கானலுக்கும் காணலுக்கும் இடையில்

0
(0)

ஒத்தக் கடையில் சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு சின்னக்குளத்து திருப்பத்தில் இருவரும் திரும்பினார்கள்.

காடு கரைக்கு வேலைக்குப் போன பெண்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். கைகளில் தூக்குச் சட்டிகள் ஆடின. சுள்ளிகளைக் கட்டி சிலர் தலையில் சுமந்து நடந்தார்கள். அதன் நுனியிலும் தூக்குச் சட்டி ஆடியது.

குளத்துக் கரையில் ஏறி அரசமர நிழலுக்கு இருவரும் வந்தார்கள். அரசமரம் அடர்ந்து நின்றது. அடியில் பழைய இடிபாடுகள் போல் சப்பட்டை கற்கள் பரவிக் கிடந்தன. வானத்தைப் பிடித்து வைத்த பெருமையில் சின்னக்குளம் தழும்பி நின்றது. வளங்களைக் காட்டி பெருமையடித்தது.

சையது ராவுத்தரும் தோழர் யாசினும் நிழலில் உட்கார்ந்தார்கள். தோழர் ஒரு கல்லை எடுத்து குளத்தில் போட்டார். குளம் கலங்கி, வானத்தின் வர்ண ஜாலங்கள் மறைந்து தண்ணீரின் இருப்பு தெரிந்தது.

“பாத்துமா விசயமா பேசத்தான் வரச்சொன்னேன்.” தோழர் சொன்னார்.

“எதிர்பார்த்தது தான். மனதுக்குள் சொல்லிக் கொண்டு, அத வீட்லயே பேசி இருக்கலாமே?”

“இல்லங்க….. சையது. இதுல பேச வேண்டியது நெறய இருக்கு, அதுக்கு வீடு எடமில்ல.”

“ஒங்களுக்கு எல்லா விசயமும் தெரியுமா?” அண்ணன்காரனை நினைத்துக் கேட்டார்.”

பாத்துமாவுக்கு அண்ணன் உறவுக்காரனாம். அடிக்கடி வருவானாம். இவர் மகள் நிஜாமுக்குத் தெரியாமலும் வருவானாம். அன்றைக்கு வேண்டுமென்றே வெளியூர் போவதாக போக்குக் காட்டி விட்டு இரவில் வந்து நிஜாம் கதவைத்தட்ட, அந்த அண்ணன் பின்புறம் சுவர் ஏறிக் குதித்து ஓடி இருக்கிறான்.

“தெரியும்” லேசாக சிரித்தபடி தோழர் சொன்னார்.”

“எல்லாத்தையுஞ் சொல்லி இருக்க மாட்டார்களே!”

“யாரச் சொல்றீங்க ?”

“பாத்துமாங்க அத்தாவ.”

“அவரு ஒரு வார்த்த தாஞ் சொன்னாரு அல்லாவுக்குப் பொதுவாகச் சொல்றேன். எம்மக பாத்துமா நல்லவ எந்தத் தப்புஞ் செய்யல …… இதுக்கு மேல அவரு எதுவுஞ்சொல்லல.”

ஆச்சரியமாக இருந்தது. தோழரை ஒரு மாதிரியாகத் தயார்பண்ணி அனுப்பி இருப்பார்கள். என்று நினைத்தார். ஆனாலும் பாத்துமா நல்லவன்னு சொன்னத இவரும் நம்பித்தானே வந்திருக்காரு. இதுக்கு அல்லா மேல் சத்தியம் வேற!

“நீங்களும் நம்பிட்டீங்கள்ல?” ஆத்திரமாகக் கேட்டார். இவரைப் புரிந்து யாசின் நிதானித்தார்.

“பொறுங்க …… சையது! இது ஆத்திரப்படுறநிலை முடிஞ்சிருது. உணர்ச்சி வசப்படவேணாம். அதுனாலதே மூணாம் மனுசனா நௌச்சுட் பேசணும்னு இங்க கூட்டி வந்தேன். கொஞ்சம் பொறுமையாவே சொல்லுங்க. நாமதான பேசிக்கிறோம்.”

சையது பேசவில்லை. உணர்ச்சியை அடக்குவதற்கு ஆசுவாசம் தேவைப்பட்டது. மூச்சை இழுத்து மெதுவாக விட்டார்.

டாக்சியிலிருந்து இறக்கி வீட்டுக்குள் கொண்டு வந்து போட்டதும் இவரது மகன் நிஜாம் உணர்வில்லாமல் கிடந்ததும் மகனை அப்படிப் பார்த்தவுடன் பெற்ற தாய் மயங்கி விழுந்ததும் இப்பொழுது நடந்ததுபோல் இருந்தது.

நினைத்தவுடன் உடம்பு ஆடியது. மனது வெந்தது. அதிர்ந்து நின்ற அரசமரத்து நிழலிலும் வேர்த்தது.

“முட்டாப்பயமகெ … இவெ எதுக்கு மருந்தக் குடிக்கணும்? அவளையும் அந்த அண்ணங்காரனையும் கண்ட துண்டமா வெட்டிப் போடாம! அவன தப்பிக்க விட்டுப் போட்டு மருந்தக் குடிச்சிருக்கானே! அவளயாவது என்னமாவது பண்ணி இருக்க வேனாமா? புள்ளய தூக்கிக் குடுத்து வெரட்டி விட்ருக்கானே ….. முட்டாப்பய!”

நமக்கும் நல்லா வேணும். சொந்த ஊர்ல வசதி இல்ல, நாகரீகமில்லன்னு சொல்லி அன்னியத்துல அசலூர்ல பாத்து இத கட்டி வச்சமே. அதுக்குத் தண்டனை! ரெண்டு பேரும் ஆசையா குடும்பம் நடத்தி, ஒரு குழந்தையும் பெத்து, அது தவழ்ந்து வந்து கால கட்டிச் சேந்து புடிச்சு சிரிச்சது எவ்வளவு சந்தோசமா இருந்துச்சு ! இப்ப எல்லாம் மண்ணாப் போச்சே!

அந்த திருட்டு நாய தப்பிக்கவிடாம பிடிச்சிருந்தான்னா இப்ப பேசுறதுக்கே எடமில்லாம போயிருக்கும். அப்பயே தலாக் சொல்லி முடிச்சிருக்கலாம். தப்பிக்க விடப்போயி இப்ப பேச வேண்டியதிருக்கு.

தோழர் பாசின் அமைதியாக ஆரம்பித்தார்.

“ஏங்க உணர்ச்சிக்கும் ஆத்திரத்துக்கும் தூரம் எனக்குத் தெரியும். ஆனால் ஒங்களுக்குத் தெரியாத விசயமும் எனக்குத் தெரியும்..”

“என்ன சொல்றீங்க? அவ நல்லவன்னு நீங்களும் சொல்லப் போறீங்களா?”

“பொறுங்க …… பொறுமையா இருங்க ….. ஒங்க குடும்பத்து மேல எனக்கும் அக்கற இருக்கு. நாம இன்னக்கி நேத்துப் பழகல. ஒங்களுக்குத் தெரியும். தப்பு வந்துறக் கூடாதுன்னு தான் நான் இவ்வளவு செரமம் எடுத்துக் கிட்டேன். எனக்கு விசயந் தெரிஞ்சு பத்து நாளாச்சு இந்த பத்து நாள்ல நான் கட்சிவேல கூட பாக்கலன்னா பாத்துக்கங்க. இப்பக் கூட மதுரைல இருந்துதான் வர்றேன்.”

சையது ராவுத்தர் கொஞ்சம் நிதானித்தார். மனதையும் நிலைப்படுத்தினார். யாசின் அரைகுறை ஆள் கிடையாது. எதையும் நிதானித்துப் பேசக்கூடியவர். இவரே கூடுதலாக ஏதோ தெரிந்து கொண்டிருக்கிறார். வேறு ஏதோ விசயம் இருக்க வேண்டும். ஆனாலும் அந்த அண்ணன்காரன் விசயம் உறுத்தியது.”

“யாரோ ஒரு அண்ணே ….. இருக்காணாம்ல ?”

“ஆமா … இருக்கான்.”

“அதப்பத்தி, அன்னக்கி நடந்ததப் பத்தி என்னா சொல்றீங்க?”

தோழரிடம் லேசான சிரிப்பு வெளிப்பட்டது. தலையை அசைத்துப் பதில் சொன்னார்.

“அவெ வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி ஆபீசுக்குப் போயி நிஜாம பாத்துட்டுத்தான் வீட்டுக்குப் போயிருக்கான். திடுக்கென்று இருந்தது.

நம்ப முடியவில்லை? …. அது நடந்தது பகல்ல நீங்க கேள்விப்பட்ட மாதிரி ராத்திரில இல்ல.”

“இன்னஞ் சொல்லப் போனா அப்படி ஒரு விசயமே நடக்கல.”

“எல்லாமே தலைகீழாகப் புரள்வது போல் இருந்தது. இவர் பொய் சொல்கிறாரா? அப்படி எதுவுமே நடக்கவில்லையா. இவர் பொய் சொல்லக் கூடிய ஆள் இல்லையே!

“அது எல்லாம் ஒரு செட்டப் …… அதுபடி ஒங்க மகன் நிஜாம் வேகமா வீட்டுக்கு வந்து மடமடன்னு கதவத் தட்டி தொறக்கச் சொல்லி பாத்துருக்கான். அந்த அண்ணே இவெ சொன்ன மாதிரி பின் பக்கமா குதிக்கல …… இருந்தாத் தானே குதிக்க! நேரமில்லன்னு சொல்லி வாங்கி வந்த பீஸ் கட்டய புள்ள கைல குடுத்துட்டு ஒடனயே அவெம் போயிட்டான். ஆனா நாங்க மகெம் போட்ட நாடகம் நடக்கணும்மே அதுபடி நடிச்சு டாக்சில கொண்டு வந்து போட்டு ஒங்கள நம்ப வச்சுட்டாங்க அதத்தான் நீங்க பாத்தீங்களே ……”

ராவுத்தருக்கு மண்டை கிறுக்கே வந்து விட்டது. கல்லைப் போட்டதும் குளம் கலங்கி வானத்தின் வர்ண ஜாலங்களும் சேர்ந்து கலங்கியது போல் ஆகிவிட்டது. காட்சியே கலங்கி இருந்தது. எந்த இருப்பும் தெரியவில்லை. வானமா குளத்து நீரா? இருப்பது எது? கானல் நீராய் காட்சி தெரிய, காண்பது எது என்று ராவுத்தர் குழம்பினார்.

“இப்பவும் நம்ப முடியவில்லை? எது உண்மை, எது பொய்யின்னே கொழப்பமா இருக்கும். ஆனா இப்பத்தான் நீங்க ரொம்ப நிதானமா கேக்கணும் மனச திடப்படுத்திக்கங்க …… இந்தாங்க இன்னொரு சிகரெட்டு …. பத்த வச்சு இழுங்க…”

புகையை இழுத்து மெதுவாக விட்டார். அது மேல் நோக்கிப் படர்ந்தது. அவரது பார்வையும் மேல் நோக்கிச் சென்றது.

பார்த்துக் கொண்டிருக்கும் போதே மேகத்தின் உருவங்கள் மாறிக் கொண்டிருந்தன. காற்று வீச்சில் அழகான வடிவம் கலைந்து துண்டு துணுக்குகளாய் சிதறிப் போயின. சிதறல்கள் பரவி வேறு காட்சிகள் தோன்றின. வானம் அழித்து அழித்து எழுதிக் கொண்டிருந்தது.

வாழ்க்கைச் சித்திரமும் இப்படி மாறிவிடுகிறது. கற்பனை செய்து இதை வரைந்து விட முடிவதில்லை. நடந்தது தான் பாதை என்பது போல் வாழ்ந்த பிறகு தான் வாழ்க்கை. அதை திரும்பிப் பார்க்கும் போது நடந்து வந்த பாதை புரிகிறது. திசைகளும் தெரிகிறது. அந்த அனுபவத்தில், திசைகளைப் புரிந்ததில் நிதானமாக எடுத்து வைக்கும் கால் அடிகளில் தான் எதிர்காலம் அடங்கிக் கிடக்கிறது.

தோழரிடம் விசயம் வந்தவுடன் முழு விபரங்களையும் தெரிந்து கொள்ள அவரது அனுபவங்கள் உதவி செய்தன. (நிதானமாக அடி எடுத்து வைத்தார்) மதுரைக்குப் போய் ஆரம்பம் முதல் எல்லா விபரங்களையும் தெரிந்து கொண்டார்.

இவன் நிஜாமுக்கு அங்கே பல தொடர்புகள் இருந்திருக்கிறது. படிக்கும் பொழுதே இது ஆரம்பம். வேலையில் சேர்ந்த பிறகு அதில் ருசி கண்டு பழக்கிக் கொண்டான்.

திருமணத்திற்குப் பிறகு பாத்துமா தடுத்திருக்கிறாள். விசயத்தை அவளுக்குச் சொன்னது அந்த அண்ணன்காரன். சந்தேகமான ஆட்களோடு பார்த்திருக்கிறான். லாட்ஜில் ரூம் போட்டு குடிப்பது. ஆபீஸ் வேலையென்று வெளியூர்களில் சுற்றுவது, இதில் பெண் தொடர்பும் இருந்திருக்கிறது.

பாத்துமா பிரசவத்திற்கு வந்து போன பிறகு அதிகமாகி இருக்கிறது. ஆபீஸ் வேலையாக வெளியூர் போனவன் வரவில்லையே என்று இந்த அண்ணன் ஆபீஸ் போயிருக்கிறான். அவன் லீவு போட்டு ஊர் சுற்றுவது தெரிய வந்திருக்கிறது. நிலைமை முற்றிப் போய். பாத்துமா நெருக்கி இருக்கிறாள்

பாத்துமாக தடுப்பதும், அந்த அண்ணன் தலையிடுவதும் நிஜாமுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குழந்தை பெற்ற பிறகு பாத்துமாவிடம் நெருக்கம் குறைந்திருக்கிறது. பல பெண்களை அனுபவிக்க நினைப்பவனுக்கு குழந்தை பெற்ற மனைவி பிடிக்காதே! அதோடு இந்த அண்ணன் தலையிடுவதும் பொறுக்கக் கூடிய விசயமாக இருக்கவில்லை.

இந்த நிலைமையில் திட்டம் போட்டார்கள். அந்த அண்ணனை பாத்துமாவின் கள்ளப் புருசன் என்று காட்டி தலாக் சொல்லி விடுவது. இவர்களைத் தடுக்க இது தான் வழி. இப்படி நினைத்தவுடன் வேறு ஒரு ஆசையும் நிஜாமுக்கு வந்தது. பாத்துமாவை தலாக் சொல்லி விட்டால். புதிதாக வேறு ஒரு பெண்ணையும் கட்டி அனுபவிக்கலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். இந்தக் கணக்குப்படி அந்த அண்ணன் போயிருக்கிறான். இவர்கள் கல்லை விட்டார்கள். மாங்காயும் அடிபட்டு ஆடிக் கொண்டிருக்கிறது. சீக்கிரத்தில் விழுந்து விடும். அது விழுந்த பிறகு அடுத்த மாங்காய் தானே கிடைத்து விடும்.

சிகரெட் புகை வெளியேற வெளியேற தோழர் சொன்னது உள்ளே போனது. உப்பளத்தில் வெயில் ஏற ஏற தண்ணீர் கொதிப்பெடுத்து நிறம் மாறுவது போல், ராவுத்தரின் முகமும் மாறிக் கொண்டிருந்தது.

பாத்துமாவ தலாக் சொல்லீறனும்னு நீங்க முடிவு செஞ்சத அவங்க ஏற்கனவே திட்டமிட்டுட்டாங்க.

நறுக்கென்று தைக்க ராவுத்தரின் தலை ஆடியது. கலக்கம் தெளிந்து தண்ணீரின் இருப்பும் புரிய ஆரம்பித்தது. நிலைமையில் தெளிவு கிடைத்தது. ராவுத்தர் மூணாம் மனிதனின் நிலைக்கு வந்தார்.

“தலாக் சொல்ல முடிவு செஞ்சீங்க …… பாத்துமா பொம்பளங்கப் போயி ….. ஆணுக்கு ஒரு நீதி பொண்ணுக்கு ஒரு நீதி …… ஆனா இப்ப தப்பு உங்க மகெங்கிட்ட இருக்கு. என்ன செய்யப்போறீங்க?”

குத்தி எடுத்தது போல் நெஞ்சு வலித்தது.

ஒரே மகன்னு செல்லங்குடுத்தது தப்பாப் போச்சு. அவெங் கெட்டதுமில்லாம ஒரு நல்ல பொண்ணுமேல சேத்த அள்ளிப் பூசிட்டானே! ஊரவே சிரிக்க வச்சிட்டானே !!

“பாவம் இந்த பாத்துமா. இவ்வளவையும் தாங்கி இருக்காளே! வேற ஒருத்தியா இருந்தா இவ்வளவு ஆனதுக்கு நம்மள அசிங்கப்படுத்தி இருக்க மாட்டாளா? தலாக் சொல்லி இருந்தா பெரிய பாவத்துக்கு ஆளாகி இருப்போம். ஆம்பளக்கி இருக்கிற அதிகாரந்தானே இந்த தலாக்கு? இதுல என்ன நீதி இருக்கு? பொம்பள கெட்டா தலாக்கு! ஆம்பள கெட்டா பாவம் பாத்துமா?”

பேத்தி தவழ்ந்து வந்து கால கட்டிச் சேந்து புடிச்சு சிரிச்சது. நினைவுக்கு வந்தது.

“பேசாம பாத்துமாவையும் புள்ளையயும் கூட்டிட்டு வந்துருவம். அவெ திருந்தி வந்தா வரட்டும். இல்லன்னா இதோட தல முழுகிற வேண்டியதுதேன். எம் மூணு மகளோட மகளா பாத்துமா இருக்கட்டும். வாங்க தோழர் போவம்.”

சையது ராவுத்தர் எழுந்து நின்றார். சின்னக் குளத்தில் அவர் முகம் தெரிந்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top