கண்களை விற்று….

0
(0)

அந்தப் பெருநகரின் தெற்கே, நெடுந்தொலைவில் புதிதாக உருவாகி வரும் புறநகர்ப் பகுதி. நெடுஞ்சாலையை விட்டு சற்று தள்ளி ஒரு தொகுப்புவீடு அதைச் சுற்றிலும் சிதறிய சோளப் பொறிகளாக அங்கங்கே சில வீடுகள் முளைத்துக் கொண்டிருந்தன. ஒற்றையாள், ஒண்டிக்கட்டை பத்திரிகையாளன். இலகியப் படைப்பாளி என்ற முறையில் தலைநகரின் பரபரப்பிலிருந்து ஒதுங்கிக் குடியிருப்பது மனசுக்கும், படைப்புத் தொழிலுக்கும் அவசியமாக இருந்தது. என்பதைவிட குறைந்த வருமானத்திற்கு ஏற்ற வாடகை என்பதே தக்க காரணம்.

வாரத்தில் இரண்டு நாட்கள் தான் வேலை, நெருக்கடிகள் இருக்கும் அந்நாட்களைத் தவிர பிற நாட்களில் புறநகர் வீட்டுக்குத் திரும்பி விடுவேன். இரவில் அச்சம் தரும் அமைதி. சுற்றிலும் செடிகொடிகள் மரங்கள் நிறைந்து இருந்தாலும் கொசுக்களின் ஆலாபனை இல்லை. மின்வெட்டு இருந்தாலும் புழுக்கம் இல்லா மெல்லிய காற்றோட்டம் இரவு உறக்கம் வரும்வரை பயமே நரகமாகத்தான் இருக்கும். அலுப்பில் கண்ணயர்ந்துவிட்டால், காக்கை, குருவி, குயில் ஓசைகள் கேட்டுத்தான் விழிப்பு வரும். அது ரம்மியமான விழிப்பாக இருக்கும்.

திறந்த ஜன்னல் வழி முதலில் ஒரு குருவி வரும். பின் அடுத்து ஒன்று வரும் கண்ணாடியில் முகம் பார்த்துக் கொத்தும். அறை முழுவதும் விர்ரிட்டுப் பறக்கும். பரிபாசைகள் பேசும். தூங்குவது போல் பார்த்துக்கிடப்பேன். அப்படியே தூங்கிப்போவதும் உண்டு. பின் சூரியவிரல்களின் சூடுகிள்ளல் உறைத்து எழுவேன்.

நாளடைவில் குருவிகள் என்னைக் கண்டு அஞ்சவில்லை. சகஜீவியாக பாவிக்க ஆரம்பித்துவிட்டன. நான் எழுந்து பல் துலுக்கும் போது, முகச்சவரம் செய்யும்போது, பொட்டல உணவைக் கொறிக்கும் போது கிட்டே வரும். உரசிப்பறக்கும், பேசிச்சிரிக்கும் வேலியோர மாமரம் பழுத்த வேளைகளில் வரும் கிளிகளும், அணில்களும் என் அறையின் ஊடேயும் வரும். குரல் எழுப்பி எனது சுபாவத்தைச் சோதிக்கும் பதறாத எனதியல்பை உணர்ந்து உரசிப்போகும். கமலை ஏற்றம் இறைப்பது போல் க்ரில்லிட்டு நுழையும் அணில்கள் ஒன்றை ஒன்று விரட்டி சல்லாபிக்கும் வேலை நெருக்கடி இல்லாத நாட்களில் இவற்றை பார்த்தபடி உண்ணாமல் உறங்காமல் கிடப்பேன். சில சமயம் இவ்வுயிரினங்களின் துணையே இன்பமாக எண்ணிக் களிப்பேன்.

ஒருமுறை பத்திரிகை அலுவலகத்தில் ஒரு நெருக்கடியான வேலை அலுவலகத்திலேயே இரண்டுநாள் தங்கி வேலையை முடிக்க வேண்டியதாயிற்று. வந்து வீட்டைத் திறந்தேன். வட்ட வட்டமாய் சிலந்திவலைகள் மூலை, மூலைக்கு தோரணம் கட்டி யிருந்தன. அந்தச்சுவருக்கும் இந்தச் சுவருக்குமாய் நீள் இழைகட்டி சிலந்திகள் “பார் விளையாடிக்” கொண்டிருந்தன. கீழே தவறி விழுமா என பல்லிகள் நாக்கை நீட்டிக் கொண்டு, காத்திருந்தன…. அருவருப்பும் பயங்கரமுமாய் இருந்தாலும் அதில் ஒரு கலைநுட்பம் மிளிரத்தான் செய்தது….! உடனே விளக்கைப்போட்டு விலக்கு மாற்றால் வலை கலைத்து, ஒட்டடை தட்டி முடிக்கவே மூச்சு வாங்கியது. அலுப்பும், ஆயாசமும் நழுவி எரிச்சலும், சிலந்திவலை கலைத்த உறுத்தலும் வருத்தின. விழுந்த சிலந்திகளையும் வலையில் ஒட்டிய சிறு பூச்சிகளையும் நாவால் பற்றி பல்லிகள் துள்ளிப் பாய்ந்து மறைந்தன. வயிற்றில் முட்டைகள் தெரிய அவற்றின் விரைவும், பாதுகாப்பு உணர்வும் மன உறுத்தலை கரைத்துவிட்டது.

அப்புறம் குளித்து விட்டு வாங்கி வந்த உணவில் கொஞ்சம் ஜன்னல் ஓரம் குருவிகளுக்கு வைத்துவிட்டுத் தின்றேன். குளிப்பும் உண்ட உணவும் கண்களைச் செருகின, உறங்கிவிட்டேன்.

மழை இரவுகள் தவளைகளின் கச்சேரி களைகட்டும். ஒருகுழு பாடி முடிக்க மற்றது ஆரம்பிக்கும் திடீரென்று நிசப்தம். “பொலுக்” என்று ஒற்றைத் தவளையின் ஒலி ஏதோ பாம்பு ஒன்று தவளை யினை விழுங்கியது போல் உணர்வு மனசை உலுக்கும். பாம்பை நினைத்ததும் உடலெங்கும் ரோமாஞ்சனம். இப்படித்தான் ஒரு நாள் காலையில் திறந்த கதவின் ஊடே நுழைந்து பாம்பு ஊர்ந்து வந்தது. ஒரு வித்தியாசமான வாசனை. மூக்கை உறிஞ்சியபடி எழுந்தேன். வந்த பாம்பு எனது நடமாட்டம் உணர்ந்து திரும்பி நீள நீளமாய் உடலை வளைத்து விரைந்தது. பின் தொடர்ந்து பார்த்தேன். சுற்றுச்சுவர் வேலி ஓரமாக ஒரு புதர் பொந்துக்குள் நுழைந்து மறைந்தது. அங்கே பாம்பின் சட்டை மட்டும் கிடந்தது. பயமாக இருந்தாலும் மிக மெல்லிதாய் பார்க்க அழகாய் இருந்தது. பாம்பைக் கண்டு நான் அஞ்ச, என்னைக் கண்டு அது அஞ்ச இப்படி பரஸ்பர பயத்தில் விலகி வாழ்கிறோம்.

எனக்கொரு நினைப்பு. ‘நாம் எழுந்திருக்காமல் படுத்திருந்தால் உள்ளே வந்திருக்கும். அல்லவா! இதே போல் நாம் தூங்கிக் கொண்டிருக்கும்போது எத்தனை நாள் வந்து போயிருக்குமோ – அப்பவெல்லாம் நம்மைத் தீண்டலையே? ஆமாம். அதை நாம தீண்டமாட்டோம் என்ற நம்பிக்கையில் அது நம்மலை தீண்டலை. பாம்பும் மனிதரும் மட்டுமல்ல பிற உயிர்களும் ஒருத்தருக்கொருத்தர் உயிர் அச்சத்தில் தற்காப்புக்குத்தான் ஒருத்தரை ஒருத்தர் தாக்கிக் கொல்கிறோம். ஒருத்தரை மற்றவர் துன்புறுத்தமாட்டோம். என்ற நம்பிக்கை வரும்போது துன்பம் எழுவது இல்லை.

மழை பெய்வதை முன்னறிவிக்கும் தவளைகளும், வசந்தத்தை சொல்லும் குயில்களும் குருவிகளும் சூழ வாழ்வது சொர்க்கமாக இருக்கிறது நகர நெருக்கடிக்குப் போவதுதான் நரக எரிச்சல், ஆனால் வயிற்றுப்பாட்டுக்கு வெளியே போயாக வேண்டி யிருக்கிறதே…? எனினும் இந்த சுகமும் அமைதியும் ரொம்ப நாளைக்கு நீடிக்கவில்லை.

பக்கத்தில் காலியாக இருந்த நான்கு வீடுகளில் ஒன்றிற்கு ஒரு நடுத்தரக் குடும்பம் குடியேறியது. அம்மா, அப்பா, இருமகள்கள், ஒரு மகன் என ஐந்து உறுப்பினர்கள் ஆள் அரவமும் ஒரு வகையில் பாதுகாப்பு உணர்வைத் தந்து தனிமையை விரட்டத்தான் செய்கிறது. நேர்மாறாக அந்த வீட்டு டிவி சத்தமும் பேச்சரவமும் பழைய இயல்பான அமைதியை களவாடிக் கொண்டது. பெரும் இழப்பாகவே இருந்தது. எனினும் அணிலும், குருவிகளம், கிளிகளும், நட்போடு வந்து உறவாடிச் சென்றன. இவர்களோடு சக மனிதர்களும் சேர்ந்து கொண்டனர். அவர்கள் என்னிடம் புத்தகம் வாங்கிப்படிப்பர். பறவையினம் எனக்கு உயிரின சகோதரத்துவத்தைக் கற்றுத் தந்தன.

இப்படி நாட்கள் உருண்டன. ஒரு மழைக்காலம். மழை பெய்த பின்னும், மழை பெய்யும் முன்னும் கேட்கும் தவளைக்கச்சேரி காம்பவுண்டுக்குள் கேட்கவில்லை. எங்கே தொலைதூரத்தில்தான் கேட்டன. காலையில் எழுந்து வீட்டுக் கழிவு நீர் ஓடுகாலில் பார்த்தேன். தவளைகள் தலைப்பிரட்டைகள் ஒன்று கூடக் காணோம். பக்கத்து வீட்டுக் கழிவிநீர் வாய்க்காலில் வெறும் ஷாம்பு பிளாஸ்டிக் கவர்கள் மட்டுமே கிடந்தன. தலைப் பிரட்டைகள் மிதந்த ஓடுகாலில் கொசுமுட்டைகள் மிதந்தன. பகலிலும், இரவிலும் காற்றில்லா ஒதுக்குப்புறங்களில் கொசுக்களின் ஓலம் கேட்டது. அதிர்ச்சியாக இருந்தது. இப்பொழுதெல்லாம் கொசுவிரட்டி இல்லாமல் தூங்க முடியவில்லை.

பக்கத்து வீட்டு பெரியவர் சொன்னார் “முதலில் இந்த மரம் மட்டை, செடி, கொடி அடைசல்களை வெட்டிக் கொளுத்தணும். இலை தழைகளில் கொசு அடைஞ்சுகிட்டு வீட்டில் இருக்க முடியலை” என்று சலித்துக் கொண்டார்.

“ஏங்க, நீங்க குடிவந்த புதிசில இவ்வளவு செடிகொடி, புதர்கள் இருந்தும் கொசுத் தொல்லை இல்லையேன்னு நீங்கதானே சொன்னீங்க!?” என்றேன்.

“ஆமாம், அப்போ இல்லை. இப்போ கொசுத்தொல்லை தாங்க முடியலையே…”

“மரம் செடி கொடி புதர்களாலே கொசு வர்லைங்க. நீங்க வீட்டில் பயன்படுத்திற ஷாம்பு. கெமிக்கல்ஸ், சோப்பு நீரால தவளைகள் எல்லாம் செத்துப்போனது மட்டுமல்ல. உருவாகவே வாய்ப்பில்லாமல் போச்சு. தவளைகள் இருந்தால் கொசு முட்டை களைத் தின்று கொசுவின் உற்பத்தியைத் தடுத்திருக்கும். காப்பான் இல்லை அதனால் கொசுக்களின் தண்டமானம் தாங்க முடிய வில்லை.” என்றேன்.

“ஆமாம் சார், இனி ஷாம்புக்கு பதில் சீயக்காய் பயன்படுத்திப் பார்ப்போம். தோய்க்கும் சோப்புத்தண்ணியைக் கக்கூஸ் தொட்டியில் ஊற்றிப் பார்ப்போம்” என்று முடிவெடுத்தார்.

எனக்கு அலுவலகத்தில் தொடர்ச்சியாக நெருக்கடியான வேலைகள். இன்னொரு பதிப்பு தொடங்குவது தொடர்பாக கோவையில் ஒருமாதம் தங்கி வேலைபார்க்க வேண்டியிருந்தது.

ஒரு மாதம் கழித்து வந்து பார்த்தேன். காம்பவுண்டே மாறிப் போய் இருந்தது. சுற்றிலும் வீடுகள் எழும்பிக் கொண்டிருந்தன. ஜனசந்தடியும், லாரி ஆட்டோ, இருசக்கர வாகனப் போக்குவரத்தும் கூடியிருந்தது. எங்கள் வீட்டு மொட்டைமாடியில் ஒரு செல்போன் டவர் முளைத்திருந்தது. இன்னும் மூன்று குடும்பங்கள் குடிவந்து இருந்தன. எந்தநேரமும் டீவியின் வெவ்வேறு அலைவரிசைகளின் சத்தங்களும், அடங்கிப்போன மனுஷகுரலுமாய், அதிர்ந்தன. வீட்டுக்குள் நுழைந்து ஒட்டடை அடித்து ஜன்னலைத் திறந்து வைத்தேன். காக்கை குருவி ஒன்று கூட உள்ளே எட்டிப் பார்க்க வில்லை. அவற்றின் சத்தம்கூட கேட்கக்காணோம்.

குளித்து விட்டு, வாங்கி வந்த உணவில் வழக்கம்போல கொஞ்சம் ஜன்னலோரம் காக்கா குருவிக்கு வைத்துவிட்டு சாப்பிட்டேன். படுத்ததும் அலுப்பில் உறங்கிவிட்டேன். இடையில் எழுந்து கழிவறைக்குப் போய்விட்டு ஜன்னலைப் பார்த்தேன். வைத்த உணவு வெயிலில் விரைத்திருந்தது. காற்றாடிக்கு அஞ்சி வராமலிருக்கலாம். காற்றாடியை அணைத்து விட்டுப் படுத்தேன். புரண்டு, புரண்டு கவனித்தேன். காக்கை, குருவி, கிளிச் சத்தம் கேட்கலையே என்ற ஏக்கம். கனவில் அவை அங்கு மிங்கும் வீட்டுக்கு வெளியே பறந்தன. சத்தமிடவில்லை. அவைகளிடம் கேட்டேன். பாராமுகமாய் பறந்தன. கனவின் திரை அறுந்தது.

எழுந்து முகம் கழுவி வீட்டைச்சுற்றி வந்தேன். மரங்களிலும் ஒரு பறவையைக் கூடக்காணோம். இரண்டொரு அணில்கள் தாம் அங்கு இங்கும் ஓடியாடி க்ரில்ல்லிட்டுக் கொண்டிருந்தன. ஆறுதலாக இருந்தது. வேலியோரம் ஓணான்கள் தனிமைப்பட்ட மனிதர்கள் மாதிரி இறுகிய முகங்களோடு தலையாட்டிக் கொண்டிருந்தன. நான் வெளியே நிற்பதைப் பார்த்து பக்கத்து வீட்டுக்காரர் வந்தார்.

வெளியூர் வேலை எல்லாம் முடிந்து விட்டதா என்று விசாரித்ததார். “ஏன் சார் ஷாம்புகளை பயன்படுத்தாத விரதம் என்ன ஆச்சு? எங்கும் ஷாம்பு பாக்கெட்டுகளாகக் கிடக்கே?” என்று கேட்டேன்.

“ஆமாம் சார், எங்க வீட்டைப் பொறுத்தவரை வைராக்கியமாய் ‘ஷாம்பு கெமிக்கல் பயன்படுத்தாம இருந்தோம். அங்கிட்டு கிழக்குப் பக்கமாய்ப் போய் நாலஞ்சு தவளைகளைப் பிடிச்சு வந்து எங்க வீட்டு சாக்டையில் விட்டுப் பார்த்தேன். கொசு கொஞ்சம் மட்டுப் பட்ட மாதிரி இருந்தது.

அடுத்தடுத்த வீடுகளுக்கு குடிவந்தவங்க கிட்டேயும் சொன்னோம். அவங்க கேட்காமா எங்களை ஏற இறங்கப் பார்த் தாங்க. அவங்களையும் கட்டுப்படுத்த முடியலை. கொசுவையும் கட்டுப்படுத்த முடியலை” நொந்து புழுங்கினார்.

“சரி, ஏங்க காக்கா குருவிகளைக் கூடக்காணோமே?”

“அத ஏங்க சார் கேட்கறீங்க? இந்த செல்ஃபோன் டவர் வந்த பிறகு குருவி சத்தத்தையே கேட்கலை சார்! வெளியே பஸ்ஸில் போகும் போகும் வரும் போதும், டிவியிலும், சினிமாவிலும்தான் காக்கா குருவிகளை பார்க்க முடியுது. எனக்கோ ஏக்கமாப் போச்சு, சார். செல்லில்தான் குருவிச் சத்தத்தை வச்சிருக்கேன். அழைப்பு வந்தா குருவி கத்தும்!”

நானும் எனது செல்லை எடுத்தேன். குருவி சத்தம் கேட்க…!

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top