ஒரு வார்த்தை

0
(0)

ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும். ஒரு வார்த்தை எந்தச் சமாதானத்திற்கும் இடமேயில்லாத பிரிவிற்கும் கொண்டு செல்லும்.  அது எப்போது, எதற்காக, எப்படி, திட்டமிட்டா, உணர்ச்சிவசப்பட்டா, காரணம் கருதியும், கருதாமலும் உதிர்ந்துவிடும் சொற்கள்தான், மனித குலத்தின் பல வாழ்க்கை நிகழ்வுகளுக்கும், வரலாற்று நிகழ்வுகளுக்கும் காரணமாகியிருக்கின்றன.

என் கணவரின் ஒன்றுவிட்ட அண்ணன் நேற்று காலமாகிவிட்டார். நுரையீரல் புற்று நோய் காரணமாக, இருக்கும் பல சொத்துக்களை விற்றுப், பல பன்னோக்கு, ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளுக்கு அழுதும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை. ஊருக்கு வெளியே மருத்துவமனையில் சாவு நிகழ்ந்துவிட்டதால், பிணத்தோடு பல ஆவிகளும், பேய்களும் உடன் வரும் என்ற ஐதீகப்படி, வீட்டிற்குள் வைக்காமல், வீட்டுக்கு வெளியே முன்னடியில் அவர் உடல் வைக்கப்பட்டது. எங்கள் ஊரில் எல்லாம், நேரடியாகச் சுடுகாட்டிற்குக் கொண்டுசென்றுவிடுவர். சுடுகாடு செல்லும் வழியில் இரண்டு, அல்லது ஐந்து நிமிடம் பெண்கள் உடலைப் பார்த்துக் கொள்ளலாம். அவ்வளவுதான்.  அதற்கு இது பரவாயில்லை அல்லவா?

குழந்தையில்லாத  குறை தெரியாதவாறு தன் மனைவி  லட்சுமியுடன் வாழ்ந்த மனிதர்.  அவருக்குப் பெண் கொடுத்த பாவத்திற்காக,  அனைத்து மருத்துவமனைகளுக்கும் அலைந்து திரிந்து லட்சுமியக்காவின் அண்ணனும், ஒரு தம்பியும் ஆள் பாதியாளாக இளைத்துக் கறுத்துவிட்டிருந்தனர்.

இறந்தவரோடு பிறந்த அண்ணன்கள் இருவரும், என்னதான்  தம்பி உறவென்றாலும், மருத்துவமனையில் உரிமையோடு தம்பியைக் கவனித்துக் கொள்ள இயலாமல்,  அதிலும், தம்பியின் மனைவி, மைத்துனர்கள் இருக்கும் சூழலில்  சென்று பார்ப்பதும், மருத்துவமனை வாசலில் காத்துக் கிடந்துவிட்டுத் திரும்புவதுமாக இவர்களும் நொந்துபோயிருந்தனர்.

நாங்கள் அவர் நலனில் போதிய அக்கறை காட்டவில்லை என  அவர்களும், எங்க வீட்டு ஆம்பளைக்கு முடியலன்னதும், எங்கள அண்டவிடாம அடிக்கிறாய்ங்க என நாங்களும் பொறுமிக் கிடந்தோம்.  மருத்துவமனை அனுபவத்தில் இரு வீட்டாருக்கும் இடையே இருந்த சிறு நெருடல்கள், பெரும் பகையாய் முற்றியிருந்தது.

இழப்பின் வலி தீர அழுது முடிந்ததும், குழந்தையற்ற அவருக்கு யார் ஈமக்கடன் செய்வது என்ற பிரச்சினை பூதாகரமாக எழுந்து நின்றது.  “என்ன இருந்தாலும் இது எங்க வீட்டுச் சாவு” என நாங்களும், “நேத்துவரைக்கும்  எங்கக்கா புருசனப்  பாத்தவிங்களுக்கு, இன்னிக்குத் தெரியாதோ, வந்துட்டாய்ங்க ” என  அவர்களுமாய் ஊர் ரெண்டாகிக் கச்சை கட்டி நின்றது.  ஊர் முழுதும் கூடியிருந்தது இழவு வீட்டில், தெருவடைத்து சனங்கள் பிரச்சினையின் சுவாரஸ்யம் கருதிக் குவிந்து கிடந்தார்கள்.  சலசலப்பு மனதின் பேரிரைச்சலாய்ப் பந்தலடைத்துப் பெருகிச் சுழித்தது.  சப்தமிட்டு அழுவதும், பேச்சுக் கேட்கும் திசையில் கவனம் திருப்புவதுமாக,  இறந்த உடலைச் சுற்றி லட்சுமியக்காவும், என் வீட்டு, அவர் வீட்டுப் பெண்களும் குவிந்திருந்தார்கள்.

சலசலப்புக்கிடையே  ஊர்ப் பெரியவர்  ராமசாமி சப்தமிட்டார்.  “ஏப்பா, என்னதான் சொல்றீங்க?  ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா அலைஞ்சு, ஊருக்கு வெளிய செத்த உடம்புப்பா, காலாகாலத்துல எடுக்க வேண்டாமா? அழுதுக்கிட்டே யிருந்தாத் தீருமா?”  வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, தோள் துண்டை ஏற்றிவிட்டுக்கொண்டே கத்தினார்.

இதற்கே காத்திருந்தது  போல, இரு தரப்பும் எழுந்து நின்று கூச்சலிடத் துவங்கியது. காரசாரமான விவாதங்களும், ஒருவருக்கொருவர் குற்றப்பட்டியல் வாசிப்பதுமாக எழுந்த சப்தங்களைப் பிரித்தறிய முடியாதவாறு ஒரே சத்தக்காடாய் இருந்தது.  உடலைச் சுற்றி அழுதுகொண்டிருந்தவர்கள், மூக்கைச்சிந்தியபடி, அவிழ்ந்த கூந்தலை அள்ளிமுடிந்தபடி இங்கே பார்த்துக்கொண்டிருந்தனர்.  இறந்தவரின் மூத்த அண்ணனும், தம்பியும்  இழப்பின் வலி கோபமாய் நிறம் மாற,  முகம் சிவந்து தலை கவிழ்ந்திருந்தனர்.  இவர்கள் பேசுவதும், பின்பு அவர்கள் பேசுவதும், மூத்தோர் அதட்டுவதுமாக, எதுவும் எவர் கட்டுப்பாட்டிலும் இல்லாத உணர்ச்சி வேகம்.

‘இந்தக் கூட்டம் என்ன முடிவு செய்து, எப்போது பிணந் தூக்கி, எப்போது ஊர் திரும்ப’ என அக்கம் பக்கத்து  ஊர்க்கார உறவுகள் முனகிக் கொண்டும்,  கூட்டத்தின் சுவாரஸ்யத்தில் ஒருவரோடொருவர் எக்கியும், எட்டியும் பார்த்துக் கொண்டு தங்களுக்குத் தெரிந்த, பார்த்த  நியாயங்களைச் சொல்லிக்கொண்டிருந்தனர்.

காலை முதல் பட்டினி வயிறு சுண்டிப் பிடிக்க, பசியை முகத்தில் தேக்கியபடி, என் கணவனும், சின்ன மாமனார், பெரிய மாமனார் வீட்டாள்கள் என மொத்தப் பங்காளிககும், உலர்ந்துகிடந்த உதடுகளுடன் வெம்பிக் கிடந்தனர்.  “என்ன பேசினாலும் இது எங்க வீட்டுச் சாவுடி மாப்ளைகளா, அண்ணந் தம்பிகளுக்குள்ள ஆயிரம் இருந்தாலும் எங்க வீட்டுச் சாவுத் தீட்டுப் பொண்ணுக் குடுத்தவிய்ங்களுக்கு வருமோ? ஆஸ்பத்திரியில பார்த்தீங்கன்னா,  கொள்ளிய நீங்க போடுவீங்களோ? மாமம் மச்சினங்க மருவாதயா வந்தமா, மொறயச் செஞ்சமா, போனமான்னு இருங்க. இல்ல வெட்டுக்குத்தாயிரும்”  இறந்தவரின் அண்ணன், எங்க வீட்டின் மூத்தவர் பேசியதும், எதிர்த்தரப்பு மறுபடியும் கோப உச்சத்திற்கே சென்றது.

“யோவ் மாமா!  அந்த மயிரெல்லாம் எங்களுக்கும் தெரியும், கொள்ளியப் போட்டு, மிச்சமிருக்கிற இந்த வீட்ட அமுக்கலாமுன்னுதான பஞ்சாயத்துக் கூட்டியிருக்கீரு, வாக்கப்பட்டு வாழ வந்த எங்கக்காதா கொல்லி போட்டாத்தான், உங்க தம்பி ஒடம்பு வேகும். பங்காளிப் பயக அண்ணந்தம்பிக இன்னிக்கு வந்து நானுதான்னு போட்டா, எம் மாமங் கட்ட வேகாதுய்யா. ஆயிரம் பேரு மறிச்சு நில்லுங்கடி பாக்கலாம். எங்கக்காதேம் கொல்லி போடும். உங்களால ஆனதப் பாருங்கடா.”  லட்சுமியக்காவின் அண்ணன்   சாமியாடுவதுபோல பேச, உடல் கோபத்தில் கிடுகிடுவென ஆடியது.

இதைக் கேட்டதும் எங்க வீட்டுக் குட்டி குருமானுக்கெல்லாம் கைகாள்களே, வெட்டுக்கத்தியானது போல ஆங்காரம் பற்றிக் கொண்டது.  என்ன பஞ்சாயத்தானாலும், ஆண்பிள்ளை வீட்டார்களின் பக்கமே ஊரின் தீர்ப்பு ஆகும் என்றாலும்,  எங்கள் பங்காளிகள், அங்காளிகள் அனைத்திற்குமான மானக்குறைவாக,  கௌரவக் குறைச்சலாகக் கருதித் துடித்துப் போய் முறுக்கி நின்றது எங்கள்  கூட்டம். ஊர் பெரிய தலைகள் இருபுறமும்  அதட்டிச் சப்தமிட்டதும் சற்றுத் தளர்ந்த சலசலப்பின் பொழுதில், என் கணவன் எழுந்து நின்றான்.  ஏதும் சமாதானத்திட்டம் சொல்லலாம் எனக் கருதியதோ என்னவோ, மொத்தக் கூட்டமும் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தது.

“யோவ் மாப்ள, நீ ஆம்பள , வீட்டுக்குள்ள நொழைஞ்சு எங்கண்ணன் மேல கைய வையி பாக்கலாம், வச்சிட்ட  வெக்காளி  நான் உனக்குப் பொண்டாட்டிடா.” உடல் முழுதுமான கோப வெறி முகத்தில் குருதியெனச் சிவந்து கொப்பளிக்க, அவன் சொன்ன வார்த்தைகள், அவன் சொன்னது மட்டுமல்ல. எங்கள் ஒட்டுமொத்த குடும்பத்திற்குமானது என்பது புரிந்த சனம், அமைதியானது.  ஒருவன் எக்காரணம் கொண்டும், எதிரியின் பொண்டாட்டியாக இருக்கச் சம்மதிக்க மாட்டான், கொலைக்குத் துணிந்துவிட்டான் என்பதே அதன் முழு வீச்சாக நின்றது.  வேறு வழியில்லாமல் சம்பந்தக்காரர்கள் அமைதியாகிவிட,  இறந்தவரின் அண்ணன் மகன் கொல்லி போடுவது என முடிவாகி, மளமளவெனக் காரியங்கள் நடக்கத் துவங்கின.

“பாத்தியாடி  மாலு, எம் மயம் பேச்ச, ஒத்த வாத்தன்னாலும், ஆம்பள எப்பிடிப் பேசிப்புட்டியாம் பாத்தயில்ல. சனமே மெச்சிப் போச்சிடி.”  என் சின்ன மாமியார்க் கிழவி என்னிடம், என் கணவனின் வீரச் சொற்கள் குறித்த பெருமிதத்தை சொல்லிவிட்டு சென்றது.

“எங்கண்ணன் மேல கைய வையி பாக்கலாம். வெக்காளி நீ வச்சிட்ட நா உனக்குப் பொண்டாட்டா.”  இந்தச் சொற்கள் எனக்குள் திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டிருந்தது. காதல் வாழ்வின் மகாராணியாய்,  எப்பொழுதும் பூத்துப் பொலியும் நந்தவனமாய் என்னை உணர்ந்த எனக்கு, சட்டெனச் செப்டிக் டேங்கின் நாற்றம் சுமந்து ஊரும் கரப்பான் பூச்சியானதாய் உடல் குறுகுறுத்தது.  கொடிய விச வாயுவால் தாக்கப்பட்டது போல மூச்சுத் திணறிப்போனேன். பந்தலில் நடக்கும் எதுவும் என் மூளைக்குள் ஏறவில்லை.

“ஏன்? நான் உனக்க வப்பாட்டிடான்னு சொல்லியிருக்கலாம். பண்ணைக்காரன்னு சொல்லியிருக்கலாம். அங்கு ஏன் பொண்டாட்டி என்ற சொல் வந்தது?” யோசனை சுழற்றிச் சுழற்றி துவைத்தது. இவ்வளவு மானங்கெட்ட சொல்லா அது.  இவ்வளவு மானங்கெட்ட உறவையா  எல்லோரும் வாழ்கிறோம்.?  தலை வெடித்துவிடும் போல வலிக்கத் துவங்கியது.  உடல் எடுத்துச் செல்லப்பட்டு, வெளியூர் ஆட்கள்  கிளம்ப தெரு வெறிச்சோடியது. உடலெங்கும் கம்பளிப் புழுக்கள் நெளிய நான் வாசலில் கிடந்த நாற்காலியில் எழவும் சக்தியற்றுக் கிடந்தேன்.

“ஏன் என்னைப் போலக் கேட்டுக் கொண்டிருந்த பெண்கள் யாருக்கும் இது குறித்து ஏதும் தோணவில்லையா? இது  சரிதான் என நினைக்கிறார்களா? ஒருவேளை அவர்களின் வீட்டு ஆண்கள் சொல்லாததால், இவர்கள் வகிக்கும் பொண்டாட்டி என்ற பொறுப்பு மதிப்பு மிக்கதா? அப்போ நான் மட்டும்தான் இந்தக் கேவலமான பெண்டாட்டியா?

இழவு வீட்டின் பந்தலுக்குள் இருள் கவியத் துவங்கியது. இந்த இருளில் இனி ஒருநாளும் நிற்க முடியாது எனத் தோன்றியது.  மனைவி என்ற உறவுச் சொல் குறித்த  கேவலமான நூற்றாண்டுகாலத் துருவை,  அடிமைச் சொல்லை, அப்படிக் கருதும் எண்ணத்தை எதைக் கொண்டு துடைப்பது? ”

சிந்தனையில், ரத்தத்தில், தலைமுறைக்குள், மரபுக்கண்ணிகளுக்குள் ஊறிக் கிடக்கும், இந்த அருவருப்பை, இளக்காரத்தை  எதைக் கொண்டு தகர்ப்பது?  நேரம் போனதே தெரியவில்லை. துவண்டுகிடந்தது மனசு. சக்கையாய்,  துப்பப்பட்ட எச்சிலாய் உடல்.

எல்லோரும்  சுடுகாடு சென்று திரும்பிவிட்டனர்.

“மாலு,  சாப்பிட்டியா? சாப்பாடு எடுத்துவை” அவ்வளவு கூட்டத்தில்,  கொதித்த அந்த முகத்தை உற்றுப் பார்க்கிறேன். எல்லா இரவுகளும் என் கனவுகளுக்கானவை, எல்லா நட்சத்திரங்களும் நான் கண்டு விழுங்கப் பூத்துக் கிடப்பவை. வீசுகிற மென்காற்றுக்குள் மீனைப் போல நீந்திக்கிடக்கும் பெண்ணுடலின் ஆதிமகள் நான். என் வாழ்வு, மகிழ்வு, பூரிப்பு, குதூகலம், மகோன்னதம், இன்பம், பேரின்பம் என மனிர்களின் சுக உணர்வுகளுக்கான எல்லாச் சொற்களையும் என்னுடைய பூர்வீகச் சொத்தெனக் கருதியிருந்த என் தாம்பத்திய வாழ்வின் முகம் அது.

“மாலு, என்னடி எந்திரிச்சு வா” ஈரமான துண்டை உலரப் போட்டுவிட்டு என் அருகில் வருகிறான். நேற்று வரைக்கும் வறண்ட நிலம் பாயும் சாரல் மழையெனக் காத்துத் தேடி, நான் உறவாடி மகிழ்ந்த முகமா இது?

“ஏங்க, எனக்கு நீங்க பொண்டாட்டியா இருக்கீங்களா?” அவனுக்கு மட்டும் கேட்கும்படிச் சன்னமாகியிருந்தது என் குரல்.

“என்னது, என்னடி சொல்லுற? செருப்புப் பிஞ்சிரும்” மீண்டும்  கொதிப்படைந்த முகத்தோடு கையை ஓங்கினான். ஓ! ஒரு ஆம்பளைக்குப் புரிந்துகொள்ளவே முடியாது.

“உங்களோட இந்தக் கோபம், ஏங்க இவ்வளவு தலைமுறையா, எந்தப் பொம்பளைக்கும் வரவேயில்ல?”

“மாலு, இப்ப சாப்பாட எடுத்து வைக்கிறியா இல்லியாடி?”

…..

“மாலு”

“ஏய் மாலு”…

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top