கயிற்றில் ஆடும் உயிர்கள்

0
(0)

வெயிலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்பு பதாகை கட்டியது போல வேப்பமரத்து நிழல். கயிறு பட்டறையில் நிலைச் சக்கரத்துக்கு எதிரே ஒரு சின்ன ஸ்டூல் போட்டு சுப்பையா உட்கார்ந்திருந்தார். அந்திச் சூரியனை நார்நாராய்க் கிழித்தது போல் தேங்காய்நார் மஞ்சு பொதியருகே சிதறிக்கிடந்தது. இடுப்பில் வலதுபுறம் சற்று ஒதுங்கியதுபோல் ஒருசிறு மூங்கில் கூடை கட்டி அதில் தேங்காய் நார் மஞ்சுடன் நான்கு பெண்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் சுப்பையாவின் மனைவி வள்ளி, மற்றவர்கள் மணமகாத மகள்கள் சரசு, லட்சுமி, தமிழ்ச்செல்வி.

சுப்பையாவின் எதிரில் உள்ள நிலைச்சக்கரத்துடன் இணைக்கப்பட்டுள்ள நான்கு கொக்கிகளில் பெண்கள் நால்வரும் அளவாய் நார் மஞ்சு எடுத்து பிணைத்ததும் சக்கரத்துக்கு எதிரே பிணைத்தவாறே பின்னால் நகர்ந்தனர். மஞ்சு திரிந்து கொச்சக் கயிறாகிக் கொண்டிருந்தது. பனிரெண்டு பாகம் தூரம் சென்றதும் அங்கிருந்த நகரும் சக்கரக் கொக்கியில் பிணைத்தனர். திரிந்த கொச்சங்களை சரசு உள்ளங்கையில் தூக்கிக் கொடுக்க, லட்சுமி நாலு பிரிகாடி பம்பரக்கட்டையில் இணைத்துக்கொண்டு நகர நகர, சுப்பையா நிலைச்சக்கரத்தை வலிமையாகச் சுழற்ற சுழற்ற கொச்சம் முறுக்கேறியது. நகரும் சக்கரம் முன்வர வர நாலு பிரிக்கயிறு உருவாகிக் கொண்டிருந்தது.

இதேபோல் அடுத்தடுத்து கயிறு தயாரிக்கும் பணி தொடர்ந்தது. சுப்பையாவின் குடும்பம் சிறுவிவசாயக் குடும்பம், புதுப்பட்டியில் ஒரு துண்டு துக்காணி நிலத்தை உழுது விவசாயம் பண்ணி வந்தது. ஓய்ந்த நேரத்தில் விவசாயக் கூலி வேலை பார்த்து குடும்பத்தைப் பாதுகாத்தார்கள். ஒருமகன், நாலு பெண்கள் என பெரிய குடும்பம் சிறு விவசாயத்தை நம்பி தள்ளாடியது. ஆண்டுதோறும் மழை ஆடிய கண்ணாமூச்சி ஆட்டமும், விவசாய இடுபொருட்களின் விலை ஏற்றமும், இதற்கு மீறி விளையும் பொருளுக்கு விலையும் இல்லை என்ற நிலை, விவசாயம் பண்ண பண்ண கடன் வளர்ந்தது.

சுப்பையாவின் மகனும், மூத்த மகள் பார்வதியும், அவள் கணவனும் பட்டணத்துக்கு கட்டட வேலைக்குப் போனார்கள். பெரிய குடும்பத்தை திடீரென வெளியூருக்கு நகர்த்துவது சரியில்லை என்று சுப்பையா உள்ளுருக்குள்ளேயே மாற்றுவழி தேடினார்.

தானிய விவசாயத்தில் நொடித்துப் போன வசதியுள்ளவர்கள் தென்னை, தக்காளி, வாழை, காய்கனி, பூ என விளை பொருட்களை மாற்றிக்கொண்டனர். தென்னையை மையமாக வைத்து தேங்காய் விற்றல், கிடுகு முடைதல், நார்க்கயிறு திரித்தல் என்று வயிறு பிழைக்க ஆரம்பித்தது. முதலில் சுப்பையா தேங்காய் நார் மஞ்சு எடுக்கும் மிஷினில் வேலை பார்த்தார். அது கொஞ்சம் முரட்டு வேலைதான்.

ஒரு மழைக்காலப் பொழுதில் சற்று ஈர மட்டைகளை மஞ்சு மெஷினில் கொடுத்து மஞ்சாக்கிக் கொண்டிருந்தார். கீழே சிந்தியிருந்த ஈர மட்டையில் கால் வைத்ததில் வழுக்கி ஓடிக்கொண்டிருந்த மெஷினில் இடதுகால் சிக்கி தொடைப் பகுதி நசுங்கி துண்டாகிப் போனது. மெஷின் முதலாளி பெரிசா நஷ்ட ஈடு எதுவும் தரவில்லை . “அவனவன் தலை விதி” என்று ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.

சுப்பையாவை வள்ளி அரசு ஆஸ்பத்திரியில் வைத்துப் பார்த்துக்கொண்டாள். மகள்கள் கீற்று முடைவதில் கிடைக்கும் கூலியை ஆஸ்பத்திரி செலவுக்கும், வயிற்றுத் தேவைகளுக்குமாய் செலவிட்டார்கள். பட்டணத்தில் வேலை பார்த்த மகள் மருமகன் வந்து பார்த்து ஆறுதல் சொல்லத் தான் முடிந்தது. பணம் தந்து உதவ முடியவில்லை .

சுப்பையா கால் புண் ஆறி, தேறி வந்தார், தோள்கட்டை ஊன்றி நடக்கப் பழகினார். இந்த நேரத்தில்தான் கும்பகோணம் பள்ளிகூட தீ விபத்து நடந்தது. மாநிலமெங்கும் கீற்றுக் கொட்ட கைகள் தடை செய்யப்பட்டன. முடைந்த கீற்றுக்கள் முடங்கிப் போகவும் கூலி கொடுக்க வகையில்லாமல் போனது.

அப்புறம் வயிறு நனையணுமே? இருமகள்களும் சேர்ந்து குடும்பமே கயிற்றுப் பட்டறையில் திரிபடுகிறார்கள்.

குளிர்ந்த அடர்ந்த மரநிழல்தான். சுப்பையா சக்கரம் சுழற்ற சுழற்ற வேர்வை சரம்சரமாய் காட்டருவியாய் வழிந்தது. இடது புறங்கையால் வழித்துவிட்டுக்கொண்டே வலது கையில் சக்கரம் சுழற்றினார். நிற்கக்கூட நேரமில்லாமல் மக்கள்மார் மஞ்சு கொச்சத்தை திரித்து பின் நகர்ந்துகொண்டிருந்தனர். அன்றைக்கு சனிக்கிழமை. கயிறு கட்டுகள் கூடக்கூட மறுநாள் ஞாயிற்றுக்கிழமை துட்டு கூடக் கிடைக்கும். ஓயாமல் உழைத்துக்கொண்டிருந்தனர். ஒரு பாகம் கயிறு முடிந்து கட்டில் சேர்க்கும் இடைவெளியில் சுப்பையா வெற்றிலை போட்டுக்கொண்டார். மேலும் வியர்வை பொங்கியது.

“தமிழு… கொஞ்சம் தண்ணீர் கொண்டாம்மா.. நெஞ்சு அடைச்சுகிட்டு வருது”

“இந்தாப்பா தண்ணி, காலையில இருந்து நான் கவனிச்சுக்கிட்டு இருக்கேன். ஓம் முஞ்சியே தெளிச்சி இல்லாம இருக்குப்பா, என்னப்பா விவரம்? சும்ம சொல்லுப்பா!” தமிழ் செல்விச் வற்புறுத்தினாள்.

“என்னம்மா செய்யிறது. நாம பார்க்கிற தொழிலுக் கெல்லாம் ஏதாவது இடைஞ்சல் வந்துகிட்டிருக்குது. மாங்கு மாங்குன்னு வேலை பார்க்கிறோம் முன்னேற வழியைக் காணோம். நம்ம ஊரு கயிறு உலகமெல்லாம் போகப் போகுதுன்னாங்க. இப்ப ஊர் எல்லையைக்கூடத் தாண்டக் காணோம். முன்னால தென்னங்கயிறு வாங்கின பெரிய கப்பல், மீன்பிடிக் கப்பல்காரங்கக்கூட இப்போ கலர்கலரா நைலான் கயிறுதான் வாங்கறாங்கலாம். நம்ம நாட்டுப்படகு, கட்டுமரக்காரங்கதான் நம்ம தென்னங் கயித்த பயன்படுத் தறாங்களாம். அதுவும் போன வருஷம் சுனாமி வந்ததுக்கப் புறம் நிலைமை படுமோசமாப் போச்சு. மாசத்தில் அமாவாசை, பவுர்ணமி ஒட்டி முன்னும்பின்னும் நாலு நாலு எட்டு நாள் படகுகளும், கட்டுமரங்களும் கடலுக்குள்ளேயே இறங்குற தில்லையாம். எந்த நேரத்தில் எப்படி சுனாமி வருமோ, புயல் வருமோங்கிற பயம். கடலுக்குப் போனாத்தானே கரை ஏற, இறங்கன்னு கயிறு வேணும்? படகுக எல்லாம் கட்டாந் தரையில் நிறுத்திக் கிடைக்கைல, கயித்துக்கு ஏது வேலை?”

“அப்பா இதெல்லாம் நினைச்சு கவலைப்பட்டுகிட்டே இருந்தா வேலை ஓடாது. மனுசங்க வாழ முடியாது. எல்லாம் எப்பப் பார்த்தாலும் ஒரே மாதிரியா நடக்காது… நிலைமை மாறும். வாங்க நடக்கிறது நடக்கட்டும் நாம் முடிஞ்சவரை உழைச்சுப் பார்ப்போம்” என்றாள் தமிழ்.

“அட, வாங்க எல்லாத்துக்கும் ஆனது நமக்கும்! வெட்டியா புலம்பி ஜீவனக் கெடுத்துக்காதீங்க..” என்றாள் வள்ளி.

நான்கு மணி வரைக்கும் வேலை ஓடியது. சைக்கிளில் தம் டீக்காரர் வந்தார். கேட்பவருக்கு எல்லாம் வடையும் டீயும் கொடுத்தார். டீ இடைவேளையில் அப்பா சொன்னார், “இந்த மழைக்காலம் முடியற வரை பார்ப்போம். ஒண்ணும் சரியா வரலைன்னா தை மாசம் வாக்கில பட்டணத்துப் பக்கமாவது போவோம்! கட்டட வேலை செஞ்சாவது பிள்ளை களை, கரை சேர்ப்போம்! கயித்து மேலேயே அந்தரத்தில எத்தனை நாள் நடக்கிறது” வெற்றிலை பாக்கு மடித்து வைத்திருந்த காகிதத்தை கீழே போட்டார். ரோட்டோரமா மேய்ந்த மாடு அந்த பேப்பரை தின்ன வந்தது.

“அடக்கழுத அங்கிட்டு போகுமா, மஞ்சுக்குள்ளாற வந்து நிக்கிதே,” வைதபடி மாட்டை விரட்ட கை ஓங்கினாள் வள்ளி. அடச்சும்மா இரும்மா, அதாவது வாஞ்சையா நம்ம கிட்ட வந்து நிக்கிது. புல்பூண்டுக்கு வழி இல்லாம காயிதம் தின்னுட்டுப் போகட்டும் விடு!” தமிழ்ச் செல்வி சொன்னாள்.

மாடு பேப்பரை நாவால் நக்கி தின்னு சாணிபோட்டபடி நகர்ந்தது.

“அடக்கழுத, மஞ்சுமேல சாணிபோடுறதைப் பாரு! ஓடு அங்கிட்டு!” அம்மா விரட்டினாள்.

சாணி விழுந்த மஞ்சை தனியாக ஒதுக்கி தள்ளிவிட்டுட்டு, கூடையில் மஞ்சு அள்ளி வேலையைத் தொடர்ந்தாள் அம்மா. சனிக்கிழமை ஐந்து மணிக்குள்ளாக எத்தனை கட்டு கூட்ட முடியுமோ அத்தனை காசுகூட வரலாம். சக்கரங்கள் சுழன்றன.

திங்கள்கிழமை விடிஞ்சு ஒரு சாண்பொழுது ஓடியிருந்தது. வீட்டு முன்னால் விருந்தாளிகள் கூட்டம், பெட்டி துணிமணி களோடு! சுப்பையாவுக்கு, மகன், மகள், மருமகள், பேரப்பிள்ளை என கூட்டமாக வந்திருப்பது மகிழ்ச்சிதான்! பெட்டி துணிமணி சாமான் செட்டோட வந்திருப்பதை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ச்சி! வெளியே காட்டாமல் சிரித்துப் பேசினார். விவரம் கேட்டார்.

மகன் சொன்னான், “ஆமாம்பா பட்டணத்தில் கட்டட வேலைக்கு மணல் கிடைக்கலை! இரும்பு சிமெண்ட் விலை நாளுக்கு நாள் ஏறிக்கிட்டே போகுது. செங்கல் கிடைக்கிறதும் டிமாண்ட்! கடன் வாங்கி கட்டடம் கட்றவங்க எல்லாம் அழுது புலம்பிக்கிட்டே இருக்காங்க! வேலை இல்லாம டவுன்ல எத்தனை நாள் சும்மா இருக்கிறது. அதான் ஊருப்பக்கமாவது போய் ஏதாவது கூலி வேலை பார்க்கலாம்னு வந்துட்டோம்!”

அப்பாவுக்கு தலையில் இடி இறங்கினது மாதிரி இருந்தது. கண்ணில் உயிர்க் களை இல்லாமல் ஏகாந்தமாய்ப் பார்த்தார். பேரப்பிள்ளை ‘தாத்தா’ன்னு ஓடி வந்து மடியில் உட்கார்ந்தது. கொஞ்சம் ஜீவன் மீண்டு வந்தது போல் அசைந்தார்.

திகிலடைந்து நிற்கும் வள்ளியைப் பார்த்தார். எல்லாருக்கும் பொங்குவதற்கு அரிசி இருக்கா என்று ஜாடையில் கேட்டார். “இருக்கிறதை வச்சு சமாளிக்கலாம்,” என்ற பதில் ஜாடையி லேயே வந்தது

லட்சுமி எல்லோருக்கும் டீ போட அடுப்பு பற்ற வைக்க வந்தவள், வறட்டிதேடினாள். சாணி காய்ந்த மஞ்சு இருந்தது. அதை எடுத்து பற்ற வைத்தாள். தீ சுறுசுறுன்னு பற்றி மடமடவென எரிந்தது. யோசனை பளிச்சிட்டது. கழிவு மஞ்சு நாரை சாணி கலந்து வரட்டி தட்டினால் நல்ல எரிபொருள் கிடைக்குதே! சந்தோஷத் துள்ளலோடு அப்பாவிடத் சொன்னாள். “சின்ன சின்ன டவுன்களில் இந்த மஞ்சு விராட்டியை விற்றால் நல்ல எரிபொருளாச்சு. கழிவை காசாக்கிய தொழிலும் ஆச்சு!”

“ஆமாம் சாணி வித்து தொழில் பன்ற அளவுக்கு சாணிக்கு எங்கே போறது? மாடு கன்றுகள் குறைஞ்சு போன காலத்தில்! சரி வா பிழைக்க மாற்று வழி இல்லாமலா போகும்?” என்ற படி அப்பா வெற்றிலை மென்றார். மகன் சொன்னான் “ஏப்பா மஞ்சுக் கழிவை மக்க வச்சு உரமாக்கினா என்ன?”

யோசனைகள் பலபல பட்டாம்பூச்சிகளாகப் பறந்தன. வசந்த காலத்தின் முன்னறிவிப்புகள் மேகங்களில் சுற்றி நின்ற மரங்களில் செடிகளில் தெரிந்தன.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top