கடைத்தேற்றம்

0
(0)

வாகன அடைசலுக்கு முன் சாலையைக் கடக்க வேண்டும். நல்ல டீ என்றால் சுந்தர் கடை தான். அதுவும் தேவருடன். அப்புறம் கோவில். பெத்தாட்சியில் அதிகாலை இனிமையானது. சுடிதார், மிடி, தாவணி, சேலை என விதம் விதமான வருகை. ‘அத்தான் … வாங்க…’ ஏதேனும் ஒரு குரல் எந்கிருந்தோ கேட்கும் ஒன்று.

அப்பா இருபத்தைந்திலிருந்தே பெண் பர்த்தார். முப்பத்தைந்துவரை முயன்றார். பிறகு கண் மூடினார். தேடுதல் அலுப்பு சவ முகத்தில் இருந்தது. அப்பா போன சோகத்தில் அம்மா விழுந்தாள். வெளியில் தெருவில் நடமாடுவதைக் குறைத்தாள்.

வாட்ச் மேன்களுக்குப் பெண் தர ஆட்கள் வருவதில்லை. அதுவும் ஷிப்ட் இல்லாத நைட் வாட்ச்மேன். இளைஞர்கள் காவல் கம்புடன் அலைவதைப் பெண்கள் விரும்புவதில்லை.

கூட்டுறவு வங்கி: வங்கிக்குள் ரேசன் கடைகள். அரசுப்பணி போல் உத்தியோகம். தோட்டந் துரவுகள் பார்க்கலாம். கடை கண்ணிகள் வைக்கலாம். அல்லுச்சில்லுகளில் மனசில்லை.

மாலை அலுவல்கள் முடிந்தபின் ஆட்கள் கழன்று கொள்வார்கள். பின் வருவதெல்லாம் மற்றுமொறு காலைதான். வளாகத்தில் முதல் ஸ்விட்ச் ஆன் செய்வதிலிருந்து கடைசி ஸ்விட்ச் ஆப் செய்வது வரை ஒருகை ஓசைதான்.

தெருவில் பெண்கள் இருக்கவே செய்தார்கள். எண்ணி இருபத்து மூன்று வீடுகளிலும் உயர்நிலை, மேல்நிலை, கல்லூரி என இளசுகள் கண்பார்க்கப் போனார்கள். நூல்மில், புளிக்கொட்டகைகள், நகைக்கடைகள் எனவும் நடந்தார்கள்.

காரண காரியந்கள் தேடி கால்கள் வீடுகளில் நின்றன. தலைக்கு ஒரு வேலை கேட்டுத் தவித்து அலைந்தன. அரிசி, தவசி, மண்ணெண்ணெய் விநியோக நாட்களை விளம்பித் திரிந்தன. எரியாத தெரு விளக்குகள் எரிய வைக்க, சாக்கடை அள்ள, குடிநீர் குழாய்களைச் சரிபார்க்க நகராட்சி பார்த்து நடந்தன. தலைவர் தண்ணீர் கேட்டார். டைரக்டர்கள் ஒன்றைக் கேட்டார்கள் என்று நாளும் ஒருநடை. தண்ணீர் பிடிக்க வரும் கரங்களில் ஒன்று தழுவிக் கொள்ளாதா என்றிருந்தது. எதுவென்றாலும் விகர்ப்பம் கொள்வதற்கு ஆட்கள் இல்லை. பேங்க் வாட்ச்மேன் என்கிற அந்யோன்யம் இருந்தது. எதுவொன்றிருக்கும் வங்கியைச் சார்ந்திருந்த தெருவார் அங்கிருந்து வருபவர்களை விருந்தினர்களைப்போல் வரவேற்றார்கள்.

முத்துத்தேவர் கடலை மில் வாசலில் எதிர்கொண்டார். “வாப்பா கணேசா வேலையெல்லாம் முடிஞ்சுச்சா?” சரியாக பேங்க் எதிரே மில் பிரித்தது சாலைதான். போக்கு வரத்து நெரிசல் இல்லாத பொழுதில் ஒருவர் கண் ஒருவர் காண முடியும். பேச்செல்லாம் முத்துத்தேவரிடம்தான் இருக்கும். “பொம்பளப் புள்ளைகன்னா பதினஞ்சு இருபதுக்குள்ளயும், ஆம்பளப் பயகன்னா இருபது இருபத்தஞ்சுக்குள்ளயும் கழுத்துல மால வுழந்திடனும். முப்பது முப்பத்தஞ்சு, நாப்பது நாப்பத்தஞ்சுன்னு போனமின்னா அறுபது அறுபத்தஞ்சுலதே புள்ள குட்டிகள கட்டிக் குடுத்துப் பேரம் பேத்திகள எடுக்க முடியும். அப்புறம் கம்பூன்றதா கையில தூக்கிக் கொஞ்சுறதான்னு ஒரே கொழப்பமாயிரும். சட்டுப்புட்டுன்னு சம்சாரி ஆகுறதுக்கு வழியப் பாரப்பா…”

ஏழு மணிக்குள் எல்லாம் முடிஞ்சாலும் மதியம்வரை ஊடாடுவதுதான். இராக் காவலாளியின் அலுப்புத்தட்டாது முகத்தில். நிர்மலாவுக்கு பிளாஸ்க்கில் காபி ஊற்றும்போது சற்று நடுக்கம் ஓடும். ‘கண்ணு முழிச்சவன் காலா காலத்துல வூட்டுக்குப் போயி நல்லாத் தூங்கி எந்திரிச்சு வர மாட்டாம…’ தலைவர் முதல் டைரக்டர்கள் வரை சொல்வார்கள். நிர்மலா மேல் ஒரு கண் என்பதைச் சொல்லவா முடியும்.

அவனது கணவன் சாலை விபத்தொன்றில் துண்டு துண்டாகி ஆண்டுகள் மூன்று கடந்திருந்தன. இன்னொரு மாலையை அவள் கழுத்து எப்போது தாங்கும் என்று தெரியவில்லை. ஏற்கும் ஒருவன் அருகிலர் இருப்பதை உணர்ந்தாளா என்பதும் புரியவில்லை. ‘அத்தான் வாங்க’ குயில் குரலில் ஒரு அழைப்பு போதும்.

ஆனால் அசைப்பில் கூட கண்காட்டவில்லை அவள். மெய் வருத்தம் பாராதிருந்தாள் தன் போல் ஒரு கிளார்க் என்றாலும் ஆள் கணக்கில் சேர்த்திருப்பாள். அதற்கு படித்த பத்து போதாது. மூன்று லட்சம் தந்தால் காவல் கம்பை விடலாம் என்கிறார் தலைவர். டைரக்டர் போர்டு வந்தபின் பணம் தகுதி என்றானது. காட்டை வீட்டை ஒத்தி வைத்தாலும் லானாக்கள் சேரும் என்பதில்லை. எல்லாம் முடிந்து போர்டு கைவிரித்தால் பழனி முருகன் கோலம்தான். நிர்மலா தட்டில் காசைப் போடுவாள்.

டீ கடை சாலைகளில் முத்துத்தேவர் மிரட்டிக்கொண்டிருந்தார். “இருபத்தேழு இருபத்தெட்டு மாதிரி தெரிஞ்சாலும் உண்மையில் ஒனக்கு முப்பத்தேழு முப்பத்தெட்டு ஆச்சுதில்ல… என்னாதே ரஜினி காந்த் வேசம் போட்டாலும சாயம் வெளுத்திருமில்ல…” தேவர் எப்போதும் ஒற்றைப்படையாய் முடிப்பதில்லை.

முத்துத்தேவர் மகள் கலயம் கொண்டு வந்தாள். அழகு அவளிடமும் இருந்தது. கடலை மில் வாசலில் தேவருடன் பேசிக் கொண்டிருந்தால் நிமிஷம் தங்க மாட்டாள்.  சோத்துச் சட்டியை நீட்டிவிட்டு சிட்டாகி விடுவாள். முன்முகம் ஓரளவு என்றாலும் பின்னழகில் பெரிதும் ஈர்த்தாள். கூலி வேலைப்பெண். ‘அத்தான் வாங்க…’ என்றழைப்பதில் சிரமம் ஏதுமில்லை… முத்துத்தேவரும் மகள் விரும்பி ஒன்றை மறுப்பவரும் இல்லை.

