ஓர் அனுபவம்

0
(0)

கடுங்குளிர் எனது தூக்கத்தைக் கெடுத்தது. உட்கார்ந்து, சுற்றிலும் படுத்திருக்கும் நண்பர்களைப் பார்த்தேன். எல்லோரும் பல கோணங் களில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். நள்ளிரவு குமுளியின் இயற்கை காட்சிகளை சுற்றிப் பார்த்த அலுப்பு நண்பர்கள் படுத்திருந்த கோணங்களில் தெரிந்தது.

மரச் சட்டங்களாலும் பலகைகளாலும் அடைக்கப்பட்ட மாடி அறைகளில் ஒன்று. குளிருக்கு இதமாக இருக்கட்டும் என்று தீப்பெட்டியையும் சிகரெட் பாக்கெட்டையும் எடுத்துக் கொண்டு கதவைத் திறந்து வெளியில் வந்தேன். வீதியை நோக்கியுள்ள மாடியின் நடைபாதையில் நின்றேன்.

நிலவின் வெளிச்சத்தில் அந்த இயற்கைக் காட்சிகளே பார்த்தவுடன் “தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள் அங்கதனிற் கண்டு விழித்தேன் அட்டாவோ …. அடடா …”

என பாரதியைப் போல் பாட நினைத்தேன். அந்த மரங்களும் செடி, கொடிகளும் மலைப் பகுதிகளும், அவைகளுக்கு ஒப்பனை செய்தது போல் நிலவின் ஒளியும், மரங்களின் நிழலும் தரையில் படர்ந்து பலவிதமாக காட்சிகளைக் காட்டியது.

தூக்கம் கெட்டதும் நல்லதிற்குத்தான் என நினைத்தேன். இந்தக் காட்சிகளையெல்லாம் கவிதைகளாகப் படைக்க முடியவில்லையே யென்றும், கவிஞனாக இல்லையேயயன்றும் வருத்தப்பட்டேன். ஆனாலும் எனது சிந்தனை சிறகடிக்க முயற்சித்தது.

ஒரு தாயும் மகளும் போல் மரங்களின் தோற்றம். கந்தலாடை தான் அணிந்திருக்கிறார்களோ. நிலவின் வெளிச்ச ஊடுருவல் ஏழ்மையாகக் காட்டுகிறதே. ரம்மியமான கற்பனை வரவில்லையே என்று பார்வையை நகர்த்தினேன். மரங்களின் அணிவகுப்பு வேலையில்லா இளைஞர்களின் ஊர்வலமோ?

அவர்களுக்கு மேலே இருப்பது நம்பிக்கை நட்சத்திரமோ?

என்ன இது, இயற்கையின் அழகை ரசிக்க நினைத்தால் இப்படிப்பட்ட கற்பனைகள் வருகிறதே. கொஞ்ச நேரம் கற்பனைகளை நிறுத்தி, இயற்கையை ரசிக்கலாம் என நினைத்தேன். நடைபாதையின் முடிவில் திருப்பத்தில் உள்ள மரப்படிகளில் யாரோ கீழே இறங்கும் சத்தம் எனது ரசனையைக் கலைத்தது.

சிறுநீர் கழிப்பதற்காக நானும் அந்த வழியாகக் கீழே சென்றேன். மரங்கள் அடர்ந்திருப்பதால் சரியாக வெளிச்சம் தெரியவில்லை. தட்டுத் தடுமாறி ஓர் ஓரமாகச் சென்று சிறுநீர் கழித்துவிட்டு, குளிருக்கு இதமாக சிகரெட்டைப் பற்ற வைத்தேன்.

மாடியிலிருந்து பார்த்ததற்கும் கீழேயிருந்து பார்ப்பதற்கும் பலகாட்சிகள் வேறு விதமாகத் தெரிந்தது. அந்த அழகையும் ரசித்தேன். அப்படி எவ்வளவு நேரம் தான் சென்றதோ தெரியவில்லை. எனக்கு முன்னால் யாரோ கீழே இறங்கும் சத்தம் கேட்டதே. இங்கு ஒருவரையும் காணோமே. கம்பி வேலி போட்டிருப்பதால் வெளியே செல்வதற்கும் வேறு பாதையில்லையே. நன்றாகப் பார்ப்போம் என நினைத்து தீக்குச்சியை உரசி, மெதுவாக சுற்றிலும் பார்த்தேன். யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. காற்று வீசியதால் தீக்குச்சியும் அணைந்து விட்டது. நிலவும் மங்கலாக இருக்கிறது. மீண்டும் தீக்குச்சியை உரசிப் பார்த்தேன். ஓரளவுக்குத் தான் தெரிந்தது. பார்த்த வரையிலும் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. மரப்படிகளில் இறங்குவது நன்றாகக் கேட்டதே. ஆனால் யாரும் இல்லையே.

எனக்கு லேசாக வேர்க்க ஆரம்பித்தது. மீண்டும் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டேன். லேசாகச் செருமிக் கொண்டு “யாருங்க” என்று மெதுவாகக் கேட்டேன் பதிலில்லை.

சிறிது நேரம் பேசாமல் நின்றேன். காற்றில் மரங்கள் அசையும் சத்தம் ஒரு மாதிரியாகக் கேட்டது. பிறகு ஒரே நிசப்தம்.

கைலியை உயர்த்தி முகத்தின் வேர்வையைத் துடைத்தேன். என்ன செய்வதென்று தெரியவில்லை.

“அஞ்சி யஞ்சிச் சாவார் இவர்

அஞ்சாத பொருளில்லை அவனியிலே”

என்று பாடிய பாரதியின் மேல் வெறுப்பு வந்தது.

“அவனுக்கென்ன லேசா பாடிருவான் என் நெலம ஏற்பட்டாவுல தெரியும்” என நினைத்துக் கொண்டேன்.

கந்தலாடை அணிந்த தாயும் மகளும் கோரமான உருவத்தில் என்னைப் பார்ப்பதாகத் தெரிந்தது. இளைஞர்களின் அணிவகுப்பு, பிசாசுகள் என்னை நோக்கி வருவதாகத் தெரிந்தது.

சுற்றிப் பார்க்க வந்த இடத்தில் இப்படி சிக்கிக் கொண்டோமே, யாராவது தூக்குப் போட்டு செத்திருப்பார்களோ தலைவிதிப்படி ஆயுட் காலம் முடிவதற்குள் இப்படி செத்திருந்தால் பேயாக அலைவார்களாமே. பின்பக்கமாக வந்து அடித்துப் போட்டு விடுமோ.

“ஐயோ” என்று அலறிவிட்டேன். விரலைச் சுட்ட நெருப்பு சிகரெட்டோடு கீழே விழுந்தது. அந்த அதிர்ச்சியில் இதயத்துடிப்பு மேலும் அதிகரித்தது. ஒன்றுமே புரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக சுய நினைவுக்கு வந்தேன். எனது நிலையை சுருக்கமாகச் சொல்வதென்றால், மீண்டும் ஒரு முறை சிறுநீர் கழித்தேன்.

இந்த நேரத்தில் இரும்பு இருந்தால் பக்கத்தில் வராது என்று சொல்வார்களே, இரும்புக்கு எங்கே போவது. கீழே வரும்போது யாரையாவது எழுப்பி துணைக்குக் கூப்பிட்டு வந்திருக்கலாம். இப்போது அதை நினைத்து என்ன செய்ய?

எனக்குள் நானே புலம்புவது போல் ஆகிவிட்டது. சிறகடித்த சிந்தனை சிறகொடிக்கப்பட்டது. மூச்சு விடுவது பெருமூச்சாக வெளிவந்தது. அடக்கிவிட முயற்சித்தேன்.

ரொம்ப நேரம் ஆகிவிட்டது. மாடியிலுள்ள ஒருவருக்குக் கூடவா சீறுநீர் வரவில்லை? யாராவது கீழே வந்து தொலைக்கக் கூடாதா? இடத்தை விட்டு அசைவதற்கே பயமாக இருக்கிறதே எவ்வளவு நேரம் தான் இப்படியே நிற்பது.

எனது எண்ண ஓட்டங்களைக் கட்டுப்படுத்தி, மனதை ஒரு நிலைக்குக் கொண்டு வரமுயற்சித்தேன். இது போன்ற சமயங்களில் பதட்டப்படாமல் பயத்தை குறைத்து, நிதானமாக இருக்க வேண்டும் என நினைத்தேன். சிறிது நேரம் அமைதியாக இருந்து மூச்சு விடுவதை ஒரே சீராக்கினேன். சிறிது நேரத்தில் எனக்குள் அமைதியும் நிதானமும் ஏற்பட்டது. சிந்தனையும் மாறுபட்டு வந்தது. பேய் பூதம் என்பதெல்லாம் பழங்கதையல்லவா? கற்பனைகளை வளர்த்து பய உணர்வுக்கு அடிமைப் பட்டு விட்டேன். என்ன படித்திருந்தும் மூடநம்பிக்கை இன்னும் போக வில்லையே?

ஆனால் சத்தம் கேட்டது உண்மைதான். இதற்கு என்ன செய்யலாம்? பேசாமல் படியில் ஏறி அறைக்குள் சென்று விடலாமா? அதுவும் சரியாகப்படவில்லை. எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை. தீப்பெட்டியை உரசி ஒவ்வொரு இடமாகப் பார்த்து விட வேண்டும். என நினைத்து, ஒரு பக்கத்தில் ஆரம்பித்து நடந்தேன். கம்பி வேலியை ஒட்டி நடந்தேன். மரங்களின் பக்கம் ஒன்றுமில்லை. அப்படியே நகர்ந்து சாலையின் பக்கம் வந்தேன். அங்கும் ஒன்றுமில்லை அதன் பிறகு மரப்படியுள்ள சுவர்ப்பக்கம் வந்தேன்.

படியின் கீழே அது படுத்திருந்தது. கீழே கிடந்த ஒரு கல்லை எடுத்து, முழு பலத்துடன் ஓங்கி எறிந்தேன். அது “லொவ்…… லொவ்” என்று குறைத்துக் கொண்டு ஓடிவிட்டது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top