ஓரடி பின்னே

0
(0)

செழித்து நிற்கும் நெற்பயிர்கள் அலை அலையாய் ஆடி, பால் பிடிக்கும் பருவத்தின் பூரிப்போடு அசைந்தன. பச்சைப்பட்டாய் விரிந்திருக்கும் வயலை கைதிகளின் சட்டைக் கோடுகள் போல் கட்டங்கள் போட்டுப் பிரித்து சட்டம் பேசிய வரப்புக்கள் குட்டித் தீவுகள் போன்ற கரும்புத் தோட்டங்களும், குலை தள்ளிய வாழைக் கூட்டங்களும் பச்சைப்பட்டில் பூவேலைப்பாடுகளாய் வேலி கட்டி நின்றன. ஜரிகை மினு மினுப்பில் நெற்பயிர்களின் ஆட்டத்திற்கு இசை கூட்டி சலசலத்து நெளிந்தோடும் வாய்க்கால்கள்.

வகிடெடுத்துப் பிரித்தது போல் கருப்புக் கோடு போட்ட தார்ரோடு இரு மருங்கிலும் தென்னை மரங்கள் இடையிடையே கன்றுகள். ராணி மங்கம்மாள் டவுன் பஸ் மணிக்கு ஒரு தரம் இந்த வழியாக ஓடும். ரோட்டை ஓட்டி களத்து மேட்டுப் பொட்டலில் குடை விரித்து நிற்கும் ஆலமரம் தான் பஸ் ஸ்டாப். மரத்தின் அடியில் ஒரு அடி உயரத்திற்கு கல்லைப் போட்டு பெஞ்ச் அமைத்திருக்கிறார்கள்.

ஆலமர பஸ் ஸ்டாப்புக்கு நேர் எதிரே, மேற்கு நோக்கிச் செல்லும் வண்டிப் பாதையில் நடந்தால் ஒரு மணி நேரத்தில் மேட்டுப்பட்டியை அடையலாம். குறுக்கே போகும் ஓடையைக் கடப்பதற்கு நல்ல பாலமும் ரோடு வசதியும் இல்லாததால் மேட்டுப் பட்டிக்கு பஸ் கிடையாது. இந்தக் காலத்தில் பஸ் போகாத ஊர் என்றால் அது மேட்டுப் பட்டியாகத் தான் இருக்கும். முன்பெல்லாம் இந்த ஆலமரப் பாதையில் பஸ்ஸே கிடையாது. நல்ல கூட்டம் வரக்கூடிய ஊர்களுக்கு மட்டும் தான் முதலாளிகள் பஸ் விட்டார்கள். அரசாங்க பஸ் வந்த பிறகு தான் இந்த அளவிற்காவது பஸ் வந்தது.

பொதுவாக மாலை நேர பஸ்ஸில் தான் பஞ்சுத்தாட்டுகள் பிதுங்கியது போல் கூட்டம் நிரம்பி வழியும். பெருமாள் வாத்தியார் போன்றவர்கள் கூட நெருக்கியடித்துக் கொண்டுதான் போக வேண்டும். இதில் மூட்டை முடுச்சுகளும் சேர்ந்து கொள்ளும். மாலை நேரத்திலாவது ஒரு பஸ் அதிகமாக விடலாம்.

எட்டு மணி பஸ் வந்து குலுங்கி நின்றது. கூட்டம் அதிகமில்லை பெருமாள் வாத்தியார். மட்டும் இறங்கினார். இந்த ஆறு மாதத்தில் பழக்கமாகி விட்ட கண்டக்டருக்கு கையை ஆட்டிவிட்டு வண்டிப் பாதையில் நடக்க ஆரம்பித்தார்.

காலை நேர கிராம வனப்பைக் காண்பது வாத்தியாருக்குப் பிடித்தமான ஒன்று ஒரு நாளாவது ஆறுமணிக்கே வரவேண்டும் என்று நினைப்பார். அழகில் மயங்குவதும் அன்பில் திழைப்பதும் இவரின் பலவீனங்கள்.

எட்டு மணி ஆகிவிட்டாலும் இன்னும் சூரியன் தெரியவில்லை. மேகம் கூடுவதும் கலைவதுமாகவே இருந்தது. முதல் நாள் வீசிய காற்று சில மரக்கிளைகளை முறித்ததில் போக்குவரத்துக் கூட தடைப்பட்டது. லேசான தூறலோடு மழை மாறிவிட்டது. இப்போது மழை தேவையா இல்லையா என்பது வாத்தியாருக்குத் தெரியவில்லை. அவர் பட்டணவாசி.

இந்த ஆறுமாதமாகத்தான் இங்கே வேலை பார்க்கிறார். பஞ்சாயத்து யூனியன் பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்தவருக்கு இங்குள்ள ஓராசிரியர் பள்ளியில் அதுவும் மண் சுவரில் கூரை வேய்ந்த பள்ளியில் வேலை பார்ப்பது ஏமாற்றம் தான். இந்தக் கிராமச் சூழல் தான் அதை ஈடுகட்டியது.

வண்டிப் பாதையின் இருபுறமும் குளக்கரை போல் உயரமான வரப்புக்கள் நல்ல அகலத்தில் சரிவாய் இருந்தது. மேய்ச்சல் நிலம் போல் புல்லும் புதரும் மண்டிக் கிடந்தன. செடிகள் பூத்துச் சிரித்ததை வண்டுகளும், வண்ணத்துப் பூச்சிகளும் சுற்றிச் சுற்றி வேடிக்கை பார்த்தன.

ஆடுகள் மேய்ந்து திரிந்தன. வாத்தியார் வருவதைப் பார்த்தவுடன் பக்கச் சரிவுகளில் பள்ளங்களில் ஆடு மேய்த்த அரை டவுசர்கள் பதுங்கிக் கொண்டார்கள். பதுங்கிய வேகத்தில் தலை தூக்கிய ஆடுகள் விபரம் புரியமாடமல் முழித்தன பதுங்கியதைப் பார்த்த குட்டிகள் துள்ளிக் குதித்து கும்மாள மிட்டன. அதிகத் துள்ளல் போட்ட குட்டி சரிவில் சரிந்து வண்டிப் பாதையில் விழுந்தது; விழுந்த வேகத்தில் மீண்டும் துள்ளி ஓடியது.

ஒரே மாதத்தில் வாத்தியாரோடு ஒன்றிப்போன சூழ்நிலைகள், மனிதர்கள்.

ஏற்கனவே இருந்த பிரச்சனைகள் வீட்டோடு இருக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக தேனிக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். இந்த ஊருக்கு யார் வருவார்கள்? சரியான பட்டிக்காடு எந்த வசதியும் கிடையாது. நடந்தே சாகவேண்டும்.

ஆசிரியர் போராட்டத்திற்குப் பிறகு முன்னால் நின்றவர்களை இப்படிப்பட்ட பள்ளிகளாகப் பார்த்து தூக்கிப் போட்டார்கள். அப்படி வந்து விழுந்தவர்தான் இந்தப் பெருமாள் வாத்தியார். இவரும் லேசுப்பட்டவரல்ல. போராட்டம் ஆரம்பித்து எண்ணி நாலே நாளில் தேனியில் ஒரு ஆசிரியர் கூட இல்லை என்று சொல்ல வைத்து விட்டார். எல்லோரும் பாளையங்கோட்டையிலும் திருச்சியிலும் நிரம்பி வழிந்தார்கள்.

இங்கு வந்த உடனேயே முனியாண்டி வாத்தியார் எல்லா விபரங்களையும் சொல்லி, ஐந்தாவது வரையிலும் உள்ள 19 பையன்களையும் ஒப்படைத்து விட்டுக் கிளம்பிவிட்டார்.

“வருடம் ஆரம்பித்து விட்டால் நாம் தான் வீடு வீடாகச் சென்று பிள்ளைகளை இழுத்துக் கொண்டு வந்து பள்ளியில் சேர்க்க வேண்டும்.”

“தொடர்ந்து ஐந்து வகுப்புகளும் படிப்பார்கள் என்று சொல்ல முடியாது. இப்போது மூன்று பையன்கள் தான் ஐந்தாவது படிக்கிறார்கள்.”