அம்மா ரொம்பவும் இளைத்துப் போனாள். அதிக காலம் மண் மீது தங்குபவள் போல் இல்லை. அதற்கு இரையாவதற்கென்றே துரும்பாகி வந்தது உடம்பு. அப்பா கண் மூடியபின் ஏன் கண்திறந்திருக்க வேண்டும் என்று நினைத்தாள். ஓடியாடி தானும் ஒருத்தியை மகனுக்கொன்றாக்க முடியவில்லை. ‘பிண்டம் பிடிச்சுப் போட்டவனே… என்னய ஏங் கொண்டு போகல…’ என்றாள்.

நிறைய நிறைய கல்யாணப் பத்திரிக்கைகள். திரும்பிய புறமெல்லாம் ஒன்று தெரிந்தது. உடன் படித்து சிலரும் பேரக் குழந்தைகளையும் பார்த்தனர். இருபதில் முடித்த குமரேசன் உண்மையில் இப்படித்தான் வந்தான்.

“என்னப்பா இது… ஓம் புள்ளையா?…”

“என்னா லந்தா… இந்த வயசுல கைப்புள்ளையா? பேத்திப்பா…”

“பேத்தியா?..” வியப்பில் விக்கித்தது.

“ஆமாப்பா பேத்திதே… இது அதிசயமா? இருபதுல கல்யாணம்… இருபத்தொன்ல மக பொறந்தா… பதினாறுல கட்டிக்குடுத்தேன்… பதினேழ்ல புள்ளப் பெத்தா…”

“அடப்பாவமே… இது கொடுமையில்லியா?… நீ முடிச்சதே பால்ய கல்யாணம்… ஓ மகளுக்கு அதுக்கும் கம்மி… கொழந்தைக்குக் கொழந்தையா?…”

“இருக்குப்பா… என்ன செய்ய… எனக்குந் தப்புன்னுதா தெரியுது… சர்க்கார் கணக்குப்படி ரெண்டு வருஷம் மூணு வருஷம் தாக்காட்டி முடிக்கலாந்தே… கை கால் ஓயுறதுக்குள்ள அல்லாத்தையும் பாத்துறணுமில்லையா…?”

ஒப்பவில்லை நூற்றாண்டுக்கு முன் அறியாமையில் பால்ய கல்யாணம். இப்போது அறிந்தும் அதற்கு காரணங்கள்.

குமரேசன் கேட்டான்.. “கல்யாணச் சாப்பாடு போடாமயெ காலத்த முடிச்சிருவ போல்ருக்கு…”

அதிர்ந்து நோக்கத்தான் முடிந்தது. ‘அத்தான் வாங்க…’ என்கிற ஓர் அழைப்புக்காகத் தவம் கிடப்பதை அறிவானா அவன்.

“முன் வழுக்கை வேற வுழுந்துக்கிட்டுருக்கு. பின் வழுக்கையும் வுழுந்து நடு மண்டையும் போச்சுதுனா ஒருத்தியும் கழுத்த நீட்ட மாட்டா… பாத்துக்க…” கை நடுங்க வழங்கிய காப்பியை ஆம்பிளை சிங்கமாய் வாங்கிப் பருகிய படியே அளந்தான் குமரேசன்.

வேறு ஒருவன் என்றால் நிலைமையே வேறு. துவைத்துத் தொங்கப்போட்டிருக்க முடியும்.

குமரேசன் ஒன்று முதல் பத்து வரை உடன் படித்தவன். ஒரே டெஸ்க். பிராய சாலந்தொட்டு ஐந்து பத்து உதவியவன். நீச்சல் தெரியாமல் ஆழத்திற்குச் சென்றபோது தூக்கி வந்து காப்பாற்றியவன். இன்றிருக்கும் உயிர் உடம்பு அவனுடையது.

“ஒனக்குத் தெரிஞ்ச ஆராச்சும் இருந்தாச் சொல்லு… யாரா இருந்தாலும் பரவால்ல… சாதி மதம்…”

குமரேசன் குறுக்கிட்டான்: “அதேஞ் சின்ன வயசுலர்ந்து நீ பாக்குறதில்லையே… அதிருக்கட்டும்… கொஞ்சம் டை அடிச்சுக்க. முடிய ஒயேடியாச்சீவி மொத்தமும் போகாமப் பாத்துக்க. முடிஞ்சா விக்கு கிக்கு வச்சுக்க. பாப்பம்…”

பின் அவனை எங்கேயும் காணோம்… ஒரே ஊரில் இருந்தும் தற்செயலாகக் கூடத் தென்படவில்லை. செல் நம்பரை வாங்கி வைத்திருக்கலாம்.

வீடு தேடிச் சென்ற போது, திருப்பூர் குடிபெயர்ந்ததாய்ச் சொன்னார்கள். நல்ல பிள்ளைக்கு அடையாளம் சொல்லாமல் போவதுதான்.

அம்மா இப்போது கட்டிலில் கிடந்தாள். அவளுக்கு நோயொன்றுமில்லை என்று டாக்டர் கதிரவன் சொன்னான். மனக்கவலை மாற்றலரிது என்றான். இப்போது டாக்டர் எவரும் வீடு தேடி வந்து வைத்தியம் பார்ப்பதில்லை. இழுத்துக்க பறிச்சுக்க என்றாலும்  கிளினிக் வந்தால்தான் எல்லாம்.

கதிரவன் முகத்துக்கு முகம் இருந்தவன். எட்டாம் வகுப்பில் பிளேடால் கை கிழித்தான். அழுகையானால் அழுகை, அத்தனை அழுகை. ‘அம்மாவிடம் சொல்லாதே’ என்றான். மெடிக்கலில் மாத்திரை வாங்கிக் கொடுத்தான். பிளாஸ்டர் ஒட்டினான். அப்போதே அவன் அரை டாக்டர். ஆப்பிள் ஆர்லிக்ஸ் என்று அம்மா முன் வைத்தான். அம்மா ஆப்பிளையும் ஆர்லிக்ஸையும் மாறி மாறிப் பார்த்தாள். கதிரவனைப் பார்த்து புன்னகை செய்தாள். ‘நல்ல வேள காப்பாத்துனப்பா…’ என்றாள்.

நிர்மலாவிடமோ முத்துத்தேவர் மகளிடமோ பேசலாம்…  என்னதான் ஆகிவிடும். அம்மா கயிற்றுக் கட்டிலைவிட்டு எழ அதைத்தவிர வேறு வழியில்லை. கல்லூரிப் பெண்கள் அவரவர்க்குரிய வழியில் காதலைத் தேடிக்கொள்வார்கள். படித்து முடித்தாலும் நல்ல வேலையில் இருப்போரைத் தேர்வு செய்ய அம்மாக்கள் காத்திருப்பார்கள்.

வங்கித் தெரு வீடுகளில் தொடர்பறுக்க வேண்டும். தண்ணி வெண்ணிகள் எடுக்கக் கொடுக்க என்று போவதை விட்டொழிக்க வேண்டும். தெரு விளக்குகள் எரிந்தால் என்ன, தொலைந்தால் என்ன, சாக்கடைகள் நிறைந்தால் என்ன வழிந்தால் என்ன, குடிநீர்க் குழாய்களில் தண்ணீர் வந்தால் என்ன போனால் என்ன?

முத்துத்தேவர் மகன் கடலைமில் களத்தில் காதல் கொண்டான். மருமகள் தோல் தைப்பவரின் மகள் என்று முத்துத்தேவர் பார்க்கவில்லை. அந்தத் துணிவு பிடித்திருந்தது. தேவர் மருமகளை மகளைப்போல் பார்ப்பவர். களத்தில் மருமகளும் மகனும் கடலை கிண்டிக் கொண்டிருந்தால் காபி வாங்கித்தருவார். ஆந்த அஸ்திரம் போதும் என்றிருந்தது. ஒரு தலை ராகம் இசைத்துக கொண்டிருந்தால் அம்மாவின் புல் மேட்டில் முகாரி பாட வேண்டியிருக்கும்.

‘ஏ’ சென்டரிலிருந்து ‘சி’ சென்டருக்குப் படங்கள் வந்தன. தேவருடன் படம் பார்ப்பது அத்தனை இனிமையானது. ஆளுக்கொரு சமயம் டிக்கட், சமோசா காபியும் முறை வைத்து என்றானது. தேவருடன் கட்டக்கடைசியாய்ப் பேசினால்தான் உண்டு. அதற்கான நேரமும் இதுதான்.

“அம்மா சாகப் பொழய்க்கக் கெடக்குது…”

தேவர் அதிர்ந்து பார்த்தார்…” அடக்கிறுக்கா அம்புட்டு மோசமாயிருக்குன்னு சொல்லவேயில்ல?”

“சொல்லி என்னாகப் போகுது…”

“சொல்லி என்னனாகப் போகுதா?… ஆஸ்பத்திரி கீஸ்பத்திரின்னு பாக்கலாமில்ல…”

“அதுனால ஒன்னுந்தீராது… அது கவல பூராம்…”

தேவர் குறுக்கிட்டார்: “ஒனக்கு ஒன்னும் நடக்கலைன்னுதான…?”

வார்த்தைகள் ஓடவில்லை. தேவர் முகம் தெளிவாக இருந்தது. அவர் சொன்னார்: “அந்த நிர்மலாப் பொண்ணு மேல ஒனக்கு ஒரு கண்ணுன்னு எனக்குத் தெரியுமே..”

தேவர் மகள் மீதும் ஒரு கண் என்பது அவருக்குத் தெரியாது.

களேபரமான கண்களை தேவர் ஊடுருவினார். இடைவேளை முடிவதற்குள் எல்லாம் பேசியாக வேண்டும். பல ஆண்டுகள் முடியாதது பத்து நாட்களில் முடியலாம்; பத்து நிமிடத்தில் முடியலாம். அவர் மகள் குறித்து கேட்க நினைத்தால் நிர்மலாவுக்குள் வருகிறார். எதுவோ ஒன்று, அம்மா எழ வேண்டும். அமரத்துவக் காதல் என்று எதுவுமில்லை.

தேவர் டீயைக் கையில் வாங்கிக் கொண்டார். சமோசாவைப் பிய்த்துக் கொள்ளுமாறு கொடுத்துக் கொண்டே சொன்னார்: “ஒரு தடவ ரெண்டு தடவன்னு இல்ல… பத்துப் பதினஞ்சு தடவ முயற்சி பண்ணிருப்பே…” –மெது மெதுவாய் டீயை உறிஞ்சினார். எதிர் நிற்பவரின் இதயத்தை பிடிப்பவர் அவர்.

மீண்டும் படம் போடுவதற்குள் விளம்பரப் படங்கள் காட்டினார்கள். படத்தொடர்ச்சிக்கு முன் இன்னுமொரு இடைவேளை. அங்வொன்றும் இங்கொன்றுமபக இருந்த இருந்த ஆட்கள் அரங்கிற்குள் நுழையத் துவங்கினார்கள்.

“அடிமேல் அடிவச்சா அம்மியும் நகரும்பாங்க… அது மாதிரிதே. நிர்மலா வீட்ல வேற ஆளுமில்ல. புருஷன் ஏற்கனவே போயாச்சு. அப்பாவும் அம்மாவும் பனி லிங்கத்தத் தரிசிக்கப் போயி வெள்ளத்துல போயிட்டாங்க… இப்ப சித்தியோட ஆதரவுதே… ஓ நடவடிக்கையும் அந்தப் பொண்ணுக்கு பிடிச்சிருக்கு…” தேவர் படபடக்காமல் பேசியபடியே கரம் கோர்த்தார்: “உள்ள போகலாமா..”

இன்ப அதிர்வுகளில் ஒரு நடனம் துளிர்த்து வந்தது. அம்மா கயிற்றுக் கட்டிலை விட்டு எழுந்தாள். திரையரங்கினுள் விளம்பரப் படங்கள் முடிந்திருந்தன. மறு கரத்தை நிர்மலா பிடித்துக் கொண்டிருந்தாள்: “அத்தான் வாங்க, படம் போட்டுட்டாய்ங்க..”

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top