கடை

5
(1)

பையன் கடையைத் திறந்து வைத்திருந்தான். வாசலைத் தொட்டு கும்பிட்டுவிட்டு சேரை எடுத்துப்போட்டு அன்றைய தினசரியை விரித்துப் படிக்கத் தொடங்கினார் கடைக்காரர். செய்திகள் மனசில் பதியவில்லை. வட்டெழுத்துக்களாகவும் பிராமி எழுத்துக்கள் போலவும் கண்ணில் பூச்சி காட்டின.

பையன் சாமி படத்துக்கு பத்தி பொருத்துவதற்காக வத்திப் பெட்டியுடன் தயாராகின்றான். எப்பொழுதும் கடையில் ஏறியதும் பத்தி பொருத்தி சாமி படத்திற்கு காட்டிவிட்டுத்தான் உட்காருவார். இன்று ஏனோ மனநிலை கெட்டிருந்தது. நாலு நாளில் தீபாவளி. கடைக்கு வரும் சமையற்காரர்களுக்கு போனஸ் தந்தாக வேண்டும். ஆளுக்குத் தக்கபடி தரவேண்டும். அதற்காக ஒரு உத்தியை ஒவ்வொரு வருசமும் கையாண்டு வந்தார். அவர்கள் கடைக்கு வந்து கேட்பதற்குள் போனஸ் பணத்தை வீட்டுப் பெண்களிடம் சேர்ப்பித்துவிடுவார். அது நல்ல பலன் தந்தது. யாராவது ஒன்றிரண்டு பேர்கள் மட்டுமே கடைக்கு வந்து வாங்கிக்கொண்டு போவார்கள்.

அன்று இரண்டு பேருக்கு போன் செய்த வரச்சொல்லியிருந்தார். பேப்பரைப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு போன் வந்தது. தாளை மடித்து ஒரமாய் வைத்துவிட்டு போனை கையில் எடுத்தார். ஐம்பது பேருக்கு அசைவம் சமைக்கவேண்டுமாம். “நல்ல ஆளாய்ப் பார்த்து அனுப்புச்சு வையி….சேர் டேபிள் வேற வேணும்….நம்ம கடையிலையே எடுத்துக்கிலாம்….” பேசியவர் கொக்கியைப் போட்டார். “குடிக்காத ஆளாய் இருக்கனும்….சபரி மஹால்ல ஒரு பொம்பள மாஸ்டரு வேல பாத்துச்சே….”

“முனியம்மாவா….வரச்சொல்றேன்….” தொடர்ந்து முனியம்மாளுக்கும் போன் செய்தார். பத்து நிமிடத்தில் முனியம்மா கடைக்கு வந்தது.

“பெரிய்ய்ய வேல ஒன்னு வந்துருக்கமா….”

கடைப் பையன் தந்த கவரை பிரித்து எண்ணிக்கூடப் பார்க்கவில்லை. அதைக்காட்டிலும் முக்கியமானது வேலைக்கான தகவல். எனவே கவரை வலதுகையில் வாங்கியவுடன் அப்படியே கைகளுக்குள் சுருட்டி வைத்துக் கொண்டவள், சுபாவமாய் ஜாக்கெட்டுக்குள் ஏறிக்கொண்டது கவர்.

“பேசி விடுங்கண்ணே பாத்துரலாம்……” என்றாள்.

சமையல் வேலை என்பது இப்போதெல்லாம் யாராவது ஒரு நபரை முன்வைத்தே வருகிறது. காரணம் சமையல்காரர்கள்தான். அவர்களது பழக்கவழக்கங்கள்தான். வேலைக்குப் பேசி அட்வான்ஸ் வாங்குவதில் ஆரம்பித்தால், வேலைத் தளத்தில் நுழையும்போதும், வேலையின் போதும், வேலை முடித்து சம்பளத்தை வாங்கிய பிறகும் ஓரே ஊத்துதான். அன்றோடு சாராயக் கடையை மூடப்போவதுபோல நினைத்து வீடு எது ரோடு எதுவெனத் தெரியாமல் குடித்துக்கிடக்கும் வேலைக்காரர்களை எப்படி நம்புவார்கள்..?

“ஒன்னைய நம்பித்தே பார்ட்டிகிட்ட சொல்லீருக்கேன்….” கல்லாவில் உட்கார்ந்திருந்தவர் அப்படியே நெட்டி முறித்து சோம்பல் கழித்தார். அவளது எண்ணம்போலவே பேசினார். உயர்த்திய கைகளுக்குமேல் காற்றாடி தட்டியது.

கடை முழுக்க பெரிய பெரிய அலுமினியப் தேக்சாக்கள் ஒன்றுக்குளய் ஒன்றாய் செட் போடப்பட்டு ஒன்றின் மேல் ஒன்றாய் ஆள் உயரத்திற்கு அடுக்கப்பட்டிருந்தது. இது தவிர பிளாஸ்டிக் சேர்கள் ஒருபுறமும், டைனிங் டேபிள்கள், ஏணிவைத்து ஏறும் உயரத்திற்கு மர செல்ப்புகள் அமைக்கப்பட்டு அதனுள் எவர்சில்வர் வாளிகளும் குண்டா, பேசன்களும் கேத்தல் என அத்தனை பொருட்களும் ஏற்றப்பட்டிருந்தன.

மாராப்புத் துணியை சரிசெய்துவிட்டு முந்தானை நுனியை இழுத்து இடுப்போடு நிறுத்திப் பிடித்தபடி கடைக்காரரின் மேசை விளிம்பை ஒட்டிவந்து நின்றுகொண்டாள். “ணேய்…எந்த கவலைவயுமில்லாம சொல்லிவிடுங்கண்ணே….இதுவரைக்கும் நீங்க பேசிவிட்டு எந்த வேலையாச்சும் கொற கண்டுருக்கீகளா…வேலண்டு பேசியாச்சுன்னா எனக்கு கண்ணுறக்கம் வராதுண்ணே…”

கடையில் ஏழெட்டு சமையல் மாஸ்டர்கள் இருக்கிறார்கள். முனியம்மாவின் புருசனும் ஒரு மாஸ்டர்தான். அவனுக்கும் கிட்டத்தட்ட இருவது வருச சர்வீஸ் இருக்கும். முனியம்மாவைக் கலியாணம் செய்யும்போதே மாஸ்டராகத்தான் இருந்தான். நல்ல வேலைக்காரனும் கூட. ஆனால் எத்தனை சம்பாதித்தாலும் பிராந்தி பாட்டில்களாகத்தான் கொண்டுவந்து அடுக்குவான். பத்து நாள் பதினைந்து நாளைக்கு ஒருதரம் பெரிய கட்டைப்பை நிரம்ப காலி பாட்டில்கள் சேர்ந்துவிடும். ஒரு மாசமானால் உரச்சாக்கில்தான் அடுக்கி ஆட்டோ பிடித்து பழைய இரும்புகடைக்கு போகவேண்டிவரும்.

ஒரு கட்டத்தில் இனியும் சுதாரிக்காவிட்டால் தானும் பிள்ளைகளும் நடுத்தெருவில் நிற்கவேண்டிவரும் எனப் புரிந்து புருசனோடு தானும் வேலைக்குப் போகத் தொடங்கினாள் முனியம்மா. ஆறுமாசம் ஒருவருசத்தில் வேலையின் நுணுக்கங்கள் முனியம்மாவின் கைக்கு வந்தன. தனியாக “குதுப்பி” பிடித்துக் கிண்டத் தகுதியானாள். வேலை தருபவர்களும் குடிகாரனோடு பேரம் நடத்துவதைவிட முனியம்மாவோடு பேசுவது எளிதாக இருந்தது. முனியம்மாவும் ஆள் தெரிந்து பேசப் பழகிக்கொண்டாள்.

“அதனாலதே ஓவ் வீட்டுக்காரன்ட்ட சொல்லாம…ஒன்ட்ட சொல்றே…?

“அதனால் ஒன்னும் பிரச்சன இல்லண்ணே…யார் பேசுனாலும் ரெண்டுபேருந்தான வேலைக்குப் போவம்…..”

“பார்ரா….புருசன விட்டுக்குடுக்க மாட்டேங்குற…”

அந்தநேரம் கைலி வேஷ்டியை வரிந்து கட்டியபடி கடைக்கு சாரதி மாஸ்டர் வந்தார்.

“என்னம்மா….முனி….நீயும் ஒம் புருசனுமாத்தே….ஊர்ல இருக்க வேலையப்பூரா பங்கு போட்டுக்கப் பாக்குறீக போல…” அமர்க்களமாய் பேசியபடி ஒரு சேரை எடுத்துப்போட்டு உட்கார்ந்தார்.

“ஆமா ஊர்ல பாதிய வாங்கிப் போட்ருக்கோம்….நீ வந்து ஒரு பங்கு வாங்கிக்க….”

“எங்குட்டோ நல்லாருந்தா சரிதாம்மா….ஒரு சமையல் காரை நல்லா பொழக்கிறான்னா… நமக்கு பெருமதான…..எனணாண்ணே….”

“யே…..புருசனும் பொண்டாடடியும் சேந்து பாடு படுறாக….சம்பாதிக்கிறாக…..அது பிடிக்கலையாப்பா…”

“ம்….கேளுங்கண்ணே…..ஊருக்குள்ள இதே மாதிரிதான்ணே கரிப்பா கரிச்சுக் கொட்றாய்ங்க….”

“நா எதுக்கு கரிச்சு கொட்றே….நீ மட்டும் அடுத்தவக வாய்ல விழுகாம …..அடுத்தவக வேலையப் புடுங்காம இருந்தாச் சரி….” வில்லங்கமான வார்தையை விட்டார் சாரதி. அவ்வளவுதான் அதுவரை அமைதியாய் இருந்த முனியம்மா தீயை மிதித்த குரங்கு போல விர்ரென எழுந்தாள்.

“ஆர் வேலையப்பா நாங்க புடுங்குனம்….ஒன்னு சொல்லு….ஒனக்கு தாலிகட்டி உள்ளங்கைல சோறாக்கி போடுறே….”

“என்னா…. அடிச்சுப் போடுற மாதிரி வர…..நீ இல்லேன்னு சொல்லு….” சொல்லிவிட்டு விரல்களை விரித்து வைத்துக்கொண்டு பட்டியலிடுவதுபோல ஒவ்வொன்றாகப் பேசலானான். கடைக்காரருக்கு ரெம்பக் கஷ்டமாய்ப் போனது. வாடகைப் பாத்திரக் கடையில் இது ஒரு பெருந்துன்பம். மற்ற வியாபாரக் கடைகளைப்போல சரக்கைக் கொடுத்தோமா விற்று காசாக்கினோமா என்ற நிம்மதி இருக்காது. ஒருசில நபர்களை நம்பிய பிழைப்பு.

அதனால் அவர்களை எத்தனை தாங்கவேண்டுமோ அத்தனையும் செய்தாகவேண்டும். எத்தனை பேர் வந்தாலும் அத்தனை பேரிடமும் அக்கறையுள்ளவர் மாதிரி பேசிடவும் வேண்டும். ஒருவரை வைத்து ஒருவரை தூக்கிப் பேசவோ தாக்கிப்பேசவோ செய்வதென்பது தலையில் தானே மண்ணைப் போட்டுக் கொள்வதுபோல.

“சாரதி…..என்னப்பா….காலைல வந்து இப்பிடி போட்டு வாங்கிக்கிட்டிருக்க…..சித்த பேச்சக் கொற…..”

“ஒன்ளைய வேலைக்குக் கூப்பிட்ட எடத்துல நாம் போய் நின்னு வேலையப் பாத்தேன்ன…. செருப்பக் கழட்டி அடி….அதவிட்டு மானாங்கன்னியா பேசுனா….நல்லா இல்ல….”

“முனிம்மா…..நா ஒராள் பேசறேன்ல……”

மெடிக்கல்காரர் வீட்ல வருசம்பூரா வேல நீ பாக்குறயா… இல்ல ஒம் புருசெ பாத்தானா…..அவுக வீட்ல நிச்சியதார்த்திலருந்து, காது குத்து, சடங்கு அத்தனைக்கும் நாந்தே போவே…..இன்னிக்கி நீ போய் பேசிருக்க……”

“அத அவககிட்ட போய் கேளுப்பா…..என்னிய ஏன் கூப்புடலன்னு….அவுகளக் கேளு….. அதவிட்டு என்ட்ட வந்து ஒரண்ட இழுக்கற….. சரியல்ல சாரதி…….”

“அப்பறம்…..” என்று அடுத்தொன்றை சொல்லவந்தவரை கைப்பிடித்து நிறுத்திய கடைக்காரர். “இப்ப என்னா…. காலைல சண்ட போடனும்னே கடைக்கி வந்தியா…..” என மறித்தார்.

“நா எதுக்குணே சண்ட போடறே…..ஒங்க கடப் பையந்தா கூப்பிட்டான்…..வந்தே…. நமக்கென்னண்ணே….வேல செஞ்சாக் காசு இல்லாட்டி….நிம்மதியா வீட்ல கஞ்சியக் குடிச்சுட்டு ஒங்க கடைல ஒக்காந்து பொழுத போக்கிட்டுப் போகப்போறே….”

கடைப் பையன் வந்து சாரதிக்கு ஒரு கவரைக் கொடுத்தான்.

“போனசா….” எதிர்பார்த்தவன் போல இரு கைகளையும் ஆவலுடன் நீட்டி வாங்கினான். உள்ளே கைவிட்டு எத்தனை என எண்ணிப் பார்க்க மனசு துடித்தாலும் ஏதோ ஒரு கவுரவம் தடுத்தது. அமுக்கிப் பார்த்துக்கொண்டான். அனுமானிக்க முடியவில்லை.

“சரி கௌம்பு….” கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக சாரதியை எழுப்பினார்.

“இப்பக்கூட கடக்காரர் கூப்பிடப்போய்தே வந்தே….கேளு….ந்தா ஒரு வேலையச் சொல்றாரு….. செய்யப்போறம்….அதவிட்டுட்ட எங்கடா புது வீடு கட்றாங்க….எப்படா கல்யாணப் பந்தல் போட்றாங்கன்னு ஊரெல்லா ஔவு பாத்துட்டு வேல கேட்டுத் திரியல……? உணர்ச்சிப் பெருக்கில் முனியம்மா கடைக்காரரை மாட்டிவிட்டாள். கடைக்காரருக்கு முகம் பேயறைந்தது போல மாறிவிட்டது.

சாரதி எரிந்துவிடுபவன் போல அவரைப் பார்த்தான். “ணே….தெரியும்ணே….நீங்கதான அது… இப்பிடி செய்யாதீங்கணே…. ஒரு கண்ணுல பாலு இன்னொரு கண்ணுல சுண்ணாம்பும் ஊத்தாதீங்கண்ணெ….கடைக்கு வார எல்லாரையும் ஒன்னுபோல பாருங்க…..கடைக்கு வார கஸ்டமரப் பூரா மாத்திவிட்றாதீங்க…..”

அதன்பிறகுதான் முனியம்மாள் “சே அவசரப்பட்டுட்டோமே…..” என சட்டென இறுகிக் கொண்டாள்.

“ங்க பாரு சாரதி….எதியும் சார்ட்டா யோசிக்காத…..நா என்னத்துக்கு ஒருத்தர் வேலைய இன்னொருத்தருக்கு மாத்திவிடப் போறே….எல்லாருந்தாப்பா வேணும்…..”

“இல்லண்ணே….நெறைய ஒங்களப்பத்தி சொன்னாங்க…நா நம்பல, ஆனா இப்படி ஒரு கடக்காரரு மோசடி செய்யக்கூடாது….” கவரை அன்ராயருக்குள் சொறுகிக்கொண்டான்.

“நா எதுக்கு மோசடி செய்யப்போறேன்…..வீணா வம்ப வளக்காத….”

“நானா வம்பு கட்றேன்……. ந்தா….கூப்பிட்டுவிட்டுருக்கீங்கள்ல….. அந்தப் புள்ளையே சொல்லுதுல்ல….”

“யே… பார்ட்டிதே முனியம்மாவ பேசிவிடுங்கன்னு கேட்டாங்க, அதவச்சுத்தே கூப்பிட்டே…. யாரக் கூப்பிடுறாங்களோ அவகளத்தானப்பா பேசிவிட முடியும்….”

“ல்லணே….கொஞ்ச நாளாவே நானும் பாத்துட்டே…முந்தி மாதிரி இல்ல நீங்க… ஆனா அடுத்தவெ வயித்தில அடிக்காதீங்க…. இனி அவகள வச்சே கடய நடத்துங்க….தீவாளிக்குப் பெறகு நா ஒங்க கடைக்கு வரமாட்டே…..”

இதுதான் அவர்களிடம் உள்ள பிரச்சனை. சட்டென அத்தனை நல்லதுகளையும் விநாடியில் உதறிவிடுவார்கள். உதறுவதற்கு சந்தர்ப்பம் எதுவென தேடிக்கொண்டிருப்பது போலவும் அவர்களது நடத்தை மனம் பதறச் செய்யும்.

“சாரதி….லூஸ் மாதிரி பேசக்கூடாது…” இந்தநேரம் எத்தனை மோசமாகத் திட்டினாலும் கவலைப்பட மாட்டார்கள். “சாரதியக் கூட்புட்டு பேசிவிடுங்கன்னு சொல்ற எடத்துல வேற யாராவாச்சும் கோர்த்துவிட முடியுமா….அப்பிடி என்னிக்காச்சும் சொல்லீர்க்கேனா….”

“ணே….நீங்க கடவச்ச நாள்லருந்து….” என ஆரம்பிக்கும்போதே சாரதிக்கு கண்ணில் நீர் பொங்கியது. “எத்தனையோ கடையில் அட்வான்சு ஆயிரம் ரெண்டாயிரம் தர்ரதா  ஆசகாட்டி கூப்டாங்க….உங்களுக்கும் தெரியும்… ஆனா சொந்த அண்ணன் மாதிரிதான நா நடந்துகிட்டே…. இப்படி ஒரு பொம்பளை பக்கம் சாஞ்சுட்டீங்களே…”

கடைக்காரர்கள் எல்லோரும் சுயநலக்காரர்கள் என்ற எண்ணம் சாரதிக்கு அந்த நேரத்தில் உருவாகியது. வேலையாள்தான் பற்றோடும் பாசத்தோடும் இருக்கிறான். இவர்கள் வேசக்காரர்கள். கடைக்காரரைப் பார்க்கவே வெறுப்பாக இருந்தது. முகத்தைச் சுளித்துப் பேசினான். “கடசீல ஒரு பொம்பளகிட்ட எங்கள தோக்கடிச்சிட்டீகளே…” மறுபடி மறுபடி சொன்னான்.

“ந்தா பாரு சாரதி….எதியும் ஒன்னளவுல பேசிக்க….சும்மா இருக்கமாட்டாம பொம்பள கிம்பளன்னு பேச்சு வந்துச்சு…. கீசரி மேசரி ஆகிபோகும்….” என தனது ஆட்டத்தைத் துவக்கினாள் முனியம்மா. இந்தச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தவன் போலஒரு தயாரிப்பு இருந்தது அவனிடம். கடைக்காரர் பதறலானார். “என்னா முனியம்மா….நிய்யும் கூறுகெட்டத் தனமா பேசுற…நியும் கௌம்பு….போ….போ….”

“இல்லண்ணே…இன்னிக்கு ஒரு பள்ளி வக்கனும்ணே….ஊர்ல எல்லாப் பயலும் ஒரு மாதிரியாத்தா ஊதிகிட்டு திரியிறாய்ங்க….பொம்பளின்னா அம்புட்டு எளக்காரமாப் போச்சா…. வம்பாடு பட்டுத்தாய்யா… நாங்களும் தீயில வெந்து காச வாங்குறோம்….எந்தஒரு மகராசனும் சக்காந்தா ஒக்காரவச்சு குடுத்திர மாட்டாங்க….வேணும்னா நிய்யும் பேசி வேலையப்பாரு….” புருசனோடு சேர்ந்துவந்து  சமையல் வேலையில் இறங்கியதிலிருந்து ஊரிலிருக்கும் அத்தனை சமயலாட்களுக்கும் பொகச்சலும் பொறாமையுமாகவே திரிகிறார்கள். எந்த இடத்தில் பார்த்தாலும் பேசினாலும் எகத்தாளமாய் பேசுவது, சிரிப்பது….

“என்னம்மா…வரிஞ்சு கட்டிக்குட்டு வர்ர… நீ என்னா அம்புட்டு பெரிய ரவுடியா….” உண்மையிலேயே முனியம்மாள் அடிக்கக் கூட பயக்காத பொம்பளைதான் என்பது சாரதிக்குத் தெரியும். அதனாலேயே தள்ளி நின்றுதான் பேசினான். முனியம்மாளின் புருசன் கைகால் வீங்கிவருகிறபோதெல்லாம் அவளது பலம் என்ன என்பதை எல்லோரும் கண்டிருக்கிறார்கள்.

“சாரதீ” கடைக்காரர் சற்று உரத்த குரலெழுப்ப வேண்டிவந்தது. தனது கடையில் அடிதடியோ தள்ளுமுள்ளோ நடந்தால் ரெம்பவும் அசிங்கப்படவேண்டும். சாரதியின் புஜத்தைப் பிடித்து இழுத்து வந்தார். “தயவு செஞ்சு போய்ட்டு அப்றமா வா…”

“கைய விடுங்ணே….” விசும்பினான். “நா போகத்தேம் போறே…இம்புட்டு வெஷமான ஆளா இருக்கீங்க….இன்னிம்மே இந்தப்பக்கம் எட்டிப் பாக்க மாட்டே…பாக்கி காசு இருந்தா கணக்கு சொல்லுங்க….கடப் பையன்கிட்ட குடுத்து விடுறேன்….” போனஸ் கவரை எடுத்து சட்டை சேப்பில் சொருகியபடி நடந்தான்.

“கையில வச்சிருக்க காசக் குடுத்து கணக்க வெட்டிட்டுப் போகவேண்டியதான…இவருக்கு கடப் பையன்கிட்ட சொல்லிவிடனுமாக்கும்….பெரிய ஜில்லா தாசில்தாரு…” என்று சத்தமாய் பேசிய முனியம்மா… “விடுங்ணே எங்க போயிருவாங்க….அலஞ்சு தனிஞ்சு தான அடுப்படிக்கித்தே வரும் பாருங்க…”

“ஸ்சோ….” தலையைப் பிடித்துக்கொண்டு கல்லாவில் உட்கார்ந்தார் கடைக்காரர்.

“இன்னம் யாருக்குப்பா தரவேண்டியிருக்கு….போனப் போட்டு வரச்சொல்லு….” என்றவர், “வேணாம்… அவுகவக வீடு தெரியுமா….தெரிஞ்சா நேர்ல போய் குடுத்துட்டு வந்துரு….லச்ச…” என்று நொந்துகொண்டார்.

“யேண்ணே….வலிய கொண்டுக்குப் போயி குடுக்குறீக…வந்து வாங்கிட்டுப் போகட்டும்ணே…”

“ஆமாண்ணே….நேர்ல போனா… இம்புட்டுத்தானான்னு எங்கூட சண்டைக்கு வருவாங்க….” கடைப்பையன் மருகி நின்றான்.

“அதான…”

“அய்யா…” கடை வாசலில் காக்கி டவுசர் சட்டையும் தலையில் உருமாத் துண்டுமாக துப்புரவு ஆட்கள் ◌நோட்டோடு நின்றிருந்தார்கள்.

“போனசு…”

“சாக்கட அள்றவகளுக்குதான….நேத்தே வாங்கிட்டுப் போய்ட்டாகளே….” கடைப் பையன் தனது கைச் சிட்டையை எடுத்து சரிபார்த்தான்.

“அது சாக்கட அள்றவுக….நாங்க வண்டி தள்ளிட்டுப் போற செக்சன்….நம்ம கட முன்னால ஒரு குப்ப நிக்கவிட மாட்டம்ங்க….”

“இனி தூக்கித் தட்டுறதுக்கு ஏதும் ஆள் இருக்காப்பா…” முனியம்மா கேட்டாள்.

அதற்குள் கடைக்காரர் அவர்களுக்குப் பணம் கொடுத்து அனுப்பினார்.

“நோட்ல எழுதீருங்யா…” நோட்டை நீட்டினர்.

“வேணா வேணா…பரவால்ல…”

“இல்லங்யா….எங்களுக்கு கணக்கு வேணும்ல….”

“நீங்களா எழுதிக்கங்கப்பா….எழுதத் தெரியாதா….?” முனியம்மா சவுண்டாகப் பேச, அவர்களுள் ஒராள் நோட்டை விரித்து எழுதிக் கொண்டார். “வரோம்ங்கையா….” வணக்கம சொல்லி நகர்ந்தனர்.

தீபாவளி வந்துவிட்டால் எதையும் யோசிக்காமல் ஒருதொகையை ஒதுக்கி வைத்துவிட வேண்டும். அது பெட்டிக்கடையாக இருந்தாலும் சரி, பலசரக்குக் கடையாக இருந்தாலும் சரி” ரோட்டு மேலே கடை வைத்து செய்கிற தொழிலுக்கு ஏற்றாற்போல் ஆட்களை சந்திக்க முடியும். இந்த நேரத்தில்தான் நாம் யார் யாரை நம்பி இருக்கிறோம் நம்மைச் சார்ந்தவர்கள் யார் யார் என்பது துல்லியமாகத் தெரியும். அதிலும் இதுபோல குறிப்பிட்ட சிலரை நம்பிய வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை ஓரளவேணும் திருப்தி படுத்தாவிட்டால் தீபாவளி கழிந்ததும் உடனடியாக கடை மாறுகிற சம்பவம் நடைபெறும். ஒன்றிரண்டு பேர்தான் நட்புக்கும் பாசத்திற்கும் அல்லது ஒரு இயலாமையால் ஒரு கடையையே தொடர்பு வைத்துக்கொள்வது, சரக்கு எடுப்பது என்பதைச் செய்வார்கள்.

“சரியண்ணே….சங்கடப்படாதீக….சுத்தி முத்தி எங்க போனாலும் எல்லாப் பசங்களும் நம்ம கடைக்குதாண்ணே வருவாங்க…” தான் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாமோ என்கிற எண்ணம் எழும்பிய நேரத்தில் கடைக்காரருக்கு ஆறுதலாய் பேசினாள்.

