கழிந்த பொழுது

0
(0)

கையிலிருந்த செல்போனை அணைத்து விடலாமா என யோசித்தான் அங்கையன்.. மூக்கணாங்கயறு பூட்டிய்துபோல பெருந் தொல்லையாக இருந்தது ’காளைமாட்டுக்குக்கூட வண்டிப்பாரம் ஏறியபிறகுதான் மூக்கணாங் கயிறுக்கு வேலை… இது, விரல் நீளத்தில் இருந்துகொண்டு மனுசனுக்கு எத்தனை இம்சையைக் கொடுக்கிறது;. ச்சை, வேஷ்டியைத்தூக்கி அண்டர்வியர் பைக்குள்போட்டு அமுக்கிக் கொண்டான். ;போ சனியனே ஒனக்கு பாதாளச்சிறை இதுதான்’.

வீட்டுக்குப் போகலாமென்று அப்போதுதான் நினைத்திருந்தான்.

வழக்கம்போல — அதிகாலை அஞ்சரைமணிக்கு. — அல்லாக்கோயில் வாங்கொலியில் கண்விழித்து விழித்த அரைமணிநேரமாய் அடுத்து என்ன செய்வதென விளங்காமல் உட்கார்ந்த வாக்கிலேயே ஒருஉறக்கம்.போட்டான். “இது என்னா வழக்கம்., பேய்பிடிச்ச கொமரியாட்டம் மேலயும் கீழயுமா ஆடிக்கிட்டு” என்ற வீட்டுக்காரியின் அன்பான ’கவனிப்பால்’ ஆறுமணி சுமாருக்கு வீட்டைவிட்டு வெளியேறி நடந்து கடைவீதிக்கு வந்துவிடுவான்.

நாலு மனுச மக்களோடு கலந்து நின்றால்தானே வேலக்காரனுக்கு வாய்ப்பு.

முன்னெல்லாம் காலை ஆறுமணிக்கு எழுந்ததுமே ஊருக்கு மேற்கே பெருமாள் கோயில் பக்கமாய் கிடக்கும் வயல்பகுதியில் காலைக்கடனைக் கழிப்பதும், வேலியோரம் விளைந்து நிற்கும் நாயுருவிச் செடியையோ, காட்டாமணக்கு கொப்பையோ அல்லது வேப்பங்குச்சியோ ஒடித்து பல்துலக்கியபடி அய்யர் தோட்டத்து மோட்டார் பம்ப்செட்டில் வாய்கொப்பளித்து தோதுப்பட்டால் குளித்தும் விட்டு ஏழு ஏழேகாலுக் கெல்லாம் கடைவீதிக்கு வந்து நின்றுவிடுவது ஒரு வழக்கமாயிருந்தது…

இப்போது வரப்பெல்லாம் செதுக்கி சுத்துக்குச் சுத்து கம்பிவேலிபோட்டு தரையில் மண்மெத்தி வீட்டுமனையாக்கி விட்டார்கள். எந்த இடத்திலும் ஒண்ணுக்குப் போகக் கூடவழியில்லை. கடைவீதிக்குக் கீழே சாராயக்கடைப் பக்கமாயிருக்கும் கட்டணக்கழிப்பறையில் காசுகொடுத்து காலைக்கடனைக் கழிக்க வேண்டும் ஆக, டீ குடிப்பதிலிருந்து வெளிக்குப்போக, வேலைக்குத் தடம் தேட, என அத்தனை சோலியும் கடைவீதியில்தான் தவிர, எந்தநேரமும் தன்னொத்த வேலைக்காரர்களை கடைவீதியின் வடக்குக் கடேசியிலிருந்து தெக்குக்கடேசிவரை நடந்தால் எல்லோரையும் பார்த்துவிடலாம் என்ற ஒருபார்வை பொதுமக்களிடம் நிலவுவதால் . இதற்குள்ளேதான் அங்கையனாசாரியின் பாடும் ஏதோ அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லாமல் ஓடுகிற்து.

காலையில் கடைவீதிக்கு வந்ததும் ஒவ்வொரு வேலையாளுக்கும் பட்டறைமேட்டில் நின்று அருள்பாலிக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கும், பக்கத்திலிருக்கும் சக்திவிநாயகருக்கும் ஓங்கி கும்பிடுபோட்டுத்தான் மற்ற காரியங்கள்.

மற்றகாரியங்கள் என்றால், காசிருந்தால், கிளாஸ் டீ வாங்கி ஊதிஊதி தனியாளாய்க் குடிப்பது. பை காலியாயிருந்தால் யாரையாவது அண்டி வட்டகப் டபராவில் காப்பிவாங்கி ஆளுக்குப் பாதியாய் அலசிஅலசிக் குடித்துவிட்டு சையதுபீடியையோ கணேஸ்புகையிலையையோ வாய்க்குள் ஒதுக்கிக்கொண்டு நத்தையாய் கடைவீதியினை நகர்வலம் வருவதுதான். எப்படி நடந்தாலும் எட்டு எட்டரைக்கெல்லாம் கால்வலி எடுத்துவிடும். பின்னும் ஒரு அரைமணிநேரம் வைராக்கியமாய்த் திரிந்தாலும் ஒன்பது மணிக்கு கிராமத்துச்சாவடிக் கட்டிடத்தில் அமைந்துள்ள இங்கிலீஸ் மருந்துக்கடை வாசலில் வந்து அமரந்து விடுவார்கள்.

இதற்குமேல் யாராவது வேலை கொண்டு வந்தால் இங்கே தேடிவரட்டும்.

மருந்துக்கடை வாசல்படியில் கடைநிழல் மட்டுமல்லாது, அருகிலிருக்கும் ஆலமரத்துக் காத்தும் ஆலோலம்பாடி வரவேற்கும். அதனால் இவர்கள் மட்டுமல்லாது, கட்டடத் தொழிலாளர்கள், பஞ்சாபீஸ் பணியாளர்கள், இங்கிலீஸ்கூல் படிக்கும் டைகட்டிய பிள்ளைகள். பெரியகுளம் காலேஜ்க்குப் போகும் இளம்பெண்கள் என ஊரே கூடிநின்று மரத்தின் குளுமையை அனுபவிக்கும்.

ஒன்பதுமணிவரைதான் அந்தக்கும்பல் நிற்கும். அதன்பின் அங்கையனைப் போல அன்றைக்கு வேலை அமையாத ஆசாரிமார், இனியும் தேடிவரும் என்ற நம்பிக்கையுடன் படியைவிட்டு நகராமல் கிடக்கும் கொத்தனார், சித்தாள்கள், சமையல் தொழிலாளர்கள்., தவிர ஓசிப்பீடியிலேயே உடலை வளர்க்கும் உபாயத்தை கற்றுள்ள தம்பிமார்கள். உட்பட இன்னும்பலர் மருந்துக்கடை வாசலில் ஆலமரக்காற்றை அனுபவித்துக்கொண்டிருப்பர்.

பெரும்பாலும் அங்கையன் காலைச் சாப்பாடு. எடுத்துக் கொள்வதில்லை வேலைத்தன்மை அப்படி. வேலைத்தளத்தில்கூட பதினோரு மணிக்கு வடை டீ வந்துவிடும். மற்ற நாளில் டீக் கடையில் த்ண்ணீரைக்குடித்து வயிற்றை நிரப்பிக்கொள்வான். மதியம் ஒண்ணு ஒண்ணரைவாக்கில் மெதுவாய் நடைகொடுத்தால் ரெண்டு ரெண்டரைக்கெல்லாம் மதியச் சாப்பாடு வீட்டில் தயாராய் இருக்கும். இருப்பதைக் குடித்துவிட்டு நாலுமணிவரை மனையாளோடு உரையாடல் – சண்டை –சத்தம் அல்லது ஒரு உறக்கம். எப்படியானாலும் நாலரை ஐந்து மணிக்கெல்லாம் மறுபடி கடைவீதி. அதற்கப்பறம் வீடடைய இரவு ஒன்பதோ பத்தோ ஆகும்.

