கானல்

0
(0)

“டேய்… சின்னச்சாமி…

சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தேன். தேனி போகிற டவுன் பஸ்ஸில் கணேசன் தெரிந்தார். கடந்து போகிற ஆட்டோக்களின் இரைச்சலில் ‘என்ன?’ என்பது போல் தலையசைக்க மட்டுமே முடிந்தது.

“என்ன… சின்னமனூர் பக்கம் சுத்தற?” மீண்டும் நகர்ந்து கொண்டிருந்த பஸ்ஸிலிருந்து கணேசன் குரல் கொடுத்தார். |

“லாட்ரி கடைக்கு வந்தெண்ணே …” நானும் நரம்பு புடைக்க கத்தினேன். “சரி… சரி… உள்ளூர்ல வாங்குனா பரிசு விழுறதுல்லன்னு வெளியூரு வரக்கும் வந்தாச்சு போல…” கையசைத்து விட்டு கணேசன் தலையை ஜன்னலுக்கு உள்ளே இழுத்துக் கொண்டார். நான் இருக்கிற அவசரத்தில் இவர் வேறு. இங்கு பார்த்ததை சீலையம்பட்டி முழுக்க தம்பட்டமடித்து விடுவார்.

அதையும் மீறி என் மனசு முழுக்க சந்தோசம் நிரம்பி வழிந்தது. வாரந்தோறும் வழக்கமாய் நான் வாங்குகிற ‘சூப்பர் பூட்டானில்’ நூறு ரூபாய் விழுந்திருப்பது பெரிய ஆச்சரியம் தானே? நாள் முழுக்க முதுகு வளைய, வியர்வை சிந்தி உழைத்தாலும் கிடைப்பது என்னமோ ஐம்பது ரூபாய் தான். அதுவும் முதலாளி குடுக்கிற ஐம்பது ரூபாய்க்கு, அவர் – வருசமெல்லாம் விசுவாசமாய் வாலாட்ட வேண்டும் என்று நினைக்கிறார். இப்படி எந்த தொல்லையுமே இல்லாமல் என்பது பைசாவுக்கு வாங்கின பூட்டான் லாட்டரியில் நூறு ரூபாய்…! ஆகா… கூரையைப் பிய்த்துக் கொண்டு காசு கொட்டுகிற மாதிரி ஒரு சந்தோசம்.

மணி ஆறைக் கடந்து விட்டிருந்தது. விளக்கு வைக்கிற நேரமென்று நாளைக்கு வரச் சொல்லி விடுவார்களோ? சீச்சி… அப்படியெல்லாம் இருக்காது… இது என்ன டவுன்பஸ்ஸு கூட சீந்தாமப் போகிற சீலயம்பட்டியா?… சின்னமனூரு… சின்னமனூருதான். வேகமாய் நடந்து அன்னாசிப் பழத்தை கீற்று போட்டு விக்கிற சின்னப்பயல்களை கடந்து குச்சனூர் ரோட்டில் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்த லாட்டரிக்கடையை நெருங்கினேன். ஒரு குடிமகன் மலிவு விலை ‘ரெட் புல்’லின் வாசத்தோடு கடைக்காரரை நோக்கி கைநீட்டிக் கொண்டிருந்தார்.

“அய்யா… நா வடக்குப்பட்டிக்காரப்பய… சொன்னா சொன்னதுதே… எனக்கு தமிழ்நாடு அரசோட தீவாளிப்பம்பர் டிக்கட்டு இப்பவே வேணும்…” கடைக்காரர் எரிச்சலாய் நிமிர்ந்து பார்த்தார்.

“யோவ்… ஒரு தடவ சொன்னா கேக்கமாட்டியா…? தீவாளிப்பம்பரு ஏப்ரல் மாதத்துல எப்படியா கெடெய்க்கும்? தீவாளில தா கெடய்க்கும்…” குடிமகனுக்கு கோபம் வந்துவிட்டது.

“யார ஏமாத்தப் பாக்குற… நீயா அடிச்சு விக்குற இந்தக்குப்ப லாட்ரியெலா எனக்கு வாணா… ஒரிஜினலு தமிழ்நாடு பம்பர்தே வேணு…. தீவாளி நவம்பர்லதே வரும்னு எனக்கே சொல்லித்தர்றியா நீய்யி… எலே… தீவாளி பம்பருமா நவம்பர்ல வரூ…? இந்த வடக்குப்பட்டியானயே ஏமாத்துறீகன்னா… பாவம்… கரட்டாங்கொளப்பயலுகல்லா என்னா… செய்வாங்கெ?” கடையில் லாட்டரி வாங்கிக் கொண்டு, நகர்ந்து போகிற மற்றவர்களை கேலியாய் பார்க்கிறான். கடையை விட்டு விலகியவாறே திரும்பிப் பார்த்துச் சொன்னான் “மக்கா… இந்தக் கடையில என்னமோ தப்பு இருக்கு… அம்புட்டுத்தே சொல்லுவே…” லேசான தடுமாற்றத்தோடு, அடுத்த லாட்டரிக்கடையை நோக்கி போனான் குடிமகன்.

“சாவு கிராக்கிக… ஒரு நாளக்கி ஒருத்தனாவது வந்துர்றாங்கெ… ஒனக்கு என்னப்பா?” அங்கலாய்த்துக் கொண்டிருந்த கடைக்காரர், திடீரென என்னைப் பார்த்துக் கேட்டார். நான் பத்திரப்படுத்தியிருந்த லாட்டரி டிக்கெட்டை பூவைப்போல கையில் தாங்கி நீட்டினேன்.

“ரிசல்ட்டா …?” “இந்தா பேப்பரு…” டிக்கெட்டை வாங்காமல், பேப்பரை நீட்டினார். “காலைலயே காப்பிக் கடைல பார்த்து டேங்க… நூறு ரூவா விழுந்திருக்கு…” பேப்பரையும் – டிக்கெட்டையும் வாங்கி சரிபார்த்தார். எந்த ஒரு சுவாரசியமும் இல்லாமல், கல்லாவிலிருந்து ஒரு நூறு ரூபாய்த்தாளை கொடுத்துவிட்டு, அடுத்த வாடிக்கையாளரை நோக்கி நகர்ந்தார்.

இங்கு இதெல்லாம் சகஜம் தான் போலிருக்கிறது. அப்புறம் ஏன் சீலயம்பட்டியில் மட்டும் ஆடிக்கு ஒருதடவை பத்தோ, இருபதோ மட்டும் விழுகிறது. இனிமேல் இங்கேயே வாங்கிக் கொள்ள வேண்டும். கிடைத்த நூறு ரூபாயை நாலாய் மடித்து வேட்டியில் சுருட்டிக் கட்டிக் கொண்டேன்.

நேரம் ஏழை நெருங்கிக் கொண்டிருந்தது. நன்றாக இருட்டுவதற்குள் வீட்டுக்குப் போய், செல்லத்திடம் நூறு ரூபாயை அப்படியே கொடுத்து ஆச்சரியப்படுத்த வேண்டும். காலையில் சீக்கிரமாய் எழுந்து, பலசரக்கு கடையில் பழயது இருபது ரூபாயை கொடுத்து விட்டு ஐயார் இருபதில் ரெண்டு கிலோ வாங்க வேண்டும். இந்த குருணையைத் தின்று தின்று புள்ளைகளெல்லாம் நாக்கு செத்துப் போயிருக்கும்.

கடந்து போன… மினி பஸ்சுக்காரன் என்னைப் பார்த்ததும் நிறுத்தினான்.

“என்னண்ணே … ஊருக்குத்தான… வாங்க போகலாம்…” கை கொடுத்து உயரமான படிகளில் ஏற உதவினான். இரண்டரை ரூபாய் சில்லரை கொடுத்து டிக்கெட் வாங்கி, கடைசி சீட்டில் அமர்ந்தேன். எனக்கு பசியும் – சந்தோசமுமாக வயிற்றில் மாறி மாறி உணர்வுகள் பொங்கின. நாளைக்கு மாலை வேலை முடிந்த கையோடு, அக்கீம் டாக்டைைரப் பார்த்து பத்து ரூபாய் கொடுக்க வேண்டும்.

போன வாரம் சின்னவனுக்கு சளி கூடிப்போய் காய்ச்சல் வந்த போது, காசை எதிர்பார்க்காமல் ஊசி போட்டார். மறக்காமல் நாளைக்கு கொடுத்து விட வேண்டும். நல்ல மனுசன்.

என் மனக்கண்ணில் வரிசையில் பலர் வந்து போனார்கள். பணியாரக் கிழவி, பால்கார மணியண்ணன், மிட்டாய்கடை குமார், பிரியாணி ராவுத்தர்…. இவர்களை விட வட்டிக்கார ராசுவை நினைக்கத்தான் பயமாயிருக்கிறது. அவனைப் பார்த்து இருபது ரூபாயைக் கொடுத்து விட்டால் பழைய வாரக் கந்து சரியாகி விடும். அடுத்த வாரத்திலிருந்து என்ன செலவு வந்தாலும் அவனுக்கு ஒழுங்காக கட்டிவிட வேண்டும்… எங்கே?! சில விசயங்களை யோசிக்கத்தான் முடிகிறது. எதாவது ஒரு செலவு வந்து அத்தனை யோசனையையும் கவிழ்த்துவிட்டுப் போய் விடுகிறது.

“சின்னச்சாமி அண்ணே … சீலயம்பட்டி வந்தாச்சு… என்ன நெனப்புல இருக்கீக…” கண்டக்டர் பயலின் சத்தம் கலைக்க அவசரமாக இறங்கினேன்.

மெயின் ரோட்டில் கூட்டம் சொற்பமாய் இருந்தது. ஒன்றிரண்டு விளக்குகள் நன்றாக எரிந்து கொண்டிருந்தன. நான் மெயின் ரோடைக் கடந்து, இருட்டுச் சந்துக்குள் நுழைந்தேன்.

சின்ன வயசு சீலையம்பட்டி நினைவுகளில் வந்தது. இந்த மெயின் ரோடினை ஒட்டி, சுற்றியுள்ள சொற்ப வீடுகள் தான் ஊர். அப்போது எல்லாம் வெறும் காடாகக் காட்சியளித்தது. நானும், என் சிநேகிதர்களும் ‘காக்கா குஞ்சு’ விளையாடிய மரங்களெல்லாம் இப்போது வெட்டப்பட்ட, பஞ்சாயத்து ஆபிஸ் அங்கு வந்து உட்கார்ந்து கொண்டது. பழைய விசயங்களை நினைத்தாலே மனசு கனத்து விடுகிறது.

கீழப்பூலாநந்தபுரம் பிரிவு வந்திருந்தது. கால்களை சற்று அகற்றி விரைவாய் நடந்தேன். இரண்டாவது திருப்பத்தில் திரும்புகிற போது மனசில ஒரு குறுகுறுப்பு. பெரியாத்தா பார்த்து விடுவாளோ? அவள் கண்ணில் பட்டால் இன்னும் தாமதமாகிவிடும். பழசெல்லாம் பேசி, மனசைக் கலங்கடித்து விடுவாள். அய்யோ … நான் நினைத்த மாதிரியே குடிசை வாசலில் உட்கார்ந்திருக்கிறாள்.

“ஆரது… சின்னச்சாமிப் பயலா…?” ஆகா, வசமாக மாட்டிக் கொண்டேன்.

“ஆமாத்தா… நீ என்னா இருட்டுல ஒக்காந்துருக்க…?”

“வேறெண்ணப்பு செய்யச் சொல்ற. கண்ணு மச மசண்டு உள்ள ஒரு எழவு தெரிய மாட்டேங்குது… அதா காத்தாட சத்த வெளிய ஒக்காரலாம்ணு ஒக்காந்தே… ஆமா… நீ எங்கெ இருட்டுன பெறகு இங்கன திரியற…?” கண்களை இடுக்கிக் கொண்டு கேட்டாள் பெரியாத்தா.

“ஒண்ணுமில்லாத்தா… சின்னமனூர்ல போயி சிநேகிதரை பாத்துப்புட்டு வாரேன்…”

“ஒங்கய்யா உசிரோட இருக்கிற வரய்க்கும் இப்படித்தே… சினேகித… சினேகிதன்னு சுத்துவாக. மகராச என்னெயும், ஒங்கம்மாவயும் விட்டுப் போட்டு நிம்மதியா கண்ண மூடிட்டாக…” ஆத்தா பழைய நினைவுகளில் கலந்து விட்டாள்.

“ஒங்கம்மா… சின்னவ இருக்காளே… அவ கொடுத்து வச்சவ… பின்னாலயே போய்ச் சேந்துட்டா … அது கெடக்கு… விட்றா. சின்னதுங்க ஸ்கூலு போகுதுகளா?”

“ஆமாத்தா… பெரியது அஞ்சாப்பு, சின்னது – மூணு. ஆமா… ராசுத் தம்பி இப்பெலா கண்ணுல சிக்குறதில்லயே?”

“அவெங்கெடக்கே… சீரு கெட்ட பயபுள்ள. மொதல்லயெல்லா ஊர் சுத்திட்டு வந்து அஞ்சோ, பத்தோ செலவுக்காச்சலு கொடுப்பே… அப்புறமா கொஞ்ச நாளா வீட்டுப்பக்கமெ வர்றதில்ல. எந்த வூர்ல தண்ணி போட்டு, எவ கூட கெடக்கானோ… நாசமா போன பய. நீயாவது முந்தியெல்லா அப்பப்ப வந்து பாத்துபுட்டு போவ. இப்ப புள்ள குட்டின்னு ஆனப்புரம் ஒம்பாடு திண்டாட்டமா போச்சு… நீய்யி காசு பணமெல்லா குடுக்கலெண்ணு எனக்கு வருத்தமில்ல சின்னு… இந்தக் கட்டய வந்து எடயில எடயில பாத்துட்டுப்போடா… இன்னுங் கொஞ்ச நாளுல நானு போயிச் சேந்திடுவே… ஒனக்கு ஆத்தான்னு சொல்ல அப்பொற யாரு இருக்கா …? ”

பெரியாத்தாவைப் பார்த்தாலே எனக்கு மனசெல்லாம் பதறும். அப்பாவின் முதல் மனைவி. என் மேல் ரொம்பப் பாசமாக இருப்பாள். இவள் பையன் ராசுதான் எப்படி எப்படியெல்லாமோ மாறிப் போனான். திடீரென்று தான் அது எனக்கு நினைவில் வந்தது. அவசரமாக வேட்டி மடிப்பைக் கலைத்து நூறு ரூபாயை உருவினேன்.

“இந்தாத்தா… வச்சுக்க. செலவுக்கு கஷ்டமா இருக்கிறப்ப நம்ம வூட்டுப் பக்கம் வா ஆத்தா. இருக்கற கஞ்சிய பகுந்து குடிப்போம். நா இருக்கறப்ப நீ ஏங்கெடந்து கஷ்டப்படணும்? … சரி ஆத்தா… நேரமாச்சு வீட்டுக்கு போறே…” கசிந்திருந்த கண்ணீரை, கையில் துடைத்து விட்டு, வீட்டை நோக்கி நடந்தேன்.

மனசு இப்போது லேசாக இருந்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top