கருப்பையாவின் கந்துக் கணக்கு

5
(1)

அவன் தலைகீழாகக் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தான் அந்தக் கும்மிருட்டான அறையில். எதற்கு தான் கட்டப்பட்டிருக்கிறோம். எதற்காக தன்னை இப்படித் தொங்க விட்டிருக்கிறார்கள் அதுவும் முகத்தை மூடி என அவனால் யோசிக்க முடியாத அளவுக்கு அவனை அடித்ததில் மயக்கமடைந்திருந்தான். இதற்கு காரணமாக அவனது மனசுக்குள் யார் யாரோ வந்து போனார்கள்.

”அந்தக் கருப்பையாவுக்கு வந்த வாழ்வப் பாத்தியா மக்க.. துண்டுப் பீடிக்கு நாயா அலஞ்சவன்..” வயிற்றெரிச்சலோடு பேசினான் ராசு.

“அதுக்கெல்லாம் மச்சம் வேணும்ய்யா., நீ பொலம்பி யென்ன செய்ய., வேலையப் பாப்பியா..” தலையிலிருந்த உருமாக்கட்டை சரி செய்து கொண்டே சொன்னான் தொட்டுசாமி.

“ஒழைக்கிறவம் ஓடாத் தேய்யிறான்.. யிவனுக யெல்லாம் ஒடனே சம்பாரிச்சிர்றாய்ங்க.. ..க்கா

ளி” சலித்துக் கொண்டான் ராசு.

”என்னப்பா தொட்டுசாமி வேலையெல்லாம் ச்சூட்டாப் போகுதா.. சாயங்காலம் கணக்கு சரியா வந்து சேந்துரணுமப்பா., யேலே ராசு ஒங்கணுக்கு ஒருவாரமா பாக்கி நிக்கிது அதேன் பாத்துட்டுப் போலாம்ன்னு வந்தேன்” தான் வந்த பைக்கில் இருந்து இறங்காமல் பைக்கைத் திருக்கிக் கொண்டே பேசினான் கருப்பையா.

”அதெல்லாம் நெனப்பு இருக்குண்ணே.. ச்சும்மா ச்சும்மா வேல செய்யிற யெடத்துல வந்து பொழப்பக் கெடுக்காத.,” கடுகடுத்தான் ராசு.

“ஒனக்கு காச வாங்குறப்ப இந்த ரோசமில்லையப்பா., நாந் தொழில் செய்யுற யெடத்துல வந்து தான நீ காச வாங்கிட்டுப் போன., ஒழுக்கமாக் கட்டுனா ந்நா யேம்பா இங்க வரப்போறேன்., தலையெழுத்தா யெனக்கு., ஒழுக்கமா காசக் கட்டுற வழியப் பாரு., இல்ல ஒன்னையக் கட்டித் தொங்கவிட்டு வெளு வெளுன்னு வெளுப்பேன்” கையை ஆட்டி பயமுறுத்துகிற தொனியில் பேசினான் கருப்பையா. விட்டால் இறங்கிப் போய் அடித்து விடுவான் போல. கருப்பையாவை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான் மதுரம். நாக்கைத் துருத்தி எச்சரிக்கை செய்துவிட்டு கிளம்பினான்.

“யெங்கிட்டுத்தேன் மூக்கு வேர்த்துச்சோ.. வந்திட்டாய்ங் கத்திரிக்காய்க்கு கால் கை மொழச்சாப்ல.. வெளுப்பானாம்ல வெளுப்பு நமக்குந் தெரியும்ண்ணே., நம்ம பயலுக நாலுவேரு யிருக்காய்ங்க இத்துணூண்டு கஞ்சாவுக்கு சோளிய முடிச்சு விட்டுருவாய்ங்க..” கடுப்பானன் ராசு.

