ஓய்ந்தவர்கள்

4
(26)

கொஞ்சம் தவறியிருந்தாலும் கோபால் சாரின் மேலேயே இவன் சைக்கிளை இடித்டிருப்பான். நல்ல வேளை, கடைசி நிமிஷத்தில் அனிச்சையாகச் சட்டென்று பிரேக்கை அழுத்தி சைக்கிளை நிறுத்தினான். முதலில், அவர் கோபால் சார்தான் என்பதைக்கூடக் கவனிக்கவில்லை.’யாரோ ஓர் ஆள் மேல் இடித்து விடப் போகிறோமே” என்ற பதற்றம்தான் அவனை இயக்கியது. சைக்கிளை விட்டு இறங்கியும் விட்டான். அப்புறம் கவனித்தால், கோபால் சார்! சைக்கிள் ஒன்று மேலே இடித்து விடப் போகிறது என்று அவசரமாக ஒதுங்கியவர்,இவனைக் கவனித்து விட்டார்.

“அடடே, சங்கரனா…? என்னப்பா, சவுக்கியமா?” என்று பதற்றம் கலவையிட்ட குரலிலேயே விசாரிக்கவும் செய்தார். சங்கரன் அவரைப் பார்த்து முகமலர்ந்தான் :

“வணக்கம்,சார்… என்ன, சவுக்கியமா இருக்கீங்களா ?” என்று விசாரித்தான்.

“ஏதோ இருக்கேம்பா…”-கோபால் சார் சிரித்தார். இந்த ஊரின் தபால் நிலையத்தில் இவனுக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து அவரைப் பார்த்து வளர்ந்தவன் சங்கரன். போஸ்டல் கிளார்க்காக இருந்து பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டராக ஆனவர். எப்போது இவன் அங்கே போனாலும், போஸ்ட் கார்டோ, கவரோ என்ன கேட்கிறானோ கொடுத்து விட்டு இவனுடைய படிப்பைப் பற்றியும், வீட்டினரின் நலன்களைப் பற்றியும் விசாரிப்பார். மிக நீண்ட காலமாக அங்கேயே பணியில் இருப்பவர் என்பதால், அந்தப் பகுதியில் குடியிருப்பவர்கள் எல்லாரையுமே தனிப்பட்ட முறையில் தெரிந்து வைத்திருக்கவும் செய்தார்.

இப்போது, இவன் படிப்பு முடிந்து மெட்ராசுக்கு வேலை தேடிக் கொண்டு வந்து விட்ட பிறகு, நடுவே எப்போதாவது ஊருக்குப் போனால் போஸ்ட் ஆபீசுக்குத் தேடிப் போய்ப் பார்ப்பதுதான். கடைசியாக இரண்டு முறை ஊர் வந்து திரும்பிய போது அது கூட முடியாமற் போய் விட்டது.

வருஷத்துக்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ வருகிற பொழுது, வீட்டிற்குள் காலை வைத்ததும் இவனிடம் சொல்வதற்கும், இவன் சொல்வதற்கும் ஏராளமான விஷயங்கள் இருக்கும். ’எங்கேயோ தூரந் தொலைவில் இருக்கிறவனுக்குத் தெரியப்படுத்தி அவனையும் ஏன் கஷ்டப்படுத்த வேண்டும்? ஊருக்கு வரும் போது பார்த்துக் கொள்ளலாம்’ என்று அப்பா அம்மா சேர்த்து வைத்திருக்கும் விஷயங்களில் மூழ்கினால் வெளியே வருவது சிரமம்தான். அந்த மாதிரி ஆனதால், கடைசி இரண்டு தடவை ஊருக்கு வந்திருந்த போது கோபால் சாரைப் பார்க்க முடியாமல் போய் விட்டது.

“என்ன தம்பி, அப்பிடியே மலைச்சுப் போயி நின்னுட்டே? எங்க ரொம்ப நாளாக் காணல்ல? ஊர்ப்பக்கமே வரல்ல போல இருக்கு?”-என்று கலகலப்பாகப் பேச்சை ஆரம்பித்தார் கோபால் சார்.வயதின் மூப்புத் தெரிந்தாலும் அவரது உற்சாகமான பேச்சும், கடகடத்த சிரிப்பும் இன்னமும் அப்படியேதான் இருந்தன. அவரிடம் இவனுக்குப் பிடித்தமான விஷயம் அது. நாற்பது, நாற்பத்தைந்து வயதிற்கு மேலாகி விட்டாலே எப்போதும் கடுவன் பூனை மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு ‘உர்ர்’ரென்று இருப்பவர்கள்தாம் அதிகம். காரணம் எதுவாக இருப்பினும் இந்தக் கடுமைப் பூச்சு ஓர் இயல்பான விஷயமாகி விடுகிறது –வயசானவர்களுக்கு. ஆனால், கோபால் சாரின் விஷயம் கொஞ்சம் வித்தியாசமானதாகவே இருந்தது. அவர் பணியிலிருந்த இந்தக் கிழக்கு போஸ்ட் ஆபீஸ் எப்போதுமே பிசியானது. காலை பத்து மணிக்கு ஆரம்பித்தால் சாயங்காலம் ஆபீஸ் மூடும் நேரம் வரை இடைவிடாமல் யாராவது வந்து கொண்டும், போய்க் கொண்டும்தான் இருப்பார்கள்.

