ஒருசொல் ஒருவார்த்தை

0
(0)

“என்னாங்யா.. ஒங்களத்தே தேடிவந்தேன்…” குரல் கேட்டுத் திரும்புவதற்குள் என் எதிரிலிருந்த என் சகதர்மினியும், பக்கத்துவீட்டுப் பெண்ணும் சேர்ந்தாற்போல கண் மற்றும் கைசாடையினால் அந்த நபரின் வரவை எனக்கு உணர்த்தினர்.

“ ஒங்களத்தே..”

தெருக்குழாயிலிருந்து தண்ணீர்பிடித்து வீட்டுத் தொட்டியினை நிரப்புகிற முக்கியமான பணியிலிருந்தேன். வீட்டில் இருக்கிற நேரம் இப்படி அவ்வப்போது சிறுசிறு வேலைகள் செய்வதுண்டு.

“என்னாப்பா …” கடுமையான குரலால் அவனை வினவினேன். அவன் வந்ததை தெருமுனையிலேயே பார்த்துவிட்டேன். தவிரவும் வீட்டுக்குத்தண்ணீர் பிடித்துவருகிற சூழலில் அவன் பின்தொடர்வான் என எதிர்பார்க்கவும் இல்லை விவஸ்தை கெட்டவன் என்பதை காட்டிவிட்டான். முன்னெல்லாம் வேலை செய்கிற இடத்துக்கு வருவான். அல்லது கடைவீதியில் யாருடனாவது நின்று பேசிக்கொண்டிருக்கும்போது எதிரில்வந்து நிற்பான்.

“ஒங்களத்தே தேடிவந்தே ங்யா …” கூட்டமாயிருந்தால் அவனுக்கு கூடுதல் அனுகூலமாய் எண்ணுவான்.

அவனது கோரிக்கையெல்லாம் அதிகபட்சம் பத்துரூபாய்தான், ஐந்து ரூபாய் கொடுத்தால் கொஞ்சநேரம் காசை வாங்காமல் தாமதப்படுத்துவான் பிறகு ஒரு ஏமாற்றத்துடன் வாங்கிகொள்வான் அவனது பங்கரையான, அழுக்கடைந்த தோற்றமும் நாடகத்தனமான பேச்சும் தான் அவன் மீதான வெறுப்பை அதிகப்படுத்துகிறது.

இத்தனைக்கும் நானறிந்தவரைக்கும் அவன் ஒரு நல்ல வேலைக்காரன். தென்னங்கிடுகு பந்தல் போடுவதில் நல்ல சமர்த்தன், அந்தமாதரி பந்தல் போடுவதில் முக்கியமான அம்சம், கால்களை பரத்தி ஊன்றுவதில்தான் இருக்கிறது. மண் தரையிலென்றால் மூங்கிலின் கணத்துக்குத் தக்கபடி குழியின் ஆழம் தோண்டுவதிலும், பந்தலின் பரப்பளவுக்குத் தக்கபடி கால்களின் எண்ணிக்கையினை வடிவமைப்பதிலும்தான் தொழிலின் நேர்த்தியினைக் காணமுடியும். அதிலும் குழிபோடமுடியாத இடங்களில் கிட்டிபோட்டுக் கட்டுவதும் முட்டுக்கால்கள் நட்டு பந்தலை நிறுத்துவதும்தான் வேலைக்காரனின் திறமையைக் காட்டும். அப்படி ஒரு இடத்தில் அவனது சாமர்த்தியத்தைக் காணநேர்ந்தது.

ஒரு மேல்மாடியில் விருந்து சாப்பாட்டுக்காக பந்தல் அமைக்கப் படவேண்டியிருந்தது. ஷாமியானா போடலாம் என வீட்டுக்காரர் சொன்னார். அதற்கு வீட்டிலிருந்த பெரியவர் ஒத்துக்கொள்ளவில்லை. குளுமையும் ஸ்திரத்தன்மையும் தென்னங்கிடுகுப் பந்தலுக்கே உண்டு என பிடிவாதமாய் நின்றார். மொட்டைமாடியில் கைப்பிடிச்சுவரிலிருந்த வளையத்தில் மரங்களைச் சொருகி கால்களை நிறுத்தினார்கள். வீட்டுக்காரருக்குத் திருப்தி இல்லை. மாடி என்பதால் காற்றுப்புழக்கம் அதிகமிருக்கும் ஆகவே பந்தல் காலில் நடுக்கம் இருக்கக் கூடாது என்றார். சாப்பாடு பரிமாறுகையில் விருந்தினகள் அச்சமில்லாமல் சாப்பிடவேண்டும் என்பதில் அக்கறை காட்டினார்.

அதனால் ஒவ்வொரு கால்களுக்கும் இரண்டடி உயரமுள்ள தகரடின்கள் சேகரித்து அதில் மணல்நிரப்பி அதற்குள் கால்களை ஊன்றச் செய்யலா மென்றனர். வீட்டுக்காரர் அத்தனை டின்னுக்கும் டின்னுக்கான மணலுக்கும் அலையலானார்.

“டின்னுக்கும் மணலுக்கு அலயனும்னா பொழுதாயிரும் ங்யா.. ஒருவண்டி மணல் தேடணும் ஆமா..” என்ற அவன், குட்ட மரம் இருக்கில்ல அதவச்சு அழகா கிட்டி பொணஞ்சு கட்டிவிடலாம் “ என உடன் வேலைக்கு வந்தவனை விரட்டலானான். ஒவ்வொரு காலுக்கும் குட்டைக்கம்புகளை எடுத்துச் செதுக்கி, கைப்பிடிச் சுவற்றுக்குமேல் நின்றமரத்தில் பிணைத்து சுவருக்குக் கீழே இறங்கி கீழேயும் ஒரு கட்டுப்போட்டு இறுக்கினான். பந்தல் நட்டுமுடித்ததும் வீட்டுக்காரர் வந்து அசைத்துப்பார்த்தார். ஆட்டிப்பார்த்தார். தரையில் குழிதோண்டி கால் இற்க்கியதுபோல அத்தனை இறுக்கமாய் இருந்தது. அதுமட்டுமல்லாது யாராவது ஒருத்தர் ஏதாவது ஒரு மரத்தைக்காட்டி “அந்தக்காலு ஒச்சமா இருக்க மாதரி இருக்கேப்பா அத மாத்தீரலாமா” என சந்தேகப்பட்டுப் பேசிவிட்டால் அவ்வளவுதான், அந்தவேலை முடியுமட்டும் அவர் சந்தேகப்பட்ட மரத்திலேயே ஏறுவதும் இறங்குவதுமாய் தன் தனிப்பாட்ட வேலையைப்பூராவும் வைத்துக்கொள்வான். சந்தேகப்பட்டவர் “போதும்மப்பா ஒரு இதுக்குச் சொன்னே” என தனது கோரிக்கையினை வாபஸ் வாங்கிக்கொள்வதோடு அவனுக்கு டிப்ஸ் கொடுத்தும் நகரவேண்டும். அதுவரை வேலையினை நிறுத்தமாட்டான்.

“சாப்பிட்டீங்களா ய்யா…” கழுத்தில் மாலையாய்க் கிடந்த அழுக்குத்துண்டில் வாயை மறைத்தபடி கேட்டான். மதிய உணவுக்குப்பிறகு கடைதிறப்புக்கான நேரம்.இதுவரையிலும் சாப்பிடாமல் இருக்க முடியுமா.. பேச்சை வளர்ப்பதற்கான அவனது உத்தி.இது.

“ஏன், சாப்பிடலேன்னா அய்யர் கடைலருந்து சாப்பாடு வாங்கித்தர்ப்போறியா..” நானும் நக்கலாயத்தான் கேட்டேன். வெளியிலும் இப்படித்தான் ஒவ்வொரு சந்திப்பிலும் தேவையில்லாமல் எதையாவது பேசுவான்.

“அய்யர் கட என்னாங்கய்யா… தேனில நாகர் கடைல கூட நல்லா நாலுரொட்டி ( புரோட்டா ) யும் ஒரு தலக்கறியும் வாங்கிவாரேன். என்னாங் ஆயீ…” என தண்ணீரின் தடம் பார்த்துக்கொண்டிருக்கும் என் மனைவியிடம் தாவினான்.

அவளுக்கு இப்படி விளையாட்டெல்லாம் பிடிக்காது. படக்கெனப் பேசிவிடுவாள். “அதெல்லா ஒண்ணும் வேணாம் அவரு அப்பாதயே சாப்புட்டாரு….”

“கடைக்குக் கெளம்பலையாங் யா “

“ ந்தா போகப் போறேன்… என்னா விசயம்..? ”

“ சும்மா , ஆத்தாளப் பாத்திட்டுப் போலாம்னு வந்தேன்…!”

“ என்  வீட்டுக்காரியவா… ? இப்பத்தே என்னியப் பாக்க வந்தேன்ன…!”

“ நீங்க இல்லாம அவுங்களப் பாக்கலாமுங்களா…?”

எங்கெங்கோ சுற்றி முடிச்சை அவன் இறுக்குவது தெரிந்தது. அவனது கோரிக்கை என்னவாக இருக்கும் என்பதும் தெரிந்ததே. ஓசிப்பீடி, ஓசி வெத்திலை, ஓசிக்காசு….

சாதாரணமாய் அவன் வேலைக்குக் கிளம்பினால் ஐநூறு அறுநூறு சம்பளம் காத்திருக்கிறது. யாரையும் இரந்து வாழாமல் கம்பீரமாய் பிழைக்கலாம். ஏன் இப்படி அலைகிறான்கள் மனசு கசந்தது.

“ ஏங்கிட்டக்க என்னத்தக் கேக்கப்போற எனக்கு வேல கெடக்குதப்பா…” மனைவி சட்டென ஒதுங்க முயன்றாள். “கேக்கறது பாக்கறதெல்லா அவர்ட்டயே ஆவட்டும்.”

“ஒருவார்த்த…. ஒரு சொல்  ஆயி….” வீட்டின் முன்புறம் வந்து வாசல்படி யினைத் தொடாமல் தள்ளி நின்றபடி பேசினான்.

ஒருவிதத்தில் எனக்கு உள்ளூர சந்தோசம். மனைவி அவனிடம் எப்படி அல்லாடுகிறாள் என்பதைப் பார்க்க ஆவலும் இருந்தது. அவனது ஒருவார்த்தை எத்தனை நீளமானது என்பது எனக்குத்தான் தெரியும்.

அன்று ஒருநாள் பூசாரிக்கிழவியிடம் அவன்போட்ட ஒருசொல் ஒருவார்த்தை இன்னும் மனைவிக்கு எட்டவில்லை. எத்தனையோ பேரிடம் சொல்லித் தீர்த்தும் வீட்டில் சொல்ல மறந்துபோனது. ஒருவேளை சொல்லியிருந்தால் மனைவி சுதாரிப்பாய் இருந்திருப்பாள்.

வீரப்பய்யனார் கோயில் தெருவிலிருக்கும் அத்தனைவீடுகளும் கோயில்பூசாரி வகையறாக்களுக்குச் பாத்தியப்பட்டது. ஒரே பங்காளி அங்காளிகள். அவர்கள் ஊர்த்தெய்வமான அய்யனாருக்கு பரம்பரையாக பூசை நடத்துபவர்கள். அய்யனாரின் மூலஸ்தானம் ஊருக்கு மேற்கே மலையடிவாரத்தில் உள்ளது. வருசத்தில் ஒருநாள் திருவிழா. லட்சக்கணக்கில் ஜனங்கள் திரளுவார்கள். ஊருக்குள் உற்சவமூர்த்தியாய் அமர்ந்து ஒவ்வொருமாதமும் கார்த்திகை நாளில் ஊரை வலம்வருவார். ஊருக்குள்ளிருக்கும் அந்தக் கோயிலைப் பராமரித்துக் கொள்வதற்கும் மலைக்கோயிலுக்கு அனுதினமும் சென்று வரவும் பூசாரிகளுக்கு கிராமக்கமிட்டி சில ஏற்பாடுகளைச் செய்துவருகிறது.

அப்படியாப்பட்ட தெருவில் காலஞ்சென்ற மூத்தபூசாரியின் மனைவி வீட்டின் ஒட்டுத்திண்ணையில் கால்நீட்டி உட்கார்ந்து கிடக்கிறார். இடுப்பில் ஒரு வெத்திலைப் பையும் கையிலொரு விபூதிச் ச்ம்படமும் பக்கத்தில் இருக்கும். பயந்த சிறுபிள்ளைகள், பசியெடுக்காத கொமருகள் , உறக்கம்பிடிக்காத பெரியவர்கள் என சகலரும் காலையும் அந்தி மாலையும் வந்து ஊதுபத்தி, வெத்திலைபாக்குடன் காணிக்கைத் துட்டும் கொடுத்து பூசாரிக்கிழவியிடம் விபூதி மந்தரித்து வாங்கிப்போவார்கள்.

கிழவி எந்தநேரமும் திண்ணையில் கால்களை நீட்டி உட்கார்ந்தபடி கோழித் தூக்கம் தூங்கிகொண்டிருப்பார். அப்படி அவர் திண்ணையில் அமர்ந்திருக்கும் போது தெருவைக் கடக்கும் எவரும் அவரவர் பாட்டுக்கு கிழவியைக் கவனியாமல் சென்றால் நல்லது நின்று பார்த்தால்கூட அவரிடமிருந்து மீள்வது சிரமம்.ஓடிக்கொண்டிருக்கும் நாயைக்கூட நிறுத்திப் பேசுகிற ஜாதி.”ஓடு. என்னா இங்க பார்வ… பேண்டு வெக்கப்போறியா… அதுக்கு இந்தத் தெருவுதேங் கெடச்சதா..பிச்சுப்புடுவேன். ஓடு…” வெறும்கையில் கல் வைத்திருப்பதுபோல பாவனை காட்டி விரட்டிவிடுவார் ஒருசிலவை மட்டும் அதிகபட்சமாய் உறுமும்.ஒன்றிரண்டு வள்வள் என இரண்டு குரைப்பு குரைக்கும். மனிதர்களால் அது சாத்தியமில்லாததல் ஏதாவது பதில் சொல்லிவிட்டு நகர்ந்து ஓடுவார்கள். மேலும் சாமி கொண்டாடி, பழுத்தகிழம்…. வாயில் விழக்கூடாது. தவிர சாமிக்கு மரியாதை செய்யவேண்டும்.

இப்படிக் கிழவிக்கு அவனைக்கண்டால் மட்டும் பிடிக்காது.அவன் தெருவுக்குள் நுழைவது கண்டவுடனேயே கிழவி முந்தானையை திண்ணையில் விரித்து ’கட்டையை தரையில் கிடத்தி ’உறக்கத்தில் ஆழ்ந்துவிடுவார் அவனுக்கும் கிழவியின் உறக்கநிலை புரியும். சிலசமயம் போய்விடுவான். சிலநாள் வீம்புக்கே நின்று எழுப்புவான்.

அன்றைக்கு என்னவோ இரண்டுபேரும் எதிரெதிரே உட்கார்ந்து பேசிகொண்டிருந்தார்கள். எதிரே என்றால் திண்ணையில் அமர்ந்து தெருப் பாய்ச்சலாய் கால்களை நீட்டியபடி கிழவியும், திண்ணையின் கீழே கிழவியின் கால்மாட்டில் அட்டணக்கால் போட்டு அவனும். வந்தவுடன் கிழவியிடம் விபூதிவாங்கி பூசியிருப்பான் போலிருக்கிறது. நெற்றியில் விபூதிப்பட்டை தெரிந்தது.

“ரவ்வெல்லா ஒறக்கம் தப்புது ஆயி… கெட்ட கெட்ட கெனாவா வந்து உசுப்பி விட்றுது. நல்லா ஒறங்கி ரெம்ப நாளாச்சு. “

“மேக்க தலய வச்சு கெழக்க கால் நீட்டிப்படு. ஒறங்கறப்ப அய்யனார நெனப்புல ஏந்திகிட்டு தூங்கு செரியாப்போகும். “ .

“போனமாசம் எவ்வீட்டுக்காரி வெறகொடிக்கப் போன எடத்தில பயந்ததுக்கு ஒங்க கிட்டத்தா தண்ணிமந்திரிச்சுக் குடுத்தீக அன்னு மறுநாள் .எந்திருச்சுட்டால்ல..”

“ஒனக்கும் சொஸ்தமாயிருன்டா …”என்ற கிழவி இன்னுமொரு கைப்பிடி விபூதி அள்ளிக்கொடுத்தார்.”இத மஞ்சத்துணில முடிஞ்சு தலமாட்டுல வச்சுத்தூங்கு எந்த கருப்பும் வந்து அண்ட மாட்டான். “ அதனை அப்படியே பவ்யம் மாறாமல் கையேந்தி வாங்கி துண்டின் நுனியில் முடிந்து கொண்டான்.

“என்னமோ ஆத்தா, பெரியபூசாரியும் நீங்களும் இருக்கங்காட்டி ஊர்ல எங்களமாதரி ஏழபாழைங்க அந்தமட்டும் உசிர்பிடிச்சு திரியிதுன்னா நாங்க செஞ்ச புண்ணியந்தே. பெரியவருதே பொட்டுன்னு போய்ட்டாரு நீங்களாச்சும் இன்னமும் நூறுவர்சம் பெலமான ஆய்சோட இருக்கணும் ஆயா..” கைகூப்பிச் சொன்னான்.

ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் கூப்பிய அவனது கைகளைத்தொட்டுவிட்ட கிழவி அதேவேகத்தில் படாரென இழுத்துக்கொண்டார். “ நூறுவயசெல்லா வேணாண்டா இவனே, எதோ இருக்க காலம் மட்டும் இழுக்காம பறிக்காம ரெண்டுபேருகிட்ட நாலுபேச்சுவாங்காம கிருமமா போய்ச் சேந்துட்டாப் போதும்ப்பா..” சொல்லுகிறபோதே கிழவிக்கி கண்ணில் நீர் கட்டிகொண்டது. பெத்ததுகள்.. , நேத்துவரை தான் வளத்ததுகள் அத்தனையும் இந்த தள்ளாத காலத்தில் தன்னை பாரமாய் நினைத்து திண்ணையில் ஓரங்கட்டிவிட்ட வேளையில், எதிலுமே சேர்த்தியில்லாத ஒரு எளியசாதிப் பீள்ளை எத்தனை கரிசனத்தோடு வாழ்த்துகிறான்.

“போதுண்டா இவனே இந்த பூலோகத்துல நாம பொழங்குனது….!  இனி பேரெம் பேத்திக நல்லாருக்கணும்னு சொல்லு,..” புதிய தலைமுறைக்கு வாழ்த்தைச் சேகரித்தார்.

”என்னாங்காயி அப்பிடிப் பேசிட்டீக.. நீங்கவேற அவுகவேறயா அவுகளும் நல்லாருப்பாக.ஆனாலும் அல்லாருக்கும் கூடுன பவரு நீங்களும் பெரியபூசாரி யவுகளுந்தான…பெரியவரும் நீங்களும் கட்டிக்காக்காமயா இத்தனையும் வந்திருக்கு மொதல்ல நீங்கதே னாயி வெளிச்சம இருக்கணும்” “பழுத்த எலைய எந்த பக்கிக பாக்குது பச்சஎலைக்குத்தான பவுசு..” அதெல்லா சும்மாயி நா ஒத்துக்க மாட்டேன். நீங்கதே ஊரக்காக்கற ஆத்தா. . என்றவன், கைகளை மேலுயர்த்திக் கும்பிட்டான். கிழவிக்கு அது என்னவோ போலிருந்தது. ஆனாலும் குருத்துக தழைக்கணும்னு கும்புடுடா..” என சொன்னார். சரி என்பதுபோல தலையாட்டிய அவன் சிறிது நேரம் சிலையாய் அமர்ந்திருந்தான். கிழவியும் அடுத்தகட்ட உறக்கத்துக்குக்கான  தடம் தேடிக்கொண்டிருந்தது. அப்போது  “ஆயிகிட்ட ஒருகாரியம்…”என குழைந்தான். ”மாட்டேன்னு. சொல்லப்படாது. பேரம்பேத்தின்னதும் எனக்கு எம்பிள்ளைங்க ஆவுகம் வந்திருச்சு. வீட்ல எஞ்சின்னப்பிள்ள சேட்டமில்லாமக் கெடக்கு ஒரு ரொட்டிபால் வாங்கணும். ஒரு அஞ்சு ரூவா குடுத்தீங்கன்னா ஒங்கபேரச் சொல்லி அவனுக்கு பசி யாத்திக்கிடுவேன். “

ஆமை ஓட்டுக்குள் தலையை இழுத்துக்கொள்வதுபோல சட்டென தன்னை குறுக்கிக்கொண்ட கிழவி, “அஞ்சுரூவாயா..? “ என வாயைப்பிளந்தார் .”அம்புட்டுத்துட்டுக்கு நா எங்க போக! , நானே வெத்தலைக்குப் பாக்கு இல்லாம வீதியப் பாத்துக்கெடக்கேன்.” என்றவர் விபூதிச் சம்படத்திலிருந்து கிண்டிக் கிளறி ஐம்பது காசை எடுத்துப்போட்டார்,” இதேங்கெடக்கு எதவாச்சும் வாங்கிக் குடுத்து பசியாத்து..”

“ரெண்டு ரூவாயாச்சும் குடுங்க ஆயி… புண்ணியமாப்போகும்..”

“அட கோட்டிபுடுச்சவனே நானே அடுத்தவேளைக் கஞ்சிக்கி ஆள எதிர்பாத்துக் கெடக்கங்கறது ஒனக்கு தெரியாதா. . இன்னிக்கி வேற ஒண்ணும் காணிக்க வரல எந்திரிச்சுப்போ, ரெம்பநேரமா ஒக்காந்திருந்தது வடியா வருது செத்த தல சாய்க்கப் போறேன்…” சொல்லிக்கொண்டே முந்தானையை விரித்து உடம்பைக் கிடத்தினார்.. ,   . .

“யேம்ப்பா இப்பவெல்லா நீ வேலவெட்டிக்கிப் போவறதில்லியா..? கோயில்மாடு மாதரி சந்து பொந்தெல்லா அலையிற..‘ மனைவியின் கேள்வியில் சட்டென விழித்தேன்.

“இப்ப ஆரு ஆயி கிடுகுப்பந்தல் போடுறாக.! பூராம் கலர்த்துணிய வாங்கி இழுத்துக்கட்டீர்ராக.. எதுனாச்சும் கேதவீடு, கோயில் திருவிழான்னாத்தே ஏகதேசமா ஒரு வேலவரும்.”

அதற்குள் காலிக்குடமும் எவர்சில்வர் பானையுமாய் வாசலில் இறங்கியவள், எங்களிருவரையும் ஏற இறங்கப் பார்த்தாள். ” கடைக்குப் போறிகளா, தண்ணி பிடிக்க வாரீகளா…? “

“கடைக்குப் போகணுமாத்தா நேரமாச்சு…”

“ நானும் அப்பறமேட்டு வாரன் ஆயி .. “ அவனும் என்னோடு கிளம்ப ஆயத்தப்படுவது தெரிந்தது. ஒருவேளை எனது மனைவியிடம் அவனது பாச்சா பலிக்காது என முடிவுகட்டி விட்டானோ. விடக்கூடாது ஒருசொல் ஒருவார்த்தையை அவளும் அனுபவிக்க வேண்டும்

“என்னாப்பா அவசரமா….? “ என்ற நான் மனைவியிடம் திரும்பி, “என்னாம்மா எதோ ஒங்கிட்ட ஒருவார்த்த பேசனும்னான் என்னான்னுதே விசாரி…” ”என்றேன்

மனைவி உடனே பாய்ந்துவிட்டாள். “ஒங்களுக்கென்னா மேட்டுமோளம் கொட்டுதாக்கும். நானே மாசம் ஒருக்காவார தண்ணியப் பிடிச்சு இருப்புக்கட்ட தாவு பாத்துக்கிட்டிருக்கேன்…:” என்றவள், ஒரு நிமிட அமைதியின் பின் “ சொல்லுப்பா என்னா சொல்லப்போற…” எனக் கேட்டாள்.

“ஒண்ணுமில்ல ஆயி. பூரணி ஒரு சங்கதி சொல்லிவிட்டுச்சு…” தலையைச் சொறிந்தான்.

“ஆரு.. ஒம் மகளா..? என்னாவாம்..? அன்னைக்கி ஒம்பொண்டாட்டி ரேசன் அரிசிவேணும்னு அளந்துவச்சிட்டுப் போனவ இன்னம் வந்து எடுத்துப்போகல வேணும் வேணாம்னு சொன்னாலும் நா வேற யாருக்காச்சும் அளந்து விடுவேன். இவ என்னா சங்கதி சொல்லிவிட்டா அவ வரமாட்டாளாக்கும் நூல்கண்டு ஊசி எதும் வாங்கீட்டு வரச்சொன்னாளா…” அவளுக்கிருக்கும் அவசரத்துக்கு ஏற்ப மடமடவென பேசி முடித்தாள்.

அவனது மகள் புதிதாக தையல் பழகிக் கொண்டுவருகிறாள். வீட்டுக்காரிதான் டீச்சர். அதை சாக்காகக் கொண்டு அவ்வப்போது வீட்டுக்கு வந்து ஆலோசனை கேட்பதும் ஏதாவது இரவல் வாங்குவதும் வழக்கம் போலிருக்கிறது.

அவன் கொஞ்சமும் பதட்டமில்லாமல், “அதெல்லா இல்ல ஆயி. வாசலுக்கு புதுசா தெரத்துணி தச்சாளாம். டீச்சர் வீட்ல மாட்டுனா நல்லாருக்கும்னு குடுத்து உட்டுச்சு. பாருங்க…”

வேஷ்டியின் இடுப்பு மடிப்புக்குள்ளிருந்து நான்காய் மடிக்கப்பட்ட பாலிதீன் பையை எடுத்து நீட்டினான்.

நான் அந்தப்பையைத் திறந்தபோது அவனது முகததில் பெருமிதம் பொங்கிக் கொண்டிருந்தது.

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top