காலக்கணிதம்

0
(0)

அவர் ஒரு அறிவாளியோ, அடிமுட்டாளோ இல்லை. ஆனால் தங்கச்சாமியை அந்த கிராமத்து மக்கள் ‘அதிமேதாவி’, ‘மண்டைக் கனம் பிடிச்சவன்’ என்றே கருதி வருகிறார்கள். தங்கச்சாமி இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை. ‘ஊர் ஆயிரம் சொல்லும், ஊர் சொல்றதை எல்லாம் கேட்டால் எப்படி…? நம்ம வாழ்க்கைப் பாடு நமக்குத்தானே தெரியும்?’ என்று மவுனமாக இருந்துவிடுவார். ‘அழுத்தக்காரன் வாயைத்திறக்க மாட்டேங்கிறான். வகுசி இப்படி இருக்கும் போதே அவனுக்கு எம்புட்டு பவுரு பாரு’ என்றும் விமர்சனங்கள் வரும். ஒரு காதில் நுழைந்ததை மறுகாதில் வெளியேற்றி விடுவார்.

இப்படித்தான் தங்கச்சாமியின் அக்கா தங்கம்மா ஒரு முறை சொன்னார். ‘தம்பி தங்கம், ஏற்கனவே ரெண்டு பொம்பளைப் பிள்ளைக இருக்கும் போது, மூனாவதா உண்டாகி இருக்காம்லா… எதுக்குப்பா இந்தக் காலத்தில் வகுத்துக்கும் வாய்க்குமா வம்பாடு பட்டு அலையிற காலத்தில ரெண்டோட நிறுத்திக்குங்க. ஆம்பிள்ளைப் பிள்ளையா பிறந்தா இருந்துட்டுப் போகட்டும். பொம்பளையா இருந்தா.. நம்ம நாட்டுப்புறத்தில் செய்யிற மாதிரி காதும் காதும் வச்ச மாதிரி கதையை முடிச்சிடுங்கப்பா.. அக்கா ஒன் நல்லதுக்குத்தான் சொல்றேன்.’

‘அக்கா, அவ ஆசைப்பட்டா ஒரு ஆம்பிள்ளைப்பிள்ளை வேணும்னு. அவ ஆசைக்கு நான் குறுக்கே நிக்கலை. அப்படியே பொம்பளைப் பிள்ளையா பிறந்தா பிறந்துட்டுப் போகுது. அதையும் வச்சு காப்பாத்துவோம். சரிக்கா, நீயும் அக்காவும் பிறந்ததோட நம்ம அப்பா அம்மா நிறுத்தியிருந்தா நான் தம்பியா கிடைச்சிருப்பேனா.. என்னக்கா உன் நியாயம்?’

‘தம்பி அந்தக் காலம் வேறய்யா. அப்ப நமக்கு நிலம் நீச்சு இருந்துச்சு. கிணற்றில் வற்றாம தண்ணீ கிடந்துச்சு அப்போ விலை வாசி என்ன? இப்போ என்ன… நீ ரெண்டு பொட்டை பிள்ளை களை வச்சிகிட்டு துண்டு துக்கானி நிலத்தில உருப்படியா வெள்ளாமை எதுவும் பண்ண முடியாம.. கூலி வேலைக்கு ஆலாப்பறக்கறியே..’

‘அக்கா மனுஷங்க நாமெல்லாம் ஒரு கணக்கு போடறோம். இயற்கைன்னு ஒன்னு இருக்கு. அது ஒரு கணக்கு வச்சிருக்கு. ஒரு குடும்பத்தில் பொம்பளைப் பிள்ளைக கூடுதலா பிறந்தா இன்னொரு குடும்பத்தில ஆம்பிள்ளைப் பிள்ளைக கூடுதலாப் பிறக்கும். இந்த ரெண்டு குடும்பத்தில் இறப்பை சரிகட்ட இன்னொரு குடும்பத்தில் ஆண் ஒன்னு, பெண் ஒன்னுன்னு பிறக்கும்.’

‘…ம் என்னம்மோய்யா.. உடன்பிறந்தவன் அல்லல் அவஸ்தை படக்கூடாதுங்கிற ஆதங்கத்தில் சொல்லிட்டேன்.’

‘அக்கா, வாழ்க்கையில் துன்பம் துயரம்னு நினைச்சுக்கிட்டே இருந்தா.. அதுல இருந்து மீள முடியாதுக்கா! நீங்க ரெண்டு பேரும் சின்னப்பிள்ளைகளா இருக்கும் போது அம்மாவும், அப்பாவும் சுமையாவா நினைச்சாங்க? நீங்க பெரிய பிள்ளைக ஆனப்ப, கல்யாணம் ஆனப்ப இருக்கிறத வச்சு சந்தோசமாத்தானே செஞ்சு அனுப்பினாங்க…’

அக்கா ஒரு விவசாயி விதை விதைச்சு அது முளைச்சு மூனு இலைவிடும் போது, அது பருவமா வளரும் போது, அரும்பும் போது, பூக்கும் போது காய்விடும் போது, கனியும் போதுன்னு ஒவ்வொரு பருவத்திலையும் அந்தச் செடியை கவனிச்சுப் பார்த்து சந்தோஷப்படறதில்லையா? அந்தச் செடி நல்ல மகசூல் கொடுக்கத் தேவையானதுகளைக் கடன் பட்டாவது செய்யறதில்லையா… இது மாதிரிதான்க்கா ….

பாவாடை போடாத வயசு, பள்ளிக்கூடத்துக்குப் போற வயசு, ரெட்டை ஜடை போட்டுக்கிட்டு விளையாடற வயசு, பூப்படையற வயசுன்னு ரசிக்கக் கத்துக்கிட்டோம்னா கவலை தெரியாது. ஒருத்தருக்கு ஒருத்தர் மேல பிரியமும் பாசமும் தான் கூடும்!

அக்கா கவலைப்பட்டது மாதிரியே மூன்றாவதும் பெண் பிள்ளையாகத்தான் பிறந்தது. அக்கா நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதாள். ‘போதும் பொண்ணு’ன்னு பேர் வைக்கச் சொன்னார். இனி ஆணும் வேணாம், பெண்ணும் வேணாம்க்கா என்று சித்ரா என்ற பெயர் வைத்தார்.

ஊரில் திருவிழாவுக்கு சாமிகும்பிடல், பஞ்சாயத்து தொடர்பான ஊர்கூட்டங்களுக்கு தங்கச்சாமி போனால் ஒரு ஓரம் சாரம் பார்த்து தான் உட்கார்ந்திருப்பார். தேவைப்பட்டால், பிறர் கட்டாயத்தின் பேரில்தான் பேசுவார். பெரும்பாலும் மவுனசாட்சியாக இருந்து விட்டு வந்துவிடுவார். மூன்று பெண்பிள்ளைகள் பெற்றவன் என்று இளக்காரமாகப் பார்ப்பதும், அந்த பிள்ளைகளைக் கடன் பட்டாவது பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்கிறானே என்று மென்று கொண்டிருக்கும் ஊர்வாய்க்கு ஊறாத அவலாகவே இருந்து வந்தார்.

மனைவி பழனியம்மாவின் அம்மா ஒரு நாள், பழம் பலகாரங் களுடன் வீட்டிற்கு வந்தார். சம்பிரதாயமான நலன் விசாரிப்புகள் ஊர், உறவு விவசாயம் பற்றிய விசாரிப்புகள் முடிந்தவுடன் அத்தை பேச்சைத் தொடங்கினார்.

அத்தை எதற்காக வந்திருக்கிறார் என்று தங்கச்சாமி ஊகித்துக் கொண்டு மவுனமாகவும், தேவையானதுக்கு மட்டும் சிரித்த முகத்துடன் பதில் சொன்னார்.

‘தம்பி, மக பழனி சொல்லுச்சு, பேத்தி பெரியவ வயசக்கு வந்துட்டான்னு! ரொம்ப சந்தோசம்! என்னைக்கு வீட்டுக்கு தண்ணீர் ஊத்தி அழைக்கிறீக? விசேஷம் என்னைக்கு வைக்கிறீக? தாய் மாமன் வீட்டுச்சீர் செய்யத் தயாரா இருக்கோம்!’

‘அய்த்தே, பெரிய மனுஷியாகிறது இயற்கை. அதுக்கென்ன விசேஷம் வச்சுகிட்டு? சும்மா மூனாம் நாள் மஞ்சத்தண்ணீர் ஊத்தி வீட்டுக்கு அழைக்கப் போறோம். விசேஷம் வைக்கலை.’

‘ஏய்யா எம் பேத்திகள் அனாதகளாய்யா? நாங்க இருக் கோம்யா! இந்த ஊரையே கூட்டி தெரு அடைக்கப்பந்தப் போட்டு மேளதாளம் முழங்க மாமன் சீர் கொண்டுவறோம்! பெத்த வங்கங்கிற மருவாதிக்குத்தான் கேட்கிறோம். உங்க பேச்சக்கு மாமன் மச்சினமாருக வந்தா நல்ல இருக்காது பேச்சுக்கு பேச்சு உரசி தீப்பிடிச்சு ஒன்னுமில்லாமல் போயிறக்கூடாதுன்னுதான் அவங்களை எல்லாம் கூப்பிடாம நான் மட்டும் வந்தேன். தப்பா, பிழையா நினைச்சிராதீரும்யா….’

‘அய்த்தே , பூ பூக்கிற ரணம் அந்த வேருக்குத்தான் தெரியும். ஊருக்கு என்ன தெரியும். நீங்க பாட்டுல மாமன் மச்சினன் சம்பந்தகாரன்னு டாம்டூம்னு ஊரைக்கூட்டி கொண்டாடிட்டுப் போயிருவீங்க, ஊர் வாயில் விழாம எம்பிள்ளைக நல்லபடியா பள்ளிக்கூடத்துக்குப் போய்வரணும். அதுக்கடுத்தாப்பில காலேஜ் லாம் போய் படிக்கணும். தேவையில்லாம விசேஷம்னு கடன்பட வேண்டாம்.’

‘தம்பி, அய்யா நீங்க கஷ்டப்படவேண்டாம். எல்லாச் செலவு களையும் நாங்களே ஏத்தக்கறோம்.’

மனைவி பழனியம்மாள் மருகி மருகி நின்றாள். மற்ற ரெண்டு பிள்ளைகள் சுமதியும், சித்ராவும் அம்மாவின் பின்னால் ஒண்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். வீட்டுக்குள் எரிந்து கொண்டிருக்கும் குண்டு பல்பைப் போலவை அச்சிறு பெண்களின் கண்களும் மங்கலாக ஒளிர்ந்தன.

தங்கச்சாமி சில நொடிகள் மவுனமாக இருந்தார். அந்த மவுனம் எரிமலையின் மவுனமா, மழை மேகத்தின் மப்பு மந்தார மவுனமா தெரியவில்லை . ஒரே புழுக்கமாக இருந்தது. மனைவி மகள் மன செல்லாம் திடுக்திடுக் கென்றிருந்தது.

‘அய்த்தே, கோவிச்சுக்காதீங்க உங்க மகளை கல்யாணம் கட்டி இருபது வருஷ காலத்தில் நான் உங்ககிட்ட ஒண்ணும் கேட்ட தில்லை. அது செய்யலை இது செய்யலைன்னு உங்க மககிட்டே கூட சொன்னதில்லை. இனி மேலும் அப்படித்தான். மூனாம் நாள் மஞ்சத்தண்ணீர் ஊத்தி வீட்டுக்கு அழைக்கப் போறோம். உங்ககிட்டேயும், எங்கக்காமாருக வீடுகளுக்கு மட்டும்தான் சொல்லப்போறோம். வாங்க, ஆடம்பரம் இல்லாம. உங்க பேத்திக்கு பிரியப்பட்டதை செஞ்சிட்டுப் போங்க. ஊரைக்கூட்டி திருவிழா கொண்டாடற நினைப்பு இருந்தா விட்டுருங்க.’

தங்கச்சாமி இதுக்கு மேல பேசவில்லை. அகப்பையில் முகந்து தாம்பளத்தில் கொட்டின கேப்பைக்கழி மாதிரி மாமியார் இறுகிப் போனார்.

இப்படித்தான் அடுத்தடுத்த இரண்டு பிள்ளைகளும் பூப் பெய்தியபோதும் சொந்த பந்தங்களில் நெருக்குதலுக்கு பணிய வில்லை. தாவணிக்காலம் போய் சுடிதார் சல்வார்கமிஸ் வந்தது. காலம் செய்த பேருதவியாக இருந்தது. பிள்ளைகள் சூட்டிகையாக படித்து கல்லூரிக்குப் போனார்கள். அப்போதும் பிள்ளைகளை வெளியூருக்கு அனுப்பி படிக்க வைப்பதற்கு பலர் பல தடைகளை விக்கினங்களை வியாக்கினங்களைச் சொன்னார்கள். தங்கச்சாமி காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

அக்கா வீட்டிலிருந்தும், அத்தை வீட்டிலிருந்தும் பெண் கேட்டு வந்தார்கள். ‘என் சத்து இருக்கிற வரைக்கும், பிள்ளைக விரும்புற வரைக்கும் படிக்கட்டும். எம்பிள்ளைக வேணும்னா காத்துகிட்டு இருங்க. பெண்களைக் கட்டிக் குடுக்கிறதும்கூட அவங்க இஷ்டப் பட்ட வரைத் தான் கட்டி வைப்பேன்.’

தங்கச்சாமியின் பேச்சு யாருக்கும் பிடிக்கவில்லை. மனசுக்குள் திட்டிக்கொண்டே போனார்கள். மனைவி பழனியம்மாள்தான் தனது புருஷனது பிடிவாதப் பேச்சுக் குறித்துக் கவலைப்பட்டு மெலிந்தாள். சாமர்த்தியமாக பிள்ளைகள் மனசைக் கலைத்துப் பார்த்தாள். ‘…உறவுபோயிரும், சொத்து போயிரும் சொந்தம்னா நல்லது கெட்டதுக்கு முன்னால வந்து நிப்பாங்க. எதுவும் தப்பு தண்டான்னா அனுசரிச்சுப் போவாங்க’ என்று சொல்லிப் பார்த்தாள்.

‘ஏம்மா, அப்பா சரியாத்தானே சொல்றார். அவரு சொல்றதில தப்பா தெரிஞ்சா தானே நாம மீறிச் செய்யலாம்?.’

‘எல்லாம் என் தலையெழுத்து. அப்பன் மாதிரியே பிள்ளைக வந்து வாச்சிருக்கு’ என்று பழனியம்மாள் தலையில் அடித்துக் கொண்டாள்.

‘ஏம்மா அழகில உன்னை மாதிரிதானே இருக்கோம்’ என்று மூன்று பேரும் சொல்ல, கண்ணைத் துடைத்து சிரித்தப்படி அடுப்பங்கரைக்குப் போனாள்.

நடைமுறை சாத்தியமாகத் தான் யோசித்தையே பெண்டாட்டி, பிள்ளைகளை நயந்து குழைந்து சம்மதிக்க வைத்து நடைமுறைப் படுத்துபவர் தங்கச்சாமி. இப்போது புதிதாக ஒரு பிரச்சனை! ஊராரின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. தங்கச்சாமி, மனைவி பழனியம்மாளை அழைத்துக் கொண்டு நாட்டாமை வீட்டுக்குப் போனார். வெளியே வெயில் மலர்ந்து கிடந்தது. ஊருக்குள்ளே நடமாட்டம் இல்லை.

நாட்டாமைக்காரர் வீட்டில் ஏற்கனவே ஒரு பிரச்சனை. அவரது இளையமகன் முத்து பக்கத்து நகரத்தில் வேலை பார்க்கிற இடத்தில் ஒரு பெண்ணை விரும்பி கல்யாணம் செய்து கொண்டான். ஊருக்கு எல்லாம் பஞ்சாயத்து சொல்லும் நாட்டாமைக் குடும்பமே ஊர் பஞ்சாயத்தில் கைகட்டி நின்றது.

‘ஊர்க்கட்டுமானம், ஜாதிக் கட்டுமானம் தாண்டி அடுத்த ஜாதியில் பெண் எடுத்ததால் நாட்டாமையின் இளைய மகன் முத்துவையும், மனைவியையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பது என்ற முடிவு. ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. இளையமகன் முத்துவிடமும் அவனது மனைவியுடமும் யாரும் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளக்கூடாது தண்ணீர் வெண்ணீர் புழங்கக்கூடாது. மீறுபர்களுக்கு ஊர் வழக்கப்படி தண்டனை உண்டு. ஊர் கட்டுமானம் நடைமுறைக்கு வந்துவிட்டது. வாய்ப்பூட்டு கைப்பூட்டு முடிவுகள் மனதுக்குள்ளேயே புழுங்கியது நாட்டாமை குடும்பம். விதைச்சவினை மரமாக முளைத்து விட்டது.

காற்று நாலு திசையும் வீசத்தானே செய்யும். எதிர்காற்றில் நாட்டாமை குடும்பம் விழுந்து கிடந்தது. ஜாதி நிமிர்ந்து நின்றது.

நாட்டாமைக்காரரின் அப்பா பெரிய நாட்டாமை தனது எண்பது வயது வாழ்க்கையில் தனது குடும்பத்தில் நேர்ந்த அந்த அவமானம் தாளாமல் நோயில் விழுந்தார். ஆறுமாதம் படுத்த படுக்கை. அன்ன ஆகாரம் செல்லவில்லை. புறாக்கூண்டில் புறாக்கள் கமர்வதுபோல் பெரியவரின் உயிர்கூட்டில் கரபுர இழுவை. கடந்த மூன்று நாளாக நீடித்தது. ஊர் பெரியவர்கள் கூடிப்பேசினர். இளைய பேரனை நினைத்துதான் உயிர் அல்லாடுது. அவனை வரச்செல்லி தாத்தனுக்கு செய்ய வேண்டிய மரியாதை செய்து பெரியவரின் உயிர்வாதைக்கு விடுதலை கொடுக்கச் செய்யலாம் என்றனர் ஒரு சிலர். வேறு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

‘ஊர் முடிவை நாமளே மீறுதல் சரியல்ல! ஊர் கூடிப் பேசுவோம். உண்டான அவதாரத்தை செலுத்திவிட்டு தாத்தனும் பேரனும் ஒன்று சேர்ந்துகிட்டும். மீண்டும் ஊர்கூட்டப்பட்டது. ஊர் கட்டுமானத்தை தளர்த்த ஊர் முகமைக்கு பத்தாயிரம் ரூவா தண்டம் செலுத்தட்டும், நாட்டாமை குடும்பம் மகனோட சேர்ந்துக் கட்டும்.’

நாட்டாமை பதறிப்போனார். ‘மழை தண்ணீர் இல்லாம விவசாயம் சீரழிஞ்சு சின்னப் பட்டு நிற்கும் போது பத்தாயிரத்துக்கு எங்கே போக’ அழ ஆரம்பித்தார். ஓரம்சாரமாக உட்கார்ந்திருந்த இளந்தாரிகள் கிசுகிசுத்துக் கொண்டனர். ‘இப்படித்தானே ஒவ்வொருத்தரும் ஊர்த்தண்டம் கட்டும் போதும் இருந்திருக்கும். தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தா தெரிகிறதா…? பரவலாக பலர் ஏதோதோ பேசத் தொடங்கினர்.’

ஊர் பெரியவர் ஒருவர் எழுந்து ‘சரி இன்னைக்கு உள்ள சூழ்நிலையை மனசில் வச்சு ஒரு முடிவு எடுக்கலாம். நாட்டாமை மகன் முத்து ஆயிரம் ரூபா ஊர் முகமைக்கு கட்டிட்டு தொண்ணூறு உக்கிகள் ஊர் சபைக்கு போடட்டும்.’ சிலர் முணங்கினர். சிலர் எழுந்து வெளியேறினர். இன்னொரு பெரியவர் எழுந்து ‘பெரியவர் உசுரு தவதாயப்பட்டுட்டு இருக்கு. எல்லாரும் கொஞ்சம் ஈவு இரக்கம் காட்டி இந்த முடிவை ஏத்துகிட்டு இந்தப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவோம் என்ன சொல்றீக.’

‘பெரிய மனுஷனுக ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்துப்போயிக் கிறானுங்க’ என்ற இளந்தாரிகள் முணங்கிக் கொண்டனர். வேற எதிர் கருத்து இல்லை. ஊர் முடிவுக்கு ஏற்று ஊருக்கு வெளியே நிறுத்திவைத்திருந்த நாட்டாமை மகனை வரச்சொன்னாங்க. முத்து வெத்திலை பாக்குல ஆயிரம் ரூபாய் வைத்து சபைக்கு கும்பிட்டு விழுந்தான். நாட்டாமை கண்ணீர் பொங்க நெடுஞ்சாண் கிடையாக சபைக்கு கும்பிட்டு விழுந்தார். மகன் தொண்ணுறு உக்கிகள் போட்டு முடிக்கும் வரை அவர் எழுந்திருக்க வில்லை. இந்தக் காட்சி இந்த ஊர் இதுவரை கண்டிராத சோகமாக இருந்தது. ஊரே உணர்ச்சியில் ததும்பியது.

இப்படிப்பட்ட நாட்டாமைக்காரர்கிட்டே போய் தன் மகள் கல்யாணம் குறித்த யோசனை கேட்டால் என்ன பதில் கிடைக்கும்? மறுப்பு வந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்ற திட்டத் துடன்தான் தங்கச்சாமி தன் மனைவியை நாட்டாமை வீட்டிற்கு அழைத்துப் போயிருந்தார்.

‘என்ன மாப்ளே. மோர கையில வச்சிகிட்டு யோசிக்கிறீங்க. மோர் சுடுதா. இல்ல வேற காப்பித்தண்ணி எதுவும் வேணுமா?’

‘இல்ல மாமு, வெயில்ல நடந்து வந்த உடனே மோரைக் குடிச்சோம்னா குப்புன்னு வேர்க்கும். கொஞ்சம் தாமிசிச்சு குடிச்சா இதமா இருக்கும். அதான் வேற ஒண்ணுமில்லை’ என்றபடி மோரை ஒரே மூச்சில் குடித்தார் தங்கச்சாமி. மெல்ல விஷயத்தை அவிழ்த்தார்.

‘மாமு என் மூத்தபொண்ணு அதான் உங்க மருமக டவுன்ல சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதி பாஸ் பண்ணிருச்சு. அதுக்கு மாவட்ட பத்திர அதிகாரி வேலை கிடைச்சிருச்சு. என் பொண்ணு கூட படிச்சவர் ஒருத்தர் உதவி கலெக்டருக்கு பாஸ் பண்ணி யிருக்காரு. அவருக்கு நம்ம பாப்பாவை பிடிச்சிருக்காம். பொண்ணு கேட்கிறாங்க. அதான் யோசனையா இருக்கு மாமு…’.

‘அதில என்ன மாப்ளே யோசனை? நம்ம கிராமத்துப் பிள்ளை மாவட்ட பத்திர பதிவு அதிகாரியா வந்திருக்கிறது பெரிய சந்தோசம்! அதிலயும் உதவி கலெக்டர் மாப்பிள்ளையா வரப்போறது ரெட்டை சந்தோசம். இல்லையா! இதில் யோசிக்க என்ன இருக்கு. சொல்லுங்க மாப்ளை, நாங்களும் மாப்ளை வீட்டுக்கு வர்றோம். பார்ப்போம். பேசுவோம். முடிப்போம்!

‘மாமு அவங்க வேற சாதி அதொரு பிரச்சனை இருக்கு..’

‘அட, போ மாப்ளே, அவரு இன்னிக்கு உதவி கலெக்டர் நாளைக்கு ஜில்லா கலெக்டரு! அவரு கலெக்டருங்கிற சாதி முன்னால எந்த சாதியும் பெரிய சாதி இல்லை. இனி அவரு நம்ம ஊரு கலெக்டரு மாப்ளை அவ்வளவுதான்! நீங்க பேசி முடிங்க. துணைக்கு நான் வர்றேன். எந்தப் பிரச்சனையோ, அவமானமோ வராம நான் பார்த்துக்கிறேன். காலம் மாற மாற நாமளும் மாறணும் மாப்ளே. இல்லாட்டி அடையாளமில்லாமல் போயிருவோம்’.

சாதிக்கட்டுமானம் ஊர்க்கட்டுமானங்கிற மலையைத் தாண்டுகிற மனத்தயாரிப்போட வந்தவருக்கு மலையே குனிந்து வழிவிட்ட மாதிரி இருந்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top