எதிர்கொள்ளல்

0
(0)

சூழ்நிலையில் இறுக்கமும் அமைதியும் சேர்ந்திருந்தது. அடுக்களையில் ராஜேசுவரி பாத்திரங்களைக் கழுவி எடுத்து வைக்கிற சத்தம் பட்டாலை வரை துல்லியமாகக் கேட்டது. அவர் பட்டாலையில் இருந்த ஒயர் நாற்காலியில் பட்டும் படாமல் உட்கார்ந்திருந்தார். அடுக்களையில் ஒவ்வொரு பாத்திரத்தை எடுத்துவைக்கும் போதும் ஏற்பட்ட அதிருப்தி வெளியே தெளிவாகத் தெரியும்படியாக இருந்தது. அவர் உட்கார்ந்திருந்த ஒயர் நாற்காலி கூட அவரைத் தாங்குவதில் தனக்கிருக்கும் அதிருப்தியைத் தெரிவிப்பது போல விறைப்பு காட்டியது. பக்கத்திலிருந்த அறைக்குள் அவர் கண்ணுக்குத் தெரியும்படியாகவே சந்திரன் நின்று கொண்டு கொடியில் கிடந்த துணிகளை எடுத்து கட்டிலில் போட்டு ஒவ்வொன்றாய் எடுத்து நீவி விட்டு மடித்துக் கொண்டிருந்தான். அவன் ஒவ்வொரு துணியை மடிப்பதற்கும் அசாதாரண நேரம் எடுத்துக் கொண்டதாக அவர் நினைத்தார். அவர் வராமல் இருந்திருந்தால் அவன் இந்த வேலையைச் செய்வானா? தெரியவில்லை. அவர் வந்ததிலிருந்து ஏறிட்டுப் பார்க்கவில்லை. கல்லாயிருந்தது முகம்.

முதலில் கதவைத் தட்டிய போது திறந்தது ராஜேசுவரி தான். கதவைத் திறந்தவளின் முகத்தில் யாரையோ எதிர்பார்த்து வந்த வியப்பு கணத்தில் மாறி சகிக்க முடியாத வெறுப்பு தோன்றியது. ஒன்றும் பேசவில்லை. விறு விறுவென்று உள்ளே போனாள். போகும் போது வலது பக்கம் தலையைத்திருப்பி,

“ஒங்க பெரியப்பா வந்திருக்கு…”

சந்திரன் வாசலுக்கு வருமுன்பே அவர் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தார். அவ்வளவு சுவாதீனமாய் அவர் உள்ளே வந்தது அவனுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.

“எங்கே… வந்தீங்க…”

அவர் என்ன பதில் சொல்ல முடியும் இந்தக் கேள்விக்கு. வலுக்கட்டாயமாக நுழைகிற காற்றே போல உள்ளே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார். சந்திரன் கேள்வி கேட்டதாகவோ, அதற்குப் பதில் சொல்ல வேண்டுமென்றோ அவர் நினைக்கவில்லை. ‘‘ஸ்… அப்பா…” என்று பெரு மூச்சுவிட்டார். சந்திரன் மேலும் ஏதும் பேசாமல் திரும்பி அறைக்குள் போய்விட்டான்.

அவருக்குப் பசித்தது. காலையில் உளுந்தூர்பேட்டை பஸ் ஸ்டாண்ட் ஹோட்டலில் கணேசன் வாங்கிக் கொடுத்த நாலு இட்லியைச் சாப்பிட்டது. பஸ்ஸுக்கு காசு கொடுத்து அனுப்பிவிட்டான். முதலில் அங்கேயே ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். அறுபத்தைந்து வயதான கிழவரை அதுவும் நீரிழிவு நோயால் காலெல்லாம் சொத சொதவென்று ஆறாத புண் வேறு யார் எந்த வேலைக்கு வைத்துக் கொள்வார்கள். பஸ் ஏறி இந்த ஊரில் வந்திறங்கிவிட்டார். வந்து உட்கார்ந்து ஒரு மணி நேரமாகிவிட்டது. இதுவரை யாரும் எதுவும் பேசவில்லை.

சாயங்கால வெளிச்சம் வாசல் வழியே வீட்டுக்குள் யாரும் விரும்பாமலேயே உள்ளே விழுந்தது. கால்கள் ரண வேதனையெடுத்தன. கால்களைக் கீழே வைக்காமலிருக்க ரொம்ப கவனம் எடுத்துக் கொண்டார். ஊரிலேயே இருந்திருக்கலாமோ…! முடியாது. அவர் யாருக்கும் வேண்டாதவராகி விட்டார். அவரால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. வீடு வீடாக இரந்து சாப்பிடப் பிடிக்கவில்லை. எங்கேயாவது கண் காணாத இடத்தில் செத்துப் போகவும் மனசில்லை. இன்னமும் வேலை பார்த்துப் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை இருந்தது.

சாயங்கால பால் வரவும் ராஜேசுவரி வந்து வாங்கிக்கொண்டு போனாள். சந்திரன் துண்டை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு புழக்கடைக்குப் போனான். ரெண்டு பேரும் அவர் இருக்கிற மாதிரியே பாவிக்கவில்லை. அவர் கண்களை மூடினார். நீல இருட்டு. அசந்தால் அப்படியே சாய்ந்து விடுவார். பசியும் களைப்பும் உடம்பில் தீவிர அசதியை ஏற்படுத்தியிருந்தது. சந்திரன் குளித்து விட்டு வந்து வெளியே புறப்படத் தயாரானான். அவர் அவன் போகிற போதும் வருகிற போதும் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், அவன் அவரைத் திரும்பிப் பார்க்கவேயில்லை. முகத்தைப் பார்த்து ரெண்டு வார்த்தை பேசினால் எல்லாம் சுமுகமாகிவிடும்.

திடீரென தலை சுற்றுகிற மாதிரி இருந்தது. நாற்காலியின் கைப்பிடியை இறுகப் பிடித்துக் கொண்டு தரையில் கால்களை ஊணினார்! கொஞ்சம் பரவாயில்லை. வாயில் கசப்பாய் ஊறிய எச்சிலை எழுந்து வாசலுக்குப் போய் துப்பிவிட்டு வந்தார். அப்போது சந்திரன் அடுக்களையில் அவளுடன் பேசிக் கொண்டிருந்தான். பேச்சில் விரோதம் தொனித்தது. அவர் மறுபடியும் நாற்காலியில் உட்காரும் போது காலிலிருந்து நீர் வடிந்திருப்பதைப் பார்த்தார். உடனே பட படப்புடன் கீழே உட்கார்ந்து வேஷ்டியால் துடைத்தார். சந்திரனோ அவளோ கவனித்தார்களா என்றும் பார்த்துக் கொண்டார்.

அடுக்களையிலிருந்து சந்திரன் முன்னால் வர, கையில் காப்பியுடன் வந்தாள் ராஜேசுவரி, காப்பித் தம்ளரை அவரிடம் நீட்டிக் கொண்டே,

“எங்கே போறீங்க…”

அவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எதுவும் யோசிக்காமலே,

“மெட்ராஸ்.”

“மெட்ராஸுக்கு எதுக்கு… எங்கனயாவது விழுந்து செத்துக்கித்து வச்சீகன்னா… என்ன செய்ய… பேசாம உண்டானத தின்னுகிட்டு ஊரில கிடக்க வேண்டிய தான…”

அவர் தலையைக் குனிந்து கொண்டார். காப்பி கையில் சுட்டது! குடிக்கலாமா என்று காப்பியைப் பார்த்தார்.

“எப்ப போறீங்க…”

“போக வேண்டியதான்…”

“அப்ப கிளம்புங்க… அவுக… டவுணுக்குப் போறாக… போம் போது பஸ் ஏத்தி விட்ருவாக…”

அவர் தடுமாறி காப்பித் தம்ளரைக் கீழே வைக்கப் போனார். சூடு பொறுக்க முடியவில்லை. இருள் சீக்கிரமே வந்தது. அவர் காப்பியைக் கீழே வைப்பதைப் பார்த்துவிட்டு,

“காப்பியைக் குடிங்க… ஈ விழுந்துரப் போது… வேற காப்பி இல்ல…”

அவர் காப்பியைக் கையிலெடுத்து சிறிது நேரம் வைத்திருந்தார். சந்திரன் புறப்பட்டுத் தயாராய் வந்தான்.

“கால் மூஞ்சி கழுவணும்னா கழுவிக்கோங்க.”

“பரவால்ல இருக்கட்டும்…”

அவர் காப்பியை அண்ணாக்க குடித்தார். காப்பி தொண்டையில் இறங்கியதும் கொஞ்சம் தெளிச்சியாயிருந்தது.

“மெட்ராஸ் போறதுக்கு காசு இருக்கா…”

அவர் இல்லை என்று தலையாட்டினார். உடனே அவன் அறைக்குள் நுழைந்தான். பின்னாலேயே நுழைந்த ராஜேசுவரி அவர் காதில் விழும் படியாகவே,

“ஒங்கள யாரு அதெல்லாம் கேக்கச் சொன்னா. எப்படி வந்தாரோ அப்படிப் போறாரு இருக்கிற கஷ்டத்தில இதுவேற…”

சந்திரன் ஒரு நிமிடத்தில் வெளியே வந்தான்.

“சரி வாங்க போகலாம்…”

அவர் அவளிடம் சொல்லிக் கொள்ளத் திரும்பினார். அதற்குள் அவளே,

“இந்த உடம்போட ஏன் அங்கிட்டு இங்கிட்டு அலையுதீக… முதல்ல ஒடம்ப கவனிங்க…”

அவருக்கு இதற்கு எந்த மாதிரி முகபாவம் வைத்துக் கொள்வது என்று தெரியவில்லை.

வெளியே வந்ததும் இருபது ரூபாயை பையிலிருந்து எடுத்துக் கொடுத்தான். அவர் வாங்கி பைக்குள் வைத்துக் கொண்டார். தெரு விளக்குகள் எரிந்தன. பள்ளிக்கூடத்துக் குழந்தைகள் பாடம் படிக்கும் சத்தம் கோரஸாகக் கேட்டது. டியூசன் போல. அவருக்கு எல்லா சத்தங்களுமே எங்கோ தூரத்திலிருந்து கேட்பது போலிருந்தது. மெயின் ரோட்டுக்கு வந்ததும் சந்திரன்,

“அங்க மெட்ராஸ் பஸ் வரும்… ஏறிப் போயிருங்க… போயிருவீங்கல்ல…”

“போயிருவேன்.”

“ஒரு இடத்தில் இருங்க அங்க இங்க அலஞ்சி எல்லாரையும் சிரமப்படுத்தாதீங்க… சரி வரட்டா…”

“ம்ம்…”

அவன் போகவில்லை. ஏதோ சொல்ல பாக்கி இருந்தது போல நின்றான். ஒரு நிமிடம் அவர் முகத்தை உற்றுப் பார்த்தான். பிறகு என்ன நினைத்தானோ “சரி வர்றேன்…” குரல் பிசிறியது. அவர் தலையாட்டினார். கொஞ்ச நேரம் கழித்து தூரத்தில் பஸ் வருவதைக் கண்டு திரும்பிப் பார்த்த போது, பஸ் ஸ்டாப்பிலிருந்து கொஞ்ச தூரத்தில் சந்திரன் நின்று கொண்டிருந்த மாதிரி தெரிந்தது.

அவருக்குப் பசியையும், கால் வலியையும் மீறி சிரிப்பு வந்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top