ஒரு விளக்கும் இரண்டு கண்களும்

0
(0)

 

சூசிகை அல்லது முன்னுரை

பழைய புத்தகக் கடையில் புத்தகங்களைத் தேடுகிற பழக்கம் எனக்குக் கிடையாது. ஆனால் அந்தப் புத்தகக் கடைகளைத் தாண்டும் போதெல்லாம் ஆவலுடன் பார்த்துக்கொண்டே நகர்ந்து விடுவேன். அப்படிப்பட்ட எனக்கு அபூர்வமாக ஒரு புத்தகம் கிடைத்தது. முன்பின் அட்டைகளின்றி எழுதிய எழுத்தாளர் பெயருமின்றி, பழுப்பு நிறம் அடர்ந்து ஒடிந்து நொறுங்குகிற பக்கங்களைக்கொண்ட ஒரு ஆங்கிலப் புத்தகம். அந்தப் புத்தகம் என்னை ஈர்த்ததற்கான காரணமே அதன் வயதுதான். இன்னும் சிறிது காலத்தில் தானே இயற்கை எய்திவிடப் போகிற அந்தப் புத்தகத்தின் கடைசி வாசகனாக நான் இருந்துவிட்டுப் போகிறேன். வாங்கும்போது புத்தகக் கடைக்காரன் கொஞ்சம் விசித்திரமாகப் பார்த்தமாதிரி இருந்தது. எனக்கு எப்போதுமே நிறைய விசித்திரங்களைக் கற்பனை செய்துகொள்ளும் பழக்கம் இயற்கையாக உண்டு. புத்தகத்தைப் பதவிசாக கொண்டுவந்து படிக்க ஆரம்பித்தேன்.

அந்த இரவு என் வாழ்வில் மறக்க முடியாத இரவாகி விட்டது. ஒரு பிரளய காலத்தையே அந்த இரவில் நான் சந்தித்தேன். தலைமுடி கலைந்து அழுது சிவந்த கண்களுடன், தூக்கமில்லாத முகத்துடனும் காலையில் என் அறையிலிருந்து வெளியே வரும்போது என் மனைவி,

“என்ன பேய் பிடிச்சமாதிரி வர்றீங்க…”

என்றாள். உண்மையில் அந்த எழுத்துப் பேய் என்னைப் பிடித்துக்கொண்டது. இரண்டு நாட்களாய் யாரிடமும் பேசவில்லை. என்னைப் பிடித்த பேயின் நிலை இன்னும் ஸ்திரமாயிற்று. அதன் சேட்டைகள் ஆரம்பித்தன. அந்தச் சேட்டையின் விளைவாக, அந்தப் புத்தகத்திலிருந்த கதைகளை மொழிபெயர்க்கத் தொடங்கினேன். ஏதோ ஒரு கதையில் ஒரு கதாபாத்திரம் தன்னை எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்கிறது. தன்னுடைய பெயரையும் சைலேந்திர சாட்டர்ஜி என்றும் அறிமுகப்படுத்துகிறது. என் உள்ளுணர்வின் மீதுள்ள நம்பிக்கையில் நானும் இந்தக் கதைகளை எழுதியவர் அவரே என்று முடிவு செய்துகொண்டேன். கதைகள் எழுதப்பட்ட வருடம் எதுவும் அதில் குறிப்பிடப்படவில்லை என்றாலும் எழுதப்பட்டுள்ள கதைகளின் பின்புலம் அநேகமாக 1950களில் வெளிவந்திருக்கலாம் என்று தோன்ற வைத்தது.

ஐம்பத்தைந்து வருடங்களைத் தாண்டிய பிறகும் அந்தக் கதைகளின் துடிப்பை இதோ இப்போது மொழி பெயர்க்கும்போது உணர்கிறேன். இரத்தக் கவிச்சி வாடையுடன், மனதில் மிகப்பெரிய குற்றவுணர்ச்சியை ஏற்படுத்திய கதைகள். கை விரல்கள் பிசுபிசுக்கின்றன. கதைகள் உருவ அமைதியில் சற்று குறைவானவை. ஆனால் கொந்தளிக்கும் உணர்ச்சிகளைக் கொட்டி வடிக்கும்போது உருவ அமைதி, அழகியல் உணர்வு என்றா வகை பிரிக்க முடியும். ஆனால் அந்தக் கதைகளை நான் வாசிக்கும்போது ஒரு வாசகர் மனதில் அவை என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்தன. அதிலிருந்து ‘இரண்டு கண்கள்’ என்ற ஒரு கதையை நீங்கள் வாசிப்பதற்காக மொழிபெயர்த்துள்ளேன். அந்தப் பிசாசை உங்களிடமும் தொற்ற வைக்க முயற்சித்திருக்கிறேன். வாசித்துப் பாருங்கள்.

இரண்டு கண்கள்

பனியினால் திரையிட்டு மங்கிய கண்ணாடி சன்னல் வழியே மால் வீதியைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆனி. வெளியே எதுவும் தெரியவில்லை. தலைக்குல்லாவை நன்றாக இழுத்து காதுகளை மூடிக்கொண்டாள். சிம்லாவின் குளிர்காலம் மிகப் பிரசித்தி பெற்றது. ஐந்து நிமிடங்களுக்கு முன்புதான் ஒரு பெக் விஸ்கி சாப்பிட்டிருந்தாள். இன்னும் கதகதப்பு வரவில்லை. மூக்குக் கண்ணாடியை எடுத்து அடிக்கடி துடைத்துக் கொண்டாள். அதில்தான் பனி திரையிட்ட மாதிரி இருந்தது. மால் வீதியின் எல்லா வீடுகளும் இருளில் மூழ்கி குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தன. எல்லோரும் கம்பளிகளுக்குள் புதைந்து வெகுநேரமாகிவிட்டது. குளிர்கால நடன விருந்து ஆங்கிலேய அதிகாரிகளுக்கு மிகவும் பிடித்த விஷயம். டோங்கா வண்டிகளில் இரவு வந்ததும் வந்திறங்கிக் கொண்டேயிருக்கும் ஆங்கிலேய சீமாட்டிகளும், இந்திய வேலைக்காரர்களால் பணிவுடன் பரிமாறப்படும் எம்பயர் விஸ்கியும் அங்கே பெரும் உவகையையும் பெருங்களிப்பையும் உருவாக்கிவிடும்.

அந்த இரவா இது?

ஆனால் டோங்கா வண்டிகளின் சத்தமோ, இசையோ கேட்கவில்லையே.

வேறு ஏதாவது சத்தம் கேட்கிறதா? இரண்டு கைகளினால் காதுகளைச் சேர்த்துக் குவித்துக் கேட்டுப் பார்த்தாள் ஆனி. வயதான அந்தக் கண்களிலிருந்து அதிகக் கூர்மையைக் கொண்டுவர முயற்சி செய்தாள். வெளியே வீதியில் யாராவது நடமாடுகிறார்களா? உற்றுப் பார்த்தாள். எதுவும் தெரியவில்லை. உயர்ந்த பிர் மரங்களின் வழியே சிம்லாவின் பனிக்காற்று உஸ்… உஸ்… என்று ஒலி எழுப்பி எச்சரித்துக் கொண்டேயிருந்தது.

இருண்ட வானத்தில் நிறைந்திருந்த நட்சத்திரங்களும் பனித்திரை மூடியிருந்ததுபோல மங்கலாய் இருந்தன. ஆனால் ஆனிக்குத் திருப்தியில்லை. தன் மூக்குக் கண்ணாடியை மாற்ற வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். அதே போல காதிலுள்ள மெஷினுக்கும் புதிய பாட்டரிகள் போட வேண்டும் என்று நினைத்தாள். இப்படியே ஒவ்வொரு மாதமும் புதிய புதிய கண்ணாடிகளை மாற்றிக்கொண்டும், ஒவ்வொரு வாரமும் புதிய பாட்டரிகளை மாற்றிக்கொண்டும் இருந்தாள். ஆனாலும் ஆனியின் மனம் சமாதானமடையவில்லை. வெளியே மிகப் பெரிய கலவரம் நடந்து கொண்டிருக்கிறது. அவளால்தான் அதைப் பார்க்க முடியவில்லை. அந்த சத்தங்கள் கேட்பதைப் போலிருந்தது. கொலைவெறிக் கூச்சல். மரணத்தின் விளிம்பிலிருந்து அலறல்கள்! காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்… வேண்டாம்… வேண்டாம்… விட்டு விடுங்கள்… ஐய்யோ… கடவுளே… என்ற கதறல்கள் அவளுக்குக் கேட்டுக் கொண்டேயிருந்தன.

ஒவ்வொரு அலறலுக்கும் அவள் திடுக்கிட்டு தன் சாய்வு நாற்காலியிலிருந்து துள்ளி எழுவாள். சன்னல் அருகே சென்று பார்ப்பாள். எதுவும் தெரியவில்லை. அவள் முணுமுணுப்பாள்.

“அந்தக் கொடியவர்கள் வருவார்கள்… மறுபடியும் வருவார்கள்…”

ஒரு சில நிமிடங்களில் மீண்டும் அந்தக் கூச்சல், கொலைவெறிக் கூச்சல், கைகளில் கத்தி, வாள், சுத்தியல், ஹாக்கிமட்டை இன்னும் வேறு ஏதேதோ ஆயுதங்களோடு ஓடும் கும்பல் அவள் கண்ணுக்கு முன்பாகத் தோன்றியது. அவள் பயந்து நடுங்கினாள். இதயம் வேகமாகத் துடித்தது. வயிற்றைப் பிசைந்து வலித்தது. மலம் கழிக்கவும் சிறுநீர் கழிக்கவும் முட்டிக்கொண்டு வந்தது. மெதுவாக எழுந்து அருகிலிருந்த டார்ச்சை எடுத்துக்கொண்டு கழிப்பறை நோக்கி சிறிய அடிகளாய் எடுத்து வைத்து மெல்ல நடந்தாள். இப்படியே இரவு முழுவதும் விழித்திருந்தாள்.

விடியும் வேளையில் தன்னையறியாமலேயே உறங்கிவிட்டாள். சில சமயம் சாய்வு நாற்காலியில், சில சமயம் தரையில், சில சமயம் சமையலறையின் மூலையில். பகலில் யாரையும் அவள் பார்க்கவுமில்லை. அவளையும் யாரும் பார்க்கவுமில்லை. வாரம் ஒரு முறை ரகசியக் காற்றுபோல வந்து போகும் ஆங்கிலோ இந்தியக் கனவானால் அவளுடைய அன்றாடத் தேவைகள் நிறைவேற்றப்பட்டன.

1947ஆம் ஆண்டில் சர் சிரில் ராட் கிளிஃப் இந்திய பாகிஸ்தான் எல்லைக் கோடுகளைக் கிழித்துக் கொண்டிருந்தார். இந்தியாவைப் பற்றி எதுவுமே தெரியாத இந்த பருத்த ஆங்கிலேய வழக்கறிஞர், தான் வரையும் கோடு இந்திய நிலப்பரப்பில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று உணர முடியாதவராக இருந்தார். அவரது பென்சில் கூறுபோட்டது நிலப்பரப்பை மட்டுமல்ல என்பதை மிக மிகத் தாமதமாகவே தெரிந்துகொண்டார். அப்போது யாராலும் எதுவும் செய்யமுடியவில்லை.

அவர் வரைந்த எல்லைக் கோடுகளின் பிளவுகளிலிருந்து பிறந்த அரக்கர்கள் நாட்டைச் சூறையாடினார்கள். ஒரு நாடு முழுவதும் கோட்டி பிடித்து அலைந்த நாட்கள். அப்போது எந்த மதத்தின் எந்தக் கடவுளும் அவதாரம் எடுத்து, அரக்கர்களை அழிக்கவில்லை. தன் வாழ்வில் தேசம் என்றால் என்னவென்றோ, விடுதலை என்றால் என்னவென்றோ, பிரிவினை என்றால் என்னவென்றோ அறியாத லட்சக்கணக்கான அப்பாவி இந்துக்களின், முஸ்லிம்களின், சீக்கியர்களின் உயிரைக் காப்பாற்ற எந்தக் கடவுளும் வரவில்லை. கசாப்புக் கடையில் கொல்லப்படுகிற மிருகங்களைவிட கேவலமாய் படுகொலை செய்யப்பட்டனர் மனிதர்கள். வீடுகள், தெருக்கள், வீதிகள், சாலைகள், சாக்கடைகள், குப்பைமேடுகள் எங்கு பார்த்தாலும் பிணங்கள். கை, கால்கள் வெட்டப்பட்டவை. குடல் குந்தாணியெல்லாம் வெளியே வந்தவை. கண்கள் தோண்டப்பட்டவை, உடைந்த மண்டையின் வெளியே மூளை உருக்குலைந்து கிடந்தவை, பிறப்புறுப்புகள் சிதைக்கப்பட்டவை. அப்பப்பா…

லட்சக்கணக்கான கடவுளர்களும், முப்பத்தி முக்கோடி தேவர்களும், தேவதூதர்களும், முனிவர்களும், குருக்களும் உள்ள இந்தியத் துணைக் கண்டத்தில், அதற்கு அதிகமாக இவர்களையே நம்பியிருந்த ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் படுகொலை செய்யப்பட்டனர்.

தாங்கள் இதுவரை வணங்கி வந்த எந்தக் கடவுளும், தங்களது உயிர்போகும் அந்த வேளையில் கூட பிரசன்னமாகிக் காப்பாற்ற வரவில்லை என்பதை உயிர் பிரியும் கடைசி நொடிகளிலேயே இறந்தவர்கள் உணர்ந்தார்கள். அதைவிட ஒவ்வொருவரும் இந்தப் படுகொலைகளை தங்கள் கடவுளரின் பெயரைச் சொல்லியே செய்தனர் என்பது ஒரு விசித்திரமான முரணாகவே மனித நாகரிக வரலாற்றில் இருந்து வருகிறது.

1947 ஆகஸ்ட் 18ஆம் தேதி வானொலியில் எல்லைக் கோடுகளைப் பற்றிய சிறப்புச் செய்தி வாசிக்கப்பட்டபோது சாண்ட்விச்சையும், முந்திரியுடன் வறுக்கப்பட்ட சில்லி சிக்கன் துண்டுகளையும், அழகாக நறுக்கி வைக்கப்பட்டிருந்த ஆப்பிள் பழத்துண்டுகளையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் ஆனி. அப்போது மால் வீதி தன்னுடைய மதிய நேர செல்லத் தூக்கத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. மாலை நேர நடன விருந்துகளில் புத்துணர்ச்சியுடன் கலந்துகொள்ள வேண்டுமல்லவா.

ஆனிக்கு அவர்கள் வீட்டுச் சமையல்காரன் இக்பால்தான் செய்தியைக் கொண்டுவந்தான். அப்போது மாலை நான்கு மணியிருக்கும். “நகரத்தில் ஒரே குழப்பமாக இருக்கிறது. அநேகமாக நடனவிருந்துகள் ரத்தாகிவிடும். மேடம் ஆனி, வெளியே எங்கேயும் நீங்கள் போக வேண்டாம். நான் போய் என் குடும்பத்தாரை பத்திரமான இடத்தில் விட்டு விட்டு உடனே வந்து விடுகிறேன்” என்று சொன்னான். ஆனியை அவன் பொறுப்பில் விட்டு விட்டு அவளுடைய மாமா ஸ்டேன்போர்டு கல்கத்தா வரை சென்றிருந்தார். இக்பால் சொன்னதைக் கேட்ட ஆனி அலட்சியமாகச் சிரித்தாள்,

“இங்கே ஒரு பிரச்சினையும் வராது… ஏன் அவரவர்கள்… அமைதியாக அந்தந்த பிரதேசத்தில் இருக்க வேண்டியதுதானே… இல்லையென்றால் விரும்பிய பிரதேசத்திற்கு போய்விட வேண்டியதுதானே. எதற்கு குழப்பம்…?”

என்று கேட்டாள் ஆனி. இதைக் கேட்ட இக்பால் சிரித்தான்.

“மேடம் இன்னும் ஒரு ஆயிரம் வருடம் நீங்க இங்கே இருந்தாலும் உங்களால் இந்தியாவை புரிந்துகொள்ள முடியாது… எங்களுடைய அரசியல் தலைவர்களாலேயே புரிந்துகொள்ள முடியவில்லையே…”

என்று சொன்னான். அவன் குரலில் இருந்த அழுத்தம் ஆனியை அமைதிப்படுத்தியது.

“சரி… போய்ட்டு சீக்கிரம் வா…”

“சரி மேடம்… எதுக்கும் முன்னால் கதவை பூட்டிவிட்டு போகிறேன்… நான் வருவதற்குள் ஏதாவது பிரச்சினையென்றால் பின் கதவு வழியாக தப்பித்து விடுங்கள்… கையில் துப்பாக்கியை வைத்துக்கொள்ளுங்கள்…”

என்று சொல்லிவிட்டு அவளுடைய மாமாவின் கைத்துப்பாக்கியை எடுத்து அவள் கையில் கொடுத்தான். அவள் முகத்தில் பயம் படர ஆரம்பித்துவிட்டது.

“ஏய்… நீ… ரொம்ப பயமுறுத்துகிறாய்… எங்களுக்கு எதற்கு ஆபத்து வரப்போகிறது?”

“இல்லை… எச்சரிக்கிறேன் மேடம்… எச்சரிக்கையாக இருப்பது நல்லதுதானே… ஏனென்றால் மக்களுக்கு பைத்தியம் எப்போது பிடிக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது… பைத்தியங்களுக்கு தாங்கள் என்ன செய்கிறோம் என்று புரிந்துகொள்ள முடியாதே…”

என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று வெளியேறினான் இக்பால்,

வெளியே பூட்டு பூட்டப்படும் சத்தம் கேட்டது. சில பறவைகளின் மெலிதான கூவல்களைத் தவிர வேறு சத்தம் எதுவும் ஆனிக்குக் கேட்கவில்லை. எப்போதும் போல பிர் மரங்களின் காற்று கானம் இசைத்தது. இந்தக் காற்றின் சத்தத்தைக் கேட்கும் போதெல்லாம் அவளுக்கு பீத்தோவனின் ‘த விண்ட்’ இசைக்கோவை நினைவுக்கு வரும். ஆனால் இப்போது அந்தக் காற்றின் ஒலி வித்தியாசமாய் ஒலிக்கிறதோ.

அவள் சன்னல் வழியே வீதியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். வெறுமையாக இருந்தது. வானொலியைத் திருப்பினாள். ஹிந்துஸ்தானி இசை ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. வானொலியை அணைத்துவிட்டு படுக்கையில் படுத்தாள். மெல்ல கண்கள் அயரும் நேரம் பெரும் கூச்சல், குலை நடுங்க வைக்கும் கூச்சல் கேட்டது. ஆனி திடுக்கிட்டு துள்ளி எழுந்தாள். ஓடிச் சென்று திறந்து கிடந்த சன்னல்களை அடைத்தாள். சில விநாடிகளில் அந்தச் சத்தம் தூரமாகிக் கொண்டே போனது.

ஆனிக்கு அச்சம் வளர்ந்தது. கைகள் நடுங்க ஆரம்பித்தன. தனியாக இருக்கிறோம் என்பதே இன்னும் பயத்தைக் கொடுத்தது. கைத் துப்பாக்கியை எடுத்து படுக்கையில் பக்கத்தில் வைத்துக்கொண்டாள். மீண்டும் அமைதி. எதுவுமே நடக்காதது மாதிரி. இதோ இன்னும் சிறிது நேரத்தில் அவள் நடனவிருந்துக்கான ஆடைகளை அணிந்துகொண்டு புறப்படப் போகிறாள். எதுவுமில்லை. பயப்படும்படி எதுவுமில்லை.

ஆனால் மீண்டும் அந்தச் சத்தம், கூச்சல், ஏராளமான மனிதர்களின் காலடிச் சத்தம். ஆனி கையில் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வரவேற்பறையிலிருந்து முன் வராந்தாவுக்கு வந்தாள். இருட்டத் தொடங்கி இருந்தது. ஆனியின் வீட்டு வாசலுக்கு முன்னால்தான் ஒரு கும்பலும் கூச்சலும்.

“ஜெய் காளி… விடாதே அவனை… கொல்லு…”

என்ற கத்தல்கள். அதையும் தாண்டிய ஒரு கதறல்.

“விட்ருங்க அண்ணே… நாம அண்ணந்தம்பிங்க… என்னைய விட்ருங்க அண்ணே…”

கேட்டது. ஆனிக்கு அது மிகவும் பரிச்சயமான குரல். கதறலால் அந்தக் குரல் கொஞ்சம் பிசிறடித்திருந்தது… ஆனால் அந்தக் குரல்… இக்பால்… இக்பால்… அவனுடையதுதான். ஆனிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த இருளுக்குள் எல்லோருமே கோட்டுருவங்களாகவே தெரிந்தனர். யார் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அப்போது திடீரென்று ஒரு குழந்தையின் அழுகுரல் ஓங்கிக் கேட்டது.

“ஐயோ என்… குழந்தை… என் குழந்தை…”

என்ற இக்பாலின் கூக்குரலைக் கேட்டதும் ஆனிக்கு இதயமே வெடித்துவிடும்போல அதிர்ந்தது. போனமாதம் ஆனியின் வீட்டிற்கு அவனுடைய ஆறுவயது மகள் நூர்ஜஹானைக் கூட்டிக்கொண்டு வந்திருந்தான். துறுதுறுவென்று இருந்த குழந்தையுடன் விளையாடியதில் ஆனிக்கு அன்று முழுவதும் பொழுது போனதே தெரியவில்லை. அடிக்கடி அழைத்துவரச் சொல்லியிருந்தாள். அவளா… அவளா… உடனே வேகமாக பின் வாசல் கதவைத் திறந்து வெளியே வந்தாள். ஆனால் காலம் கடந்துவிட்டது. உயிர் போகிற அலறல் கத்தியாய் ஆனியின் உயிருக்குள் இறங்கியது. வெறிகொண்ட அந்த கும்பல்,

“ஜெய் காளி… ஜெய்!”

என்று வெற்றிக் களிப்புடன் கூவிக்கொண்டு அடுத்த இரையைத் தேடி ஓடியது. அப்படியே அசையாமல் உறைந்து போய்விட்டாள். திடுமென உணர்ச்சி வந்ததுபோல கையிலிருந்த துப்பாக்கியால் கன்னாபின்னாவென்று சுட்டுக்கொண்டே வாசலை நோக்கி ஓடினாள். யாரும் இல்லை அங்கே. வாசல் இரும்புக் கதவின் முன்னால் இரத்தம் பீறிட இக்பாலின் உடல், வெட்டப்பட்ட தலை ஒரு நரம்பின் தொடர்பினால் விடுபடாமல் உடலோடு கிடந்தது. முகம் வானத்தை வெறித்தபடியிருக்க, பாதி திறந்த கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் இன்னமும் காயாமலிருந்தது.

இன்னமும் கழுத்திலிருந்து சொட்டிக் கொண்டிருந்த ரத்தத்தில் ஆனி வீட்டின் முன் வாசல் பூட்டுக்கான சாவி முங்கிக் கொண்டிருந்தது. பக்கத்தில் இக்பாலின் குழந்தை நூரும் ரத்த சகதியில். பார்க்க முடியவில்லை. முகத்தை மூடிக் கொண்டாள். அவளுக்கு தலை சுற்றியது. ஓங்கரித்துக் கொண்டு வந்தது. அப்படியே திரும்பி வீட்டுக்குள் ஓடினாள். பின் வாசல் வழியாக உள்ளே சென்று எல்லாக் கதவுகளையும் அடைத்துத் தாழ்ப்பாளிட்டாள்.

கைகளில் பிடித்த துப்பாக்கியுடன், சன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தாள் இரவு முழுவதும். அங்கங்கே தீயின் பிழம்புகள் கொளுந்து விட்டெரிந்தன.

புகைமண்டலங்கள் மேகங்களாய் ஊர்ந்து சென்றன. அவ்வப்போது கூச்சல் கேட்டுக்கொண்டேயிருந்தது. ஆனி வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தாள். விடிந்தபோது தன்னையுமறியாமல் அப்படியே உறங்கிவிட்டாள்.

அன்றிலிருந்து அவள் வாழ்க்கை மாறிவிட்டது.

ஆங்கிலேயர்கள் எல்லோரும் நாட்டை விட்டுப் போய் விட்டாலும் அவள் போகவில்லை.

இக்பாலின் பூட்டு அவளை வெளியே விடவில்லை.

தலை துண்டிக்கப்பட்ட இக்பாலின் முகத்தில் வழிந்த கண்ணீர் இன்னமும் ஆனியின் கண்ணுக்குள்ளேயே இருந்தது. எத்தனையோ முறை அவளது உறவினர்கள் வற்புறுத்தி அழைத்தும் அவள் இங்கிலாந்து செல்லவில்லை.

லேசான மனப்பிறழ்வு நோயும் அவளை பீடித்திருந்தது. அதனால் அவளை இங்கேயே தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் விட்டுவிட்டார்கள்.

சிம்லாவில் எல்லோரும் ஆனியை சூனியக்காரி என்று சொல்லத் துவங்கியிருக்கிறார்கள். அந்த வீட்டில் சூரியன் மறைந்து இருள் பரவிய பின்பே அவள் நடமாட்டம் ஆரம்பிக்கிறது. அந்த நடமாட்டத்தின் அறிகுறியாக ஒரு விளக்கு எரிகிறது.

அந்த விளக்கின் வெளிச்சத்தில் மால் வீதியை வெறித்துக் கொண்டிருக்கும் இரண்டு ஆங்கிலேயக் கண்கள்.

இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள எல்லா மதக் கடவுளர்களின், முப்பத்தி முக்கோடி தேவர்களின், தேவதூதர்களின், கையாலாகாத்தனத்திற்கு சாட்சியாய் அந்தக் கண்கள்…

 

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top