போஸ்ட் கார்டை,”காரடு ஒண்னு குடுங்க“ என்பவர்கள்; ”இங்லாண்டு லெட்டரு ஒண்ணு” என்று இன்னும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே இருப்பவர்கள்; ‘கவர்க்கூடு’ கேட்பவர்கள்; ‘இருவது பைசா ஸ்டாம்பு குடுங்க சார்’ என்று மொட்டையாக் கேட்டு விட்டு, இவர் அஞ்சல் தலை ஒன்றைக் கொடுத்ததும், “இது இல்லிங்க சாரு…சம்பளம் வாங்கறதுக்கு ஒட்டுவமே, அது. ..” என்று தலையைச் சொறிபவர்கள்; ‘மணி ஆடரு பாரம்’ கேட்டு வாங்கிக்கொண்டு, அவரையே  ‘பூர்த்தி பண்ணிக் குடுங்க சார்’ என்பவர்கள்- இப்படி ஓயாமல் வந்து கொண்டிருக்கும் அத்தனை பேரிடமும் அவர் சிரித்துக் கொண்டேதான் சமாளிப்பார். வருகிறவர்கள், தமது சொந்தப் பிரச்சினைகள் பற்றிப் புலம்புவதை எல்லாம் பொறுமையாகவும் கவனத்துடனும் கேட்டுக் கொள்வார்.

“என்ன பிரச்சினையா வேணா இருக்கட்டும்யா, மனசத் தளர விட்டுறாத. அத மட்டும் விடாம இரு…எது வந்தாலும் சமாளிச்சுரலாம்” என்று முதுகில் அறைவதைப் போன்ற அழுத்தமான தொனியில் சொல்லி, கூனல் விழுந்து நலிந்து நிற்கிறவர்களையும் நிமிர்த்தி விடுகிறவர்.

மாலை மூன்று மணிக்கு மணியார்டரும், ரெஜிஸ்தர் தபாலும் பதிவு நேரம் முடிந்து விடும்; என்றாலும் சொல்லி வைத்தாற் போல் ரெண்டு அமபத்தஞ்சுக்கு வேர்க்க விறுவிறுக்க கைகளில் கனத்ட பதிவுத்தபால் கவர்களுடன் வந்து நிற்கும் அந்த டி.ஐ.சி.ஆளைக் கண்டதும், ”என்னய்யா, ஒங்க ஆபீஸ்காரங்களுக்கு மட்டும் சாயந்தரம் ஆறு மணி வரைக்கும் ரெஜிஸ்தர் வாங்குவோம்னு போட்டா, அப்பவும் அஞ்சு அம்பத்தஞ்சுக்குத்தான் வந்து நிப்பீங்களாய்யா?” என்று கேட்டுச் சிரிப்பார். மடமடவென்று எல்லாக் கவரையும் எடை போட்டு,ஸ்டாம்ப் வேல்யு சரியாக ஒட்டியிருக்கிறார்களா என்று சரிபார்ப்பார். கவரை ஒட்டியிருக்கிரார்களா என்றும் பார்த்து ஒட்டாமலிருந்தால் ஓட்டச் சொல்லி, அக்னாலட்ஜ்மென்ட் கார்டையும் சேர்த்து சும்மா ஒட்டி விட்டிருக்கிறார்களா அல்லது நுனியில் நூலால் தைத்திருக்கிறார்களா என்பதையும் பார்த்து விடுவார். அவற்றை ஒரு கையால் ரெஜிஸ்டரில் பதிவு செய்து கொண்டே வந்தவரிடமும் குசலம் விசாரித்துக் கொள்ளுவார்.

மூன்றேகால் மணிக்கு சேவிங்ஸ் அக்கவுன்ட்டில் பணம் எடுக்கவென்று பாஸ் புக்குடன் வந்து நிற்பார்கள். அந்த நேரத்துக்கு சேமிப்புக் கணக்குகளைப் பதிய வேண்டியதெல்லாம் முடித்து இவர் லெட்ஜரைக் க்ளோஸ் பண்ணியிருப்பார். வந்தவர் முகம் வியர்த்துப் போய் ஏமாற்றத்துடன் நிற்கும் போது, அவரிடம் உறுத்தாத தொனியில் தன்னுடைய இயலாமையைச் சொல்வார்: “யேய்யா,வாறது வர்றீங்க… ஒரு பத்து நிமிஷம் முன்னாடியே வந்துரக் கூடாதா? இப்பப் பாருங்க, நானும் ஒன்னும் பண்ண முடியாமப் போச்சுல்ல?” என்பார். வந்தவருக்கு இவரைப் பற்றித் தெரியுமென்பதால், குற்ற உணர்வோடு அசடு வழியச் சிரித்தபடி நகர்ந்து போவார். அவர்களை அனுதாபம் பொங்கும் கண்களுடன் பார்த்தவாறிருப்பார் இவர்.

முத்திரை குத்திக் குத்தி ஓரம் சிதைந்து, நைந்து நெகிழ்ந்து ஓரங்களில் பிசிறாய் ஒட்டிக் கொண்டிருக்கும் அந்த பிராஞ்ச் ஆபீஸ் சாப்பாவையும், ரப்பர் ஷீட்டையும், மழைக்காலத்தில் கூட தண்ணீர் நிற்காத கொடகனாற்றின் மணற்பரப்பைப் போல் வறண்டிருக்கும் ஸ்டாம்ப் பேடையும்,அந்த அயிட்டங்களை எல்லாம் தாங்கிக் கொண்டு இவருடனேயே தேய்ந்து போய்க் கொண்டிருக்கும் டேபிள் சேர்களையும், எதிரே வேலையில் கவனமாயிருக்கும் போஸ்டல் அசிஸ்டண்ட்டையும் பார்த்துக் கொண்டே தனக்குள் ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருக்கும் போது மட்டும்தான் இவரைக் கொஞ்சம் தயக்கத்துடன் அணுக வேண்டியிருக்கும். மற்ற நேரங்களில், வீடுகளிலிருந்து போஸ்ட் ஆபீஸ் வருவதற்குள் தாங்கள் வாங்க வேண்டியது- இன்லாண்ட் லெட்டரா,கவரா-என்ன வாங்க வேண்டுமென வந்தோம் என்பதையே மறந்து விட்டுத் தவிக்கிற சிறுவர்களையும் சிறுமிகளையும் கூட எதோ பெரிய வி.ஐ.பி.களை விசாரிப்பதைப் போல இவர் விசாரிப்பதைப் பார்ப்பவர்களுக்கு, “இந்த மனுஷருக்கு எப்படி இந்த வயதுக் குழந்தைகளுடன் கூட இவ்வளவு இயல்பாகப் பேசிப்பழக முடிகிறது?” என்று ஆச்சரியமாக இருக்கும். கார்ட், கவர் என்று ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டி, அவர்கள் கையிலிருக்கும் காசை வைத்து என்ன கொடுக்க வேண்டும் என்று தானே அதைத் தீர்மானித்து அவர் கொடுத்தனுப்புவதும் உண்டு.

கோபால் சாரின் இந்த மாதிரியான இயல்புகளை சங்கரனுக்கு நிரம்பப் பிடிக்கும். ’சக்,சக்’ கென்று சாப்பா குத்திக் கொண்டு, எண்ட்ரீஸ் போட்டுக் கொண்டு சில்லறை கொடுக்கும் பொது கூடவோ, குறைச்சலாகவோ தவறி விடாமல் பார்த்தபடி, ஒரே விஷயத்தைப் பற்றியே திரும்பத் திரும்ப சந்தேகம் கேட்டு நிற்கிற ஆள்களிடம் கூடப் பொறுமையிழக்காமல் பதில் சொல்லிக் கொண்டு, நன்றாய்ப் பழகினவர்கள் வந்தால் அவர்களிடம் அவரவர் வீட்டுப் பிரச்சினைகள் பற்றியெல்லாம் ஆத்மார்த்தமே விசாரித்துப் பதிலுக்கு ஆறுதல் சொல்லி…ஏ..யப்பா…போஸ்ட் ஆபீசின் அத்தனை பரபரப்புக்கு நடுவே கோபால் சாரால் எப்படி இந்த மாதிரி இருக்க முடிகிறது?

        இப்போது நினைத்துப் பார்த்தாலும் இவன் வளர வளர மூத்துத் தளர்ந்து கொண்டு வந்திருக்கும் கோபால் சார், அதே பழைய சிரிப்போடும் மலர்ச்சியோடும் இப்போதும் இருப்பதுதான் ஆச்சரியமாக இருந்தது.

“என்ன,சங்கரா…ரொம்ப ஆழமா யோசிச்சுகிட்டு நின்னுட்ட?”-மறுபடியும் ஒரு முறை கோபால் சார் கேட்டதும்தான் இவனுக்கு உலக நினைவே வந்தது. பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை-பழனி-திருச்சி-நத்தம்-சிங்கம்புணரி என்று எல்லாப் பக்கமும் விரைந்து போய்க் கொண்டிருக்கிற பஸ்கள்; கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்குப் போய்க் கொண்டும், வந்து கொண்டும் இருக்கிற ஜனங்கள்; டட்லி ஹைஸ்கூல் காம்பவுண்டும், சென்ட் மேரீஸ் காம்பவுண்டும் எதிரெதிர் முனைகளில் நிற்க, ரயில்வே ஸ்டேஷன் ரோடும் கடைவீதி-ஹாஸ்பிடல் ரோடுகளும் ஒன்றாக வந்து சேருகிற அந்த நாற்சந்தியில், மாலை நேரத்தின் பரபரப்பில் இப்படி நடுத் தெருவில் கோபால் சாரையும் எதிரே நிற்க வைத்துக் கொண்டு யோசனையில் மூழ்கி விட்டோமே என்று இவனுக்குள் குற்ற உணர்வும்,வெட்கமும் எழுந்தன.

“மன்னிக்கணும் சார்,ரொம்ப நா கழிச்சு திடீர்னு பாக்கறமா… போஸ்ட் ஆபீசுல ஒங்க ஒர்க்கப் பத்தின பழைய ஞாபகங்கள்ள மூழ்கிட்டேன்.அதான்…”- என்று இவன் சைக்கிளை ஓரமாகத் தள்ளிக் கொண்டு போனான். கோபால் சார் கடகடவெனச் சிரித்தார்.

“பழைய ஞாபகமா? அதெல்லாம் எனக்கும் கூட இனிமே பழைய ஞாபகம்தாம்ப்பா ரிடையராகி ரெண்டு வருஷமாச்சு “

“என்ன சார் சொல்றீங்க? ரிடையராயிட்டீங்களா? நிஜமாவா?”

“ஏம்ப்பா, நா என்ன மார்க்கண்டேயனா? ரிட்டையராகாம அப்பிடியே சர்வீஸ்ல இருக்கறதுக்கு?” –என்று மறுபடியும் கடகடத்துச் சிரித்தார். வெளேரென்று நரைத்திருந்த தலை; தடித்த பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடிக்குள்ளிருந்து ஊடுருவிப் பார்க்கிற விழிகள்; போஸ்ட் ஆபீசில் இடைவிடாமல் இயந்திரகதியில் இயங்கி அலுத்துப்போன உடல்..

“சரி,எங்க…கடத்தெருவுக்குத்தான…?”

“ஆமா சார். சன்னதித் தெருவுல புக்ஸ்டால் வரைக்கும் போகணும். தங்கச்சிக்கு ரெண்டு புக்ஸ் வாங்கிட்டு வரணும்.”

“வாப்பா. நானும் கடத்தெருப் பக்கம்தான் போறேன்…பேசிக்கிட்டே போகலாம்”- சங்கரன் இப்போது பார்க்கும் வேலையைப் பற்றி, தங்கையின் படிப்பைப் பற்றி, அம்மா-அப்பாவின் நலத்தைப் பற்றி, கோபால் சார் விசாரித்துக் கொண்டே நடந்தார். இவனும் அவரைப் பற்றி விசாரித்தான்.

பேச்சு மும்முரத்தில் மெல்ல நடந்த இவர்கள், முனிசிபல் ஆபீஸ் எதிரே நடந்து கொண்டிருந்த போது பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது. முதலில் இரண்டுபேருமே கவனிக்கவில்லை. மீண்டும் மீண்டும் அந்தக் குரல் ஒலித்த போதுதான் இவன் கவனித்தான். ”கோபால் அண்ணாச்சி…கோபால் அண்ணாச்சி” என்று சாரைத்தான் அழைத்தது அந்தக்குரல்.

“சார், ஒங்களத்தான் யாரோ கூப்புடறாங்க போல இருக்கு “-என்று சொன்னான் இவன். கோபால் சார் நின்று திரும்பிப் பார்த்தார். முனிசிபல் ஆபீஸ் வாசலில் இரண்டு மூன்று பேர் நின்று கொண்டிருந்தார்கள். இவரைப் போலவே சம வயதினர். முகமெல்லாம் மலர, கைகளைக் கூப்பிக் கொண்டு சிரிப்பே முகமாக இவரை நோக்கி சற்று முன்னால்நகர்ந்து வந்தார் ஒருவர். மற்ற இரண்டு பெரும் அங்கேயே நின்றார்கள். கோபால் சார் ஒரு நிமிஷம் திகைத்து நின்றார். பின், வருபவரை இனம் கண்டு கொள்ளப் பிரயத்தனம் செய்தார். ஞாபகம் வந்து விட்டது என்பது அவரின் முக மலர்ச்சியிலேயே தெரிந்தது.

“என்ன அண்ணாச்சி, சொகமா இருக்கீங்களா?“-கேட்டபடியே வந்த அவரை நோக்கி கோபால் சார் வேகமாகப் போனார். முகம் மலர, வாய் நிறையச் சிரிப்போடு, இரண்டு பெரும் கிட்டத்தட்ட ஒருவரை ஒருவர் இறுக அணைத்துக் கொள்கிறாற்போல் இழைந்து நின்றார்கள். பேச்சு வராமல்,பேச வராமல் இரண்டு பெரும் ஒருவரை ஒருவர் பார்த்து முகமலர்ந்து நிற்பதைப் பார்த்த போது சங்கரனுக்கு மனதில் ஏதோ நெகிழ்ந்து இதழ்களில் புன்னகை மலர்ந்தது. சைக்கிளை ஓரமாகத் தள்ளிக்கொண்டு போய் நின்று அவர்களையே கவனித்தான்.

கோபால் சாரும் அவரைக் கூப்பிட்டவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். சங்கரனின் பக்கமாகக் கையைக் காட்டி ஏதோ சொன்னார் கோபால் சார். அவரும் உடனே பலமாகத் தலையாட்டிக் கொண்டு,”ஆகா…அதுக்கென்ன, போயிட்டு வாங்க அண்ணாச்சி. பாத்ததுல ரொம்ப சந்தோசம்…ரொம்ப சந்தோசம்…மறுபடி எப்ப பாக்கப் போறோமோ…?”-என்று சத்தமாக உணர்வுகள் பொங்கி அலையடிக்கிற குரலில் சொன்னார். கோபால் சாரும் திரும்பத் திரும்ப அவரைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு எதோ சொல்லிக்கொண்டே சங்கரனை நோக்கி வந்தார்.

இரண்டு பெரும் கொஞ்ச தூரம் நடக்கிற வரையிலும் கூட திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே வந்தார் கோபால் சார். வந்ததும் வராததுமாய்த் தனக்குத்தானே பேசிக் கொள்வது போலவும், மனதில் இருப்பதை எல்லாம் கொட்டி விட வேண்டுமென முடிவு செய்தது போலவும் அவர் பாட்டுக்குப் பேசிக் கொண்டே வந்தார். கோபால் சாரின் குரலில் இருந்த நெகிழ்ச்சியும், உணர்வுக் கொந்தளிப்பும் குருத்தெலும்புகள் வரை ஊடுருவிச் சிலிர்க்க வைத்தன.

“அவரு..அந்த ராமசுப்ரமணியன் பா…என்னோட வேல செஞ்ச ஆளு. இங்க இருந்துட்டு காந்தி கிராமத்துக்கு பிரமொஷன்ல போனாரு. சின்னாளப்பட்டியில வீடு. அவரும் ரிட்டையராயிட்டாரு. என்னப்பாத்ததும்,” ஒனக்கென்னப்பா…ரிட்டையராயிட்ட. அக்கடான்னு வீட்டுல கெடக்கப் போற. புள்ளைங்கள எல்லாரையும் கட்டிக் குடுத்திட்டயில்ல? கடைசிப்பையனையும் மதுர காலேஜில சேத்துட்ட. இன்னம் என்ன கொற ஒனக்கு?” ங்கறாரு .நான் என்னத்தச் சொல்லுறது?”

“ரெண்டாவது பொண்ணு புருஷன் செத்துப் போனப்புறம் ஒரு குழந்தையோட வீட்டுல வந்து உக்காந்திருக்கான்னு சொல்லவா? பெரிய பையன் ஒருத்தன் போன வருஷம் தற்கொல பண்ணிக்கிட்டதச் சொல்லவா? கடைசிப் பையனை மதுரையில காலேஜுல சேத்துட்டு அவன் மதுர போக வர சீசன் டிக்கெட்டு, சாப்பாட்டுச் செலவுகளுக்கு திண்டாடறதச் சொல்லவா, எதைச் சொல்ல?”

“ரிட்டயராயிட்டா, என்னமோ எந்த வேல வெட்டியும் இல்லாம பென்ஷன வாங்கித் தின்னுட்டுப் பொழுதப் போக்கரவணுங்க அப்பிடின்னுதான நெனைக்கிறாங்க. இப்ப, நா  ராமசுப்பிரமணியனக் கேட்டேன்னு வச்சுக்க. அவனும் இதே மாதிரி வேற ஒரு மூட்டக் கதைய போஸ்டல் சார்ட்டிங் பண்றப்போ தபால் மூட்டைங்களப் பிரிச்சுக் கொட்டுவான். ம்… ரிடைய ரானப்புறம் எங்க ஆளுங்க ஒருத்தர ஒருத்தர் பாத்ததுமே கேக்கற மொதக் கேள்வி, ”அட,பரவா யில்லையே ரிடையராகி ஒரு வருஷம் ஆயிருச்சு. உசிரோடதான் இருக்கியா ?” அப்பிடின்னுதாம்ப்பா. இப்பக்கூட, ராமசுப்பிரமணியன் என்னப்பாத்ததும் மொதல்ல கேட்டது என்னன்னு நெனைக்கிற? அந்தக் கேள்வியதாம்ப்பா…”

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4 / 5. Vote count: 26

No votes so far! Be the first to rate this post.

207 thoughts on “ஓய்ந்தவர்கள்”

 1. நாராயணன் க 9444066755

  நாராயணன் க

  ஓய்ந்தவர்கள்

  கோபால் சாரின் ஓய்வு பெற்றதை சினிமா பார்ப்பதுபோல் ஆசிரியர் பின்னோக்கி கதையை எடுத்து செல்கிறார். முதலில் கோபால் சார் ஒரு பள்ளி ஆசிரியரோ என்ற எண்ணம் வந்தது. அவ்வளவு அழகாக கதையை நகர்த்துகிறார் ஆசிரியர்.

  ஒரு போஸ்ட் மாஸ்டரின் வாழ்க்கையை நன்றாக சித்தரித்து நம்மையும் அதனுள் மூழ்க வைக்கிறார். நாமே தபாலாபீஸுக்கு உள்ளே சென்றது போல் ஒரு உணர்வு.

  கோபால் பாத்திரம் ஒரு பாசிட்டிவாக சிதரித்துள்ளது கதைக்கே ஒரு ஊன்று கோல். படிக்கும் நமக்கும் ஒருவர் எப்படி வாழ வேண்டும் என்ற கல்வியை புகட்டுவதாகவே உள்ளது சிறப்பு. எல்லா மனிதர்களையும் அறிந்து கொள்ள ஏதுவான இடம் போஸ்ட் ஆபீஸ்தான். வருவோரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டாக காட்டப்பட்டிருப்பது இந்த காலத்திற்கு பொருந்துமா என்பது கேள்விக்குறியே.

  உடன் பணி செய்தவரிடம் கூட தன் பர்சனல் விஷயங்களை பகிறாததும் , எல்லா மனிதனுக்கும் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கத்தான் செய்யும் என்பதை மிக நாசூக்காக கையாண்டுள்ள பாங்கு மிக அருமை. பாவம் கோபாலும் சாதாரண மனிதன் தானே. அவரின் அடிமனதில் உள்ளவற்றை பகிற ஒரு ஆத்மாவாக சங்கரன் எலும்புகளில் மட்டுமல்ல என் எலும்புகளிலும் ஊடுருவியதை உணர்ந்தேன்.

  “அட , பரவா யில்லையே ரிடையராகி ஒரு வருஷம் ஆயிருச்சு. உசிரோடதான் இருக்கியா ?” அட அந்த மனிதர் எவ்வளவு பாசிட்டிவ் கூட வேலை பார்த்தவரின் வார்த்தைகள் எவ்வளவு கூர்மையானவை. உலகம் எப்போதும் இப்படித்தானோ.

  நாராயணன் க
  பெருங்குடி
  சென்னை _96
  9444066755

 2. மா. ஜெயசுஜா,
  திருச்சிராப்பள்ளி..
  அலைபேசி9487193064.
  ஓய்ந்தவர்கள் என்றால் பணியில் இருந்து மட்டும் ஓய்வு பெற்றவர்கள் என்ற கோணத்தில் இக்கதை எழுதப்பட்டுள்ளது. கோபால் கதாபாத்திரம் பணிசெய்வதிலும் பண்பிலும் முன்னுதாரணமாக விளங்குகிறார். அவருடைய மனம் தளராமல் இருப்பதினால்தான் மற்றவர்களுடைய கூனலையும் நிமிர்த்த முடிகிறது.
  அகத்தின் அழகு முகத்தில் தெரியும்..
  கோபால் சாரின் இன்முகப்பேச்சு கடுவண் பூனைமாதுரி உர்ரென்றுவைத்திருப்பவர் முகங்களை
  சிரிக்க வைக்கும்.
  ஓய்ந்தவர்கள் சிறுகதை ஓய்வுப்பற்றிபுதிய கருத்துக்களை நமக்குஅறிமுகப்படுத்துகிறது.
  வாழ்க்கையில் ஓய்வு என்பது இறுதி யாக எடுக்கும் ஓய்வுதான் என்றுஎழுத்தாளரின் எழுத்துகள் நமக்குஉரைக்கின்றன.
  படைப்பாளருக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்.

 3. செ.ஜனகரத்தினம்

  செ.ஜனகரத்தினம்
  கூதாம்பி கிராமம்
  7598329229

  ஓய்ந்தவர்கள்

  பணியிலிருந்து ஓய்வு பெற்றவர் இந்த அளவிற்கு சுறுசுறுப்பாக மனதில் எதையும் வைத்துக் கொள்ளாது இருப்பதை பார்த்தால் ஆச்சர்யமாக உள்ளது.

  ஒவ்வொரு தடையையும் தாண்டிப்போகும் போது அது கம்பி வேலியா முள் வேலியா என்று ஆராய்ச்சி செய்து ஒவ்வொன்றிலும் அதற்கு உண்டான முடிவெடுக்க முடியாது வருபவரை சமாதானப் படுத்தி தன்னால் இயன்றவரை முடியலனாலும்
  அதை சரி செயததை அவருடைய சமதர்ம பழக்கவழக்கங்களன சொல்கிறது.

  ஓய்வு பணியில் தான் அனைத்துமே வந்து சேரும். வாழ்ககையில் ஓய்வு பூமியில் நாம் இல்லாது போனால் தான் அதுவரை நம்க்கு நமதுசெயல் இருந்து கொண்டேதான் இருக்கும் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை எதிர் கொண்டு வாழும் போது உனக்கென்னடா? பென்சன் வரும் சமாளிக்க்கிறீங்க என்பர் ஆனால் “ஓய்வின்”அப்போது தான் புது புது பிரச்சனைகள் உருவாகும். சிறு வயதினர் படிக்கும்வயதில் இருபத்தி ஐந்து வருடம் அவருடன் படிக்கும் பசங்க ஆசிரியர் என ஞாபகம் வைத்திருப்பாங்க ஆனால் வேலைக்கு வந்ததுக்கு அப்புறம் அனைவரையும் ஞாபகம் வைத்து அவர்களின் குறை நிறைகளை ஒப்பிக்கும் அளவிற்கு அறிவாற்றல் அவரிடையே தன்மையாக கொண்டுள்ளது

  அஞ்சல் போஸ்ட் மாஸ்டர்என்றாலே ஊருக்கே அந்த காலத்தில் அவர் தான்பெரிய ஆள் அதிலும் இந்த அஞ்சல் துறை மாஸ்டர் இவர் ஒரு வெள்ளைச் சோளம்
  அனைவரிடமும் இப்படிதான் உதவி செய்து விட்டு தன் வாழ்ககையின் அங்கத்தினரை கவனித்து வந்திருந்தால் மகனை இழந்திருக்க மாட்டார் எத்தனையோ இன்னல்கள் வந்து கொண்டே இருக்கும்

  ஞாபகங்கள ஓய்ந்தவர்களிடம் கொஞ்சம கொஞ்சம் இருக்கும் இவர் அப்படி இல்லை முழுவதுமாகவே அடுததவர்களுக்காகவே வாழ்ந்து காட்டியுள்ளதை காட்டுகிறது

 4. ரா.யாழினி
  மாடம்பாக்கம்

  ஓய்ந்தவர்கள்

  இந்த சிறுகதையின் எழுத்து நடை படிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் மிகவும் எளிமையாக இருந்தது. இந்த சிறுகதையை படிக்கும்போது அனைத்தும் கண் முன்னே நடப்பது போல் காட்சி படுத்திய விதம் அருமையாக இருந்தது.

  ஓய்வு என்பது நம் வேலைக்கு மட்டுமே தவிர நம் வாழ்கையின் கடமைகளுக்கு அல்ல என்பதை தெளிவாக எடுத்துத்துள்ளார். கோபால் சாரின் அன்பு குணத்தை பற்றி தெரிந்த சங்கரனுக்கு அவரின் துன்பங்ளை பற்றி தெரியாது. அனைவரின் சிரிப்பிற்கு பின்னால் ஒரு சில வேதனைகளும் துன்பங்களும் இருக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த சிறுகதை அமைந்துள்ளது. வேலையில் இருந்து ஓய்வு பெற்ற அனைவரையும் கண்டு நாம், அவர்கள் சந்தோசமாக தன் குடும்பதுடன் எந்த குறையும் இல்லாமல் காலத்தை ஓட்டுகிறார்கள் என்று நாம் நினைப்பது தவறு என்று அருமையாக தெரிவித்துள்ளார்.

  கோபால் சாரின் மகள் தன் கணவனை பறிகொடுத்து ஒரு குழந்தையுடன் தன் வீட்டில் இருப்பது ஒரு புறமும், கடைசி பையன் உணவுக்கும் செலவுகும் திண்டாடுவது ஒரு புறமும், தனது மூத்த மகனை இழந்த வேதனை ஒரு புறமுமாய் துன்பதின் உச்சத்தில் இருக்கும் கோபால் சாருக்கு ஆறுதல் கூற யாரும் இல்லாமல் தவிக்கும் போதும் கூட தன் சிரிப்பை இழக்காத அவரின் குணமே அவரின் அடையாளம். அனைத்து குழந்தைகளையும் பெரிய மனிதர்களை போல மரியதையுடன் நடத்திய கோபால் சாரின் பிள்ளைகளுக்கு இப்படி ஒரு நிலைமை என்பது வருத்தத்தை தந்தது. தபால் நிலையத்தில் பணியாற்றும் போது அனைவரின் சூழ்நிலைகளையும் புரிந்து அவர்களின் வீட்டு பிரச்சனைகளையும் விசாரித்து அவர்களுக்கு ஆறுதல் உரைத்ததின் காரணம் அவரின் துன்பமே என்று நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருந்தது.

  வேலையில் இருந்து ஓய்வு பெற்ற கோபால் சாருக்கு தன் வாழ்க்கையின் துன்பங்களிலிருந்து ஓய்வு பெறாத அவரின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. எவ்வளவு துன்பங்கள் இருந்தலும் தன் முகத்தில் எப்போதும் இருக்கும் சிரிப்பை இழக்காத அவரின் நற்குணத்தையே நாம் இந்த சிறுகதையில் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயமாகும்.அதுமட்டுமல்லாமல் அனைத்து ஒய்வு பெற்றவர்களின் மனதில் ஒரு சில வருத்தமும் வேதனைகளும் இருக்கும் என்பதை தெளிவாக விவரித்து தெரிவிதுள்ளார் எழுத்தாளர்.

  இந்த அருமையான சிறுகதையை எழுதிய “எழுத்தாளர் கமலாலயன்” அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

 5. ரா. யாழினி
  மாடம்பாக்கம்

  ஓய்ந்தவர்கள்

  ->இந்த சிறுகதையின் எழுத்து நடை படிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் மிகவும் எளிமையாக இருந்தது. இந்த சிறுகதையை படிக்கும்போது அனைத்தும் கண் முன்னே நடப்பது போல் காட்சி படுத்திய விதம் அருமையாக இருந்தது.

  ஓய்வு என்பது நம் வேலைக்கு மட்டுமே தவிர நம் வாழ்கையின் கடமைகளுக்கு அல்ல என்பதை தெளிவாக எடுத்துத்துள்ளார். கோபால் சாரின் அன்பு குணத்தை பற்றி தெரிந்த சங்கரனுக்கு அவரின் துன்பங்ளை பற்றி தெரியாது. அனைவரின் சிரிப்பிற்கு பின்னால் ஒரு சில வேதனைகளும் துன்பங்களும் இருக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த சிறுகதை அமைந்துள்ளது. வேலையில் இருந்து ஓய்வு பெற்ற அனைவரையும் கண்டு நாம், அவர்கள் சந்தோசமாக தன் குடும்பதுடன் எந்த குறையும் இல்லாமல் காலத்தை ஓட்டுகிறார்கள் என்று நாம் நினைப்பது தவறு என்று அருமையாக தெரிவித்துள்ளார்.

  கோபால் சாரின் மகள் தன் கணவனை பரிகொடுத்து ஒரு குழந்தையுடன் தன் வீட்டில் இருப்பது ஒரு புறமும், கடைசி பையன் உணவுக்கும் செலவுகும் திண்டாடுவது ஒரு புறமும், தனது மூத்த மகனை இழந்த வேதனை ஒரு புறமுமாய் துன்பதின் உட்ச்சதில் இருக்கும் கோபால் சாருக்கு ஆறுதல் கூற யாரும் இல்லாமல் தவிக்கும் போதும் கூட தன் சிரிப்பை இழக்காத அவரின் குணமே அவரின் அடையாளம். அனைத்து குழந்தைகளையும் பெரிய மனிதர்களை போல மரியதையுடன் நடத்திய கோபால் சாரின் குழந்தைகளுக்கு இப்படி ஒரு நிலைமை என்பது வருத்ததை தந்தது.

  தபால் நிலையத்தில் பணியாற்றும் பொது அனைவரின் சூழ்நிலைகளையும் புரிந்து அவர்களின் வீட்டு பிரச்சனைகளையும் விசாரித்து அவர்களுக்கு ஆறுதல் உரைத்ததின் காரணம் அவரின் துன்பமே என்று நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருந்தது.வேலையில் இருந்து ஓய்வு பெற்ற கோபால் சாருக்கு தன் வாழ்க்கையின் துன்பங்களிலிருந்து ஓய்வு பெறாத அவரின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. எவ்வளவு துன்பங்கள் இருந்தலும் தன் முகத்தில் எப்போதும் இருக்கும் சிரிப்பை இழக்காத அவரின் நற்குணத்தையே நாம் இந்த சிறுகதையில் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயமாகும்.அதுமட்டுமல்லாமல் அனைத்து ஓய்ந்தவர்கலின் மனதில் ஒரு சில வருத்தமும் வேதனைகலும் இருக்கும் என்பதை தெளிவாக விவரித்து தெரிவிதுள்ளார் எழுத்தாளர்.

  இந்த அருமையான சிறுகதையை எழுதிய “எழுத்தாளர் கமலாலயன்” அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: