ஏழாவது அறிவு

3.7
(3)

“ஏண்டி … இவளே… நீ மட்டும் எப்புட்றீ எனக்கு தப்பி பொறந்த? சின்னவளப் பாரு… அவ உண்டு அவ வேல உண்டுன்னு கெடக்கா… எழுதி கிழிக்கறாளாம்… பெரிய மகாராணின்னு மனசுல நெனப்போ?”…. காலையில் ஆரம்பித்த அம்மா, மணி பன்னிரெண்டாகியும் முடித்தபாடில்லை. சின்னதாய் எழுப்பப்பட்டிருந்த அரைச்சுவருக்கு பின்னால் சமையல் செய்தபடியே அம்மா இன்னும் புலம்பிக் கொண்டிருந்தாள்.

“எல்லா ஏ நேரம்… ஒசந்த குடில பொறந்து, ஒங்கப்பனுக்கு வாக்கப்பட்டு சீரழிஞ்சு சின்னக் கழுதைல ஒக்கார வச்சுப்புட்டீக. குடியும் – கும்மாளமுமாத் திரிஞ்ச அந்தாள சரி பண்றதுக்குள்ள முக்கா ஆயுசு மூஞ்சு போச்சு. மிச்ச சொச்ச வாழ்க்கைலயாவது உஸ்சுண்டு ஒக்காரலாமேன்டு பாத்தா இவ ஆரம்பிச்சுட்டா… நம்ம இருக்குற இருப்புக்கு இது ஒண்ணுதான் கொறச்சலு… எழுதிக் கேப்பய நட்டு, நாட்ட நட்டமா நிமுத்த போறயாக்கும்..? இவளும், இவ…” இந்தக் காதுகள் இரண்டையும் கழற்றி வைத்துவிடலாம் போலிருந்தது. கையிலிருந்த கவிதை நோட்டை அலமாரியில் வைத்து விட்டு, அம்மா முன்னால் போய் நின்றேன்.

“இப்ப என்னதான் செய்யணும்னு சொல்ற?”

அம்மா சேலைத் தலைப்பால் புலம்பலினாலோ – புகையாலோ வழிந்திருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

“ஆமா… ஒனய பெரிசா என்ன செய்யச் சொல்லப் போறோம்..? ஒழுங்கா… பொட்டச்சியா.. வீட்டு வேலயப் பாரு… மிச்ச நேரத்துல கவித எழுதுறீ… கழுத எழுதறீண்டு என்னமோ செஞ்சுட்டுப் போ… ஆனா… பத்திரிக்கைக்கு அனுப்புறது, ஆம்பளப் பசங்களுக்கு லெட்டர் எழுதுறது இதெல்லா விட்டுப் போடு… என்னா” ஓஹோ… இப்போது புரிந்து விட்டது. இவர்களை உறுத்துவது இது தானா?

“மொதல்ல சொன்னதுக்கு சரி… ஆனா நா வீட்ட விட்டு எங்கெயாவது ஊர்சுத்தப் போறனா? எனக்கு இருக்கற ஒரே உலகம் லெட்டருக தான், அதுல ஒங்களுக்கு என்ன வந்துச்சு?”

“எங்களுக்கு என்ன வந்துருச்சா… எங்களுக்கு ஒண்ணு வராதுடி… நாளக்கி வருவாள்ல ஒனக்குன்னு மாமியாரு அவ கேப்பா… ஊர் சிரிச்சு, சாதி சனமெல்லாம் காறித் துப்புவாக… ஒனயவும், ஒந்தங்கச்சியும் ஒரு பய கட்ட மாட்டே. நீ செய்யுற தப்புக்கு ஒந்தங்கச்சியும், நாங்களும் ஏ அனுபவிக்கனும்…?” …இதோ மீண்டும் ஆரம்பித்து விட்டாள். இனி, இது ஓய்வதற்கு இரண்டு – மூன்று மணியாவது ஆகும்.

பள்ளியில் படிக்கிற போது நான் கவிதை எழுதி, வாங்கிய முதல் பரிசுகளில் வாயெல்லாம் பல்லாகச் சுற்றித் திரிந்த அதே அம்மா – முதன்முதலில் ஒரு வாரப்பத்திரிக்கையில் வெளிவந்த என் கவிதையை தூக்கிக் கொண்டு அக்கம் பக்கத்து வீடுகளில் எல்லாம் பெருமையடித்துத் திரிந்த அதே அம்மா – இப்போது ‘எழுதி என்னத்த கிழிச்ச?’ என்று கேட்கிறாள்.

கவிதை எழுதுகிற ஒருத்திக்கு – இரண்டு எழுத்தாள நண்பர்களும், நான்கு வாசகர்களுக்கும் கடிதம் எழுதுவது இவர்களுக்கு மட்டும் எப்படி தவறாகவே படுகிறது?. ஒரு ஆணையும் – ஒரு பெண்ணையும் நேரில் பார்க்கிற போதுதான் தவறாகப் பேசுகிறார்கள் என்றால், கடிதங்களில் கூடவா கறை காண்கிறார்கள்? என்ன மனிதர்கள் இவர்கள்? வக்கிரம் பிடித்த மனசுக்காரர்கள். முன்பு ஒருமுறை இப்படித்தான். ஒரு கவியரங்கிற்கு அழைப்பு அனுப்பியிருந்தார்கள். குடும்ப மானமே போய்விட்டதாக அப்பா குதித்து விட்டுப் போனார். அம்மா புலம்பிப் புலம்பியே மூலையில் கிடந்தாள். இத்தனைக்கும் அங்கு போக வேண்டும் என்று கூட நான் சொல்லவில்லை.

சின்ன வயதிலிருந்தே எனக்கென்று விரும்பி எதையும் கேட்டதாய் என் நினைவுகளில்லை. கடிதம் எழுதுவதற்குக் கூட இவர்களிடம் நான் காசு கேட்டதில்லை. அவ்வப்போது எதாவதொரு பத்திரிக்கை, பிரசுரமான கவிதைக்காக அனுப்புகிற ஐம்பதோ, நூறோதான் கடிதங்களுக்கான முதலீடு.

தினமும் சமைத்து, சாப்பிட்டு, உறங்கி… திரும்ப எழுந்து சமைத்து, சாப்பிட்டு, உறங்கி… என்ன வாழ்க்கை இது? இவர்களுக்கு மட்டும் எப்படி இது சலித்துப் போவதில்லை? இரண்டு நாள் காலையில் தொடர்ச்சியாக இட்லி வைத்தாலே அப்பாவுக்கு பிடிக்காது. “என்னது.. இது… ஒரே இட்லி… தெனமும் இதுதான…ஒலகத்துல ஒண்ணுமே கெடக்கலியா ஒனக்கு?” என அம்மாவை கேள்வியோடு பார்க்கிற அப்பாவுக்கு, இந்த இயந்திர வாழ்க்கை மட்டும் எப்படி பிடித்துப் போனது?

பல விசயங்களை யோசித்துப் பார்க்கிற போது, ஒண்ணுமே இல்லாதது போல் தோன்றுகிறது. சில நேரங்களில் எல்லாமே அர்த்தமுள்ளதாய் தோன்றுகிறது.

இப்படி உட்கார்ந்து யோசிக்கிற பொழுதில், மகிழ்ச்சியோ – துக்கமோ எல்லாம் மறைந்து போய் மனசு வெற்றிடமாய் – சூனியமாய் ஆகிப் போகிறது.

அப்பா கை அலம்புகிற சத்தம் கேட்கிறது. மணி இரண்டாகி விட்டதா? அவசரமாக எழுந்து சென்று முகம் கழுவினேன். அறைக்குள் விரிக்கப்பட்டிருந்த பழைய பாயின் மேல் அப்பா உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

“நம்ம நெனச்ச மாதிரியெல்லாம் அந்த மாரிமுத்துப்பய இல்ல… கூடப் போயி மாடு வாங்கித் தாடான்னா… ரேட்ட ஏத்தி வச்சுவிட்டான்… எளம்பசுவு – பராமரிக்க ஆளில்லாமத்தே விக்கிறாகன்னு சொன்னான்ல… அதெல்லாம் ஒரு புடலங்காயுமில்ல… பல்லு புடிச்சு பாத்தா மூணு ஈத்து தாண்டியிருக்கும் போல… எளம் பசுவாம்… எளம் பசுவு? யார ஏமாத்தப் பாக்குறாங்கெ… அப்பொறமா சின்னமனூரு பக்கம் போயிருந்தே…” அப்பா காலையில் கிளம்பியதிலிருந்து ஆரம்பித்து இந்த வினாடி வரை நடந்ததெல்லாம் சாப்பிட்டுக் கொண்டே சொல்லி விடுவார். அவர் பேச்சில் ஒரு சுவாரசியமும் இல்லை என்றாலும் கூட அம்மா “உம்” கொட்டுவாள். முப்பதாண்டுப் பயிற்சி!

அப்பா – சின்னமனூர் தோப்பையும். கம்பத்தில வீரநாயக்கன்குளத்தில் செத்து மிதந்த மீன்களையும், கூடலூரில் யானைக்குழாயை உடைத்து அங்குள்ளவர்கள் தண்ணீர் பிடிப்பதையுமாக… ஒரு சுற்றி சுற்றியவரைக்கும் எல்லாம் சொன்னார். ஆனால் கடைசியாகச் சொன்ன விசயம் தான் அம்மாவுக்கு சந்தோசத்தையும், எனக்கு ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.

“வர்றப்ப நாராயணன் புரோக்கர பார்த்தேன். அவுகப்பா சாமாண்டி காலத்திலர்ந்து எனக்கு தெரியும். ரொம்ப நல்ல புரோக்கரு. நாராயணன் என்ன சொல்றாண்ணா… வர்ற வைகாசிக்குள்ள இவ கல்யாணத்தை முடிச்சுடலாங்கிறா…” சொல்லிக் கொண்டிருந்த அப்பாவை அம்மா இடைமறித்தாள். “வைகாசிக்கு இன்னு ரெண்டு மாசந்தே இருக்கு… மாப்புள்ள யாரு… இன்னு அதெயே முடிவு பண்ணாமயா கல்யாணம்…?” அப்பா இடது கையை மேல்பாக்கெட்டுக்குள் விட்டுத் துழாவி, ஒரு சின்ன பேப்பரை எடுத்து நீட்டினார்.

“பையம்பேரு காமராசு, ரேசன் கடையில வேல… புதுப்பட்டியில் சொந்த வீடு இருக்கு. வீட்டுல ஒரே பையன் வேற சொத்து பத்து இல்லண்ணாலும் நல்ல மனுசங்க… அதிகமா சீர்செனத்தி எதிர்பாக்க மாட்டாகளாம்…”

“இவளுக்கும் நிம்மதியாய் போயிரும். கால் காசுண்ணாலும் கவர்மெண்டு காசு பாரு…” அப்பா பேசிக்கொண்டேயிருந்தார்.“அப்பா…” இடையில் புகுந்தேன்.

“என்னம்மா?” புருவம் உயர்த்தி என்னைப் பார்த்தார். அம்மா நான் எதாவது எதிர்த்துப் பேசி விடுவேனோ என்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இப்ப என்னப்பா கல்யாணத்துக்கு அவசரம்?” அப்பா உரத்த குரலில் சிரித்தார். “என்னம்மா இப்புடி கேட்டுப்புட்ட… நம்ம சாதி சனத்துல பதினெட்டு வயசுலயே கட்டிக் குடுத்துருவாக… நானு போனாப் போகுதேன்னு விட்டு இப்ப பொசுக்குண்ணு இருபத்திரண்டாயிருச்சு. இனியுபொறுத்தோமுன்னா ஒந்தங்கச்சி கெழவியாயுருவா…” எனக்கு சராசரியாய் திருமணத்தில் எந்த எதிர்பார்ப்புமில்லை. என்றாலும் கூட காலமெல்லாம் உடனிருக்கப் போகிற ஒரு ஆளை, யாரென்றே தெரியாமல் கழுத்தை நீட்டுவது நல்லதில்லை. நேற்றுவரை ஏதோ, ஒரு ரேசன் கடையில் குப்பை கொட்டிக்கிட்டிருந்த ஒருவன், நாளை முதல் என் கணவன்? நினைக்கவே பயமாயிருக்கிறது. “அப்பா… மாப்ள யாரு… என்னன்னு தெரியாம… ஒரு நிச்சயதார்த்தம்… பேசுறதுன்னு எதுவுமே இல்லாம… எப்புடிப்பா…?” அம்மாவுக்கு கோபம் வந்து விட்டது. “பொட்டப்புள்ள… பேச்சப்பாரு… மாப்ளய பத்தியெல்லாம் நீ கவலப்பட வேண்டியதில்ல… எல்லா நாங்க வெசாரிச்சுதான் கட்டிக்குடுப்போம்… ஒனய பாழுங்கெணத்துலயா தள்ளீருவோம்…? போடி… உள்ள…” நான் வாழப்போகிற ஒருவனைப் பற்றி எனக்கு கவலை இருக்க கூடாதாம். அது சரி! கசாப்புக் கடைக்காரனிடம் கருணையை எதிர்ப்பார்ப்பது என் தவறு.

“அப்பா… நா கல்பனாவுக்கு போன் பண்ணிட்டு வந்துர்றேன்!..” குழம்பியுள்ள மனசுக்கு அவள்தான் மருந்து. போன வருடம் வரை பக்கத்திலிருந்த உயிர்த்தோழி, இப்போது அருகிலுள்ள ஊரில் யாருக்கோ மனைவி.

“சரிம்மா… போயிட்டு வா… தம்பிய தொணக்கி கூப்புட்டுக்க… வந்து யோசிச்சு சட்டுபுட்டுன்னு சாயங்காலமா சொல்லு… சீக்கிரமா ஆக வேண்டியத பாப்போம்…” அப்பா தம்பியை அனுப்பி வைத்தார்.

போனில் ரிங் போய்க்கொண்டேயிருந்தது. கடைசி ரிங்கில் மறுமுனையில் அவள்.

“ஹலோ… கல்பனா தானே?”

“ஆமா… நீங்க… நீ… …. எப்புட்றீ இருக்க… ரொம்ப நாளா ஃபோனையே காணோம்?” மறுமுனையில் கல்பனா குதூகலித்தாள். குரல் கொஞ்சம் தடித்துப் போயிருந்தது.

“அதெல்லாம் இருக்கட்டும் கல்பு… நீ நல்லாதான இருக்க?”

“நல்லா இருக்கேன்… சந்தோசமா இருக்கேன். அங்க வேற விசேசம் இருக்கா?”

“அதுதாண்டி போன் பண்ணுறேன்… அப்பா திடீர்னு கல்யாணங்கறார். மாப்ள-புதுப்பட்டி. ரேசன்கடையில் வேல. முன்னப்பின்ன தெரியாத ஒரு ஆள எப்புடுறீ சரிங்கறது… எனக்கு ஒரே கொழப்பமாயிருக்கு…”

“எல்லா பொண்ணுகளும் பேசி, பழகி அப்புறமா கல்யாணம் செய்றாக? அதெல்லாம் சரியாயிரும்…”

“எனயப்பத்தி தெரிஞ்ச நீயுமா இப்புடி பேசுற?”

“ஆமா… தெரிஞ்சதாலதே பேசுறேன். இப்ப உன் வீட்டுல நீ எழுதுறது, பேசறது எல்லாத்தையுமே கொறயா சொல்றாங்க இல்ல… ஏற்கனவே ஒனயப்பத்தி ஒரு அபிப்பராயத்துல ஒரு முடிவுல தான அப்படி சொல்றாங்க… இப்ப புதுசா பழகுற ஒருத்தர்கிட்ட நம்மள புரிஞ்சுக்க வைக்கிறது ரொம்ப சுலபம்… உனக்கு வீட்டுலர்ந்து கெடக்கிற விடுதலமாதிரி இதப் பயன்படுத்திக்க…”

“சரி… கல்பனா… இத நா யோசிக்கவே இல்ல… அப்புறமா பேசறேன்…” எனக்கு குழப்பம் விடுபடுகிற மாதிரித் தெரிந்தது. ஒரு புதிய நபருக்கு – என்னைப் புரியவைக்க முடியாத அளவுக்கு நான் பேசத் தெரியாதவளா என்ன, ஒரு சின்னக் கூட்டிற்குள் அடைபட்டிருந்த கிளி, பிரபஞ்ச வெளியில் கலந்து விடுகிற ஆர்வம் என்னுள் முகிழ்த்தது.

என்னால் முடியுமா? பிறர் முகத்தை நேருக்கு நேர் பார்த்து பேச முடியாமல் நெளிகிற… என்னால் முடியுமா? முடியும் என்றது மனசு. வீட்டிற்கு வந்ததும் நேரே அப்பாவை பார்த்தேன். “அப்பா… எனக்கு சம்மதம்…” அப்பா இதை எதிர்ப்பார்த்தவர் போல் தலையசைத்தார். அம்மாவிற்குத்தான் இதை நம்பவே முடியவில்லை. அருகில் வந்து தலைகோதினாள். அன்றைய இரவு – மனசு நிறைய கனவுகள் சுமந்த இரவாக நகர மறுத்தது.

பத்திரிக்கை அச்சடித்ததிலிருந்து துரித கதியில் ஓடிப்போன நாட்கள் அத்தனை சுவாரசியமானதில்லை.

அன்று திருமணம். இருபது வருடங்களாக அடைத்து மூடப்பட்ட மனசை, அன்றைய இரவு திறக்கப்போகிற வினாடிதான் மனசு முழுக்க நிறைந்திருந்தது.

சீலைக்காரியம்மனை கும்பிட்டு வந்ததும், ஐயர் ஓதிய மந்திரமும், நண்ப -நண்பிகளின் அறிமுக – வாழ்த்துப் படலமுமாய் திருமணப் பகல் ஓட ஆரம்பித்தது. ஓரக்கண்ணில்பட்ட மாப்பிள்ளை சுமாரான அழகுடையவன் தான். சிகரெட் கறைபடியாத உதடுகள் எனக்குள் நிம்மதியை ஊற்றின.

“மாப்ள சொக்கத் தங்கம்யா… எந்த ஒரு கெட்ட பழக்கமும் கெடயாது… இந்தக் காலத்துல இப்புடி ஒரு புள்ளய பார்க்கமுடியுமா?”

கூட்டத்தில் யாரோ, யாரிடமோ உரக்க பேசிக் கொண்டது எனக்கு இனித்தது.

கடவுளே? மற்ற விஷயங்களையும் இவரோடு பேசி புரிய வைத்துவிட்டால் என்னைப் போல ஒரு சந்தோஷி இந்த உலகத்தில் இருக்க முடியாது.

அய்யர் முணுமுணுவென்று ஓதிய மந்திரங்கள் எதுவுமே புரியவில்லை. அவர் முக பாவனையிலும் என்ன சொல்கிறார் என்பதை அறிய முடியவில்லை. இது என்ன முகம்? உச்சரிக்கும் வார்த்தைகளுக்கு உணர்ச்சிகளை வெளிக்காட்டாத இறுக்கம். சல சலவென்ற கூட்டத்தின் சத்தம் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. ஒருவர் பேசுவதை இன்னொருவர் கேட்காமல், தானும் பேசுவதால் இந்த சத்தம் எழுகிறதோ?

தாலியை தாங்கியிருந்த தட்டை பார்வையாளர்களின் ஆசீர்வாதத்திற்கு யாரோ எடுத்துச் சென்றார்கள்.

என் பின்புறம் எதுவோ ஊறுவது போன்று உணர்ந்தேன். “பொம்பளப்புள்ள நாலு பேருக்கு முன்னால அடக்க ஒடுக்கமா இருக்கணும்”. தலையை சட்டென திருப்பாமல் கண்களை மட்டும் மெதுவாக உருட்டி கவனித்தேன்.

தேனிக்கார பாட்டி என் புடவையை அவரின் மேல்துண்டோடு இறுக்கிக்கட்டிக் கொண்டிருந்தார். அவர் பட்டுத்துண்டு காற்றில் அசையும் போதெல்லாம் – அதன் போக்கில் என் புடவையும் அசைந்து கொண்டிருந்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 3.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top