கருவாயனின் நாயகன்

5
(1)

கருவாயன், விடாமல் குரைத்துக் கொண்டேயிருந்தது. அதன் சத்தம் திசைகளெங்கும் சிதறிச் சிதறி ஒலித்தபடி இருந்தது. அவன், கதவைச் சாத்தித் தான் வைத்திருந்தான். படல் கதவு- அகத்திக் குச்சிகளால் சட்டமிடப்பட்டு, காய்ந்த தென்னங்கிடுகள் வேய்ந்த கதவுஅது. ஆயிரம் ஓட்டைகளுடன் அது ஆரோக்கியமாகவே இருந்தது. அந்த வீட்டின் சுத்துச்சுவரும், கதவைப்போல கிடுகு மறைப்புக்களாலேயே ஆகியிருந்தது. ஒரு சிறிய அறைமட்டும் குளத்துக் கரம்பை மண்ணால் சுவரெழுப்பி, மேலே தகரம் பரப்பி இருந்தான். காற்றுத் தூக்கிப் போகாமலிருக்க தகரத்தின் மீது பெரியபெரிய கற்களைத் தூக்கி அதன் மேல் உட்கார்த்தி வைத்திருந்தான்.

 

குளக்கரையில் வீடு போட்டிருந்தமையால் காற்றுக்குப் பஞ்சமிருக்கவில்லை. ஆடைக்கும் கோடைக்கும் காத்தும் பனியும் அவ்னுக்கு உறவாயிருந்தன. மனித உறவுகளில் ஒன்றமுடியாத காரணத்தால் ஊரையே ஒதுக்கிவிட்டு இந்த குளத்துக்கு வந்து குடியம்ர்ந்தான்.

 

முதலில் மலைவேம்புச் செடி ஒன்றைக் கொண்டுவந்து கரைமேல் குழிபறித்து நட்டுவைத்தான். –  மலையில் விறகு பொறுக்கப் போனபோது ‘பாரஸ்ட்’ காரர்களின் பிடியிலிருந்து தவறிய அந்த வேப்பங்கன்று அவனது கையில் அகப்பட்டது. பிளாஸ்டிக் பையில் வேர்பிடித்து தளதளவென்றிருந்த அதன் இளமை, ஆகர்சிக்க தன் இடுப்பில் ஏந்திக்கொண்டு வந்து விட்டான்.

 

ஊருக்குள் விறகுக்கு விலை சொல்லும் போது ஊரார் அதற்கும் விலை கேட்டார்கள்.

 

“சொமைக்கு மட்டுந்தே வெல சொல்லுவேன்..” என்று தனது கரகரத்த குரலில் வெட்டி பேசிவிட்டான்.

 

ரோட்டிலிருக்கும் சக்கிலியன் குழாயில் குளித்துவிட்டு, ஆத்தாவீட்டுக்குப்போய் அதற்கு செலவுக்குக் காசைக் கொடுத்துவிட்டு வர, பொழுது மசங்கிவிட்டது. அன்றைக்கு சினிமாவுக்குப் போகமனசில்லை. புரவு காவக்காரர்கள் தங்குகிற சாவடிக்கு வந்தான். அதுதான் அவனுக்குக் கிடை. திடுமென வந்த யோசனையில், ராவோடு ராவாய் குளக்கரையில் ஏறி குழி தோண்டலானான். குழியைச் சுற்றிலும் அகலமாய் விளிம்புகட்டிவைத்தான். மறுநாள் மலைக்குப் போகவும் மனசில்லை.காலையில் வழிக்கடையில் சுக்குக் காப்பி குடித்துவிட்டு கரையிலேயே ரெம்பநேரம் சுற்றிவந்தான். பெரிய்ய்ய குளம். ஊரையே போட்டு அமுக்கிவிடலாம். தென்கரைதான் மரம் வைக்கத்தோதுவாய் தோன்றியது. கரையின் மேல்புறத்தில் தண்ணீர்வடியும் ‘கலிங்கி’ இருக்கிறது. அரசமரம் வளர்ந்தபகுதி கொஞ்சம் மேட்டுப்பாங்காகவும் சமதளமாகவும் இருந்தது. மற்ற இடமெல்லாம் சரிவாகவும் பொருபொரு வெனவும் இருக்கக்கண்டான். ராத்திரி வேலைபார்த்த குழியை மிதித்து மூடிவிட்டான்.

வெய்யில் ஏறிக்கொண்டிருந்தது. முடிவாக, கரையெல்லாம் நடந்து தீர்த்த எரிச்சலில், சங்கிலிக் கருப்பு கோயிலை ஒட்டிக் கிடந்த ஒருஇடம் தோதுவாய்ப் பட மம்பட்டி எடுத்துச் செதுக்கலானான்.

 

வழிப்போக்கர்களுக்கு அவனது வேலைத்தனம் புரியவில்லை. நிரம்பிய குள்த்தின் கரையில் மம்பட்டி போடுவது … ’கெடுமதி புடிச்சுக்கிடுச்சா.. அம்மாவாசை கூட கடந்திருச்சே.. ‘ – எவரும் அவனிடம் வாய்திறந்து பேசமுடியாது. பேசினாலும் பதில் வராது.

 

அவனது அந்த விலகல் தன்மையே எல்லோருக்கும் அவனிடம் ஒரு அச்சஉணர்வை உருவாக்கி இருந்தது. இருந்தாலும் அவனால் பெரிய பாதகம் எதுவும் ஏற்பட்டதில்லை. அப்படியான உதாரணம் இதுவரைக்கும் இல்லை என்கிறபடியால், சிரித்துக்கொண்டும் கேள்விகளைச் சுமந்து கொண்டும் அவனைக் கடந்து போய் கொண்டிருந்தனர்.

 

வினாக்களோடு மேற்கே தோட்டவேலைகளுக்குச் சென்றவர்கள், மாலையில் வீடு திரும்பியபோது குளச்சரிவில் ஒரு சமதளம் உருவாகி இருக்கக் கண்டனர். அதன் நடுவில் ஒரு மலைவேம்பு நட்டு வைக்கப்பட்டிருப்பதையும் . அந்த செடியினைச் சுற்றிலும் பஞ்சாரக்கூடை போல கருவேலமுள் வெட்டி, மண்ணில் பதித்து செடிக்கு அரணாய் நிறுத்தி இருந்ததையும் கண்டு மலைத்துப் பேசினர்..

 

சமதளத்தை ஒட்டி குத்தவைத்திருந்தவனது பார்வை, செடிக்குள்ளேயே விழுந்து கிடந்ததையும் காணத் தவறவில்லை.

 

“விட்டாச் செடிக்குள்ளேயே குடியிருந்துருவாம் போல “.. என விளையாட்டாய் சொன்னார். வெள்ளைவேட்டியை உருமாலாய்ச் சுற்றிய பெருசு ஒருத்தர்.

 

குளத்தில் ‘வெளிக்குப்’ போய்விட்டுக் கரையேறிய இன்னொருத்தர், தான் கண்டதை ஒப்பிக்க ஆள்கிடைத்த ஆவலாதியில் பதில் சொல்ல ஆரம்பித்தார். “இதென்னா… புதுசு, அப்பாத பாக்கணுமே அவெஞ்சேட்டய.. கொலசாமிய சோடிக்கிறமாதிரி பொத்திப் பொத்தி நட்டானய்யா.. அந்தச் செடிய.. என்னா பவுசு.. எம்பிட்டு நறுவுசு..அடாடா.. செடிய ஊண்டிமுடிச்சதும் மேச்சலுக்கு வந்த ஒரு வெள்ளாட்டுக்குட்டி ஓடிவந்து வாயவச்சிச்சு பாரு… “ – சொல்லமுடியாமல் சிரிப்புவந்தது அவருக்கு.

 

“அய்யய்யோ அப்புறம்….?”

 

“வுட்டாம் பாரு நொட்டாங்கை வாக்குல ஒருவிடு. கதறிக்கிட்டுப்போயி கரவழியே கிடுகிடுண்டு உருண்டு விழுந்து ஓட்டம் புடிச்சிடுச்சு அந்தமானைக்கி. நல்லவேள , ஆட்டுக்காரெம் பாக்கல பாத்திருந்தா இன்னம் நல்லா இருந்திருக்கும்…!”

 

“அதுக்குப் பெறகுதேம் முள்ளவச்சு அடச்சானாக்கும்..? கிறுக்கனா இருந்தாலும் நுணுக்கமான வேலக்காரனா இருக்கானே…!”

 

“கிறுக்கன்னு பெலக்காப் பேசிடாதீங்க,.. அவெங்காதுக்கு எட்டுச்சுனா.. இங்கன நின்டு பேசமுடியாது ஆமா,……..”

 

மறுநாள் வேலியை இன்னமும் கொஞ்சம் அகலப்படுத்தினான்.குளத்தினுள் வளர்த்து கிடந்த ரேடியாப்பூ செடிகளை வெட்டிவந்து ஊன்றிவைத்தான். இலைகள் வாடிய நாலைந்து நாளில் வேர் பிடித்து நிமிர்ந்தது. வேலிக்குள் வளர்ந்திருந்த மலை வேம்புடன் சேர்ந்து இன்னொரு செடியும் முளைத்து வந்தது. அதன் இலைகள் அகலமாகவும்-மெலிதான பாலிதீன் தாள் போலவும் வழவழப்பாயும் இருந்தது. களைபிடுங்க வந்தவன்; அதன் தோற்றம் அமைந்த அழகில் வேம்பைக் காட்டிலும் அதன் மீதே அதிக அக்கறை காட்டலானான். பெண்மையின் நளினத்தோடு அதன் வளர்ச்சி இருந்தது. ஒரு கட்டத்தில் அது, வேம்பின் தலைசாய்த்து தன்னைப் பிணைத்துக் கொண்டிருந்தது. தனிக் கழை ஒன்றை நட்டு அதன் மேல் ஏற்றி விட்டாலும், அதற்கு வேம்பின் மேலிருந்த தீராக்காதலால், நடப்பட்ட கழை நாகரீகமாய் தன்னை விலக்கிக் கொண்டது.

 

அதன்பிறகு அவன் – தான், ஒரு குடும்பஸ்தன் எனும் நிலைக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டான். இடத்தை முன்னிலும் கூடுதலாய் பாதுகாக்கத் தொடங்கினான். ஒரு தூசு தும்பு இல்லாமல் சுத்தப்படுத்திக் கொண்டே தன்னையே செலவழித்தான்.

 

ரேடியாப்பூச் செடிகள்திகுதிகுவென வளர்ந்தன. நிறைய இலைகளும், வெண்மையும்-கத்தரிப்பூ வண்ணக் கலவையுமாய் பூக்களும் பூத்துக் குளுமஃஇதந்தபோது,அந்த இடம் குட்டித்தீவாய் தனித்து நின்றது. ஒருநாள் தாய் பன்றி ஒன்று பூச்செடிகளைத் துளைத்துக் கொண்டு நுழைந்து, தனத் களைப்பு நீங்க கால்பரப்பிக் கிடந்தது. பத்திற்கும் அதிகமான அதன் குட்டிகள், தேனடை மொய்க்கும் ஈக்கள் போல தாயின் வயிற்றைச் சுற்றி படர்ந்திருந்தன. ஆளுக்கொரு மார்புக்காம்புகளைப் பற்றிச் சுவைத்தபடி விளையாடி மகிழ்ந்தன. பிள்ளைகளின் விளையாட்டில் மனம் லயித்த அந்த தாய்ப் பன்றி, இன்ப நுகர்ச்சியில் அனத்தியபடி உறங்கிக் களித்தது.

 

அய்யம்பாளையத்து நாயக்கர் காப்பிக்கடைக்காக வெக்காலி விறகுக்கட்டைச் சுமநதுவந்த அவன், பன்றிகளின் களியாட்ட்ம் கண்டதும் நடுரோட்டிலேயே விறகினை வீசிவிட்டு வேகுவேகென குளத்துக் கரைமீதேறினான். அவனது அந்த வருகையினைக் கண்ட குட்டிகள், பதட்டத்தோடு தாயை எழுப்பின. தாய்ப்பன்றி தனது ஆகிருதியான உடலைப் புரட்டி எழுவதற்குள், அவனது கையிலிருந்த கருங்கல் அதன் முதுகைப் பதம்பார்த்தது. பெருத்த வீறிடலோடு ரேடியாப்பூச் செடிகளை ஒடித்துக்கொண்டு வெளியேறி ஓடியபோது, மார்புக்காம்பை விடாமல் பற்றிக்கொண்டிருந்த குட்டிகளில் ஒன்று, உள்ளே அகப்பட்டுக் கொண்டது. அதன் பின்னங்கால்கள் இரண்டையும் பிடித்துத் தூக்கி கிறுகிறுவென தலைக்குமேல் சுற்றி வீசிஎறிந்தான். அந்தக் குட்டி, காற்றில் பயணித்து நிறைகுளத்தில் நீர்ச்சிதறல்களோடு விழுந்து, ஆழம்கண்டு மூழ்கிப்போனது.

 

அன்றைக்கே வெக்காலி விறகுக்குச்சிகளை ஊன்றி பந்தல் ஒன்று போட்டுக் குடியிருக்க ஆரம்பித்தான். ஆத்தாளை இழுத்துவந்து அவ்வப்போது காவலுக்கு இருக்கச் செய்தான். அவனது இந்த விப்ரீதம் கண்டு பயந்த ஆத்தா, அவன் கண்ணில் படாது ஒளியத் தொடங்கியது.

 

“எவனாச்சும் மந்தக்காட்ல இப்பிடிக் குடியிருக்கக் கண்டதுண்டுமா..? ஏந்தா இந்தப்பயலுக்கு இப்பிடி பேத்தானமான புத்தி கூடுதோ..!”

கிராமக் கமிட்டியிலும் அவனது செயல்பாடு சலசலப்பை உண்டு பண்ணியது. குள்க்கரையில்குடிசை போட அனுமதிக்கலாமா..? யார் அனுமதிததது..?’ – தலைவர் இந்தவருசத்துக்கு மீன் குத்தகை எடுத்திருந்தார். அதனால் தீர்ப்பும் ஒருச்சாய்மானத்தோடே வந்தது.

 

“நல்லமனுசங்கிட்ட நாலு வாத்த சேத்துப் பேசலாம். இவென்ட்டப் பேசி என்னா ஆகும்ங்கிறீங்க..?”  – கேள்வி போட்டார்.

 

“தொண்டத்தண்ணிவத்துனதுதான் மிச்சமாகு. விடுங்க.. தலைவரே, மீன்பாத்திக்கி சம்பளமில்லாம ஒரு காவக்காரெ கெடச்சிருக்கன்ல..” – கூட்டுறவு மதுக் கடையிலிருந்து ‘சரக்கு’ வாங்கிவந்து கூட்டம் முடித்தனர்.

 

ஆத்தாளின் புலம்பல் அவனை அவளிடமிருந்தும் விலக்கி வைத்தது. மலைக்கு மேலே ஆரஞ்சு தோட்டத்திற்கு சுமையாளாகப் போனபோது, அங்கே இருந்து ஒரு பெண்ணோடு திரும்பி வந்தான். ஒடிசலான தேகமும், பெருத்த கொண்டையுமாய் கொஞசம் வெளிச்சமாய் இருந்தாள் அந்த பெண். ‘கருவாயன்’ பின்தொடர அவள் வந்தாள். வெண்மை நிறம் கொண்ட நாய்க்கு எதற்காக அப்படிப் பெயரிட்டாள் என விளங்கவில்லை. அவளுக்குப் பெயர் ’செவ்வந்தி’ எனபதுகூட பின்னாளில்தான் தெரியவந்தது.

 

செவ்வந்தியைப் பார்க்கக்கூட ஆத்தா வரவில்லை. அவ்னுக்குக் கிறுக்குப் பிடித்து விட்டதாகவே ஊருக்குள் ஒப்பித்துக் கொண்டிருந்தாள். அவன் எப்பவும் போல விறகெடுத்து, ஊருக்குள் சென்று வந்தபோது, ஆத்தா வீட்டுக்கு பணம் கொடுக்கவும் மறந்து போனான்.

 

குளக்கரை வீட்டை செவ்வந்திக்காக தகரம் போட்டு நிலைப்படுத்தினான். வேலையில்லாத நாளில், கோவணத்தோடு கரைமேல் நின்று, புதுப்புதுச் செடிகளை நட்டுவைக்கவும், காடென வளரும் களைகளை பிடுங்கிப் போட்டு ரேடியாப்பூச் செடிகளை வளைத்துப் பின்னி கயிறால் இறுக்கி வேலிப்படல் போல அமைத்து வீடாக்கினான்.

 

செவ்வந்தி காட்டுவேலைக்குப் போனாலும், கருவாயனை ம்ட்டும் வீட்டைவிட்டு வெளியே அனுப்புவதில்லை. படல் திறந்திருந்தாலும் கருவாயனும் ஓடிப்போய்ப் பழகவில்லை. என்ன பிரச்சனை என்றாலும் குரைப்புதான் கருவாயனின் ஒரேமொழி.-இருப்பும்.

 

சமயத்தில் செவ்வந்திக்கும் அவனுக்கும் சண்டை வருகிறபோதெல்லாம் முடிவில் அடிவாங்குவது கருவாயனாகத்தான் இருக்கும். அதேபோதில் எத்தனைதான் அடிவாங்கினாலும், கண்களில் உள்வாங்கி உடம்பை வளைத்து நெளித்துச் சீரணித்து விடுவான் கருவாயன். ஓய்வான நேரம் அவனைப் போலவே, மலை வேம்பின் நிழலடியில் படுத்துக் கிடப்பான்.

 

இன்னமும் கருவாயனின் குரைப்பு நின்றபாடில்லை. ரேடியாப்பூச் செடிகள்களையொட்டி வேலியோரமாய் நடப்ப்துவும், மலைவேம்பினடியில் சுருண்டு படுத்துக் கொள்வதுமாய் மாறிமாறி நிலை கொள்ளாமல் சுற்றியபடியே அலைந்தான் கருவாயன். ‘அவனைப்’பார்க்கும் சமயத்தில் கருவாயனது குரைப்புச் சத்தம் அதிகமானது.

 

காலையில் எழுந்ததும் செவ்வந்தி தூக்குச் சட்டியில் பழையதை ஊற்றிக் கொண்டு வேலைக்குப் போய்விட்டாள். கருவாயனுக்கான ‘படையலை’ மறந்து விட்டாள். அதனை நினைவு படுத்துகிறவிதமாக, அவ்னது கால்களை நக்கியும் வாசல் நிலைப்படியில் நின்று ஊளையிட்டும் – அவனுக்குப் புரியவில்லை. அந்த பரிதவிப்பில் இன்னும் அதிகமாய் தனது செயல்பாடுகளை துரிதப்படுத்தியது கருவாயன்.

 

எதையோ பறிகொடுத்தவனைப் போல குத்தவைத்துக் கொண்டிருந்த அவனுக்கு, கருவாயனின் குரைப்பும், அதன் விலகலும் இராப்போதில் செவ்வந்தியை ஒத்திருந்தது. நேற்றைய இரவின்பொழுதில் செவ்வந்தி, அவனை பக்கத்தில் அண்டவிடவில்லை. கருவாயனைப் போலத்தான் குரைத்தாள். அவனுக்கு உடம்பு சூடேறி விரைத்துப் போனது.

 

ஓரக்கண்ணால் அவனைப் பார்ப்பதும், குரைப்பதுமாய் கருவாயன் சுற்றிக்கொண்டிருந்தான். அடுத்தொருதரம் அவனது கையை நக்கிய பொழுது, அதன் மூக்காந்தண்டை இறுக்கிப் பிடித்து தூக்கி எறிந்தான். கைக்குக் கிடைத்த கரம்பை மண்கட்டியை எடுத்து எறிந்தான். பொத்பொத்தென மண்கட்டிகள் கருவாயனது உடம்பில் அடித்துச் சிதறியது. கருவாயனின் ஓலம் மிகுந்து ஒலிக்கலானது.

 

வழக்கம் போல தோட்ட வேலைகளுக்குப் போகிறவர்கள் “வாயில்லாச் சீவனப் போட்டு இப்பிடி வதைக்கிறானே பாவி……!”  என புலம்பியபடி கடந்து சென்றனர்.

 

‘இந்தக்கிறுக்குப் பயலக்காலி பண்ண, வகையத்துக் கெடக்கானுக..ஊர்க்காரனுக… தெனம்தெனம் இவெம் மொகத்துல வேற முழிச்சுட்டுப் போகவேண்டியிருக்கே.., வீரையா!”  என்று ஊர்த்தெய்வத்தை அழைத்து முறையிட்டனர்.

 

சித்திரை முதல்நாள் ந்டைபெறும் மலைக்கோயில் திருவிழாவிற்காக சாலையை அகலப்படுத்த வேண்டி இருந்தது. கரையைச் செதுக்கி சீர்செய்திட, அவனை வீட்டைக் காலிசெய்யச் சொல்லி ஆபீசர், அவனது படல்கதவினை தட்டித் திறந்தபோது, முழுநிர்வாணியாய் – உயர்த்திப் பிடித்த அரிவாளோடு – சங்கிலிக் கருப்பண்ண சாமியாய் எதிரில் வந்து நின்றான். மூர்ச்சையடைந்து போன அந்த ஆபீசர், உடனடியாய் அங்கிருந்து மாற்றல் வாங்கி ஓடிப்போனார்.

 

ஊர்ப் பெருக்கத்தால் குளக்கரையில், சிவனாசாரி தனது கொல்லுப் பட்டறையை அமைத்த நாளில் – அவன், செவ்வந்தியோடும், கருவாயனோடும் கிளம்பி, மேற்கே மலையோரம் குடிசை போட்டுக் கொண்டிருந்தான்.

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

1 thought on “கருவாயனின் நாயகன்”

  1. ஊரார் பார்வையில் கிறுக்கன்… ஆனால் இயற்கையை நேசித்து தனக்கென துணையையும் தேடிக்கொண்டு அற்புதமாக வாழ்பவன். அவன் செடியை நட்டு ரசிக்கும் விதம் கண்ணில் தெரிந்தது… அவளால் உணவிட மறந்த நாயின் பசியையும் அவள் இணையனின் பசியையும் காட்டிய விதம் அழகு.. வாழ்த்துகள் தோழர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: