எதிர்ச் சேவை

4
(2)

யார் கண்ணில் பட்டு விடக் கூடாது என்று நினைத்தானோ அவர் எதிரில் வந்து கொண்டிருந்தார். வேறு பாதையில் செல்லவும் முடியாது. மறைவாய் ஒதுங்கவும் இடமில்லை. வந்த வழியே திரும்பலாம் என்றாலும் இனி நடக்காது. ஏதோ ஞாபகம். ஏதோ அவசரம் பார்க்காதது மாதிரி நடக்க வேண்டியதுதான். போனவாரம் பார்க்கும் போது கூட நல்லா கெதியாத்தான் இருந்துச்சு பாட்டி. சிறு வயதில் பார்க்கும் போதெல்லாம் செலவுக்கு ஒன்னு ரெண்டுன்னு கையில் கொடுக்காம ஊருக்கு அனுப்பாது. அந்தக் காலத்து மனுசி. என்ன ஆச்சு….. யோசனையில் நடந்தான்.

என்ன தம்பி தூரமா….? கேட்டே விட்டார் சொர்ணம் மாமா. இனி தப்ப முடியாது.

இல்ல மாமா சும்மாதான் அப்பிடியே ….. மழுப்பினான் ரவி.

ஏதோ வெளியூர் போற மாதிரியில்ல இருக்கு – கொக்கிப்பிடி ஏதாவது சாக்குப் போக்கு சொன்னாலும் அதற்கும் ஒரு ஏட்டிக்கும் போட்டியான பதில் வரும். உள்ளதைச் சொல்றதே மேல்.

ஊர்ல பாட்டிக்கு முடிய – யாம். அதான் பாத்துட்டு வரலாம்னு போறேன்.

யாரு தண்டட்டிக் கிழவியா…

ஆமா மாமா.

ஆஸ்பத்திரியில இருக்காங்களா – விலாவாரியா எல்லாத்தையும் கேட்காவிட்டால் இந்தாளுக்கு தலை வெடித்து விடுமாக்கும்.

ஆமா மாமா காசிராஜன் ஆஸ்பத்திரியில இருக்காங்களாம்.

போயும் போயும் கடைசிக் காலத்துல அவன்ட்டயா சேக்கனும். அவன் ஒரு ஆட்கொல்லிப் பயலாச்சே. வேறு எந்த ஆஸ்பத்திரியச் சொன்னாலும் இதே பதில்தான் வரும். கோணப் புத்திக்காரன். அடுத்தவங்க மனசு நோகும்னு தெரியாமல் கிறுக்குத்தனமா பேசுற ஆள்.

இல்ல மாமா, அவருட்டதான் எல்லா வசதியும் இருக்கு. டவுன்லயே அவருதான் பெரிய டாக்டர்.

என்னத்தக் கிழிச்சாம் போ. போன மாசம் எங்க பெரியாத்தாள இவன்ட்டதான் சேத்தோம். நாலு வருசம் இருக்க வேண்டியவளை நாலு நாள்ல கொண்டு போய்ச் சேத்துட்டான் புண்ணியவாளன். இந்த ஆளிடம் இதை எல்லாம் யார் கேட்டாங்களாம். கேட்டமா போனமான்னு இல்லாம.

காசுபணம் எச்சா எடுத்துட்டுப் போ. யார்ரா எப்படா வருவாங்கன்னு காத்துக் கிடப்பானுக. காசு புடுங்கிப் பயலுக. இல்லேன்னா இவர் கொடுத்து விடப் போறாரக்கும். எரிச்சல் எரிச்சலாய் வந்தது ரவிக்கு. வாய வச்சுக்கிட்டு சும்மா கிடக்குறது இல்ல.

சரி மாமா நான் வர்றேன்.

பாத்து சூதானமாப் போ. தெனந் தெனம் பஸ்ஸுக்காரனும், லாரிக்காரனும் சன்னப் பேரையா அடிக்குறான். – இப்பக்கூட நல்ல விதமா பேசத் தெரியாத ஆங்கங் கெட்ட கூக. இந்த ஆளுக்கும் வீட்ல எப்படித்தான் வட்டில சோத்தப் போடுறாங்களோ. எரிச்சல் முட்டிக் கொண்டு வந்தது. ரவிக்கு.

காலைக் கிந்திக் கிந்தி நடந்து வந்தார் கருப்பசாமி தாத்தா. அப்படியே நடக்க மாட்டாமல் திண்ணையில் உட்கார்ந்து குரல் கொடுத்தா. யப்பா… சொர்ணம் முள்ளு வாங்கி இருந்தாக்குடுய்யா… இல்லாட்டி ஊக்காவது எடுத்துட்டு வா. இந்தச் சனியன் புடிச்ச முள்ளு காலுக்குள்ள ஆழமாப் பதிஞ்சிடுச்சு. வெளியே வந்த சொர்ணம் கொடுத்திருக்கணும். இல்லாட்டி இல்லைன்னு சொல்லியிருக்கலாம். அத விட்டுவிட்டு, என்ன முள்ளு….? எந்த இடத்துல குத்துச்சு அப்படீன்னு விலா வாரியா கேட்டுப்புட்டு, இப்படித்தான் எங்க மாமா பையனுக்கு முள்ளு குத்தி, எடுக்க முடியாம சலம் வச்சி கடைசில காலையே எடுக்க வேண்டியாதப் போச்சு. எதை வேணுமானாலும் தாங்கிக்கிடலாம். ஆனா இந்த வெசப்பய முள்ளு தச்சா மட்டும் தாங்கவே முடியாது. கெட்ட சாதிக் கழுதை. அப்புறம் வாழ்க்கை பூரா ரண வேதனைதான். கருப்பசாமி தாத்தாவுக்கு கோபமுன்னா கோபம் இன்ன மட்டுமில்ல. போடா வெறுவாக் கெட்ட பயலே. போயும் போயும் ஒரு வெங்கம் பயகிட்ட கேட்டு வந்தேம் பாரு. எம் புத்திய செருப்பாலதான் அடிச்சுக்கிடனும். இவம் மூஞ்சியில் முழிச்சாக் கூட பொடிக்கு போயில் கிடைக்காது. இப்படி தெரு கடைசி வரைக்கும் கண்டமானிக்கு தூத்திக்கிட்டே போனாரு.

இதுக்கெல்லாம் அசந்துடுற ஆள் இல்ல சொர்ணம். மத்தவங்ககிட்ட இப்படி எகனைக்கு மொகனையா பேசி சீண்டிப் பாக்குறதுல கொடூரமான ஆனந்தம். இதை வெளிக்காட்டாமல். மனதிற்குள் மந்தகாசமான புன்னகையுடன் மற்றவர் பேச்சை துடைத்துப் போட்டுக் கொண்டு எனக்கென்னன்னு எப்பவும் போல் திரிவார்.

நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது.

இந்த வீட்டுக்கு வடக்க இருந்து ஒரு நல்ல சேதி வரப் போகுது.

குடுகுடுப்பைக் காரனுக்கு என்ன தெரியும் அது சொர்ணம் மாமா வீடு என்று.

ஒம் பேரு என்னப்பா…?

சக்தி வேலுங்க.

நமக்கு சொந்த ஊர் எது…?

எட்டையபுரம் பக்கமுங்க

எனக்கு சொந்த ஊர் எது தெரியுமா…?

தெரியாதுங்க.

என் வீட்டம்மா ஊராச்சும் தெரியுமா…?

இதையெல்லாம் எதுக்குக் கேட்கணும். ஒரு விநாடி நெற்றியைச்

சுருக்கிய பின், தெரியாதுங்க என்றார் குடு குடுப்பைக் காரர்.

எனக்குச் சொந்தக் காரங்க எந்த திசையில் இருக்ககாங்கன்னு சொல்லேன்.

எதுக்கு சாமி இதை எல்லாம் கேக்குறீங்க…?

சரி இதெல்லாம் போகட்டும். வடக்க இருந்து ஒரு நல்ல சேதி வருதுன்னு சொன்னீல்ல. அது என்னன்னு சொல்லு.

சாமி அது வந்து…..

தெரியாதுல்ல பிறகு ஏன் பொய் சொல்றே

சாமி இது எந் தொழிலு

எது தொழிலு…? ஏமாத்தி காசு புடுங்குறதா….?

சாமி அப்படி எல்லாம் பேசாதீங்க…..

நீ பொய் சொல்லலை, ஏமாத்தலை, எல்லாஞ்சரி … வடக்கே இருந்து வரும் நல்ல சேதியைச் சொல்லிட்டுப் போ…..

சாமி காசு இருந்தாக் கொடுங்க. இல்லாட்டி விட்டுடுங்க. எந் தொழில் கெடுக்காதீங்க.

என்ன வெளையாடுறியா, தெருவுல போற உன்னை நானா கூப்பிட்டேனா…? நீயா வந்து இல்லாததையும், பொல்லாததையும்

சொல்றது. கேட்டா உள்ளது சொல்றது இல்ல – குரலை உயர்த்தினார்.

குடு குடுப்பைக் காரனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அப்படியே திரும்பிப் பார்க்காமல் போனவன்தான்.

அப்புறம் இந்த திசைப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.

வேனாக் கொதிக்குற வெயில்ல மேயப் போன ஆடுகள் வாயில் நுரை தள்ள ஊருக்குள் வேகமாய் ஓடி வந்து கொண்டிருந்தன. குட்டிகள் சத்தங்கேட்டு எதிரிலேயே மடக்கி மடியில் முட்டி முட்டி பால் குடித்துக் கொண்டு இருந்தன. கருப்பசாமித் தாத்தா அவர் காலத்து கதைகளை சிலாகித்துச் சொல்லிக் கொண்டிருந்தார். வெக்கை தாங்காமல் துண்டால் விசிறிக் கொண்டார். இந்த சமயத்துல மழை ஒரு குடுப்பு குடுத்தாத்தான் பூமி குளுரும்.

ஒட்டமும் நடையுமாய் … வேர்க்க விறுவிறுக்க வந்தார் சொர்ணம் மாமா.

கே.டி.சி கெழக்கே போயிட்டானா..?

ஏதோ அவசரம் போல, உடனே தாத்தாவின் குயுத்தி வேலை செய்தது.

அவன் எந்தக் காலத்துல நேரத்துக்கு வந்தான். ரெண்டு நாள் வந்தா. நாலு நாள் ரிப்பேராவுள்ள கெடக்கான்.

சத்தங் கேட்டதே.

எவனாவது லாரிக்காரனா இருக்கும்.

லைன் மேன் வந்தாரா…?

இல்லையே…

ஒவ்வொரு புதன்கிழமையும் வருவாரே…

அடப் போப்பா….. அந்த ஆளப் பாத்து மாசக் கணக்காச்சு.

இப்ப என்ன செய்வது என்பது போல மலங்க மலங்க விழித்தார் மாமா.

அவசர சோலியோ – தாத்தா.

வயக்காட்டுல நெல்லுக்கு யூரியாவைப் போட்டுட்டேன்.

தண்ணி பாச்சனும். கரண்டு இல்ல அதான்.

அட கோட்டிக்காரா …. இப்படி உரத்தைப் போட்டு கெடுத்திட்டியே தண்ணி இல்லாட்டி பயிர் என்னத்துக்காகும். இப்படித்தான் மூனா வருசம் என்னோட தம்பி மகன் யூரியாவைப் போட்டுட்டு மகனை தண்ணி பாய்ச்சச் சொல்லிட்டு வெளியூர் போயிட்டான். அவம் மகன் காவாலிப் பயலுகளோட ஊர் சுத்தப் போயிட்டான். பெறகு என்ன…? பயிர் எல்லாம் கருகி ஒன்னுக்கு கால்வாசி கூட தேறல. மூஞ்சி எல்லாம் வேர்த்தது சொர்ணம் மாமாவுக்கு கை கால் எல்லாம் நடுங்குவது போல் தெரிஞ்சது. குட்டி பேட்ட பூனை மாதிரி வீட்டுக்கும் வாசலுக்குமாய் அலைந்தார். ஒரு இடத்தில் நிற்கமாட்டாமல் தவதாயப்பட்டார்.

தம்பி ஒங்க சைக்கிளைக் கொடுங்களேன் இ.பி.ஆபிஸ் வரை போயிட்டு வந்துடறேன்.

மாமா என்னோட சைக்கிள்ல போறதுக்கு நீங்கே நடந்தே போயிடலாம். பாதி போக்ஸ் கம்பி உடைஞ்சி செக்கு மாதிரி இருக்கு. நான் ஏதோ தோட்டத்துக்கும் வீட்டுக்கும் பொத்துனாப்புல ஒட்டிக்கிட்டு இருக்கேன்.

எல்லா வழியும் அடைபட்டு நிராயுதபாணியாய் இருப்பது போன்ற உணர்வு. மனசுக்குள் தாறுமாறான எண்ணங்கள் கலக்கத்தைக் கொடுத்தது சொர்ணம் மாமாவுக்கு.

ஒரு வருசப்பாட்டைக் கெடுத்திட்டியே. இப்படி கூறு கெட்ட வேலையா செய்வே…..

தாத்தாவின் பேச்சு நாராசுரமாய் விழுந்தது. மாமாவுக்கு மட்டும் சக்தி இருந்தால் பார்வையிலேயே எரித்து விடுவார். வேக வேகமாய் வீட்டினுள் சென்று கதவைப் படதரென்று இழுத்துச் சாத்தினார்.

தாத்தா என்னைப் பார்த்த பார்வையில் மந்தகாசமான புன்னகை தெரிந்தது. கினி… கினி என்று சைக்கிள் மணிச் சத்தம். தெரு முக்கில் லைன் மேன் வந்து கொண்டிருந்தார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “எதிர்ச் சேவை”

  1. அடுத்தவர் மனதை காயபடுத்தி சுகம் காணும் மனிதர் சொர்ணம் மாமா… வெள்ளந்தி போல பேசும் விசமக்காரகதா பாத்திரம் சிறப்பு…. நம் வாழ்வில் எங்கோ சந்திக்கும் இது போன்ற மனிதர்களை காட்சி படுத்தி எழுதிய புனைவு சிறப்பு…. வாழ்த்துக்கள் தோழர்

  2. ஜெகநாதன்.வீ 9789177991

    சொர்ணம் கதாபாத்திரங்கல் பெருகி வரும் இக்காலகட்டத்தில் இது போன்ற கதைகள் படிக்கும் வாசகனை சுயவிமர்சனத்திற்கு உட்படுத்தும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: