களரி

2
(1)

                 “பசும்பாலும், தெளிதேனும்

                மணக்கத் தந்திடும் மலைநாடே!

                பகை தோற்க, பலம் சேர்க்கும்

                வீரப்பெண்களின் திருவீடே… ”

பாணனின் பாட்டுச் சத்தம் பசுமை போர்த்திக் கொண்டிந்த மலைப் பிரதேசங்களில் பட்டு எதிரொலித்தது. அவன் கையிலிருந்து உடுக்கையின் சத்தம் எட்டுத் திக்குகளையும் தொட்டுத் திரும்பியது. ஊர்ந்து போகும் மஞ்சள் சேரைகளையும், சல சலக்கும் காட்டு நதியையும் தாண்டி, கூடியிருந்த அடிவார மனிதர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

“ஏ… பாணரே!”

பாணனின் விரல்கள் உடுக்கையிலிருந்து விடுபட்டன. அழைப்பு வந்த திசையில் நின்றான் அவன்.

“உங்கள் மலைநாட்டில் ஏதோ விபரீதமாமே?” – தூண்டில் போட்ட ஆவலோடு பாணனின் முகம் நோக்கினான் அவன். பாணன் மெல்லச் சிரித்தான்.

“விபரீதம் அல்ல தோழனே… விசேஷம்!”

“கொஞ்சம் புரியும் படிதான் சொல்லேன்…” பாணனைச் சுற்றி விஷயமறியும் விதத்தில் நெருங்கி நின்றார்கள்.

“புத்தூரான் மகள் உன்னியார்ச்சை களரியில் பங்கேற்கிறாள். ஏதோ தெரியாதது போலல்லவா இருக்கிறது உங்கள் கேள்வி?” கூட்டத்தில் ஒருவன் தலையாட்டிச் சிரித்தான். “அடிபொலி… இதைத்தான் நான் விபரீதம் என்றேன்..”

பாணன் உடுக்கையைத் தட்டி, ஒரு ஓசையை வெளிப்படுத்தினான். “அதெப்படி விபரீதமாகும்..? ஆண்கள் பங்கேற்றால் களரி – உங்களுக்கு விசேஷம். அதுவே பெண் என்றால் விபரீதமா? குஞ்சுராமன் விடுவது சவால். உன்னியார்ச்சை விடுவது மட்டும் சவடாலா? நன்றாயிருக்கிறது உங்கள் நியாயம்”

“அது சரி. பாணரிடம் வாய் கொடுத்து மீள முடியுமா?” கேள்வி எழுப்பியவன் அமைதியானான். “எப்படித் தொடங்கியது… இந்தப் பகை?” கூட்டத்தினரின் கேள்வியை மற்றொருவன் முன்மொழிந்தான்.

பாணன் தன் தோள் சுமையை இறக்கி வைத்து விட்டு, அதன் அருகிலேயே அமர்ந்து கொண்டான். ‘கதக்களி’ பார்க்கும் ஆவலோடு அத்தனை பேரும் சுற்றி உட்கார்ந்தார்கள். பாணன் தன் பாட்டுக்குரலில் கதை சொல்லத் துவங்கினான்.

“இந்த வருட கும்ப மாதத்தில் – பேரூர் காவு பகவதியம்மே உற்சவத்தில் தொடங்கியது தான் – இந்த வம்பு, வழக்குகளெல்லாம்!”

பேரூர் வட்டாரத்தில் களரி ஆசான் குஞ்சுராமனின் சீடர்கள் ஏராளம் அல்லவா? அவர்கள் கற்கடகப் பஞ்சத்திலிருந்து வழிப்பறியில் ஈடுபட்டார்கள். பகவதியம்மே சேத்ரத்திற்கு வரும் பெண்களின் நகைகளை கொள்ளையடிப்பதும், மலைநாட்டு எல்லைக் கிராமங்களில் வழிப்பறி செய்வதும் அவர்கள் வழக்கமானது. குஞ்சுராமனுக்கு நிகரான ஆசான் புத்தூரான் இப்போது படுக்கையில்தானே கிடக்கிறார்? அதனால் பேரூர் பகுதியில் அவர்களை அடக்க ஆளில்லை. அவர்களின் ஆட்டம் எல்லை மீறிப்போனது!.

“அதெல்லாம் சரி பாணரே…! புத்தூரானாசானின் மருமகன் சந்து தம்புரான் என்ன ஆனார்? கேள்வி கேட்டவனின் நுட்பமதியை கூட்டத்தினர் தலையாட்டி சிலாகித்தார்கள்.

“உன்னி ஆர்ச்சையின் முறைப்பிள்ளை சந்து தானே? அவன் தான் குஞ்சுராமனின் பழைய குருகுல நண்பன் ஆயிற்றே? அது தெரிந்திருந்தும் புத்தூரான் எப்படி சந்துவை அனுப்புவார்?” பாணனின் பதிலை ஆமோதித்தார்கள்.

“அப்படியானால் இந்த பிரச்சினையின் தீர்வு தான்

என்ன”

“அப்படிக் கேளும்! குஞ்சுராமன் ஆட்களின் களியாட்டம் உச்சத்திற்குப் போன போதுதான் பேரூர் காவு உற்சவம் வந்தது. உன்னியார்ச்சை தன் களரிப் பயிற்சியை கற்று முடித்ததும் தம் குல வழக்கப்படி பகவதியம்மே சேத்ரத்தில் தீபம் ஏற்ற போக வேண்டியிருந்தது. தவளைக்கு தன் வாயால் தானே சாவு? வாங்கிக்கட்டிக் கொண்டார்கள்”

“மோட்சம் கிடைக்காது என்று பயந்து சேரையையும், பூனையையும் வேண்டுமானால் நாம் அடிக்காமல் விடலாம். கடிக்கிற நல்ல பாம்பை விட்டு விட முடியுமா? துணைக்கு ஆளில்லாமல் தன்னந்தனியாய் குதிரையில் போனாள் – உன்னியார்ச்சை! வழக்கம் போல் வழிப்பறி செய்ய முயன்றார்கள் கொள்ளையர்கள். புத்தூரான் வாரிசிடமே புதுவித்தை பலிக்குமா? எல்லோரும் சுருண்டு விழுந்தது தான் மிச்சம். இந்த அவமானத்தைக் கேள்விப்பட்ட குஞ்சுராமன், திரும்பி வரும் வழியில் உன்னியார்ச்சையை மடக்கினான்”

ஆர்வம் மேலிட ஒருவன் கேட்டான் “அவனுக்கும் அடி கிடைத்ததா?” பாணன், தானே வழிநடத்திய வீரன் போல பாவனை செய்தான்.

“பின்னே கிடைக்காமல் போகுமா? குஞ்சுராமன் களரி ஆசான் என்பதால் தொட்டுக் கும்பிட்டு விட்டு பொலித்து விட்டாளாம் உன்னியார்ச்சை! அவமானத்தில் மீசை துடிக்க, ராமன் களரி அங்கத்திற்கு வருமாறு சவால் விட்டிருக்கிறான். அலட்சியமாய் ‘சரி’ என்றாளாம் உன்னி!” பாணன் நிறுத்தி ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

“களரி அங்கமா? தோற்று விட்டால் தலை அல்லவா போகும்?” பயத்தோடு கேட்டான் ஒருவன்.

“ஆமாம், கோழைகள் உயிரை வைத்து என்ன செய்யப் போகிறார்கள்? களரி மரபுப்படி அங்கத்தில் தோற்றால் ‘அங்கபங்கம்’ தான் முடிவு.”

“ஆனால்… புத்தூரானாசானும், சந்து தம்புரானும் ஒன்றும் சொல்லவில்லையா?”

“புத்தூரான் ஒருவழியாகச் சம்மதித்து விட்டார். ஆனால், சந்து எப்படி தன் நண்பரை விட்டுக் கொடுப்பார்? அங்கத்தை தடுக்க அத்தனை சதிகளையும் செய்தார். பாவம்… உன்னியார்ச்சையிடம் பலிக்கவில்லை!”

“அப்படி என்னதான் செய்தார் சந்து தம்புரான்?” – இது ஒருவன்.

“அவர் என்னதான் செய்வார்? களரியையே ஒழுங்காகக் கற்காத ‘கன்னக்கோல்’ வீரரல்லவா? சதிதான் செய்திருப்பார்” – இது இன்னொருவன்.

“உண்மை தான். பெண்கள் தாலி வாங்கிய பிறகு வாளேந்துவது வழக்கமில்லை அல்லவா? அதனால் உன்னியார்ச்சையை உடனே தனக்கு மணமுடிக்கும்படி வலியுறுத்தினாராம் சந்து! அங்கம் முடிந்த பின்புதான் திருமணம் என்று உன்னி உறுதியாகச் சொல்லி விட்டாளாம்.”

“சந்து தம்புரானின் சதி அவ்வளவு தானா?”

“அங்கம் நடக்க வேண்டுமானால், உன்னியார்ச்சையின் துணையாளாக தான் தான் நிற்பேன் என்று மன்றாடி புத்தூரானின் அனுமதி வாங்கி விட்டானாம் சதிகாரச் சந்து!”

“இதற்கு எப்படி சம்மதித்தாள் உன்னியம்மே?”

“அவளுக்கு சந்துவைப் பற்றி என்ன தெரியும்? ஆடு எப்போதுமே தன் தலை அறுப்பவனைத் தான் நம்புமாம்” – பாணன் வருத்தத்தோடு சொன்னான்.

“புத்தூரானாசான் இப்படிச் செய்திருக்கக் கூடாது.”

புலம்பலோடு கலையத் துவங்கினர் கூட்டத்தினர். “பேரூர்காவு அம்மேதான் உன்னியார்ச்சையை காப்பாற்ற வேண்டும்!” பாணன் பிரார்த்தனையோடு நடக்கத் துவங்கினான். அவன் நடந்து போன வழி நெடுகிலும் மறுநாள் நடக்கப் போகிற ‘அங்கம்’ பற்றிய பேச்சாகவே இருந்தது.

அன்றைய விடியல் எப்போதும் இல்லாமல் நிசப்தமாக இருந்தது. பூத்துக் குலுங்க வேண்டிய கனிக்கொன்ன மரம் மொட்டையாய் நின்றிருந்தது. காட்டுப் பறவைகள் கூட மௌனம் அனுஷ்டிப்பதைப் போல எங்கும் ஒரு அமைதி. முந்தைய இரவில் ஆந்தைகள் அலறியது பற்றியும், மலை நரிகளின் ஊளையிடல் குறித்தும் மலைநாட்டு மக்கள் கவலை தெரிவித்தார்கள். மூன்றாம் நாள் விரதம் முடிந்து, களரி பரம்பரை தெய்வங்களை வணங்கியபடி நின்றாள் – உன்னியார்ச்சை!.

எந்த ஒரு பிரார்த்தனையையும் முனகாமல் ஆழ்மௌனத்தில் நின்றிருந்தாள். புத்தூரானின் இருமல் சத்தம் கவனத்தை ஈர்த்தது.

“அப்பா…” அழைத்தபடியே தந்தையின் அறையில் நுழைந்தாள். புத்தூரான் புன்முறுவல் பூத்தார். இயலாமையின் குறைந்தபட்ச இன்பம்.

“வா…மகளே! அங்கம் பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை. குஞ்சுராமன் – களரி ஆசான் என்பதை மட்டும் நினைவிற்கொள்…”

“நன்றாகத் தெரியும் அப்பா, களரி ஆசான் மட்டுமல்ல; குஞ்சுராமன்! குறுக்கு வழியில் ‘கன்னக்கோல்’ நீட்டவும் அறிந்தவர் என்பதும் தெரியும்” உன்னியார்ச்சையின் குரலில் உறுதியிருந்தது.

“என்னை ஆசீர்வதியுங்கள் ஆசானே!” உன்னியார்ச்சை தந்தையின் பாதம் தொட்டாள்.

“கன்னக்கோல்காரர்கள் களரியில் ஜெயிக்க முடியாது மகளே! ஆனாலும் நம் ஆயுதத்தை எதிரிதான் தீர்மானிக்கிறான் என்பதை மறந்துவிடாதே! போய் வா மகளே… குஞ்சுராமனின் குருதி அவன் பாவங்களுக்கு பரிகாரமாகட்டும்” நீண்ட உரையாடல் புத்தூரானின் மூச்சை சீரற்றதாக்கியிருந்தது.

“வருகிறேன் அப்பா…” உன்னியார்ச்சை வாசல் நோக்கி நடந்தாள். “மகளே” பூத்தூரான் மீண்டும் அழைத்தார். அவள் முழுதாகத் திரும்பும் முன்னே தன் உரையாடலை முடித்துக் கொண்டார். “யாரையும் நம்பாதே மகளே! களரியில் – கையாள் கூட கடைசித்துணையல்ல”.

உன்னியார்ச்சை வாசல் வெளிக்கு வந்த போது, குதிரைகளும் – வாள் பெட்டியோடு சந்துவும் தயாராக இருந்தார்கள்.

“அத்தான்… அப்பா கொடுத்த வாளை எடுத்துக் கொண்டீர்களா?” உன்னியார்சையின் கேள்விக்கு முகம் சுளித்தான் சந்து.

“என்ன உன்னி… அதை மறப்பேனா..? சரி, சரி பேசிக்கொண்டிருக்க அவகாசமில்லை. அண்டை நாடுகளின் களரிக்காரர்கள் எல்லாம் முன்பே வந்தாயிற்று. வா… வா… குஞ்சுராமனை பாடையேற்றி அனுப்பிவிட்டு வருவோம்!”

மெல்லிய புன்னகையோடு குதிரையில் ஏறியமர்ந்தாள் உன்னியார்ச்சை. சந்து மனசுக்குள் சிரித்துக் கொண்டான். ‘உன்னியார்ச்சை.. இது உன்னுடைய இறுதி ஊர்வலம்! குஞ்சுராமனின் சகோதரியோடு எனக்கு நடக்கப் போகும் மண ஊர்வலம்!’

சண்டமேளம் முழங்கும் சப்தம் – மக்களை சந்தோஷப்படுத்தாமல் இறுக்கம் கொள்ளவே செய்தது. ஒவ்வொரு ‘தம்.. தம்’ ஓசையும் அவர்கள் அடிவயிறுகளின் அதிர்வுகளை எதிரொலிப்பதாக இருந்தது. களரி நடக்கும் மண்மேட்டைச் சுற்றிலும் ஏராளமான தலைப்பாகைக்காரர்கள்.

உள்ளூர் தம்புராக்கமார்களும், நம்பூதிரிகளும், அண்டை தேசங்களின் களரிக்காரர்களுமாக ஆர்வம் பொங்கும் அணிகள் நிறைந்திருந்தது. அருகருகே அமரவைக்கப்பட்ட எதிரிகள் சிலர், பரஸ்பர பார்வைகளை தவிர்ப்பதற்காக வேண்டி ஆளில்லாத மண்மேட்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். நம்பூதிரிகள் சம்சாரிகளிடமிருந்து விலகி நிற்பதில் வீரம் காட்டினார்கள். தம்புராட்டிகளையும், நம்பூதிரிப் பெண்களையும் காணாவிட்டாலும், சம்சாரிப் பெண்களின் கூட்டம் ஆண்களை விட அதிகமிருந்தது.

“தொடங்கலாமா?” – முன்வரிசை தலைப்பாகைகளில் ஒன்று தலையசைத்தது. குஞ்சுராமன் தரையைக் குனிந்து வணங்கி விட்டு, தன் துணையாளிடம் கைவாளை வாங்கிக் கொண்டான். அவன் முகம் பயத்தில் வெளிறியிருந்தாலும், குரூரம் பொங்கும் கண்கள் அதை மறைத்தன. உன்னியார்ச்சை தன் வாளை வாங்கி, மேல் நோக்கி உயர்த்தி போட்டிக்குத் தயார் என்றாள்.

“ம்… ஆரம்பமாகட்டும்”-ஒரு பலவீனமானகுரல் அதிகாரத் தொனியை தாங்க முடியாத நடுக்கத்துடன் ஆணையிட்டது. மேல் நோக்கி உயர்த்திய வாளை கீழிறக்கும் போதே உன்னியார்ச்சைக்கு பொறி தட்டிவிட்டது. “வாளில் ஏதோ வேறுபாடு இருக்கிறதே!” குஞ்சுராமன் அதிவேகச் சுழற்சியோடு தன் வாளை தாக்குதலுக்குப் பணித்தான். ஒவ்வொரு வீச்சையும் ஒரு சின்ன அசைவு மூலம் எதிர்கொண்டாள் உன்னி, வாள்கள் மோதிக் கொள்ளும் சப்தங்களுக்கிடையில் உன்னியார்ச்சையின் குரலும் ஒலித்தது.

“ஆரம்ப வேகம் ஆபத்து ஆசானே!”

குஞ்சுராமன் பதிலேதும் பேசாமல் தன் தாக்குதல்களிலேயே முனைப்பாக இருந்தான். அவன் பார்வை உன்னியார்ச்சையின் வாளிலுள்ள ஈயக்குறியையே தேடியது. இப்போது, உன்னியின் வேகம் அதிகரிக்கத் துவங்கியது. பின்னால் நகர்ந்து சமாளித்தான் குஞ்சுராமன். அவன் கண்களில் பயத்திற்கிடையில் ஒரு வெளிச்சம் பளிச்சிட்டது. “அதோ… வாள் முனையின் மேற்பகுதியில் ஈயக்குறி!” குஞ்சுராமனின் இலக்கு பதில் தாக்குதலை விட, ஈயக்குறியை சிதைப்பதிலேயே கவனமாக இருந்தது. அவன் வீச்சு மிகச்சரியாக அந்தக்குறியைத் தொட்டு விட்டது.

‘நங்…’ என்ற பெரும் ஓசையுடன் அவளின் வாள்முனை முறிந்து விழுந்தது. நுனியற்ற முக்கால் வாளுடன் நின்றிருந்தாள் உன்னியார்ச்சை. அவள் கண்களில் தெறித்த கோபத்தோடு, சந்துவை திரும்பிப்பார்த்தாள். சந்து-ஒரு சதிகாரப் புன்னகையோடு நின்றிருந்தான். உன்னியார்ச்சை மெதுவாக நகர்ந்து பின்வாங்கினாள். “சந்து… கூடுதல் வாள் ஒன்றைக் கொடு!” சந்து சின்னப் புன்முறுவலோடு சொன்னான். “கூடுதல் வாட்களை நான் எடுத்துவரவில்லையே உன்னி!”

குஞ்சுராமன் தன் வாளை உயர்த்தியபடியே நெருங்கிக் கொண்டிந்தான்.

“சந்து… விளையாட நேரமல்ல இது! போகட்டும்… உன் கைவாளைக் கொடு” உன்னியார்ச்சையின் குரலில் பதட்டமிருந்தது.

“உன்னி… உனக்கு அங்கவிதிகள் மறந்து விட்டனவா? துணையாள் எப்போதும் கைவாளுடன் தான் நிற்க வேண்டும்!”

உன்னியார்ச்சை, குஞ்சுராமன் பக்கமாகத் திரும்பினாள். குஞ்சுராமன் மந்தகாசமாகச் சிரித்தான்.

“நான் தான் சவால் வேண்டாம் என்றேனே… கேட்டாயா? இப்போது பார் ஒரு பெண்ணைக் கொல்லும் பாவம் வேறு எனக்கு வரப்போகிறது…” உன்னியார்ச்சையின் முகத்தில் கோப ஜுவாலை கனன்று எரிந்தது. முக்கால் வாளுடன் தரையில் மண்டியிட்டு அமர்ந்தாள். குஞ்சுராமனைச் சரிவாகப் பார்த்தாள். கைகள் முனையற்ற வாளை கிடைமட்டமாகப் பிடித்திருந்தன.

“முக்கால் வாளானாலும், இந்த முழு வீச்சுக்கு பதில் சொல் குஞ்சுராமா…” அவள் குரலில் இருந்த அசுரவேகம், வீசிய வாளுக்கும் இருந்தது. குஞ்சுராமனின் கழுத்துப் பகுதியில் இறங்கியது கைவாள்! அவன் உடலிலிருந்து பீறிட்ட குருதியின் முதல் சொட்டு மண்ணில் விழுந்து, புழுதி வாசத்தைக் கிளப்பியது.

“ஆட்டக்கதை கேட்கும் புகழ்

மலைநாட்டு மண்குடிலே!

கூட்டம் பதில் சொல்லும்-நம்

பெண் வெற்றி பறைசாற்றும்… ”

… உடுக்கைச் சப்தத்துடன் எழும் அந்த பாணனின் குரல் இப்போதும் மலைநாட்டில் எதிரொலிக்கிறது!.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 2 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top