கருப்பு மதியம்

4.1
(47)

“எலேய் முருகா… மோட்டார் சத்தம் கேக்குது. மணியான்னு… பாருலேய் மக்கா…”

“மணி இல்லப்பா… வேற யாரோ போறாக. வந்தா வீட்டுக்கு வரமாட்டானா… ஏம்போட்டு தொண்டைத் தண்ணிய வீணாக்கிறீக…”

“இல்லமக்கா வீடு கீடு தெரியாம போயிறக் கூடாதுல்ல அதுதான்…”

“மாசாமாசம் வர்றவனுக்கு வீடு தெரியாமல் போயிருமா…”

என்ற முருகனின் அதட்டலான குரலுக்கு உள்ளேயிருந்து பதில் எதுவும் வரவில்லை. பொன்னையாபிள்ளையும் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார். மணிக்கு வீடு தெரியாமல் போவதற்கு வாய்ப்பில்லை. ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்னிக்கு பொன்னையாபிள்ளையைக் கூட்டிட்டுப் போவதென்று ஏற்பாடு. அன்று மதியம் அவருடைய தம்பி பரமசிவம் வீட்டில் சாப்பாடு. அதுவும் விரதச் சாப்பாடு. பொன்னையாபிள்ளைக்கு நிலை கொள்ளவில்லை. காலையிலிருந்தே சாப்பிடவில்லை.

பொன்னையாபிள்ளை காத்திருந்தார், மொபட்டின் மோட்டார்சத்தத்திற்காக, அந்தச் சத்தத்தினூடாக பாவு போல வரும் தம்பி மகன் சுப்பிரமணியின் குரலுக்காக. அந்தக் குரலைக் கேட்டதுமே அவருக்கு அமாவாசைச் சாப்பாடு சாப்பிட்டது போலவே ஆகிவிடும். வழக்கமாக சுப்பிரமணி வருகிற நேரம் தாண்டிவிட்டது. இப்போது கொஞ்ச நாளாகத்தான் இந்த ஏற்பாடு. அதுவும் அவருக்கு உடம்பு முடியாமல் படுக்கையில் போட்டபிறகு. லேசான நடமாட்டத்தைத் தவிர வேறு எதுவும் பொன்னையாபிள்ளையால் செய்ய முடியாது.

பொம்பளைப் பிள்ளைகள், ஆவுடையம்மாளும் மரகதமும், உயிரின் நெருப்பைத் திரட்டி தீக்குச்சிகளில் சேர்க்க தீப்பெட்டியா பீசுக்குப் போயிருந்தார்கள். தீக்குச்சிகளுக்கு நெருப்பின் சூட்சுமத்தைத் தந்ததுக்குப் பிரதி பலனாக மெழுகின் மக்கு வாசமும், பழைய சோறும், சாய்பு கடை புரோட்டா சால்னாவும் கிடைத்தன.

முருகன், பொன்னையாபிள்ளையின் கடைசி மகன். திரையரங்கில் சீட்டு கிழித்தான். சினிமாவின் மாயம் போல் வந்தான். போனான். பொன்னையாபிள்ளை மட்டும் நோய்களைச் சீராட்டி சீராட்டி தனியே கிடந்தார். கிழிந்த ஜமுக்காளத்தில் வாழ்ந்த வாழ்வின் திரடுகளை விரல்களால் உருட்டிக் கொண்டே ஓட்டுச்சாய்ப்பின் வீறல்களை, ஓட்டைகள் வழியே தரையில் விழும் ஒளிச் சதுரங்களை வெறிப்பார். பாய்ந்து ஏறும் ஒளிப்புகையில் அலையும் தூசிகளைப் பிடித்துக்கொண்டே ஏறி, ஓட்டுச்சாய்ப்பின் மீது நின்று தன் பழைய வாழ்க்கையை மீண்டும் பார்ப்பார். தகிக்கும் சூரிய வெள்ளத்தை, அலைமோதும் ஒளிக்கடலை கண்களால் தாங்க முடியாமல் இமைகளை மூடி விரிப்பார். எப்போதும் யோசிப்பது போன்ற நிழல் கவிந்த முகம். நீண்ட தாடியும் வழுக்கை விழுந்து பிடரியில் மட்டும் வளர்ந்த முடியும் வளைந்து கிடக்கும். விரல்களினால் வலது, இடது பக்க மீசைகளை கண்களை மூடி மெய் மறந்து உருவி விடுவதும், திடும் திடுமென விழித்துப் பார்ப்பதுமாக பொழுதைக் கழித்தார் பொன்னையாபிள்ளை.

அவர் யோசனையெல்லாம் வகை வகையான சாப்பாடு பற்றித்தான். எந்தச் சிந்தனையும் எந்தப் பேச்சும் உணவு வகைகளைச் சுற்றியே இருக்கும்படி பேச்சின் திசைகளை இழுத்துக் கொண்டு வந்து முடிப்பார். அவர் ஒரு காலத்தில் பிரபலமாக நடத்திய கிளப்புக் கடை கண்ணில் ஆடும். அப்போது தான் எத்தனை வகையான பலகாரங்கள், எத்தனை வகையான சித்ரான்னங்கள், சாப்பாடு வகைகள். அவர் மனைவி சீதாம்மா மட்டும் கொறைச்சலா என்ன. சீதாம்மா கையினால் செய்த சொதியை நினைத்தாலே இப்பவும் அவருக்கு எச்சில் ஊறும். கடை நொடிந்து போன பிறகும் வீட்டில் என்ன கொஞ்சமாகவா நடந்தது. தினசரி கல்யாணப் பந்திச் சாப்பாடு மாதிரி தான். யார் வந்தாலும் பொன்னையாபிள்ளை வீட்டில் கை நனைக்காமல் போனதில்லை. கடைசியில் வீட்டிலும் காரை பெயர்ந்து உதிர்ந்து விழுந்த போது, இரயில்வே நிலையக்கடையில் பொட்டலம் கட்டிக் கொடுக்கப் போனார். நினைத்த போது வீட்டிற்கு வந்து, தான் ஒருத்தன் உயிரோடு இருப்பதை வீட்டாருக்குத் தெரிவித்து விட்டுப்போவார்.

இப்போது உடம்புக்கும் வந்து எங்கேயும் போக முடியாமல் ஆனபிறகு வகையான சாப்பாட்டுக்கே கஷ்டமாகிவிட்டது. கிடைத்த ஒரே ஒரு ஆறுதல் தம்பி பரமசிவம் வீட்டில் சாப்பிடுகிற அமாவாசைச் சாப்பாடு. பித்ருக்களின் புண்ணியத்தினால் அவருக்கு இந்தச் சாப்பாடாவது கிடைக்கிறதே என்று திருப்திப்பட்டுக் கொள்வார். ஆனால், இன்று என்னாச்சுன்னு தெரியல. இன்னமும் சுப்பிரமணியைக் காணவில்லை. வயிறு கடா முடாவென்று இரைந்தது. காலையில் விரதம் என்பதால் ஒன்றும் சாப்பிடவில்லை. ஒரு மடக்கு காப்பி குடித்ததோடு சரி. மத்தியானம் தம்பி வீட்டில் சேர்த்து ஒரு பிடி பிடிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார். வெயில் அக்கினி மழையைப் பொழிந்தது. உடல் சோர்ந்து கொண்டே வந்தது. கண்களை மூடினார். என்ன இந்தப்பயலைக் காணலை. கண்ணுக்குள் சுப்பிரமணி நடந்து வருவது போல ஒரு தோற்றம். மறுபடியும் முருகனைக் கூப்பிட்டார்.

“ஏலேய் முருகா… சுப்பிரமணி நடந்து வாரானோ என்னம்மோ. கொஞ்சம் தெரு முக்குவரைக்கும் போய் பாத்துட்டு வாயேன். நேரமாச்சி இன்னங் காணலை…”

சைக்கிளை ஒக்கிட்டுக்கொண்டிருந்த முருகன், கோபத்தோடு

“வேற வேலைக் கழுதயில்லை. பேசாம இருக்க மாட்டியளா… சும்மா தொண தொணன்னுகிட்டு…”

முருகனுக்கு மட்டுமில்லை. பொம்பளைப் பிள்ளைகளுக்கும் கூட அவர் சாப்பாட்டுக்காகத் தம்பியின் வீட்டுக்குப் போவதில் விருப்பம் இல்லை.

“அதென்ன எச்சிக்கலத்தனம்… கஞ்சியோ கூழோ இருக்கதக் குடிச்சிட்டு இங்கனேயே கெடக்க வேண்டியதானே… நாக்கு ருசிகேக்குதோ… குடும்பத்தை சீரழிச்சதே இந்த நாக்கு ருசிதானே…”

இந்த மாதிரியான வசவுகள் கிளம்பி வரும்போது அவர் முற்றும் துறந்த யோகியாகவோ, ஒன்றும் அறியாத குழந்தையாகவோ ஆகி, கண்களை மலங்க மலங்க மூடி விழிப்பார். ஏதாவது பதில் பேசி ஏடாகூடமாகி தம்பி வீட்டுக்குப் போவதோ அல்லது ஏலாத காலத்தில் வீட்டில் கிடைக்கிற பழையதும், காமாசோமான்னு வைக்கிற குழம்பு கறிகளும், சாய்பு கடை இட்லியும் புரோட்டாவும், குமட்டிக்கொண்டு வரும் சால்னாவும் கிடைப்பதோ அரிதாகி விடக்கூடாதே என்று நினைத்து வாயே திறப்பதில்லை.

ஒவ்வொரு அமாவாசையிலிருந்து அடுத்த அமாவாசை வரைக்கும் பொழுது போகாத நேரங்களில் இது வரைக்கும் அமாவாசைகளில் சாப்பிட்ட சாப்பாடு, கறி வகைகள் பற்றிச் சிந்திப்பார். கைவிரல்கள் சுவாரசியமாய் மீசையை நீவி விட இதை இப்படிச் செய்திருந்தால் நன்றாக இருக்கும் அதை அப்படிச் செய்திருந்தால் நன்றாக இருக்கும் என்று மனசுக்குள் கணக்குப் போட்டுக் கொண்டிருப்பார். சில சமயங்களில் வீட்டில் பொம்பளைப் பிள்ளைகள் மனோநிலை சுமூகமாக இருக்கிற சமயம் வாய்விட்டுச் சொல்லி சிலாகிப்பார். சாப்பாட்டுக்கு ரொம்ப ஏங்கிப் போய் மனசு மயங்கியிருக்கிற பொழுதுகளில் மாசத்திற்கு ஏன் ஒரே ஒரு அமாவாசை வருகிறது என்று கூட பைத்தியக்காரத்தனமாய் நினைப்பார். ஆனால், வெளியே இதுவரை சொன்னதில்லை. அமாவாசை நெருங்க நெருங்க முகத்தில் ஒளி கூடி வரும். பேச்சு தெளிவாய் இருக்கும். தேதி காலண்டர் பார்க்காமலேயே ஒவ்வொரு அமாவாசையும் என்ன கிழமை வருகிறது என்று அவராகவே கணக்குப் போட்டு வைத்திருப்பார். ஆனாலும், ஆவுடையம்மாளிடம்,

“ஏளா… இந்த மாசம் என்னக்கி வருது அமாவாசை…”

“ஞாயித்துக்கிழமைப்பா…”

“ஞாயித்துக்கிழமையா… என்ன எளவு கணக்குத் தெரியுது… வயசாச்சில்ல… ஒண்ணும் புரிய மாட்டேக்கு…”

என்று குரல் சலிக்கும்… உள்ளுக்குள் அவர் கணக்கு சரிதான் என்று சந்தோஷம் பொங்கும். தவிப்பு கூடி இந்த அமாவாசைக்கு என்னென்ன காய்கறி இருக்கும் என்று யூகமாய் கற்பனை செய்வதில் அலாதி விருப்பமுடையவராய் இருந்தார் பொன்னையாபிள்ளை. மாங்காய் பச்சடி, காரட் பொரியல், முருங்கைக்காய் சாம்பார் இந்தத் தடவை இருக்கும் என்று நினைத்தார். ஆனால், இன்னமும் மணியைக் காணவில்லை. பொதுவாய் இவ்வளவு தாமதம் ஆவதில்லை. தலைகனத்து பாரமாய் இருந்தது. கைகால்கள் கூட மரத்துப் போய் விட்டன. மறுபடியும் முருகனைக் கூப்பிடலாமென்றால் திட்டினாலும் திட்டுவான். ஏன் இவ்வளவு லேட் பண்ணுதான் சின்னப்பயல் என்று மணியைச் செல்லமாக மனசுக்குள் வைது கொண்டார். கடுமையாகத் திட்டப்போய், ஒரு வேளை வராமல் போய்விட்டால்… ஒருவேளை வரவே மாட்டானோ. அதை நினைத்தே பார்க்க முடியவில்லை. பசி ஏப்பம் விட்டார். ஒட்டிச் சுருங்கிய குடல்வழியே காற்று புகுந்து வந்ததில் வலித்தது. மந்தித்துப்போயிருந்த காதுகளைக் கூர்மையாக்கினார். ஏதாவது மோட்டார்சத்தம் கேட்டால் அது சுப்பிரமணி தான் என்று நினைத்தார். வாசலில் நிழலாடுகிறது என்று கற்பனை செய்தார்.

சுப்பிரமணி புறப்பட்டு வந்து கொண்டிருப்பான், ரவுண்டானா தாண்டியிருப்பான். ஓடைப் புளியமரத்தின் கீழ் வந்து கொண்டிருப்பான். இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவான். இன்னும் ஐந்து நிமிடம்… இன்னும் ஐந்து நிமிடம்… நேரம் ஊர்ந்தது. கண்ணுக்கு முன்னால் திரை விரிந்த மாதிரி தோற்றம். மூடினாலும், திறந்தாலும் ஒரே மாதிரி இருந்தது. மயக்கம் வரும்போல் இருந்தது. லேசாய் தலைவலியும் ஆரம்பிக்க, தம்பி காலா காலத்தில் அனுப்பியிருப்பான். இந்தப்பயல் தான் எங்கேயோ ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறான் என்று திடமாக நம்பினார். சின்னப்பயகளுக்கு நம்ம நிலைமை தெரியுதா? அவருக்கு நேரம் ஆக ஆக நம்பிக்கை குறைந்தது. இன்னமும் வரவில்லையென்றால்…

“எலேய் முருகா… இன்னியும் மணியக் காணல… என்னன்னு தெரியல… எங்கியாச்சும் ஊர்சுத்தறானோ என்னவோ… நீ கொஞ்சம் சைக்கிள்ள என்னைய அங்கனவிட்டுறல… லேய்ராசா…”

முருகன் வாசல் திண்ணையிலிருந்து வேகமாக எழுந்து வீட்டுக்குள் வந்தான்.

“கொஞ்சமாச்சும் அறிவிருக்கா… வர்றதா இருந்தா இதுக்குள்ள வந்திருப்பானே… வரலைன்னா பேசாம வீட்ல உண்டானதை தின்னுட்டு கெடக்கணும்…”

“இல்ல அவம் பலசோலிக்காரன். ஒரு வேளை மறந்திருப்பான். அமாவாசை விரதம் பெரியவங்களுக்கு செய்ற கடமை. அத தவறவிடக்கூடாது… பாவம்…”

“எனக்கு நல்லா வாயிலவருது…” என்று முருகன் முடிக்கு முன்பே வீட்டுக்கு முன்னால் மோட்டார் சத்தம் கேட்டது. முருகன் திரும்பிப் பார்த்தான். சுப்பிரமணி மொபெட்டை நிறுத்திவிட்டு வந்தான். அவனைக் கண்டதும் பொன்னையாபிள்ளைக்கு அருள் வந்தது போல் ஆகிவிட்டது.

“ஏய்யா இவ்வளவு லேட்டு… இந்தப் பனாதிப் பயகிட்டே கொண்டு போய் விடுடான்னா பெரிய மயிரு கணக்கா எக்காளம் பேசுறான்… சின்னச் சாதிப்பய… தலைப் பிரட்டுத்தனம் அதியமாயிருச்சி…”

கணீரென்று கத்தினார் பொன்னையாபிள்ளை. முருகன் அதிர்ந்து போனான்… அப்படி அவர் எந்நாளும் பேசியவரல்ல.

“பெரிப்பா… அப்பா ஊரில இல்ல. நேத்திக்கு யாரோ அவுக பிரண்டு செத்துட்டார்னு துஷ்டிக்கு போயிட்டாக… அம்மைக்கும் உடம்புக்கு முடியல. இன்னக்கு சமையலே பண்ணல… அதான் அம்மை போய் சொல்லிட்டு வாடா… அவுக காத்திட்டிருப்பாகன்னு சொல்லிவிட்டா…”

சுப்பிரமணி என்ன சொன்னான் என்றே பொன்னையாபிள்ளையால் கிரகிக்க முடியவில்லை. கண்ணுக்கு முன்னால் பொறி பறந்தது. உடல் நடுங்கியது. மயங்கி கீழே சாயப் போனார். சுப்பிரமணி ஓடிப்போய் அவர் கையைப் பிடித்துக்கொண்டான். அப்படியே தலை சாய்த்துப்படுத்தார். திடீரென வீட்டுக்குள் முருங்கைக்காய் சாம்பார் மணம் வீசியது. பொன்னையாபிள்ளையின் பஞ்சடைந்த கண்களிலிருந்து கண்ணீர் கோடுகளாய் இறங்கியது. முருகன் அப்பாவையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4.1 / 5. Vote count: 47

No votes so far! Be the first to rate this post.

249 thoughts on “கருப்பு மதியம்”

 1. கீதா பத்மநாபன்

  வயதான மனிதர் ஒருவர் ருசியான சாப்பாட்டிற்காக ஏங்கும் அவல நிலையை, அதற்காக அவர் படும் பாட்டை மிக அழகாக இக்கதையில் ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.

  மாதம் ஒருநாள் வரும் அமாவாசையில் சாப்பிடும் சாப்பாட்டிற்காக மீதி நாட்கள் முழுவதும் அதைப்பற்றி நினைப்பதிலேயே கழிக்கிறார். தான் கிளப்புகடை வைத்திருக்கும் பொழுது சாப்பிட்ட சாப்பாட்டை நினைத்து ஏங்குகிறார். வேறு என்ன செய்ய முடியும் இந்த வயதான காலத்தில்? தான் நன்றாக இருக்கும்பொழுது அவர் வீட்டில் கை நனைக்காதவர்களே இல்லை. இப்பொழுது ஒரு வேளை சாப்பாட்டிற்காக ஏங்கித் தவிக்கும் நிலை. யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது.

  நம் இந்தியத் திருநாட்டில் பெரும்பான்மையோரின் இன்றைய நிலை இது தான். அவர்கள் ஆசைப்படுவது ருசியான சாப்பாட்டிற்கு இல்லை. ஒருவேளை கஞ்சிக்குத் தான். பொன்னையாப்பிள்ளையின் பெண்களைப் போல நாள் முழுவதும் உழைத்து ஓடாகத் தேய்ந்தால் தான் அவர்களால் பசித்த வயிற்றுக்கு சாப்பிட முடியும்.

  தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி……ஒருவேளை அவன் இருந்திருந்தால் நன்றாய் இருக்குமோ…

  கதையைப் படிக்கும்பொழுது நாமும் மணிக்கு என்ன ஆயிற்று, ஏன் வரவில்லை, இனிமேல் வராமல் போய்விடுவானோ என்ற பதட்டம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

  ஒரு சிறிய கதையில் எளிய மக்களின் ஆசையை ஆசிரியர் திறம்பட வெளிப்படுத்தியுள்ளார். இக்கதை படித்த எவராலும் அமாவாசை அன்று பொன்னையாப்பிள்ளையை நினையாமல் இருக்க முடியாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: