கண்ணாடியுள் கசிந்துருகும் இசையின் வர்ணங்கள்

0
(0)

அது ஒரு ஆச்சரியமான இரவு என்றுதான் சொல்ல வேண்டும். அந்த இரவு வருவதற்கு முன்பே தெரிந்து விட்டது. இன்று வரப்போகும் அபூர்வ இரவுக்கான அறிகுறிகள். மாலையிலிருந்தே இதமான ஒரு இனிமையான காற்று வீசியது. சாதரண காற்று என்றுதான் முதலில் நினைத்தான்.  நேரம் ஆக ஆக காற்றின் சப்தமே ஒரு இசையாக மாறியது. அதுவும் மூங்கில் காற்றின் மேக நடனத்தில் தவழும் விநோத இசையாகவே மாறியது.  அந்த விநோத இசை எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை. காற்றுதான் எப்பேற்பட்ட இசையையும் எங்கிருந்தெல்லாமோ தன் வானில் தவழ்ந்து வரும் நட்சத்திர ஒளிக்கீற்றின் வழியே கொண்டு வந்து விடுமே. ஆனால், அப்படியெல்லாம்கூட யூகிக்க முடியாத வகையில் இசைத்தது. இப்படியொரு இசை, கண்ணாடிக்குள்ளிருந்து வந்திருக்கிறது என்றால் ஆச்சரியமானதாக இருக்கிறது.

இசைக்கும் கண்ணாடிகள் உலகில் இருக்கவா செய்கிறது… அப்படியென்றாலும் இவைகளுள் எந்தக் கண்ணாடிதான் அப்படி இசைக்கிறது என்பதை கண்டறிவது கடினம்தான். ஒன்றும் புரியவில்லையே. தாத்தா கூட இப்படியொரு இசையைப் பற்றி சொல்லவில்லையே.  ஒருவேளை, எந்த விநோதங்களையும் தத்ரூபவமாகச் சொல்லும் தாத்தாவுக்கும் கண்ணாடிகள் இசைப்பது பற்றி தெரிந்திருக்காதோ…என்னவோ… தாத்தாவும்தான் கண்ணாடிகள் பற்றி தனக்கு முழுமையாகத் தெரியும் என்று ஒருபோதும் சொன்னதில்லையே. ஆனால், கண்ணாடிகளுக்கு ஒருவேளை தெரிந்திருக்கலாமோ……. கண்ணாடிகளுக்கு தெரியாத விசயம் என்று ஒன்று இருக்கவா போகிறது. ஒவ்வொரு மணித்துளியிலும் நிகழ்வுகளின் சாட்சியங்களாய், ஏதோ ஒரு உருவில் கண்ணாடிகள்தானே இருந்து வருகிறது.

ஆனால், கண்ணாடிக்குள்ளிருந்து வரும் அந்த இசை, கண்ணாடிகளுக்கே தெரியாமல் போனது ஆச்சரியம் தான்.  ஏதோ ஒருகாலத்தில் அப்படியொரு இசை பூமியில் இசைத்திருந்தால் கண்ணாடிகள் நுட்பமான கோடிட்டு கூட காட்டியிருக்கும். இந்த கிரகத்தில் அப்படியொரு இசை இசைத்தாகத் தெரியவில்லை. ஒருவேளை வேற்று கிரகத்திலிருந்து வந்திருக்கிறதோ என்னவோ…… இப்படித்தான் அவனுக்குள் சிந்தனை ஓடியது.

அவன் கண்அயர்ந்த அந்த நிமிடத்தில், அப்படி ஒரு நிகழ்வு நடந்தது ஆச்சரியமாகவே இருந்தது. கண்ணாடியுள்ளே பல வண்ண மேகங்களின் நீட்சியில் தெரித்த மயக்கமுறும் இசையின் வெண்புகையிலிருந்து யாரோ வருவது போல் இருந்தது. அவன் ஒரு நிமிடம் பயந்தே விட்டான். சரியாக அவனால் யூகிக்கவே முடியவில்லை. வெளிவந்தவன் பூமியில் உள்ள மனிதனாகவே தெரியவில்லை. வேற்று கிரக வாசியானவன் போலிருந்தது. யார்…யார்… யார் அவன். அவன் கிறிஸ்டோபர்தான்….. ஏற்கனவே அவன், கிறிஸ்டோபருடன் இதற்கு முன்பு அறிமுகமாயிருக்கிறான்.  ஆனால், இம்முறை கிறிஸ்டோபர் இங்கு ஒரு இசைக்கருவியோடு வந்திருந்தான். அந்த இசைக்கருவி பார்ப்பதற்கே விநோதமாகவும், அழகாகவுமாயிருந்தது. சிறிய அரை வட்ட வடிவமான வெண்ணிற நிலவைப் போன்றிருந்தது.  அதன் இரு முனைகளையும் கருநாக நிறத்தில் 17 வகையான நாண்கள் இணைத்திருந்தது. அந்த இசைக்கருவி பளிச்சென பகலிலும் இரவு நிலவைப்போல் மின்னிக்கொண்டிருந்தது. இந்த கிரகத்திலேயே இல்லாத புதுவிதமான இசைக்கருவியை போலிருந்தது.

அதன் பெயர் “மகர யாழ்” என்றான். அந்த யாழ் திடீரென்று தானே இசைக்க ஆரம்பித்தது. அந்த இசை அழகிய மழை இரவில் அடர் காட்டினுள் தவழ்ந்து வரும் செந்நிற வண்டின் ரீங்காரம் போல்தான் முதலில் இருந்தது.  அதன்பின் இப்புவியில் இல்லாத விநோத பறவைகளின் ஒலியில், மனிதர்களுக்கே பிடிபடாத எதோ ஒரு புதிய உறவின் அர்த்தத்தை காற்றின் உருகொண்டு இசையின் வழியே வானத்தின் விந்தையான பாதையில் தவழ்ந்து சென்று இப்பூமியில் தேடியது. அந்த இசையின் மோனத்தில் மெய்மறந்து அவன் கனவின் திசைநோக்கி சென்றான். அங்கே அரை நூற்றாண்டிற்கு முந்திய நாகச்சித்தனின் புல்லாங்குழலின் வழியே ததும்பிய ராகம், விளாத்திகுளம் சுவாமிகளும், முத்துசாமி தீட்சிதரும் இம்மண்ணில் சிருஷ்டித்த ஆராபனையின் வழியே, என்றென்றும் தீராத இசை உமிழும் தாசியின் கண்ணீராய், இருண்ட மழைக்காற்றின் கடைசி மழைத்துளியின் குமிழ் வெடித்த சப்தங்களிலிருந்து, ஈரக்காற்றில் அசையும் விளிம்பின் நுனியில் உருவாகியிருந்தது.

யார் அந்த நாகச்சித்தன்? எப்படி வந்தான்? யாருக்குத்தெரியும். கண்ணாடியே கதை சொல்லியாக மாறியது. கண்ணாடியின் முனை விரிந்து தூரத்தில் சென்றது. அங்கே காற்றில் அசையும் நிழலாய் நாகச்சித்தன் ஒரு நீண்ட இருள் வீசிய மைதானத்தில், வானலாவிய வளர்ந்த ஒரு நாகமரத்திற்குள்ளிருந்து வந்தவன் போல் அதில் படர்ந்திருந்த வேருடன் பின்னியிருந்தான். முதலில் புல்லாங்குழலின் சப்தமற்ற அடிநாதம்தான் நாகச்சித்தனை காண்பித்துக் கொடுத்தது.  அந்த அடிநாதத்தில் உயிர்த்த அசரீரிதான் கிறிஸ்டோபரையும் அழைத்தது.  நடுச்சாமத்தில் திடுமென எழுந்த கிறிஸ்டோபர்தான் முதலில் பார்த்திருக்கிறான். கண்களை மூடி நாதத்தில் மூழ்கி தியானத்தில், நாக மரத்தின் வேர் போல் அதனுடன் நாகச்சித்தன் ஒட்டியிருந்தான்.  இசைக்கும் சித்தரைப் போல் புல்லாங்குழல் ஒன்று அவனிடம் இருந்தது. கிறிஸ்டோபர்தான் அவனுக்கு “நாகச்சித்தன்” என பெயர் வைத்தான். எல்லாம் கிறிஸ்டோபருக்கு கனவு போல் வந்து முடிந்தது.

இரண்டு இரவுகள் கிறிஸ்டோபர் யாரையும் பார்க்கவேயில்லை. அதன் பின்பு வந்த நாளில்தான் கிறிஸ்டோபர் நாகசித்தனைப் பற்றி நண்பர்களிடம் சொன்னான்.  நன்றாக ஞாபகம் இருக்கிறது. அன்று மூன்றாம் மழை இரவு. அவனும் கிறிஸ்டோபரும், இருள் முழுவதும் ததும்பாத அரை வட்ட வடிவ நிலா வெளிச்சம் பரவியிருந்த அந்த மைதானத்தில், ஒழுங்கற்ற ஒரு பாறையின் மேல்தான் அமர்ந்திருந்தார்கள். எத்தனையோ இரவுகளில், இதே மைதானத்தில் அடர் வார்த்தைகளின் அர்த்தங்களின் அடி ஆழத்திற்கு சென்று, இந்த வாழ்க்கையின் ஆச்சரியத்தினை தேடும் விநோத கலைஞர்களிடமெல்லாம் கதைத்திருக்கிறார்கள்.

ஆனால், இன்றைய மழை இரவு போல் இதற்கு முன் வந்திருக்கவே இல்லை…. அப்படியான மழை இரவில் வடிந்துருகிய நிழல்கள் மெளனமாய் இசைத்துக்கொண்டிருந்தது. அவனும் கிறிஸ்டோபரும் பேசாமல், வெறித்தும் வெறிக்காமலும் அசைவற்ற, இருள் கடந்த அந்த வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். கிறிஸ்டோபரால் வெகு நேரம் அந்த நிலையை காப்பாற்ற முடியவில்லை. அந்த நிலவு வெளிச்சத்தில்   கிறிஸ்டோபர் அவனிடம் கேட்டான்

“இசையிலிருந்து வர்ணங்கள் வந்ததா?  வர்ணத்திலிருந்து இசை பிறந்ததா? ஒரு வேளை சங்கீதத்தின் ஸ்வர வரிசையில்தான் நிறங்கள் வானவில்லென வானத்தில் வரிசையாய் தோன்றுகிறதோ…… புரியவில்லையே நண்பா…… எப்படியென்றால் என்ன? இசைக்கும், வர்ணத்துக்குமான தொடர்பு நினைத்துப் பார்க்கவே விநோத ஆச்சரியமாகத்தான் இருக்கிறது…. நண்பா.

இசையின் வழியே ஒளியை தேடும் போதுதான் அங்கே நிறங்கள் பரிணமிக்கிறது…. கிறிஸ்டோபர்.  நன்றாக சிந்தித்துப் பார்.. நிறங்களுக்கு உயிர் கொடுப்பதே இசைதான்.  இசை என்பது ஒரு வேளை இல்லையென்றால்….

நிறங்கள் வெறும் குருடுதான் என்பதை நீ புரிந்து கொள் கிறிஸ்டோபர்..

மீண்டும் நீண்ட நேரம் இருவரும் எதுவும் பேசாமல் இருந்தார்கள். அந்த இரவிலும் மழைச்சாரலின் சந்தத்தின் ஓசை அவர்களுக்கு ஏதோ சொல்லியது. எங்கோ ஒரு ஓரத்தில் காற்றில் கலந்த சாரல் தென்னங்க்கீற்றில் விழுந்து இசையாய் ஒலித்தது…… ஒரு நிமிடம் நிசப்தமாயிருந்தது…….  கிறிஸ்டோபர் பேச ஆரம்பித்தான்.

விளாதிமிர் கொரலாங்கோ…. “கண் தெரியாத இசைஞனில்” பியானோவில் கிளம்பிய இசையின் வழியே எதைத்தான் தேடுகிறான்…. கண்தெரியாத அந்த சிறுவன், இசையின் பயண நீட்சியின் வழியே வர்ணங்களை உணர்ந்தது…….. நானே உணர்ந்தது போல் தான் இருந்தது.  ஆனால், எந்த நிலையிலும் என் அறிவு ஏற்க மறுக்கிறதே…  அது ஏன்? ” என்றான்.

“கிறிஸ்டோபர்….. ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள்… அறிவு பல நேரம் உணர்வை விட்டு முரண்பட்டுதான் நிற்கிறது. என்ன செய்ய..” என்றான் அவன்.

யாரும் எதிர்பார்க்காத அந்த நேரத்தில்தான் அந்த அபூர்வ குழலிசை மெல்லிய ஈரக்காற்றில் தவழ்ந்து வந்தது. அது தேவ தாசிகளின் தேக சிறகசைப்பில், இந்த பூமியின் அனைத்து ஜீவன்களும் மதி மயங்கும் ஆனந்த ராகமாய் திசையெங்கும் பரவியது. அவர்கள் இருவருமே எதுவுமே பேச வார்த்தைகளற்று, இசையின் சாரீரத்தில் மெய்சிலிர்த்திருந்தனர்.

நாகச்சித்தனின் இசையாகத்தான் இருக்க முடியும் என்பதை கிறிஸ்டோபர் உறுதியாக உணர்ந்தான். எப்படித்தான் அவனால் உணர முடிந்தது என்பதே அவனுக்கே தெரியலை்லை.  ஆனால் அந்த இசை, வானிலிருந்து விழும் மழைத்துளியின் இடைவெளியில் உரசும் காற்றின் சந்தமாய் உருமாறியது. இசையின் அற்புதமும் ஆச்சரியமும் இப்படியெல்லாம் உருமாறுமா… தெரியவில்லையே. அந்த மைதானத்தின் வெம்பரப்பில் இசையின் வேறு வேறு வடிவங்களின் வர்ணங்கள், மண்ணின் அடி ஆழத்திலிருந்து விண்ணை நோக்கி காற்றின் நிழல் தெறிக்க சுழன்றது. அவன் வெறித்த வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கண்களிலிருந்து தாரை தாரையாய் கண்ணீர் வடிந்தது.

அன்று வெகுநேரம் வரை மழை பெய்திருந்தது. மணி இரண்டுக்கு மேல் இருக்கும். இருள் அடர்ந்த அந்த மைதானம் முழுவதும் இசை படர்ந்திருந்தது. அவன் சரீரமே மெல்ல சந்தங்களின் ஒலியாய் மாறுவதை, அவன் உணர ஆரம்பித்தான். அவன் கண்களை மூடிய நிலையில்தான் இருந்தான். சுவரங்களின் விந்தையான நெகிழ்வு அவன் உணர் நரம்புகளை கண்ணாடிகளின் வழியே மீட்டியது.  கண்ணாடிகள் வழியே அவன் சரீரம் அதிசயக்கும் வர்ணஜாலமாய் மாறுவதற்காய் காத்திருந்தது.

அந்த அதிசய இசையின் ஒளியால், முதலில் ஏதோ ஒருவித மாற்றத்தை நோக்கி செல்வதை அவன் உணர ஆரம்பித்தான். அதன்பின் சிறிது சிறிதாக மாற்றம் அவனுக்குள் நடப்பது தெரிய ஆரம்பித்தது.  அவன் தேகமே வேறு நிறமாய்…. அதுவும் ஊதா நிறம் என்பதை அவன் மூடிய கண்கள், அந்த அரை வட்ட நிலவில், கண்ணாடிகள் வழியே உணர ஆரம்பித்தது.  அவன் தேகமெங்கும் வர்ணங்களின் இசை. கண்ணாடிகளே இசைக்கும்  நிறங்களாய் மாறிய போது அவன் கண்ணாடிகளை விட்டு வெகு தூரம் சென்றிருந்தான்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top