கடைசி வசனம்

0
(0)

பிறந்த மண் வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து வந்திருந்த செய்திகளையும் படங்களையும் பார்த்துக்கொண்டே வந்தவனுக்கு கணேசன் பதிவிட்டிருந்த செய்தியை மட்டும் கடந்துசெல்ல முடியவில்லை. கணேசன் இன்று காலையிலேயே பதிவிட்டிருந்தான்.

 

அலுவலகப் பரபரப்பில் நின்று நிதானித்து வாசிக்க நேரமில்லை. அலுவலகம் தொடர்பாகவே எட்டு குரூப்பில் உறுப்பினர். அதில் இரண்டு குழுக்களுக்கு அட்மின் இவன்தான். அலுவல் சார்ந்த குரூப்களின் தகவல்களை மட்டுமே படித்து அலுத்து, புளுத்து பஸ் பிடித்து வீட்டுக்குப் புறப்படும்  நேரத்தில்தான் நண்பர்களின் வட்டத்தின் வாட்ஸ்அப் குரூப்களைப் பார்வையிடுவது  இவனது வழக்கம்.

 

மிஸ்டுகால் லிஸ்ட்டில்  வெங்கட் இருந்தான். இவன் வெங்கட்டை அழைத்தான்.

“மாமா கணேசன் அனுப்புன மெசேஜை படிச்சிங்களா…?”

”ம்ம்.. படிச்சேன்..”

”நம்ப முடியுதா…?”

”நம்ப முடியலை.. மாப்ளே…… எப்பிடி.. இப்பிடி…”

“தெரியில மாமா… சரி…. இந்த வருசம் பங்குனி பொங்கலுக்கு ஊருக்குப் போற திட்டம் இருக்கா..?

”இருக்கு  இருக்கு… பொங்கலுக்குக்கூட ஊருக்குப் போகாட்டி நம்மள நிரந்தர அகதி லிஸ்டுல சேத்திருவாங்க மாப்ளே…”

“சரி மாமா… நைட்டு வாட்ஸ்அப்ல வாங்க…”

வெங்கட் போனைத் துண்டித்து விட்டான். பேருந்தில் தனக்குப் பக்கத்தில் இருப்பவனை ஒருமுறை பார்த்தான். அவன் இதையெல்லாம் கவனிக்காமல் ஏதொவொரு சிந்தனை ஓட்டத்தில் லயித்துக்கிடந்தான்.

 

இவனுக்கும் ஊர் பற்றிய எண்ண ஓட்டங்கள் ஓடத் தொடங்கின. ஊரை நினைத்தாலே பல பல அடையாளங்கள் வந்து போகின்றன. மந்தைக் கரடு, வைகையாறு, பள்ளிக்கூடம், பிள்ளையார் கோயில், உப்போடை, சினிமா தியேட்டர் இப்பிடி சொல்லிக்கொண்டே போகலாம்.

 

ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை இருக்கும். கதைக்குள் பல கதைகள் இருக்கும். இவன் ரெண்டாம் வகுப்பு படிக்கும் போதுதான் சினிமா தியேட்டர் கட்டுவதற்கு வானம் தோண்டப்பட்டது.  தியேட்டர் கட்டும் வேலைகளை ஊர் சனமே திரண்டு வந்து, திருவிழா பார்த்தது போல பார்த்துச் சென்றது. இந்தக் காலம் மாதிரி கட்டிடம் கட்டற பணிகளை மறைத்து தடுப்புக் கட்டும் வழக்கம் அப்போதில்லை.

 

நல்லா விஸ்தாரமாக அரை ஏக்கர் நிலத்தில் தியேட்டர் கட்டப்பட்டது. இந்த ஊர் மட்டுமில்லாமல் சுத்து வட்டாரத்திலிருந்தெல்லாம் ஆட்கள் வந்து வந்து பார்த்திட்டுப்போனாங்க. தியேட்டர் மொதலாளியும் அவரோட மகன்களும் மத்தவங்க வந்து பாக்குறதை பெருமையா நினைச்சு பொறுமையா விளக்கம் சொன்னாங்களே தவிர யாரையும் கோபிக்கவில்லை.