இன்றைக்கு ஏனோ பதினோரு மணியிலிருந்து அங்கையனுக்கு வீட்டு ஞாபகம் எடுத்துவிட்டது. அதிகப் பசி. என்னவென விளங்கவில்லை. இதுவரை அப்படி இருந்ததில்லை. வேலைத்தளத்தில் நாள்முழுக்கப் பட்டினி கிடந்திருக்கிறான். அப்போதெல்லாம் இப்படிப் பசித்ததில்லை. ஒருவேளை நேற்று இரவு சரியான ஆகாரமில்லாத காரணமாகக்கூட இருக்கலாம். .

காலையிலிருந்து ஒரு வட்டகப் காப்பிக்குக்கூட விதியில்லாமல் ஆகிவிட்டது. வெறும் தண்ணீரும் ரெண்டுவாய் புகையிலையும் எத்தனை நேரம்தான் தாங்கும்..? ஆனாலும் புத்தி கடைவீதியை விட்டு நகரவேண்டாம் என்றது. அங்கிட்டுப் போனநேரம் பார்த்து யாராவது வேலைக்குத்தேடி வந்துவிட்டால்…! பொறுத்தது பொறுத்தாயிற்று இன்னும் கொஞ்ச நேரம் எப்பவும்போல ஒன்னரைக்குப் போனால் கூட சரிதான்..! இன்னமும் ரெண்டுமணி நேரமா…? வயிறு ஒரெயடியாய் முரண்டு பிடித்தது.

அந்த நேரம்தான் மனைவியிடமிருந்து முதல்போன் வந்தது.

பொதுவாக வீட்டிலிருந்து போன் வருகிறதென்றால் வீட்டில் ஏதாவது விசேசமாக பலகாரம் செய்திருந்தால்தான் வரும். “யேங்க, எங்கருக்கீக..! இன்னிக்கி இனிப்பு ஆப்பம் செஞ்சிருக்கேன் வர்ரீகளா…., ’’இடியாப்பம் இடியாப்பம்னு துள்ளுனீங்க பிழிஞ்சு வச்சிருக்கேன். ஆறி அவுலாப் போகங்குள்ள வந்து கொட்டிக்கங்க…”

இப்படியான அறிவுப்புகளுக்கெல்லாம் அங்கையன் அவ்வளவாக செவிமடுப்பதில்லை. ஒன்று போன்வருகிறபோது வேலையிலிருப்பான். அல்லது யாராவது ஒரு பார்ட்டி வந்து டீ வடை வாங்கிக்கொடுத்து சாப்பிட்ட மப்பிலிருப்பான். அதனால் வருகிற போனுக்கு பதில் சொல்லாமல் ‘கட்’ செய்து விடுவான். அல்லது “வரேன்” என ஒற்றைச்சொல்லில் பதிலைத் தெரிவித்து விடுவான். ஏதாவது ஒரு ‘காய்ந்த பொழுதில்’ தான் “ ந்தா வரேம்மா..” என அன்பொழுக பதில் சொல்லுவான்..

ஆண்டவன் இருக்கிறான் “ என வயிற்றைத் தடவியபடி, போனை எடுத்து காதில் வைத்தான்.

“ சொல்லும்மா…! “

“ யேங்க, எங்கருக்கீக…! அழகாபுரியிலருந்து ஒங்க அண்ணெம் புள்ள வந்திருக்குதுங்க… வரீகளா…”

அண்ணெம் புள்ள என்றதுமே, அங்கையனுக்கு அருணாவின் சிரித்தமுகம் மடல்போல் முன்னால் வந்து நின்றது. “ சித்தப்பா….! “

உடன்பிறந்த பிறப்பு இல்லைதான். ஒன்றுவிட்ட சொந்தம். ஆனாலும் அழகாபுரியில் இருந்தவரைக்கும் அருணாவின் அம்மா கமலா அண்ணி அங்கையனை கொழுந்தனாராய்ப் பாவிக்காமல் மகனாய்த்தான் பாவித்து வளர்த்தார். கலியாணம் முடிக்கும்வரை சோறுதண்ணி மட்டுமில்லாது நல்லது பொல்லது என எல்லாவற்றையும் எந்தவித அசூயையுமில்லாது பார்த்தார் .அதோடு, தனது சொந்தத்திலேயே அங்கையனுக்கு ஒரு பெண்ணையும் பார்த்து கல்யாணமும் முடித்து வைத்தார், தனது கல்யாணத்திற்கு மறுதினம்தான் அருணா பிறந்தாள். அந்தஒட்டுதல் வேறு. அதற்கப்பறமும் ஆறேழுவருசம் அழகாபுரியிலேயே காலந்தள்ளினான் கெட்டும் பட்டணம்சேர் என்பதுபோல ஒரு காண்ட்ராக்ட் வேலைக்காக தேனிக்கு வந்தவன் இங்கேயே வீடுபார்த்து இருக்க வேண்டியதாயிற்று. இன்னமும் அழகாபுரி போனால் தனிக்கவனிப்புத்தான். அருணாவை ஆறுமாசத்துக்கு முன்னால்தான் கட்டிக்கொடுத்திருந்தார்கள். கல்யாணத்திற்கு எல்லோரும் போயிருந்தார்கள். புதுப்பெண்ணைப்பார்க்க பலகாரம் சுட்டுப்போனபோது அங்கையன் போகவில்லை. மனைவி பிள்ளைகளை மட்டும் அனுப்பி இருந்தான். பொழுதூக்கும் என்னா போய்க்கிட்டு என்று பரமாத்தமாக நினைத்திருந்தான்.“சித்தப்பாவ ஏன் கூட்டிகிட்டு வரல” என அருணா அடம்பிடித்ததோடு “சித்தப்பா வந்தாத்தான் ஒங்களப் போகவிடுவேன்” என ஏக ரகளை செய்துவிட்டாள்.. கடைசியில் அங்கையன் ஆஜராகித்தான் குடும்பத்தை மீட்டு வந்தான். அப்படியொரு பாசமான பிள்ளை. அருணா.

“ ந்தா வாரேன…! “ போனில் பதில் சொன்னான்.

போனை சட்டைப்பையில் வைத்தபோது வீட்டில் என்ன இருக்கப்போகிறது என யோசித்தான். என்ன இல்லாவிட்டாலும் பவானி சமாளித்துவிடுவாள்தான் ஆனாலும் வெளியூரிலிருந்து வந்திருக்கிற பிள்ளைக்கு. ஒரு காப்பி பலகாரமவது வாங்கித் தரவேண்டாமா…! குறைந்தது ஒரு லட்டு மிச்சராவது வாங்கிப்போனால்தான் மரியாதை. ஒரு ஐம்பது ரூபாயாவது வேண்டும். யோசனையின் தீவிரத்தில் பசி பறந்துபோனது. மறுபடி கடைவீதியில் வடக்கிலிருந்து தெற்குமுகமாய் நடக்கலானான்.

குண்டும்குழியுமான சாலையில் வாகனங்கள் கொஞ்சமும் அச்சமில்லாமல் குதித்துக் குதித்து ஓடிக்கொண்டிருந்தன. சாலையின் இருபுறமும் இடைவெளி இல்லாமல் அடைத்து நின்றன கடைகள். எந்தக் கடையிலாவது தனக்குத் தெரிந்த ஒரு முகம்,…. கேட்டதும் ஐம்பது ரூபாய் இல்லையெனாது எடுத்துத் தருகிற முகம் தெரிகிறதா என தேடிக்கொண்டே நடந்தான்.

“ ஸார்… “ அங்கையனின் தோளைத் தட்டி நிறுத்திய இரண்டு இளைஞர்கள் ஆளுக்கொரு நோட்டீசை நீட்டினார்கள்.

“ புதுக்கடை ஓப்பனிங் சார்… வார நாயத்துக்கிழம.. தேனில சந்தைக்குப் பக்கத்தில அவசியம் வாங்கசார்….”

