கடன்

5
(1)

மகன் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தான். அவனது பாடத்திட்ட ஆய்வுக்கு சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஒரு மாதம் தங்கி ஆய்வு செய்ய வேண்டும். ரூபாய் பதினைந்தாயிரம் ஒரு வாரத்திற்குள் அனுப்ப வேண்டும். என்ன செய்யறது. நானும் மனைவியும் யோசனை பண்ணினோம்.

இரண்டு பேரும் அரசு வேலைதான் பார்க்கிறோம். வரவு எல்லைக்குட்பட்டது. செலவுக்கு எல்லை இல்லை. இரண்டு பேரும் சேமநல நிதியில் பகுதி இறுதித் தொகையாக அதிகபட்சம் எடுத்தோம். மனைவியின் தாலிச் செயினைத் தவிர மற்ற நகைகள் பாடம் படிக்கப் போயின. அப்படி இப்படின்னு புரட்டி மகனது மூணு வருஷப் படிப்பை ஓட்டி விட்டோம்.

போன மாசம் தான் இருவரும் மீண்டும் சேமநலநிதியில் கடன் எடுத்து ஏற்கனவே பாடம் படிக்கப் போன நகைகளுக்கு வட்டி கட்டி திருப்பி மறுபடியும் வைத்தோம். மூழ்காமல் தடுத்தோம். சில்லறைக் கடன்களை அடைத்தோம். மனைவியிடம் வேறு பொன் நகைகள் இல்லை. கவுரவத்தைக் காப்பாற்ற மின்னும் நகைகள்தாம் உண்டு. அங்கே இங்கேன்னு அக்கம் பக்கம் கைமாற்று கடன் கேட்டால் ஏற இறங்கப் பார்த்துச் சிரிப்பார்கள். அது கடன் சுமையைவிட கொடுமையான துன்பம்.

புருவத்தை உயர்த்தியும் சுருக்கியும் யோசனை பண்ணி னோம். அப்படி இப்படின்னு ஒரு ஐந்தாயிரம் தேறும். மீதி பத்தாயிரம்?

“ஆமாம் மகாராஜண்ணன் ரெண்டு பவுனு சங்கிலி வாங்கிட்டுப் போனாரில்லை? வருஷம் அஞ்சு ஆச்சு! அதை வாங்கிட்டு வந்தால் சுலபமா சமாளிச்சிடலாமில்லை” மனைவி முகத்தில் ஆயிரம் வாட்ஸ் ஒளி.

“நல்ல யோசனைதான். அவரு ஏலச்சீட்டு நடத்தி குடும்பத் தோடு ஊரை விட்டு ஓடினவரு. இப்போ எப்பிடி இருக்காரோ.. அது உதவாதுன்னு இத்தனை வருஷம் மறந்து போன விஷயம். இப்போ உதவுமா?”

“ஏங்க நல்லதா நினைங்க, நாளைக்கு சனிக்கிழமை தானே? நீங்க திருநெல்வேலி கிளம்புறீங்க. என்ன பண்ணுவீங்களோ.. ஏது பண்ணுவீங்களோ.. சத்தியாகிரகம் பண்ணியாவது ரெண்டு பவுனு நகையோட வர்றீங்க. இன்னிக்கு விலைக்கு பதினாலாயிரம் பெறும். பத்தாயிரம் ரூபா கிடைச்சாக் கூடப் போதும். எங்காவது எப்படியாவது புரட்டிக் கொடுக்கச் சொல்லி வாங்கிட்டு வர்றீங்க”

மனைவி உத்தரவு போட்டுவிட்டாள். அவள் சொல்வது நியாயம் தான். காரியம் சித்திக்கணுமே. விடிந்ததும் குல தெய்வத்தை வேண்டிக்கிட்டு வண்டியேறினேன்.

ரோடுகள் அகலப்படுத்துறாங்க. ரோட்டோரம் நின்ன புளிய மரங்களும், ஆலமரங்களும் வேர்பிடுங்கி விழுந்து கிடந்தன. பரிதாபமாக இருந்தது. கண்ணுக்கும் மூக்கிற்கும் எரிச்சலைத் தந்தது வெயில். ராட்சச எந்திரங்களின் உறுமல்கள். புழுதிகளோடு பறக்கும் பாலித்தீன் காகிதங்கள். அரைக்கால் சட்டைகளோடு வெந்து அலையும் சாலைப் பணியாளர்கள். கரும் ரத்தமாய் உறைந்த தார்த் தாரைகள்.

மகாராஜன் ஓரளவு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். தாமிரபரணி பாசனத்தில் கொஞ்சம் நஞ்சையும் உண்டு. நல்ல விழுதுவிட்ட பெரிய குடும்பம்தான். தொழில் நிமித்தமாக இந்த வறண்ட செட்டிநாட்டுப் பூமியில் வந்து காலூன்றி விட்டனர். நகைத் தொழில் செழிப்பாக நடந்த காலத்தில் இங்கும் வீடு வாசல் பெருகியது. தெற்கே இருந்து வந்து மாசத்திற்கு பத்து நாள் இருபது நாள்னு சொந்த பந்தங்கள் முகாமிடு வார்கள். கறி, கோழின்னு செட்டி நாடு ருசியோடு பந்திகள் நடக்கும். நெல்லைச் சீமையின் கேலிப் பேச்சு வெற்றிலையோடு மணக்கும். மகாராஜனின் அப்பா காலத்திலிருந்தே இந்த விருந்து தொடர்ந்தது. நாங்கள் பக்கத்து வீட்டில் இருந்தோம். மகாராஜன் என் மனைவியைத் தங்கை என்றும் என்னை அய்த்தான் என்றும் அழைப்பார். நாங்கள் சாதியில் வெவ்வேறாக இருந்தாலும் மாமன் மைத்துனன் உறவு முறையிலும் பழகினோம். அவர்கள் வீட்டு விசேஷச் சாப்பாடு எங்கள் வீட்டிலும், எங்கள் வீட்டு விசேஷச் சாப்பாடு அவர்கள் வீட்டிலும் மணக்கும். பிள்ளைகளும் பாசத்தோடு பழகுவார்கள்.

மகாராஜனின் சாந்தி ஜுவல்லரி நன்றாகத்தான் ஓடிக் கொண்டிருந்தது. மகாராஜன் எல்லாரிடமும் நன்றாகப் பழகக் கூடியவர். வியாபாரத்தை இன்னும் பெருக்க ஊரின் மையமான பகுதியில் இடம் வாங்கி கடை கட்டினார். ஷோகேஸ் முழுதும் நகைகளை நிரப்பி அமர்க்களப்படுத்தினார். வாடிக்கையாளர் களைப் பெருக்க மாத, வார, வருஷ ஏலச்சீட்டுக்களை நடத்தினார். சாந்தி ஜுவல்லரி ஜொலித்தது. ஏலச்சீட்டில் பெருந்தொகைகள் எடுத்த சில பிரமுகர்கள் ஒழுங்காகப் பணம் கட்டவில்லை. மற்றவர்களுக்கு நாணயமாக நடக்க ஊரில் உள்ள நிலம் வீடுகளை விற்றார். ஜொலித்த கடை கொஞ்ச கொஞ்சமாக இருட்டுக் கடையாக ஆனது. குறிப்பிட்ட நேரம்தான் திறந்தார். அப்புறம் திறக்காமலே போனார்.

மகாராஜன் வியாபாரம் நல்ல நிலையில் இருந்தபோதே எங்களுக்கு இடம் மாற்றல் கிடைத்து காரைக்குடி வந்து விட்டோம். ரெண்டு வருஷம் கழித்து ஒருநாள் மகாராஜன் தாடியோடு பக்திப் பழமாக வந்தார். “ஏலச்சீட்டு எடுத்தவர்கள் எல்லாம் ஏமாற்றி விட்டார்கள். கடையை விற்று கடன்களை அடைத்துவிட்டேன். அவசரமாக ஒரு ஐயாயிரம் வேணும். வீட்டை விற்றதும் தருகிறேன்.” வார்த்தைகளை மென்று மென்று பெருமூச்சுவிட்டார். அவர் இருந்த நிலையைப் பார்த்ததும் எங்களுக்குக் கண்ணீர் முட்டியது. ஆசுவாசப்படுத்தி சாப்பிடச் சொன்னோம். குடும்பத்தாரை விசாரித்தோம், கண்ணீர் பொங்க, “நல்லா இருக்காங்க” தழுதழுத்த குரலில் சொன்னார்.

அவரிடம் சீட்டுப் போட்டுத்தான் மனைவி இரண்டு பவுன் செயின் செய்திருந்தாள். கையில் ரொக்கப் பணம் இல்லை. சங்கிலியைக் கொடுத்தோம். மனுஷன் மறுநிமிஷம் பறந்து விட்டார். எங்களுக்கு இருந்த வேலைப் பளு, வாழ்க்கைப்பாடு களில் மூழ்கிவிட்டோம்

அதற்குப் பின் ஏதேனும் நல்லது கெட்டதுன்னு விசேஷங் களுக்கு அந்த ஊருக்குப் போவதுண்டு. அவரைப் பற்றி விசாரிப்பதுண்டு. அவர் வீட்டை விற்றுவிட்டு குடும்பத்தோடு திருநெல்வேலி போயிட்டதாகச் சொன்னார்கள். அவரது நெருங்கிய நண்பர்களிடம் விசாரித்தோம். அங்கே ஜங்ஷனில் கண்ணம்மன் கோவில் தெருப்பக்கம் இருப்பதாகச் சொன் னார்கள். அவர் செல்வாக்ககாக இருந்த காலத்தில் அவரது மாமியார் வீட்டு விசேஷத்திற்கு அவருடன் அங்கே போய் வந்த ஞாபகம். இப்போது தேடிப்போய் கொண்டிருக்கிறேன்.

“வாங்க மருமகப்பிள்ளை … இருங்கோ பலகாரம் சாப் பிடறயளா” என்று மகாராஜன் அம்மா கேட்கும் பாங்கினி லேயே பசிக்காவிட்டாலும் சாப்பிட ஆவல் தூண்டும். மகாராஜனின் மனைவி லட்சுமியும் அண்ணன் அண்ணன்னு அன்பொழுகக் கூப்பிடுவாள். பிள்ளைகள் மாமா மாமான்னு பிரியத்தோடு சுற்றி வருவார்கள். நேசத்தோடு எங்கள் பிள்ளை களோடு விளையாடுவார்கள்.

இப்படிப் பாசப்பிணைப்புள்ள குடும்பத்தைப் பார்க்கப் போகிறோம் என்ற உற்சாகம், பயணக் களைப்பைக் குறைத்தது.

“வண்ணாரப்பேட்டை இறங்குங்க. டவுனுக்குப் போறவங்க இங்கேயே இறங்கிக்கலாம்” என்ற குரலும் பதறியடித்து இறங்கும் சக பயணிகளின் பதற்றமும் எழுப்பிவிட்டன. நானும் இறங்கினேன். ஜங்ஷன் போய் அங்கிருந்து நடந்தேன். ‘பிள்ளைகளுக்கு ஏதாச்சும் வாங்கிட்டுப் போகலாமா’ என்ற எண்ணம். ‘அட நாம என்ன விருந்துக்காகப் போறோம்? கொடுத்த கடனை அஞ்சு வருஷம் கழிச்சு ஒண்ணுக்குப் பாதியா வாங்கப் போறோம்’ என்று மனைவியின் குரல் மனசுக்குள் கேட்டது.

நினைவைத் திரட்டி தெருவைக் கண்டுபிடித்துவிட்டேன். வீட்டருகே நெருங்க நெருங்க ஒரு சிறு கூட்டம் தெரிந்தது. அவர்கள் முகத்தில் ஏதோ துயரம் ஒட்டியிருந்தது. நெஞ்சு பதறியது. மெல்ல வீட்டு வாசலருகே போனேன். பக்கத்து வீட்டுப் பெண்கள் விலகி வழிவிட்டார்கள். உள்ளே வீட்டில் இருள் கப்பிக் கிடந்தது. என் தலையைப் பார்த்ததும் திகைப் பான நிசப்தம். மகாராஜனின் மனைவி லட்சுமி ஓடிவந்து “அண்ணே” எனச் சோகம் இழைய அழைத்தாள். நான் உள்ளே நுழைந்தேன், கவுட்டுக்கள் தலைவைத்திருந்த மகாராஜன் விசுக்கென்று எழுந்து, தழுதழுத்த குரலில், “வாங்க அய்த்தான்” என்றார். லட்சுமி விளக்கைப் போட்டாள்.

கோரைப்பாய் படுக்கையில் நைந்த சேலையாக அத்தை அடங்கிப் போய் கிடந்தாள். தலைமாட்டில் எண்ணெய் தீபம். காதில் முகத்தில் ஒளியில்லை. இருட்டு. வறுமை கவர்ந்த ரத்தமிழந்த கறுப்பு. மகாராஜனிடமிருந்து என்னை மீட்டு லட்சுமி சமையல் கட்டுக்குள் அழைத்துச் சென்றாள். காலில் விழுந்து கதறினாள். எழுப்பினேன். மூணுநாளாகப் பட்டினி. அத்தை பயணமாகிவிட்டாள். நாங்கக் காற்றைக் குடிச்சு உசிரைப் பிடிச்சு வச்சுக்கிட்டிருக்கோம். செத்த அத்தைக்கு காரியம் பண்ண காசுக்கு எங்கே போறது? பிள்ளைக வயிறை நனைச்சு உசிரைக் காப்பாத்தறது எப்படி?” புலம்பித் தேம்பினாள். எனது திகைப்பும் இறுக்கமும் கரைந்தது. மெல்ல மகாராஜனை வெளியே அழைத்து வந்தேன்.

தெருமுனைக் கடையில் டீ வாங்கிக் கொடுத்தேன். தயங்கி தயங்கிக் குடித்தார். எலும்பும் தோலுமாய் தாடி அப்பிய முகமாய் மிரள மிரள விழித்தார். “தங்கச்சி, பிள்ளைக எப்படி இருக்காங்க?” என்று கேட்டார். அது என்னை மேலும் உருக்கியது. “ஒரு நண்பர் வீட்டு விசேஷத்துக்கு வந்தேன். அப்படியே உங்களைப் பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்” என்றேன். குறுகுறுப்போடு என் கையைப் பற்றிக் கொண்டார்.

“அத்தை உடம்புக்கு சவுரியமில்லாம இருந்தாகளா?”

“என்னைப் பெத்த தாய்க்கும், நான் பெத்த பிள்ளைகளுக்கும் கஞ்சி ஊத்த வக்கில்லாதவனாகிவிட்டேன். அம்மாவுக்கு வயசாயிருச்சு. பசிதாங்க தெம்பில்லாம உசிரை விட்டுருச்சு. பிள்ளைகளையாவது காப்பாத்தணும். ரூவா இருந்தா குடுங்க” பொலபொலன்னு கண்ணீர் விட்டுக் கையை இறுகப் பற்றிக் கொண்டார்.

நான் பாக்கெட்டைத் தடவினேன். பத்தாயிரம் ரூபாய் வாங்கி வரும் கனவுல இருநூறு ரூபாயோடு வண்டி ஏறியிருந்தேன். மனசு பிசைந்தது. கைப்பையைத் தடவினேன். ஏடிஎம் கார்டு தென்பட்டது. மெல்ல வாசலருகே அழைத்தப் போனேன். அவரை நிறுத்திவிட்டு தானியங்கி காசு வழங்கும் அறைக்குள் நுழைந்தேன். மாசக் கடைசி கையிருப்பு 1300 இருந்தது. ரூபாய் 1200 எடுத்தேன். பக்கத்து ஓட்டலில் பிள்ளைகளுக்கு சாப்பாடு பொட்டலங்கள் கட்டி வாங்கி கொண்டு. அவரை அழைத்து வீட்டுக்குப் போனேன். வீட்டில் அழச் சத்தில்லாமல் இறுகிப் போய் கிடந்தனர். லட்சுமியிடம் சொல்லி சமையற்கட்டில் அவர்களைச் சாப்பிடச் செய்தேன். பிள்ளைகள் முகத்தில் உயிர்க்களை திரும்பியது.

லட்சுமி, மகாராஜன் இருவரையும் அழைத்து ஆயிரம் ரூபாய் கொடுத்து, “ஆகவேண்டியதைப் பாருங்க” என்றேன். “சொந்தபந்தம்னு அனுபவிச்சவங்க எல்லாம் விட்டுட்டுப் போயிட்டாங்க. கூடப் பிறந்த பிறப்பாட்டம் வந்து உசிரு கொடுத்திட்டீங்கண்ணே” என்று லட்சுமி கதறியது, எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. உயிரற்றுக் கிடந்த அத்தையைப் பார்த்தேன். நைந்த பழைய சேலை போர்த்திய எலும்புக் கூடாகக் கிடந்த அத்தையின் உடல் திடீரென்று உயிர்பெற்று, “நல்லா இருங்க மருமகப்பிள்ளை” என்று சொல்வது போலிருந்தது. தீபச் சுடர் அசைந்து அசைந்து அதை உறுதிப் படுத்தியது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

1 thought on “கடன்”

  1. A friend in need is a friend indeed என்னும் வாக்கியத்திற்கு உரிய கதை கடன் என்னும் சிறுகதை.
    கடனை திருப்பி கேட்கும் எண்ணத்தோட போன நண்பர் தன்னிடம் உள்ளதையும் கொடுத்து உதவுவது என்பது மனிதத்தின் உச்சம். சிறப்பானதொரு கரு. எழுத்து நடையோ எளிமை. காட்சி படுத்திய விதமோ சிறப்பு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: