ஒருபிரிவுக்கவிதை

0
(0)

அன்று காலையில் அடித்த நல்ல வெயிலுக்கப்புறம் இடையில் சிறிது நேரம் மழை பெய்திருந்தது. ரொம்ப நிதானத்தோடு வீசிய ஈரக்காற்று ஒரு வித விநோத மனோநிலையை ஏற்படுத்தியது. அது சிறிய ரயில்வே ஸ்டேஷன். கொஞ்சம் பேரே அங்கும் இங்கும் நின்றிருந்தார்கள். அவர்கள் மூன்று பேரும்-அவள், ஆனந்த், சேது – கிளப்புக்கடைக்கு சற்றுத் தள்ளியிருந்த ஒரு வேப்பமரத்தின் அடியில் நின்று கொண்டிருந்தார்கள். ரயில் வருவதற்கு இன்னும் நேரம் இருந்தது. கொஞ்ச தூரத்தில் தெரிந்த ரோட்டில் கார்கள் போகிற சத்தம் கேக்கிற அளவுக்கு இங்கே அமைதி தன் இழைகளை நூற்றிருந்தது. அதனால் அங்கே ஏற்பட்ட சிறு சலனமும் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது.

அவர்களில் அவள் மிகவும் குழம்பிப் போயிருந்தாள். நிறையப் படித்தவள். அவள் படித்து தெரிந்த உலகத்திற்கும், அநுபவித்து உணர்ந்து கொண்டிருந்த உலகத்திற்குமான இடைவெளி அவளைத் திகைப்பில் ஆழ்த்திவிட்டது. அவளுடைய குழந்தைத்தனமான முகம் அவள் உள்ளே உணர்கிற உணர்ச்சிகளை விநாடிக்கு விநாடி வெளிப்படுத்தியது. அதிலும் முக்கியமாய், மிகவும் மெல்லியது போல தோற்றமளிக்கும் அவளுடைய விரிந்த மூக்கு அடிக்கடி விடைத்துக் கொண்டேயிருந்தது. இது ஏன்? எதற்காக இப்படி எல்லோரும் இங்கே நிற்கிறோம்? அவளுடைய ஆசையெல்லாம் தற்சமயம் நடந்து கொண்டிருப்பது சில நிமிடங்களில் முடிந்துவிடும் போல தோன்றினாலும் உண்மையில் அது முடியாது என்று முன்னமே உணர்ந்திருந்தாள். அவள் உணர்ச்சிகளை அவர்கள் முன்னால் வெளிக்காட்டாமல் இருக்க பெரு முயற்சி செய்தாள். வேண்டுமென்றே இடது கையை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு வலது கையை இடதுகை மீது வைத்து விரல்களால் முகத்தை வருடிக் கொண்டிருந்தாள். ஆனால், உண்மையில் அவள் இதில் தோற்றுப் போய்க் கொண்டிருப்பதை மற்ற இருவரும் உணர்ந்தார்கள். அதனால் கொஞ்சம் கலக்கமடையவும் செய்தார்கள்.

ஏதாவது பேசினால் எல்லாம் சரியாகி விடும் என்று முதலில் அவளுடைய கணவன் ஆனந்த் நினைத்தான். எவ்வளவோ இக்கட்டான சூழ்நிலையிலும் வார்த்தைகள் மனதின் காயங்களை சொஸ்தப்படுத்திவிடும் வல்லமை கொண்டவை இல்லையா. அவனுக்கு இதொன்றும் சுலபமாயில்லை. ஆனால், முன்வழுக்கை விழுந்த சதுரமான மண்டையின் கீழுள்ள அநுபவ அறிவு எதையும் வெளிக்குக் காட்டாத ஒரு அசட்டுக் கம்பீரத்தை அவனுக்குக் கொடுத்திருந்தது. அவன் சாதாரணமாய் இருப்பவன் போல பிரியும் லேசான சிரிப்புடன் நின்றாலும் உள் ஒளிந்த அவனுடைய பழுப்புநிறக் கண்களில் அவன்படுகிற அவஸ்தை தெரிந்தது. அதனால் அவன் மற்றவர் முகங்களைப் பார்க்கக்கூடாதென்று தவிர்த்தாலும் சேதுவின் முகத்தை மட்டும் அடிக்கடி கூர்ந்து பார்த்தான்.

சேதுவோ நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தான். மனம் இன்னதென்று தெரியாத ஒரு நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தது. அவனுடைய உளி திருத்திய சிலை முகத்தில் துக்கம் இருட்டாய் கவிந்திருந்தது. அவனால் தாங்க முடியவில்லை லேசாய் தொட்டால், யாராவது அவனிடம் ஒரு வார்த்தை பேசினால் அல்லது மென்மையான குரலில் அவன் பெயரைச் சொன்னால் கூட அழுதுவிடுவான் போல இருந்தான். அதனால் ஒரு பக்கமும் பார்வையை நிறுத்தாது பாய்ந்து பாய்ந்து செல்லவிட்டான். இந்த ஊருக்குள் அவன் முதன் முதலாய் வந்திறங்கின காலை நேரமும், அவன் மனநிலையும் ஞாபகத்திற்கு வந்தது. வாழ்க்கை, பாவம் அவனுக்கு முதலில் சற்றுக் கடினமான பாடத்தையே கற்றுக் கொடுத்துவிட்டது. இனி அவனால் இந்தச் சிறு ஊரின் பெயரை மறக்கவே முடியாது. ஊரின் பெயரைக் கேள்விப்பட்டாலே போதும் தனக்குப் ப்ரியமான கையால் அடி வாங்கிய விந்தையான முகபாவம் வந்து போகும். அதற்கு என்ன செய்ய முடியும்?

உயரே வானம் தெளிவில்லாமல் மெல்லிய இருட்டைப் பரப்பிக்கொண்டே வந்தது. ஆனால் இன்னும் பூமியை விட்டு வெளிச்சம் போகவில்லை. அடி வானமெங்கும் கடைசி ஒளியின் பிரகாசம் தங்கக்கோடுகளால் மேகங்களை அலங்கரித்தது. அந்தப் பிரகாசத்தை நோக்கியே பறப்பது போல பறவைகள் அங்கும் இங்கும் அலங்கோலமாய் பறந்து கொண்டிருந்தன. அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆனந்த் முகத்தை அதிருப்தியுடன் சுளித்தான். அவனுக்கு இந்த நிகழ்ச்சி ஒன்றும் உவப்பாயில்லை. ஆனால் இதைத்தவிர வேறு வழியில்லை என்று அவன் முடிவாய் உணர்ந்த இரவில் தூங்கவில்லை. இருட்டை முறைத்துப் பார்த்துக் கொண்டேகிடந்தான். பக்கத்தில் படுத்திருந்த அவளும் உறங்கவில்லை என்று திடீர் திடீரென்று அவள் விடும் பெருமூச்சுகளினால் அவன் அறிந்து கொண்டான். தண்டவாளங்களுக்கு அந்தப்புறம் காய்ந்த மட்டைகளுள்ள தென்னை மரங்களும் நீரற்ற பெரிய கம்மாயும் தெரிந்தன. கம்மாய்க் கரை வழியே ஆட்கள் தனித்தனியே ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத மாதிரி போய்க் கொண்டிருந்தார்கள். மனிதர்களைத் தனியாய் பார்ப்பதே ஆனந்துக்கு சங்கடத்தை உண்டு பண்ணியது. முகத்தைத் திருப்பி சேது வைப்பார்த்தான்.

சேது ரயில் வருகிறதாவென்று சும்மா வேணும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தான். ரயில் கம்பிக்கிராதிகள் வழியே வெளியே பார்க்கும் போது தான் ஆனந்தின் கண்களை நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தது. உடனே தலையைக் குனிந்து சரளைக் கற்கள் பாவிக்கிடக்கிற தரையை பெரு விரலால் ஊன்றி அழுத்தினான். அன்றைக்குக் காலையில் அவனுடைய அறைக்கு ஆனந்த் வந்த போது இருந்த ஆழ்ந்த முகத் தோற்றமே இப்போதும் இருந்தது. நட்சத்திரங்கள் இப்போது மங்கலான முக விலாசங்களோடு ஒன்றிரண்டாய் எட்டிப் பார்ப்பதைப் பார்த்தான். இப்படி ஒவ்வொரு முறை அங்குமிங்கும் திரும்பும் போது அவள் முகத்தின் மீது அவன் பார்வை வழுகி ஓடியது. அவள் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் கண்களில் ஒரு பிரகாசமும் பெரிய துயரமும் வெளிப்படையாக தெரிந்தது. இதெல்லாம் சீக்கிரம் முடிந்து விடாதா என்றிருந்தாலும் கடைசி வரையில் எல்லாம் நல்ல படியாய் முடியவேண்டும் என்று நினைத்தான்.