பளபளப்பான தாளில் அச்சடித்த நோட்டீஸ்கள். கொடுத்தனர். கல்யாணப் பத்திரிக்கையைப் போல நாலுபுறமும் மஞ்சள் தடவி இருந்தது.

“ஓப்பனிங் டேட்ல பதினஞ்சாயிரத்துக்கு பர்ச்சேஸ் பண்ணீங்கன்னா ஒரு கோல்டு காய்ன் ஃப்ரீ .சார்.”

இரண்டுபேரும் ஒரேமாதரியான சீருடையணிந்திருந்தனர். கழுத்தில் நீலநிறத்திலான அடையாள அட்டையும் தொங்கியது.

சரியென அவர்களுக்கு தலையாட்டிய அங்கையன், அவர்கள் தந்த பத்திரிக்கைகளை மடக்கி சட்டைப்பையில் வைத்துக்கொண்டான்.

மறுபடியும் போன்.

மனைவிதான்

“ யேங்க.. இந்தப்பிள்ள என்னாங்க , ஊருக்குப்போறே ஊருக்குப்போறேன்னு குதிக்கிது. இந்தா ஒஞ்சித்தப்பாகிட்ட பேசு…” சடாரென போனை அருணாவிடம் மாற்றிவிட்டாள் பவானி.

அந்த சின்ன இடைவெளியில்  ஒரு குளிர்காற்று வந்துபோனதை உணர்ந்தான் அங்கையன்.

“ சித்தப்பா..”

“ ம்  ம் அருணு…”

“ நல்லருக்கீங்களா சித்தப்பா…” பேசுகிறபோதே இருவருக்கும் குரல் உடைந்தமாதரி தெரிந்தது.

“ம் சூப்பரா இருக்கம். நீ எப்பிடிமா…ருக்க..! குக் கூட மாப்பிள்ள வந்துருக்காரா அவர் எப்பிடிருக்கார்…”

அருணாவின் மாப்பிள்ளை கடைவேலையாக தேனிக்குப் புறப்பட்டதாகவும் தேனி என்றதும் சித்தப்பா ஞாபகம் வந்ததால் அவரது வேலை முடிகிறவரை  தான் சித்தப்பா வீட்டில் இருந்துவர அருணா மாப்பிள்ளையிடம் விருப்பம் தெரிவித்ததாகவும் அந்த ஒப்பந்த அடிப்படையில் தேனிவந்திருக்கிறார்கள் இப்போது மாபிள்ளைக்கு வேலை முடிந்துவிட்டதால் கூப்பிடுகிறாராம்.

“போய்ட்டு இன்னொருநாள் வரேம்ம்ப்பா… நீங்க வேலையா இருக்கீகளா” பேச்சில் அங்கையனைக் காணாத ஏக்கம் வழிந்தது.

வட்டகப் காப்பிக்கு வழியில்லாமல் வீதியில் தெற்கும் வடக்குமாய் திரிவதை சொல்லமுடியுமா… அல்ல்து வாரத்தில் ஒருநாள் இருநாள் வேலைபார்க்கும் அவலத்தைத்தான் விருந்தாடிவந்த பிள்ளையிடம் பகிர்ந்துகொள்ளமுடியுமா. ? அந்தக்கேள்விக்கு பதில் சொல்லாது,  “ நீ இருந்து சாப்ட்டுப் போலாம்லம்மா..” என்றான். இப்போது பவானியிடமிருந்து பதில் வந்தது.

“யேங்க, அருணா வீட்டுக்காரர் கிட்டக்க நான் பேசிட்டேன் அவரும் சாப்புட வாராரு. நீங்க சீக்கிரமா கோழிக்கறி ஒரு ஒருகிலோவும் ஒரு பத்து முட்டையும், மறக்காம மூணுரூவாய்க்கி இஞ்சியும் வாங்கிட்டு வந்திருங்க…”  அங்கையனிடமிருந்து அடுத்தபதிலை எதிர்பாராமல் பேச்சை முடித்துக் கொண்டாள் பவானி. சமையல் வேலையைத் தொடங்கிவிட்டாள் போலிருக்கிறது.

போனை வீசியெறிந்து உடைக்கவேணும்போலிருந்தது. மனைவிமேல் காட்ட வேண்டியதை ஜடப்பொருளின்மேல் காட்டினால் கைநட்டம்தானே. அந்த ஜடத்துக்கு –பவானி – தெரியாதா.. அவனிடம் உள்ள கையிருப்பு என்னவென்று.!. வேலைக்குப் போய் எத்தனை நாளாயிற்று..கையில்இருந்தால் ஒருவருக்குத் தெரியாமல் ஒளித்துவைக்கிற பழக்கம் இருவருக்குமேயில்லை. எதோ ரேசன் அரிசி இருக்கப்போய் காலம் கழிகிறது ,கோழிக்கறி சும்மாவா வரும்…? முன்னூறு ரூபாய்க்கான வேலையை ஏவி இருக்கிறாள். யாரிடம் கேட்பது. ஐம்பதுரூபாய் தேடி கடைவீதியை இர்னடுதரம் அளந்தாயிற்று … முன்னூறுக்கு…?

யாரைப்பார்த்தாலும் புரட்டாசி மாதப்பொழுதைக் காரணம் சொல்வார்கள். கொஞ்சநாளைக்கு முன்னால் ஆடி வெட்டை காரணமாய் நின்றது. சட்டென அங்கய்யனுக்கு ஒரு யோசனை தோன்றியது. ’’புரட்டாசி மாதம் சனிவாரம் மக்கள் விரதமிருப்பதால் கறிக்கடைகள் திறக்கப்படவில்லை.”என போனில் சொல்லிவிடலாமா சொல்லவேண்டிய வாசகத்தை தனக்குத்தானே .பலமுறை சொல்லிப்பார்த்துக்கொண்டான். ஒருதரம் சரியாகவும், அடுத்தடுத்த முறை பரிகாசமாகவும் பட்டது.

கண்களைமூடி நெற்றியைத்தேய்த்து யோசித்தான்.ஒன்றும் புலப்படவில்லை. சட்டைப்பையிலிருந்த செல்போன்மீதுதான் கோபம் வந்தது ’இந்தச்சனியன என்னைக்கி கைல ஏறுச்சோ அன்னையில இருந்து தொல்லதான்.. இது இல்லாம இருந்தா யாரு எங்க இருக்கா வீட்டுக்கு வந்திருக்கறது யாரு !, என்னா வேணும், வேணாம்ங்கற எந்தச் சங்தியும் அறியாம தெரியாம நிம்மதியாத் திரியலாம்.

“ என்னாப்பா அங்கயா..! ரோட்ல தானாப் பேசிட்டுத் திரியற… பெரிய ஆப்பரா…?”

வெண்மை மங்காத வேஷ்டியும் மடிப்புக்கலையாத முழுக்கைச் சட்டையுமாய் புத்தம்புது மோட்டார் பைக்குடன் வழியை மறித்து விசாரித்தான் பெருமாள். அங்கையனும் அவனும் வகுப்புத் தோழன் மட்டுமல்லாது சொந்தக்காரனும் கூட. இத்தனைக்கும் படிப்பில் அத்தனை கவனமில்லாதவன். தொழிலும்கூட சுத்தமில்லை. சாதாரணமாய் இழைப்புளி பிடிக்கத்தெரியாமல் சிறுவயசில் அவனது அப்பாவிடம் அடிக்கடி வசவும் அடியும் வாங்குபவன். “ நீயெல்லா ….இன்னார் வம்சம்மின்னு வெளில சொல்லிக்கிடாத சொன்னா எனக்கு மட்டுமில்ல நம்ம பாட்டெ முப்பாட்டனுக்கு கேவலம். ந்தா ஒன்னோடதான திரியிறான் அங்கயெ அவெங் கையால ஒருமொடக்கு தீர்த்தம் வாங்கிக்குடி அப்பவாச்சும் மண்டைல ஏறுதான்னு பாப்பம்.” என்பார்.

கடைசிவரை பெருமாளுக்கு கைத்தொழில் படியவே இல்லை. தம்மர்க்கூடுகூட அழுத்திப்பிடிக்கத்தெரியாமல் நிறைய காயங்கள் தனக்கும் எதிராளிக்கும் ஏற்படுத்தி இருக்கிறான். ஆனாலும் குலத்தொழிலை விட்டு விடாமல் தனக்கு வருகிற வேலையை யாருக்காவது கமிசனுக்கு மாற்றிவிட்டு அதில் சம்பாதிக்கத் துவங்கினான். பிறகு பழைய புதிய மரச்சாமான்களை வாங்கி விற்க ஆரம்பித்தான். கடைபோட்டான்.குடோன் வைத்தான் வளர்ந்து விட்டான். அங்கையனைப்போல வேலைக்காரர்களிடம் அரிய சாமான்களின் இருப்பிடத்தை விசாரித்து நேரடியாகவும் மறைமுகமாகவும் பேரத்தில் இறங்கிவிடுவான்.

“ஏதும் பழசுகிழசு துப்பு இருக்கா.. புதுசு இருந்தாக்கூட சொல்லுய்யா… வழக்கம்போல கமிசன் வாங்கிக்க…” வண்டியிலிருந்து கீழிறங்காமலேயே பேசினான்.

அமைதியாய் இருந்த அங்கையனுள் ஒரு ஓட்டம் ஓடியது. பெருமாளிடம் ஏதாவது பொய்சொல்லி அட்வான்ஸ் கேட்கலாமா..ஆனால் அவன் தன்னைப் போல பல கரைபார்த்தவன். ஏவாரி. ஏமாளியாய் இருக்க மாட்டான்..

“ஒரே ஒரு ஆப்பர் இருக்கு..” மிடுக்காய் நின்று சொன்னான்.

“சொல்லு சொல்லு… கட்டிலா.. பீரோவா சோபாவா..? எதா இருந்தாலும் ரெடி கேஷ்தான்.”

“கட்டுலு சோபா வெல்லாம் உயிரில்லாதது. உயிருள்ள ஒன்னத்தரேன். ஒரு முன்னூறு குடு போதும். “ என்றான்.

பெருமாளுக்கு விளங்கவில்லை. “உயிருள்ளதா… நாயா.. ? ”மண்ணுளிப் பாம்பா…”

இல்லை என தலையாட்டிய அங்கையன். “ என்னத்தரென்…” என்றான்.

“வேற ஆள்க் கெடைக்கலியாக்கும்.” என தலையில் அடித்துக் கொண்டவன், “உன்னவச்சு ஊறுகா போடவா…” என்றபடி வண்டியை சாவிபோட்டுத் திருகினான்.

”ஒங்கடைல வந்து தச்சுவேல செய்றனப்பா..”

“ஹும் அதுக்கெல்லா மிசின் இருக்கு ஒன்னயவிட வேகமா பிரமாதமா வேலயப்பாக்கும்.” ஏளனமாய்ச் சிரித்தபடி வண்டியைக் கிளப்பினான்.

நேரம் கடந்து கொண்டிருந்தது. மீண்டும் ஆலமரத்தடி. மறுபடி பசி. எல்லாவற்றையும் மீறி அருணாவைப்பார்க்க வேணுமெனும் ஆசை அளவில்லாமல் எழும்பியது. . மறைந்திருந்து பார்த்துவிட்டு வந்துவிடலாமா… கால்கள் யாரையும் கேட்காமல் நடக்கத் துவங்கின. தோளில் வளர்ந்த பிள்ளைதானே நம்மைப் பற்றி அறியாமலா இருக்கும் …

பதைபதைத்த மனசோடு வீட்டை நெருங்க ஏதோ ஒரு வீட்டிலிருந்து கோழிக்குழம்பு கொதிக்கும் வாசனை வந்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top