காலடிச்சத்தம்

0
(0)

ஊரில் ஒரே கலவரம். அநேகமாக இன்றிரவு ஊரடங்கு உத்தரவு போடப்படலாம் என்று தகவல். வதந்திகளின் சுழல்காற்று நொடியின் பின்னத்தில் நாடெங்கும் பரவத் தொடங்கியிருந்தது. அந்தச் சுழலில் ஆண்கள் சிக்கிச் சின்னாபின்னமாயினர். பெண்களும் குழந்தைகளும் காட்டுமிராண்டித்தனத்தின் அத்தனை கொடூரங்களையும் கண்டு திகைத்து நிலைத்த கண்களுடன் இறந்து போயினர். இதெல்லாம் எப்படி ஆரம்பித்தது என்று தாணுவைக் கேட்டால் “ எப்படியோ ஆரம்பித்தது..” என்று சொல்வான். ஏன் இப்படி நடக்கிறது? என்று இப்ராகிமை கேட்டால் ” எப்போது இப்படி நடக்காமலிருந்தது ” என்று சொல்வான். இதெல்லாம் மனிதகுலத்துக்குக் கேடுகாலம் இல்லையா? என்று மைக்கேலிடம் கேட்டால் “ கலி முத்தினா இப்படித்தான் நடக்கும்..” என்று சொல்வான். அப்படி என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது என்று நீங்கள் கேட்டால் உங்களைப் பைத்தியம் என்றோ மனவளர்ச்சி குன்றியவன் என்றோ தாயிடம் பால் குடித்துக் கொண்டிருக்கும் சிசு என்றோ தான் நான் சொல்லுவேன். ஒருவேளை நீங்கள் அலுவலகம் முடிந்து வந்ததும் உங்களுடைய வீட்டுக்குள் நுழைந்து குத்துப்பாட்டு சேனல்களையோ, நகைச்சுவை சேனல்களையோ, ஆங்கிலத்திரைப்படச் சேனல்களையோ,  முரட்டுத்தனமான குத்துச்சண்டை சேனல்களையோ, ஃபேஷன் ஷோ சேனல்களையோ, விளையாட்டு சேனல்களையோ, உங்களுடைய கணினியில் ரகசியமாக ஃபோர்னோ படங்களையும், கொரியத்திரைப்படங்களையும், நடிகைகளின் கவர்ச்சிப் படங்களையும், காணொளித்துணுக்குகளையும் முகநூல், டுவிட்டர், வாட்ஸப் போன்ற மறைவெளிக் காடுகளில் எல்லாவற்றிற்கும் லைக்கும் டிஸ்லைக்கும் மட்டும் போட்டுக் கொண்டு தாவித் தாவி ஓடி, உங்கள் குழந்தைகளுக்கு கூகுளில் பாடங்கள் சம்பந்தப்பட்ட விடயங்களை தரவிறக்கம் செய்வதும், உங்கள் மனைவிக்கு ஸ்னாப் டீல், ஃப்லிப் கார்ட், இ பே மூலமாக சர்வதேசப் பொருட்களை வீட்டுக்கு வாங்க, என்று அனைத்து ஊடகங்களையும் உங்கள் நலனுக்காக மட்டும் உபயோகிப்பவரென்றால் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

. யாருடைய வேலைகளிலும் தலையிடாமல், என்ன நடந்தாலும் கவலைப்படாமல், உங்கள் நலன்களை, உங்கள் குடும்பத்தாரின் சௌகரியங்களை, வேலைகளை மட்டுமே பார்க்கிற உங்களுடைய நல்ல உள்ளத்தை நான் காயப்படுத்தி விடுவேனோ என்ற பயம் எனக்கு இருக்கிறது. உங்களைப் போன்ற நல்லவர்களை, தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவர்களை, வெளியே என்ன நடந்தாலும் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற அமைதியானவர்களை, பயமுறுத்துவது என் நோக்கமல்ல. உங்களுக்கு இதைக் கேட்பதிலோ, வாசிப்பதிலோ விருப்பம் இல்லையென்றால் உங்களுக்கு ஒரு ஆப்ஷனும் இதில் இருக்கிறது. இப்படியே ஷட் டவுண் செய்து விட்டு போய்விடலாம்.

நாட்டின் செய்திச்சேனல்களில் கடந்த ஒரு வருடமாக உலவும் ஒரு பைத்தியக்காரக்கூட்டத்தைப் பற்றிய சென்சேஷனல் செய்தித்தொகுப்புகள் அவ்வப்போது வந்து கொண்டிருந்ததை எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை. செய்திச்சேனல்களும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து இந்தச் செய்திகளை ஒளிபரப்பினார்கள் என்றும் சொல்ல முடியாது. அப்போதெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்தது. இப்போது அன்றாட நிகழ்ச்சிநிரல்களில் ஒன்றாக மாறிவிட்டது. இதெல்லாம் எப்போது தொடங்கியது என்று வரலாற்றாய்வாளர்களைக் கேட்டால் அவர்கள் கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்னால் போய் அந்நியர்களின் ஆக்கிரமிப்பில் இதற்கான வேர் இருக்கிறது என்று ஆதாரங்களை அடுக்குவார்கள். ஆனால் நவீனமான ஜனநாயக யுகத்தில் இதற்கான ஒரு தொடக்கம் இருக்க வேண்டுமே அது எப்போது என்று சமூக ஆர்வலர் பொன்னுச்சாமி அபிஜித் கேட்டார்.

கேரளாவைச்சேர்ந்த வரலாற்றாய்வாளரும் எழுத்தாளருமான காவில்விளை கேசவ பணிக்கர் உலகவரைபடத்தின் சின்னஞ்சிறு நாடான சம்தான்பூர் என்ற நாட்டில் உள்ள ஒரு கரம்சந்த் முச்சந்தியில் கிடந்த ஒரு பிணத்திடமிருந்து ஆரம்பித்தாக ( AGAIN STONEAGE )மீண்டும் கற்காலம் என்ற தன்னுடைய ஆய்வு நூலில் சொல்கிறார். இப்போது அந்த நூல் அச்சில் மட்டுமல்ல. எங்குமே இல்லை. குப்பை கிடங்குகளிலிருந்து கண்டெடுக்கப்பட்ட அந்த நூலின் மக்கிப்போன பக்கங்களிலிருந்து திரட்டியதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்.  எல்லாவற்றையும் சந்தேகப்படும் உங்களுக்காக அந்த வரலாற்று நிகழ்வை விரிவாகச் சொல்ல ஆசைப்படுகிறேன். சான்ஸ் கிடைச்சா போதுமே மொத்தமாக பீலா விட ஆரம்பிச்சிருவீங்களே என்று நீங்கள் கிண்டல் செய்வது தெரிகிறது. ஆனால் என்ன செய்வது என்னை மாதிரியான பெயர்தெரியா எழுத்தாளர்களுக்கு இதைத் தவிர வேறு வாய்ப்புகள் கிடையாதே. பொறுத்துக்கொள்ளுங்கள்.

எப்போதும் போலத்தான் அன்றும் சம்தான்பூருக்கும் பொழுது விடிந்தது. காலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆள் நடமாட்டம் தெரிந்தது. பால் வாங்க தூக்கம் கலையாமல் எழுந்து வந்தவர்கள், நவீன மோஸ்தரான வாக்கிங் போக வந்தவர்கள் என்று இன்னும் தூக்கம் கலையாமல் புரண்டு கொண்டிருந்தது சம்தான்பூர். முச்சந்தியில் பெட்டிக்கடைகள் திறக்கிற சத்தம் அதிர்ந்தது. விர்ர் விர்ரென மோட்டார் சைக்கிள்களின் சத்தமும் கேட்டது. சம்தான்பூரின் முக்கியமான இடமே அந்த கரம்சந்த் முச்சந்தி தான். சாயங்காலமானால் அந்த முச்சந்தியில் ஊரில் உள்ள பாதிப்பேர் கூடியிருப்பார்கள். எப்போதும் அங்கே வியாபாரிகளின் கூட்டமும், அரசுக்கு வருவாய் தருகிற பெருந்தொண்டு செய்கிற குடிகாரர்கள் கூட்டமும் நிறைந்திருக்கும். வியாபாரபேரம் பேசுகிற சத்தமும், என்னைய எவனும் ஒண்ணுஞ் செய்ய முடியாது… நான் யாருன்னு தெரியுமா? என்ற குடிகாரர்களின் முழக்கங்களும் கலந்து குழம்பி எங்கும் சாராய வாடை நிரம்பி மூச்சடைக்கும். உலகப்பிரச்னைகள் எல்லாம் அங்கே அலசி ஆராய்ந்து தீர்வுகளும் சொல்லப்படும் இடமும் அது தான். திடீர் திடீரென சிறு கலகம், அடிதடி, என்று கூட்டம் கலைந்து சில நொடிகளில் எதுவுமே நடக்காதது போல மறுபடியும் கூடும். அப்பேர்ப்பட்ட இடத்திலிருந்து தான் இந்த வரலாற்றின் சுவடுகள் ஆரம்பித்ததாக அந்தக் கேரள வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான காவில்விளை கேசவ பணிக்கர் சொல்லியிருக்கிறார்.

இன்னும் இருள் கலையாத அந்த நேரத்தில் முச்சந்தியில் ஒரு பெரிய அழுக்கு மூட்டை கிடந்தது. யாரும் அதைக் கவனிக்கவுமில்லை. முதன் முதலில் கோட்டி மகராஜ்சிங் தான் அதைப்பார்த்தான். எப்போதும் அழுக்கு மூட்டைகளைச் சுமந்து கொண்டே திரியும் அவன் அந்த அழுக்கு மூட்டையைப் பார்த்ததும் சந்தோஷத்துடன் அதன் அருகில் போனான். போனவன் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தான். அவன் போட்ட அவயத்தைக் கேட்டவர்கள் பயந்து பயந்து அந்த அழுக்கு மூட்டையின் அருகில் போனார்கள். மூட்டையில் கன்னங்கரேலென்று ஒரு உடல் தான் முதலில் தெரிந்தது. சற்று உற்றுப்பார்த்த பால்க்கார கோபால்யாதவ் தன்னை மீறிய சத்தத்தில் “ தலையில்லாத முண்டம்…” என்று கூவினான். அதைக் கேட்டதும் மேகங்கள் கலைந்து சூரியன் தலை நீட்டி எட்டிப்பார்த்தான். ஐந்து நிமிடங்களுக்குள் கூட்டம் கூடி விட்டது. கூடிய கூட்டத்திலிருந்து ஆளுக்காள் அபிப்பிராயம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

“ யாரோ கொன்னு தலையை மட்டும் எடுத்து பில்லிசூனியத்துக்காக எடுத்துட்டுப் போயிருக்காங்க..”

“ நம்ம ஊருக்கு கிழக்கே கட்டுற பத்து மாடிக்கட்டடம் இடிஞ்சி விழுந்துக்கிட்டேயிருக்கில்ல… அதான் நரபலி யாரையோ கொடுத்துட்டாங்கன்னு நினைக்கிறேன்..”

“ போனவாரம் நடந்த பங்காளித்தகராறில நடந்த கொலைக்கு பழிக்குப்பழியாக இருக்குமோ..”

“ அரே…இது கள்ளக்காதல் கொலை தான் அடையாளம் தெரியக்கூடாதுன்னு இப்படிச் செய்ஞ்சிருக்காங்க…”

“ ஏதாச்சிம் கௌரவக்கொலையா இருக்கும். அதான் இப்பச் சாதாரணமாயிருச்சே.. வேற சாதிப்பையனா இருப்பான்… போட்டுத்தள்ளியிருப்பாங்க…”.

“ டேய் அந்தப் பிணத்தோட நிறத்தைப் பார்த்தா பண்டிட்ஜி மாதிரி இல்ல..”

“ ச்சே…ச்சே… அதெல்லாம் இல்லை… பண்டிட்ஜி பூணூல் போட்டிருப்பாரில்ல..”

கூட்டத்தில் ஆளாளுக்கு ஒரு செய்தியை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது தான் அந்தக்குரல் எல்லோருடைய கிசுகிசுப்புகளையும் தாண்டி ஓங்கி ஒலித்தது.

“ அவங்க தான் கொன்னுட்டாங்க..”

அந்தக்குரலைக் கேட்டதும் கூட்டம் உறைந்து நின்றது. பதில் இல்லாத அந்தச் சில நொடிகளில் எங்கிருந்தோ கற்கள் பறந்து வந்து திறந்திருந்த கடைகள் மீது விழுந்தன. அவ்வளவு தான் கூட்டம் கலவரத்தில் இறங்கி விட்டது. கடைகள், பஸ்கள், உடைக்கப்பட்டன. பஸ்களைக் கொளுத்தினார்கள். கடைகளைக் கொள்ளையடித்தது ஒரு கும்பல். அவங்க தான் என்ற வார்த்தையிலிருந்தவர்கள் யார் என்று யாரும் கேட்கவில்லை. யாரும் சொல்ல வில்லை. ஆனால் எல்லோரும் தெரிந்து கொண்டதைப் போல வெறி கொண்டனர். கையில் கிடைத்த ஆயுதங்களோடு அவங்க என்று சந்தேகப்பட்டவர்களை வெட்டி வீழ்த்தினர். போலீஸ் சாவதானமாக வந்தது. அந்த முச்சந்தியில் நின்று கொண்டு வேடிக்கை பார்த்தது. அந்த பிணமூட்டையின் அருகில் போகாமல் அப்புறப்படுத்தாமல், புலனாய்வு செய்யாமல், அந்த மூட்டைக்குக் காவல் இருந்தது. போலீசிடம் அடைக்கலம் கேட்டு வந்தவர்களை போலீஸ் கலவரக்காரர்களுக்கு ஃபோன் போட்டு வரச்சொல்லி அவர்களிடமே ஒப்படைத்தது. கலவரக்காரர்கள் வதந்திகளை எஸ்.எம்.எஸ். மூலம் வாட்ஸப் மூலம் ஃபேஸ்புக் மூலம் நாட்டின் எல்லாப்பகுதிகளுக்கும் பரப்பியது.

நாட்டின் எல்லாப்பகுதிகளிலும் சம்தான்பூரில் கரம்சந்த் முச்சந்தியில்  கிடந்த ஒரு பிணமூட்டை நூறு தலையில்லாத பிணங்களாக விசுவரூபம் கொண்டது. நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் எதிரிகள் உருவாக்கப்பட்டார்கள். அவர்களுக்கு இவர்கள் எதிரிகளாகவும், இவர்களுக்கு அவர்கள் எதிரிகளாகவும் எதிரிகளுக்கு எதிரிகள் எதிரிகளாகவும் குழப்பமாக மாறியது. எங்கே போவது என்று தெரியவில்லை. யாரை நம்புவது என்று தெரியவில்லை. யாராக இருப்பது என்றும் தெரியவில்லை. எதிரில் வருகிறவன் அவனா இவனா இல்லை உவனா என்று தெரியவில்லை. வீடுகள் பாதுகாப்பாக இல்லை. வெளியிலும் பாதுகாப்பில்லை. கோவில்கள், ஆசுபத்திரிகள் எதுவும் விட்டுவைக்கப்படவில்லை. கொலைகளும் பாலியல் பலாத்காரங்களும், கொள்ளைகளும் எந்தத்தடையுமின்றி நடந்து கொண்டிருந்தன. எல்லோரும் அடையாளங்களைக் கண்டு பயந்தனர். தங்கள் அடையாளங்களை அழிப்பதற்குப் பிரயத்தனப்பட்டனர். மற்றவர்களின் அடையாளங்களை அறிந்து கொள்ள ஆசைப்பட்டனர்.

நகரங்களில் ஓலங்கள் கேட்டுக் கொண்டேயிருந்தன. யாரும் எந்த விநாடியும் கொல்லப்படலாம். கொன்றவனைக் கொன்றவனும் கொல்லப்பட்டான். எல்லோர் கையிலும் ஆயுதங்கள் இருந்தன. ஒருவரையொருவர் பார்க்கும்போது மிருகவெறியுடன் உறுமினர். எந்தக்கணத்திலும் எதிராளி ஆயுதத்தை வீசிவிடுவானோ என்று பயத்தில் இவர்கள் ஆயுதங்களைத் தயாராக வைத்திருந்தனர். கையில் கிடைத்த அனைத்தும் ஆயுதங்களாகின. யாரும் யாரையும் உயிருடன் விடவில்லை. உயிர் போனதுக்கப்புறமும் வெட்டித் துண்டு துண்டாக்கினார்கள். ரத்தமும், சதையும், மரண ஓலங்களும் அவர்களுக்கும் இவர்களுக்கும் ஒரு கிளர்ச்சியை உண்டு பண்ணின. உடலுறவின் உச்சக்கட்ட உணர்வைப் போல ஒரு விறுவிறுப்பு உடலில் ஓடியது. வயது வித்தியாசமில்லாமல் எல்லோரும் இந்தக் கொலைத்தொழில் செய்தனர். சில நேரங்களில் யாரைக் கொலை செய்யப்போகிறோம்? எதற்குக் கொலை செய்யப்போகிறோம்? என்று கூடத் தெரியவில்லை. கண்ணில் பட்டவர்களை எல்லாம் வெட்டினார்கள். ஒருவன் கொலை செய்ய யாரும் கிடைக்காத போது தன் மனைவி, குழந்தைகளையே கண்டந்துண்டமாக வெட்டினான். அந்த நாட்களில் பைத்தியத்தின் உச்சவெறியில் மனிதர்கள் இருந்தார்கள்

பல இடங்களில் நரமாமிசம் சமைக்கப்பட்டு தின்பதாகவும் தகவல்கள் கசிந்தன. தெருவெங்கும் காணச்சகிக்காத வகையில் மனிதப்பிணங்கள் சிதறிக் கிடந்தன. கண்கள் தோண்டப்பட்டு கிடந்த குழந்தைப்பிணம், வயிறு கிழிக்கப்பட்டு சிசுவுடன் ரத்தமும் நிணமுமாக கிடந்த பெண்பிணம், கழுத்தில் டையர் மாட்டி தீவைக்கப்பட்டு எரிந்து கருகிய முகத்துடன் ஒரு பிணம், மாறு கை, மாறு கால் வாங்கப்பட்டு ஒரு பிணம், மண்டை உடைக்கப்பட்டு மூளை மண்ணில் கிடக்க விழித்தபடியே ஒரு பிணம், வீதியெங்கும் கைகால்கள், விரல்கள், கண்கள், மூளை, இதயம், நுரையீரல், ஈரல் குடல், பிறப்புறுப்புகள் என்று மனித உடலின் அத்தனை அவயங்களும் சிதறிக் கிடந்தன. நாய்களும், காகங்களும், பருந்துகளும் சில ஊர்களில் நரிகளும் கூட கூட்டம் கூட்டமாக அலைந்தன. நிரந்தரமாக அங்கேயே தங்கியும் விட்டன. ஊர்கள் சுடுகாடாக இருந்தன. அனைத்து ஊர்களிலும், நகரங்களிலும் கலவரம். போலீஸ், ராணுவம், எதுவும் எதையும் செய்யவில்லை. அவர்களுக்குள்ளேயும் கலவரம் உருவாகி விட்டது. பாய்..பாய்.. என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள் இப்போது அவங்க இவங்க நாங்க என்று பிரித்துப்பேசினார்கள். சில இடங்களில் துப்பாக்கிப்பிரயோகங்களும், ராணுவத்துக்குள்ளேயே நடந்திருக்கிறது. உலக வரைபடத்திலிருந்து சம்தான்பூர் மறைந்தது. இதோடு வரலாற்றாய்வாளரும் எழுத்தாளருமான காவில்விளை கேசவபணிக்கர் சொன்ன இன்னொரு முக்கிய விஷயம் இத்தனை களேபரங்களுக்கும் காரணமான அந்த மூட்டையில் இருந்தது மனிதனுடைய முண்டம் இல்லை. அது ஒரு கழுதையின் முண்டம் என்ற விவரத்தை எழுதி போலீஸ் எஃப்.ஐ.ஆரை முடிக்கும் போது அங்கே யாரும் இல்லை. ஏன் போலீஸ்காரர்களே கூட இல்லை.

சம்தான்பூர் நாட்டு மக்கள் ஊர்களை விட்டு காடுகளுக்குள் உயிரைக் காப்பாற்ற புகுந்தார்கள். காடுகளும் சூறையாடப்பட்டிருந்தன. எப்படியோ உயிர் தரிக்க வேண்டுமே. கிடைத்த இலை தழைகளை, கிழங்கு, காய், கனிகளைச் சாப்பிட்டார்கள். கிழிந்த ஆடைகளுக்குப் பதிலியாக இலைதழைகளை ஆடையாக உடுத்தினர். எலி, முயல், அணில், போன்ற சிறு பிராணிகளை வேட்டையாடிச் சாப்பிட்டனர். யாரும் யாரிடமும் பேசப்பயந்தனர். எல்லாம் சைகையிலேயே நடந்தது. மொழி மறந்து போனார்கள். சிக்கிமுக்கிக் கற்களைக் கொண்டு தீ மூட்டி சமையல் செய்தனர். எல்லோரும் சேர்ந்து வேட்டையாடி சேர்ந்து சமைத்து சேர்ந்து பங்கிட்டு சாப்பிட்டனர். இப்போது அவர்களுக்கிடையில் அடையாளங்கள் இல்லை. எல்லோரும் ஒன்று போலவே இருந்தனர். யாரும் யாரையும் பிரித்துப் பார்க்க வில்லை. அவர்கள் இப்போது ஒருவரையொருவர் பார்த்துச் சிரிக்கப் பழகிக் கொண்டிருந்தனர்.  இத்துடன் அந்த நூல் முடிந்து விட்டது என்று நான் நினைத்திருந்தேன்.

சிலநாட்கள் கழித்து டிஸ்கவரி சேனலில் புதிய மனிதர்கள் என்ற நிகழ்ச்சியில் அவரைப் பார்த்தேன். அதோ அங்கே மரத்தின் மீது ஏறி பழம் பறித்துக் கொண்டிருக்கிறாரே அவர் தான் வரலாற்றாய்வாளர் காவில்விளை கேசவபணிக்கர் என்று டைட்டில் போட்டார்கள். அவர் காமிராவைப் பார்த்துச் சிரித்தார். அது சாதாரணமான சிரிப்பாக இல்லை.

மீண்டும் ஒரு கலவரம் துவங்கிவிட்டது. இப்போது தமிழ்நாட்டில் இது வரை பெயரே தெரியாமலிருந்த அந்த கிராமத்திலிருந்து துவங்கியது. ஒரு மாடும் பன்றியும் அந்தக்கிராமத்தின் மந்தையில் வெட்டப்பட்டு கிடந்தன. மீண்டும் அந்தக் கூட்டங்கள் கொலைவெறி கொண்டு கிளம்பிவிட்டன. ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு விட்டதாகச் செய்தி தொலைக்காட்சியில் சொல்லப்பட்டது. ஊரடங்கு உத்தரவே யாரும் உயிரோடு தப்பித்து விடக்கூடாது என்பதற்காகத் தானே என்று பொன்னுச்சாமி அபிஜித் சொன்னார். அவர் இப்போது காவில்விளை கேசவபணிக்கரின் வேலையைச் செய்து கொண்டிருந்தார். மனித உளவியலில் சகமனிதக் கொலையுணர்வு என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அநேகமாக அந்த நூலைப்பற்றி இன்னும் ஒரு ஐம்பது ஆண்டுகள் கழித்து என்னை மாதிரி யாராவது சொல்லுவார்கள்.

சரி இதையெல்லாம் என்னிடம் ஏன் சொல்கிறீர்கள் ? எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லையே நான் ஏன் பயப்பட வேண்டும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அவர்களுக்கு எந்த சம்பந்தத்தைப் பற்றியும் கவலையில்லை. யாரையேனும் கொலை செய்து கொண்டேயிருக்க வேண்டும். அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் உங்கள் ஊரில் இருக்கலாம் ஏன் உங்கள் வீட்டிலேயே கூட இருக்கலாம். எனவே கவனமாகயிருங்கள். உங்கள் ஊரில் உங்கள் தெருவில் அவர்களுடைய காலடிச்சத்தம் கேட்கிறதா என்று உற்றுக் கவனியுங்கள்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top