கதையுதிர் காலம்

0
(0)

தாத்தாவுடன் பிறந்தவர்கள் நான்கு பேர்கள். இரண்டு ஆண்கள் இரண்டு பெண்கள். அப்பாவுக்குத் திருமணமாகுமுன்பே  தாத்தாவின் தங்கையும் தம்பியும் இறந்துவிட்டார்கள்.  நான் சிறுவனாக இருந்தபோது  தாத்தாவுக்கு கண் தெரியாது.  தாத்தாவின் இன்னொரு தங்கையான பொன்னம்மாபாட்டி கணவர் இறந்த பிறகு எங்கள் வீட்டில்தான் இருந்தார்.அந்தப்பாட்டிக்கு வாரிசுகள் இல்லை. அதகால்தான்என்னவோ என்மீது அவளுக்குக் கொள்ளைப் பிரியம். என்னை அரவணைத்ததும் எங்கு சென்றாலும் அழைத்துச் செல்வதும் அவர்தான். என்னைக் கதைகளின் உலகுக்குக் கைப்பிடித்து அழைத்துச் சென்ற முதல் ஆசான்பொன்னம்மா பாட்டிதான்.

 

நான் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது  விடுமுறை நாளில் பாட்டியின் புகுந்த வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார். ஆண்டிபட்டி பக்கம் வைகை நதியின் தென்கரையில் நடுக்கோட்டை கிராமம்தான் எனது முதல் வெளியூர்ப் பயணம். ஆண்டிபட்டியில் இறங்கி அங்கிருந்து நடுக்கோட்டைக்கு சந்தை வண்டியில் தான் பயணம் செய்தேன். நள்ளிரவில் நான் சென்றபோது அந்த  நேரத்திலும் சுடச்சுடக் கோழிக் குழம்பும் சோறும் போட்டார்கள். பத்து நாட்கள் அங்கிருந்துவிட்டு  சொந்தவூர் திரும்பினேன்.

 

சின்ன வயது முழுவதும் பொன்னம்மா பாட்டியுடன்தான் கழிந்தது. தனக்குத் தெரிந்த எல்லாக் கதைகளையும் எனக்குச் சொல்வார். இரவு, பகல் என்று எப்போது கேட்டாலும் கதைகள் சொல்ல அவள் தயங்கியதெ இல்லை. ஏழு கன்னிமார்களின் கதையும்,  அப்பா அம்மாவையிழந்த அண்ணன் தங்கை இருவரும் காட்டில் கீரைபுடுங்கி மண்சட்டியில் சமைத்தபோது, கடவுள் அருளால் மண்சட்டி பொன்சட்டியான கதையும், அழகான பெண்களையெல்லாம் அந்தப்புரத்துக்குத் தூக்கிச்செல்லும் ராஜாவின் கதையும், கண்டமனூர் ஜமீன் அழிந்த கதையும் என சொல்லிக் கொண்டே இருப்பாள். அவள் சொல்லும் கதைகளை மனதிற்குள் சித்திரமாக்கிக் கொண்டே கேட்டுக்கொண்டிருப்பேன்.

 

பாட்டி சொன்ன கதைகள் பல என்னிடமிருந்து மறைந்து விட்டன. பாட்டியின் கதைகள் எல்லாமே ஏமாற்றப்பட்ட பெண்களின் கதைகளாகவே இருந்திருப்பது இப்போது புரிகிறது. அந்த வயதில் கதை கேட்கும் ஆவலில் பாட்டியின் அருகில் படுத்துக்கொண்டு கதைகேட்டுக் கொண்டே உறங்கியது மட்டுமே இன்னும் நீங்காமலிருக்கிறது.

 

பாட்டிக்கென்று தனியாக எந்தவிதமான ஆசாபாசங்களுமில்லை. விடுமுறை நாட்களில் தோட்டத்திற்கு கூட்டிச்செல்வார். பூவரசமரத்தடியில் என்னை உட்கார வைத்து விட்டு, கீரை பறித்துக் கொண்டு வருவார். தின்பதற்கு கொய்யாப்பழம் புடுங்கி்த் தருவார். வாழையிலைகளை வெட்டி சின்னதாய் ஒரு கட்டு கட்டுவார். வீடு திரும்பும் வழியிலுள்ள செட்டியார்கடையில்  அதை விற்று, அதில் கிடைக்கும் காசில் தனக்குத் தேவையான வெற்றிலைப்பாக்கும், எனக்கு  கிழங்கு மசாலாவும் வாங்குவார்.

 

நான் ஆறாம் வகுப்பு படிக்க பக்கத்தூர் பள்ளிக்கூடம் போகத்தொடங்கிய பிறகு பாட்டியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. ஒரு சாயங்கால நேரத்தில் பாட்டி இறந்துபோனார். பாட்டிக்கான இறுதி கடமைகளை யார் செய்வது என்ற பிரச்சினை வந்தபோது தாத்தாவே செய்தார். கண் தெரியாத தாத்தாவை சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று, பாட்டியின் சவக்குழியில் தாத்தா மண்ணைத் தள்ளிய பிறகு தாத்தாவை வீட்டுக்கு அழைத்து வந்தேன். நான் பார்த்த முதல் சுடுகாட்டு நிகழ்ச்சி அதுதான். பாட்டியைபுதை குழியில் இறக்கியபோது, அவளோடு சேர்த்து அவளது கதைகளும் புதைக்கப்படுவது போல அப்போது தோன்றியது.

 

பல நாட்கள் ஒருவித வெறுமையை நான் உணர்ந்தேன். இரவுகளில் கதை கேட்காமல் தூக்கமே வராது. அரையிருட்டில் விட்டத்தைப் பார்த்துக்கொண்டே படுத்திருப்பேன்.

 

வளர்ந்து ஊருக்குள் சுற்றத்தொடங்கிய பிறகு பாட்டியின் புகைப்படத்தைத் தேடிப் பார்த்தேன்….. கிடைக்கவில்லை. ஒல்லியான….. கருத்த…. கூர்மையான முகத்தோடு பல்லில்லாத பொக்கைவாயை உடைய முகம்தான் இன்றும் என் மனக்கண்ணில் நிழலாடுகிறது.

 

பொன்னம்மா பாட்டியின் மறைவுக்குப் பிறகு நான் அதிக நாட்கள் திரிந்தது என் தாத்தாவுடன்தான். கொஞ்ச நாட்களிலேயே பாட்டியின் இடத்தைத்“ தாத்தா நிரப்பத் தொடங்கினார். தாத்தாவுக்கு கண் தெரியாவிட்டாலும் செவிவழிச் செய்திகளைக் கேட்டு, நல்லது கெட்டதை ஆராயும் திறன் இருந்தது. ஊரில் நடக்கும் நல்லது கெட்டதுக்கெல்லாம் தாத்தாவை அழைப்பார்கள்.  தாத்தாவோடு போவேன். அங்கு பேசும் விசயங்கள்  புரியாத போதும் நான் ஆர்வத்தோடு செல்லக் காரணம் தாத்தாவை உபசரிக்கும் விதம்தான். வடை, காபி, இட்லி, கறியும் சோறும் என வகைவகையாய் தின்பதற்கு பதார்த்தங்கள் கிடைக்கும்.

 

தாத்தா நல்ல உயரம். காலில் செருப்பு போடமாட்டார். வெள்ளை ஜிப்பாவும் வாயில் வேட்டியும்தான் கட்டுவார். வேட்டியிலும் சேராமல் துண்டிலும் சேராமல் நீளமான அங்கவஸ்திரத்தைத் தோளில் போட்டுக் கொள்வார். தாத்தாவுக்குப் பல்லில்லை. பல் இருக்கும் வரையில் வெற்றிலை போட்டதாகச் சொல்வார்கள். பல் போனபின் புகையி்லைதான் போடுவார். அதுவும் திண்டுக்கல் அங்குவிலாஸ் புகையி்லை என்றால் ரெம்பப் பிரியத்தோடு போடுவார். வாழைமட்டையில் கட்டி கொடுக்கப்படும் வாசனை நிறைந்த அங்குவிலாஸ் புகையிலைப் போடுவதை கௌரவமாக நினைத்த காலமது. புகையிலைத்தூளை வாயில் ஒதுக்கிக்கொண்டு, இடது கைவிரலைகளை உதடுகளுக்கு மத்தியில் வைத்து ‘புளுச்… புளுச்…‘ என்று எச்சில் துப்பத்துப்ப செம்மண் தரையெல்லாம் கருப்பாய் மாறிக்கிடக்கும். கிராமத்தில் எல்லோரும் கூடியிருக்கும் சபைகளில் தாத்தா தனது  கனத்த குரலில் பேசினால் சபை அமைதி காக்கும். ஊர்க் கூட்டத்தில் தாத்தா பேச்சுக்கு மறுபேச்சு இருக்காது.

 

தாத்தாவைத் தேடி நிறைய பேர் வந்து கொண்டிருப்பார்கள். அப்படி வருபவர்களில் ராமலிங்கம் வாத்தியார் முதன்மையானவர். அவர்வந்தாலே தாத்தாவிடம்ஒருவித பரபரப்புதொற்றிக் கொள்ளும். அவர் வரும்போது தாத்தாவுக்குப் பிடித்த பூந்தி வாங்கிக்கொண்டு வருவார். ராமலிங்க வாத்தியாரும் தாத்தாவும் மணிக்கணக்கில் பேசுவார்கள். அரசியலையும் நாட்டு நடப்புகளையும்  விலாவாரியாகப் பேசுவார்கள். தாத்தா காங்கிரஸ்காரர். ராமலிங்கம் வாத்தியார் தி.மு.க.காரர். ரெண்டு பேரும் சண்டை போடுவதுபோல பேசுவார்கள். கடைசியில் சிரித்துக்கொண்டே பேசுவார்கள். அவர்கள் அரசியல் பேசுவது எனக்குப் புரியாதபோதும் ஏதோவொரு மயக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருப்பேன்.

தாத்தாவும் சின்னவெள்ளைத்தாத்தாவும் எப்போது பேசினாலும் வேட்டைக்குப்போன கதையைத்தான் பேசுவார்கள். மலைகளைப் பற்றியும், மலைகளில் வாழும் மிருகங்களின் பெயர்களைப் பற்றியும் இவர்களின் உரையாடல் மூலமாகவேதான் தெரிந்துகொண்டேன். கனவுகளில் தனியாக அந்த மிருகங்களுடன்  சன்டைபோட்டிருப்பேன். தாத்தாவோடு  பேசுவதற்காக வருகிற எல்லோருமே கதைசொல்லிகளாகவே இருந்தார்கள். சாய்வு நாற்காலியும், பனைநாரில் தயாரித்த கட்டிலும் வீட்டு முற்றமும் தாத்தாவின் அடையாளம்.அவரிடம் பேசுவதற்கான வரும் எல்லோருமே கதை சொல்லிகளாகவே இருந்தார்கள்.

 

புரட்டாசி மாதத்தில்  மழை பெய்யத் தாமதமானால் ஊரே ஒன்றுகூடி பாரதம் படிப்பார்கள். பாரதம் படிப்பதில் பாலு வாத்தியார் திறமையானவர். மகாபாரதத்தின் கதைகளை ராகம்போட்டு வாசிப்பார்.  அவர் வாசித்து முடிக்கவும் ராமலிங்க வாத்தியாரும் தாத்தாவும் விளக்கம் சொல்வார்கள். தாத்தாவுக்கு மகாபாரத்தில் தருமன் பாத்திரம் ரொம்பவும் பிடிக்கும். சித்தப்பாவுக்கும் ஊரில் பலருக்கும் தருமர் என்றே தாத்தா பெயர்வைத்தார்.

 

தொன்னூறு வயதைக் கடந்த பிறகு தாத்தாவின் நடமாட்டம் குறைந்து, நிலை தடுமாறத் தொடங்கினார். ஒரு வருடம் படுத்த படுக்கையில் பீயும்மூத்திரமுமாய் இருந்தவரை,அவரு மனைவியான ராமாயி பாட்டி பார்த்துக் கொண்டார். தாத்தாவின் சாவை வெங்கடேஷ் டாக்டர்தான் உறுதிபடுத்தினார். “எப்படியும் இன்னக்கி ராத்திரி அய்யா போயிருவாரு” என்று அவர் சொன்னபிறகு, தூரத்து ஊர்களுக்கெல்லாம் ஆள் அனுப்பினார்கள்.

 

இப்போது போல அப்போதெல்லாம் போன் வசதியில்லை. ஊருக்கு ஒருத்தர் ரெண்டுபேரிடம் மட்டும்தான் போன் இருக்கும். சொந்தபந்தங்களில் யார் வீட்டில் இதுபோல அவசர காரியமென்றாலும் சித்தப்பாதான் போன் போடுவார். எங்கள் வீட்டில் போனில்லை. ஊரில் உள்ள ஏ.எம்.ஏ. ஹோட்டலிலிருந்தும், வெங்கடேஷ் டாக்டர்  ஆஸ்பத்திரியிலிருந்தும் சித்தப்பா போன் பேசுவார்.

 

தாத்தாவின் மரணத்தை ஊரே கொண்டாடியது. அன்று இரவு முழுவதும் பாலு வாத்தியார் பாரதம் படித்தார்.  ஒவ்வொரு சாதியிலிருந்தும் மாலை, கோடி, நிரை மரக்கால் என்று நாள்முழுவதும் மக்கள் வந்துகொண்டிருந்தார்கள். தாத்தாவுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சித்தப்பா செய்தார். ராமாயி பாட்டி கதறி அழவெல்லாம் இல்லை. ஆனால், கொஞ்சநாட்களுக்கு யாரிடமும் பேசாமலேயே இருந்தார். ஒரு இடைவெளிக்குப்பிறகு என்னிடம்தான் பேசினார்.

 

எனது தந்தைவழிப் பாட்டியைப்பற்றி சொல்வதற்கு ஏராளமான விசயங்கள் உள்ளன.  பாட்டிக்கு படிப்பனுபவமில்லை. தாத்தாவின் நிழலிலேயே வாழ்ந்தவள். தாத்தாவின் மறைவுக்குப் பிறகு பாட்டி யார் வீட்டில் இருப்பது என்ற கேள்வி வந்தபோது இரண்டு வீட்டிலும் மாறிமாறி வாழ்ந்து  கொள்ளட்டும் என்று அப்பாவும் சித்தப்பாவும் சொல்லிவிட்டார்கள்.

 

தாத்தாவுக்குப்பின் ராமாயி பாட்டி என்கதை சொல்லியாகமாறி இருந்தார். பொன்னம்மா பாட்டியும், தாத்தாவும் சொன்ன கதைகள் வேறுவடிவங்களில் ராமாயி பாட்டியிடமிருந்து வந்தது.  தூங்குவதற்கு முன்பு பாட்டி கதை சொல்லும். பாட்டி கதைகளில் பெரும்பாலும் நடந்த சம்பவங்கள்தான் இடம்பெறும். ஊா் எரிந்த சம்பவம் நிச்சயம் இடம்பெறும்.  பலமுறை நாங்கள் கேட்டிருந்தாலும் பாட்டி மீண்டும் மீண்டும் சொல்லும்போது முன்பு கேட்டிராத புதிய செய்திகள் சோ்ந்துகொள்ளும். திருமணமாகி வந்த புதிதில் முதன்முதலாகச் சமையல் செய்ததையும், அதில் அளவுக்கு அதிகமாக காரம் இருந்ததையும், எதையும் பொருட்படுத்தாமல் தாத்தா சாப்பிட்டதையும் பாட்டி பெருமையோடு சொல்லும் அழகை நாங்கள் வெகுவாக ரசித்ததுண்டு.

 

தாத்தாவின் தோற்றத்தைப் பற்றியும், அவரது ஆளுமையைப் பற்றியும் இப்போதும்கூட நிறைய புனைகதைகளை ஊரில் சொல்லுவார்கள். பாட்டியின் கதைகளில் தாத்தாவுக்கு இருந்த ‘தொடுப்பு‘கள் பற்றிய செய்தியும் வரும்.  திருமணத்திற்கு முன்பே தாத்தா கொஞ்சமல்ல, நிறைய ‘முன் பின்‘ இருந்தவா்.  திருமணத்திற்கும் பின்னும் அது தொடா்ந்திருக்கிறது.  பாட்டி பிறந்த ஊரில்கூட தாத்தா  தொடுப்பு வைத்திருந்ததைப் பற்றியும் சொல்லுவார். தாத்தா உயிரோடிருந்த காலத்தில் வாய் திறக்காத பாட்டிதானா இப்பிடிப் பேசுகிறார் என எண்ணத் தோன்றும். வாழ்நாள் முழுதும் ஊர் நாட்டாமை செய்துகொண்டே சொத்தையெல்லாம் அழித்த பெருமை(?) பற்றி பாட்டி சொல்லிக் கொண்டேஇருப்பார். ஊரை ஒட்டியுள்ள பல நிலங்கள் எங்களுக்குச் சொந்தமானவை. எல்லாத்தையும் கால் விலைக்கும் அரை விலைக்கும் விற்றுத் தீர்த்தவர் தாத்தா என்று பாட்டி அடிக்கடி சொல்வார். என் அப்பாவின் வாலிபம்தான் குடும்பத்தை மீண்டும் தலைநிமிரச் செய்தது என்று பாட்டி சொல்வார்.

 

இதுவெல்லாம் பாட்டியின் விட்டுக்கொடுக்கும் தன்மையா…? அல்லது தாத்தாவின் ‘ஆம்பள சிங்கம்‘ பெருமையா…? தாத்தாவால் தான் பட்ட துன்பத்தின் பகிர்வா என்று எதையுமே பகுத்துப்பார்க்க முடியாத வயதில் நாங்கள் சும்மா கேட்டுக்கொண்டே இருந்ததுண்டு. . பாட்டி தன் கடைசி காலத்திலும் தாத்தாவைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். அந்தப் பெருமை(?)யும் தாத்தாவைச் சாரும்..

 

பணிகள் செய்வது பாட்டிக்குச் சலிக்காத ஒன்று.  நாங்கள் இருந்த வீட்டை மாற்றி, சிமெண்ட் ஓடு போடும்போது பாட்டிதான் நிறைய வேலைகள் செய்தார்.  சித்தப்பா வீடு கட்டிய காலத்தில் வீ்ட்டை  பார்த்துக் கொள்வதும், சுவா்களுக்கு தண்ணீா் ஊற்றுவதும் பாட்டிதான்.

 

அறுவடை காலத்தில் கிடக்கும் நெல்லைப் பாதுகாப்பது, கருக்கா நெல்லை வீணாக்காமல் ஒரு சாக்குப் பையில் அள்ளிக்கொண்டு வந்து அவித்து, அரைத்து, அதில் கிடைக்கும் சொற்ப அரிசியைக்கூட பாட்டியால் வீணாக்க மனம் வராது.  மீந்துபோகும் குழம்பு, ரசம் போன்றவற்றைக்கூட பாட்டி கீழே ஊற்றியதில்லை.

 

அவ்வப்போது வெற்றிலை போடுவது மட்டுமே பாட்டியின் வழக்கம். பள்ளிப் படிப்பை முடித்து விட்டு ஆளுக்கொரு வேலையில் அமா்ந்த பின்பு, பாட்டி  எங்களிடம் தன்னுடைய சின்னச்சின்ன செலவுகளுக்கு காசு வாங்கும் காலமும் வந்தது.

 

நான் எனது சித்தப்பாவோடு சோ்ந்து ஏலச்சீட்டு நடத்திக் கொண்டிருந்தபோது  வசூல் எல்லாம் முடித்துவிட்டு இரவு சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வரும்நேரம் வரை பாட்டி காத்திருப்பார்.  நான் கொடுக்கும் ஒரு ரூபாய்தான் பாட்டியின் வெற்றிலைச் செலவு.

 

பாட்டி தனது தொண்ணூற்று நான்கு வயது வரையில் வாழ்ந்தார். பாட்டி தாத்தாவைப் போல நீண்ட நாட்கள் படுத்தபடுக்கையாய் கிடக்கவில்லை. இரண்டு நாட்கள் மோசமான நிலையில் இருந்தார். மூன்றாம்நாள் புத்தி பேதலி்த்து பேசத் தொடங்கினார். தான் மேலோகம் சென்றதாகவும், உனக்கு இன்னும் நாட்கள் இருக்கு திரும்பிப் போ என்று தாத்தா சொல்லி அனுப்பியதாகவும் பேசினார். எல்லோரும்  வந்த வந்து பார்த்துச் சென்றார்கள்… நான்காம் நாள் சுயநினைவை இழந்தவர் அன்று இரவே இறந்துபோனார். பாட்டி மறைவின்போது என் அப்பாவுக்கு 65 வயது. தனது முதிய வயதினில்  தாய்க்குச் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்தார்.

 

பாட்டிகளையும், தாத்தாக்களையும் இழந்துவிட்டு அப்பா அம்மாவோடு வாழ்ந்து கொண்டிருந்த காலங்களில் கதை கேட்கவோ, அவர்களோடு உட்கார்ந்து பேசவோ நேரமில்லா வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தோம்.. அப்பாவும் அம்மாவும் அடுத்தடுத்து மறைந்த பிறகு பெரியோர் இல்லா முற்றங்களாய் வீடுகள் வெறிச்சோடிக் கிடந்தன. பேங்க் லோன் போட்டு வீடு கட்டும் என் பிள்ளைகளின் வீடுகளில் முற்றங்களும் திண்ணைகளும் இருக்க வேண்டிய இடங்களுக்குப் பதிலாக அட்டாச்சுடு பாத்ரூம் அறைகள் உருவாகிக்கொண்டிருக்கின்றன.

(காமதேனு வாரஇதழ் அக்டோபர்-2019 இதழில்வெளியானது)

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top