ஆனந்த் இப்படி இருப்பது சரியில்லை என்று நினைத்தவன் போல ரொம்பச் சிரமப்பட்டு முதலில் மௌனத்தைக் கலைத்தான்.

“போய் லெட்டர் போடு சேது…”

சேது பதில் எதுவும் சொல்லாமல் தலையை ஆட்டினான். அவன் ஆனந்த் சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு தான் தலையாட்டினானா என்று தெரியாது.

அவள் அந்த நேரம் இயல்பாய் சேதுவின் முகத்தைப் பார்த்தாள். ரத்தமின்றி வெளுத்திருந்தது. உயிரின் உணர்ச்சித்துடிப்பு எதுவும் அந்த முகத்தில் இருப்பதற்கான அறி குறியே தென்படவில்லை. அவன் அவர்களைப் பார்க்காமல் உயரே பார்த்துக் கொண்டிருந்தான். தனியே ஒரு பறவை மட்டும் பறந்து கொண்டிருந்ததைப் பார்க்கவும் தான் அவன் முகத்தில் உயிர் வந்தது. அப்போது அவன் நினைத்தான். ஒன்றும் நடந்துவிடவில்லை. எல்லாம் பிரமை அல்லது மத்தியானத் தூக்கத்தில் ஏற்படும் கெட்ட கனவு இல்லையில்லை அவர்கள் மூன்று பேரும் சும்மா வேறு யாரையோ நண்பரை வழியனுப்ப வந்திருக்கிறார்கள். முன்னால் அவர்கள் சாயந்திர நேரங்களில் நடந்து திரியும் போதெல்லாம் அடிக்கடி இந்த ரயில்வே ஸ்டேஷன் பெஞ்சில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்திருக்கிறார்களே அப்படித்தான், இல்லையென்றால் யாரோ ஒரு நண்பருக்காக இங்கே காத்துக் கொண்டிருக்கிறோம். அவ்வளவு தான். வேறொன்றுமில்லை. ஆனால், அவள் கண் கலங்குகிறாளே. மெல்ல, நாசூக்காய் மூக்கின் மேல் விரல்களைக் கொண்டு போய் கண்களில் ததும்பி நிற்கும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். முதல் மணி அடித்த பின்னரே மணியின் ஒலி நெஞ்சில் உறைத்தது. இன்னும் சில நிமிடங்கள் தான். வெகு காலத்திற்குப் பிறகு வாயைத் திறந்து பேசுகிறவனைப்போல, சேது,

“ஊருக்கு ரெண்டு பேரும் வாங்க…”

இதை ஆனந்தைப் பார்த்துச் சொல்ல வேண்டும் என்று நினைத்தும் அவளைப் பார்த்துத்தான் சொன்னான். ஆனந்த் சேதுகிட்டே நெருங்கி அவன் முதுகில் வாஞ்சையுடன் தட்டிக் கொடுத்தான். அதற்குள் ஏதோ நினைத்தவன் போல ஆனந்த் மெல்ல அங்கிருந்து கொஞ்ச தூரத்திலிருந்த வெத்திலை பாக்குக் கடைக்குப் போனான். அதை அவன் இயல்பாகவே செய்தான்.

ஆனந்த் போவதையே சேதுவும் அவளும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். திடீரென சேதுவும் அவளும் சொல்லி வைத்த மாதிரி திரும்பி ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டனர். உடனே ஒரு வித அசூயை உணர்வு இருவர் மனதிலும் ஏற்பட்டது. ரெண்டு பேரும் மற்றவர் மனதில் ஓடும் ரகசிய எண்ணங்களை ஊகித்தவர்களைப் போல அருவறுப்படைந்தனர். சேது வெட்கத்தால் கூசிக் குன்றிப் போனான். ஆனால் அதே நேரம் அவள் ஆனந்தின் நடத்தையை பெரிய அவமானமாக நினைத்தாள். இதை விட பெரிய அவமானத்தை இதுவரையில் அவன் அவளுக்கு இழைத்ததில்லை. அவளுக்கு ஆனந்தின் மீது தீராத கசப்பு அந்தக் கணத்தில் தோன்றியது. உண்மையில் அவன் எதையுமே புரிந்து கொள்ளவில்லையோ, அவள் குனிந்த தலை நிமிரவேயில்லை. ஆனந்த் சிகரெட் புகைத்துக் கொண்டே திரும்பி வந்தான்.

அருகில் வந்ததும், சேது எதுவும் பேசாமல் ஆனந்தின் இடது கையைப் பிடித்துக் கொண்டான். ரெண்டாவது மணி அடித்தது. அந்த சத்தத்திலேயே தங்களை விட்டு சேது வெகுதூரம் போய் விட்டதைப் போல அவர்களும், அவர்களைப் பிரிந்து வெகு காலமாகிவிட்டதைப் போல சேதுவும் உணர்ந்தார்கள்.

இப்பொழுது வானம் சாம்பல் கலந்த கறுப்பாய் விரிந்து கிடந்தது. நட்சத்திரங்கள் தூசி துடைத்த மாதிரி பளிச்சென்று தெரிந்தன. பிரயாணிகள் கொஞ்சம் சுறுசுறுப்பானார்கள். சேதுவும் தன்னுணர்வு இல்லாமலேயே ரெண்டு கைகளிலும் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டான்.

“கொஞ்சம் தள்ளி நிப்பமா…”

ஆனந்த் சொன்னதைப் புரிந்தோ புரியாமலோ அவன் பின்னாலேயே நடந்தார்கள் அவளும் சேதுவும். இப்போது அவர்கள் நின்றிருந்த இடம் சற்று இருட்டானது. தற்செயலாகவோ அல்லது தெரிந்தோ தான் அந்த இடத்தை ஆனந்த் தேர்ந்தெடுத்தான் போலும் என்று சேது நினைத்தான். ஒருவர் முகம் ஒருவருக்குச் சரியாகத் தெரியவில்லை. இதுவும் ஒரு வகையில் நல்லது தான். இல்லையென்றால் ஒன்று செய்ய ஏலாது… பிரியும் போது அவள் முகத்தையும், ஆனந்தின் முகத்தையும் பார்த்துவிட்டால் ஒரு வேளை ரயிலின் முன்னால் பாய்ந்தாலும் பாய்ந்து விடலாம்.

சேதுவுக்கு எதிரே தூரத்தில் அழுது வடியும் ரயிலின் வெளிச்சம் தெரிந்தது. அதைப் பார்த்ததுமே அவர்கள் மூன்று பேருக்கும் பெருந் துயரமும், நிம்மதியும் ஏற்பட்டது. ஆனந்த் சிகரெட்டைக் கீழே விட்டெறிந்தான். அப்போது அவள் நிமிர்ந்து சேதுவைப் பார்த்தாள். அவனுக்கு அவள் முகம் சரியாகத் தெரியவில்லை. ஆனால், அவள் கண்கள் ஒளி வீசியதைப் பார்த்தான். அந்தப் பார்வையில் அவன் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டான். இல்லை உணர்ந்து கொண்டான். அவள் இதுவரை சேதுவிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் இப்போது எவ்வளவு சொல்லிவிட்டாள். ஆமாம். அவன் எதற்காக இத்தனை அவஸ்தைகளையும் படுகிறானோ அதைத் தெரிந்துகொண்டாள். அதுபோதும், இனி என்ன நேர்ந்தாலும் கவலையில்லை.

பெரிய ஓலத்துடன் ரயில் வந்து நின்றது. சேது, “போயிட்டு வரேன்…” குரல் தழு தழுத்தது. அவர்கள் முகத்தைப் பார்க்க முடியாமல் விறு விறுவென்று நடந்தான். அவன் இரண்டடி தான் போயிருப்பான். ஒரு பெரிய விம்மலைக் கேட்டான். ஐயோ திரும்பி விடுவோமா. மனசை கணத்தில் உறுதிப்படுத்திக் கொண்டு ரயிலில் ஏறினான். ஆனந்த் அவள் கையைப் பிடித்துக்கொண்டு நின்றான். ரயில் கனத்த முனகலுடன் கிளம்பியது. சேதுவுக்குத் தொண்டை அடைத்துக்கொண்டது. அவள் எதையும் பொருட்படுத்தாமல் முன்னால் ஓடி வந்து நின்று கையசைத்தாள். அவள் முகம் கண்ணீரால் நிறைந்திருந்தது. ஆனந்தும் கண் கலங்கி ஆனால் அவனுடைய வழக்கமான அமைதியான தோற்றத்தில் நின்று கையை ஆட்டினான்.

அவர்கள் ரயில் மறையும் வரை நின்று கொண்டிருந்தார்கள். ஆனந்த் அவளுடைய கையை ஆதரவுடன் பிடித்துக்கொண்டு ஸ்டேஷன் விட்டு வெளியேறினான். கடைசி ரயிலும் போனதால் ஸ்டேஷன் வெறிச்சென்று துன்பம் தரும் அமைதியில் ஆழ்ந்து கொண்டிருந்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top