“விவசாய வேலைகள் ஆரம்பித்து விட்டால் எல்லோரும் வேலைக்கு போய் விடுவார்கள் படிக்க உட்கார்ந்து விட்டால் பிழைப்பு கெட்டு விடும் என்று நினைக்கிறார்கள்.”

இன்னும் இது போன்ற விசயங்களைச் சொல்லி படிப்பின் மேல் அவர்களுக்குள்ள பிடிப்பை புரிய வைத்து விட்டு அவர் சென்று விட்டார்.

அதன் பிறகு இவராகப் பள்ளியை ஒரு சுற்று சுற்றி வந்தார். பெரிதாக ஒன்றுமில்லை. நாற்பதடி நீளத்தில் இருபதடி அகலத்தில் ஒரே ஹால் மண் சுவரில் கூரை வேய்ந்திருந்தார்கள். வெளியில் வந்து பார்த்த போது அங்கங்கே கீறல் விட்டிருந்தது. சுவர் விழுந்து விடாமலிருக்க கல்தூண்களையும் மரக்கட்டைகளையும் கொண்டு தாங்கியது போல் நிறுத்தியிருந்தார்கள்.

பெருமாள் வாத்தியார் அனுபவப்பட்டவர். முற்றிலும் புதிய சூழ்நிலையாக இருந்தாலும் சமாளிக்கக் கூடியவர்.

குறுக்கிட்ட ஒடையும் அதன் கல் பாலமும் யோசனையைக் கலைத்தது. இன்னும் அரை மணி நேரம் நடக்க வேண்டும். கல்பாலம் கடந்து வண்டிப் பாதையிலும் செல்லலாம். ஓடை வழியாகவும் செல்லலாம். இது மேற்கே உள்ள கரட்டிலிருந்து பள்ளிக்கூடத்துப் பாலத்தின் வழியாக இங்கு வருகிறது. பள்ளிக் கூடத்துப் பாலம் கொஞ்சம் பெரியது. ஒரு முறை கரட்டில் பெய்த மழை கரைபுரண்டு ஒடி ஏற்கனவே இருந்த பாலத்தின் கற்களைப் புரட்டி விட்டது. அதன் பிறகுதான் இந்தப் பாலத்தைக் கட்டினார்கள்.

வண்டிப்பாதை வழியாகச் சென்றால் மேட்டுப்பட்டியை நடந்து கரட்டுப் பாதையில் செல்ல வேண்டும். பத்து நிமிட நடையில் பள்ளிக் கூடம் வரும்.

ஓடையைக் கடந்து விட்டாலே மேட்டுப் பகுதிதான். கிணற்றுப் பாசனம். ஊரைக் கடந்து விட்டால் வானம் பார்த்த பூமி. முன்பு ஒரு காலத்தில் இந்தப் பகுதியும் கிணற்றுப் பாசனத்தில் தான் இருந்தது. என்பதற்கு அடையாளமாகப் பாழடைந்த கிணறுகள் அங்கங்கே உடைந்து கிடந்தன.

இங்கு வந்த இரண்டு நாளில் பெருமாள் வாத்தியார் அறிமுகப்படுத்திக் கொள்ள மேட்டுப்பட்டிக்குள் சென்றார். ஊருக்கு நடுவில் இருக்கும் அரசமரத்து மேடை தான் ஜன சந்தடி நிறைந்த பகுதி, கடை வீதியும் அதுதான். பத்து இருபது பேர் நின்றாலே பெரிய கூட்டமாகத் தெரியும்.

வெள்ளையுஞ் சொள்ளையுமாக இவரைப் பார்த்த உடனே அங்கு மேடையில் உட்கார்ந்திருந்த நாலைந்து பேர் இறங்கி நின்று விசாரித்தார்கள்.

முதலில் அறிமுகமாகிக் கொண்டார். முணியாண்டி வாத்தியார் சொன்னது நினைவுக்கு வந்ததால் பள்ளிக் கூடம் பற்றிப் பேசவில்லை. மழை தண்ணி பற்றியும், பொதுவாகச் சில விசயங்கள் பற்றியும் பேசிவிட்டு சென்று விட்டார். இல்லையென்றால் பள்ளிக் கூடத்திற்கு பின்னால் படிக்க வந்து விட்டதாக ஒதுங்கி விடுவார்கள்.

அறிமுகத்திற்குப் பிறகு சில முறை அங்கு சென்றாலும் பிள்ளைகள் படிப்பு பற்றி எதுவும் பேசுவதில்லை. அதோடு விவசாய வேலைகள் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதாலும் விவசாயம் பற்றியே பேசினார். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது தயக்கம் மாறி தாராளமாக பலதையும் பேச ஆரம்பித்தார்கள்.

ஒரு சனிக்கிழமை மாலையில் இங்கு வந்தபோது கரண்டு ஆபீஸ் நோட்டீஸை வைத்துக்கொண்டு முழித்துக் கொண்டிருந்தார்கள். வழக்கம் போல் தேனிக்குச் சென்று விபரம் கேட்க வேண்டும். அங்கு வந்து சேர்ந்த பெருமாள் வாத்தியாரைப் பார்த்தவுடன் ஒரு மலர்ச்சி தென்பட்டது. அவரிடம் கொடுத்தார்கள்.

“மோட்டாருக்கு கரண்டு வேணும்னு மனு குடுத்திருந்தீங்களா?” “ஆமாங்க …. அஞ்சாறு வருசமாச்சு.”

எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்”

“மோட்டார வாங்கி அந்த ரசீதையும் நிலத்துப் பட்டாவையும் பதியச் சொல்லி நோட்டீஸ் குடுத்துருக்காங்க.”

விபரம் புரிந்தவுடன் மேற்கொண்டு என்ன செய்வது என்பவைகளைக் கேட்டார்கள். அலுவலக முறைகள் பற்றியும் ஓரளவுக்கு விளக்கினார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு இவரே கூடப்போய் பதியும் அளவுக்கு நிலைமை மாறியது.

வாத்தியார் யாரிடத்திலும் எளிதில் பழகக் கூடிய சுபாவம் உள்ளவர். ஏற்கனவே தேனியில் பலரிடமும் பழக்கமுள்ளவர். அதனால் கரண்டாபீஸ் வேலை எளிதில் முடிந்தது. இதன் பிறகு தான் எல்லோரும் இவரிடம் நெருக்கம் காட்டினார்கள். ஒவ்வொன்றுக்கும் வாத்தியார் தான் யோசனை சொன்னார்.

ஏற்கனவே இவர் தேனியிலிருந்து வந்து கொண்டிருப்பதால் பலவேலைகளுக்கும் வசதியாகிவிட்டது. உர மூட்டையை சுமப்பதைத் தவிர எல்லாமும் வாத்தியார் தான்.

வாத்தியாரின் சுபாவமும், அறிவும் எல்லோரையும் கவர்ந்தது. இதுக்கெல்லாம் காரணம் படிப்பு தான் என்று முதன் முதலாக யோசித்தார்கள். வாத்தியாரும் மறைமுகமாக இதைத்தான் வலியுறுத்தினார் இதன் பிறகு படிக்காததற்கு இப்போது வருத்தப்பட்டார்கள். இதை வாய்ப்பாக நினைத்து சிறுவர்களின் படிப்பை சுட்டிக் காட்டிப் பேசினார்.

பள்ளிக்கூடத்தில் நான்கு சுவர்களை மட்டும் வைத்துக் கொண்டு இந்தச் சிறுவர்களை நவோதயாப் பள்ளியில் சேர்க்குமளவுக்கு திறமையை வளர்க்க முடியாது என்பது வாத்தியாருக்குத் தெரியும் ஆரம்ப அறிவையாவது பெற வேண்டும். என்று தான் நினைத்தார். அவரது முயற்சியில் ஓரளவுக்கு வெற்றி பெற்றது வாத்தியாருக்கு திருப்தி தான். இப்போதெல்லாம் பத்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் முக்கால் வாசிக்கு மேல் பள்ளிக்கு வந்து விடுகிறார்கள்.

வாத்தியார் ஊருக்குள் நுழைந்ததும் வழியில் பார்த்த பலரும் வணக்கம் சொல்லியும், புன் சிரிப்பைக் காட்டியும் மரியாதையைத் தெரிவித்தார்கள். அரசமர மேடையைக் கடந்து பள்ளியை நோக்கி கரட்டுப் பாதையில் நடந்தார்.

ஒரு முறை வழக்கம் போல் மேடையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது வாத்தியாரை ஜெயிலில் அடைத்ததைக் கேள்விப்பட்டு நம்ப முடியாமல் காரணம் கேட்டார்கள். வாத்தியார் திருடி இருப்பார் என்றோ கொலை செய்திருப்பார் என்றோ அல்லது வேறு ஏதாவது தப்புத் தண்டா செய்திருப்பார் என்றோ யாரும் நம்ப முடியாது. அப்படி இருக்க எப்படி ஜெயிலில் போட முடியும்?

அதன் பிறகு எல்லா வாத்தியார்களும் போராடியதையும் அதற்காக ஆண் பெண் குழந்தைகள் அத்தனை பேரையும் ஜெயிலில் அடைத்ததையும் விரிவாகச் சொன்ன பிறகும் நம்ப மறுத்தார்கள். இப்படிப்பட்ட வாத்தியாரை அதுவும் சம்பளம் கூடக் கேட்டதற்காக கொலைகாரனைப் போல் ஜெயிலில் போட்டதை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள்.

வாத்தியாரும் என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்துவிட்டு விட்டார்.

கொஞ்ச நேரம் வழக்கத்திற்கு மாறாகப் பையன்கள் வெளியிலேயே நிற்பதைப் பார்த்தவுடன் வாத்தியார் வேகு வேகமாக நடந்தார். சிறிது நேரத்தில் பள்ளியை அடைந்து உள்ளே போனதும் காரணம் தெரிந்தது. கீறல் விட்டிருந்த பின் பக்கச்சுவர் உள் பக்கமாகச் சாய்ந்து ஹால் முழுவதும் அடைத்துக் கிடந்தது. இன்னும் ஏதாவது ஒரு பக்கச் சுவர் – விழுந்தாலும் கூரையே உட்கார்ந்து கொள்ளும்.

ஒரு கணம் வாத்தியார் செயலற்றுப் போய்விட்டார். நவோதயா அளவுக்கு திறமையை வளர்க்கா விட்டாலும் நாலு சுவருக்கும் மோசம் வந்து விட்டதே என்ற எண்ணம் வாத்தியாரின் உள்ளத்தைக் கண்ணீர் விட வைத்தது.

வெளியில் வந்து பார்த்தார். அதற்குள் ஐம்பது அறுபது சிறுவர்கள் சேர்ந்து விட்டார்கள். அடக்கமாய் கவலை தோய்ந்து நின்றார்கள். படிப்பு கெட்டு விடுமோ என்ற கவலை ஏற்பட்டது. மாணவச் சிறுவர்களையும் இடிந்த பள்ளிக்கு கூடத்தையும் மாறி மாறிப் பார்த்த பெருமாள் வாத்தியாரால் பொறுக்க முடியவில்லை. பொங்கி விடுமோ ஆற்றுமை என்று நினைத்து சமாளித்துக் கொண்டார்.

இனி என்ன செய்வது?

உடனே பள்ளிக் கூடத்தை கட்டுவது என்பது முடியாத காரியம். சுற்றிலும் மரங்கள் கூட கிடையாது. முட்புதர்களும், கள்ளியும் கற்றாழையும் வளர்ந்து திறந்த வெளி கழிப்பிடமாய் அமைந்திருக்கும் கரடுதான் இருந்தது.

சுற்றிலும் பார்த்தார். ஓடை தெரிந்தது. அதில் பள்ளிக் கூடத்துப் பாலம் தெரிந்தது. வாத்தியாரின் முகம் மலர்ந்தது. பாலத்தின் அடியில் பள்ளி நடத்த மாணவச் செல்வங்களோடு பெருமாள் வாத்தியார் நடந்தார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top