எலி

0
(0)

அந்தவீட்டில் அக்காளுக்கும் தங்கைக்குமான பனிப்போர் துவங்கி விட்டது. பத்ரகளியாய் அக்காவும் பனிலிங்கமாய் தங்கையும் எதிரெதிராய் நின்றனர்.

 

அக்காவின் வார்த்தைகள் அக்கினிக் குண்டத்திலிருந்து வெளிவரும் தீப்பிழம்பாய் உருவகித்துக் காத்திருந்தன. தங்கையோ சகலத்தையும் சந்திக்கத் தயாரனவள் போலவும், அருகாமையில் ஒரு எரிமலை புகைந்து சாம்பல் மணம் வீசிக்கொண்டிருப்பதை அறியதவள் போலவும் அமைதியாய் இருந்தாள்.

 

“இன்னம் ஒருமாசந்தானடி.. “ கொப்பளித்த ஜூவாலையினை விழுங்கி நெஞ்சுக்குள் இற்க்கிக்கொண்டு அது வெளியில் தெரியா வண்ணம் வார்த்தைகளை கூடியமட்டும் இயல்பானதாய் இருக்கப் பேச்சுக் கொடுத்தாள் அக்கா, ஆனாலும் அக்கினியின் வெக்கை தங்கையைச் சுடத்தான் செய்தது.

 

“சொன்னா புரிஞ்சுக்க கமலா.. ஏற்கனவே நீ சொன்னபடி ஒருமாசம் பாத்துக்கிட்டேன்..” சாந்தமான தங்கையின் பேச்சில் காரநெடி கமல்வதை அக்காவால் ஒரேவார்த்தையில் அறிய முடிந்தது. மூச்சுக்கு மூணுதரம் அக்காஅக்கா என ஆசையாய் அழைக்கிறவ்ள் இப்போது ’கமலா’ என பெயரைச் சொல்கிறாளே…!

 

“நல்லா புரிஞ்சுக்கிட்டேன்டி..’’ என அதிரடியாய் எழுந்த வேகமான வார்த்தையை கஷ்டப்பட்டு விழுங்கிய கமலா, “நல்லா தெரிஞ்சுதாம்மா சொல்றே.. நீ தூக்கி வளத்த பொண்ணு.. சுமித்ரா. அவள ஒன்னியக்காட்டியும் யாராலயும் நல்லாப் பாத்துக்க முடியாது. பாடத்துல சந்ததேகம்னாலும் அவளுக்கு டீச்சரவிட நீதே புரியிறாப்ல சொல்லித்தாரியாம்.. சுமித்ரா ஒன்னத்தாண்டி வாய்க்குவாய் பெருமையாப் பேசுறா.. எங்க ஊர்லாருந்து ஸ்கூலு தொலவெட்டுன்னுதான அவள கொஞ்சநாளைக்கி ஒவ் வீட்ல தங்கி படிக்கச் சொல்றே.. ஓவ் வீட்டுக்காரரு ஏதுஞ் சொல்றாரா..?”

 

அக்கா கோட்டூரில் வாழ்க்கைப்பட, தங்கை தேனிநகரத்தில் சொந்தவீடுகட்டி வாழ்ந்து வருகிறாள். அக்காவைப்போல தங்கைக்கும் முதல் இரண்டும் பெண்பிள்ளைகள்தான். மூணாவதாக ஆப்பரேசனுக்குப் பிறகு முயற்சி செய்தும், அதுவும் பெண்ணாகவே பிறந்துவிட்டது. நாலாவது, ஐந்தாவது என கணவனின் விருப்பத்தை தங்கை ஏற்கவில்லை. “பெத்ததுகள உருப்படியா கரசேத்தாப் போதும்..”  அதில் தங்கையின் கணவருக்கு மனைவிமேல் சிறு மனஸ்தாபம்.  அது எப்போதாவது ஒரு கட்டத்தில் களானைப்போல தலைகாட்டும்.

 

கோட்டூரில் ஒரு சம்சாரிக்கு வாழ்க்கைப்பட்ட அக்கா, இரண்டுக்குமேல் பிள்ளைகளை அனுமதிக்கவில்லை. “ஈஸ்வரெ படச்சது அம்புட்டுதான்னு நெனச்சு இந்தமட்டுல கைகால் சொகத்தோட பொழச்சுவந்தாப்போதும்.” என தன் கணவனையும் சம்மதிக்க வைத்தாள். புருசனும் பொஞ்சாதியும் வெளியில் ஒரேமாதரி சொல்லிக் கொண்டாலும் மனசுக்குள் ஒரு நிறைவில்லாத வெற்றிடம் அலைவதையும் மறைக்கவில்லை. அதனை ஈடுகட்டவே பெண்பிள்ளைகளானாலும் படிப்பு விசயத்தில் தங்களைமீறி செலவழிக்கவும் உறுதிபூண்டார்கள். அதனால்தான் தங்களது கிராம பள்ளிக்கூடத்திலிருந்து தள்ளி, தேனிக்கு அனுப்பி படிக்கவைத்தனர்.

 

உள்ளூரிலும் இப்போது பத்தாம்வகுப்பு வந்துவிட்டது. தமிழ்வழிதான். ஒருவேளை காலேஜ் போகவேணுமானால்… தவிர தேனியிலிருக்கும் கண்டிப்பு உள்ளூர்ப் பள்ளியில் கிடையாது.

 

பிரச்சனை என்னவென்றால் தினசரி காலையும் மாலையும் பஸ்சில் ஏறி இறங்க வேண்டும். பெண்பிள்ளையை அப்படி கூட்டநெரிசலில் அனுப்பிவிட்டு திரும்பி வருவதுவரைக்கும் நெஞ்சில் அக்கினிசட்டி ஏந்தி இருக்கத்தான் வேண்டும். இங்கிலீஸ் மீடியம் படிக்கிற பிள்ளைகளுக்கு மட்டும் தனி பஸ்வசதியை பள்ளியில் ஏற்படுத்தி இருந்தார்கள். கோட்டூரை விட தேனிபள்ளி அதிக செலவுதான். வெட்டவேண்டிய செலவை குறைத்து கொஞ்சம் கூடுதலாய்ப் பாடுபட்டால் சரிக்கட்டிக்கொள்ளலாம்.

 

அதனால் முதல் வகுப்பில் சேர்க்கிறபோதே கமலாவின் கணவர், “ஒந்தங்கச்சி வீட்ல இருந்தமானைக்கி பிள்ளைக படிக்கட்டும் வீடு பெருசாத்தான இருக்கு.. நாம ஏதாச்சும் செலவுக்குக் கூடக் குடுத்தரலாம் பிள்ளைகளுக்கு அலச்சல் மிச்சம்” என யோசனை சொன்னார்.

 

கமலாவுக்கு அந்தயோசனை பிடித்திருந்தாலும், தங்கையை சிரமப்படுத்த வேண்டாம் என்கிற எண்ணத்தில், “அவகவக பிள்ளைக அவகவக எடத்திலதா இருக்கணும்.” என்று புருசனின் கருத்தை நிராகரித்தாள். ஆனால் அவளையும் மீறி ஒருநாள் தன்வீட்டுக்கு வந்த கமலாவின் தங்கையிடம் நேரடியாகவே தன் கோரிக்கையினை வைத்துவிட்டார். “ ஓம் பிள்ளைகளோட சேத்து ஒங்கக்கா பிள்ளை களையும் வச்சு சமாளிக்க முடியுமா..?”

 

ஆலோசிக்க அரைநொடிகூட ஒதுக்காமல் அன்று சட்டென ஒப்புதல் தந்துவிட்டாள் தங்கை. “அதுக்கென்னா மாமா.. ரெண்டோட ரெண்டு சேந்தடியா இருந்துட்டுப் போகட்டும்.” அப்போது அவளுக்கு மூன்றாவது குழந்தை பிறக்கவில்லை.

 

அன்றைக்கு கமலாதான் ஏற்றுக்கொள்ள வில்லை. “பிள்ளைய வளக்கறதென்ன லேசுப்பட்ட காரியமா..? அதும் ஸ்கூலுக்கு அனுப்பறதுங்கறது… பூண்கழண்டுபோகும், வேணாம். தாயா பிள்ளையா இப்பிடியே சந்தோசமா இருப்பம். பிள்ளைக போய்வர கஷ்டந்தே… இவ தேனில இல்லாம இவளும் கோட்டூர்லயே இருந்தான்னா…”

 

அதற்குமேல் தங்கையும் வற்புறுத்த வில்லை. அக்காள்மீதும் அவள் பிள்ளைகள் மீதுமான வாஞ்சை அதிகமானது.

 

ஆனால் இப்போது கமலாவின் மகள் பத்தாம்வகுப்புப் படிக்கிறாள். எட்டாவது வகுப்பில் பெரியமனுசியான போதே கமலா யோசித்தாள். மகள்மீது கூடுதல் பயம் வந்தது. வீட்டை தேனிக்கு மாற்றிவிட கணவரிடம் பேசிப்பார்த்தாள். வேரைப்பிடுங்கி நட்டுவைக்கிற காரியம். அது சாத்தியமில்லாத வேலை என்பது அவளுக்கும் தெரியும்.

 

இப்போது பத்தாம்வகுப்பு ஆண்டுத்தேர்வு.

 

 

ஊரில் மழைகொட்டி வெள்ளப்பெருக் கெடுத்து வீடெல்லாம் அழித்துப் போட்டாலும், அல்லது கொடும் பஞ்சம் வந்து வயிறைக் காயப்போட்டாலும் தெருவிற்குத் தெரு காவலிருக்கும் தெய்வங்களுக்கு, விழா எடுக்கமட்டும் தவறுவதில்லை. தை பிறந்துவிட்டால், மாசி, பங்குனி, சித்திரை… ஆடி மாசம்வரை ஒன்றுமாத்தி ஒன்றுக்கு ஒரே கொண்டாட்டம்தான். எத்தனை சட்டங்கள் போட்டு காவல்துறை கண்காணித்தாலும் அத்த்னைக்கும் கண்ணைக்கட்டி அங்கிங்கெனாதபடி தெருவெங்கும் மூலைக்கு மூலை குழாய் கட்டி மைக்செட் போடுவதை யாராலும் தடுக்கமுடியாது. பிள்ளைகளுக்கு பரிட்சை என்றாலும், பிரசவத்துக்கு பெண்பிள்ளை துடிக்கிறது என்றாலும் ரேடியோசத்தம் மட்டும் குறையாது. இது கிராமங்களில் பிடுங்கி எறியமுடியாத கெட்ட இயல்பு.

 

“ஒரு ரெண்டு மாசம் மட்டும் சுமித்திரா தேனில தங்கிப்படிக்கட்டும். பரிச்ச முடிஞ்சதும் வீட்டுக்கு அனுப்பிச்சிரு..” கமலாவே தங்கையை போனில் கூப்பிட்டுப் பேசினாள்.

 

தன்பிள்ளைகள் மூன்றும் தத்தம் வேலைகளை தாங்களே செய்து கொள்வதால் சுமித்ராவின் வருகை பெரிய அளவில் கஷ்டம் ஏற்படுத்தப் போவதில்லை. கணவரிடம் மட்டும் ஒருவார்த்தை சொல்லி விட்டால் போதும். அக்கா அதையும் சொன்னாள். “ஓவ்வீட்டுக்காரர்ட்ட கேட்டு சொல்லு.’’ போனைவைத்து விட்டாள்.

 

வீட்டுக்காரர் பெரிதாய் ஏதும் அலட்டிக் கொள்ளவில்லை. “எனக்கு பிரச்சன இல்ல.. பொம்பளப்பிள்ள.. நீ.. பாத்துக்க… ஒம்பாடு ங்ஙொக்கா பாடு ” நாசூக்காய் ஒதுங்கிக் கொண்டார்.

 

அதுதான் தங்கையின் கணவரின் விசேச குணம். எந்த ஒன்றையும் வம்பாய்த் திணிக்கமாட்டார். அதேசமயம் தன்கருத்தை போகிறபோக்கில் வீசிவிட்டுப்போவார். அது சாதகமா, எதிர்ப்பா என்பது எளிதில் விளங்காது.

 

“பட்டுத்திருந்தணுமாக்கும்…” தங்கை தன் கணவரிடம் பலவிசயங்களில் சண்டையிடு வாள். “எதையும் முன்னக்கூட்டியே வெட்டி பேசிடணும்.. இழுவையா இழுத்து, முடிஞ்சப்பறம் ‘நா அப்பவே சொன்னேன்ல ந்னு பேசறது குடும்பத்துக்கு நல்லதில்ல..”

 

“எல்லாத்தியும் முன்னக்கூட்டியே சொல்ல நா என்னா கடவுளா… ஒருவேள எஞ்சொல்லு தப்பாயிருச்சுன்னா… என்னய மதிப்பியா…?”

 

“அதுக்காக அரங்கத்தனமாவே இருப்பீக.. என்னமாச்சும் நடக்கட்டும்னு.. அப்பிடித்தான…. ! ”

 

“என்னமாச்சும் எப்பிடி நடக்கும்..? நமக்கு எதுசரியோ, நாம எதுமேல பிரியப்படுறமோ அதுதான் நடக்கும். “

 

”அப்பிடின்னா, நா உங்கமேல பிரியப்படவே இல்லயே, நமக்கு எப்படி கலியாணம் நடந்திச்சு…? “

 

எட்ட நின்று பேசியவளை நொடிப்பொழுதில் இழுத்து நெஞ்சோடு இறுக்கி இதழ்பூட்டிடுவார். “ ஒம்மேல நான் பிரியப்பட்டேன்ல..! “ எச்சில் பரவிய உதட்டால் பதில் சொல்வார்.

 

“வல்லடியா மூணு பொட்டைகள வரிசையா வச்சுக்கிட்டு அடங்குதா ஒங்களுக்கு, ஆளவிடுங்கசாமி, இதுக்குதான் பக்கத்தில நின்டே பேசப்பயமா இருக்கு.”

 

சுமித்திராவின் வருகையால் அவர்களுக்கு எந்த இடஞ்சலும் இல்லைதான். சொல்லப்போனால் அனுகூலமே நிறைய இருந்தது எனலாம். ஒரு பிள்ளையைப்போல தான் படிக்க வந்திருக்கிறோம், விருந்தாளி என்கிற நினப்பில் ஒதுங்கி நில்லாமல்,சொந்தவீடு போல அத்தனைவேலைகளிலும் பங்கு கொண்டாள்.படிக்கவந்தபிள்ளையை பாடு வாங்க்ககூடாது எனறு இவள்தான் கூசினாள். “ஒங்கம்மா ஒன்னயப் படிக்க அனுப்பிச்சிருக்கா மொதல்ல வந்த வேலயப்பாருடீ..”

 

“ஒராளா ஒத்தைல வேலபாக்குறியே சித்தி..” என்று வலியவந்து ஒட்டிக்கொண்டாள். இவள் பெத்தது மூன்றும் ஹாயாகத்திரியும். உண்மையில் சுமித்ரா வந்தது, அதுகளுக்குத்தான் கொண்டாட்டம். பேருக்குச் செய்யும் ஒன்றிரண்டு வீட்டுவேலைகளையும் சுமித்ராவே சேர்த்துச் செய்துவிடுகிறாள். ”விடுங்க சித்தி சின்னவளுகதான…” சிரித்தபடி சொல்வாள்.

 

அதேசமயம் படிப்பதற்கென புத்தகத்தை கையில் எடுத்துவிட்டால், சாப்பாடு தண்ணி விரும்பாத வெறித்தனத்தையும் பார்க்க முடிந்தது. தட்டில் சோறுபோட்டு வைத்து எத்தனை கெஞ்சினாலும் பாடம் முடியாமல் வரமாட்டாள். “ப்த்து நிம்சம் சித்தி’’.என வாய்தா வாங்கிக்கொண்டே இருப்பாள்.  சுமித்திராவின் வருகைக்குப்பின் தனது பிள்ளைகளும் கூட காலையும் மாலையும் ஒழுங்காக படிப்பத்ற்கு நேரம் செலவழிக்கிறார்கள். தான் தொண்டைகிழிய கத்தவேண்டிய வேலையும் மிச்சமாகிப்போனது.

 

அந்தவிசயத்தில் கணவருக்கும்கூட சுமித்ரா மேல் கூடுதல் பாசம் வந்ததாய் இவள் உணர்ந்தாள். “ ஏண்டி.. சுமித்ர பத்தாப்பு மிடிச்சிட்டு +1,+2 வும்கூட இங்கருந்தே படிக்கச் சொல்லலாம்போல, நம்ம வாண்டுகளும் உருப்படுமே..” என்றார். இவளுக்கும் அதுசரியாகத்தான் தோணியது.

 

ஆனால் சுமித்ராவின் வெகுளித்தனம்தான் பயமுறுத்தியது. பதினைந்து வயதுதான் என்றாலும், ஒரு பெண்ணுக்குரிய முழுமை சுமித்ராவிடத்தில் அமைந்திருந்தது. ஆனால் பேச்சில்,பழக்கத்தில் குழந்தைத் தனத்தைத் தாண்டவில்லை. சுமித்ராவின்மேல் வஞ்சை கொண்டோ, ,விருந்தாடி வந்தபிள்ளை என்பதற்காகவோ, கணவர் வெளியிலிருந்து வாங்கிவரும் தின்பண்டங்களோ, விசேசமான உணவுவகைகளோ, வாங்கி வீடு நுழைகையில் உரத்தகுரலில் சந்தோசத்தை வெளிப்படுத்துவதும், குதித்துக் கொண்டாடுவதும் வயதுக்குப் பொருத்தமில்லாமல் இருந்தது. என்னதான் சித்தப்பா என்றாலும் அவர் முன்னால் ‘சால்’போடாமல் நிற்பது இவளுக்கு குறையாகத்தான் தெரிந்தது. பலமுறை சொன்னபிறகு இப்போதுதான் கண்ணோடு பேசுவதைப் புரிந்து கொள்கிறாள்.

 

ஒருநாள், படுக்கையிலிருந்து எழுந்ததும், “வீட்ல எலி இருக்கா சித்தி … “ எனக் கேட்டாள்.

 

வீடு கொஞ்சம் பெரியதுதான். சமையல் கட்டு சேர்த்து நான்கு அறைகள். பூஜைஅறை தனி. அதில் யாரும் புழங்க மாட்டார்கள். முன்பக்க அறையில் கணவரது படுக்கை. சமயத்தில் இவளும்.  மூன்றாம்கட்டில் பிள்ளைகள் மட்டும். பிள்ளைகளோடு பலசமயங்களில் இவளும் சேரந்துகொள்வாள். சுமித்ரா வந்ததிலிருந்து நான்குபிள்ளைகளும் சேர்ந்து படுத்துக் கொள்கிறார்கள். ஐந்தாவதாய் தான்படுக்க இடைஞ்சலாய் இருக்குமென கணவரது அறையிலேயே படுத்துக்கொள்கிறாள். அதிகாலையில் வந்து பிள்ளைகளைப் படிக்க எழுப்பிவிட்டு மட்டும் போவாள்.

 

“எலியா..? தெரியலியே சுமி.. மிந்தி இருந்துச்சு… இப்ப மறுபடி வந்திருச்சா..? “

 

“ஆமா சித்தி நெஞ்சில கடிச்சிருச்சு.. சுறுசுறுன்னு எரியுது…”

 

“எலி, காலுலதானடி  கடிக்கும்..” எங்கோ இடித்தது.

 

“இல்ல சித்தி நா மதிலோரமா படுத்திருக்கேன்ல.. “ நைட்டியின் ஜிப்பை இறக்கி உள்ளே கைவிட்டுத் தேய்த்துக் கொண்டாள்.

 

”இதுக்குத்தே சால் போட்டு, தாவணி போட்டுத் தூங்கணும்னு சொல்றது.” சொல்லிவிட்டு சுமித்ராவின் ஜிப்பை மேலே இழுத்துவிட்டாள். ஆனாலும் எலியை பார்க்கவும் விரட்டவும் வேண்டுமென மூளையில் பதிவு செய்து வைத்தாள்.

 

“சரிசரி இதெல்லா வேற யார்ட்டயும் சொல்லாத… அசிங்கம்..சிரிப்பாங்க.. என்னா சுமி, எலிக்கு மருந்து வச்சிடலாம்..”

 

“ நா யார்கிட்டயுமே சொல்லல சித்தி..”

 

அடுத்தநாள் நள்ளிரவில் வழக்கம்போல பாத்ரூம் போக எழுந்தாள். அருகில் படுத்திருந்த கணவரும் பாத்ரூம் போயிருக்கக் கண்டாள். சேலையைத் திருத்திக் கொண்டு கதவருகே நின்றாள். கணவர் வெளியில் வந்தபிறகுதான் உள்ளே போகவேண்டும். இரவில்அவருக்கு திடீரென மூடு வந்துவிடும் பிள்ளைகள் முன்னால் கேவலம்.

 

பிள்ளைகள் படுத்திருந்த மூன்றாம்கட்டு அறையில் எலிச் சத்தம் கேட்டது. துணுக்குற்ற்வளாய் கவனமாய் அந்த சத்தத்தை உற்றுக்கேட்டாள் மெதுவாய் அறையின் கதவைத் திறந்தாள். உள்ளே எலி இரண்டு கால்களில் நின்றிருந்தது.

 

“பிள்ளைகளப் படிக்க எழுப்பி விடலாம்னு வந்தேன்…”

 

“ரெண்டுமணிக்கா..? ”  பூனைபோல கேட்டாள்.

 

“அதனாலதே போத்திவிட்டு கெளம்புனே.. தூங்கட்டும்…” சம்பந்தமில்லமல் உளறினார். தங்கையின் கணவர்.

 

அந்த இருட்டிலும் கூட அவரது கண்களும் பற்களும் ரேடியம்போல ஒளிரக்கண்டாள். ஒரு பார்வையில் அவரது பின்புறத்தில் வால் முளைத்திருப்பது போலவும் தெரிந்தது. அந்த எலியை அடிக்க பெருக்குமாறை இறுகப்பிடித்து தயாரானாள் இவளும்.

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top