ஒளிமயம்

0
(0)

கண்பார்வை இல்லை ஞானபிரகாசத்துக்கு. ஆனால் அவன் கால் விரல்கள் ஒவ்வொன்றிற்கும் கண் முளைத்த மாதிரி அவ்வளவு சரியாக. மிகக் கவனமாக. பதனமாக. மிதவேகமாக எட்டு வைத்து நடந்தான். நடையில் நம்பிக்கை தென்பட்டது. ஒளிரும் மஞ்சள் பல்பினை பழுப்புத் துணி போட்டு மூடியதுபோல ஞானப் பிரகாசத்தின் முகமெங்கும் மங்கலான ஒளிப்பூச்சு. மனதிலுள்ள சந்தோஷத்தை விரிந்த இதழ்சந்தில் மின்னும் பற்கள் வெளிப் படுத்தின. வீட்டுக்குப் போகும் பழகிய பாதை நடையில் தடுமாற்றம் இல்லை .

ஞானப்பிரகாசம் இந்த பூமியில் அவதரித்ததும் இருட்டுதான். விழிப்படலம் உள் சொருகி தோல் மூடியிருந்தது. இமைகள் திறந்து மூடினாலும் விழிக்கு வேலையில்லாமல் போன விபரீதம். மருத்துவம் கை கொடுக்கவில்லை. மேற்கொண்டு போராட வசதியில்லை. கூலித்தொழிலாளியான செல்வ நாயகம் மகனை பார்வையற்றோர் பள்ளியில் சேர்த்துவிட்டு ஊர் திரும்பி வருகையில் ஒரு சாதிக் கலவரக் கும்பலில் மாட்டி உயிரிழந்தார்.

அம்மா மாரியம்மாள். கிராமத்தில் விவசாயக் கூலி வேலை பார்த்து வயிற்றைக் கழுவி வந்தாள். ஆண்டுக்கு இருமுறை | கிறிஸ்துமஸ் கோடைவிடுமுறை என்று போய் பார்த்து, துணி மணிகள், பலகாரங்கள் வாங்கித் தந்து வருவாள் அந்த நாட்களை எதிர் நோக்கியே கூலி வேலைக்குப் போய்ச் சேமித்தாள். இருபத்து நாலு முறைதான் பார்க்க முடிந்தது.

ஞானப்பிரகாசம் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டான்.

அம்மாவை விரல்களால் தொட்டுப் பார்த்தான். வாழைத் தண்டு போல வழுவழுவென்று இருந்த உடலில் வயோதிகக் கோடுகள் ஓடிய, சுருக்கங்கள், நைந்து திரண்ட பழந்துணியாய்த் தென்பட்டது. “அம்மா” வென்று ஒருமுறை அதிர்ச்சியோடு அழைத்தான். அம்மாவின் பதில் குரல் “ஏன் ராசா” கேட்டு அம்மாவை உறுதிப் படுத்திக் கொண்டான். மேற்கொண்டு படிக்க வாய்ப்பில்லை.

விவசாயம் இல்லாமல் ஊரே வெறிச்சோடிக் கிடக்கிறது. நகர்ப் புறத்தில் ஏதாவது வீட்டு வேலை பார்த்துத்தான் வாாக்கையை தள்ளனும் என்ற நிர்ப்பந்தம். ஒரு குடிசைப் பகுதியில் வீடு அமர்த்தப் பட்டது. அம்மா ஒரு நடுத்தரக் குடும்பத்தில் வீட்டு வேலையில் சேர்ந்தாள். ஞானப்பிரகாசம் வேலை தேடி அலைந்தான்.

இன்னிசைக் குழுவில் சேர நண்பர்கள் அமையவில்லை. வயர்க் கூடை பின்னுதல், ஈசிச்சேர் இருக்கை வயர் பின்னுதல் வேலைகளுக்கும் வழிகாட்டும்ஆள் அமையவில்லை. டெலிபோன் பூத் வைக்கலாமென்றால் டெலிபோன் இணைப்புகளும், செல்போன் களும் நிறைய வந்துவிட்டதால் அந்தத் தொழிலே கயறில் ஆடிக் கொண்டு இருக்கிறது. லாட்டரி சீட்டு விற்கலாமென்ற யோசனை வந்தது.

பேருந்து நிலையப் பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்கும் பார்வை யற்றோரை அணுகி விசாரித்தான். ‘பலரை மொட்டையடித்த ஒரு சிலருக்கு முடிசூட்டுவது பிடிக்கவில்லைதான். அரசே அந்தத் தொழிலை நடத்துகிறது. அதில்வரும் வருமானத்தை நலத் திட்டங் களுக்கு பயன்படுத்தும்போது நாம் லாட்டரி விற்று உயிரைக் காப்பாற்றுவது என்ன தப்பு?…’ என்ற கேள்வி ஞானப்பிரகாசத்தை லாட்டரி விற்கும் தொழிலில் இறக்கியது.

“பாக்கியலட்சுமி, தனலட்சுமி, யோகலட்சுமி நாளைய குலுக்கல் – 5 சேம் பத்து ரூபாய்” என்று ஆள் எதிரில் வருவது உணர்ந்து கூவிக் கூவி விற்பது வெட்கமாகத்தான் இருந்தது. பசி வெட்கத்தை வென்றது. “பிச்சை எடுக்கலை. திருடலை. அப்பறம் எதுக்கு வெட்கம்?” ஞானப்பிரகாசம் கைகளில் லட்சுமிகளை வைத்துக் கொண்டு கூவினான்.

முதலில் அன்றாடம் விற்றுத்தருவது. விற்பதற்கு ஏற்ப கமிஷன் பெறுவது என்ற நிலை. தினம் ஒரு சிறு பரிசாவது விழத் தொடங்கியது. விற்பனைக் கழிவுடன், பரிசுக் கமிஷனும் கிடைக்க கிடைக்க தானாக ஒரு ஆயிரம் ரூபாய்க்கு மொத்த வியாபாரியிடம் சீட்டுகள் வாங்கி விற்க ஆரம்பித்தான். அதில் சீட்டுக் கமிஷன் 20 சதமும், பரிசுத் தொகையில் கவுண்டர் பயிலுக்கு 50 சதமும் கிடைக்க வரம்பித்தது. கொஞ்சம் நல்ல ஓட்டு வீடாக வாடகைக்கு அமர்த்திக் கொண்டான். அம்மாவுக்கு ஓய்வு கொடுத்தான். ஒரு டிவி வாங்கிக் கொடுத்து முதுமைக்குத் துணை சேர்த்தான்.

அம்மாவுக்கு பூரிப்புத் தாளமுடியவில்லை. “கர்த்தரின் கருணைப் பார்வை!” என்று அடிக்கடி சிலுவை போட்டுக் கொண்டாள்.

பிரெய்லி எழுத்துகளில் பழகிய விரல்கள் லாட்டரிச் சீட்டுக் களை வருடி வருடி எண்ணுணர்ந்து விற்றான். அதிர்ஷ்டத்திற்கு கண் இல்லை. விற்பவனுக்கு கண்ணில்லை. நூறு சீட்டுக்கு ஒரு பத்து சிறு தொகை பரிசுகள் உறுதி என்ற நிலை. விற்பனை கூடியது.

ஒருநாள் பேருந்து நிலையத்தருகே ஒரு வாலிபன் கம்பீரமாகக் கூவி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்தான். முகத்தைச் சுற்றி ரீங்கரிக்கும் குருட்டுக் குளவி போல அவன் கூவல் சுற்றிச் சுற்றி வந்தது.

“நம் பிழைப்பைக் கெடுக்க இன்னொருத்தன் வந்து விட்டானே.. நமக்கு எங்கே விற்கப் போகிறது….” என்று புலம்பியபடியே ஞானப் பிரகாசம் நடந்தான்.

ஒரு பயணி அழைத்து ஒரு செட் சீட்டுகளை வாங்கினார். ஞானப்பிரகாசத்திற்கு சந்தோஷமும், சந்தேகமும் வந்தது.

“ஏங்க அய்யா. எனக்கு முன்னால வித்துக்கிட்டு போறவரிடம் வாங்காமா என்கிட்ட வாங்குறீங்களே?” –

“இல்ல தம்பி ரெண்டு நாளைக்கு முன்னால அந்த பையன் வந்து கடைசி டிக்கெட். கடைசி டிக்கெட்னு என் காலுக்குக் கீழே போட்டுவிட்டு, தேடி வர்ற அதிர்ஷ்டலட்சுமியை வேண்டாமுன்னு சொல்லாம வாங்குங்கன்னு தலையில கட்டிட்டான். வாங்கி வெளிச்சத்தில் பார்த்த பின்னாலதான் தெரிந்தது. அது முதல் நாளே குலுக்கல் முடிந்த சீட்டுன்னு…”

“கண்ணு தெரிஞ்சு ஏமாத்திற வங்ககிட்டே வாங்குறதைவிட உங்களை மாதிரி ஆளுக கிட்டே வாங்கின சீட்டு உண்மையா இருக்கு. உங்களுக்கு உதவுன மாதிரியும் ஆச்சு” என்று அவர் சொன்னதும் ‘கண் இருந்தும் இப்படி குருடர்களாக அடுத்தவர் களை ஏமாற்றுபவர்களை விட நாம் தேவலாம்’ என்று ஞானப் பிரகாசத்திற்கு தெம்பு கூடியது.

ஞானப்பிரகாசத்திடம் மொத்தமாகப் பத்து சீட்டுகள் வாடிக்கை யாக வாங்குபவர்களுக்கு பத்து சதம் தள்ளி விற்க ஆரம்பித்தான் இதுவும் விற்பனையைக் கூட்டி வாடிக்கையாளர்களை அதிகப் படுத்தியது.

தான் உயிரோடு இருக்கையிலே ஒரு கல்யாணத்தைப் பண்ணிப் பார்க்க அம்மா ஆசைப்பட்டாள். தீவிரமாகத் தேடியதில் போலியோவில் இடதுகை சூம்பிய ஒரு பெண் கிடைத்தாள் மங்களம் என்று பெயர். மதம் பார்க்கவில்லை. ஊனத்திற்கு ஊனம் ஏழைக்கு ஏழை அனுசரணை கூடியது. ஊனமுற்ற இருவரும் ஊனமில்லா இன்னொரு உயிர் வேண்டி சோதித்துப் பார்த்தார்கள் பத்தாம் மாதம் ஒரு ஆண் குழந்தை. சுகஜெனனம் அது!

மங்களம் பிரசவித்து நினைவு திரும்பியதும் குழந்தையின் கண்ணைப் பார்த்துப் பூரித்தாள். அது மெல்ல மெல்லக் கண் திறக்க முயற்சிப்பது கண்டு புளகாங்கிதப்பட்டு புருஷனிடம் சொன்னாள் ஞானப்பிரகாசம் குழந்தையின் கை கால்களைத் தடவி அவை நன்றாக இருப்பது உணர்ந்து உற்சாகம் கொண்டான்.

பேரக்குழந்தை பிறந்தது குடும்பத்திற்கு ஊனமில்லாத வாரிசு வந்து விட்டது! எடுத்த ஜென்மம் சாபல்யம் அடைந்தது! பரலோகப் பயணம் மேற்கொண்டாள் அம்மா.

அம்மாவின் நேசம். ஆன்மபலம். துயரில் துணை எல்லாம் மங்களம் கைக்குப் பெயர்ந்தது.

இந்தச் சமயத்தில் “லாட்டரிச் சீட்டுக்குத் தடை” என அதிரடியாக ஒருநாள் அரசு அறிவித்தது அதிர்ச்சியாக இருந்தது ஞானப்பிரகாசம் மீண்டும் குருடானது போல் தடுமாறினான் அனுதினம் காலை மதியம் மாலை வானொலியில், டிவியில் செய்திகள் கேட்பது.. தடை உடையுமா என்ற ஆர்வம் ஒவ்வொரு நாளும் தேய்ந்து வந்தபோதுதான்… “லாட்டரி விற்பனை தடைக்கு தடை” என்ற செய்திகேட்டான். லாட்டரி மொத்த வியாபாரியிடம் சென்று அந்தச் செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டான்

“லாட்டரிச் சீட்டை நிரந்தரமாக விற்கும்படியாக வேலை நடந்து கொண்டிருக்கிறது. கோர்ட், அரசு உத்தரவை ரத்து செய்து விடும்” என்று நம்பிக்கையைத் தூண்டிவிட்டார் மொத்த வியாபாரி அந்தத் தெம்பில் அவன் நடந்து வந்து கொண்டிருக்கின்றான்.

“மங்களம் நம்ம பிரச்சனைக்குத் தீர்வு வந்துவிட்டது. லாட்டரிச் சீட்டு இனி விற்கத் தடையில்லைன்னு கோர்ட்டு தீர்ப்பு வந்துருமாம். முதல்ல ஒரு வாரத்திற்குத் தடை நீக்கி இருக்காங்க. அப்புறம் நிரந்தரமா சீட்டு விற்க ஏற்பாடு நடக்குதாம்”

“இங்க வாங்களேன். உங்க குரல் கேட்டு நம்ம குழந்தை ஆரோக்கியராஜ் எப்படி துள்ளுறான் பாருங்க!”

ஞானப்பிரகாசம் குழந்தையின் கண்ணருகே கை கொண்டு போக குழந்தையின் சிறுகைகள் தடுத்தன. அவனுக்குமகிழ்ச்சியாக இருந்தது. உடலையும் கை, கால்களையும் தடவினான். சிறு காலால் உதைத்தது. ஏகப்பட்ட சந்தோஷம்.

“சீட்டு நிறைய வித்து பிரைஸ் கமிஷனைச் சேர்த்துச் சேர்த்து நம்ம பையனை கண் டாக்டருக்கு படிக்க வைக்கணும். என்னடா குட்டி. நீ கண் டாக்டராகி என்னை மாதிரி இருக்கிறவங்களுக்கு கண் திறப்ப இல்லே. குழந்தை துள்ளி கை கால்களை ஆட்டினான். அப்பாவின் குரல் பாட்டுக் குரல். உற்சாகத்தைத் தூண்டும்.

மறுநாளிலிருந்து ஒருவாரம் சீட்டு விற்க ஆரம்பித்தான். தடை பட்டு இருந்ததால் வியாபாரம் அமோகமாக இருந்தது. ஆனால் பரிசுகள்தான் சொல்லும்படியாக யாருக்கும் விழவில்லை. சிறு சிறு பரிசுகள்தாம் அங்கங்கே விழுந்தன. பெரிய பரிசுகள் விளம்பரத் தோடு பதுங்கிக் கொண்டன.

ஒரு வாரம் கழித்து மீண்டும் சீட்டு விற்கத் தடைவந்தது. தடை நீண்டு கொண்டே போனது. மளிகைக்கும் கைச் செலவுக்கும் கையிலிருந்த காசு கரைந்தது. நகைகள் அடகு போயின.

“கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி” என அழும் குழந்தைக்குப் பாடுவது போல் தனக்கே ஆறுதல் தேடிக் கொண்டான்.

வானொலியிலும் தொலைக்காட்சியிலும் – சிறு லாட்டரி வியாபாரிகள் தற்கொலைச் செய்திகள் குடும்பத்தோடு போராடும் செய்திகள் – கேட்டான். தனக்குத்தானே புலம்புவதும் குழந்தையைத் தொட்டுத் தடவித் தூக்கி ஆறுதலாகப் பாட்டுப் பாடுவதுமாகப் பொழுதுகள் நகர்ந்தன.

ஞானப்பிரகாசம் முகம் சுருங்கி சோர்ந்தே காணப்பட்டான். தலைவலிக்கிறது என்று மருந்து வாங்கி வருவதாகப் போனான். ஒரு சிறு பழுப்புக் காகித உறையில் சிறு சிறு மாத்திரைகளாக ஆறு வாங்கி வந்தான். தடவி அலமாரியைத் திறந்து வைத்துவிட்டு கழிவறைக்குப் போனான்.

“மங்களம் அந்த எல்.ஐ.சி. பாலிசி பத்திரம் வச்சிருக்கல்ல?” குரல் உடைந்து கேட்டான்.

“அதுக்கென்ன இப்ப அவசரம்?”

“இல்ல. சும்மாதான்-பத்திரமா வச்சுக்கன்னு ஞாபகப் படுத்தினேன்.”

ஞானப்பிரகாசம் இரவு நெருங்க நெருங்க சோகமானப் பாடல் களை பாடுவதும் சாமி படங்கள் உள்ள திசை நோக்கி முகத்தைத் திருப்புவதும் குழந்தையை பரிவோடு தடவிப் பார்த்தப் பார்த்து பெருமூச்சு விடுவதுமாய் இருந்தான். மங்களத்திற்கு மனது பிசைந்தது. அவனது தோளில் தட்டி ஆறுதல் சொன்னாள்.

பேசிக்கொண்டே தூங்கிவிட்டனர். அவன் ஜாமத்தில் எழுந்து மாத்திரைகளையும் தண்ணீரையும் எடுத்து, பெரும் தயக்கத்தோடு பிரித்து ஒவ்வொன்றாய் விழுங்கினான். ஒவ்வொரு மாத்திரையும் ஒரு ஜென்ம கனமாக இருந்தது. குழந்தையை இடக்கையிலும், மனைவியை வலக்கையிலும் அணைத்தபடி படுத்தான். ஏதோ சொக்குவது போல் உணர்வு. நெஞ்சடைத்துப் போவது போல் எண்ணம். அப்புறம் நினைவில்லை.

காலை ஏழு மணிக்கு வழக்கம் போல் டீ போட்டுக் கொண்டு மங்களம் எழுப்பினாள்.

“ம்…. ம்…” அனத்திக் கொண்டே “நான் எங்கே இருக்கேன்” என்றான்.

“ம்.. பரமபிதா கிட்டே இருக்கீங்க. எழுந்திருங்க. உங்களுக் கெல்லாம் எவ்வளவு சுயநலம் கோழைத்தனம் இருந்தா இப்படி செய்வீங்க…”

“என்ன மங்களம் இப்ப நா.. நா.. எங்கே இருக்கேன்.. ஏன். இப்படி கத்தறே…’

“எந்திரிங்க.. நீங்க சாகலை. உங்கள சாகவிடமாட்டேன். சாகிறதா பெரிசு? வாழ்றதுதான் பெரிசு.. எந்திரிங்க…”

தன்னையும் குழந்தையையும் மங்களத்தையும் தொட்டுப்பார்த்து. தான் சாகலை என்று உணர்ந்ததும் குற்ற உணர்ச்சி தாக்கியது. தலைகுனிந்து கொண்டான். பனிமழையில் நனைத்த இலைகளாக இமைகள் கண்ணீரைச் சொட்டின!

குழந்தையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

“நான் செத்தா எல்.ஐ.சி.யிலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் கொடுப்பாங்க. மகனும் நீயும் எப்படியும் பிழைச்சுக்குவீங்கன்னு நினைச்சேன். ஆமா நான் எப்படிப் பிழைச்சேன்.”

“நீங்க மாத்திரை வாங்கிட்டு வந்து வச்சதையும், உங்க முகம் வாடினதையும் கவனிச்சேன். நீங்க பாத்ரூம் போனதும் தெருக்கோடி மருந்துக் கடையில் அந்த மாத்திரைகளைக் காட்டி என்ன மாத்திரைகள்ன்னு விசாரிச்சேன். என் இருதயத்தையே குலையோடு பிடுங்கின மாதிரி இருந்தது. அப்புறம் அதுக்குப் பதிலாக சத்து மாத்திரைகள் வாங்கி அதே கவர்ல போட்டு அதே இடத்தில் அதே மாதிரி வச்சுட்டேன். “இங்க பாருங்க. லாட்டரி சீட்டு இல்லாட்டி மனுஷன் வாழவே முடியாதா? நாளையில இருந்து நான் ஊனமுற்றோர் பள்ளிக் கூடத்தில் ஆயா வேலைக்குப் போறேன். நீங்களும் உங்களை மாதிரி லாட்டரிச் சீட்டு விக்கிற பார்வை இல்லாத சகோதரர்களும் சேர்ந்து இசைக்குழு அமைங்க. உங்களுக்குத் தான் நல்லா ஆர்மோனியம் வாசிக்கத் தெரியும். நல்லா பாடுவிங்கல்ல. அப்புறம் என்ன! நீங்க அடிக்கடி பாடுவீங்களே “மயக்கமா கலக்கமா.” “ஒளிமயமான எதிர்காலம்”னு அதப் பாடுங்க.

ஞானப்பிரகாசம் குனிந்த தலை நிமிர்ந்து டீ குடித்தான். டீயோடு அன்பான வார்த்தைகளும் தெம்பூட்டின.

அடுத்த மூன்றாம் நாளிலிருந்து பேருந்து நிறுத்தங்களில் அந்த பார்வையற்றோர் இசைக்குழு உருக்கமாய் உணர்ச்சியோடு பாடிக் கொண்டிருந்தது.

“ஒளிமயமான எதிர்காலம்

எங்கள் உள்ளத்தில் தெரிகிறது…”

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top