ஒரே ஒரு ஊரிலே

0
(0)

ஒரு ஊர்ல ஒரு ராசா இருந்தாரு. அவருக்கு ஊரச் சுத்திப் பாக்கணும்ன்னு ஆச வந்து வண்டில பொறப்பட்டாரு. ரொம்ப நாளா அரண்மனைய விட்டு வெளியே வராம இருந்ததால் சாலையெல்லாம் எப்படி இருக்குன்னு ராசாவுக்குத் தெரியல.

அவரு போன வண்டி தூக்கிப் போட்டு ராசாவுக்கு குறுக்கு வலி எடுத்துருச்சு, ஒடனே திரும்பி அரண்மனைக்கு வந்து மந்திரி சபையைக் கூட்டுனாரு. ரோடெல்லாம் குண்டுங்குழியுமாகக் கெடக்கு. எனக்கு குறுக்கு வலி எடுத்துருச்சு, ஒடனே ரோட்டப் போடுங்கன்னு ராசா சொன்னாரு.

அதுக்கு மந்திரியெல்லாம் ஊர்ல எல்லா ரோடும் இப்படித்தேன் இருக்குங்க ராசா. ரோடு போடனும்னா எல்லா ரோட்டையுந்தேம் போடனும். அதுக்கு நெறைய பணம் வேணும்னா கேட்டாங்க.

இந்த ராசா ரொம்பக் கருமி. இதுக்கு என்ன செய்றதுன்னு யோசிச்சாரு. ரொம்ப நேரம் யோசிச்சாரு. யோசிச்சதுல ஒரு யோசனை பிடிபட்டுச்சு, அதுபடி பெரிய பிரபுக்கள்ட்ட ரோட்ட விட்றது. அத அவங்களே போட்டு, அந்தச் செலவ ரோட்ல போற வண்டி, வாகனங்கள்ட்ட வசூல் பண்ணிக்கிற வேண்டியது.

இப்படி ராசா சொல்லவும் எல்லா மந்திரியும் நல்ல யோசனன்னு தலைய ஆட்டுனாங்க. அப்படித் தலைய ஆட்டுனதுல காவல் மந்திரியும் ஒருத்தரு. அவருக்கு இதுல ரொம்ப சந்தோசம்.

என்ன ஊர்ல உள்ள சோமபானப் பிரச்சனை பெரிசா முத்தி நிக்கிது. வீட்டுப் பொம்பளைங்களும், பெரியவங்களும் நிம்மதியா இருக்கமுடியல, ரவுடித்தனம் பெரிகிப் போச்சு, இதோட சாதிச் சண்ட வந்து வெட்டுக் குத்துன்னா ஆயி ஊரே போர்க்களமாக் கெடக்கு. இது பத்தாதுன்னு காவல் சிப்பாய்ங்க வேற பிரச்சனை பண்ண ஆரம்பிச்சு இருக்காங்க. மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் இடிங்கிற கதையா இருந்துச்சு போலீஸ் மந்திரி நெலம். இப்படி இருக்கும் போது ராசா இதச் சொன்னதும் போலீஸ் மந்திரிக்கி ரொம்ப சந்தோசம்.

எல்லாரும் தலைய ஆட்டி முடிக்கவும் இவரு விசயத்த சொன்னாரு. அரண்மனையிலியே இருந்ததால் ராசாவுக்கு இதெல்லாம் தெரியல. அதுக்கு என்ன செய்றதுன்னு ராசா கேட்டாரு. ஒடனே மந்திரி சாலைய விட்ட மாதிரி காவல் கூடத்தையும் செல்வந்தர்கள்ட்டயே விட்றலாம்னு சொன்னாரு. ராசாவுக்கு லேசா திடுக்குன்னாச்சு.

பணக்காரங்கள்ட்ட விட்டம்னா கூடுதலா, சிப்பாய்களப் போட்டுக்கிருவாங்க. நமக்கு செலவு இருக்காது. அதோட பிரச்சனையும் அவங்களே பாத்துக்குவாங்க. நமக்கு நிம்மதியாகப் போகும். அது அதுக்கு உண்டானதை அவங்களே வசூல் பண்ணிக்கிறட்டும். நமக்கு கிஸ்திய கட்டிறட்டும்னு மந்திரி சொன்னாரு.

ராசாவுக்கு இந்த மந்திரி மேல நல்ல எண்ணம் இருக்கு விசுவாசமான ஆளு, யோசிச்சுப் பார்த்தா. இதுவும் நல்ல யோசனையாத்தான் தெரிஞ்சது. அதோட இப்ப இருக்கிறத விட இதுல வருமானமும் அதிகமாக இருக்கும். செரமமில்லாமயுங் கெடைக்கும் ராசா நெனச்சாரு அதனால யோசிக்கிற மாதிரி யோசிச்சு, சரின்னு சொன்னாரு.

இப்படி ஒரு முடிவு எடுத்துருக்காங்கண்ணு தெரிஞ்சது கள்ளச் சோமபானக் காரங்களுக்கு கொண்டாட்டமாப் போச்சு, கூடிக் கூடிப் பேசுனாங்க. எப்படியும் காவல் கூடத்த ஒற்றிக்கு எடுத்துறனும்னா பேசுனாங்க. அது மட்டும் நம்ம கிட்ட வந்துட்டா அப்புறம் ராஜ வாழ்க்கதான் நெனச்சாங்க.

இதுல மந்திரி கோஷ்டி மந்திரிய வச்சு காவல் கூடத்த புடிச்சிற வேண்டியதுன்னு முடிவு செஞ்சாங்க. இதுக்குப் போட்டியா, காவல் அதிகாரிங்க கோஷ்டி, மந்திரி ஆளுங்க கோல் மால் பண்ணி புடிச்சிருவாங்க. அதுக்கு விடக் கூடாது. காவல் கூடத்த பகிரங்கமா ஏலத்துல விடணும். அப்படி விட்டா ஒரு கை பாத்துறலாம்னா முடிவு செஞ்சாங்க. இது விசயமா பேசுறதுக்கு மந்திரிட்ட போகாம ராசாட்டயே. போறதுன்னு போனாங்க.

இதுக்கு இடைல அரண்மனை செலவில் நடந்த மருத்துவமனையில் இருக்க வைத்தியரு பணியாளரு எல்லாம் பயந்தாங்க. மருத்துவமனையும் ஏலத்துல போனா என்னாகிறது? ஏழை பாழைங்க ரொம்ப பயந்தாங்க. பணக்காரங்க சிகிச்சை கூடத்த எடுத்தா பணங்கட்டியில் வைத்தியம் பாக்கணும்? ஏழைங்களுக்கு அடிவயித்த கலக்குச்சு, இதுல ரொம்ப வயசான கெழடுங்க ராசாவ திட்ட ஆரம்பிச்சுட்டாங்க.

இது இப்படியே போயி கணக்கர் கூடம் குறுநில மன்னர் கூடம்னு எல்லாரையும் கலக்க ஆரம்பிச்சுக்சு. பள்ளிக் கூடத்துல பாதி இப்பவே ஏலத்துல தான் நடக்குது. விளக்கெரிய விடறதும். பணக்காரங்கள்ட்ட போகப் போகுது. இனி கணக்கர் கூடமும் குறு நிலமன்னர் கூடமும் தாம்பாக்கி, இது நல்லா பணப் பழக்கமுள்ள எடம். இத விட்டு வைப்பாங்களா? ராசாட்ட சொல்லி இதையும் ஏலம் விட்டா என்னாகுறது? இப்படி ஒவ்வொருத்தருக்கும் கவல.

தனிக் கூட முதலாளி மாதிரி, சாலை முதலாளி, காவல் முதலாளி, சிகிச்சை கூட முதலாளி, எரிபொருள் முதலாளி, வட்டார முதலாளியன்னு மந்திரிக்குப் பதிலா முதலாளிங்களா வந்துட்டா, அப்பறம் எங்க பாடுதான் நீங்களும் படவேண்டி வரும்னா தறி தொழிலாளிங்க எல்லாம் வந்து சொன்னாங்க. அதுக்குப் பெறகு கொஞ் சங் கொஞ்சமாக சேர்ந்து ரோட்டுக்கு வந்தாங்க. அப்படியே நடந்து எல்லாரும் அரண்மனை முன்னால் கூடுனாங்க. கூடி ராசா காதுல விழுற மாதிரி சத்தம் போட்டாங்க.

அரசாங்க வேலையெல்லாம் செல்வந்தர்கள் விட்டுட்டா …… அரசாங்கம் எதுக்கு? …… அரசாங்கம் எதுக்கு? ….. மந்திரிக்குப் பதிலா மொதலாளி வந்தா மந்திரி கடை எதுக்கு? …. மந்திரிசப எதுக்கு? அப்பறம் ராஜாவும் எதுக்கு? … எதுக்கு? எல்லாரும் சத்தம் போட்டுக் கேட்டாங்க.

ராஜா எதுக்கு? …… ராஜா எதுக்கு?

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top