந்தார்கள்.

“சரி இவ்வளவு நாட்கள் இருந்துவிட்டோம் இன்னும் ஒருவாரம் தானே பல்லைக் கடித்துக் கொண்டு தள்ளிவிடுவோம். ஆனால் அங்கேயும் என்ன பாடுபடப்போகிறோம் எனத் தெரியவில்லை” என்றாள் ஜோதிர்மயி.

சுத்தமாய் காசில்லாமல் போனவர்களுக்கு தங்கள் ஊர் செல்ல ரயில் பயணம் அறிவிக்கப்பட்டது கட்டணத்துடன்.

ராம்சிங் தலையில் இடி இறங்கியது. இதை கசப்பு மருந்தாக ஏற்றுக் கொள்ள ராம்சிங் மனம் மறுத்தது.

பெரும் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்களை அரசு தள்ளுபடி செய்தது. இங்கே ஏழைகளின் பற்கள் பிடுங்கப்பட்டு முதுகெலும்புகள் ஒடிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

எதிர்கட்சிகள் அரசின் போக்கை கண்டித்தன. ரயில் செலவை தாங்கள் ஏற்றுக் கொள்வதாக கூறின. ராம்சிங்கின் அரியாசனத்தில் விழுந்த ஓட்டையின் வாயிலாகப் பிரதமர் நழுவிக் கொண்டிருந்தார்.

அந்த போர்வீரர்., அய்ம்பத்தாறு இஞ்சுக்காரர்., அவர் உருவாக்கிய அய்நூற்றி தொண்ணூற்றியேழடி சிலையைவிடவும் உயர்ந்து தலையில் கொம்புகள் முளைத்து. அவரது பற்கள் வேட்டையாடும் நாயின் பற்களைப் போல மாறி., அவர் அண்டம் அதிரச் சிரித்து தன் கையிலிருந்த கதாயுதத்தால் ராம்சிங்கின் மூளையைச் சிதறடிப்பதாய் கனவு கண்டு கதறினான்.

உடம்பெல்லாம் வியர்த்து பயம் தொற்றிக் கொண்டது. மனசும் உடம்பும் ராம்சிங்கிற்கு நடுங்கியது.

மூட்டை முடிச்சுக்களை தலையில் தூக்கிக் கொண்டான் ராம்சிங். செங்கல்சூளை முதலாளி கொடுத்த ஆயிரம் ரூபாய் பணத்தை இடுப்பில் பத்திரப்படுத்திக் கொண்டு ஜெய்ராம்சிங்கை தோளில் தூக்கிக் கொண்டான். பல்ராம்சிங் மிச்ச மீதியிருந்த மாவில் சுடப்பட்ட சப்பாத்தி ரொட்டிகள் கொண்ட பையை தலையில் வைத்திருந்தான். அவனது இரண்டு தோள்களிலும் பேக்கேஜ்டு டிரிங்கிங் வாட்டர் பாட்டில்களில் முகாமின் தொட்டியிலிருந்து பிடிக்கப்பட்ட தண்ணீர் தன்னை நிரப்பிக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்தது.

குழந்தை சீதாவை இடுப்பில் சுமந்தவாறு ஜோதிர்மயியும் தயாராகிவிட்டிருந்தாள். மற்ற சில குடும்பங்களும் அவர்களோடு சேர்ந்து கொண்டனர்.

அவர்களின் கால்கள் நடக்க ஆரம்பித்தன.

வெப்பத்தில் கானல்நீரை நிரப்பிக்கொண்டு உருகும் தார்ச்சாலைகள் இவர்கள் குருதியை உறிஞ்ச தங்கள் அசுர நாவுகளை விரித்து வைத்திருந்தன.

கங்கையாறும் தேடப்படும் சரஸ்வதியாறும் இவர்களின் கண்களில் திரண்டு நிற்க பிரதமர் நான்காவது ஊரடங்கை அறிவிக்க தயாராகிக் கொண்டிருந்தார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

10 thoughts on “கால்கள்”

 1. இலக்கியங்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. அவை சமகாலத்து சமூகத்தை காட்சிபடுத்தும் மற்றும் காலம் கடந்தும் அவற்றிற்கு சாட்சியாக, வரலாறாக நிற்கும். சிறுகதைகளும் இலக்கியங்களே. மேற்கண்டவாறு, இக்கால சமூகத்தை அதன் உண்மை தன்மையை பதிவு பண்ணும் விதமாக அமைந்துள்ளது இச் சிறுகதை – கால்கள். கரோனா ஊரடங்கு காலத்தை அதன் இயல்போடும் அதனோடு இணைந்த போலித்தனமான அரசியலையும் பதிவு செய்கிறது. முக்கியமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பொதுவான மனநிலையையும் அவர்கள் அனுபவிக்கிற கஷ்டங்களையும் அறியாமைகளையும் பதிவு செய்கிறது இச்சிறுகதை .
  மொட்டை அடித்த சிறுவனை முடியை பிடித்து தூக்கி விட்டு காப்பாற்றியதாக கூறும் கதைக்கு கால்கள் இல்லை என்ற அறிவு விளக்கத்துடன் துவங்கும் சிறுகதை, மக்களை மொட்டையடித்து கொண்டே முடியை பிடித்து பின்னாளில் காப்பாற்றுவோம் என்ற வகையில், பதினைந்து லட்சம் ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் வரவு வைக்கபடும் என்ற வார்த்தை ஜாலங்களை நம்பி இன்னும் எதிர்பார்த்து கொண்டு அரசியல் களப்பணி செய்யும் மதஅபிமான தொண்டார்களை அடையாளபடுத்துகிறது. வண்டி குதிரைக்கு முன் கட்டபட்ட கொள் -ளை தாவிபிடிக்க முயற்சித்து வண்டியை இழுத்து கொண்டே ஓடி கொண்டிருக்கும் அஞ்ஞான விலங்குகளுக்கு இணையாக தொண்டர்களை முன்னேற்றிய, நாட்டை ஆளும் அரசியல் தலைவர்களின் திறமையை ஏதோ ஒரு வகையில் பாராட்டியே ஆகவேண்டும். அத்தகைய ஒரு உண்மை தொண்டனாக ராம்சிங்கும், நிகழ்காலத்தை உணர்ந்து கொள்ளும் மனசாட்சியாக அவனது மனைவி ஜோதிர்மயி-யும் உள்ளனர். அணில்கள் முதுகில் ராமரின் கோடுகளோடு அழகாக துடிப்புடன் வலம் வந்தாலும், ராமர் காலத்திலும் இன்றும் எவ்வளவு விசுவாசமாக இருந்தாலும், கவண்களாலும் கற்களாலும் அடிப்படுவதும் தொடரவே செய்கிறது. டீ வித்து பிழைத்தவர் ஒரு லட்சத்திற்கு காளான் உணவும், 10 லட்சத்திற்கு ஒரு உடை உடுத்தும் வண்ணம் சொந்த கடும் உழைப்பில் முன்னேறிய தலைவர்கள் ஆளும் நாட்டில் ஒரு அணில் போன்ற தொண்டனுக்கு 15 லட்சம் கிடைக்காமலா போய்விடும் என்ற சராசரி தொண்டனின் எதிர்பார்ப்பு அவனை பொறுத்து அறிவுடைய நம்பிக்கையே. கூடவே மற்ற மதத்தினரை விரட்டியும் இழிவு படுத்தியும், இந்துராஷ்டிரம் நிறுவபடும் என்ற போனஸ்-வுடன் கிடைக்குமென்றால் கசக்கவா செய்யும்? எவ்வளவு உரிமைகள் – பிற மதத்தினரை அடிக்கலாம், கொன்று விடலாம், கற்பழிக்கலாம், பொருட்களை சூறையாடலாம் – வீரத்தையும் தேசபக்தியையும் நிரூபிக்க இவ்வளவு வாய்ப்பு முன்பு கொடுக்க படவில்லையே. இந்த சுதந்திரத்தையடைய சில கசப்பு மருந்துகளை தற்போது தலைவர்கள் கொடுப்பது மொத்த நலனுக்காக என்று ராம்சிங் உறுதியாக நினைத்ததில் இந்த கரோனா வந்து மனஉறுதியை அசைத்து விட்டது.

  இச்சிறுகதையில் கூறப்படுவதுபோல, எல்லாவகையிலும் நவீனம் என்று கூறப்படுகிற இக்காலத்தில் அடித்தட்டு மக்களுடைய கண்ணீர் அல்ல குருதியே பல கதைகளை கூறிக் கொண்டு இருக்கிறது. நவீனத்திற்குள் மனங்கள் சிதைந்து கொண்டு இருக்கிறது. அதற்கு மருந்தாகவா நெடுஞ்சாலை முழுதும் மரங்கள் அழிக்கபட்டு அரளி செடிகள் தினமும் தண்ணீர் விட்டு அழகாக வளர்க்கபட்டு அரளி காய்கள் காய்த்து தொங்கவிடபடுகிறது? நடந்து செல்லும் கால்களுக்கு தண்ணீர் கொடுக்கத்தான் முன்னேற்பாடுகள் இல்லை. ஆசிரியர் குறிப்பிடுவது போல, பசுமை பிழிந்து கருமையான தார்சாலை போல, மனங்களும் மாறி கொண்டிருப்பதாக கதை உணர்த்துகிறது. நாடகத்தில் காட்சி மாறுவது போல் இல்லாமல், இயல்பான தொடர்ச்சி இருந்தால் இச்சிறுகதை மேலும் சிறப்பாக அமைந்திருக்கும். நன்றி.

  டார்வின் ராஜ் பி
  9840285958.

 2. Pughal vendhan vd

  கால்கள் – ஆம் இந்த கதையில் கால் இல்லை, கால்கள் இருக்கின்றது, இன்றைய ஒட்டு மொத்த கேலிக்கூத்து தாண்டவங்களை எட்டி உதைத்து, நைய புடைக்க…

  “கொரோனா
  கைவிடப்பட்ட வர்களுக்கு ஒரே ஆறுதல்
  கால்கள்”

  புலம்பெயர்ந்து தவிக்கும் மக்களின் பிரதிபலிப்பாக ராம்சிங், அதீத நம்பிக்கை, பெருத்த ஏமாற்றம், கேள்விக்குறியான வாழ்க்கை என உயிர்வாழ போராடிக்கொண்டிருக்கும் ஒருவனாக…

  “இன்னுமா இந்த ஊரு நம்பல நம்புது” வசனத்திற்கு இணையான பேராட்சி நடந்து/நடத்தி/நடித்துகொண்டிருக்கும் இந்த ஊர் அடங்கில், இந்தக் கால்கள் சற்றே நம்பிக்கையாக நமக்கு, கூர்மையான ஈட்டியாக அவர்களுக்கு…

  இது கதையல்ல நிஜம் என்று நாம் அறிந்தாலும், இக்கட்டான இச்சூழ்நிலையில் பரிதவிக்கும் புலம்பெயர் மக்களின் வறுமைக்கு நம்மால் இயன்றதை நாம் செய்து கொண்டிருந்தாலும், உள்ளம் வெதும்புவது பேருண்மை…

  இயல்பான, யதார்த்தமான வார்த்தைகளில் இச்சிறுகதை நம்மை கட்டிப்போட்டு, கண் கலங்க வைப்பது இதன் மாபெரும் வெற்றி…

  எழுத்தாளர் தமிழ்மணி, பெயருக்கு ஏற்ப, நம் தமிழ் மூலம் பெருத்த மணி அடித்துள்ளார், கண்டிப்பாக கேட்க வேண்டியவர்களுக்கு எச்சரிக்கை மணி அடித்து ரீங்காரமிடும் இந்த கால்கள்…

  ஓவியமும் தன் பங்கிற்கு தூண்டுகோலாக இந்த கால்களுக்கு…

  இறுகி கொண்டிருக்கும் இந்த ஊரடங்கு சூழ்நிலையில், இணைந்து நாம் பயணித்து புலம்பெயர் மக்களின் வாழ்வாதாரத்திற்கு சிறு பயனேனும் கிடைத்திட விடை தேடுவோம் என்று,
  கால்களை மட்டும் நம்பி நடந்து, கடந்து சென்று கொண்டிருக்கும் இவர்களுக்கு, நம் கைகளால் நம்மாலான உதவியை செய்து அவர்கள் உள்ளம் ஆறுதல் பெற வேண்டுமென்று
  மிகச்சரியான எண்ணத்தோடு…

  புகழ்வேந்தன் விதே, மடிப்பாக்கம், சென்னை.
  9940585765

 3. Sakthi Bahadur

  தா. சக்தி பகதூர். திருவண்ணாமலை
  9894960412

  காலாகாலமாக உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட பெண்கள் உரத்த குரலில் கேள்வி கேட்காமல் இருக்க அவர்களுக்கிடையே மாமியார் மருமகள் சண்டை…. நாத்தனார்,ஓரகத்தி, சக்களத்தி போன்ற போன்றஉறவு முறைகளில் பெண்ணுக்கு வில்லிகளை உருவாக்கி அவர்களுக்குள் மோத வைத்திருக்கும் ஆணாதிக்க சமுதாயம்.

  அதேபோலத்தான் ஜாதி, மதம், இனம் என்று மக்களை மக்கள் உடனே மோதவிட்டு ஆளும் வர்க்கத்தை கேள்வி கேட்காமல் திசை திருப்பி வைத்திருக்கும் அதிகார வர்க்கம்.

  நாம் சுரண்டப்படுவது நமக்கு தெரியாமல் இருக்கவும், தெரிந்தாலும் கேள்வி கேட்காமல் இருக்கவும் நம் மனதை பொய்யான கதைகளால் மாயத்திரை போட்டிருக்கும் இன்றைய சமுதாய நிலையை அழகாக உரித்து காட்டும் கதை அய். தமிழ்மணி அவர்களின் கால்கள்.

  இந்தக் கதையை படிக்கும்போது நான் சிறு வயதில் கேட்ட ஒரு கதை நினைவுக்கு வருகிறது. வீட்டில் சுவையான கொழுக்கட்டை செய்து சுடச்சுட தானும் தன் மக்களும் உண்டுவிட்டு தன்னுடைய கண்தெரியாத மாமியாருக்கு பூனை குட்டியை அவித்து கொழுக்கட்டை என்று சொல்லி கொடுக்கிறாள் மருமகள்.

  கையால் தடவியயும் மூக்கால் முகர்ந்தும் அது என்னவென்று அறிந்து அதை தூக்கி வீசிவிட்டு அந்த தாய்க்கிழவி….
  பொருளீட்ட சென்றிருந்த தன் மகன் வந்தவுடன் அவனிடம்,

  ”கொழுக்கட்டைக்கு கண்ணுன்டா மகனே…
  கொழுக்கட்டைக்கு கால் உண்டா மகனே….
  கொழுக்கட்டை வால் உண்டா மகனே…”
  என்று சொல்லி அழுது பாடுகிறாள்.

  கதைகள் என்பது மக்கள் தங்கள் வலியையும் வேதனைகளையும் கடத்துவதற்கும், தங்கள் வாழ்வியலை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கும் பயன்பட்டது.

  ஆனால் அதே கதைகள்தான் மக்களை புராணங்கள் என்னும் பெயரில் நினைத்த மாதிரி எல்லாம் ஆட்டிவைக்கும் ஆட்டு மந்தைகளாக மாற்றி வைக்க பயன்படுகிறது.
  இன்றைய அரசியல் வாதிகளும் இதற்கு விதிவிலக்கு இல்லாமல் ஆதாரமற்ற விதவிதமான கதைகளை சொல்லி மக்களை மக்கள் கூட்டத்தை மந்தைகள் ஆக்கி வைத்துள்ளார்கள்.

  சற்று விபரம் தெரிந்து கேள்வி கேட்டால்… கதைக்கு கால் உண்டா… என்று பிரம்பால் அடித்த ஆசிரியர் ஆக தான் இன்றைய அதிகாரசமுதாயம் இருக்கிறது.

  இந்தஉண்மையை உரக்கச் சொல்லி, இந்த லாக் டவுன் மூலம் மக்கள் பட்ட சிரமங்களையும், இன்னும் சொல்லப்போனால் யாருக்கு ஓட்டு போடுவதற்காக, யாரின் அரசு அமைவதை கணவாய் இலட்சியமாய் கொண்டு இருந்தார்களோ… அந்த அடித்தட்டு மக்களின் வலியையும் உணர்த்தக் கூடிய ஒரு அருமையான கதை சொல்லிய தோழர் தமிழ்மணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 4. ஹேமலதா கு
  தேனி.
  9486331762

  கால்கள்.. கொரோனோ ஊரடங்கு காலத்தில் புலம் பெயர்ந்த வடமாநில தொழிலாளர்களின் நிலையையும்,சொந்த நாட்டிலேயே தங்களை கைவிட்ட அரசை குறை சொல்ல மனம் வராத அவர்களின் அறியாமையையும் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்துள்ள கதை.

  தான் சார்ந்த கட்சியின் தலைவனுக்கு விசுவாசமாக இருக்கும் கடைக்கோடி தொண்டனாக பிரதிபலிக்கிறார் ராம்சிங்.தலைவனின் ஒவ்வொரு செயலும் தன் நாட்டின் முன்னேற்றத்திற்குத்தான் என நம்பும் இவர்கள், தங்கள் அடிப்படை வாழ்வாதாரத்தைகூட அவர்களால் முன்னேற்ற முடியாது என்ற நிதர்சனத்தை உணராமல் இருப்பது வேதனை. இந்த அறியாமையை பயன்படுத்தி குளிர் காயும் இன்றைய அரசியல்வாதிகளின் உண்மை தன்மையை வெளிப்படுத்தியுள்ளது இக்கதை.

  ஊரடங்கு சமயத்தில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப இலவச விமான சேவையும்,தங்கள் சொந்த ஊருக்கு போக முடியாமல் வெளிமாநிலத்தில் அகதிகளாக சிக்கி இருந்த
  விளிம்பு நிலை புலம்பெயர் மக்கள் ஊர் போய் சேர கட்டண ரயில் விடுவது என ஆளும் அரசு ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வது அவர்களின் குரூரத்தை காணமுடிகிறது.இதனால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை பல மைல்கள் நடக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளது அரசு.

  ‘முறைசாரா தொழிளார்கள்’ என அவர்களின் வாழ்வாதாரத்தை நித்தமும் கேள்விக்குறியாக்கி வைத்திருக்கும் அரசு, இந்த ஊரடங்கிலும் அவர்களின் கண்ணீரை அலட்சியம் செய்து, அவர்களை தண்டவாளங்களில் காவு கொடுத்தது. மூன்று முறை மக்களிடம் பேசிய பிரதமர், இவர்கள் விஷயத்தில் மட்டும் கள்ள மௌனம் காட்டியது ஆளும் அரசின் கொடூர முகத்தை காட்டுகிறது.

  அரசின் நேசக் கரம் கிடைக்காமல்,தேய்ந்த செருப்பும் ஓய்ந்த கால்களுமாக அவர்களின் முடிவில்லா பயணத்திற்கு, நம்மை கைதட்டவும், விளக்கேற்றவும் வைத்ததுதான் அரசின் மறைமுக வெற்றி.நன்றி.

 5. அ.ரஹ்மத் நிஷா 8870392790

  “நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்து விடடால்” -யாரந்த நிலை கெட்ட மாந்தர்கள் ஆணவம் பிடித்த அரசியல் தலைவர்களா…
  மனிதாபிமான மற்ற ஊடக நண்பர்களா…
  அறிவை சுட்டுத்தின்ற ராம்சிங் போன்ற பொது மக்களா…

  ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அவரவர் செய்த வினைக்கு எதிர் வினை அனுபவிக்கிறோம்.

  ராம்சிங் கஷ்டப்படறான்னா காரணம் அதிகப்படியான மதப்பற்று..
  ஜோதிர்மயி கஷ்டம் -வாயிருந்தும் ஊமையாய் அடிமைப்பட்டு க் கிடப்பது

  எது எப்படியோ அவரவர் பிறந்த மண்ணில் உள்ளது கொண்டு நல்லது செய்யத் தேவையான மனவலிமையும் புரிதலையும் கொடுத்து இந்த இயற்கை எல்லா மக்களையும் முறையான வாழ்க்கை மேற்கொள்ள உதவ வேண்டும்.

  நாம் கண்ணால் பார்க்காத விஷயங்களைத் தன் எழுத்து மூலம் கண் முன்னே கொண்டு வந்த ஆசிரியருக்கே
  பாராட்டுக்கள்

  அ.ரஹ்மத் நிஷா
  உத்தமபாளையம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: