ஐந்து ராஜகுமாரர்களும் ஆவுடையப்ப பிள்ளையும்

5
(1)

ரெண்டு நாளாய் ஆவுடையப்ப பிள்ளைக்கு சாயந்திரமானால் தலைவலி வந்து விடுகிறது. வலி என்றால் அப்படி வலி. நெற்றிப் பொட்டு விட்டுப் போய்விடும் போல அடித்தது. மாத்திரை, அய்யர் கிளப்பு காப்பி இவையெதுக்கும் அடங்கவில்லை. வீட்டிற்குப் போனால் தேவலாம் போல இருந்தது. செட்டியாரிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினார். செட்டியாருக்கு பிள்ளைவாளை விட மனசில்லை.

“காலையிலே சீக்கிரம் வந்துரும்… நேத்திக்கி வந்த சரக்கை பிரிக்கணும்…”

ஆவுடையப்ப பிள்ளை தலையை ஆட்டி விட்டு எழுந்து வேட்டியை உதறிக்கட்டினார். கடைக்கு வெளியே பக்கத்திலிருந்த சந்துக்குள் வைத்துப் பூட்டியிருந்த பழைய அட்லஸ் சைக்கிளை எடுத்து குறுக்குத்துறை ரோட்டில் ஏறி மிதித்தார். ஜவுளிக்கடை செட்டியாருக்கு பிள்ளைவாள் ஒரு வாரமாகவே முகம் குராவிப் போயிருந்ததாக நினைத்தார். பிள்ளைவாள் மாதிரி கணக்குப்புலி திருநெல்வேலி டவுண் ஏரியாவிலே ஜவுளிக்கடைகளில் யாரும் கிடையாது. சின்னாளப்பட்டியிலிருந்து வந்து முதன் முதலாக ஜவுளிக்கடை ஆரம்பித்ததிலிருந்து ஆவுடையப்ப பிள்ளை அங்கே வேலை செய்கிறார். எந்தக் குத்தமும் சொல்ல முடியாது. சுபாவியான ஆள். சதா நேரமும் மூக்குப்பொடியை ‘சர்ர்ட்’என்று உறிஞ்சிக்கொண்டு, தொடர்ந்தாற் போல ஏழெட்டு தும்மல்களைச் சிறுசாரலோடு வெளியேற்றுகிற சிரமத்தைத் தவிர மற்றெந்த விதத்திலும் யாருக்கும் உபத்திரவம் தராத சாது.

பத்து நாட்களுக்கு முன்னால், அவருக்கு ஐந்தாவதாகவும் ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தது. அதிலிருந்தே அவர் முகம் மாறிவிட்டார். தலையெல்லாம் நரைத்துப் போய், மத்திம வயசின் கடைசி எல்லையில், நிரந்தரமாகி விட்ட தொந்தியும் வயதுக்கு வந்த மூத்த பெண்ணும் இருக்கிற காலத்தில் ஐந்தாவதும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆவுடையப்ப பிள்ளையின் மனசில் பேரிடியாய் விழுந்துவிட்டது. ஆண் குழந்தை பிறந்திருந்தால் எல்லா விதத்திலும் சந்தோஷப்பட்டிருப்பார். ஆனால், இப்பொழுது மனச்சஞ்சலமடைந்தார். கேட்பவர்களிடம் பதில் சொல்லி முடியவில்லை. கேலியான பார்வையும், கிண்டல் பேச்சும் சகிக்க முடியவில்லை.

“இந்த வயசில… பிள்ளைவாளுக்கு இப்படி ஒரு ஆசையா…”

“மன்மத லீலையை வென்றவர் உண்டோ…” இப்படி வேண்டுமென்றே அவர் காதுபடப் பேசியதைக் கேட்ட பிள்ளைவாள் மனம் நொந்து போனார். ஏண்டா காலமான காலத்தில் இப்படியொரு நெனப்பு வந்தது என்று அவருக்கு அவர் மீது கோபம் வந்தது. எல்லாம் அந்த இரும்புலியூர் சித்தன் மதன காமராஜன் என்ற ஜோசியரால் வந்த வினை.

யாரோ சொன்னார்களென்று அந்த ஜோசியரைப் போய் பார்த்தார் ஆவுடையப்ப பிள்ளை. அந்த ஜோசியருக்கு ஹடயோகம், மிருக பாஷையெல்லாம் தெரியும் என்ற செய்தி அவர் மீதுள்ள மரியாதையைக் கூட்டியிருந்தது. அவர் பிள்ளைவாளின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு ரொம்ப நேரம் கட்டங்கள், கோடுகள், முக்கோணம், நட்சத்திரம் என்று எழுதிவிட்டு நிமிர்ந்து பிரகாசமாய் பிள்ளைவாளைப் பார்த்தார்.

“உங்க கிரக ராசிகள் இப்ப ஒண்ணு சேந்திருக்கு… நல்ல நேரம் ஆரம்பிக்குன்னு சொல்லலாம். புதன் பார்வை இப்ப தான் ஒரு நிலைக்கு வந்திருக்கு. இவ்வளவு நாள் பட்ட கஷ்டம் மெல்ல தீரும். உமக்கு ஜாதகத்தில் ஒரு ஆண் வாரிசு உண்டு…”

“நெசமாவா… ஆம்பிளப் பிள்ள இருக்கா…”

“இருக்காவா… கண்டிப்பா இருக்கு. அடுத்தது ஆண் தான் சந்தேகமேயில்லை. பையன் பிறந்ததுக்கப்புறம் உமக்கு சுக்கிர திசை ஆரம்பம்வோய். நீர் தொட்டதெல்லாம் துலங்கும்… விட்டதெல்லாம் கை வரும்… இது இரும்புலியூரான் வாக்கு… தப்பாது…”

பிள்ளைவாள் மெய் மறந்துவிட்டார். அன்றைக்கு வீட்டுக்கு எப்பவும் போவதை விட இன்னும் தாமதமாக லட்சுமி விலாஸில் நூறு அல்வாவையும் வாங்கி மடியில் கட்டிக்கொண்டு போனார். சுக்கிர திசையும், அவருடைய சொந்த ஜவுளிக்கடை கல்லாப் பெட்டியில் உட்கார்ந்திருக்கிற காட்சியும் இருளுக்குள் கண் முன்னால் விரிந்தது.

எதிர்காற்று அடிக்கிற அடியில் சைக்கிள் நகரவேயில்லை. தூசியும் புழுதியும் கண்ணடைக்க, வேட்டியை வேறு காற்று கலைத்துவிட பிள்ளைவாள் சைக்கிளை விட்டு இறங்கினார். “தாயளிகாத்தப் பாரு…” சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு விட்டு வேட்டியை இடுப்பில் இறுக்கிக் கட்டிவிட்டு சைக்கிளை உருட்டிக் கொண்டே நடக்க ஆரம்பித்தார். வீட்டிற்குப் போகவும் மனசில்லை. தெருவுக்குள் நுழைந்தால் எல்லோரும் அவரையே பரிதாபமாகப் பார்ப்பது போல் குற்றவுணர்வு. நேற்று குழந்தையைப் பார்க்க வந்த அவருடைய அத்யந்த நண்பர் மணியா பிள்ளை,

“அஞ்சு பொண்ணு இருந்தா அரசனும் ஆண்டியாவான்னு சொல்லுவாகளே… என்னய்யா பண்ணப் போறீரு… எப்படிய்யா ஒவ்வொண்ணையும் கரையேத்தப் போறீரு…” என்று புலம்பி விட்டுப்போனார்.

அதிலிருந்தே ஆவுடையப்ப பிள்ளையின் மனசில் என்னென்னவோ எண்ணங்கள். கற்பனைகள் வளர்ந்தன. அதையும் இதையும் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தார். குறுக்குத் துறையில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு போகலாம் என்று நினைத்தார். அப்பவாவது மனசுக்கு நிம்மதி கெடைக்குமா?

இசக்கியம்மன் கோயில் படித்துறையில் போய் உட்கார்ந்தார். தாமிரபரணி மெலிந்து ஒழுகலாய் ஓடிக் கொண்டிருந்தது. இருட்டுகிற நேரம். குளிக்கிறவர்களும் அதிகமில்லை. இருட்டிவிட்டால் இசக்கியம்மன் கோயில் பக்கம் யாரும் வருவதேயில்லை. ஆவுடையப்ப பிள்ளையும் இதுவரை வர நேர்ந்ததேயில்லை. ஆனால் இன்று அதையெல்லாம் யோசிக்கிற நிலைமையில் அவர் இல்லை. அவருடைய மனசில் ஒரு விஷயம் உறுத்திக் கொண்டேயிருந்தது. அதன் தெளிவான முகம் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் அதைப்பற்றி யோசித்தும், யோசிக்காமலும் படித்துறையில் உட்கார்ந்து எதிர்க் கரையை வெறித்துக் கொண்டிருந்தார்.

இருள் கவிந்து வந்தது. தூரத்தில் மினுங்கலாய் ஒரு நட்சத்திரம் உயிர்பெற்றது. சுற்றிலும் மின் விளக்குகள் எரிய ஆரம்பித்தன. அப்போது தான் திடுக்கென அந்த விஷயம் ஞாபகத்துக்கு வர பிள்ளைவாளின் உடம்பு ஒரு தடவை நடுங்கி நின்றது. இருட்டிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் மேலும் இருண்ட முகத்துடன் உட்கார்ந்திருந்த பிள்ளைவாளின் மனசில் எண்ணற்ற நினைவலைகள் முந்தா நாள் அய்யர் கிளப்பில் காப்பி சாப்பிடும் போது தினந்தந்தி பேப்பரில் போட்டிருந்த செய்தி தான் அவருக்குள் உறுத்திக் கொண்டிருந்தது. அந்தச் செய்தியைப் படித்ததும் முகத்தைச் சுளித்தார் பிள்ளைவாள். மனம் அருவறுப்படைந்தது. ஆனால், அதற்கப்புறம் அந்த எண்ணம் அடிக்கடி மனசின் அடிமட்டத்திலிருந்து தலையை நீட்டிக் கொண்டிருந்தது. அவரும் செட்டியாரிடம் சொல்லும் போது,

“இப்படியும் செய்யுமா ஜனம்… கழுத அது பாட்டுக்கு வெந்ததோ வேகாததோ தின்னுட்டு கிடக்குது. ஊர்ல உலகத்தில வழியில்லன்னு எல்லாமா செத்துப்போகுது… இருந்தாலும் இதுவங்கொடும என்ன… சொல்தீக…”

கொஞ்சநேரம் கழித்து,

“இப்ப எனக்கும் அஞ்சுபொட்டை கெடக்கு அதுக்காக எல்லாத்தையும் விஷம் வைச்சி கொன்னுரவா முடியும்… எப்படித்தான் மனசு வந்ததோ படுபாவிகளுக்கு…”

இப்படி அடிக்கடி ஏதாவது சொல்லிக் கொண்டேயிருந்தார். சொல்லச் சொல்ல மனசில் அந்த எண்ணம் வலுப்பெற்றுக் கொண்டே வந்தது. முதலில் அதை நினைக்கவே பயந்தார். நேரம் ஆக ஆக அதன் பலாபலன்களைப் பற்றி மனசுக்குள் தர்க்கம் பண்ண ஆரம்பித்துவிட்டார்.

இருள் மூடிவிட்டது. நட்சத்திரங்களின் மெல்லிய ஒளி தவிர வேறு வெளிச்சம் ஆற்றில் இல்லை. வயக்காடுகளிலிருந்து மெல்லராப் பூச்சிகளின் ரீங்காரம் ஓங்கி எழ ஆரம்பித்துவிட்டது. அடைந்த மரத்திலிருந்து கலைந்து திரும்பும் நீர்க் காகங்களின் அலறல், முன்னால் எந்த அசங்கலுமில்லாமல் ‘களக் களக்’என்ற ஓசையுடன் ஓடிக் கொண்டிருக்கும் தாமிரபரணி. சுற்றிலும் இருள், இருள். அந்த இருளே திரண்டு அவருக்குள் புகுந்த மாதிரி அந்த எண்ணம் புகுந்து ஆட்டி வைத்தது.

அவரும் அருள் வந்தவர் போல் அதன் அத்தனை இழுப்புகளுக்கும் ஈடுகொடுத்தார். மனசில் கொந்தளிப்பு. அமைதியில்லாமல் இருட்டுக்குள் உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த எண்ணத்தின் கோரப்பிடியிலிருந்து தப்பிக்க முடியுமா என்று சில கணம் நினைத்தார். மறுபடியும் அதன் ஈர்ப்பு விசைக்குள் விழுந்தார். கண்ணை மூடி எல்லாவற்றையும் மறக்க நினைத்தார். குடும்பத்தை மனைவியை, பெண்களை, ஐந்தாவதாகப் பிறந்த பெண் குழந்தையை எல்லாவற்றையும் மறக்க நினைத்தார்.

அப்போது தான் அந்தச் சத்தம். தண்ணீரின் சத்தம். யாரோ நடக்கிற மாதிரி கேட்டது. கண்ணைத் திறந்து பார்த்தார். முதலில் யாரும் தெரியவில்லை. உடனே லேசாய் மனசில் பயம் கவ்வியது. உடம்பு வியர்க்க ஆரம்பித்தது. சத்தம் வரவர அருகில் கேட்டது. ஆற்றில் உற்றுப்பார்த்தார். தண்ணீரிலிருந்து ஒரு நாய் வாயில் எதையோ கவ்வியபடி கரையேறியது. முதலில் அது என்னவென்று தெரியவில்லை. “ஞ்நூ.ஞ்நூ”என்ற முனகல் கேட்டது. நாய் அதன் குட்டியை மணலில்விட்டது. உடம்பெல்லாம் நக்கிக்கொடுத்தது. பரபரவென்று அங்குமிங்கும் திரும்பி நின்று காதுகளை விடைத்துக்கொண்டு பார்த்தது. பின்னர் தண்ணீரில் வேகமாக இறங்கி எதிர்க்கரைக்குப் போய்விட்டது.

மணலில் கிடந்த நாய்க்குட்டியின் முனகல் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. மறுபடியும் தண்ணீரில் சத்தம் கேட்டது. நாயின் வாயில் இப்போதும் ஒரு குட்டி இருந்தது. மூச்சுவிடாமல் சகலத்தையும் மறந்து நாயையும், நாயின் குட்டிகளையும் பார்த்துக் கொண்டிருந்தார். நாய் நான்கு குட்டிகளை அதே மாதிரி கொண்டு வந்து சேர்த்தது. ரொம்ப சோனியாய் இருந்த அந்த பெரிய நாய் கொஞ்சநேரம் குட்டிகளை நக்கிக் கொடுத்துவிட்டு சேர்த்து அணைத்துக் கொண்டு படுத்துவிட்டது.

ஆவுடையப்ப பிள்ளை நீண்ட பெரு மூச்சுவிட்டார். நேரம் அதிகமாகிவிட்டது போல் தோன்றியது. அண்ணாந்து பார்த்தார். வானத்தில் எக்கச்சக்கமான நட்சத்திரங்கள். எழுந்து அரவமில்லாமல் நடந்து வந்து மணலில் சரிந்திருந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு ரோட்டுக்கு வந்தார். எதுவும் தோணவில்லை. ரோட்டில் சைக்கிளை நிறுத்தி, இடுப்பில் நெகிழ்ந்திருந்த வேஷ்டியை இறுக்கிக் கட்டிக்கொண்டு, சட்டைப் பையிலிருந்து மூக்குப்பொடி டப்பாவை எடுத்து ‘சர்ர்ட்’என்று உறிஞ்சினார். இப்போது தலை வேதனை குறைந்திருந்தது. சைக்கிளில் ஏறி வீட்டைப் பார்க்க அழுத்தினார். மனசு லேசாகியிருந்தது. லேசான ஈரிப்புள்ள காற்று வீசியது. அவர் நல்ல நம்பிக்கையான கனவுகளைக் கூட காண ஆரம்பித்தார். ஐந்து ராஜகுமாரர்கள் வந்து தம்பெண்களைக் கல்யாணம் முடித்துக் கொண்டுபோகிற மாதிரி. அதில் ஐந்தாவது ராஜகுமாரன் ஒரு பெரிய சக்கரவர்த்தியின் மகனாம்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

1 thought on “ஐந்து ராஜகுமாரர்களும் ஆவுடையப்ப பிள்ளையும்”

  1. Sakthi Bahadur

    இந்த சமுதாயத்தில் பெண்களின் நிலையையும், பெண்ணை பெற்றவர்களின் நிலையையும் புரிந்து கொள்ள ஐந்தாவது பெண் பிறந்தால் அரசனும் ஆண்டி ஆவான் என்ற பழமொழியே போதும்.

    ஐந்தும் பெண்ணாய் பெற்ற ஆவுடை பிள்ளையின் மனதைத் தேற்றுகிறது தன் குட்டிகளை வாயால் கவ்வி நதியில் நீந்தி கரையை வரும் நாய் ஒன்று பிள்ளைகளை வளர்க்கும் விஷயத்தில் நாம் மிருகங்களை விட கீழே சென்று விட்டோம். அன்பான மழலையின் பாசத்தை அனுபவிக்க முடியாமல் பெண் பிள்ளைகளை பொருளாதாரச் சுமையாக நினைக்கும் சமூக அவலத்தை சுட்டிக்காட்டும் அருமையான கதை அமைப்பு.

    வாழ்த்துக்கள் தோழர்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: