கசடற

0
(0)

அனிருத் வீட்டுப் பாடங்களை எழுதிக்கொண்டிருந்தான். ‘மகன் கோவிந்த், மந்திரியைப் பிடித்து, எம்.பியை பிடித்து பேரப்பிள்ளை அனிருத்தை கேந்திரிய வித்யாலாயா பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்த்து விட்டான். பேரப்பிள்ளை காலையில் எழுந்ததும் குளித்து ஆச்சாரமாய் உட்கார்ந்து இந்தியையும், சமஸ்கிருத்ததையும் சிரத்தையாக படிக்கிறான், எழுதுகிறான். அப்பாவிடமும், அம்மாவிடமும் அப்போதைக்கு அப்போது சந்தேகங்கள் கேட்கிறான். தனியார் பள்ளி கட்டண நெருக்கடியிலிருந்த அவன் தப்பிவிட்டான் என்று பேரப்பிள்ளையை, சேரில் உட்கார்ந்தபடியே பெருமையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் ருக்குமணிபாட்டி.

கோவிந்த் கண்ணாடியில் கண்ணும், தொலைக்காட்சி செய்தியில் காதுமாய், நின்றபடி முகச்சவரம் செய்து கொண்டிருக்கிறான். “டிவியை பார்த்தபடி சவரம் செய்யறேளேஞ் காயம் பட்டுடப்போறது. ஜல்தியா முடிச்சிட்டு, குளிச்சிட்டு வாங்கோ, நாழியாகிறது. டிபன் ரெடி பண்ணிட்டேன்” என்றாள் மருமகள் மோகனா.

“இதோ ஆச்சடி, வந்திட்டேன்” என்றபடி சவரக் கருவிகளைக் கழுவி டப்பாவொடு அலமாரியில் வைத்து விட்டு, குளிக்க துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டான். மார்பில் தொங்கிய பூணூலை வளையமாய்ச் சுருட்டி இடது காதில் மாட்டிக்கொண்டு குளியலைறைக்குள் நுழையப்போனான்.

“அப்பா எனக்கு ஒர டவுட்டு”

“இதோ ஸ்நானம் பண்ணிட்டி வந்துடுறேன்” என்றான் கோவிந் ருக்குமணி பாட்டிக்கு சிரிப்பு வெடித்தது. “பேரனை அணைத்து இரு கன்னங்களையும்; தடவி விரல்களால் நெட்டி முறித்து அவனது கன்னதைக் கிள்ளிக் கொஞ்சினாள் என் சமர்த்து! இப்படித்தான் உன் தோப்பன் உன் வயசில உன் தாத்தாவிடம் சந்தேகம் கேட்டுண்டே இருப்பன். தாத்தா சில சமயம் பொறுமையாகக் சொல்வார்! சில சமயம் போடா அப்புறம் சொல்றேன்னு விரட்டுவார்!

“ஆமாம், நல்ல அப்பா, நல்ல பேரப்பிள்ளை” என்று முனங்கினாள் மருமகள் மோகனா. மாதாந்திர நாள்காட்டி காற்றில் பாதம் தூக்கி ஆடி குதூகலித்ததுக் கொண்டிருந்தது.

“என்னென்ன கேள்விகள் பாட்டி, அப்பா கேட்டார்”

“ஆமாம் இத்தனைக் காலத்திற்கு அதெல்லாமுமா ஞாபகமிருக்க! உன் தோப்பன் அப்பப்ப கேட்பான். உங்க தாத்தா மழுப்பலா விரட்டுவார். அதான் ஞாபகம்! “அது ஒண்ணு கூடவா ஞாபகமில்லை ? “இதோ சொல்றேன் ஒரு நாள் சாயரட்சே தாத்தா கோயிலுக்கு போயிட்டு கால் அலம்பி வீட்டுக்குள்ளே கூட நுழையலை, உங்க தோப்பன் கோவிந்த் கேட்டான். ஏப்பா எல்லா நாளும் சூரியன் கிழக்கே உதிக்குது, பௌர்ணமி அன்னைக்கு மட்டும் சந்திரன் கிழக்கே உதிக்கிறது. அமாவாசை கழிச்சு மூன்றாம் பிறையிலிருந்து சந்திரன் மேற்கிலிருந்துதானே கிழக்கு பக்கமாபோகிறது? ஏம்பா இப்படி மரி மரி வருது அப்படின்னு கேட்டான். உங்க தாத்தாவுக்கு நடந்து வந்த ஆயாசம், சுர்ருன்னு கோபம் மூக்குமேல் வந்துட்டது. அது, அப்படித்தான்டா, துக்குரிதனமாலாம் கேட்கப்படாது என்று கையை ஓங்கியபடி சொல்லவும் அதிலிருந்து உன் தோப்பன் கேள்வி எதுவும் கேட்கிறதில்லை!

இப்போ நீ என்ன கேள்வி கேட்கப்போற…”

பாட்டி, நான் அப்பாவிடமே கேட்ருக்கிறேன் பாட்டி” கோவிந்த் மின்னல் வேகத்தில் குளித்துவிட்டு வந்தான். சந்தன நிற தேகத்தில் நீர்த்தி வலைகள் உருண்டோடி தெறித்தன.

“நின்னு நிதானமா தலையை, உடலைத் துவட்டிட்டு வரப்படாதோ, என்ன பிள்ளை”

“செத்தே சும்மா இருங்கோ, அவா அவா அவசரம் அவாளுக்கு” மருமகள் சந்தர்ப்பம் பார்த்து குறுக்கிட்டாள்.

அப்பா, அப்புறம் மறந்துரும்பா” என்றான் அனிருத் “இருடா செல்லம், மறந்தா அது சந்தேகமில்லை. ஒரு சந்தேகத்திற்கான தெளிவான பதில் தெரியும் வரை மறதி வராது. மறக்கவும் படாது இதோ வந்துடறேன்”. என்று பூஜை அறைக்குள் சென்று நித்திய பூஜை முடித்து நெற்றி, கழுத்து முதுகெல்லாம் வியர்வை பூக்க வந்தான். உடலைத்துடைத்து அலுவலக உடைகள் அணிந்து உணவு மேஜையில் அமர்ந்தான். “வாடா செல்லம், சாப்பிட்டுகிட்டே பேசுவோம்!”

“அப்பா, நாம பிராமணாளா அப்பா” “ஆமாம்ப்பா! அதிலென்ன சந்தேகம்? “இல்லப்பா, நீங்க சவரம் பன்றேள். துணி துவைக்கிறேள். பாத்ரூம் கழுவுறேள். இதெல்லாம் சூத்திராள் தொழில்னு இதோ எங்க பாட புஸ்தகத்திலே இருக்கேப்பா” “பார்த்தியா பிள்ளை கேட்கிறதை. அதான் கடனை உடனை வாங்கியாவது அனிருத்துக்கு உபநயனம் பண்ணிருடான்னு தலையில் அடிச்சிகிட்டேன். கேட்டியா உபநயனம் பண்ணியிருந்தா, அவன் இப்படி எல்லாம் கேட்பானா?”

“அம்மா செத்தநாழி சும்மா இருங்கோ”

“ஏன்ப்பா பாட்டி திட்றா… நான் கேட்டது தப்பா? புஸ்தகத்தில் இருக்கிறது தப்பா?”

“இல்லடா செல்லம், நீ கேட்டது சரியான கேள்விதான்! அந்தக் காலத்தில் நீ புஸ்தகத்தில் படிச்ச மாதிரி நாலு வர்ண சமூக அமைப்ப இருந்துச்சு இப்போ அப்படி இருக்கத்தேவை இல்லை. எல்லா சமூகத்தைச் சேர்ந்தவாளும் வேலைப்பிரிவினை இல்லாம எல்லா வேலையும் செய்யுற காலம் இது. அப்படின்ன நீ ஏம்பா பூணூல் போடற”, “அது ஒரு அடயாளம் தான்! இதுவும் காலப்போக்கில் தேவையில்லாமல் போகலாம்”

“அப்பா, அப்படின்னா இது நல்ல காலமா, கெட்டகாலமா?” ருக்குமணி பாட்டி உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு “ஆமாம் கலிகாலம்” என்றபடி கோவிந்தை முறைத்தாள் “அப்படி இல்லடா செல்லாம்! முந்தினகாலத்தைவிட இது முன்னேறின காலம்! கல்வி, கேள்வி, தொழில்முறை இதெல்லாம் முன்னேற முன்னேற இந்த சமூக அமைப்பும் மாறும் முந்தினகால நடைமுறைகளும் மாறும்”

“ஒருகாலத்தில் பாட்டி மாதிரி இருக்கிறவா மொட்டைத் தலையாய் இருப்பாள், என்னை மாதிரி உள்ளவா எல்லாம் உச்சிக்குடுமி வைத்திருப்பா. இப்போ, பாட்டி கொண்டை போட்டுக்கறாஞ் நாம் கிராப் வச்சுக்கிறோம்!. உன் அம்மா மாதிரி உள்ளவா பாப்கிராப் கூட வச்சுக்கிறா” என்றதும் ருக்குமணி பாட்டியின் நினைவில் பழைய நிகழ்வுகள் நிழலாடின.

ருக்குமணியின் கூந்தல் இடுப்புக்கு கீழே நீளும்! கோவிந்தின் அப்பா சீனுவாசனுக்கு குடுமி அவிழ்ந்தால் நடுமுதுக்கு கீழ் படர்ந்து விழும். கொண்டை போட்டார் என்றால் பின்னந்தலையில் தேங்காயை பொருத்தியது போல் இருக்கும். தலைகுளித்து சாம்பிராணிப்புகை போட்டு கூந்தல் உலர்த்தும் போது இருவரிடையே ‘யாருக்கு கூந்தல் அடர்த்தி என்று போட்டி விவாதமே நடக்கும்! சீனுவாசன் ஈரத்தலையைத் துண்டால் துவட்டி கூந்தலை பிடரிக்குப் பின்னால் தள்ளி கைகளால் தட்டினால் மேகத்துக்குள் சடசடவென இடி உரட்டும் சத்தம் போல கேட்கும். ருக்குமணி வெள்ளிசிக்கெடுப்பான் மூலம் விரித்த கூந்தலை சிக்கெடுத்தால் மின்னல் வெட்டுவது போல் ஒளிரும்! “உங்க ஆத்துல தலைகுளிச்சன்னிக்கு இடி மின்னால் தான்” என்று பக்கத்து வீட்டு மாமி கேலி பண்ணுவாள் ‘ஹும் அவர் பிராணன் பிரிஞ்ச்சு வாழ்க்கையில் இடி விழுந்து கருகின மாதிரி தலைவியை மொட்டை அடித்துவிட்டார்கள்…’ ருக்குமணி பாட்டி பெருமூச்சு விட்டாள். கண்ணீர் திவலைகள் உருண்டோடின.

“ஏன் பாட்டி அழறே வாஞ்சையோடு கண்ணீரைத் துடைத்தபடி கேட்டான் அனிருத்.

அம்மாவின் முகத்தைக் கவனித்தான் கோவிந்த். அம்மாவின் முகத்தில் ஒருயுக பிரளயத்தின் மாற்றமே நினைவு மேகங்களாகி கண்ணீர்த்துளிகளை உகுத்ததாக உணர்ந்தான். அனிருத்தை தோளில் தட்டி அணைத்துக்கொண்டான்.

பாட்டி பேரனை ஜாடைகாட்டி அழைத்து காதில் கிசுகிசுசுத்தாள். வியர்வை பொங்க, தோசை வார்த்து எடுத்து கொண்டு வந்த மருமகள் அங்கே நடப்பதை உற்று கவனித்தாள். மாமியார் ஏதோ புதுக்கதையை அரங்கேற்றப் போகிறாளோ?… என்ற படபடப்பு அவள் நெஞ்சில்…..

பாட்டியின் மடியிலிருந்து விலகிய அனிருத், கிளிக்குஞ்சு போல் துள்ளி குதித்தபடி “அப்பா, தாத்தாகிட்டே நீ நிலா பத்தி கேட்டியாமே, அது என்னப்பா?” வாயிலிருந்த தோசையை விழுங்கியபடி கடகடவென்று சிரித்தான் கோவிந்த். “மெல்ல, மெல்ல விழுங்கிட்டு சிரிங்கோ. புறையேறி ஏதாவது ஏடா கூடமாயிறப்போறது” பதறினாள் மனைவி. சுவற்றில் ஒட்டியிருந்த பல்லி ஒன்று உச் கொட்டியது “ஏனப்பா, பிறைநிலா மேற்கிலிருந்து உதிக்கிறது. ஏன், நோக்கும் தெரியாதா?”

“அப்பாவை நான் கேட்டேன். அவர் ஞானவான் தான் அன்றைக்கு அவருக்கிருந்த பிழைப்பு சூழல்ல அதெல்லாம் சிந்திக்க நேரமில்லை ”.

“என்னப்பா நீ ஏதேதோ சொல்றே”

“செல்லம். சூரியனும், சந்திரனும் அதனதன் இடத்திலிருந்து மெல்ல சுற்றுகிறது. பூமி, சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவே சூரிய, சந்திரனைவிட கொஞ்சம் வேகமாய் தன்னைத்தானே சுற்றிவருகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி சுறுறுவதால் ஏற்படும் தோற்றம் தான் சூரியன் கிழக்கில் உதிப்பது போலவும் மேற்கில் மறைவது போலவும் நமக்கு தெரிகிறது. இதேபோல் பூமியினருகே உள்ள சந்திரனின் நகர்வில்தான் முழுநிலா கிழக்கிலும் பிறை நிலா மேற்கிலும் தோன்றுவது மாதிரி தெரிகிறது! நீ பெரியவனாகி, படிக்க படிக்க இதெல்லாம் விளங்கிடும்” என்று மகனை இடது கையால் அணைத்துக் கொண்டான். பாட்டி அவிழ்ந்த தன் கூந்தலைக் கோதி முடிந்து கொண்டாள்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top