ஒப்பப்பர்

5
(1)

நனைந்த தோலை திமுசு இரும்பால் தட்டித்தட்டி சமப்படுத்தி ஒட்டுப் போடத் தேவையான அளவு வெட்டினார் சின்னவீரன். செருப்பின் அறுந்தவாரோடு சேர்த்து தைத்தார்.

“ஏலேய் சின்ன வீரா, ஏலேய் என்னடா கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன். கண்டுக்காம குனிஞ்சுகிட்டே இருக்கே!” என்றபடியே பட்டறைக் கல்லை ஓங்கி உதைத்தார் கந்துவட்டி சுப்பையா.

மிளகாய்ப்பொடி வீசியது போல சுறுசுறுன்னு கோபம் மூக்கிலேறி கண் சிவந்த சின்னவீரன், அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்த்து கோபம் விழுங்கி கும்பிட்டார். பட்டறைக் கல்லை சரியாக வைத்துவிட்டு, செருப்பின் துவாரத்தை அகலப்படுத்தி ஒட்டுப்போட்ட வாரை செருகினார்.

“ஏலேய், ஈனச்சாதிப் பயலே, ஒரு பெரிய மனுஷன் மெனக்கிட்டு வந்து பேசிக்கிட்டு நிக்கறேன்; கொஞ்சம்கூட நெஞ்சில பயம், மருவாதை இல்லாம நீ பாட்டுக்கு உன் வேலையை பார்த்துக்கிட்டு இருக்கே….! மனசில என்னடா நெனைச் சுக்கிட்ருக்கே….!” சுப்பையா நெருப்பைத் துப்பினார்.

மகன் படிப்புக்கு வட்டிக்கு வாங்கின கடன் வாயைக் கட்டியது. சின்ன வீரன் பதறி எழுந்து “மரியாதை கொடுக்காம இல்ல, சாமி; செருப்பை விட்டுட்டு எழுந்திருச்சா வசம் பிசகி, வாட்டம் மாறிப்போயிரும். கோவிச்சுக்காதீங்க சாமி,” பவ்யமாகச் சொன்னார் சின்னவீரன்.

“ஆமாடா பெரிய்ய… சக்கரத்துக்கு ஆரக்கால் சேர்க்கிற? வாட்டம் மாறி கோட்டம் விழுந்திடும், போடா பொசகெட்ட பயலே!”

“மனுஷனை மனுஷனா மதிங்கடா, காசு தேவைன்னா நாய் மாதிரி வாலை ஆட்டிகிட்டு நிக்கிறது; தேவை முடிஞ்சு போச்சுன்னா நிமிர்ந்து வியாக்கியானம் பேசுறது. “சுப்பையா முறைத்துக்கொண்டே குரைத்தார்.

“அப்படி எல்லாம் இல்ல சாமி!”

“சரி, எங்கே அந்த காளிமுத்தனும், மாரிமுத்தனும்? ஆளையே காணோம்….?”

“லாரி செட்டுக்குச் சேவ போயிருப்பாங்க சாமி”

“அங்கிட்டு காணோமே.. சரி பார்த்தா சொல்லு. மூணுநாளா தவணை கட்டல! இன்னைக்கு தவணை காச தர்லைன்னா பெரிய ஏழரையைக் கூட்டியிருவேன்னு சொல்லு!” பைக் கர்ஜித்து கிளம்பியது. சின்னவீரன் பெருமூச்சு விட்டு உட்கார்ந்து, விட்டவேலையைத் தொடர்ந்தார்.

‘கந்து வட்டிக்காரன் பட்டறைக்கல்லை உதைத்து, ஈனச்சாதிப் பயலேன்னு வையும்போது கோபம் முனுக்கென்று வந்து பொங்கியது.. கை நீட்டி காசு வாங்கிட்டோமே, ஏலாமை கோபத்துக்கு அணை போட்டுருச்சு! என்ன செய்யறது! செருப்பு தைக்கிற தொழிலுக்கு பேங்க்காரன் கடனா கொடுக்கிறான்? கந்து வட்டிக்காரன்ல்ல கொடுக்கிறான்! எல்லாம் பொறுத்தபோக வேண்டிதிருக்கு!…?’ மன வோட்டத்தோடு பிழைப்பைப் பார்த்தார்.

“யோவ், பெரிசு என்ன புலம்பல்” காளிமுத்து குரல் கேட்டு நிமிர்ந்தார் சின்னவீரன்.

யப்போய் காளிமுத்து, அந்தத் தவணைக்காரர் வந்து மிரட்டிட்டுப் போறாருப்பா!”

“அவன் கெடக்கான் விடு,… ஏய்யா என் பேரைச் சொல்லிக் கூப்பிடாதேன்னு எத்தனை வாட்டி சொல்றது! நீயும் நானும் ஒரு சாதியா, செருப்பு தைக்கிற உனக்கு எவ்வளவு ஏத்தம்யா?”

“ஆமாயா நீ பெரிய உசந்த சாதிக்காரன் பாரு! இவரை துரைன்னு கூப்பிடனும்? சும்மா வெத்து வேட்டெல்லாம் விடாதே!” சின்னவீரன் காட்டமாகச் சொன்னார்.

காளிமுத்து அவிழ்ந்த வேட்டியை உதறிக் கட்டி தொடைக்கு மேல் மடித்துக் கட்டி சட்டையை ஏற்றிவிட்டுக்கொண்டு முறைத்தான். கடைந்தெடுத்த கருந்தேக்கு கட்டைகள் போல் கை, கால்கள். நடையில் விறைப்பும், தள்ளாட்டமும் இருந்தது. சின்னவீரனை நோக்கிப் போனான்.

அப்போது மாரிமுத்து வந்தான், மழையில் நனைந்த பனைமரம் மாதிரி நிறம். கட்டான தேகம். வேர்வை தாரை காய்ந்து உப்பு பரிந்து வெள்ளையாய் மின்னியது.

“எப்போய், என்ன பெரிசு கிட்டே சத்தாய்ச்சுக்கிட்டிருக்கே? பாவம், பிள்ளைக்குட்டிக்காரர் விடுப்பா!” மாரிமுத்து கேட்டான்.

“அப்படி போடுறா அருவாளை, அந்த ஆளு செத்தமாடு திங்கிற ஆளு, நீ மாட்டுத் தோல்ல தப்படிக்கிறவன். அதான் வக்காலத்துக்கு வர்றியா?” காளிமுத்து எகத்தாளமாய் கைதட்டி குதித்தான்.

“யேய், என்னப்பா இப்படி சமபந்தமில்லாம சாதியெல்லாம் இழுக்கற? நீ என்ன உசந்த சாதிக்காரனா? நீயும் வய வரப்பில காடுமேடுகள்ல எலி பிடிச்சு எலிக்கறி தின்னுகிட்டுருந்த ஆளுதானே? இங்க இப்போ நம்ம ரெண்டுபேரும் மாடா மூடை சுமக்கிறோம். இதில் எங்கப்பா சாதி கிடக்கு? உழைச்சா தானே சோறு, அதை வுட்டுட்டு என்னமோ பேசிகிட்டுத் திரியிறையே…”

“வாப்பா வா, நீ சங்கத்து காரனுல்ல! சாதியெல்லாம் பிடிக்காதுன்னு சவடால் பேசுற ஆளுள்ள…!”

காளிமுத்துவும் மாரிமுத்துவும் ஒருவரை நோக்கி ஒருவர் நகர்ந்தனர். சின்னவீரனுக்கு தூக்கிவாரிப்போட்டது

“யப்போய், யப்போய் என்னிட்டு நீங்க சண்டை போட்டுக் காதீங்கப்பா” என்றபடி இருவருக்கும் நடுவில் நின்று கையெடுத்துக்கும்பிட்டார் சின்னவீரன்.

மாரிமுத்து கேட்டான், “என்ன பெரிசு, என்ன நடந்தது?”

“இல்ல மாரிமுத்து, தவணைக்காரர் தேடி வந்து சத்தம் போட்டுட்டு போனார்னு சொன்னேன். தம்பி தண்ணி அடிச் சிருந்திருக்கும் போல இருக்கு.. கொஞ்சம் கூடுதலா பேசியிருச்சு! வேற ஒண்ணும் இல்ல, வுட்ருப்பா; நாம ஒண்ணுக்குள்ள ஒண்ணு !”

“அட இதுக்குத்தானா இம்புட்டு கறைச்சல்?” மாரிமுத்து பீடி நுனியைக் கடித்துத் துப்பி பற்ற வைத்தான்.

“இல்லைப்பா மாரி, இந்த நிமிஷம் வரைக்கும் லாரி ஒண்ணும் வரலை. லோடு இறக்கலை. கஞ்சிக்கு என்ன செய்யப் போறோம்னு கவலையில இருந்தப்ப இந்தக் கெழவன் கந்து வட்டிக்காரனை நாவகப் படுத்தறான்.. அதுதான் எரிச்சலாப் போச்சு…” என்றபடி காளிமுத்து கையை பிசைந்து உதறினான்.

தடதட இடிச்சத்தத்தோடு பைக் சத்தம் கேட்டது. சுப்பையா வந்து குதித்தார்.

ஏய், என்னாங்கடா.. என்ன ஒழுங்கா தவணை கட்டமாட் டேங்கறீங்க, வரும் போதெல்லாம் ஆளைக் காங்கமுடியலை…! ஆனா சாராயக் கடையிலையும், புரோட்டாக் கடையிலையும் ஆளை பார்த்ததாகச் சொல்றாங்க! என்ன நெனைச்சுக்கிட்டு இருக்கீங்க?” சுப்பையா அடை மழையாய் வார்த்தைளைப் பொழிந்தார்.

அம்மூவரும் பவ்யமாய் கைகட்டி நின்றார்கள்.

“ஏங்கடா ஏலேய் நான் கேட்டுகிட்டே இருக்கேன்.. வாலை ஆட்டிகிட்டுருக்கிற நாய் மாதிரி நிக்கிறீங்க? என்னடா தவணை ரூவா என்னாச்சு? மூணு நாளா ஒரு பைசாக் கூடத் தரக்காணேம்…!”

“அய்யா இன்னிக்கு மத்தியானம் வரைக்கும் லாரி வரக் காணோம். வந்ததும் லோடு இறக்கி பொழுதுசாயத்துக்குள்ள தாறோம்” மாரிமுத்து சொன்னான். வாழைப்பூ மாதிரி தலையைத் தொங்கப் போட்டுகிட்டு நின்றான் காளிமுத்து.

“ஏலேய் சண்டீரு பொழுதாச்சுன்னா தண்ணி அடிக்க முடியுது.. பன்னி மொச்சு மொச்சுன்னு மேஞ்சமாதிரி புரோட்டாக் கடையில் திங்கமுடியுது.. தவணைக்காசு தர முடியலையாடா ஈனச் சாதிப் பயலுகளா..?

அய்யா, எங்க உழைப்பை பார்த்துதான் தவணைக்கு பணம் கொடுத்தீரு! சாதி பார்த்தில்ல! அப்புறம் சாதியை ஏன் இழுக்கீரு! இது மாதிரி பேசினா.. அப்புறம் விவரீதமாயிரும் பாத்துக்குங்க!” என்று மாரிமுத்து சொல்லவும் மற்ற இருவரும் தலையாட்டி மாரிமுத்துவின் பக்கத்தில் நின்றுகொண்டனர்.

“டேய் இழிசாதிப் பயலுகளா என்னையா மிரட்றீங்க? இன்னிக்கு பொழுது விழுகறதுக்குள்ள சல்லிக்காசு குறையாம அசலும் வட்டியுமா குடுக்கல, நடக்கிறதே வேறே…” என்றபடி பைக்கை உதைத்துப் பறந்தார் சுப்பையா.

“யப்போய், நமக்குள்ள உசத்தி தாழ்த்தி பேசி ஊரானை நுழையவுட்றாம…! அந்த படுபாவி இன்னிக்கி என்னென்ன வினையை இழுத்துட்டு வரப்போறானோ.. தெரியல…” சின்ன வீரன் புலம்பினார். காளிமுத்து பெருமூச்சு விட்டுக்கொண்டு ரோட்டோரம் குத்துக்காலிட்டு உட்கார்ந்தான். எச்சிலை உமிழ்ந்து துப்பினான்.

மாரிமுத்து பீடி நுனியைக் கடித்து துப்பியபடி “வாய்யா, வர்றது வரட்டும்! கடன் வாங்கினோம்; இல்லைன்னு சொல்லலை. இன்னிக்கு வேலை வரட்டும். கூலி வாங்கித் தர்றோம்னு சொன்னோம். இதில் நம்ம மேல என்ன தப்பு இருக்கு? அந்த ஆளுதான் நம்ம சாதியைச் சொல்லி அசிங்கப் படுத்திட்டு போயிட்டான். அவனைத்தான் தண்டிக்க நியாயமுண்டு.”

“யப்போய் ரெண்டு பேரும் வயசு முறுக்கில வெனையை இழுத்துக்காதீங்க! நாம கூலிக்காரங்க. ஏதாவது வேலை செஞ்சாத்தான் புள்ளைக வயித்தை நனைக்க முடியும்! அதை மனசில வச்சுங்குங்க!” சின்னவீரன் சிணுங்கினார்.

“ஏய் பெரிசு, சும்மா இருக்கமாட்டே.” காளிமுத்து கடுப் படித்தான்.

சூழ்நிலையின் இறுக்கத்தில் மூவரும் உறைந்தனர்.

தடதடவென அலறலோடு பைக் சத்தம் கேட்டது. ஒரு போலீஸ்காரரோடு சுப்பையா வந்தார்.

“அங்க பாருங்க சார், அந்த ஈனப் பயலுகதான் வாங்கின காசைக் குடுக்க மாட்டேன்னு மூணுபேருமா சேர்ந்து மிரட்டி என்னை அடிக்க வாரானுக! அந்தக் கீழ் சாதிப் பயலுகளை கஞ்சா கேஸ்ல புக் பண்ணுங்க சார்! அதுக்கானதைச் செய்யறேன்.”

சுப்பையா ஆவேசமாய்க் கத்தினார்.

அந்த மூன்று பேரும் நடுங்கிப்போனார்கள். போலீஸ்காரர் அருகில் வந்தார் மூவரும் கைகூப்பி வணங்கினர்.

“இங்க பார்த்தீங்களா, நான் தனியா வந்தப்ப என்ன மிரட்டுனவனுங்க உங்களைப் பார்த்ததும் கூழைக்கும்பிடு போட்டு அப்பிராணிகணக்கா முழிக்கிறானுங்க, கீழ்ச்சாதிப் பசங்க!” சுப்பையா சாவி முடுக்கிவிட்டார்.

“ஏய், என்னய்யா இவரு சொல்றது நிசம்தானே..? அவரை மிரட்டி அடிக்கப்போனீங்கலாம்? கஞ்சா வச்சிருக்கீங்கலாம்? என்ன சேதி? உள்ள தள்ளி லாடம் கட்டவா…?”

போலீஸ்காரர் மீசையை முறுக்கி கொக்கரித்தார்.

மாரிமுத்து தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பேசினான். “ஏட்டய்யா இவங்க சொல்றமாதிரி ஒன்னும் நடக்கலை! தவணைப் பணம் கேட்டார். இன்னிக்கி வேலை பார்த்து கூலி வாங்கி பொழுதுசாயத் தர்றோம்னு சொன்னோம். அவருதான் எங்களை சாதிப் பேரைச் சொல்லிச் திட்டி கஞ்சா கேஸில போட்டிருவேன்னு மிரட்டினாரு!”

போலீஸ்காரர், சுப்பையாவைப் பார்த்தார். “இல்ல, இல்ல இந்த ஈனச் சாதிப் பசங்கதான் என்னை மிரட்டி அடிக்க வந்தாங்க!” சுப்பையா பொடுபொடுத்தார். மாரிமுத்து எச்சிலை விழுங்கி நாக்கை ஈரப்படுத்திக் கொண்டு “ஏட்டய்யா, வாங்க ஸ்டேஷனக்கு போவோம். உங்க முன்னாலையே எங்களை, சாதிப் பேரைச் சொல்லித் திட்டி அவமானப்படுத்திருக்காரு. நீங்களே சாட்சி! இவரு அநியாய கந்துவட்டி வாங்கி எங்களை வாழவிடாமச் செய்யிறாரு. அதுக்கு அவருகிட்ட இருக்கிற கணக்குச் சிட்டையே சாட்சி! நீங்களே இன்ஸ்பெக்டர் அய்யா கிட்டச் சொல்லி நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்க!

“அப்படி நீங்க எங்களோட ஸ்டேஷனுக்கு வரலைன்னா, நீங்களும் கந்து வட்டிக்காரரோட பங்குபோட்டுகிட்டு கந்து வட்டி கொடுத்து எங்களை மிரட்டி கஞ்சா கேஸில போடுவேன்னு அதட்ரீங்கன்னு இன்ஸ்பெக்டர்கிட்டே நாங்களே புகார் கொடுக்கிற மாதிரியாயிரும்…” மாரிமுத்து சொல்லி முடிக்கவில்லை.

ஏட்டையாவும் சுப்பையாவும் வெலவெலத்துப் போனார்கள். “என்னய்யா நம்மலையே வம்பில மாட்டிவிடுறீக! நான் வர்றேன்யா எனக்கு டூட்டி இருக்கு” போலீஸ்காரர் நழுவிக் காற்றாய்ப் பறந்தார்.

“ஆஹா புதைமணல்ல இல்ல காலை வச்சிட்டேன். தேன் கூட்டை கலைச்சது மாதிரியில்ல ஆயிடுச்சு! ஒண்ணு சேர்ந்துட்டானுகளே!” புலம்பியபடி வண்டியை மிதித்து பறந்தார் சுப்பையா.

அவர்கள் மூன்று பேரும் முதன்முதலாக ஒருவர் தோளில் ஒருவர் கைபோட்டு குலுங்கிக் குலுங்கிச் சிரித்தனர்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

1 thought on “ஒப்பப்பர்”

  1. ஒற்றுமையே உயர்வுக்கு வழி என்பதை மிக அழகாகவும் சாதியின் பெயரால் நாட்டில் விளிம்பு நிலை மக்களின் நிலைமையை மிக யதார்த்தமாக விளக்கிய விதம் அருமை. வாழ்த்துக்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: