கருப்புக்காப்பி

1
(1)

கண்களில் தூசு பறக்க கடை வாசலில் வந்து நின்றாள் போதுமணி.

டீ பட்டறையில் நின்றிருந்த காவேரி, பாய்லருக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் விறகுக் கரியை அள்ளிப் போட்டுக்கொண்டிருந்தாள். அடித்தட்டில் விழுந்த கரித்துண்டுகளை கிளைத்து விட, உடம்பில் படிந்துள்ள நீர்த்துளிகளை உதறுகிற நாய்க்குட்டி போல , தட்டிலிருந்த நெருப்புத் துண்டுகள் தன்மீதிருந்த சாம்பலை உதிர்த்து செந்நிறம் காட்டி மிளிர்ந்தன.  பாய்லரின் வெளிப்புறத்தில் கைவைத்துப் பார்த்தாள். சூடு, மிதமாய் இருந்தது.

பட்டறையில் எவர்சில்வர் பேசினில் இருந்த நீரில்கைகழுவி, மேலே கம்பியில் தொங்கிக் கொண்டிருக்கும் அழுக்குத் துண்டில் துடைத்துக்கொண்டாள்..

‘ என்னாம்மா வேணும். ? “  மறுபடியும் கேட்டாள்.

போதுமணி அப்போதும் பேசாமல் அங்குமிங்கும்  பார்வையை ஓட்டிக்கொண்டு கடையை நெருங்கி வந்தாள்.

“காப்பி வேணுமா . ? “

“ நா அசலூரு. கடைல வேல ஏதும் இருக்குமா . ? “

அவளது கேள்வியால் துணுக்குற்ற காவேரி, “ யேம்மா, வெவரமான பொமபளயாத் தெரியற . . இங்கன வந்து வேல கேக்கறியே .? டவுனுன்னா பத்துப்பேர் வந்து சாப்பிட்டுபோற எடம். ரெண்டுபேருக்கு வேல குடுக்கலாம். பட்டிக்காட்டுல, அதும் இந்தக்கடைல . ! கோட்டி பிடிச்ச பிள்ளையா இருக்கியே . .” பேச்சோடு பேச்சாய் வட்டகப் டபராவில் காப்பியைப் போட்டாள்.

”உள்ள வா . .”

“ ம் ? “

“ உள்ள வாம்மா. வந்து இந்தக் காப்பியக் குடி. “

தலைதட்டிய மேல்கூரைக்கு குனிந்து கடைக்குள் நுழைந்தாள் போதுமணி. உள்ளே இரண்டு வட்டவடிவ பிளாஸ்டிக் ஸ்டூல் போடப்பட்டிருந்தது. வீட்டின் வெளித்திண்ணையை தென்னங்கிடுகு மறைத்து கடையாக்கி இருந்தனர். பந்தக்காலில்  கடைக்கு வெளியில் ஒரு வெள்ளாடு கட்டிக்கிடந்தது. அதுவும் வெய்யிலுக்குப் பயந்து உள்ளே வந்து ஸ்டூல் ஓரமாய்ப் படுத்துக் கிடந்தது. அதைக் கட்டிப்போட்டிருந்த மரத்தில் கீரைக்கட்டு ஒன்று பாதி தீர்ந்த வாக்கில் தொங்கிக் கொண்டிருந்தது.

வீட்டுக்குள் பிள்ளை அழும் சத்தம் கேட்டது.

“கொஞ்சம் தண்ணி இருந்தா குடுங்களேன். “

வீட்டுக்குள் நுழையும் வாசலில் பிளாஸ்டிக் குடம் இருக்கக்கண்டவள், காப்பியை ஓரமாய் வைத்துவிட்டு நீரைமொண்டாள்.  இரண்டு செம்பு குடித்தும் மூன்றாவதும் தேவைப்பட்டது.

“காப்பியக்குடி, பிள்ளயப் பாத்துட்டு வாரேன் “

காவேரி உள்ளேபோனதும்,, டம்ளரும் கிண்ணமும் நிரம்பி இருந்த காப்பியை எடுத்து சூடு ஆற்றினாள். வாய் வைத்துக் குடித்து பழக்கமில்லை.. தண்ணீர் குடிப்பதைப்போல அண்ணாக்க வாயில் ஊற்றிக்கொண்டாள்.

காப்பியில் நல்ல இனிப்பும் சூடும் இருந்தது.

குடித்து முடித்ததும் கடையை நோட்டம் விட்டாள். பட்டறையின் மேல்ப்பகுதியிலிருந்த சுவரில் பால், டீ, காப்பி = ரூ 5.00, வடை = ரூ 2.50. என சாக்பீசால் எழுதப்பட்டிருந்தது. கூடவே ’தயவுசெய்து கடன் சொல்லாதீர்கள்’ என அன்பொழுகக் கேட்கப்பட்டிருந்தது போதுமணி தனது முந்தானையில் முடிந்திருந்த முடிச்சை அழுத்திப் பார்த்தாள். ஐந்து ரூபாய்க் காசு ”உள்ளேன்”என்றது.

“ ந்தாம்மா, “ இடுப்பில கைக்குழந்தையோடு  வந்த காவேரி, காகிதத்தில் சுற்றிய இரண்டு மாவு வடைகளைத் தந்தாள்.

“ வேணா ம்மா “

“ எம்புட்டுத் தண்ணியக் குடிச்சாலும் வகுறு நெம்பாது.  இதப் பிச்சுப்போடு வகுறு கல்லா இறுகிப்போகும். “

“ எண்ணைப் பண்டம் ஒத்துக்காது “ தவிர்ப்பதற்கான வழிமுறையில் ஒன்றைக் கையாண்டாள்.

காவேரி சிரித்தபோது இடுப்பிலிருந்த கைப்பிள்ளையும் சேர்ந்து சிரித்தது. ”அதெல்லாம் எதுக்களிக்கத் தின்னு செமிக்கமுடியாமத் திரியிறாக பாரு அவகளுக்குத்தேஞ் சேராது. நாமக்கெல்லாம் பசிச்ச வகுறு. பல்லியப் பிடிச்சு மெண்டு தின்னாலும் பசியடங்காது.”

அப்போது கடைக்கு ஏவாரம் வந்தது.

“காவேரியக்கா . .கடுங்காப்பி இருக்கா ? “ ஒடிசலான ஒருபெண் தூக்குவாளியோடு வந்தாள்.

“வாரேன் செல்வி “ என்றபடி வடையை போதுமணியின் கையில் தந்துவிட்டு, பிள்ளையை தரையில் இறக்கிவிட்டு பட்டறையில் ஏறினாள் காவேரி.

“ஆருக்குக் கடுங்காப்பி .? கெழவிக்கா .” கேட்டுக்கொண்டே பாய்லரைத் திருகி வெந்நீர் பிடித்து தூக்குவாளியை  அலசிவிட்டு சீனியைப் போட்டாள்.

“ பால் காப்பின்னா ஒரு டம்ளர்தான ஊத்துவீங்க. கெழவி செம்பு கேசு. ஒருவிசைக்கி அரப்படி காப்பி குடிக்கணும்பா . ”

“கடுங்காப்பின்னாப்ல அஞ்சு ரூவாய்க்கி அரப்படிச் செம்ப ரெப்ப முடியுமாடீ .. சீனியென்னா கெழவி புருசனா எனக்குத் தர்ரான். “ சொல்லிக்கொண்டே தூக்குவாளியை நிரப்பிவிட்டாள். சாகப்போற சீவன் தாகமில்லாம போகட்டும். வாளியைமூடி செல்வியிடம் நீட்டினாள்.”செழும்பா குடிக்கச் சொல்லு.”

வாளியை வாங்கிக்கொண்டு காசை நீட்டியவள், மூடியைத் திறந்து பார்த்தாள். அவளது எண்ண ஓட்டத்தை அறிந்தவளாய், ”பொறுக்கத்தே ஊத்திருக்கேன் “ சொல்லிவிட்டு பட்டறையிலிருந்து கீழிறங்கப் போனாள்.

“அதுக்குத் தான ஓங்கடைக்கு வரோம் “ என்றசெல்வி, “கோச்சுக்காம ஒருசொட்டுப் பால்மட்டும் ஊத்தீருக்கா. கடுங்காப்பியாக் குடுச்சா கெழவிக்கு வவுத்தக் கலக்கும் “

“சொட்டுப்பாலா ? ம்க்கும் “ என செருமிவிட்டு, பால் வட்டகையிலிருந்து ஈயக்கரண்டியில் ஒருகரண்டி பால் மொண்டு ஊற்றிவிட்டாள். இருட்டு வீட்டுக்குள் விளக்கேற்றியது போல வாளிக்குள்ளிருந்த கருப்புக்காப்பி பளிச்சென நிறம் மாறியது.

கடையை விட்டுக் கீழிறங்கிய அந்தப்பெண் செல்வி, “பைப்ல தண்ணியெடுத்து விடுறாங்க போல நீங்க பிடிக்கலியா .? ” தகவலைச் சொன்னாள்.

“ தண்ணி எடுத்துவிட்டாங்களா .? பிள்ளவேற முழிச்சிக்கிடுச்சு “ தனக்குள் சொன்ன காவேரி, பிள்ளையைப் பார்த்தாள் அது போதுமணியின் மடியிலிருந்தது.

“யேம்மா சித்தநேரம் பிள்ளயப் பாத்துக்கறியா ரெண்டுகொடம் தண்ணியப் பிடிச்சிட்டு வந்திர்ரேன் “ போதுமணியின் பதிலை எதிர்பார்க்காமல், வீட்டுக்குள் நுழைந்து பிளாஸ்டிக் குடங்களை எடுத்துவந்தாள்.  அப்போது பிள்ளையுடன் வெளியில் வந்து நின்ற போதுமணி, பிள்ளையை காவேரியிடம் தந்துவிட்டு குடத்தை தானே எடுத்துக்கொண்டாள்.

“கடையையும் பாக்கணுமில்லம்மா. ? நானே போயாரேன் . .!

போதுமணியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட காவேரி, “ரெண்டாவது தெருவில, தெக்கிட்டுப் பாத்து நிக்கிற கொழா . .” ” என அடையாளம் சொன்னாள்.

முதலில் நாலுகுடம் தண்ணி எடுத்தவள், வீட்டுக்குள் போனதும் காலியாயிருந்த  சிமெண்டுத் தொட்டியை நிரப்பினாள். பட்டறைப் பக்கமிருந்த பிளாஸ்டிக் ட்ரம்மையும் தளும்ப தளும்ப நிறைத்தாள். கடைசியாய் எவர்சில்வர் அண்டா மீதமிருந்தது. விடவில்லை. அதையும் நிரப்பிவிட்டே நிமிர்ந்தாள்.

அதற்குள் காவேரி டீ பட்டறையைச் சுத்தம் செய்திருந்தாள்..பால்சட்டியை மாற்றி கண்ணாடி தம்ளர்களைப் பூராவும் கழுவி கவிழ்த்து வைத்தாள். மதியம் இரண்டுமணிக்கு பண்ணைப்பால் வரும். அதற்குள் காலைப்பால் தீர்ந்துபோகும். தீர்ந்தபின் பட்டறையைக் கழுவுவோம் என என்றைக்கும் காவேரி காத்திருக்க மாட்டாள்..

வீட்டுக்கு மதியம் எப்போதும் கஞ்சிச் சோறுதான். காலையிலேயே சுடுகஞ்சியை சேர்த்துக் காய்ச்சி விடுவாள். புருசன் வேலைக்கு எடுத்துக்கொண்டதுபோக மீதி சட்டியிலேயே கிடக்கும். பெரிய பிள்ளைகள் இரண்டும் பள்ளியில் சத்துணவு. அது பிடிக்காத நாளில் வீட்டில் வந்து சாப்பிடுவார்கள். இல்லாவிட்டால் அத்தனை சாப்பாட்டையும் காவேரிதான் காலிசெய்ய வேண்டும். இரவு நேரம் ஏதாவது வெஞ்சனம் செய்து குடும்பம் மொத்தமும் ஒன்றாய் உட்கார்ந்து உண்ணும்.

“சுடுகஞ்சி சாப்பிடுவியா . .” போதுமணியிடம் கேட்டாள் காவேரி.

“ இப்பத்தானம்மா காப்பியும் வடயும் சாப்ட்டேன்.”

“ என்னாருந்தாலும் ஒருவா கஞ்சி குடிச்சமாதிரி வருமா . .? “

மதியக் கஞ்சிப்பாட்டை முடித்துவிட்டால் அடுத்த வேலைக்கு நகர்ந்துவிடலாம். மூணுமணிக்கு அடுப்பில் பால்சட்டியோடு பணியாரச் சட்டியும் ஏற்றிவிடவேண்டும். மூணரை மணிக்கெல்லாம் எல்கேஜி பால்வாடிப் பிள்ளைகள் பணியாரம் கேட்டு வந்துவிடுவார்கள். முன்னெல்லாம் மாலைப் பொழுதிலும் பஜ்ஜி, உளுந்துவடை என எண்ணெய்ப் பலகாரங்கள்தான் தீரும். அப்புறம் மிக்சர், காராச்சேவு போட்டார்கள். இப்போது இனிப்புப் பணியாரம்தான். மாலை ஆறுமணி சிலசமயம் ஏழுமணிவரைகூட விற்றுக்கொண்டே இருக்கும்.  பள்ளிப்பிள்ளையில் ஆரம்பித்து இன்று, டீ குடிக்க வருகிற ஆம்பிளைகளும் ரெண்டு பணியாரம் ஒரு சுக்குமல்லி என சுருக்கமாக முடித்துக்கொள்கிறார்கள். பால்காப்பியும் டீயும் மாலையில் குறைந்து விட்டது.. அதனால் காவேரி மாலைப் பாலை பாதியாகக் குறைத்து விட்டாள்.

போதுமணிக்கு எப்படியாவது அந்தக் கடையில் ஒட்டிக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் உருவாகி விட்டது. ஒரு பொம்பள, அதும் கடக்காரி, இம்புட்டுக்கு பச்சத்தண்ணியா இருக்காளே . . காவேரிமேல் அபரிமிதமான மரியாதை வந்தது போதுமணிக்கு.

டீப்பட்டறையை காவேரி சுத்தப்படுத்தி இருந்தாலும், கடைக்கும் வீட்டுக்கும் பயன்படுத்திய பாத்திர பண்டங்கள், அப்படியே கழுவப்படாமல் மலையாய்க் குவிந்து கிடந்தன. பணியார ஏவாரத்தை முடித்துவிட்டு மொத்தமாகக் கழுவிக் கொள்வது காவேரியின் வழக்கம். பாத்திரம் சேரச் சேர கழுவினால் பாரம் குறையும்தான். ஆனால் கடையில் மாற்று ஆள் இல்லாமல் ஒரேஆள் நிற்பதால் அடுத்தடுத்த வேலைகளைச் செய்வதில் முடியாமல்தான் போகிறது. அதனாலேயே வீடுமுழுதும் கசகசப்பும் நசநசப்பும்தான்.

சேலையை வரிந்து கட்டிக்கொண்டு போதுமணி தேங்காய் நாரும் சாம்பலுமாய் பாத்திரங்களை ஒன்றுதிரட்டிப் போட்டுக் கொண்டு கழுவ உட்கார்ந்து விட்டாள்.

அந்த பொறுப்பான குணம் காவேரிக்கு மன அவஸ்தையினை விளைவித்தது. யார் வீட்டுப் பொம்பளையோ ஒருவாய்ச் சோத்துக்கு இப்படி பம்பரமாய்ச் சுற்றுகிறாளே.. ! “சொல்றதக் கேளுங்மா, பணியார வேலய முடிச்சிட்டு மொத்தமாக் கழுவி எடுத்துக்கறேன். “

“வீடான வீட்ல எச்சப் பாத்தரத்தக் காஞ்சிபோக விடக்குடாதுங்ம்மா . “ போதுமணி தனது மாமியார் தனக்குச் சொன்னதை இங்கே ஒப்பித்தாள்.

“யேவாரக் கடைல அந்த சாஸ்திரமெல்லா பாக்க முடியுமா . .? இப்ப நீங் இத கழுவிப் போட்டாலும், பணியார வேலைய முடிச்சதும் அடுத்தொரு பட்டறையப் போட்டு நான் கழுவித்தான ஆகணும்.? “

“ அதனால பரவால்லம்மா . மூக்குன்னு இருந்தா தும்மலில்லாம இருக்குமா .” வாளியில் தண்ணீரைச் சேமித்துக் கொண்டு மளமளவென கழுவி முடித்தாள்.

“ கழுவின பாத்தரத்த கவுத்தி வக்கெவா, தண்ணிவடிச்சு நிமித்திப் போடவாங்மா ? “ போதுமணியின் கேள்வி காவேரிக்குப் புரியவில்லை. ’கழுவுன பாத்தரத்த தண்ணிவடியக் கவுத்தித்தான வப்பாங்க ! ‘

“வீடான வீட்ல சமையல் ஏனங்கள (பாத்திரங்கள்) ப்பூராம் கழுவிகழுவிக் கவுத்திப் போட்டதால தான் எம்பொழப்பே கவுந்துபோச்சுன்னு எங்கவீட்டுக்காரரு பொலம்புவாரு .” தனது கணவரைப் பற்றிச் சொன்ன நிமிடத்தில், போதுமணிக்கு தனது நாலுகட்டு வீட்டின் வரலாறும், அய்யங்குளத்து இரண்டுகுழி வயலின் சரித்திரமும், விம்மலும் விசும்பலுமாய் வெளிப்பட்டன.

காவேரி பணியாரத்துக்கான மாவைக் கரைப்பதை விட்டுவிட்டு போதுமணியின் அருகே வந்து அவளது தோள்களைப் பற்றிக்கொண்டாள். “ நெனச்சேன். . ! நீங்க பெரிய வீட்டுக்காரவகளா இருப்பீகன்னு. “

“ அது அப்ப., இப்ப, சாதாரணக் கூலிதாங்மா . .” பதறிப்போய் மறுத்தாள்.

“வீடு இருக்கில்ல . ? “

“ இருக்கு. ஜம்பல் நாய்க்கரு கடைல. அடமானமா .”

“ வயல் ? “

குடியிருக்கற வீடே அடமானத்திலன்னா, வயல் என்னாகும் ? ஏலத்தில ஜப்தியாயிருச்சு. “ வழிந்த கண்ணீரை வியர்வையைப் போல புஜத்தால் இழுகித் துடைத்துக் கொண்டாள் போதுமணி.

”வாழை போட்டா நல்ல காசு ம்பாங்க “

“போட்டோம் “

“கரும்பு கைகுடுக்கும் ந்னு சொல்வாங்க . ? “

“ நட்டோமே “

“ பருத்தி ? “

“ சொளசொளையா காய்க்கும்.”

“அப்பறம் ஏம்மா .? “

“வெதைக்கிறப்ப நிக்கிற விலை. அறுக்கறப்ப ஆவியாயிரும். “ காவேரி அறிந்திராத விவசாயத்தின் ஆயிரம் கதைகளைச் சொன்னாள். .

சுடுகஞ்சியை இருவரும் பங்கு போட்டுக் குடித்தார்கள். ”ஒரு சம்சாரிக்கு கொளம்புவச்சு பரிமாற முடியல .” தேங்காய்த் துவையலும், சோற்று வடகமும் பொரித்து வைத்தாள்.

“இன்னிக்கு இந்தக் கஞ்சி கெடச்சதே ஒங்க புண்ணியத்தாலதேன். ” பிள்ளைகள் வெளியூருக்கு வேலைக்கெனப் பிரிந்து போனதையும், வீட்டுக்காரர் ஏதோ ஒரு எஞ்சினியரிடம் கட்டிடத்திற்கு காவலாளியாய் காக்கிச்சட்டை அணிந்துகொண்டு திரிவதையும் பகிர்ந்து கொண்டாள்.

“ வயலுதேங் கைவிட்டுப் போயிருச்சு. குடியிருக்க வீட்டவாச்சும் அடமானத்தில இருந்து திருப்பணும். அந்த வைராக்கியத்தில ஆளுக்கொரு திசைல வேலைக்கிப் போறோம். எனக்கு உள்ளூர்ல வேல பாக்க சங்கட்டமா இருக்கு. டவுன்ல ஆம்பளைக கூட நின்னு பழக்கமில்ல. “ மீதிக்கதையை அழாமல் சொல்லி முடித்தாள் போதுமணி.

காவேரிக்கு கண்கள் குளமாகின.

பணியாரம் தயரானதும் பத்துப்பதினைந்தை ஒரே பொட்டலம்மாய்ச் சுருட்டி பார்சல் கட்டினாள். பையில் நாலுபடி அரிசியும் வீட்டிலிருந்த காய்கறியையும் வைத்து போதுமணியிடம் நீட்டினாள்.

“மன்னிக்கணும் என்வீட்டுல ரேசன் அரிசிதான் இருக்கு. “ பணமாக முப்பது ரூபாயும் கொடுத்தாள்.

“அப்ப, நாளைக்கு நா வரவேணாமா . .? “

கேள்வியும் பதில்களும் அங்கே வார்த்தைகளற்று சுழன்று கொண்டிருந்தன.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 1 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top