“பாப்பம்…” கைடைக்காரரின் ஒற்றை வார்த்தை பதிவால் விசனப்பட்ட முனியம்மாள், சில நிமிடப் பொழுதுகளின் மௌனக் கழியலில் “நாங் கௌம்புறேண்ணே… போன் பன்னுங்க…”

“ரைட்…நாஞ் சொன்னவீடு தெரியும்ல…மதிய சாப்பாட்டுக்குப் பெறகு போய் பேசு…முடிஞ்சா அட்வான்ச புடுச்சுரு….” என்றபோது முனியம்மாவின் புருசன் வந்தான்.

“வணக்கம்…ணே…..” என்று சலாம் வைத்தான்.

“வாய்யா….நீயும் வந்தட்டியா…..” இன்னொரு அத்தியாயம் துவங்குவதுபோல உணர்ந்தார்.

“நீ…என்னா…?” முனியம்மாள் புருசனை புருவம் உயர்த்தி விசாரித்தாள்.

“ம்….கார்த்தியலுக்கு ஒரு வேல இருக்குன்னாக….பாத்துட்டுப் போலாம்னு….கறிக்கடையல ஒக்காந்திருந்தே….”

அவன் பொய் சொல்வது முனியம்மாளுக்குப் புரிந்தது. வெளியில் சுற்றிக் கொண்டிருந்தவன் கடையில் போனஸ் தருவதைக் கேள்விப்பட்டு வந்திருக்கிறான். ஜாக்கெட்டிலிருந்த பணத்தை பத்திரப்படுத்திக் கொண்டான்.

“வேல பேசிட்டு வந்துட்டியா…..”

“ஆள் வரல…சாய்ங்காலமாப் போவனும்….”

“தண்ணியடிக்க ஆள் சேராம சுத்திப்புட்டு வார….என்னாண்டு கேட்டா வேல பேசப் போனன்ற….ஒம் மொசரக்கட்டைக்கிக் கூட வேலையப் பேசி விட்ருவாய்ங்க…”

“யே முனிம்மா….சத்தியமாடி….ஒன்ணாண…..” என்று முனியம்மாளி; தலையில் கைவைத்துச் சொன்னான்.

“யே….கையெடு….பொய்ச் சத்தியம் பண்ணி என்னிய பொலி குடுத்திராத….”

“செரி….என்னா….சாரதிப் பயல திண்டுமுன்டாப் பேசிவிட்டுட்டியமாம்ல…”

“ஒனக்கு சாராயம் வாங்கிக் குடுத்தானாக்கும்….” கேள்விக்கு கேள்வி பதிலாய் வந்தது.

“சேச்சே….காலைல எந்திருச்சு டீ கூட குடிக்கல….பாரு….” வாயை ஊதிக் காண்பித்தான்.

முகத்தைத் திருப்பியவள், “சீ….ஊத்த வாய அங்குட்டுக் கொண்டுபோய் ஊது….காரணமில்லாம நீ சப்போட் பண்ணமாட்டியே…..” என்றாள்.

“போனஸ் குடுங்ணே….” முனியம்மாவை விட்டுவிட்டு அவன் கடைக்காரரிடம் வந்து நின்றான்.

அவன் பின்னாலேயே வந்த முனியம்மாள் அவனது தோளைப் பிடித்து  இழுத்தாள். அங்கெங்க போற…..குடுத்துட்டாரு…”

“ரெண்டு பேருக்குமா….”

“இல்ல….ங்கொய்யா…..ங்கோத்தா… சின்னப்ச்சி, பெரியப்பச்சி எல்லாருக்கும தனித்தனியாத்தே…”

“யே லூசு….நீ, நானு ரெண்டு மாஸ்டருல்ல….ரெண்டு கவர் தரவேணாமா….”

“யே…தீவாளியன்னிக்கு வந்து நீ செலவுக்கு வாங்கிக்கப்பா….” கடைக்காரர் சடவாய்ப் பேசினார்.

“வேணாண்ணே….அதெல்லா தராதீக….டெய்லி ஊத்துதுக…அன்னிக்கி ஊத்தாட்டிதே நட்டமா போகுதாக்கும்….”

“எவ்வளவு குடுத்தாரு….” ஜாக்கெட்டுக்குள்ளிருக்கும் பணத்தைக் கைப்பற்ற ஆவல் கொண்டு அவளை மொய்த்தான்.

அவள் மாராப்பை நன்கு இழுத்துவிட்டு இடுப்புச் சொறுகலை இறுக்கிக் கொண்டாள். “போனசுங்றது கடக்கார பிரியப்பட்டு தாரது…நாம என்னா அவர்கிட்ட சம்பளத்துக்கா வேல பாக்குறோம்….எடுக்குற பாத்தரத்துக்கு கமிசன் குடுத்தர்ரார்ல….ஒருத்தரப்போல ரூவாய சேப்புல வச்சுகிட்டு கெஞ்ச விடுறாரா…… கவர்ல போனஸ் போட்டு கூட்பிட்டு குடுத்துர்ராரு….சரித்தே…..”

“இருந்தாலும் நீங்க பொம்பளைகிட்ட குடுக்குறது தப்புண்ணே….”

“அப்ப நிய்யும் கட மாத்தப் போறியா….” அவர் பேச்சில் தலையிடமலிருந்த கடைக்காரர் தன் முறை வந்ததும் வாய் திறந்தார்.

“ச்சே அதெல்லாமில்லணே….”

“சும்மா சொல்லு…இப்பத்தே சாரதி வந்து காசயும் வாங்கிகிட்டு கடைய மாத்தப் போறேன்ட்டு வேற போயிருக்கான்…”

“அவெங் கெடக்காங்க டுபாக்கூரு…அதெல்லா சட்ட பண்ணாதீங்ணே…. குடிகாரய்ங்க…. குடுச்சா ஒரு பேச்சு, குடிக்காட்டி ஒரு பேச்சு….” முனியம்மாள் சாரதியின் மீதிருந்த வன்மம் தீராது பேசினாள்.

“ந்தா முனி…இதுதே ஓந்தப்பு….ஆம்பளகிட்ட அடக்கமாப் பேசவே மாட்டேன்ற….?

“என்னா….ஆம்பளைன்னாப்ல அக்குள்ல ரெண்டும் தொப்புள்ல ரெண்டும் கொம்பா மொளச்சிருக்கு….கடையாச்கேன்னு அவன சும்மா விட்டேன்….”

முனியம்மாவின் வீராப்பு அவனது புருசனுக்கு சலிப்பைத் தந்தது. எல்லா இடத்தலும் தன்னை மீறுகிறாள். “இருந்தாலும் அவன என்ட்ட விட்ருக்கனும்….நீயா பேசியிருக்கக் கூடாது….என்னாங்ணே….” தன் கருத்துக்கு வலுசேர்க்க கடைக்காரருக்கு அழைப்பு விடுத்தான்.

அவர் வழக்கம்போல மௌனித்தார். இவர்களுக்குள் ஏதோ ஒரு யுத்தம் இதே இடத்தில் நடக்கப் போவதான அறிகுறி அவருக்குத் தென்பட்டது. உறுதியாகும் பட்சத்தில் பேசாமல் தான் கடையை அடைத்துப் போய்விடவேண்டியதுதான்.

“சொல்லிவிட்டானாக்கும்…அதெல்லா இந்த முனிம்மாகிட்ட செல்லாது…சாச்சிக்கு வந்தா ஒனக்கும் ரெண்டு செருப்படி விழும்…”

திடீரென முனியம்மாவின் கண்ணத்தில் அறைந்துவிட்டான் அவளது புருசன். “ஒரேடியாத்தே வாய் பேசுறவ….செருப்பக் கொண்டி அடிப்பயோ….”

ஒரு கணம் கன்னத்தைப் பிடித்தபடி நின்ற முனியம்மா….வாசலில் கிடந்த செருப்பை எடுக்க குனிந்தபடி ஓடினாள்.

நிலைமையின் தன்மை உணர்ந்த கடைக்காரர், கடைப்பையனின் துணையோடு இருவரையும் பிரித்து ஆளுக்கொரு திக்கில் அனுப்பி வைத்தார்.

ஒரு நிமிடத்தில் திரும்பிவந்த முனியம்மா கடைக்காரரைப் பார்த்து கும்பிட்டாள்…. “மன்னிச்சுக்கங்கணே…கடைல வச்சு இப்படி நடந்துருச்சு….” என்றாள்.

சரிசரி எனத் தலையாட்டினார் கடைக்காரர்.

“சாயங்காலம் பேசிட்டு வந்து சொல்றேண்ணே….” என கிளம்பினாள்.

“பாத்தரம் நம்ம கடைலதா எடுக்கனும்….அதுக்கும் சேத்துப் பேசீரு….”

சொல்லும்பேதே கடைக்காரருக்கு குரல் உடைந்தது. கடைப்பையன் தண்ணீர் மொண்டு அவருக்குத் தந்தான்.

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top