 

ஊருக்கு வடக்குப் பக்கம் மெயின் ரோட்டிலிருந்து நூறடி உள்ளே தள்ளி இருபது தென்னை மரங்களும், ரெண்டு பூவரசு மரங்களும் அப்பிடியே நிக்க, அதைச் சேதப்படுத்தாமல் தியேட்டரின் மெயின் கேட் அமைக்கப்பட்டது. கிராமங்களிலிருந்து வரும் மாட்டு வண்டிகளை நிறுத்தவும், மாடுகளுக்கு தீவனம் போடவும் அந்த காலியிடம் விடப்பட்டது.

 

தியேட்டர் கொஞ்சங்கொஞ்சமா வளர வளர அதோட பிரம்மாண்டமும் வளர்ந்திட்டே இருந்தது. மாடிக்கு ஏறிச்செல்ல ரெண்டு பக்கமும் படிக்கட்டுகளும், வராண்டாவில் நீண்டு நிற்கும் போர்டிகோவை தாங்கிப்பிடிக்க ரெண்டு மீன்கள் தலை கீழாய் நிற்பது மாதிரி பில்லர்களும் அமைக்கப்பட்டது.

 

இவனுக்கு அந்த மீன்களும், மீன்களின் கண்களாகப் பதிக்கப்பட்ட கோலி குண்டுகளும் ரெம்பப் பிடிக்கும். ஒவ்வொரு முறையும் அந்த மீன்களைத் தடவிப்பார்க்கவே போர்டிகோ பக்கம் செல்வான். பெரிய காம்பவுண்ட் கட்டி, நான்கு டிக்கெட் கவுண்டர்களும், மூன்று பெரிய கேட்டுகளுமாய் தியேட்டர் கம்பீரமாக திறப்பு விழாவுக்குத் தயாரானது. ”தேனி மதுரையில கூட இவ்வளவு விஸ்தாரமா தியேட்டர் இல்லைப்பா… நம்ம ஊருக்கு இந்த தியேட்டரால யோகம் வந்திருக்கு….” என்று ஆப்ரேட்டர் கிருஷ்ணன் டீ கடையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார். படம் ஓட்டுற அவரையும் சேர்த்து மொத்தம் இருபத்தைஞ்சு பேருக்கு வேலை குடுத்தாங்க. இது இல்லாம தியேட்டருக்குள்ள காரா கடலை, முருக்கு மிட்டாய், சுக்குமல்லி, டீ,காபி இப்பிடி விக்கிறவங்கன்னு மொத்தம் நாற்பது பேருக்கு வேலை.

 

“கரண்ட் வந்திருச்சு… எழுந்திருச்சு உள்ள வாங்க…” என்று மனைவி  குரல்கொடுத்த பிறகே எழுந்து வீட்டுக்குள் சென்றான். இன்னும் மூன்று மணிநேரந்தான் கரண்ட் இருக்கும். அதற்குள் சாப்பிட்டுத் தூங்கி விடவேண்டும்.  “எல்லா வீட்டுலேயும் யு.பி.எஸ். இருக்கு…. நம்ம வீடு மட்டும்தான் இருட்டுல கெடக்கு…” என்று முற்றுப்பெறாமல் பேசிவிட்டுச் சென்றாள் மனைவி. இந்த முற்றுப்பெறாத வார்த்தைக்குள் ஆயிரம் அர்த்தம். குடும்பத்தின் அத்தியாவசியத் தேவையைக்கூட பூர்த்தி செய்யாத… செய்யத் தெரியாத…. நீயெல்லாம் ஒரு ஆபீஸரா…? என்று தொடங்கி, உன்னை தப்பா கல்யாணம்  பன்னிக்கிட்டேனோ….‘ என்று முடியும் வரையில் நூறு கேள்விகளுக்கான தொடக்கம்தான் அந்த முற்றுப்பெறாத மொழி.

 

“ஏங்க…. ஒங்ககிட்ட சொல்ல மறந்திட்டேன்.  ஊருல சினிமா தியேட்டரை இடிச்சு கல்யாண மண்டபம் கட்டிக்கிட்டு இருக்காங்களாம்.. ‘ஊர்ஸ் குருப்புல‘ ஜெகதா போஸ்டிங் போட்டிருக்கா. ஒங்களுக்கு பார்வேடு செஞ்சேனே… பாக்கலையா…? ஆமா…. நாம கடைசியா என்ன படம் பார்த்தோம்…?” என்று கேட்டு விட்டு, பதிலுக்குக்கூட காத்திருக்காமல் வீடடுக்குள் சென்று விட்டாள். அடுத்த பவர்கட் வருமுன் தூங்க வேண்டிய நிர்பந்தம் அவளுக்கு. இவனுக்கு உறக்கம் வரவில்லை.  புரண்டுப்புரண்டு படுத்தான். இது போன்றோ… வேறெது போன்றோ உறக்கம் வரா பல இரவுகளை தியேட்டரில்தான் கழித்திருக்கிறான்.

 

தியேட்டர் வேலையெல்லாம் முடிந்து ஒரு சுப முகூர்த்த நாளில் திறப்புவிழா நடைபெற்றது. எல்லா ஊருக்கும் பத்திரிகை கொடுத்து, ஊர் பெரியவங்களையெல்லாம் வரவழைச்சு காலை முதல் காட்சி இலவசக் காட்சியாக தேவர் பிலிம்ஸ் தயாரித்த “தெய்வம்” படம் திரையிடப்பட்டது. அந்தப் படத்தில் வரும் “மருதமலை மாமணியே முருகய்யா..” என்ற பாடலே தியேட்டரின் ஆரம்பப் பாடலாகிவிட்டது.

 

தரை டிக்கெட்  இருபத்தைந்து பைசா, பெஞ்ச் டிக்கெட் நாற்பது பைசா, எழுபத்தைந்து பைசாவுக்கு சேர் டிக்கெட், ஒரு ரூபாய்க்கு பால்கனி டிக்கெட். பால்கனியில் நூறு பேர் உட்காரலாம். ஓரளவு வசதியானவர்கள், அரசு பணியாளர்கள், புதுசாய் கல்யாணமானவர்கள் இப்பிடி பலரும் பால்கனியில் உட்கார, அப்புராணி சப்புராணிகள் தரை டிக்கெட்டுக்கும், பெஞ்ச் டிக்கெட்டுக்கும் அடித்து மல்லுக்கட்டுவார்கள். இவன் தரை டிக்கெட்தான் வாங்குவான்.  எட்டாம் வகுப்பு படிக்கும்போது எல்லா டிக்கெட்டையும் ஒன்றாக்கி, ஒருரூபாய் டிக்கெட் எடுத்தால் எங்க வேண்டுமானாலும் உட்கார்ந்து படம் பார்க்கலாம். என்று அறிவித்த பிறகு இவன் சேர் போட்ட  வடக்குப் பகுதியில் உட்கார்ந்து படம் பார்க்கத்தொடங்கினான். (ஏன் அந்த இடத்தைத் தேர்வு செய்தான் என்பது தனி கதை).

 

இவனுக்கு மட்டுமல்ல, ஊரைச் சுற்றியுள்ள எல்லா உள்காட்டு சனங்களுக்கும் இந்த தியேட்டர்தான் பொழுதுபோக்கு. மூன்றாவது, நான்காவது ரிலீஸ் படங்கள்தான் திரையிடப்படும். பழைய படங்களும் திரையிடப்படும். எம்.ஜி.ஆர். படமும், சிவாஜி படமும் மாத்தி மாத்தி திரையிடுவார்கள். ரெண்டு படங்களுக்கும் எந்தப்படம் அதிக நாள் ஓடும் என்ற போட்டி இருக்கும். “இன்று போல் என்றும் வாழ்க”  பதினைஞ்சு நாள் ஓடியது. ”தங்கப்பதக்கம்” பதினெட்டு நாள் ஓடியது. அதற்குப் பிறகு ”பதினாறு வயதினிலே” இருபத்திரெண்டு நாள் ஓடியது. திரையிடப்படும் படங்களைப் போலவே தியேட்டரின் உருவமும் மாறி நிற்கும். ரஜினி, கமல் படங்கள் ஓடும்போது தியேட்டரே றெக்கை கட்டி நிற்கும். நான்கு காட்சிகளும் இளைஞர் கூட்டம் மொய்த்துக்கிடக்கும். சிவாஜி படமோ.. எம்.ஜி.ஆர். படமோ ஓடும் நாட்களில் நரைத்த தலைகள் முளைத்து நிற்கும்.

 

 “ஆபீசுக்குப் போற மாதிரி ஐடியாவே இல்லையா…..?” என்று சத்தம் கொடுத்துக்கொண்டே மனைவி போர்வையை உருவியபோதுதான் கண் விழித்தான். நீண்ட நேரம் புரண்டுப் புரண்டு படுத்து கடைசியில் எப்போது தூங்கினான் என்றே தெரியவில்லை. அரக்கப் பரக்கக் குளித்து, அலுவலகம் கிளம்பி, பேருந்தில் உட்கார்ந்தவன் மொபைலை  எடுத்து வாட்ஸ் அப் தடவத்தொடங்கினான். “பிறந்த மண்” குரூப்பில் தியேட்டரைப் பற்றியே எல்லாரும் பதிவு போட்டிருந்தார்கள். அவனவன் வயசுக்குத் தகுந்த மாதிரியும், சக்திக்குத் தகுந்த மாதிரியும் பதிவுகள் வந்த விழுந்துகொண்டேயிருந்தது. சிலர் தியேட்டரை இடிக்கும் படத்தையும் போட்டிருந்தார்கள். அறுபது வயதைக் கடந்தவர்களுக்கும் முப்பது வயதைக் கடந்தவர்களுக்கும் வாழ்வில் நீக்க முடியாத, சொல்லமுடியாத பல செய்திகளைச் சுமந்து நிற்கும் சாட்சியாக தியேட்டர் இருந்தது தெரிய வந்தது. ஒரு மழை நாளில் ‘ஜகன்மோகினி‘ படம் பார்த்துக் கொண்டிருந்தபோது, தியேட்டரை விட்டு வெளியேறவிடாமல் பேய்மழை பெய்தது. வெளியே வரவும் முடியாமல் உள்ளேயே தூங்கவும் முடியாமல், தியேட்டர் மதிலெல்லாம் ஜகன்மோகினி ஆடுவது போல பிம்பம் மனதில் ஓட, மூடிய கண்களோடு நடுங்கிக்கிடந்த அந்த நாளும், அவனவன் வாழ்வின் முதற்காதலும், முடிவுற்ற காதலும், படம் பார்த்து தன்னம்பிக்கை வளர்த்துக் கொண்டதாகவும் இப்படி பல பதிவுகளை  வாசிக்க வாசிக்க நீர் கோர்த்து நின்றது கண்கள். சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டான்.

 

ரெண்டாவது ஆட்டம் படம் பார்க்கத்தான் இவனும் இவன் கூட்டாளிகளும்  பெரும்பாலும் செல்வார்கள். அதுக்கு காரணமும் இருக்கிறது. ‘அவளும்‘ அவளின் அம்மா, தங்கை, பக்கத்துவீட்டுப் பெண்களோடும் வருவாள். அவள் படம் பார்க்க வரும் சேதி தெரிந்ததும் பரபரப்பாகி விடுவான். துணைக்கு ஆள் பிடிப்பான். எல்லோருக்கும் டிக்கெட் எடுப்பான். யாருமே வராவிட்டாலும் டீக்கடை சரவணனையும் டுடோரியல் காலேஜ் அழகரையும், ரமேஷையும் பிடித்துக் கொள்வான். சரவணன் டீ கடையிலிருந்து மிக்சரும், சேவும் பார்சல் கட்டிக்கொண்டு யாருக்கும் தெரியாமல்  ‘அவளுக்கு‘ கொடுத்தனுப்புவான். படம் போட்டதும் சரவணன் தூங்கி விடுவான். இவனுக்கு எப்படா படம் முடியும் என்றிருக்கும். மிகவும் மோசமான படமாக இருந்தாலும் தூங்காமல் பார்ப்பான்.  முடிந்ததும் அவசர அவசரமாக மெயின் கேட்டுக்கு பக்கத்தில் வந்து நிற்பான். ‘அவள்‘ வந்ததும் ஒரு பார்வை பார்ப்பான்.  இருவரும் கண்களால் பேசிக் கொள்வார்கள். அவ்வளவுதான். அடுத்த படம் வரைக்கும் இதையே மனதில் ஓட்டிக் கொள்வார்கள்.

 

”சார்… ஸ்டாப் வந்திருச்சு எறங்கலையா..?“ கண்டக்டர் சத்தம் கொடுத்த பிறகே நினைவு தட்டியது. அவசர அவசரமாய் இறங்கி அலுவலகம் சென்றான். வழக்கத்திற்கு மாறாக அவனால் அலவலகப் பணியில் லயிக்க முடியவில்லை. லீவு போடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, பக்கத்து சீட் முத்துக்குமார் இவன் பக்கம் வந்து, “மேட்னி ஷோவுக்கு டிக்கெட் இருக்கு. போகலாமா…?” என்றான். அரை நாள் லீவு போட்டுவிட்டு இருவரும் சினிமாவுக்குப் போனார்கள்.

 

இந்த  ஊருக்கு  வந்த பிறகு நான்கு படங்கள் பார்த்திருக்கிறான். ஒருமுறை குடும்பத்தோடும் போயிருக்கிறான். இவன் பெரிய சினிமா ரசிகன் இல்லை என்ற போதிலும் சினிமா பார்ப்பதில் அலாதி பிரியம் கொண்டவன். எந்த ஊரில் சினிமா பார்த்தாலும் உள்ளூர் தியேட்டரில் படம் பார்த்த காலங்கள்தான் மனதில் ஓடும்.

 

கடைசியாக சுந்தர் கல்யாணத்திற்கு ஊருக்குப் போயிருந்தபோது தியேட்டரில் படம் பார்த்தான். “தவமாய் தவமிருந்து” படம் ஓடிக்கொண்டிருந்தது. கூட்டமே இல்லை. ஐம்பது பேராவது சேர்ந்தால் படத்தை ஓட்டலாம் என்று மேனேஜர் அங்குமிங்கும் அலைபாய்ந்து வாசல் பார்த்து காத்திருந்தார். இவனும் இவன் நண்பர்கள் பதினைந்து பேரும் தியேட்டருக்குள் நுழைந்தபோது ஏகப்பட்ட வரவேற்பு. எட்டு டிக்கெட் கவுண்டர் இருந்த தியேட்டரில் ஒரேயொரு டிக்கெட் கவுண்டர்தான். அதுவும் மெயின் கேட் வழியாகவே……. அதில் மேனேஜரே டிக்கெட் குடுத்தார். ஆப்ரேட்டர், மேனேஜர், வாட்ச் மேன் சுப்பு தவிர யாருமில்லை. முருக்கு மிட்டாய் விற்கக் கூட ஆளில்லை. “யேவாரம் இல்லைன்னு யாரும் கட போடலை கண்ணு…..” என்று சுப்பு சொன்னார். இவன் வழக்கமாய் உட்காரும் இடத்தைத் தேடிப்பிடித்து படம் பார்த்தான். அதற்குப் பிறகு பலமுறை ஊருக்குச் சென்றாலும் படம் பார்த்ததில்லை. எந்தப்படம் போட்டாலும் கூட்டம் கூடுவதில்லை. தியேட்டர் நஷ்டத்தில் ஓடுவதாகப் பேசிக்கொண்டார்கள்.

 

படம் முடிந்து தியேட்டரைவிட்டு வெளியே வந்த இவனிடம் ” ஏன் ஒரு மாதிரியா இருக்கே..?“ என்று முத்துக்குமார் கேட்டான்.

ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுவிட்டு,  ”ஒன்னுமில்லை… எங்க ஊரு தியேட்டரை இடிக்கிறாங்களாம்… அதான் ஒரு மாதிரியா இருக்கு…” என்றான்.

”ஓஓஓ… ஆமா…  நீ அடிக்கடி சொல்லுவயே…. அந்தத் தியேட்டரையா…?” என்றான்.

“ம்ம்… அந்தத் தியேட்டர்தான்.வசூல் ஆகலைன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க….. இப்ப இடிக்கிறாங்களாம்..!”

“அடடா….  தியேட்டர் கட்டி எத்தனை வருசமிருக்கும்..?”

“நாற்பது வருசமிருக்கும்…”

“நாற்பது வருசமாச்சா…. ரெம்பப்பழைய தியேட்டரா..? சரி விடு. நம்மளுக்கு என்ன….. இடிச்சா இடிக்கட்டும்…” முத்துக்குமார் சொன்னான்.

”அப்பிடியெல்லாம் என்னால இருக்க முடியலையே….. என்னோட வாழ்க்கையில அந்த தியேட்டர் பல சம்பவங்களுக்கு சாட்சியா இருந்திருக்கு…..” என்று சொல்லி நிறுத்தினான். எதுவும் பேசாமல் நீண்ட யோசனையோடு நடந்தான். பழைய சம்பவங்கள் மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தன.

 

இருவரும் பேசிக் கொள்ளாமல் நடந்தார்கள். நீண்ட தூரம் நடந்தும் இவன் ஒன்றும் பேசாமல் மௌனமாகவே வந்தான். இவனது மௌனம் முத்துக்குமாருக்கு ஏதோ ஒன்றை நினைவுபடுத்தியது. இவன் அடுத்த நிலைக்குப் போய்விடக்கூடாது என்பதற்காகவே பேச்சை மாற்றினான்.

 

“அந்த தியேட்டர் ஸ்கிரீன்ல  கடைசியா பேசுன வசனம் எதுவா இருக்கும்…? படம்  முடிஞ்சு கடைசியா வெளியில வந்தது யாரா இருக்கும்…? கடைசியா திரையில தெரிஞ்ச முகம் யாருடையது…? படம் நிறுத்துனது தெரியாம வந்து திரும்பிப்போன கடைசி நபர் யார்….? தியேட்டர்ல வேலை பார்த்தவங்க இப்ப என்ன பன்றாங்க….?  இதையெல்லாம் யார்கிட்டயாவது கேட்டயா….? ”

முத்துக்குமார் கேட்க.. கேட்க இவன் மனத்திரையில் தியேட்டரின் பிம்பம் வந்து வந்து மறைந்தது… அதில் சில பல சம்பவங்களும், முகங்களும்.

(கல்கி நினைவு சிறுகதைப்போட்டி- 2018 பிரசுரத்திற்குத் தேர்வான கதை)

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top