“விடப்பா இவனெல்லாம் சொந்த சாதியிலேயே தீண்ட மாட்டம்ட்டாய்ங்கே.. பதினஞ்சு வருசமா பல கட்சி மாறி., போன எலெக்சன்ல ஆளுங்கட்சிக்காரய்ங்களோட சப்போட்டுல ஓட்டுக்கு காசு கொடுக்குறோம்ன்னு அதுல உருண்டது தானப்பா காசு.. ஆரம்பத்துல பத்து இருபது பேருக்கு குடுத்து வாங்கிட்டிருந்தவன்.. இப்போ ஊருக்குள்ள இவய்ங்கிட்ட கைநீட்டாத ஆளே இல்லன்னு ஆயிப்போச்சு. இப்பெல்லாம் இவன அவம் பினாமி இவம் பினாமி ன்றாய்ங்க., இன்னக்கி சாதிக்குள்ளேயும் பெரியாளப் போனாய்ன். கேக்க யார்ரிருக்கா.., அவய்ங்கிட்டல்லாம் வெடச்சுக்கிட்டுத் திரியாத ராசேய். அவெம் முதுக்குப் பின்னாடி பேசுறவெய்ங்க முன்னாடி மண்டி போட்டுக் கெடக்காய்ங்க..” எனறான் தொட்டுசாமி.

“இவெய்ன்னாப்ல இன்னாவாம்ண்ணே இவனும் மண்டி போட்டே வந்தவந்தான.. நம்ம நேரக்கழுத இந்த நாயிட்டல்லாம் போயி கை நீட்டியாச்சு.., சுத்த மானக்கேடா இருக்குண்ணே..” அங்காலாய்த்தான் ராசு.

திரும்ப அவர்கள் வந்தார்கள் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த அவனது முகத்தை மூடிய துணியை அவிழ்க்கும் முன் இவர்கள் முகத்தைத் துணியால் சுற்றிக் கொண்டார்கள். தொங்கிக் கொண்டிருந்த அவனுக்கு மூச்சு இருந்தது.. முனகினான் கொஞ்சம் குளூகோஸ் பவுடரை அவனது வாயில் திணித்தார்கள். அவசரமாக முடியாமல் தின்றான். புரையேறியது தும்மினான். தண்ணீர் கொடுத்தார்கள். கொஞ்சம் தெம்பு வந்தது. நீங்கள் யாரென்று கேட்டான். திரும்ப அவனது முகத்தைக் கட்டி அடித்து நொருக்கினார்கள். அவன் மீண்டும் மயக்கமானான் இவர்கள் ஓய்வெடுத்தார்கள்.

அநேகமாக ராத்திரி பத்து மணி இருக்கும்.. தொலைக்காட்சி சேனல்களை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டே இருந்தான் கருப்பையா. முன்னாடி தட்டில் இருந்த சோறும் அதைப் பிசைந்த அவனது கையும் காய்ந்து கொண்டிருந்தன. வரப்போகிற தேர்தல் குறித்த செய்திகளை சேனல்கள் கக்கிக் கொண்டிருந்தன. இவன் மனசுக்குள் வேறோரு கணக்கு ஓடிக் கொண்டிருந்தது.

இப்பொழுது இவன் இருக்கிற ஆளும்கட்சி உட்கட்சி கலகத்தால் பிரிந்து போயிருந்தது. லாபக் கணக்குப் பார்த்து பிரிந்து வந்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தான் கருப்பையா. மக்களிடம்., பிரிந்து வந்தவர்களுக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகவும் அவர்களே அதிகமான தொகுதிகளை இந்தமுறை பிடிப்பாரென்றும் தொலைக்காட்சிகள் ஆட்டிக் கொண்டிருந்தன. வருகிற காலத்தில் அவர்கள் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் ஆட்டுவார்கள் என்பது கருப்பையாவுக்குத் தெரியும். தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் எந்தப்பக்கம் அதிகமாக ஆட்டுகிறதோ அந்தப்பக்கம் போய்விடுவான் கருப்பையா. அவன் போடும் கணக்குகளில் இதுவும் ஒன்று. உண்மையை மறைத்து எந்த சூழலிலும் ஊடகங்கள் வாலாட்டுகிற கட்சிகளை மக்கள் மனதில் பதியமிட்டு ஓட்டாக்கும் சக்தி மற்றெதைவிடவும் ஊடகங்களுக்கும் பத்திரிக்கைகளுக்கும் அதிகம் இருப்பதாக நம்பினான் அவன்.

போன முறை தேர்தலின் பொழுது இவன் குடியிருக்கும் வார்டுக்கு இவன் தான் ஓட்டுக்கு பணப்பட்டுவாடா பொறுப்பாளர். அதேபோல் மற்ற எந்த வார்டுகளையும் விட இவனது வார்டில் ஒட்டு சதவிகிதம் அதிகமாக பெற்றுக் கொடுத்திருந்தான். அதனாலேயே இபொழுதிருக்கும் ஆளும்கட்சி எம்எல்ஏ இவனென்றால் நம்பிச் செய்வார். சில சொத்துக்களையும் இவனது பெயரில் அவர் வாங்கிப் போட்டதாக ஊருக்குள் பரவாலாகப் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் கருப்பையா கட்சி மாறிவிட்டான். அப்படியே அந்தச் சொத்தை ஆட்டையைப் போட்டுவிடலாம் என்பதும் கருப்பையாவின் கணக்குகளில் ஒன்று.

கத்திக் கொண்டிருந்த தொலைக்காட்சியை அணைத்துவிட்டு கந்து நோட்டை எடுத்தான் கருப்பையா.

போன முறைத் தேர்தலில் தனது பணியின் சிறப்பை முன்னிறுத்தி இந்தத் தேர்தலில் நகரம் முழுமைக்குமான பணப்பட்டுவாடாப் பொறுப்பை எப்பாடியாவது புதிய கட்சியில் பெற்றுவிட வேண்டும். அப்படியே கூட்டத்திற்கு ஆள் சேர்க்கிற பொறுப்பையும் பெற்றுவிட வேண்டும் என அவன் போட்டு வைத்திருக்கும் திட்டத்தை செழுமைப்படுத்துகிற நோக்கில் கந்து நோட்டை விரித்தான். நகரத்திலிருக்கும் முப்பது வார்டுகளில் எல்லா வார்டுகளிலும் இவனிடம் கந்துக்கு வாங்கியிருந்தார்கள். சராசரியாக நூற்றைம்பது பேர் கணக்கு. அதனாலேயே ஆட்சேர்ப்பு பணப்பட்டுவாடா பொறுப்புப் பெறுவதில் மும்முரமாய் இருந்தான். இரண்டு மூன்றுமுறை எதிர்பாராமல் முதலமைச்சரான ஒருவர் டீக்கடை நடத்தியவர் என்பதால் இவனும் ஒரு டீக்கடை ஆரம்பித்திருந்தான். ஆனால் கல்லாவில் கெத்தாய் இருப்பான். தேவைப்படுகிற இடத்தில் மட்டும் குனிவதையும் பணிவதையும் செவ்வனே செய்வான். பின்பொரு நாளில் டீ விற்றவர் பிரதமராகிவிட்டதால் எப்பொழுதாவது தம் கேனில் டீ எடுத்துக் கொண்டு அவன் டீ கண்ட்ராக்ட் எடுத்திருக்கிற கட்டிடங்களுக்கு சென்றுவிடுவான். அங்கே சில்லறைக்கும் டீ விற்பான். இந்தமுறை நகரத்திலும் சுற்று வட்டாரங்களிலும் திறக்கப்படுகிற தேர்தல் அலுவலகங்களுக்கு டீ சப்ளையையும் பேசி எடுத்துவிட வேண்டும் என்பதும் கருப்பையாவின் கணக்குகளில் ஒன்று. கணக்கு நோட்டின் ஓரத்தில் அப்படியே கணக்குப் போட ஆரம்பித்தான்.

“வார்டுக்கு நூத்தம்பது பேருக்கு கந்துக்கு கொடுத்திருக்கோம்., அப்ப மொத்தம் நாலாயிரத்தி ஐநூறு பேரு ஆள் சேக்க தலைக்கு ஐநூறுன்னாலும் இருபத்திரெண்டு லட்சத்தி அம்பதாயிரம் ஆச்சு., எப்படியும் அங்க இங்கன்னு ஒரு அஞ்சு தடவயாது கூப்பிட வேண்டியிருக்கும் அப்ப ஒரு கோடியே பன்னண்டு லச்சத்தி அம்பதாயிரம் அந்தா இந்தானு இந்தப் பயல்களுக்கு செலவு தலைக்கு முன்னூறுன்னு வச்சாலும் அறுபத்தேழு லச்சத்து அம்பதாயிரம் போக நாப்பத்தஞ்சு லச்சம் அதுல மிஞ்சும்., ஓட்டுக்கு கொறஞ்சது எப்படியும் ரெண்டாயிரம் வச்சாலும் நகரத்துல மட்டும் அம்பத்து நாலாயிரம் ஓட்டு., அப்ப பத்து கோடியே எட்டு லச்சம். நம்மட்ட கந்து வாங்கினவங்கிட்ட தலைக்கு ஆயிரம்ன்னு பிடிச்சாலும் ரொக்கமா கைக்கு நிக்கிறது நாப்பத்தஞ்சு லச்சம். அப்ப அதிலொரு நாப்பத்தஞ்சு இதுல ஒரு நாப்பத்தஞ்சு டீக்கணக்குல ஒரு பத்த வச்சம்ன்னா ஒரு கோடியாச்சு.” கந்து நோட்டை நெஞ்சில் வைத்தவாறே படுத்துக் கொண்டான். இரவெல்லாம் கருப்பையாவிற்கு தூக்கம் வரவில்லை. பறந்து கொண்டே இருந்தான்.

விடிவதற்கு முன் அவனது செல் போன் கூவியது. தேர்தல் பரபரப்பென்பதால் தாவியெடுத்தான். அழைத்தது ஆளுங்கட்சி எம்எல்ஏ வின் உதவியாளர்.

” இவய்ங்க யெதுக்கு இந்நேரங் கூப்பிட்றாய்ங்க..” எண்ணிக் கொண்டே போனை அழுத்தி “என்னண்ணே இந்நேரம்..” என்றான்.

”ஒன்னய  எம்எல்ஏ ஒடனே பாக்கணும்ன்றாரப்பா.. அப்படியே கெளம்பி வாப்பாய்..” என்றார் உதவியாளர்.

“யென்னைய யெதுக்குண்ணே அவரு பாக்கணும் நானு இப்ப அவரு கூட இருக்கேன்னு தெரியும்ல்ல.. இப்ப இவரப் பாத்தா பொழப்பு கெட்டுப் போகும்ண்ணே..” என்றான் கருப்பையா.

“அதெல்லாம் தெரியும்பா அதேன விடியக்காலமாக் கூப்பிடுறோம்.. யெல்லாம் ரகசியமாவே யிருக்கும்பா., ஒங்கிட்ட முக்கியமாப் பேசணும்றாரு அதேன்..” என்றார் அந்த உதவியாளர்.

“சரிண்ணே வர்றேன்..” என்று கிளம்பினான் கருப்பையா.

அந்த விடியற்காலை நேரத்தில் அவனது முகத்துணியை அவிழ்த்தார்கள். அவன் மயங்கிக் கிடந்தான். சிறுநீரும் மலமும் அவன் அறியாமலேயே வெளியேறி அவனது முகத்தின் வழியாகக் கீழிறங்கி சொட்டுச் சொட்டாய் வடிந்து கொண்டிருந்தது. இவர்கள் முகத்தைச் சுற்றியிருந்த துணியையும் மீறிச் சுழித்தார்கள். அதில் ஒருவன் பகடி செய்தான். தண்ணீரால் தொங்கிக் கொண்டிருந்த அவனது உடலை அடித்தார்கள். தண்ணீர்பட அவன் மெதுவாகக் கண் திறந்தான். கண்களாலேயே நீங்களெல்லாம் யார் எதற்காக அடிக்கிறீர்கள் என்று கேட்டான். மீண்டும் அவனது வாயில் குளுகோஸ் பவுடரைத் திணித்தார்கள். அரை மணி நேரம் கழித்து மீண்டும் அடித்தார்கள். அவன் மீண்டும் மயக்கமானான். 

“வாப்பா கருப்பு., யெப்படிப் போகுது தொழிலு, புது ஆளு என்ன சொல்றாரு.. பரவாயில்லையே கூப்டவொடனே வந்துட்ட..பயமில்லாம..” வழித்த  முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொண்டே வரிசையாய் கேட்டார் எம்எல்ஏ தக்காளிசெல்வம்.

“சாமியப் பாக்க யேன்ணே பயப்படணும்., ஒங்களுக்குத் தெரியாதாண்ணே ந்நா யெங்க இருந்தாலும் ஒங்களுக்கு விசுவாசி தான்ணே..” என்றான் கருப்பையா குனிந்து கொண்டே.

“நல்லா பேசுற நல்லா குனியவும் செய்யுற.. இதான்யா ஒங்கிட்டப் புடிச்சதே., சரி யென்ன செய்ய., தலைவர் இறந்தப்ப கட்சி ரெண்டா ஒடஞ்சுபோச்சு அப்போ அவரு வீட்டுக்காரம்மா அணில ந்நா யிருந்தேன்., பெறகு அது காலியாயி எதிரணி முக்கிய அணியா மாறினப்போ அங்க சேர்ந்துட்டேன்., அங்க ந்நாங் காட்டுன பணிவுக்குத்தான் இன்னக்கி ந்நா எம்எல்ஏ. அப்படித்தான நீயும் இருப்ப., பெறகு எப்படி பொழைக்கிறது இல்லையா கருப்பு..” சிரித்துக் கொண்டே கேட்டார் எம்எல்ஏ.

“யண்ணே.. ஆம்ண்ணே..” என நெளிந்த கருப்பையாவுக்கு உள்ளுக்குள் வெடவெடத்தது. இருந்தாலும் என்ன செஞ்சுருவாய்ங்க பாத்துருவோம் பாணியில் மனதைத் தேற்றி தைரியத்தை வரவழைத்துக் கொண்டான்.

“நீ யென்கிட்ட காட்டின பணிவுக்கு யெஞ்சொத்துல கொஞ்சம் ஒம்பேர்லயும் இருக்கு.”

“யண்ணே., ந்நா இருக்குறது அங்கண்ணாலும் யெப்பவும் ஒங்க அடிமதான்ணே., அண்ணே விருப்பப்படி இருப்பேண்ணே..” என்ற கருப்பையாவுக்குள் புதிதாக ஒரு கணக்கு ஓடியது. அக்கணக்கு நடந்துவிட எண்ணினான். அது நடந்தது..

“கருப்பையா ஓம்பேர்ல இருக்கிற யெஞ்சொத்த நீயே வச்சுக்கோ., யிந்தத் தடவையும் ந்நாந்தே செயிக்கணும்., நம்மூர்ல இருக்குற அம்பத்திநாலாயிரம் ஓட்டுல நம்ம கட்சி ஓட்டையும் சேத்து நாப்பத்தைய்யாயிரம் ஓட்டு சொளையா விழுகணும். ஒட்டு மொத்த காண்ட்ராக்டையும் நீயே யெடுத்துக்க.. யென்ன சொல்ற..” கேட்டுவிட்டு செருமினார் எம்எல்ஏ.

மனசுக்குள் பட்டாசுகள் வெடிக்க “யண்ணே யென்ன செய்யணும் சொல்லுங்க.. அஞ்சு கோடி ரூவா சொத்த யெனக்கு அண்ணே விட்டுக் குடுக்கறப்போ., ந்நா ஒங்க கால்லேயே கெடப்பேண்ணே” என்றான் கருப்பையா.

எம்எல்ஏ தக்காளிசெல்வம் கட்சி இரண்டாய் உடைந்ததில் ஆளும்கட்சியின் தலைவர்களில் ஒருவராய் மாறியிருந்தார். கட்டாயம் அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்கிற துடிப்பு வேறு. இல்லையென்றால் பெற்ற அனைத்தையும் இழக்க நேரிடும். தன் அரசியல் வாழ்வு சூன்யமாகிவிடும் என்ற பயமும் அவருக்கு இருந்தது. மக்களுக்கு இவர் மேல் நல்லபேர் இல்லை என்பதும் அவருக்குத் தெரியும். ஆகையால் கருப்பையா போன்ற ஆட்களை கையில் வைத்துக் மக்களை விலை பேசும் முடிவுக்கு வந்திருந்தார். எவ்வளவு கொடுத்தாவது வெற்றி பெற்று விடுவதற்கான சூத்திரங்களைத் தேடிக் கொண்டிருந்தார்.

அன்று மாலையிலேயே எம்எல்ஏ தக்காளிசெல்வம் தலைமையில் தனது ஆதரவாளர்கள் நூறு பேருடன் தாய்க்கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டான் கருப்பையா. அவனது இந்தப் புதிய கணக்கில் இரண்டு கோடி ரூபாய் லாபத்தை திட்டமிட்டிருந்தான். இந்த இரண்டு கோடியை அடுத்த ஐந்து வருடங்களுக்கு உருட்டுப் பெரட்டுக்கு விட்டோமானால் அடுத்த தேர்தலில் தானே சட்டமன்ற தேர்தலில் போட்டியிடலாம் காசால் அடிக்கலாம் என்பதும் அவனது கணக்கில் ஒன்றானது. அதுதான் ஏற்கனவே டீக்கடையும் டீ விற்கும் ராசியும் இவனுக்கு இருப்பதால் அவனது கணக்கை அவன் நம்பினான். கந்துவும் அரசியலும் ஒன்றுதான் என்பது அவன் எண்ணம். காலூன்றிவிட்டால் இரண்டும் பெருகிக்கொண்டே போகும் எனவும் நம்பினான்.

தேர்தல் களம் சூடு பிடித்திருந்தது. ஆளும் கட்சி ஆட்சியைத் தக்க வைக்க எல்லா வடிவத்திலும் தங்களது வேலையைக் காட்டினார்கள். தேர்தல் ஆணையமும் அதைக் கண்டு கொள்வதில்லை. நீதி மன்றங்களும் அவர்களது தப்பை பெரிது படுத்தவில்லை. ஆளும் கட்சிக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களில் குரல்களுக்கு மாவட்டக் கலெக்ட்டரோ ஏன் தாலுகா அலுவலர் கூட காது கொடுக்கவில்லை. ஆளுங்கட்சி பணத்தை பெரிதும் நம்பியிருந்தது. ஊடகங்கள் ஆளுங்கட்சிக்கான மக்கள் எதிர்ப்பு மனோநிலையை ஆதரவு மனநிலையாக மாற்றும் முயற்சியில் வரிந்துகட்டி செயல்பட்டன. அது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது.

கருப்பையாவும் அவனது கணக்குப்படி வேலை பார்த்தான். எம்எல்ஏ தக்காளிசெல்வமும் தேர்தல் வேலைகள் அவர் நினத்தபடி நடந்ததால் மகிழ்ச்சியாய் இருந்தார்.

தேர்தல் நாளும் வந்தது. ஓட்டுப் பதிவு நடக்க நடக்க ஆளும் கட்சிக்கு வியர்க்க ஆரம்பித்தது. பணம் வாங்கிய மக்கள் ஓட்டுப் போடவில்லை என்பது ஒருபுறம். இதில் பணம் யாருக்கும் சரியாக பட்டுவாடா செய்யப்படவில்லை என்பது இன்னொரு புறம் என்ற தகவல்கள் வயிற்றுக்குள் புளியைக் கரைத்தன. இப்படியிருக்க வாக்குப் பதிவுக்குப் பின்னான உளவுத்துறை அறிக்கையும் ஆளும் தரப்புக்கு படுஅடி விழும் எனக் கூறியது. ஓட்டு பதிவு சதவிகிதமும் குறைந்து போயிருந்தது. இதனாலேயே அவர்கள் கிடுகிடுத்துப் போயிருந்தார்கள்.

எம்எல்ஏ தக்காளிசெல்வம் முன் கருப்பையா மணியிட்டிருந்தான்.

“கருப்பையா நாப்பத்தைய்யாயிரம் ஓட்டுக்கான காச ஒங்கிட்ட குடுத்தோம். விழுந்த ஓட்டு இருபத்தெட்டாயிரம். இது யெல்லாக் கட்சிக்கும் சேத்து. வ்வோம் பட்டுவாடா சந்தேகமா இருக்கப்பா.. நீ யென்னா பண்ற விழுந்த ஓட்டு போக மீதி ஓட்டுக்கான ரூவாயக் கொடுத்திரு..” என்றார்.

“யண்ணே யெல்லாருக்கும் கொடுத்துட்டேண்ணே.. பைசா மிச்சமில்லண்ணே., நம்புங்க..” கெஞ்சினான் கருப்பையா.

“யிங்கவாரு கருப்பையா யெங்கிட்ட நேரமில்ல., ஒன்னைய மாதிரி இன்னும் மத்தவய்ங்கிட்டேயும் பேசணும் சட்டுபுட்டுன்னு விசயத்த முடி. இந்த யெலக்சன் ரிப்போர்ட்டு நமக்குச் சாதகமா இல்ல. ஆட்சி தொடருமான்னு தெரியாது. பெறகு ந்நா சிங்கிதேன் யடிக்கணும். யெஞ்சொத்தையும் விழுகாத ஓட்டுக் காசையும் திருப்பிக் கொடுத்திருப்பா.. வீம்பு பன்ணாத.. யெல்லாருக்கும் பட்டுவாடா செஞ்சிருந்தன்னா கந்து வசூலப் போல திருப்பி வாங்கிக்கப்பா.. யெனக்கு யெங்காசு வந்திரணும் ” என்றார் தக்காளிசெல்வம்.

தேர்தலுக்கு முன்னான சில நாட்களில் ஆளும்கட்சியின் வெற்றி மதில்மேல் பூனை என்கிற ரகத்தில் இருந்ததால் கருப்பையா பாதிப் பணத்திற்கு மேல் பதுக்கிக் கொண்டான். கொடுத்த காசை எப்படி திருப்பிக் கேட்க முடியும் என்கிற நினைப்பும்.. தேர்தல் முடிவு ஆளும் கட்சிக்கு பாதகமாக இருந்தால் ஜெயிக்கிற கட்சியில் சேர்ந்து விடுவதென்ற அவனது கணக்கும்..

”மிஞ்சிப் போனா அடிப்பாய்ங்க.. காச மட்டும் விட்டுறக்கூடாதுடா கருப்பையா..” என உள்ளுக்குள் சொல்லிக் கொண்டு அரங்கியாய் இருந்தான் கருப்பையா.

“ஒங்கிட்ட யெப்படி காச வாங்குறதுன்னு யெனக்குத் தெரியும்.. ரிசல்ட் வரட்டும் பெறகு வச்சுக்கிறேன். யெதுக்கும் யோசி கருப்பையா பணம் வரும் போகும் சம்பாரிச்சுக்கலாம் அதுக்குத் தகுந்தாப்ல நெலம வர்ற வரைய பொறுத்திருக்கணும் யெனக்கு ஒன்னயப் போல ஆளுக முக்கியம் ரெண்டு நா கழிச்சுக் கூப்பிடுவேம் சாக்குப் போக்குச் சொல்லாம வரணும் கெளம்பு., அப்படியே வெளில நிக்கிற சற்குணத்த வரச் சொல்லிட்டுப் போ..” என்றார்.

”நம்புங்கண்ணே.. யண்ணே நம்புங்கண்ணே..” என்று கெஞ்சிக் கொண்டே கிளம்பினான் கருப்பையா.

இப்பொழுது அவர்கள் அவனது மயக்கத்தை தெளிய வைக்க விரும்பவில்லை. எப்படியும் உடம்பு தேற இரண்டு வருடமாகும். மனசு தேறவே தேறாது. அப்படி அடித்திருந்தார்கள். தொங்கிக் கொண்டிருந்த அவனை இறக்கினார்கள். இரவு கவிழ்ந்து கொண்டிருந்தது. தக்காளிசெல்வம் காரில் வந்து இறங்கினார். மயக்கமாயிருந்த அவனது கன்னத்தை தட்டி அவனது பெயரை சொல்லி அழைத்துப் பார்த்தார். அவன் நீண்ட மயக்கத்திலிருந்தான்.

“ம்..” செருமிக் கொண்ட தக்காளிசெல்வம்

“நல்லா அடிச்சிருக்கீங்க.. யெவன் யெதுக்கு அடிச்சான்ணே தெரியக்கூடாது.. யிவம் தேறி வர்றப்போ ஒன்னு பிச்சையெடுத்துப் பொழைக்கணும்.. யில்ல சாகணும்., யிவனத் தூக்கி., பாத்தா நாலு பேரு கண்ணுல படுறாப்ல ஓடக் கரையோரமா வீசிவிட்டு வாங்க..” எனக் கூறிவிட்டுக் கிளம்பினார்.

பொழுது விடிய ஆரம்பித்திருந்தது. தூக்குச்சட்டியில் சோற்றை நிரப்பிக் கொண்டு பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரோடு ஓடைக்கரை வழியாய் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தார்கள் ஆண்களும் பெண்களுமாய்..

குற்றுயிரும் குலையுயிருமாய் கிடந்த கருப்பையாவை ஓடை நாற்றம் உசுப்பிவிட்டது. சன்னமாய் விழித்த அவன் ஆட்கள் நடந்து செல்வதைப் பார்த்ததும் ஈனக்குரலில் முனகிக் கொண்டே அழைத்தான். தலை கைகால்களை அவனால் அசைக்க முடியவில்லை.

ராசுவும் மதுரமும் தொட்டுசாமியும் ஆட்களோடு ஆட்களாய் நடந்து முடிந்த தேர்தைலைப் பற்றி பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்தார்கள். எதேச்சையாய் ஓடையத் திரும்பிப் பார்த்த ராசு பதறிக்கொண்டு ஒடினான். மதுரமும் மற்றவர்களும் பின்னாலேயே ஓடினார்கள். மல்லாந்து கிடந்த கருப்பையாவின் முகத்தை திருப்பினான். கருப்பையா என்றதும் அதிர்ச்சியானான். மழை விழுந்து வெள்ளமாய் ஓடிய ஒடை நகரப் பெருக்கத்தில் சாக்கடையாய் மாறிப் போயிருந்தது. அதன் வீச்சம் பயங்கரமாய் இருந்தது. எல்லோரும் வாயையும் மூக்கையும் பொத்திக் கொண்டு வேடிக்கை பார்த்தார்கள். கருப்பையாவின் அடாவடிகள் மனசு முழுக்க நிறைந்திருந்தாலும் மனதின் மூலையில் கசிந்து கொண்டிருந்த ஈரம் ராசுவுக்குள் வடிந்தது.

”ஒரு கை பிடிண்ணே..” என்றான் ராசு மதுரத்திடம். இருவரும் கருப்பையாவைத் தூக்கி கரையிலிருந்த இலவ மரத்தடியில் உட்கார வைத்தார்கள். ப்ளாஸ்டிக் பாட்டில்களிலிருந்த தண்ணீரால் கருப்பையாவின் உடம்பைக் கழுவினார்கள். தூக்கிலிருந்த சோற்றை கருப்பையாவுக்குத் தெம்பு கிடைக்க ஊட்டினார்கள்.

“ராசு நூத்தியெட்டுக்கு போனடி..” என்றான் மதுரம்.

“வண்டி வந்துக்கிட்டிருக்குண்ணே..” என்றான் ஆம்புலன்சுக்குப் பேசிய ராசு.

“யெப்படின்னாலும் பொழப்புன்னு பொழச்சா யிப்படித்தேன்.. ம்.. நம்மள யின்னா பாடுபடுத்தினாயிவன்.., நமக்கு யெதுன்னாலும் யெதையும் யெதிர்பாக்காம நாலுபேரு நிக்கணும் ராசு., நாளைக்கி யிவன் நம்ம மொகத்துல தான முழிக்கணும்.. யெத வச்சு முழிப்பான்னு பாப்போம்.. யிவங்கூறுக்கு திருந்த மாட்டானப்பா ” என்றான் மதுரம்.

“விடுண்ணே கண்ணு முன்னாடி தவிக்கிறத யெப்படி பாத்துட்டுப் போவ.. நாம செய்யிறது செய்யிவோம்.. யினி அந்தாள் பாடுண்ணே..” என்ற ராசு ஆம்புலன்ஸ் வருகையை எதிர்நோக்கி கரையிலிருந்து இரண்டடி முன்னால் போனான்.

கண்டவன் காலை நக்கிப் பணத்தைச் சேர்த்து அந்தப் பணத்தால் ஊரை அடித்து உலையில் போட்டு., கடைசியில் சாவடி வாங்கிக் கிடந்தக் கருப்பையாவுக்குள் மனச்சாட்சி ஓட்டுப் பதிவை நடத்திக்கொண்டிருந்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

1 thought on “கருப்பையாவின் கந்துக் கணக்கு”

  1. இன்றைய அரசியலையும் அதை வைத்து பிழைப்பு நடத்தும் சந்தர்ப்ப வாதிகளையும் வைத்து அழகாக புனையப்பட்ட கதை. கந்து வட்டிக்கு மிரட்டியவன் மேல் பரிதாபபட்டு பதைபதைத்து தூக்கும் எளிய மக்கள். யதார்த்தமாக நாட்டு நடப்பை கொண்டு செல்கிறார் தோழர் தமிழ்மணி. வாழ்த்துகள் தோழர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: