கல் மனம்

4
(3)

கண்மாய்த் தண்ணீர் மெல்லிய அலையாய் வந்து மோதிச் செல்கிறது. தண்ணீருக்குள் பட்டும் படாமலும் கரையில் நான். இருபத்து நாலுமணி நேரமும் அதே இடம்தான். கண்மாய்த் தண்ணீர் குறைய குறைய தண்ணீரை ஒட்டினாற்போல் நகர்த்தப்படுகிறேன். தலைக்குமேல் விரிந்து பரந்த ஆலமரம். தன் கிளைகளை முடிந்த மட்டும் பரப்பி நின்றாலும் தன் பாதுகாப்பிற்காய் ஆங்காங்கே விழுதுகளை ஊற்றி இருக்கின்றது. எப்படி எப்படியோ இருக்க வேண்டிய நான் இப்படி கீழே கிடப்பது எனக்குள் மனம் வெதும்பி பெரு மூச்சை அவ்வப்பொழுது விட்டுக் கொண்டு கல்லாய் சமைந்து விடுகிறேன்.

என்னையே எனக்கு உருவகப்படுத்திக் கொண்டும்…… அன்று நான் வந்த வாழ்வென்ன ….. எனக்கு கொடுத்த வரவேற்பென்ன …… இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும்…. அக்கினிச் சித்திரை. ஆளமரவமற்ற வெட்ட வெளியில் ஆமணுக்குச் செடி அடியில் உட்கார்ந்து ஒற்றை மாடு மேய்க்கும் இரு கருஞ்சிறார்கள் தொலைவில் புழுதி கிளம்ப வேகமாய் வரும் கட்டை வண்டியை கூர்ந்து பார்க்க.

வெற்று உடம்பில் கைலியை கயிறாய் உடுத்தி தலையில் பொதிபோல் சுற்றிய தலைப்பாகையுடன் சேது. வெற்றிலைப் சிவப்பேறிய பற்கள் ஒளிபொருந்திய குழி விழுந்த கண்கள். வெயிலின் சீற்றத்தால் இடுங்கிய பார்வை. தை தை என்ற குரலுக்கு தகுந்தவாறு கட்டை வண்டியின் கடக் கடக் ஓசை ஊரை நெருங்க நெருங்க கூடு கொம்பு மயிலைக் காளைகள் வேகமாய் நடக்கின்றன. கடைவாயின் வெண்மையான நுரை நூல் நூலாய் பிரிந்து காற்றில் பறந்த படியே சில் சில்லாய் தெறித்து சேதுவின் முகத்தில் பஞ்சாய் கோடு போல் அவ்வப் போது விழுகிறது.

ஈரவைக் கோலானது காய்ந்து காற்றோடு கலக்கும் வாசனையை துகர்ந்து கொண்டே வெயிலால் மேனி பளபளப்பதை சாலையின் மேடு பள்ள ஓட்டத்திற்கு தகுந்தவாறு ரசனை மிகுதியில் என்னையே ஒரு முறை பார்த்துக் கொள்ளும் போது ஊரே கூடி நின்று என்னை வரவேற்க, உடல் சிலிர்க்க என்னை இறக்கும் கைகள் ஒன்றோடொன்று உரசும் போது கூச்சத்தில் நெகிழ்ந்து போகிறேன்.

பூஜை புனஸ்காரங்கள் முடிந்து கிணற்று நீரில் மரியாதையுடன் தனித்து விடப்பட்டேன். ராக்குளிர் நடுக்க வெடவெடக்க உடல் நன்னீரில் ஜில்லிட்டபோது எனக்கும் குளிரில் காய்ச்சல் வந்துவிடுமோ? சிறு பூச்சிகளும் புழுக்களும் என்மேல் ஓடியாட என்னுடல் குறுகுறுத்தது. ராப்பொழுது நீள ஆதவனின் ஒளியில் லேசான வெது வெதுப்பான சூடு மெல்லியதாய் என் மேல் படர விளக்க வார்த்தையின்றி ஓர் உச்சநிலை மகிழ்ச்சியில் திளைத்தபடியே மாறி மாறி வெப்ப மாறுபட்டால் இறுகிக் கொண்டேன்.

ஏழாவது மண்டல இறுதி நாளில் கிணற்றின் வெளியே தலை காட்டிய போது தூரத்தில் ஊரே நின்று இரண்டு கைகளையும் கன்னத்தில் போட்டுக் கொண்டது. சிறார் கூட்டம் என்னைத் தொட்டு கன்னத்தில் போட்டுக்கொள்ள முண்டியடித்தனர். சுருள் சுருளாய் புகை வாயிலிருந்து வந்தபடியே கருத்துப்போன உதடுடன் நாக்கும் கரிபடித்திருக்க அழுக்கான கைலி சட்டையுடன் தலையில் வெண்முடிகளுடன் வந்த அந்த குள்ள மனிதனுக்கு ஏக வரவேற்புதான். சுத்தியும் உளியும் பரபரவென்று எறும்பு போல் என் மேல் ஊர்ந்தபொழுது மனம் லயமடித்தது. பூ சாம்பிராணி வாசங்களை மீறி பீடியின் நாற்றம் நாள் முழுவதும் நிறைந்து இருந்தது. அடுத்த இரண்டு நாட்கள் அமைதியின்றி காத்திருக்க சிற்பி நெஞ்சு வலியில் செத்துப் போனதைச் சொல்லிக்கொண்டு மனிதர்கள் என்னைப் பார்த்த பார்வையில் முன்னைப் போன்றதொரு கனிவு இல்லை என்பது தெளிவாய்ப் புரிந்தது.

காற்றோடு மழையும் வெயிலும் மாறிய போது என்னைத் தேடுவாரில்லாது கண்மாய்க் கரையின் புழுதி மண்ணில் கிடப்பதை தூரத்து மின் கம்பிகளில் உட்கார்ந்த காக்கையொன்று என்னை இளப்பமாய் பார்த்து தன் உடம்பில் சிக்கெடுத்துக கொண்டது. தன் பிஞ்சுக் கால்களால் துள்ளி விளையாடும் ஆட்டுக்குட்டி என் மேல் ஒத்தடம் கொடுக்கும். வழக்கமாய் ஒரு நாய் என்மேல் காலைத் தூக்கும் போது சீ…. கண்ணை மூடிக் கொள்கிறேன். காடெல்லாம் சுற்றித் திரிந்து கண்டதை மேய்ந்த காளைகள் என் மீதுதானா சாணி போட வேண்டும்.

பகலில் மனம் படாதபாடு பட்டாலும் இரவில் சுகமாய் காற்றில் பறப்பது போல இறக்கை அடித்துக் கொள்கிறேன்.

ஊரடங்கும் சாமத்தில் செல்லையாவின் மகள் செல்வி சற்றமுற்றும் பார்த்துக் கொண்டே மெதுவாய் வந்து எனக்கு வலிக்காமலே என் மேல் அமரும்போது எனக்குள் இனிக்கும் அவள் இதயத்துடிப்பு மெதுவாய் அவள் உடலில் இருந்து சன்னமாய் எனக்குள் பரவி ஓர் துடிப்பை ஏற்படுத்தும். அவள் கை என் மேல் அழுத்தி தடவிக் கொண்டு காய்ந்துபோன சாணிப் பொக்குகளை பிய்த்துக் கொண்டும் நான் லேசாய் சுத்தமாகும் போது அவள் கை இடுக்கிலும் நகக் கண்களிலும் அழுக்கானது சுற்றிப் பரவி படர்ந்து அவளுக்குத் தெரியாது. இது நடக்கும் வேளையில் தூரத்தில் தெரியும் கருத்த தெளிவில்லா உருவம் அடிமேல் அடியெடுத்து மெதுவாய் – பக்கம் வரும்போது லேசான செருமல் பதில் கனைப்பு சிக்னல் கிடைக்க இருவரும் ஒருவரை ஒருவர் நெருங்கிய போது அட செல்வம் – புதூர் ஒர்க் ஷாப்பில் வேலை செய்பவன்.

கைதான் எப்படி கரடு தட்டிப் போயிருந்தாலும் மனசு மட்டும் மென்மையாய் மங்கலான வெளிசத்தில் இரு ஜோடி கண்கள் மட்டும் நீண்டநேரம் பேசிக்கொண்டிருக்கும் மனதில் ரசா பாசங்களை பார்வையில் பரிமாறிக் கொண்டு சரக்’ என்றாலும் ‘திடுக்’ கென திரும்பிப் பார்ப்பதும் ஆசைகளை எண்ணங்களை வேதனைகளை தாபங்களை உள்ளத் துடிப்பை தன் கோபங்களை எல்லாம் கைப்பிடியிலேயே ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மாற்றுவது எனக்கு மட்டுமே தெரிந்த ரகஸியம்.

இந்த இரவு நேர கிசுகிசுப்பும் பார்வை பரிமாற்றமும் சிறு சிறு சல்லாபங்களும் புண்ணுக்கு மருந்திடுவதுபோல் ஒத்தடம் கொடுத்து வந்த சிறிது நாட்களிலேயே இருவரும் உடன் ஒட்டம்பிடிக்க மீண்டும் தனிமையானேன் மனப் புழுக்கத்துடன்.

உடைந்த மண் பானை ஓடுகளாலும் களி மண்ணாலும் செய்த தத்திக் கல்லை கலங்கிய கண்மாய்த் தண்ணீரில் சிறுவர்கள் என் மீது நின்று வேக வேகமாக எறிந்து கொண்டிருக்க பெரியவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் பயந்து கூடியவர் கலைய கலைந்தவர் கூட கண்மாய்த் தண்ணீர் மேலும் கலங்கியது.

சாமி கல்லாய் வலம் வரப்பட்ட என் மீது கழுதை நின்று தண்ணீர் குடித்து விட்டு தூரமாய் சென்று கத்துவது என் கனவுகளைக் கலைத்து நெஞ்செல்லாம் வலிப்பது கண்டு கவலைப் படாதவர் யாருமில்லாத வேளையில் தனிமையில் நெஞ்செல்லாம் கொத்துக் கொத்தாய் பிடுங்கி எரியும்.

மனசு ரணமானாலும் கெட்டி தட்டிப்போன போதும். ஆலமர மைனாக்களின் ‘கீச்’ ‘கீச்’ ஓசை காற்றில் பரவி ஒவ்வொரு இலையாய் பட்டு அது மொத்தமாய் என் மேல் பட்டு எதிரொலிப்பதில் கண்மாய்த் தண்ணீர் லேசாய் அலை எழுப்பி மறையும்.

மங்கலாய் வீசும் நடசத்திரங்களின் ஒளி இருட்டுப் பிரதேசத்தில் குருவிகளின் கண்களில் பட்டு அவ்வெளிச்சம் அப்பிரதேசம் முழுவதும் வியாபிப் பரந்து ஒளி வெள்ளமாக்க தங்களின் கீச் கீச் ஓகைளையும் மறந்து விசித்துப் பார்க்கையில் இலைகளும் விழித்துக்கொள்ளும் வேளையில் கோட்டானின் குரல் கேட்டு பயத்தில் குருவிகள் கண்மூட அப்பிரதேசமே இருளில் மூழ்கியது.

மரங்கள் விழித்துக்கொள்ள பறவைகள் தங்களை இரை தேட ஆயத்தப்படுத்திக் கொள்ளும் வேளையில் காலைக் கடன் முடித்த மனிதர்கள் வரிசையாய் என் மேல் அமர்ந்து தங்களை சுத்தப்படுத்திக்கொள்ள நான் அழுக்காகும் வேளைகளில் எல்லாம் மீன்கள் என்னை நலம் விசாரித்துச் சுத்தப்படுத்திச் செல்லும்.

காக்கைக் கூட்டினுள் இருக்கும் கரிச்சான் குஞ்சு இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் நேற்று இரவு படுக்கையில் நினைந்த கொச்சை வீசும் பாயுடன் ராசாத்தி எனை நெருங்குமுன் என்னுடன் கொஞ்சிக் கூத்தாட வேகமாய்ப் பாய் முண்டியடித்து வருகிறது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “கல் மனம்”

  1. சிற்பியின் நெஞ்சுவலி மரணம், சாமியாக வேண்டிய கல்லின் தலைவிதியையே மாற்றிவிட்டது… அழகான கற்பனை… கண்மாயை பற்றிய கவிதை, கல் சொல்லும் சிறுகதையாக… சிறப்பு.

  2. Shanthi Saravanan

    கல் மனம் என்று சொல்பவர்கள் ‌‌‌‌இச் சிறுகதை படித்தால் இனி அந்த சொலவடையை தவிர்ப்பார்கள். இப்படி எத்தனை கல், சிற்பம் ஆகும் வாய்ப்பை பறிகொடுத்ததை எண்ணி சுய வரலாற்றை பேசிக் கொண்டு உள்ளதோ. மனித மனங்களை படிக்க தெரியாத நமக்கு கல்லின் மனம் எங்கு புரிய போகிறது ‌. நம்மை நாமே சிற்பி போல நமது தேவையற்ற எண்ணங்களை செதுக்கி எடுத்தால் நாமும் சிற்பமாக வடிவமைப்பு பெறலாம் என்ற எண்ணம் இச்சிறு கதை வாசிக்கும் போது தோன்றுகிறது. சிறப்பு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: