காலத்தின் மடியில்

0
(0)

வார்த்தைகளால் வடிக்க முடியாத அளவுக்கு மனக் குதூகலிப்பு . மனம் வானத்துக்கும் பூமிக்குமாய் ஊஞ்சல் கட்டி ஆடியது. மனதினுள் கொந்தளிப்பும் பரபரப்பும் தொற்றிக் கொண்டது. “திருமணத்திற்கு போய் வா’ என்று அப்பா கூறியதிலிருந்து மனம் ஒருநிலைப்படவில்லை லீலா அத்தையும் லட்சுமி அத்தையும் எல்லா நினைவுகளுமாய் நீக்கமற நிறைந்து நின்றார்கள். ஏறக்குறைய இருபதாண்டுக்குகளுக்குப்பின் சந்திக்கும் வாய்ப்பு. பஸ் ஏறியதும் ஞாபகபரப்புகள் இருபாண்டுகளுக்கு முன் இட்டுச் சென்றது. டவுனில் அப்பாவின் தீவிர தொழிற்சங்க நடவடிக்கையின் பலனாய் நிர்வாகத்தின் பனிஷ்மென்ட் முடிவாய் கிராமத்துக்கு மாறுதல் அப்போது நாலாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன். அந்த ஊரில் மிகுந்த செல்வாக்காய் இருந்து நொடித்துப் போன அந்த குடும்பம்… அப்பாவின் நெருங்கிய பழக்கவழக்கம் அந்த குடும்பத்தில் இருந்த லீலா அத்தையும் லட்சுமி அத்தையும் எனக்கு மிகவும் பிடித்தமானவர்களாகிப்போனார்கள். ஒரு நாள் அங்கு போகா விட்டாலும் யாராவது ஒரு பையன் தேடி வந்துவிடுவான். தினசரி மதிய வேளைகளில் அங்கு தான் கிடையாய்க் கிடப்பது பள்ளிக்கூட மணிச் சத்தம் கேட்டவுடன் விழுந்தடித்து ஓடுவேன். “பாத்து மருமகனே கல் தடுக்கிடாமே. மெதுவா’ என்று வீட்டினுள்ளிருந்து லீலா அத்தை குரல் வந்து விழும்.

லீலா அத்தைக்கு என் மேல் ரொம்பப் பிரியம் அவர்கள் பேசுவதை இன்றைக்கெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம் அப்படி ஒரு இனிமை தூக்கி தன் மடியில் வைத்துக் கொள்வார்கள் அப்போதெல்லாம் கூச்சமும் குறுகுறுப்புமாய் சொக்கிப் போய் இருப்பேன். அத்தையின் உடலில் இருந்து கமகமவென்று சோப்பின் மணமும் முகத்திலும் கைகளிலும் உள்ள மஞ்சளின் வாசமும் மூச்சுத் திகட்டும். அந்தக் காலத்தில் உலகிலேயே மிகவும் பிடித்த இடம் லீலா அத்தையின் மடிதான். என்றாவது ஒரு நாள் என்னை மடியில் அமர்த்தாவிடில் எனக்கு ஏக்கமாய் இருக்கும்.

அத்தையின் கை மெத்து மெத்தென்று இருக்கும். என் விரல்களில் வ-க்காமல் சொடக்கு போடுவார்கள். “மருமகப் பிள்ளை தலையில் ரெண்டு பேனாவது எடுக்குறேன்” என்று தன் மடியில் கிடத்தி பேன் எடுக்கும்போது அவ்வளவு ஆனந்தமாய் இருக்கும். இன்னும் கொஞ்ச நேரம் மடியில் தலை வைத்து படுத்திருக்க மாட்டோமா என்றிருக்கும். அத்தை கட்டியிருக்கும் சேலை கூட அவ்வளவு மிருதுவாய் இருக்கும். சிரிக்கும் போது பற்கள் வெள்ளைவெளேர் என்று அப்படி ஒரு வெண்மை கூர்மையான நாசி வட்டமுகம் கன்னத்தில் சிறிது சதை போட்டு நல்ல சிவப்பாய் இருப்பார்கள். அந்தக் காலத்தில் உலகிலேயே அழகான பெண் யாரென்று கேட்டால் என் அம்மாவைக் காட்டிலும், அத்தையைத்தான் சொல்லியிருப்பேன். லட்சுமி அத்தைக்கும் என்னைப் பிடிக்கும். அடிக்கடி என்னைக் கேலி செய்து கொண்டே இருப்பார்கள். அப்போதெல்லாம் எனக்கு வெட்கம் பிடுங்கித்தின்னும். “நீங்க வளர்ந்து ஆளானப்புறம், பெரிய அத்தை பொண்ணைக் கட்டுவீங்களா சின்ன அத்தை பொண்ணைக் கட்டுவீங்களா?” எனக்கு பதில் பேசவராது கூச்சத்தில் ஓடிப் போய்விடுவேன். மறுநாள் லீலா அத்தை லட்சுமி அத்தையைத் திட்டுவார்கள். “ஏண்டி சின்னப் புள்ளை கிட்ட என்ன பேசுறதுன்னு விவஸ்த்தை வேண்டாம்?” “நீ சும்மா இருக்கா ரவி மட்டும் எம் பொண்ணைக் கட்டலேன்னா … கடத்திட்டுப் போயி தாலி கட்ட வச்சுடுவேன்’ இப்படி எல்லாம் பேசுவார்கள் வாசல் பக்கம் அருவாட்டம் தெரிந்தால் போதும் அடுப்பங்கடையில் போய் ஒளிஞ்சுக்குவாங்க.

அத்தையின் அப்பா காடுகரை என்று அலைந்து திரிந்துவிட்டு வேகாத வெயில்ல வருவது எப்படித்தான் தெரியுமோ வந்து உட்காருமுன், கறிவேப்பிலை கொத்தமல்லித் தழையுடன்பொடிதாய் நறுக்கிய மிளகாய்த் துண்டுகள் மிதக்க ஒரு லாடஞ் சொம்பு நிறைய மோர் கொண்டு வந்து திண்ணையில் வைத்து விடுவார்கள். கமகமவென்று வாசத்துடன் மோரைக் குடித்து விட்டு, தரையில் அப்படியே கால் நீட்டி படுத்துவிடுவார். தலைக்குமேல் பெரிய பெரிய உத்தரங்கள். “டேய் பேராண்டி, இந்த மரமெல்லாம் பர்மாத் தேக்கு எங்க தாத்தா காலத்துல கட்டின வீடு. இந்த மரங்களைப் பாரு எப்படி பளபளன்னு இருக்குது” இதை எனக்கு நூறு முறையாவது சொல்லி இருப்பார் பழம் பெருமை பேசிப் பேசியே அத்தைகளுக்கு வரகின்ற இடங்களை எல்லாம் தட்டிக் கழித்துக் கொண்டே வந்தார். “எம்பொண்ணுக கிராமத்துலே கெடந்து சீரழீயுறதுக்கா? டவுண்ல பெரிய எடமாப் பாத்து தான் கொடுப்பேன். அங்கேதான் வசதியா இருப்பாக” அத்தைகளின் மேல் தாத்தாவுக்கு அம்புட்டுப் பிரியம் அத்தை வயதை ஒத்தவர்கள் பிள்ளைகள் பெற்று, கையில் ஒன்றும் இடுப்பில் ஒன்றுமாய் தூக்கிக் கொண்டு காடு கரைகளில் வேலைக்கு போய் வந்து கொண்டிருக்கும் பொழுது அத்தைகள் மட்டும் வீட்டை விட்டு வெளியே வராது இருப்பார்கள்.

ஒரு நாள் மதியம் யாரையோ தாத்தா திட்டிக்கொண்டு இருந்தார். அத்தைகள் இருவரும் கண்களில் நீர் தேங்க நின்று கொண்டு இருந்தார்கள். அவர் பக்கத்தில் லாடஞ்சொம்பு நிறைய மோர். குடிக்காமல் அப்படியே இருந்தது. “இனிமே அவன் என் மகனுமில்லே. நான் அவனுக்கு அப்பனுமில்லே”. துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு வேகமாய் வெளியேறினார். அத்தைதான் சொன்னது. அவர்களின் ஒரே அண்ணன் மதுரையில் இருந்தவர் வீட்டிற்குத் தெரியாமல் கலப்புத் திருமணம் செய்து கொண்டாராம். அன்றைக்குப் பூராம் அத்தையின் முகமே சரியில்லை. அழுதழுது முகமே அசைச்ச மாதிரி இருந்துச்சுது. தமக்கிருந்த ஒரே பிடியும் கை நழுவிப் போய்விட்டதே என்று தாத்தா மிக நொந்து போய்விட்டார். பழம் பெருமை பேசித்திரிந்தது எல்லாம், பழங்கதையாகிப் போனது. ஆனால் அத்தைகள் மட்டும் எப்போதும் போல ஒரே சிரிப்பும் கும்மாளமுமாய் வீட்டை வளைய வந்தார்கள். ஓலைக் கொட்டானில் பயறு கிழங்கு அவித்து தின்னக் கொடுப்பார்கள். பால் கொழுக் கட்டை என்றால் லீலா அத்தைான் ஞாபகம் வரும். அடிக்கடி செய்து கொடுப்பார்கள். வெள்ளாமை காலங்களில் தினைமாவு இடித்து உருட்டி ஒரு உருண்டை தருவார்கள். தின்னத்தின்ன தெவிட்டாத சுவை அது. தலைசீவி பவுடர் போட்டு அழகுபார்ப்பார்கள். லட்சுமி அத்தை கேலியும் கிண்டலுமாய் பேசுவது பழகிவிட்டது. “எம்பொண்ணைக் கட்டிக்கு வீங்களா மருமகனே’ என்றால் ‘சரி” என்று தலையசைப்பேன் ஓடி வந்து தூக்கி முத்தம் கொடுப்பார்கள். கன்னத்தில் படும் எச்சிலைத் தன் முந்தானையால் துடைத்து விடுவார்கள். எனக்கு அந்த ஈரம் பிடித்திருக்கும். இன்னொரு கன்னத்தில் முத்தமிட மாட்டார்களா என்றிருக்கும்.

இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் அப்பா டவுணுக்கு மாறுதல் வாங்கியபோது, அத்தைகளுக்கு மிகுந்த வருத்தம். என்னைப் பிரியவே மனமில்லை. கண்ணீர் விடாததுதான் பாக்கி. ஆனால் அத்தைகள் கண் கலங்கியது எனக்கு மட்டும்தான் தெரியும் பிரிய மனமில்லாது பிரியாவிடை பெற்றோம்.

அதன்பின் அவர்களைப் பார்க்கும் வாய்ப்பே இல்லை. ஆனால், தொடர்பு மட்டும் அறுந்துவிடாமல் இருந்தது. ஏதாவது விசேசம் என்றால் அப்பா மட்டும் சென்று வருவார் அத்தைகளின் திருமணத்திற்கு சென்று வந்த அப்பா வருத்தம் தோய்ந்த குரல், “வீட்ட பிரிச்சு, தேக்கு உத்தரங்களை வித்துத்தான் …… கல்யாணம் நடந்திருக்குது. நல்ல இடங்களை எல்லாம் விட்டுட்டு தன் கெத்து விடக் கூடாதுன்னு டவுண்ல கூலி வேலை செய்யுறவங்களுக்குத்தான் கொடுத்திருக்காரு. அதன்பின் நீண்ட காலத்திற்கு பிறகு லீலா அத்தையின் மகள் திருமணப் பத்திரிக்கை பஸ் மதுரையை நெருங்கிவிட்டது. மனதிற்குள் ஒரு விதமான எதிர்பார்ப்பு அடையாளம் காண்பது கொஞ்சம் சிரமம்தான். ஆனால் அவர்கள் கண்டு பிடித்துவிடுவார்களா! அத்தையின் அந்த முக ஆச்சரியத்தை நினைக்கும் போதே மனம் வானம் ஏறிப் பறந்தது. தெப்பக்குளம் அருகில் சிறிய மண்டபம் கூட்டத்தில் தெரிந்த முகங்கள் யாருமில்லை. அத்தைகளை மட்டுமே மனம் தேடியது. சமையல் கட்டில் இருந்து தலையெல்லாம நரைத்து ஒடுங்கிய கன்னங்களுடன் பார்த்தவுடன் தெரிந்துவிட்டது. வேகமாய் எதிர்கொண்டான். அத்தை எப்படி இருக்கீங்க”.

“தம்பி, யாருன்னு தெரியலியே” கண்களை இடுக்கிப்பார்த்தார்கள்.

“நான் ரவி போஸ்ட்மாஸ்டர் பையன்’ ஆர்வமாய் உடம்பெல்லாம் ஒருவித நடுக்கத்துடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் “ஓ அப்படியா அப்பா வரலியா?” மிகச் சாதாரணமான விசாரிப்பு “இல்ல நான் மட்டும் தான் ” இழுத்தேன். “இருந்து சாப்புட்டுப் போங்க” படாரன்று விழும் சாட்டையடி போல் துடித்துப் போனேன். எனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தில் அழுகையே வந்து விடும் போல் இருந்தது. எப்போதும் சிரித்த முகமாய் இருக்கும் லட்சுமி அத்தை சிரிப்பே இல்லாதது மெலிந்த தேகத்துடன் என்னைக் கடந்து போனார்கள். அவர்களை அழைத்து மீண்டும் ஏமாற்றத்தை எதிர்கொள்ள என்மனம் தயாரில்லை.

காலம்தான் அத்தைகளின் மனங்களை எப்படிப் புரட்டிப் போட்டு விட்டது. என்மனத்திற்குள் வாழும் அத்தைகள் இவர்கள் இல்லை. நகர்ப்பரப்பில் வாழும் இவர்கள் பழசைத் தொலைத்தவர்கள். திரும்பிப் பார்க்க முடியாத புதிய சூழலுடன் இருப்பவர்கள். அன்பொழுகப் பேசும் லீலா அத்தையும் கேலிபேசும் லட்சுமி அத்தையும் என் மனதினுள் எப்போதும் வாழ்ந்து கொண்டும் சிரித்துக் கொண்டும் இருக்கிறார்கள். லீலா அத்தையின் மெத் மெத்தென்ற கை என் முதுகைத் தடவுகிறது. திரும்பிப் பார்க்கிறேன் யாருமில்லை.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top