நிலவு மங்கலாய்க் காய்கிறது. கிழவர் திண்ணையை விட்டு எழுந்து கவனமாய்த் தெருவில் கால்பதிக்கிறார். குண்டும் குழியுமான பாதையில் மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்கிறார். கிராமத்தின் பிரதான அம்சமாய் விளங்கும் கட்டை வண்டிகள் குறுக்கும் நெடுக்குமாய் இறைந்து கிடக்கின்றன. எச்சரிக்கையாய் இல்லாவிட்டால் இந்த அரை குறையாய்ப் பார்வை தெரியும் காலத்தில் தடுமாறி விழுந்து அநியாயமாய் பிராணனை விட வேண்டியதிருக்கும்.
ஒரு தெரு விளக்கின் அடியில் அமுங்கிக் கிடக்கும் மூத்த மகனின் வீட்டு வாசலில் சில நிமிஷங்கள் தாமதிக்கிறார். பார்வை சரியானவர்களுக்கே இரவு நேரங்களில் எளிதில் புலப்படாத வீட்டின் உள்புறத்தை இவரால் தெரிந்து கொள்ள முடியவில்லை. இருந்தாலும் ஏதேனும் அழைப்புக் குரலுக்காய் நின்று போகும் பழக்கத்தில் தானாகவே கால்கள் அங்கு வந்ததும் ஸ்தம்பிக்கின்றன. பன்றிக் குடிலாய்ப் பதுங்கிய அந்த பழமையான வீடு, தெரு விளக்கு எரியும் காலங்களில் கொஞ்சம் தூக்கலாய்த் தெரிவதுண்டு.
கால் வயிறு நிறைந்த தெம்பில் சில நாட்கள் குழந்தைகள் சிம்னி விளக்கைத் தவிர்த்து தெரு விளக்கில் குதிப்பதுண்டு. அந்த சாக்கில் மூத்த மகனும் அவன் மனைவியும் கொஞ்சம் காலாற வெளியில் அமர்வர்.
கிழவர் மேலும் நடக்கிறார். கிழிந்து நைந்து தொங்கிய வேட்டி காலை நெருடுகிறது. சுpரமப்பட்டு துழாவி வேட்டி முனையைப்பிடித்து ஒன்று கூட்டி ஆயாசத்துடன் மடித்துக் கட்டிக் கொள்கிறார். வேனல் காலமெனினும் ஏனோ உடம்பு லேசாய் குளிர்கிறது அழுக்கேறி, கரி படிந்த என்றோ இளைய மகன் கொடுத்த துண்டைப் போர்த்திக்கொள்ள முயல்கிறார். அது முழுசாய் உடம்பை மறைக்கிறதில்லை. நட்ட நடுவில் பெரிசாயிருந்த கிழிசலில் காற்று புகுதலில் மேனி சிலிர்க்கிறது.
இரவு எட்டு மணி கூட ஆகியிருக்காதெனினும், கிராமம் நிசப்தத்தில் ஆழ்ந்து கொண்டு வந்தது. கிராமச் சாடியை நோக்கி கிழவரின் மனமும் கால்களும் முன்னேறுகின்றன. ‘கத கத’ வென்று வயிறு எரிகிறார் போலிருக்கிறது. கொஞ்சம் மானமாய் அந்தக் கிராமத்தில் வாழ்ந்திருந்ததால் ஒரு வீட்டின முன் போய் ‘அம்மா தாயே!’ என்று யாசிக்கிற துண்ச்சல் அவருக்கு வரவில்லை.
சாவடியின் நடுவில் ஒரு தெய்வம் நிற்கிறது. அதில் எரியும் எண்ணெய் விளக்கு, தரையெல்லாம் மெலிதாய் வெளிச்சம் இழையோட விட்டிருக்கிறது. நாற்புறமும் சிதறிப் படுத்திருக்கின்ற கிழவர்களுக்கும் நடுத்தர வயதினருக்கும் என்றும் குறைவில்லைதான்.
இவரைப்போல், வாழ்க்கையின் இருதியைத் தொட்டுக் கொண்டிருந்ததுகள் சில பழங்கதை பேசிக் கொண்டு குழுமியிருக்கின்றன. ‘சிமெண்ட்’ திண்டின் வேறு புறங்களில் சில இளைஞர்கள் தனக்கு ஒத்துப் போகாத பெண்களைப் பற்றியோ வேலையின்மைகளைப் பற்றிறோ கார சாரமாக விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். போதாக் குறைக்குச் சில சிறுவர்கள் தெருக்களில் விளையாடியதோடு நிறைவுறாமல், சாவடியிலும் குதித்துக் கொண்டு பெரியவர்களிடம் விரட்டு வாங்கிக் கொண்டிருந்தனர்.
வயிற்றை முறுக்கிப் பிழியும் பசிப் பிணியுடன் கிழவர் சாவடிப் படிகளில் மெல்ல மெல்ல ஏறுகிறார். ஓவ்வொரு கால் உயர்த்தலுக்குமாய், நெஞசை விண்விண்ணென்று வலிக்கிறது. ‘இப்படியே விழுந்து மாண்டு வழிட்டால் என்ன’ என்றொரு எண்ணம் மின்னி மறைகிறது. நெஞ்சு வலியும் பசியுமாய் சேர்ந்து ஒரு வித மயக்கத்தை ஏற்படுத்த யாருடைய அருகாமையையும் விரும்பாதவர் போல் தனித்துப் போய் ஒரு தூணில் சரிந்து, அங்குலம் அங்குலமாய் அமர்கிறார். முதுகுப்புறம் எரிகிறது.
ஊட்கார்ந்த மாத்திரமத்திலேயே கை காலகளெல்லாம செயலற்றுப் போனாற் போல், இப்படியும் அப்படியுமாய் அசைத்துக் கொள்ளவும் வலுவற்ற ஒரு அசாத்தியம் அவரை அழுத்துகிறது. நீராகாரம் தவிர, கூழேனும் குடித்துப் பல நாட்களாகிவிட்டன. பஞ்சடைந்து, உள்ளிறங்கிப் போன கண்கள் மூடியே கிடக்கின்றன. செவிகளிரண்டும் கேட்கும் சக்தியை இழந்து விட்டார் போல் சுற்றுப்புற சம்பாஷணைகளை நினைவில் இருத்தாமல் மரத்துப் போயிருக்கின்றன.
கிழவர் சமீப காலமாக யார் பேசினாலும் மௌனம் சாதிக்கிறார். பேச நா எழாதவராய மலஙக மலங்க விழிக்கிறார். இவருடன் பேசிப் பிரயோஜனம் இல்லையென்று சம வயதினர் பலரும் கூட ஒதுங்கி விடடிருந்தனர். அனுதாபம் காரணமாகவும், நெருங்கிப் பழகிய தோஷத்தாலும் சிலர் இவரருகே வந்து அமர்கின்றனர். கிழவர் சந்தடியுணராமல் கண் மூடியே சமைந்திருக்கிறார்.
“என்ணண்ணே
ஒடம்புக்கு முடியலியா?” அவரைப் போன்று தள்ளாமை வாய்ந்த ஒருவரின் குரலில் இரக்கம் மேலிடுகிறது.
கிழவர் தொடர்ந்து மௌனம் சாதிக்கிறார். அவரிடம் இருந்து எவ்வித அசைவுகளையும் காணோம். வானில் நிலா மேகங்களினின்றும் பூரணமாய் வெளிப்பட்டிருக்கிறது. கிழவரை நன்றாகப் பார்க்க முடிகிறது. வந்தமர்ந்த மூவரும் திடுக்கிட்டுப் போகின்றனர்.
ஒருவர் கிழவரை நடுங்கும் கைகளுடன் லேசாய் அசைக்கிறார். கிழவர் எவ்விதப பிரதிபலிப்புமினறி தூனோடு தூனாய் ஒட்டிக் கிடக்கின்றார். இன்னொருவர் கிழவரின் நெஞ்சில் கைவைக்கின்றார். அவரது முகத்தில் களேபரம் குறைகிறது.
“கொஞ்சம் கெரக்கமா சாஞ்சிருக்காரு… அவ்வளவுதான். ஒண்ணும் தெந்தரவு பண்ண லேணாம். வாங்க அங்கிட்டுப்போயி உக்காருவோம்…” மூவரும் அகன்று போகின்றனர்.
சாவடியில் கூட்டம் குறைகிறது. அங்கேயே இரவைக் கழிப்பதற்கானவர்கள் மடடும் விடாமல் கதை பேசிக் கொண்டிருக்கின்றனர். வேறு சிலர் சால்வைகளுடன் வந்து கொண்டிருக்கின்றனர்.
கிழவரைப் பொறுத்த மட்டில உடல் பலமிருந்தவரை தனக்கும் குடும்பத்திற்குமாய் உழைத்தார். அவர் தலையெடுத்த பின் பூர்வீகமாயிருந்த இரண்டு ஏக்கர் நிலத்தை அவரது தந்தை கடன், வறுமை காரணமாய் ஒரு மில் அதிபருக்கு விற்று விட்டுக் காலமானதிலிருந்து விவசாயக் கூலி வேலைகளில் கிழவரின் காலம் போயிற்று. பூர்வீக வீடு என்கிற அடிப்படையில் ஒரு கூரை வீடு தள்ளாமையுடன் நின்றது. இதைத் தவிர வேறு சொத்துக்கள் என்று கிழவருக்கு எப்போதும் இருந்ததில்லை.
கல்யாணமான ஆறு வருஷத்தில், இரண்டு பெண் குழந்தைகளுக்கும், இரண்டு ஆண்களுக்கும் தாயான திருப்தியில் அவரது மனைவி போய் விட்டாள். முப்பது வயதிலிருந்தே கிழவர் தனிக்கட்டைதான். இன்னொருத்தியை உடன் வைத்து ஜீவிக்கும் முழு வலிமையும் கிழவருக்கு இருந்ததில்லை. மனைவி இருந்தாலும் அவரோடு சமதையாய்ப் பசியாலும் வறுமையாலும் அலைக்கழிக்கப்பட்டிருப்பாள்.
இரண்டு மகள்களையும் பக்கத்துக் கிராமங்களில் மணம் முடித்துக் கொடுக்கையில் கிழவர் வயிரு ஒட்டிப் போய் விட்டார். மகன்கள் இருவரும் சொந்தக் கிராமத்திலேயே கல்யாணம் செய்து கொண்டு இழுபறி வாழ்க்கை நடத்தினர். தொடர்ந்து வேலை கிடைக்காத விவசாய வேலைகளை நம்பி அரையும் குறையுமாய் வயிற்றைக் கழுவி அவர்களின் காலம் போயிற்று என்றாலும், குழந்தை குட்டிகளுக்குக் குறைவில்லை. பெற்றோருடன் இணைந்து கொண்டு அவர்களும் வறுமையில் மூழ்கினார்கள்.
இந்நிலையில் கிழவரால் மகன்களை அண்டி நாட்களைத்தள்ள முடியவில்லை. ஒரு வேளைக் கஞ்சிக்காய் அவர்களை எதிர்பார்ப்பதன் மூலம் தன்னையே ஏமாற்றிக் கொள்வதாய் அவர் கருதினார். ‘பாவம் அவர்களே பசியால் மாள்கையில் தானும் பங்கு கொண்டு இம்சிப்பதா’ என்று ஒதுங்கினார். சில வேளைகளில் இளையவனோ, மூத்தவனோ கிழவரைத் தேடிப் பிடித்து அழைத்து வந்து இருக்கும் கூழில் கொஞ்சத்தை வழித்து ஊற்றித் தெம்பூட்டுவார்கள். கிழவர் தானே வலிந்து சென்று வீட்டின் முன் அமர்வதில்லை. குழந்தைகள் இவரை தாத்தா என்று கொஞ்சுவதும் இல்லை. தினமும் சாவடிக்குச் செல்லுமுன் இரு மகன்களின் வீட்டின் வாசலிலும் சீறு பொழுது நிற்பார். பசியில் பிராணன் போகும். சில சமயங்களில் வீட்டினுள்ளிருந்து அழைப்புக் குரல் வரும். அப்படிக் குரல் வருவதில் தாமதம் நேர்கையில் விசாரிப்பின்றி தானாகவே இடத்தைவிட்டு அகல்வார்.
யாரேனும் தன் மகன்களைப் பற்றிப் புகார் சொன்னால் அதை இவர் ஏற்றுக் கொள்வதில்லை. “ஏதோ பாவம்… அவனுக என்ன செய்வானுக? புள்ள குட்டிக் காரனுக. அதுகளுக்கே கா வவுத்துக்கு கஞ்சியூத்த முடியாமத் தெணர்றாணுக… இந்த லட்சணத்துல என்னயக் கவனிக்கலேன்னு கவலைப்படுறதுலே நியாயமில்ல” என்று மறுத்துரைப்பார்.
இதனாலேயே இவரிடம் பலரும் இவர் மகன்களைப் பற்றி அதிகம் பேசுவதைத் தவிர்த்தனர். சிலர் வாயைக் கட்ட முடியாமல், “ரெண்டு பையன்களிருந்தும் கெழவனைத் தெருவிலே அலைய விட்டுட்டானுக.” ஏன்று காதுபடப புலம்பிப் போவதையும் இவர் லட்சியம் செய்வதில்லை. “பெத்த அப்பன் நானே கவலைப்படல… இவனுகளுக்கென்ன?” என்று எரிச்சலுடன் நினைத்துக் கொள்வார்.
கிழவர் வேலை வெட்டி என்று போய்ப் பத்து வருஷங்களுக்கு மேலாகி விட்டது. இந்தப் பத்து வருஷங்களில் ஒரு நாளேனும் ஒரு வேளைக் கஞ்சியேனும் அவர் முழுமையாய்க் குடித்ததில்லை. தான் உழைத்து வந்த காலத்தில் தனக்கு ரொம்பவும் பரிச்சயமாயிருந்தவர்களின் வீடுகளுக்கு அவ்வப்போது சென்று நலம் விசாரிக்கிற பாணியில் அமருவார். ஏதேனும் நீராகாரம் கிடைத்தால் மறுக்காமல் குடித்துவிட்டு வருவார். அவராகக் கேட்பதில்லை. நலிந்தவர்களே நிறைந்த சிறிய கிராமமாகையால் கொஞ்சம் வசதியானவர்களைக் கூட அபூர்வமாய்ப் பார்க்க வேண்டி வந்தது.
இந்த ஒரு வாரமாய் கிழவர் எதுவும் சாப்பிடவில்லை. கிணற்று வேலைக்குப் போயிருந்த இளைய மகன் கால் இடறி விழுந்து தலை கல்லில் அடிபட்டு அரசாங்க ஆஸ்பத்திரியில் கிடக்கிறான். மூத்த மகனைப் போலவே அவனும் எல்லா வகையிலும் நொந்து போனவன். வாரத்தில் இரண்டு வேளையோ மூன்று வேளையோ அவன் வீட்டில் கொஞ்சம் கூழ் கிடைக்கும்.
மூத்த மகனுக்கும் இந்த ஒரு மாதமாய் முழுசாய் வேலையில்லாதது போன்ற நிலைமை. அடிக்கடி அவனும் சாவடியில் வந்து படுக்கிறான். அவன் வீட்டிற்குப் போய் நிற்பதே அவனைக் கேலி செய்வது போன்றதாகும் என்று கருதி, இந்த ஒரு மாசமும் அவன் வீட்டிற்கு அபூர்வமாய் ஓரிரு வேளைகளில் போய்த் தோல்வியைத் தழுவியிருந்தார். அவர்கள் படும் சிரமத்தில இருக்கும் நீராகாரத்தில் குழந்தை குட்டிகளுடன் தானும் பகிர்ந்து கொள்வதை அவர் பெரும் துரோகமாய்க் கணக்கிட்டிருந்ததால் அதைத் தோல்வியாய் அவர் நினைக்கவுமில்லை. இன்று மிகுந்த தளர்ச்சியும் மயக்கமும் ஏற்படவே கொஞ்சம் நின்று பார்த்தார் பலனில்லை.
நன்றாக இருட்டி விட்டது. பெரும்பாலும் கிழவரைத் தவிர எல்லாரும் சாவடியை விட்டுப் போயிருந்த நிலை. கிழவர் தூணோடு தூணாய் ஒடுங்கிப் பேய் சிறிய கந்தல் துணிப் பொட்டணம் போல் கிடந்தார்.
அன்று மதியம் வரை அவர் தூங்குகிறார் என்றே கருதிய பலரும் சாவதானமாய் சாவடிக்கு வந்து போய்க் கொண்டிருந்தனர். பிற்பகல் மூன்று மணி வாக்கில் படுப்பதற்காய் வந்த மூத்த மகன் சந்தேகத்துடன் தகப்பனை நெருங்கிய போது அவர் நன்றாக விரைத்திருந்தார். இறந்து நெடுநேரமாகியிருப்பதை மொய்க்கத் துவங்கிய ஈக்கள் புலனாக்கின.
வலி…. மனிதரின் மரண வலியை விட மேலாக மனதை பிசையும் அழுத்தமான க்தை. உயிர் போகும் பசி வேதனையிலும் பிள்ளைகளின் நிலையறிந்து தவிக்கும் தகப்பன். பெரியவரின் பசியறிந்து உதவ கஞ்சிக்கும் வழியில்லா கையறு நிலையில் ஆறுதல் சொல்ல மனமின்றி நகரும் நட்புக்கள். எப்போதோ கிடைக்கும் கால் வயிற்று கஞ்சியின் தெம்பில் விளையாடும் குழந்தைகள். விளிம்பு நிலை மக்களின் உன்மை நிலையை காட்டும் படைப்பு… சிறப்பு